ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மா 20

பிரம்மா 20

சித்தார்த் மற்றும் காயத்ரியின் நாட்கள் இப்படி நகர, அஜய் மற்றும் ஷாந்தி சகஜமாக பேச ஆரம்பித்த தருணம் அது. அன்று வேலைக்கு சென்று விட்டு வந்த இருவரும் குளித்து விட்டு தத்தமது வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அஜய்யோ டி.வி பார்த்துக் கொண்டு இருக்க, ஷாந்தியோ சமைத்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கோ தனது தாய் போன் பண்ணுவதாக கூறி இருந்தது நினைவு வர, "அச்சோ அம்மா கால் பண்ணுவாங்களே" என்று யோசித்துக் கொண்டே அடுப்பில் சமையல் இருந்த காரணத்தினால், கொஞ்சம் சத்தமாக "சார் என்னோட போனை கொஞ்சம் எடுத்து தர முடியுமா? அம்மா கால் பண்ணுறேன்னு சொன்னாங்க" என்று அஜய்யிடம் சொன்னாள்.

அவனும் முட்டியில் கையினை ஊன்றி எழுந்தபடி அவள் அறைக்குள் சென்றவன் போனை எடுத்துக் கொண்டே கட்டிலில் இருந்த அவளது உடைப்பெட்டியை பார்த்து "ஷாந்தி உன் சூட்கேஸ் ஏன் பெட்ல இருக்கு?" என்று கேட்டான். அவளோ "ஓஹ் அதுவா? தூக்கி வைக்க ஹைட் பத்தல சார்..அதயும் தூக்கி மேலயே வச்சிடுங்க" என்று சொல்ல அவனோ அதனை தூக்க போன கணத்தில் உள்ளே ஒழுங்காக மூடப்படாத அந்த சூட்கேசில் இருந்து ஒரு பெட்டி அதிலிருந்து பொருட்கள் சிதறியது.

அந்நேரம் பார்த்து குக்கரும் விசிலடிக்க பொருட்கள் சிதறியது அவளுக்கு தெரியவில்லை. அவனோ "பச் ஒழுங்கா மூடல போல" என்று சொல்லிக் கொண்டே சூட் கேஸை கட்டிலில் வைத்தவன் கீழே விழுந்த பொருட்களை எடுக்க முற்பட்டவனின் புருவமோ சுருங்கி போனது. அதில் இருந்தது நகமும் சிகையுமா இருக்க அதை இரு விரல்களால் எடுத்து பார்த்தவன் "இத எதுக்கு வச்சு இருக்கா?? சூனிய காரியாக இருப்பாளோ" என்று யோசித்துக் கொண்டே பெட்டியை எடுத்து பார்த்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அதில் அவன் கைதி ஒருவனை அடிப்பதற்காக கழட்டி வைத்த மோதிரம் இருக்க, அந்த மோதிரம் காணாமல் போன அன்று ஸ்டேஷனில் இருக்கும் கைதிகளை ஒரு வழி பண்ணியது நினைவு வந்து போனது. "அடிப்பாவி நீ தான் அந்த திருடியா?" என்று வாய்விட்டே கேட்டவனுக்கு கண்ணில் பட்டது ஒரு நூல். ஆம் அந்த நூல் அவன் கட்டி இருந்தது தான் .அதுவும் கூட ஒரு கைதியை போட்டு அடிக்கும் போது கழன்று தெறித்தது.தான். அவனோ அனைத்தையும் யோசனையாக பார்த்துக் கொண்டு இருக்க "இவ்ளோ நேரம் என்ன பண்ணுறீங்க சார்?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு.

