பிரம்மா 4
சித்தார்த்தோ இன்னும் இரு வாரங்களில் உலக அளவில் நடக்க இருக்கும் சிம்போஸியத்துக்காக (கருத்தரங்கு) ஒரு விரிவுரை செய்ய விஷேடமாக அழைக்கப் பட்டு இருந்தான். அவனது விரிவுரையைக் கேட்கத் தான் லட்சக் கணக்கான மாணவர்களும் விஞ்ஞானிகளும் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள் அல்லவா? அவனும் தன்னிடம் இருக்கும் அறிவை பகிர்ந்து கொள்ள நினைத்தவன் அதற்கான ப்ரேசெண்டேஷன் ஒன்றை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் கற்பிப்பது என்றால் பிடித்தமான ஒன்று ஆயிற்றே. அந்த வேலையில் மூழ்கி இருந்தவன், கழுத்தில் கையினை வைத்து நெட்டி முறித்து விட்டு லேப்டாப்பில் இருந்த ப்ரேசெண்டேஷனை ப்ரொஜெக்டர் மூலம் திரையில் விழ வைக்க உத்தரவிட்டான். அங்கிருந்த அவனது ஊழியர்களும் அதற்கான செயலை செய்து கொண்டு இருக்க, இருக்கையில் சாய்ந்து இருந்து வளர்ந்து இருந்த தாடியை நீவியவாறு அதனைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அக்கணத்தில் அவன் விழிகளோ காவலாளர்களுடன் நின்று இருந்த காயத்ரியில் படிய அவளோ நின்று கொண்டு தூங்கி விழுந்து கொண்டு இருந்தாள். அதைக் கண்டவன் முகமோ எரிச்சலாக சுருங்க "இவளை போலீஸ்னு சொன்னா போலீஸ் டிபார்ட்மென்டுக்கே அவமானம்" என்று வாய்க்குள் முணு முணுத்தபடி எழுந்தவன் அவள் அருகே வந்து நின்ற போதிலும் அவளுக்கு நிதானம் வர வில்லை. அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவள் முகத்தின் முன்னே சொடக்கிட "ஹான்" என்று முழித்தவளோ தன்னை சுற்றி எட்டுத் திசையிலும் இருந்த ஸ்க்ரீனில் விழுந்த படத்தை பிரமிப்பாக பார்த்துக் கொண்டே அவனைப் பார்த்தாள். அவனோ திரையில் சுற்றிக் கொண்டு இருந்த டி.என்.ஏ யின் கட்டமைப்பைக் காட்டி "இது என்னன்னு தெரியுதா?" என்று கேட்க, அவளோ அவன் விழிகளைப் பார்த்து "எனக்கும் சயன்ஸ் கொஞ்சம் தெரியும் சார். இது டி.என்.ஏ தானே" என்று கேட்டாள். அவனோ ஒரு கேலிப் புன்னகையுடன் "சயன்ஸ் க்ளாஸ்ல தூங்கி இருப்பியோன்னு நினச்சேன்" என்று சொல்ல, அவளோ "இந்த நக்கலுக்கு மட்டும் ஒண்ணும் குறைச்சல் இல்ல" என்று முணு முணுத்தவள் வேறு வழி இல்லாமல் அமைதியாக நின்று இருந்தாள்.
