ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 82

pommu

Administrator
Staff member
நிலவு 82

மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு, தனது வண்டியில் சாய்ந்து நின்று, குழந்தையோடு வந்த ராகவியைப் பார்த்து இருந்தான் கஜன். அவள் விழிகளைப் பார்த்தே அழுது இருக்கின்றாள் என்று தெரிந்தது. வண்டியின் கதவைத் திறந்துவிட அவளும் ஏறிக் கொண்டாள்.

வண்டியை மூடிவிட்டு அடுத்த பக்கம் வந்து ட்ரைவர் சீட்டில் ஏறிய கஜனோ, "என்னாச்சு?" என்று கேட்டான்.

எல்லாமே சொன்னாள். சொல்லி முடித்த கணம் அழுகை.

"குழந்தையோட பேர் கூட கேட்க தோனலையா அண்ணா? அப்படி என்ன அழுத்தம்?" என்று ஆதங்கமாக வந்தது அவள் வார்த்தைகள்.

"அவன் வாங்குன அடி பெருசு ராகவி, டைம் எடுக்கும்." என்றான்.

"இதுக்கு மேல என்ன டைம்? ஆறு மாசம் ஆச்சு. என் கூட பேசலைன்னாலும் பரவாயில்லை, குழந்தையை கூட பார்க்க தோனலையே?" என்று சொல்ல,

"பார்க்க தோனலைன்னு சொல்ல முடியாது. அப்படின்னா இன்னைக்கு குழந்தையை தூக்கி இருக்க மாட்டான்ல?" என்று சொல்லிக் கொண்டு வண்டியை எடுத்தான்.

சற்று நேரம் அவளிடம் மௌனம். சிறிது நேரம் கழித்து, "அத்தை, மாமாகிட்ட சொல்லி அழைச்சிட்டு போக சொல்லிடுங்க. இப்படி இருக்கணும்னு என்ன தலையெழுத்தா?" என்று ஆதங்கமாக கேட்டாள்.

"இன்னைக்கு ஈவ்னிங் வருவாங்க தானே, சொல்லிடுறேன்." என்று சொன்னவன் அவளை வீட்டில் கொண்டு விட்டு இருந்தான்.

அன்று மாலை குழந்தையைப் பார்க்க பைரவியும் பார்த்தீபனும் வந்து இருந்தார்கள்.

பார்த்தீபனிடம், "அர்ஜுனை பார்த்துட்டு வந்துடுங்க மாமா." என்று சொல்ல, அவன் இதழ்கள் விரிய, "வர்றேன்னு சொல்லிட்டானா?" என்று கேட்டான்.

அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன், "அவனை அழைச்சிட்டு போறது உங்க கைலதான் இருக்கு." என்றான்.

"எங்க இருக்கான்?" என்று பார்த்தீபன் கேட்க, கஜனும் பதில் சொன்னான்.

"என்னது, சூப்பர் மார்க்கெட்ல வேலை பார்க்கிறானா?" என்று அதிர்ச்சி அவனிடம்.

ராஜா போல வளர்த்த மகன் ஆயிற்றே!

"ம்ம்..." என்று கஜனும் ஆமோதிப்பாக தலையாட்ட, "இப்பவே போறேன்." என்று பார்த்தீபன் ஆரம்பிக்க, "நாளைக்கு போங்க, இப்போ கடை மூடுற நேரம்." என்று மணியைப் பார்த்துக் கொண்டு சொன்னான்.

அன்று பைரவியுடன் வீட்டுக்கு வந்த பார்த்தீபனுக்கு தூக்கமே இல்லை. பைரவிக்கு அன்று முழுவதுமே அர்ஜுனின் நினைப்பு தான். அடுத்த நாள் காலையிலேயே கிளம்பி விட்டார்கள். அர்ஜுனும் கடையில்தான் நின்று இருந்தான். கடையின் முதலாளி செல்வமும் அங்கேதான் நின்று இருந்தார். அவருக்கு அர்ஜுனை தான் தெரியாது. பார்த்தீபனை நன்கு தெரியும். ஓரிரு முறைகள் சந்தித்து இருக்கின்றார்.