அவனோ கையில் இருந்த மோதிரத்தையும் பார்த்துக் கொண்டே அவளை புருவம் சுருக்கி பார்க்க, அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறி தான் போனாள். முதலில் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறியவள் அடுத்த கணமே சுதாகரித்துக் கொண்டு அவனை நோக்கி விறு விறுவென வந்து அவன் கையில் இருந்த மோதிரத்தை பறித்தவள் "எதுக்கு என்னோட திங்ஸ்சை எடுத்து பார்க்கிறீங்க?" என்று கேட்க அவனோ "வாட்?" என்று சற்று குரலுயர்த்தியே கேட்டு விட்டான். அவளுக்கு அவன் குரலில் இருந்த கர்ஜனை கிலியைக் கொடுத்தாலும் அவனை சமாளிக்க வேறு வழி தெரியவே இல்லை. அவன் கேள்வி கேட்க முதல் அவனிடம் கோபப்பட்டால் மட்டும் தானே அவளால் அங்கிருந்து தப்ப முடியும். ஆனால் இதுவரை அவனிடம் அவள் கோபமாக பேசியது கூட இல்லை. இப்போதும் கூட கஷ்டப்பட்டு தான் பேசிக் கொண்டு இருக்கிறாள். அவளோ "என்ன வாட்? என் திங்ஸ் ஐ எடுத்தது தப்பு தான்" என்று சொல்லிக் கொண்டே அதனை பெட்டியில் வைத்து மூட அவனோ அவளை விசித்திரமாக தான் பார்த்தான்.

அவளோ மனதுக்குள் "இப்படியே பார்த்துட்டே இருந்தா நான் என்ன தான் பண்ணுறது?" என்று யோசித்துக் கொண்டே, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தவளாக "எதுக்கு இந்த ரூம்ல நிக்கிறீங்க.. போய் டி.வியைப் பாருங்க, நான் சமைச்சிடுறேன்" என்று சொல்லிக் கொண்டே செல்ல, அவனோ அவள் கையை எட்டிப் பிடித்து இருந்தான். அவளுக்கோ தூக்கி வாரிப் போட "ஐயோ நல்லா மாட்டிட்டேனே.." என்று நினைத்தவள், அப்படியே நிற்க, அவள் முன்னே வந்தவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "நான் போலிஸ்டி.. என் கிட்டயே உன் ஆக்டிங்கை காட்டுறியா? இந்த வீட்ல தான் நீ இருக்க போற.. நினைவு வச்சுக்கோ.. அவளோ சீக்கிரம் என் கிட்ட இருந்து தப்ப முடியாது" என்று சொல்ல, அவளோ அவனை கலங்கிய கண்களுடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கும் எப்படி இந்த சந்தர்ப்பத்தினை எதிர்கொள்வது என்றும் தெரியவே இல்லை.

அவனோ பதில் சொல்லாமல் விடமாட்டேன் என்கின்ற தோரணையில் அவளை நோக்கியவன் "சொல்லுடி.. என்னடி இது?" என்று கேட்க அவளும் இனி மறைத்து பயன் இல்லை என்று நினைத்துக் கொண்டே "சார், நீங்க இங்க வந்து ஜாயின் பண்ணுனதுல இருந்தே உங்கள லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. இது நீங்க கோபத்துல கடிச்சு துப்புன நகம் தான். நீங்க ஹெயார் கட் பண்ண போற டைம் அங்க இருக்கிற பையன் கிட்ட சொல்லி இந்த முடியையும் எடுத்துக்கிட்டேன்.. இப்படி சின்ன சின்னதா என்ன கிடைக்குதோ எடுத்து சேர்த்து வச்சுப்பேன்.. ஆனா சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல. உங்கள நினச்சு தான் கல்யாணமே வேணாம்னு இருந்தேன்.. ஆனா நீங்களே என்ன கல்யாணம் பண்ணிக்க கேட்பீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல.." என்று சொன்னவள் எச்சிலை விழுங்கிக் கொண்டே "இப்போ கூட எப்படி இவ்ளோ தைரியமா பேசுறேன்னு தெரில.. உங்களால காயத்ரியை மறக்க முடியலன்னு தெரியும். பயப்படாதீங்க நான் ஒண்ணும் என்ன நீங்க லவ் பண்ணனும்னு எதிர்பார்க்க மாட்டேன்.. ஆனா உங்கள லவ் பண்ண கூடாதுன்னு சொல்ல உங்களுக்கே உரிமை இல்ல" என்று சொன்னவள் நெகிழ்ச்சியாக பேசியதால் கண்ணில் இருந்து கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே விறு விறுவென செல்ல, அவள் முதுகை வெறித்துப் பார்த்தவனோ கண்களை மூடித் திறந்து கொண்டான். இப்படி ஒரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவே இல்லை அல்லவா?