அவனோ "வெல், அடுத்த வாரம் எனக்கு ஒரு ப்ரேசெண்டேஷன் இருக்கு.. அதுல உன்னை போல பேசிக் நாலெட்ஜ் உள்ள ஸ்டுடண்ட்ஸ் வருவாங்க.. சோ ப்ரொபெஷனலா இத பண்ண முடியாது.. அதனால இன்னைக்கு சோதனை எலி நீ தான்" என்று சொன்னவன் மேலும் "தூங்க மாட்ட என்று நம்புறேன்" என்று சொன்னான். அவளோ மனதுக்குள் "கிளாஸ்ல லெஃஷேர்ஸ்லயே அப்படி தூங்குவனே. இப்போ இவன் எடுக்கிற லெக்சர்ஸ்ல தூங்காம இருக்கணுமே.. டீச்சர்ஸ் போட்ட சாபம் தான் என்னை இப்படி ஒரு நிலைல இருக்க வச்சு இருக்குன்னு நினைக்கிறேன்" என்று நினைத்தவள் "ம்ம் தூங்கமாட்டேன் சார்" என்று சொன்னாள். அவனோ பாக்கெட்டில் கையை விட்டவாறு "ம்ம் குட், டி.என்.ஏ ன்னா என்னன்னு தெரியுமா?" என்று கேட்க அவளோ "நான் அறிஞ்சு கொலை நடந்ததை கண்டு பிடிக்க டி.என்.ஏ டெஸ்ட் பண்ணுவோம்" என்று சொல்ல அவனோ "ஓகே தென்?" என்று கேட்டான். அவளோ "அப்புறம் அதிகமா அது பரம்பரை சார்ந்து கடத்தப்படுறதால குழந்தைக்கு அப்பா யார்னு கண்டுபிடிக்கவும் யூஸ் ஆகி இருக்கு" என்று சொன்னாள். அவனோ "ம்ம், இதோட விரிவு என்னன்னு தெரியுமா?" என்று கேட்க அவளோ "Deoxyribonucleic acid" என்று சொல்ல, அவனோ "ம்ம் பரவாயில்லையே.. உனக்கு கொஞ்சம் அறிவு இருக்கு தான்" என்று சொன்னான் நக்கலாக. அவளோ "அதனால தான் சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறேன்.. என்னை ரொம்ப அண்டர் எஸ்டிம் பண்ணாதீங்க சார்" என்று சற்றே வலி நிறைந்த குரலில் கூறினாள். அவளுக்கும் அவளை மட்டம் தட்டி அவன் பேசிக் கொண்டே இருக்க மனதின் ஓரத்தில் ஒரு வலி உருவானது என்னவோ உண்மை தான். அவனோ "உன்னை ஒன்னும் நான் அண்டர் எஸ்டிம் பண்ணல, நீ நடந்துகிறத வச்சு தான் நான் பேசுறேன்.. முட்டாள் தனமா மதனை நம்பி இங்க வந்து சிக்கி இருக்க... இப்போ பார்த்தா நின்னுட்டே தூங்குற" என்று சொல்ல அவளோ பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள். அவனோ "ஓகே வெல், நாம சப்ஜெக்ட்டுக்கு போகலாம்" என்று சொன்னவன் திரையில் அடுத்த ஸ்லைடை கொண்டு வந்தான்.
அதில் டி.என்.ஏ பக்கத்தில் ஒற்றை ஏணி அமைப்பை உடைய ribonucleic acid என்று அழைக்கப்படும் ஆர்.என்.ஏ யின் உருவப்படம் இருந்தது. அவனோ பெருமூச்சுடன் "நம்ம உடம்பு செல்களால் உருவாக்கப்பட்டதுன்னு தெரியும் தானே" என்று கேட்க அவளும் "ம்ம்" என்று பதில் அளித்தாள். அவனோ "அந்த ஒவ்வொரு செல்லிலும் ஒரு கரு இருக்கும், அந்த கருவில் உள்ள மரபணுவில் க்ரோமோசோம் இருக்கும்.. மனிஷனுங்களுக்கு 23 ஜோடி க்ரோமோசோம் இருக்கு.. அதாவது 46 இருக்கும்.. 48 இருந்தா அது சிம்பன்சி குரங்கு, இப்ப புரியுதா எப்படி குரங்கில் இருந்து மனுஷன் கூர்ப்பு அடைந்தான்னு?" என்று கேட்க அவளோ அவனை விழி விரித்துப் பார்த்தபடி "ம்ம்" என்று சொன்னாள். மேலும் தொடர்ந்தவன் "அந்த க்ரோமோசோம் என்னும் மரபுப் பொருள் டி.