கடைக்குள் பைரவியுடன் நுழைந்த பார்த்தீபனைக் கண்டதுமே அவருக்கு அதிர்ச்சி, அத்தனை கடைகளை வைத்து நிர்வகிப்பவர் தனது கடையை தேடி வந்து இருக்கின்றாரே என்று.

"வாங்க... வாங்க சார்... எப்படி இருக்கீங்க? என்ன இந்தப் பக்கம்?" என்று கேட்டார் சற்று பவ்வியமாக.

பார்த்தீபனுக்கு என்ன சொல்வது என்று தடுமாற்றம் தான். அவருக்கு அர்ஜுனை பற்றி தெரியாது என்று கஜன் சொல்லி இருந்தான்.

"பைரவி, கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும்னு சொன்னா..." என்று சொல்லிக் கொண்டு பைரவியைப் பார்க்க, அவள் இந்த உலகத்திலேயே இல்லை.

விழிகளை சுற்றி அர்ஜுனை தான் தேடிக் கொண்டு இருந்தாள். செல்வத்துக்கு சற்று குழப்பம்தான். அவர்கள் கடையில் இல்லாத பொருட்களா? இங்கே வந்து வாங்க வேண்டும் என்று என்ன அவசியம் என்றுதான் தோன்றியது.

ஆனாலும் அதனை கேட்க முடியாதே? "ஆஹ்! இருங்க, ஒரு பையனை கூட அனுப்புறேன்." என்று சொன்னவரோ, "அர்ஜுன்!" என்று தான் அழைத்தார்.

அர்ஜுன் மேல் அளவு கடந்த நம்பிக்கை செல்வத்துக்கு. அர்ஜுனும் கழுத்தை வருடிக் கொண்டு அந்த இடத்துக்கு வந்தவன், அங்கே பைரவியையும் பார்த்தீபனையும் கண்டதும் அவன் விழிகள் அதிர்ந்து விரிய, சட்டென தன்னை நிதானப்படுத்திக் கொண்டு செல்வத்தைப் பார்த்தான்.

பைரவியோ, "அர்ஜுன்..." என்று ஆரம்பிக்க, அவள் கையைப் பற்றிய பார்த்தீபனோ, "தம்பி கூட போய் தேவையானது வாங்கிட்டு வாம்மா." என்று பார்த்தீபன் சொல்ல,

"என்ன வேணுமோ நல்லதா எடுத்து கொடுப்பா. சார் யாருன்னு தெரியுமா?" என்று அர்ஜுனிடம் கேட்க, அர்ஜுனோ பார்த்தீபனைப் பார்த்தவன், எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு இல்லை என்று தலையாட்டினான்.

பார்த்தீபனின் விழிகள் அவனிலையே படிந்து இருந்தன. எவ்வளவு மாறி விட்டான்? அடர்த்தியாக மீசை, தாடி வளர்த்து தோற்றத்திலேயே பெரிய மாற்றமாகிதான் இருந்தான். அதனை விட அவன் இயல்பில் அப்படி ஒரு மாற்றம். அர்ஜுன்தான் என்று கற்பூரம் அடித்து சொன்னால் கூட, நம்ப முடியாத அளவு நிதானம் இருந்தது.

எப்போதுமே பரபரப்பாகவும் கோபமாகவும் தான் அவனை பார்த்தீபன் பார்த்து இருக்கின்றான். இன்று தன்னைப் போலவே அவனிடம் அப்படி ஒரு நிதானத்தையும் மௌனத்தையும் பார்க்கின்றான். அவர்களைப் பார்த்ததுமே சின்ன அதிர்ச்சி, அவ்வளவு தான்.