அவனோ யோசனையுடன் சென்று ஹாலில் அமர்ந்து கொள்ள, அவன் மனமோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தது. தன்னை ஒரு பெண் இப்படி பைத்தியக்காரத்தனமாக காதலிக்கிறாள் என்று சந்தோஷப்படக் கூட முடியாத நிலையில் அவன் மனமோ காயத்ரியால் உண்டான காயத்தில் தத்தளித்துக் கொண்டு அல்லவா இருந்தது. காதலின் வலியை மாற்றக் கூடியதே காதல் தான் என்று அவன் அப்போது உணரவில்லை. யோசனையாக இருந்தவனை "சாப்பிட வாங்க" என்று ஷாந்தி அழைத்து இருக்க, அவனும் சற்றே இறுகிய முகத்துடன் நடந்து சென்று சாப்பிட அமர்ந்தான். அவள் சமைத்து வைத்த உணவினை அவன் அமைதியாகவே உண்ண, அவள் தான் பிளேட்டில் பிசைந்து கொண்டே சாப்பிட முடியாமல் திணறி போனாள். அவளுக்கு மனதில் ஒரு பதட்டம் அவன் எப்படி எதிர்வினை ஆற்றுவான் என்று. அவன் மௌனம் வேறு அவளை மேலும் பதற வைக்க, உணவை பிசைந்து கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ ஏறிட்டு அவள் கையை பார்த்தவன் அடுத்த வாயை சாப்பிட்டுக் கொண்டே "சாப்பிடு நான் ஒண்ணும் கேட்க மாட்டேன்" என்று சொல்லி விட்டு பிளேட்டை தூக்கிக் கொண்டே எழ அவளுக்கு அப்போது தான் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

பிளேட்டை கழுவி விட்டு வழமை போல அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு பாத்திரங்களை கழுவி வைப்பவன் இன்றும் கழுவி வைத்துக் கொண்டு இருக்க, அவளோ சாப்பிட்டு முடிந்த தனது பிளேட்டை கழுவும் பொருட்டு அவன் அருகே வந்து நிற்க, அவளைப் பார்க்காமலே அதனையும் வாங்கி கழுவ ஆரம்பிக்க, அவளோ "இல்ல நானே" என்று ஆரம்பித்தவள் இதழ்கள் அவனது அழுத்தமான பார்வையில் கப்பென்று மூடிக் கொண்டது. அவளோ அமைதியாகவே நின்று இருக்க, அவனோ அவளை பாராமலே "நீ போய் தூங்கு, நான் லைட் ஆப் பண்ணிட்டு வரேன்" என்றான் சகஜமாக. அவளுக்கு அது அதிர்ச்சி தான். அவன் வழமை போல சகஜமாக தான் இருக்கின்றான். ஆனால் அவளால் தான் சகஜமாக இருக்க முடியவில்லை அல்லவா? தயங்கி தயங்கி அவள் நடந்து செல்ல, அவனும் பெருமூச்சுடன் வேலைகளை முடித்து விட்டு சென்று அறைக்குள் படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவனோ ஜிம் அறைக்குள் நுழைந்து விட, அவளும் உடற்பயிற்சி செய்யும் பொருட்டு உள்ளே நுழைந்தவள் தான் அவனைப் பார்க்க முடியாமல் திண்டாடி போனாள். அவனுடைய இயல்பான தன்மை அவளுக்கும் ஆச்சரியம் தான். அவளோ அங்கிருந்த ட்ரேட் மில்லில் ஏறி ஓட ஆரம்பிக்க, பக்கத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டே "குட் மார்னிங்" என்று சொல்ல, அவளோ "குட் மார்னிங் சார்" என்றாள் அவனைப் பார்க்காமலே. ஆரம்பத்தில் அவள் கூறியதில் அதிர்ச்சியடைந்து இருந்தவனுக்கு இப்போது அவள் தடுமாற்றம் ஏனோ புன்னகையை தான் வரவழைத்தது. இரு பக்கமும் தலையாட்டி சிரித்தபடி அவனும் வியர்வையை துடைத்துக் கொண்டே வெளியேறி விட, அவளோ உடற்பயிற்சியில் கூட ஈடுபட முடியாமல் அங்கு தொய்ந்து அமர்ந்தவள் "இவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிய மாட்டேங்குதே.. என் மேல கோபமா இருக்கிற போலவும் இருக்கு இல்லாத போலவும் இருக்கு" என்று நினைத்துக் கொண்டே தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.