என்.ஏ யினால் தான் உருவாக்கபட்டது. அதாவது நீ எப்படி பேசணும், எப்படி நடக்கணும், உன்னோட கை விரல் நீளம் என்னவா இருக்கணும்னு எல்லாமே தீர்மானிக்கிறது இந்த டி.என்.ஏ தான். டி.என்.ஏ யில இருந்து ஆர்.என்.ஏ க்கு தகவல் கடத்தப்பட்டு , அது தான் நமக்கு தேவையான ப்ரோடீன் எல்லாம் உருவாக்குது.. நம்ம டி.என்.ஏ பொதுவாக நம்ம அம்மா அப்பாவில் இருந்து நமக்கு கடத்தப்பட்டு இருக்கும், இந்த டி.என்.ஏ யில உனக்கு ஏணிப்படி போல தெரியுறது தான் பேஸ் பெயார்ன்னு சொல்வாங்க, adenine, thymine, guanine and cytosine" என்று சொல்ல, அவளோ புரியாமல் விழி விரித்துப் பார்த்தாள். அவனோ பெருமூச்சுடன் "சரி விடு, டி.என்.ஏ தான் நம்மளோட அடிப்படை. இப்போ ஏழு நாட்டுல அம்மா அப்பா இல்லாம அவங்களோட கருமுட்டையும் விந்தணுவும் இல்லாம எப்படி டி.என்.ஏ வை வச்சு குழந்தை உருவாக்க முடியும்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க.. அது எப்போ வெற்றி அடையுதோ அதுக்கப்புறம் இந்த உலகத்தில இருக்கிற கோவில், தேவாலயம் எல்லாம் இழுத்து சாத்த வேண்டியது தான்.. இது ஒண்ணுமே தெரியாம, நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கூட தெரியாமலே என்னை பிடிக்க வந்து இருக்க" என்று சொன்னவன் எரிச்சலாக அவளைப் பார்த்து இரு பக்கங்களும் தலையாட்டியபடி அமர்ந்து கொண்டான்.
அவளோ "அதெல்லாம் இயற்கைக்கு எதிரானது தானே.. நீங்க பண்ணுறதும் இயற்கைக்கு எதிரானது தானே" என்று சொல்ல, அவனோ "எதிரானது தான்... கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்க அது தான் இந்த ஜெனெடிக் எஞ்சினீரிங் படிக்க மாட்டாங்க" என்று சொன்னவன் மேலும் "ஆனா அதனால எவ்ளோ நன்மை இருக்குன்னு உனக்கு தெரியுமா? கேன்சர், எச்.ஐ.வி எல்லாமே இந்த ஜீனோம் எடிட்டிங் மூலம் குணமாக்கிடலாம். CRISPR gene editing தான் இப்போ உலகத்தில பெரிய விஷயமா பேசப் பட்டுக் கொண்டு இருக்கு" என்று சொல்ல, அவளோ அவனை புருவம் சுருக்கிப் பார்த்தவள் "சரி நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்.. இதனால எவ்ளோ நோய்க்கு நீங்க கூட மருந்து கண்டு பிடிச்சு இருக்கீங்க தான். ஆனா இதனால ஒரு தீய பக்கம் இருக்குன்னு உங்களுக்கு புரியலையா?" என்று கேட்டாள். அவனோ கேலியாக சிரித்தவன் "இந்த ஜீனோம் எடிட்டிங் மூலம் எல்லாருமே தங்களோட இயற்கையை மாற்றி ஜீனியஸ் ஆனா என்னாகும்னு நினைக்கிற ரைட்?" என்று கேட்க அவளோ "ம்ம்" என்று சொன்னாள். அவனோ இதழ்களை பிதுக்கியவன் "ஹூ க்னோஸ்?" என்று சொல்ல, அவளோ "அதனால தான் இதுக்கு தடை போட்டு இருக்காங்க, அது பத்தி ஆராய்ச்சி பண்ணனும்னா பர்மிஷன் வாங்கணும்.. ஆனா