உணர்வுகளை எவ்வளவு அழகாக இப்போதெல்லாம் கையாள்கின்றான் என்று பார்த்தீபனுக்கு தோன்றியது. பைரவிக்கோ இருவரின் அளவுக்கு பொறுமை இல்லை. மகனுடன் பேசிவிட வேண்டும் என்று தவிப்பு. மகனையே பார்த்து இருந்தாள். விழிகளில் நீர் நிரம்பி விட்டது. எப்பொழுதும் விழும் என்கின்ற நிலைதான்.

"சார்தான் லாவண்யா ஸ்டோர்ஸ் முதலாளி. ரொம்ப பெரிய இடம். பார்த்து எல்லாம் பண்ணிடுப்பா..." என்று சொல்லிவிட்டு பார்த்தீபனைப் பார்த்தவன், "ரொம்ப நல்ல பையன். ரொம்ப நிதானம், ரொம்ப அமைதி, ரொம்ப ரொம்ப பொறுமை, நல்ல புத்திசாலியும் கூட..." என்று பாராட்டு பத்திரம் வழங்க, பார்த்தீபனின் இதழ்கள் மெலிதாக விரிந்து கொண்டன.

அவன் புத்திசாலி என்று பார்த்தீபனுக்கு தெரியும். முதல்முறை அவன் குண இயல்பை பாராட்டி கேட்கின்றான். அர்ஜுனை பற்றி ஸ்கூலில் இருந்தே குறை கூறிதான் கேட்டு இருக்கின்றான்.

'ரொம்ப மூர்க்கமா இருக்கான் சார், ஹேண்டில் பண்ணவே முடியல. அந்த பையனுக்கு அடிச்சான், டீச்சர்ஸை கிண்டல் செய்யுறான்...' இப்படியான விஷயங்கள் மட்டும்தான் அவன் கேள்விப்பட்டு இருக்கின்றான். அப்போது இருந்தே, அர்ஜுனை மாற்ற வேண்டும் என்று அவனிடம் கண்டிப்பாக நடந்து கொள்வான் பார்த்தீபன்... பயன் இல்லை...

பார்த்தீபனில் இருந்து விலகி பைரவியிடம் ஒட்டிக் கொண்டான் தவிர, அவன் தன்னை மாற்றிக் கொள்ள முனையவே இல்லை... அதே கோபம், அதே மூர்க்கம் வளர்ந்தும் இருந்தது... தந்தையுடன் முரண்பாடு இன்று வரை இருந்தது. அதற்காக பாசம் இல்லை என்று சொல்லி விட முடியாது...

இருவருக்குமே பாசம் இருந்தது...

குண இயல்புகள் ஒத்துப் போகாத காரணத்தினால் பேசுவதை குறைத்து, சண்டை வரக் கூடாது என்று விலகி நின்று கொண்டார்கள்...

இப்போது தான் அர்ஜுன் மொத்தமாக மாறி இருக்கின்றான்.

முதல்முறையாக, 'அமைதி, நிதானம், பொறுமை...' என்று எல்லாம் அர்ஜுனை பற்றி பார்த்தீபன் கேள்விப்படுகின்றான். புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது.

"ம்ம்..." என்று சொல்லிவிட்டு பைரவியைப் பார்த்தவன், "நீ போம்மா..." என்றபடி செல்வத்துடன் கடையைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டான்.

அர்ஜுனும் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நுழைய, அவனைத் தொடர்ந்து வந்த பைரவி, "அர்ஜுன்!" என்று அழுகையுடன் அழைத்தாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன், "என்ன வேணும் மேம்?" என்று கேட்டு எட்ட நிறுத்தி இருந்தான். மொத்தமாக உடைந்து விட்டாள்.

"எதுக்குடா இப்படி பேசுற? நான் அன்னைக்கு பண்ணுனது தப்பு தான்..." என்று அழுதவள் கையைக் கூப்பி மன்னிப்பு கேட்க, அவனுக்கோ ஒருமாதிரி ஆகிவிட்டது.