அன்று ஒன்றாக ஸ்டேஷனுக்கு சென்ற போதும் கூட அவன் அவளிடம் வித்தியாசமாக நடந்து கொள்ளவே இல்லை. ஆனால் வழமையாக அவளை பார்க்காமல் தனது வேலையை மட்டும் பார்ப்பவனின் கண்கள் அவளில் ஓரிரண்டு தடவை படிந்து மீண்டது. இப்படியே அவர்கள் நாட்கள் நகர, அவன் சகஜமாக நாட்களை கடத்த, அவளும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறி இருந்தாள். இப்படியான ஒரு நாளில் அஜய் ஒருவனை போட்டு அடித்துக் கொண்டு இருக்க, முன்னே நின்று இருந்த ஷாந்தியோ அடி வாங்குபவனை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் முகம் எல்லாம் இரத்தமாக இருக்க, கையில் இருந்த ஐம்பொன் காப்பை இறக்கி விட்டபடி அவன் வாயில் ஓங்கி குத்த ஆயத்தமானான். அவன் தோரணையே அந்த ஒரு அடி அவன் வாயை மொத்தமாக சிதைத்து விடும் போல இருக்க, ஷாந்தியோ அதனை சற்று மிரட்சியாக தான் பார்த்தாள். என்ன தான் போலீஸ்காரியாக இருந்தாலும் பெண்களுக்கே உரித்தான அந்த இரக்கம் அவளிடம் இல்லாமல் இருக்குமா என்ன? தண்டனை வாங்கிக் கொடுக்க அவள் நினைப்பாள், ஆனால் இப்படி காட்டு மிராண்டி தனமாக சட்டத்துக்கு புறம்பாக ஸ்டேஷனில் வைத்து அடிப்பது அவளுக்கு இஷ்டம் இல்லை தான். அதனை அவள் முகமே வெளிப்படையாக காட்ட, குத்த ஆயத்தமானவன் சட்டென நிமிர்ந்து முன்னால் பார்க்க, அவள் முகமே அவள் பிடித்தமின்மையை வெளிப்படையாக காட்ட, என்ன நினைத்தானோ தெரியவில்லை, பெருமூச்சுடன் கையில் இருந்த ரத்தத்தை துடைத்து விட்டு வெளியேறி விட்டான். அவளுக்கோ அதிர்ச்சி தான், திடீரென்று அவன் இப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்று அவளுக்கும் தெரியவே இல்லை. ஆனாலும் ஒரு நிம்மதி உருவாக, வெளியே வந்தவனை தனது அறைக்குள் அழைத்து இருந்தான் அஜய். அவளும் அவன் அறைக்குள் செல்ல, முன்னே சாலியூட் அடித்தபடி நின்றவளிடம் "இன்னும் ஒரு வாரத்துல இங்க இருந்து நீ கிளம்பிடணும்ல" என்று கேட்டான். அவளும் "ஆமா சார்" என்று சொன்னதுமே "ம்ம், சீக்கிரம் எல்லா பார்மாலிடீஸும் முடிச்சிட்டு கிளம்புற வழிய பாரு" என்று சொல்ல, அவளோ அதிர்ச்சியாக "இங்க இருந்து தானே" என்று சந்தேகமாக கேட்டாள். அவளுக்கோ வீட்டை விட்டும் மறைமுகமாக கிளம்ப சொல்கின்றானா என்கின்ற பயம். அவள் கேள்வியில் சட்டென நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் சிரிப்பை அடக்கிக் கொண்டே "இங்க மட்டும் இருந்து தான் கிளம்ப சொன்னேன்.. நீ கிளம்புனா தான் என்னால என்னோட வேலையை ஒழுங்கா பண்ண முடியும்" என்று சொல்ல, அவளோ "நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணலையே சார்" என்று சொன்னாள். அவனோ "அப்போ இன்னைக்கு நான் அடிக்கும் போது எதுக்கு முகத்தை சுருட்டி வச்சுக்கிட்டு நின்ன?" என்று வெளிப்படையாகவே கேட்டு விட, அவளோ "நான் வழமையா அப்படி தான் சார் நிற்பேன்.. எனக்கு நீங்க இப்படி அடிக்கிறது என்னவோ போல இருக்கும்" என்று சொல்ல, அவனோ "நான் இன்னைக்கு தானே உன்னை பார்த்தேன்" என்றான்.