நீங்க பர்மிஷன் இல்லாம இந்த ஆராய்ச்சி பண்ணுறதா எங்களுக்கு நியூஸ் வந்திச்சு" என்று சொன்னாள். அவனோ "வெல்!! நீ பார்த்தியா?" என்று கேட்க அவளோ "இவ்ளோ டெக்னோலஜி வச்சு இருக்கிற நீங்க, அத எங்க வேணும்னாலும் மறைச்சு வச்சு பண்ண முடியும்" என்று சொல்ல, வாய் விட்டு சிரித்தவன் "என்ன நம்பு நான் அந்த ஆராய்ச்சி எல்லாமே பண்ணல. வேணும்னா நீயே தேடிப் பாரு" என்று சொன்னான். அவளோ "இத நான் நம்ப தயாரா இல்ல...கண்டிப்பா ஆராய்ச்சி பண்ணுறீங்க" என்று சொல்ல, அவனோ முட்டியில் கை குற்றி எழுந்து வந்து அவள் முன்னே வந்து நின்று அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் "ஆராய்ச்சின்னா என்ன?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான். அவளோ "ஒரு விஷயத்தைக் கண்டு பிடிக்க பண்ணுறது தானே ஆராய்ச்சி" என்று சொல்ல, அவனோ "ஏற்கனவே கண்டு பிடிச்சு சக்ஸஸ் ஆன விஷயத்த நான் ஏன் திரும்ப ஆராய்ச்சி பண்ணனும்?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க , இப்போது விரிந்து கொண்டது என்னவோ அவளது விழிகள் தான்.
அவளோ "வாட்? சக்ஸஸ் ஆச்சா?" என்று அதிர, அவனோ தோள்களை உலுக்கியவன் "ம்ம்" என்று சொல்லி விட்டு, "ஒரு சாதாரண சயன்டிஸ்ட் நான்.. எனக்கு எதுக்கு இவ்ளோ பாதுகாப்புன்னு நினைக்கிற?" என்று கேட்டான். அவளோ "நிறைய வாக்சின் கண்டு பிடிச்சு இருக்கீங்க.. நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க. அதனால நிறைய எதிரிங்க இருக்காங்க" என்று சொல்ல, அவனோ "நல்லது தானே பண்ணி இருக்கேன்.. அப்போ எதுக்கு இந்த எதிரிங்க?" என்று கேட்க அவளோ புரியாமல் பார்த்தாள். அவனோ "நான் வெளியே பப்லிஷ் பண்ணுன கண்டுபிடிப்பு எல்லாம் ஒண்ணுமே இல்ல.. ஜீனோம் எடிட்டிங் மூலம் எச்.ஐ.வி, கான்சர் எல்லாத்துக்கும் தீர்வு இருக்கு. ஆனா அத நான் வெளிய சொல்ல முடியாது.. சொன்னாலும் அதுக்கான அனுமதி எனக்கு கிடைக்காது. என்னோட உயிருக்கும் உத்தரவாதம் இல்ல.. மனுஷனுக்கு உயிர் பயத்தை வச்சு சம்பாதிக்கிறவங்க தான் இங்க அதிகம்.." என்று சொல்ல, அவளுக்கோ அவன் மீது இப்போது பெரிய பிரமிப்பு தான் தோன்றியது. மேலும் தொடர்ந்தவன் "அதனால தான் பெரிய கண்டுபிடிப்பு எல்லாம் எனக்குள்ளயே பதுக்கி வச்சு இருக்கேன்.. அத வெளிய சொல்லவும் போறது இல்ல.. சொன்னா கூட அத எதிர்க்க நிறைய பேர் இங்க இருக்காங்க.." என்று சொன்னான். அவளோ "வேற என்ன கண்டு பிடிச்சு இருக்கீங்க?" என்று கேட்க அவளை ஆழ்ந்து பார்த்தவன் "ரிப்போர்ட்டர் போல கேள்வி கேட்காம சொல்ற வேலைய பாரு.. பாவமேன்னு கொஞ்சம் இன்போர்மேஷன் சொன்னா அதையே தூண்டி துருவி கேட்க வேண்டியது.. பிராடு" என்று திட்ட அவளோ மனதுக்குள் "சுதாகரிச்சுட்டானே" என்று நினைத்துக் கொண்டாள்.