சட்டென அவள் கையைப் பற்றி இறக்கி விட்டவன், "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று அதட்டலாக கேட்டான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "உன்னை நம்பி இருக்கணும்... என் தப்புதான்... நீ இல்லாம செத்த பிணம் போல இருக்கோம். வீட்டுக்கு வந்திடு அர்ஜுன்..." என்று அழுகையுடன் கெஞ்சினாள்.

"ரேப்பிஸ்ட்டை எதுக்கு உங்க வீட்டுக்கு கூப்பிடுறீங்க?" என்று அங்கிருந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டு ஆதங்கமாக கேட்டான். அவளைப் பார்க்கவில்லை. ராகவி போல பைரவியை அவனால் எட்ட நிறுத்த முடியவில்லை. மறைத்து வைத்து இருந்த ஆதங்கம் வெளியே வந்தது.

"தப்புதான் அர்ஜுன்... நான் உன்னை நம்பி இருக்கணும்... நீ திட்றதுன்னா திட்டிக்கோ, ஆனா வந்திடுடா..." என்றாள்.

அவனையே அழுகையுடன் பார்த்துக் கொண்டு கெஞ்சினாள்.

இப்போது அவளைப் பார்த்தவன், "திட்டுனா போல நடந்தது இல்லன்னு ஆயிடுமா? நீங்க அடிச்சது கூட எனக்கு வலிக்கல, அம்மா தானே அடிச்சாங்கன்னு கடந்து போயிடுவேன். ஆனா என்னை நம்பவே இல்லையே... யார் என்ன சொன்னாலும் என் பையன் அப்படி பண்ணி இருக்க மாட்டான்னு ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே... இட்ஸ் எ ரேப் அண்ட் அட்டெம்ப்ட் டு மர்டர். எவ்ளோ பெரிய பழியை தூக்கி போட்டுட்டீங்க? அட்லீஸ்ட் விசாரிச்சு இருக்கலாமே...? எனக்கு பேச வாய்ப்பு கொடுத்து இருக்கலாமே...? எதுவுமே பண்ணலையே..." என்று கலங்கிய கண்களுடன் சொன்னான்.

இதனை எல்லாம் கேட்க கூடாது என்று நினைத்து இருந்தான். முடியவில்லை, கேட்டு விட்டான். பைரவியின் அருகாமையில் அவனால் தனது உணர்வுகளை ஓரளவுக்கு மேல் அடக்கி வைக்க முடியவில்லை. கொட்டி விட்டான். அவனையே பார்த்து இருந்தாள் பைரவி.

"தப்பு தான்டா... விசாரிச்சு இருக்கணும்... யார் நம்பலைன்னாலும் நான் நம்பி இருக்கணும். முட்டாள்தனமா தப்பு பண்ணிட்டேன். இப்போ என்னடா நான் பண்ணணும்? நீ என் கூட வரவே மாட்டியா?" என்று ஏக்கத்துடன் கேட்டாள்.

அவளையே பார்த்து இருந்த அர்ஜுனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, "எதுவுமே பண்ண தேவல, நீங்க கிளம்புங்க." என்றான்.

"உன்னை அழைச்சிட்டு போகாம நாங்க போக போறது இல்ல. ராகவியோட டெலிவரிக்கு வந்தோம், ரெண்டு மாசமா இங்கதான் இருக்கோம்." என்றாள்.

"நான் வரவே போறது இல்லை. என்னை நிம்மதியா இருக்க விடுங்க, ப்ளீஸ்... இப்போ அழைச்சுட்டு போவீங்க, அப்புறம் ராகவி கூட சேர்ந்து வாழ சொல்வீங்க. அதெல்லாம் என்னால முடியாது. நான் இப்படியே இருந்திடுறேன். இந்த கல்யாணம் ஏன் பண்ணுனேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்மா. அந்த பொண்ணோட வாழ்க்கையும் கெடுத்து வச்சு இருக்கேன்..." என்றான் ஆதங்கமாக.

"உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டோம் அர்ஜுன். ராகவி கூட அதுதான் சொன்னா, அவ கூட வாழுறதும் வாழாததும் உன் விருப்பம். எங்க கூட வந்திடு, இங்க இப்படி வேணாம்..." என்று அவனைப் பார்த்துக் கொண்டு கெஞ்சுதலாக கேட்டாள்.

அப்படியாவது அவன் வந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் அவளுக்கு.

அவனோ, "இல்ல... என்னை நிம்மதியா விடுங்க..." என்று அவன் சொல்லி முடிக்க முதல், அவனை இறுக அணைத்தவள், "வந்திடு அர்ஜுன் ப்ளீஸ்..." என்றாள்.

அவன் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்று இருந்தான். அப்போது பார்த்தீபனும் அங்கே வர, அவனை ஏறிட்டுப் பார்த்தான் அர்ஜுன்.

பைரவியும் பார்த்தீபனின் கையைப் பிடித்துக் கொண்டு, "அவனை வர சொல்லுங்க..." என்று அழுகையுடன் கேட்டாள்.

அவள் தவிப்பு பார்த்தீபனுக்கும் புரிந்தது, அர்ஜூனுக்கும் புரிந்தது.

அர்ஜுனை நோக்கி வந்த பார்த்தீபனோ மெதுவாக கையை நீட்டி, அவன் கன்னத்தைத் தட்டிக் கொண்டு, "நல்லா இருக்கியாடா?" என்று கேட்டான்.

குரல் உடைந்து விட்டது. இந்தளவு மென்மையை அர்ஜுனிடம் முதல்முறை காட்டுகின்றான்.

அவனையே பார்த்து இருந்த அர்ஜுனோ, "நீங்க எப்படி இருக்கீங்க? உடம்பு எப்படி இருக்கு?" என்று கேட்டான்.

இதழ்களைக் கடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மகனைப் பார்த்த பார்த்தீபனோ, "ரொம்ப கஷ்டமா இருக்குடா... வீட்டுக்கு வாடா, நாங்க பண்ணுனது தப்புதான்..." என்று சொல்லிக் கொண்டு இறுக அணைத்துக் கொண்டான்.

இந்த அணைப்பை அர்ஜுனே எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக இந்த உருக்கம் அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவே இருப்பதே இல்லை. அவனுக்கு அதுவரை அடக்கி வைத்து இருந்த அழுகை எல்லாம் சட்டென வெளிவந்தது. அடக்க நினைத்தும் முடியவில்லை. சட்டென அழுது விட்டான். அவன் மேனி குலுங்கியது.

"ஏன்பா என்னை நம்பல?" என்று ஆற்றாமையுடன் கேட்டான்.

அவன் முதுகை வருடிக் கொடுத்த பார்த்தீபனோ, "ரொம்ப பெரிய தப்புதான் அர்ஜுன். சின்ன மன்னிப்புல சரி செய்ய முடியாத தப்பு..." என்று சொல்ல, சட்டென கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விலகி நின்றவன், "இல்ல... நான் வரல, நீங்க போங்க..." என்றான்.

அவனையே பார்த்தீபன் பார்த்து இருக்க, "நீங்க போங்க ப்ளீஸ்... எல்லாரும் பார்க்கிறாங்கப்பா..." என்றான் கெஞ்சுதலாக.

பைரவியை பார்த்த பார்த்தீபனோ, "கிளம்பலாம்மா..." என்று சொல்ல, "அவனை வர சொல்லுங்க..." என்றாள் அவள் கெஞ்சுதலாக.

"இப்போ கிளம்பலாம் பைரவி, வேலை செய்யுற இடத்துல அவனுக்கு சங்கடம் வேணாம்." என்று சொன்னவன், மனைவியை அழைத்து சென்று விட்டான்.