அவளோ "அதுக்காகவா அடிக்காம வந்தீங்க?" என்று கேட்க., "ம்ம் உனக்காக தான் அடிக்காம விட்டேன்" என்று சொல்ல, அவளுக்கோ வானில் சிறகடிப்பது போன்ற உணர்வு. அவனும் அவளை பார்க்காமல் கையில் இருந்த பைலை பார்க்க, அவளோ சாலியூட் அடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு வாயெல்லாம் புன்னகை தான். செல்லும் போது அவளது முதுகை பார்த்தவன் இதழிலும் ஒரு மெல்லிய புன்னகை.

இடைப்பட்ட காலத்தில் ஒரு மெல்லிய உணர்வு அவனை ஆட்கொண்டு இருக்க, இதுவரை மனைவி என்கின்ற எண்ணமே இல்லாமல் இருந்தவனுக்கு சிறுக சிறுக அந்த எண்ணம் மனதில் ஆட்கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாக யோசித்தவனுக்கோ தாலி கட்டியவள் தன்னை இப்படி காதலிக்கும் போது தான் இப்படி இருப்பது நியாயமே இல்லை என்று தான் தோன்றியது. அது உண்மையும் கூட.. அதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அவளை ரசிக்க ஆரம்பித்தவன் இன்று அவளுக்காக ஒரு காரியத்தை செய்யாமல் விடும் அளவுக்கு முன்னேறி இருந்தான். ஆழமான காதல் அவளுக்கு என்று கூற முடியாது. ஆனால் நட்பை தாண்டி அவள் மேல் ஒரு மெல்லிய உணர்வு அவனுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் உருவாகி இருந்தது என்னவோ உண்மை தான். இது தான் மஞ்சள் கயிற்றின் மாயமோ?


அடுத்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்று தெரியவே இல்லை, அவளுக்கு ஸ்டேஷனில் கேக் வெட்டி விடை கொடுக்க, அனைவர்க்கும் முகத்தில் ஒரு சோகம், அஜய்யை தவிர. அவனுக்கு தான் அவள் எப்போதும் வீட்டிலேயே இருக்கின்றாள் அல்லவா? புதிதாக வருத்தப்பட வேண்டுமா என்ன? அவளும் கேக்கை வெட்டி அவனுக்கு முதலில் ஊட்டப் போக, அவனோ அவள் கண்களைப் பார்த்தபடியே கேக்கை கடிக்க, அவளுக்கு அவனது காந்த பார்வையினால் ஒரு சிலிர்ப்பு உடலில் உருவாகியது. ஆனாலும் உணர்வுகளை அடக்கிக் கொண்டு பிரியாவிடை நிகழ்வை முடித்தவள் அன்று வீட்டுக்கும் அஜய்யுடன் புறப்பட்டு இருந்தாள். போகும் வழியில் ஜீப்பின் பின் பக்க சீட்டில் இருந்த பரிசுகளைப் பார்த்தவள் "சார் நீங்க மட்டும் ஒண்ணுமே எனக்கு கொடுக்கல" என்று சொல்ல, அவனோ "நான் கொடுக்கலன்னா என்ன நீ தான் எடுத்துப்பியே, நகம் முடின்னு ஒன்னு விடாம" என்று நக்கல் குரலில் சொல்ல, அவளோ இதழ்களை சங்கடமாக கடித்துக் கொண்டவள் முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொள்ள, அவளை பக்கவாட்டாக திருப்பி பார்த்தவன் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
Super sis
 
Top