அவனோ "நான் நினச்ச போல நீ பிராடு தான், போய் எலிக்கு தீனி போடு,. நான் கொஞ்ச நேரம் இந்த ப்ரேசெண்டேஷனை பார்த்துட்டு உன்னை கூப்பிடுறேன்" என்று சொன்னவன் அருகே இருந்த காவலாளியிடம் கண்களைக் காட்ட அவனும் அவளை அழைத்துக் கொண்டே வெளியேறி இருந்தான்.
கண்ணாடிப் பெட்டிக்குள் எலிகள் இருக்கும் அந்த ஆய்வுகூடத்தில் ஏற்கனவே வாசு இருக்க, அவளோ அவனைக் கண்டதுமே "வாசு எலிக்கு தீனி போடுற வேலையா பார்க்கிற?" என்று சிரித்தபடி கேட்க அவனோ அவளை முறைத்துப் பார்த்து "இந்த நிலமைலயும் எப்படிடி சிரிக்க முடியுது? சரி வா" என்று அழைத்தவன் ,எந்த எலிக்கு எவ்வளவு தீனி போட வேண்டும் என்று கற்பித்தான். அவளுக்கோ அதில் மனம் லயித்தால் தானே. இரு நண்பர்களைப் பார்த்தவளுக்கு அதுவரை பார்க்காத ராஜ்ஜின் எண்ணம் தோன்றியது. உடனே அவள் "சரி அத விடு, அமல் டாய்லெட் வாஷ் பண்ணுறான், நீ எலிக்கு சாப்பாடு போடுற.. ராஜ் எங்க?" என்று கேட்க, வாசுவோ "ஓஹ் அவனா? அவன் தான் நம்ம சயன்டிஸ்ட்டை பர்சனலா கெயார் பண்ணுறவன்.. அவன் அயர்ன் பண்ணிக் கொடுத்த, கழுவிக் கொடுத்த எல்லாம் தான் அவர் போட்டு வர்றார்" என்று சொல்ல, அவளோ "ஓஹ் அவனுக்கு ஆம்பிள ஆயா போஸ்ட் ஆஹ்?" என்று கேட்க அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து வாசு கூட வாய் விட்டு சிரித்தான். உடனே ஏதோ நினைவு வந்தவனாக, "சிரிக்காதடி, இங்க எல்லா இடமும் மைக் அண்ட் சி.சி.டி.வி இருக்கு" என்று சொல்ல, அவளும் துப்பிய காபியை நினைத்தவளாக "அது சரி" என்று சொல்லிக் கொண்டே எலிகளைப் பார்த்தவள் "இந்த எலிகளோட கால் எல்லாம் ஏன் க்ரீன் கலர்ல இருக்கு?" என்று கேட்டாள். உடனே அவன் "இது ஜீனோம் எடிட்டிங் பண்ணுன எலியாம். ஜெலி பிஷ் ஓட ஜீன் மிக்ஸ் பண்ணுனதால கால் எல்லாம் இப்படி கலர் காலரா இருக்காம்" என்று சொல்ல, அவளை பிரம்மிப்பாக பார்த்தவள் "என்னடா நீயும் குட்டி சயின்டிஸ்ட் ஆயிட்ட" என்று கேட்டாள். அவனோ "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்னு நீ கேள்விப்படலையா?" என்று கேட்க அவளோ "அது சரி" என்று சொன்னவள் எலிக்கு மும்முரமாக தீனி போட ஆரம்பித்தாள்.
போடும் போதோ "இதுல அந்த பீட்டரைக் காட்டு வாசு, அதுக்கு நாலு நாளைக்கு பட்டினி போடுறேன்" என்று சொல்ல, அவனோ "அது அவரோட செல்ல எலி, அவர் கிட்ட தான் இருக்கும்" என்று சொன்னான்.
அதே சமயம், போலீஸ் டிபார்ட்மெண்டில் கமிஷனரோ தன் முன்னே அமர்ந்து இருந்த அஜய்யிடம் "நம்ம ஊர்ல நடக்க போற சயின்டிபிக் சிம்போஸியமுக்கு இன்டெர்னஷனல் சயின்டிஸ்ட்ஸ் நிறைய பேர் வர்றாங்கன்னு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பண்ணுறவங்க போலீஸ் போர்ஸ் கேட்டு இருந்தாங்க" என்று சொன்னார். அஜய்யோ "ஓகே சார்.. ஏற்பாடு பண்ணிடலாம்" என்று சொல்ல அவரோ "ஓகே அஜய்.. நீங்களே எல்லாம் ரெடி பண்ணிடுங்க" என்று சொல்ல அவனும் சம்மதம் சொல்லி விட்டு வெளியே வர, அங்கே அவன் ஜீப்பில் சாய்ந்து எங்கோ பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் ஷாந்தி. அவனோ அவள் அருகே வந்து சொடக்கிட, நிதானத்துக்கு வந்தவள் "சார்" என்று அழைக்க, "பகல் கனவா?" என்று கேட்டபடி அவன் ஜீப்பில் ஏறிக் கொண்டான்.
அதே ஜீப்பில் பின்னால் எறியவளோ அமைதியாகவே வர, அஜய்யோ "ரெண்டு வாரத்துல நடக்கப்போற சிம்போஸியத்துக்கு நாம பாதுகாப்பு கொடுக்கணும். சோ வரப் போற வி.ஐ.பிஸ் ஓட எல்லா டீட்டெயில்ஸும் எடுக்கணும்" என்று சொல்ல, அவளும் "ம்ம்" என்று சொல்லிக் கொண்டாள். அதே சமயம், பெரிய திரையில் விழுந்த சித்தார்த்தின் படத்தை கோபமாக பார்த்துக் கொண்டே இருந்தான் டாக்டர் நரேன். சித்தார்த்தால் நரேனுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் உருவாகி இருந்தன. அவனது ஆய்வுகூடம் தயாரித்த வாக்சின் மொத்தமாக நிராகரிக்கப்பட்டு இருந்தது அதனை விட சிறந்த வாக்சின் சித்தார்த்திடம் இருந்து பெறப் பட்ட காரணத்தினால். எவ்வளவு நட்டம் அவனுக்கு இந்த சித்தார்த்தினால். அனைத்தையும் யோசித்தவன் மனமோ உலையாக கொதித்துக் கொண்டு இருந்தது. இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் தான், நண்பர்களும் கூட. ஆரம்பத்தில் ஒன்றாகத் தான் ஆய்வுகூடம் நடத்திக் கொண்டு இருந்தார்கள். நரேன் குறுக்கு புத்தி உள்ளவன், சித்தார்த்தோ நேர்மையானவன், யாருக்கும் விலை போகாதவன். நரேனோ குறுக்கு புத்தியினால் சித்தார்த்தின் கண்டுபிடிப்பை திருடி விற்க முனைந்த நேரம், அது சித்தார்த்துக்கு தெரிந்து துரோகத்தின் வலியுடன் அவனிடம் இருந்து பிரிந்து வந்தவன் தான். இப்போது ஆல மரமாக வளர்ந்து நிற்கின்றான்.
எந்த இணையத் தளத்தை திறந்தாலும் சித்தார்த் என்று இருக்க, அதனை மீசை துடிக்கப் பார்த்தவனுக்கு சித்தார்த் மேல் கொலை வெறி ஆத்திரம் தான் இருந்தது. அவனும் இந்த சிம்போஸியத்துக்கு செல்ல வேண்டி இருக்க, அருகே இருந்த உதவியாளனிடம் "சித்தார்த்தை இந்த முறை போட்ரலாமா?" என்று கேட்டான். "எஸ் சார், ஸ்கெட்ச் போடுறேன்" என்று தான் பதிலளித்தான் அந்த உதவியாளன்.