அவர்களையேப் பார்த்து இருந்தவன் வேகமாக வாஷ்ரூமினுள் சென்று கதவில் சாய்ந்து கண் மூடி நின்றான். அவன் உறுதி எங்கே சென்றது என்றே தெரியவில்லை. தந்தை அணைத்ததுமே குழந்தை போல அழுதே விட்டான். முதல்முறை மனம் மாறி அவர்களுடன் சென்று விடுவோமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.

பார்த்தீபனுடன் காரில் வந்து கொண்டு இருந்த பைரவியோ, "அவன் வரவே மாட்டானா?" என்று கேட்க,

"கண்டிப்பா வருவான்... அவன் நம்மள மொத்தமா விலக்கி நிறுத்தல, சட்டுன்னு ஆதங்கத்தை கொட்டுறான். கண்டிப்பா வருவான்..." என்று சொல்ல, பைரவிக்கு இப்போது தான் மனமே ஆறிப் போனது.

அன்று பைரவியை வீட்டில் விட்ட பார்த்தீபன் கஜனிடம் அவன் வீட்டு விலாசத்தை கேட்டுக் கொண்டு, மீண்டும் அவனைத் தேடி சென்று விட்டான். காரை பார்க் செய்து விட்டு அவன் வரும் வரை வெளியே காத்துக் கொண்டு நின்று இருந்தான். வேலை முடித்து வந்த அர்ஜுனுக்கு மயக்கமே வராத குறைதான்.

பைக்கை அவன் கார் அருகே பார்க் செய்து இறங்கியவன், "என்னப்பா இது?" என்று கேட்க, "அங்க உனக்கு தொந்தரவு, இங்க மனசு விட்டு பேசலாம்ல..." என்றான்.

"அதுக்குன்னு வீட்டுக்கே வருவீங்களா? உங்க மருமகனா அட்ரஸ் கொடுத்தார்?" என்று கேட்டுக் கொண்டு வீட்டைத் திறக்க, உள்ளே மகனுடன் சேர்ந்து நுழைந்தான்.

சின்ன வீடுதான். விழிகளை சுழற்றி வீட்டை அளந்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, "வேலை எல்லாம் எப்படி போகுது?" என்று கேட்க,

"இது கூட நல்லா தான் இருக்கு. ஸ்ட்ரெஸ் இல்ல, டென்ஷன் இல்லை. செய்யுற வேலைக்கு சம்பளத்தை வாங்கிட்டு, நிம்மதியா இருக்கேன்." என்று சொல்ல,

அவன் பேசுவதையே ரசனையாக பார்த்து இருந்தவன், "ரொம்பவே மாறிட்டடா..." என்றான்.

மென்மையாக சிரித்த அர்ஜுனோ, "டீ குடிக்கிறீங்களா?" என்று கேட்டான்.

"ம்ம்... போட தெரியுமா என்ன?" என்று கேட்க, "எல்லாமே ராகவிக்காக கத்துக்கிட்டேன்." என்று சொல்லிக் கொண்டு டீயை போட்டான்.

அவன் சொன்னது பார்த்தீபனின் இதயத்தில் ஓங்கி அடித்த உணர்வு. மனைவிக்காக மாறி இருக்கின்றான் என்று தோன்றியது. டீயை போட்டு பார்த்தீபனிடம் நீட்ட, அவனும் அதனை வாங்கிக்கொள்ள, அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் அர்ஜுன்.

"என் கூட பேசுற அளவுக்கு உன் அம்மா கூட நீ ஏன் பேசல? அம்மான்னு கூட கூப்பிடலன்னு சொல்லி வருத்தப்பட்டா..." என்று கேட்க,

அர்ஜுனோ, "நீங்க என்னை நம்பாதது வலிச்சதை விட அவங்க என்னை நம்பாதது ரொம்ப வலிச்சுது." என்றான்.

பேசும் போதே குரல் அடைத்துப் போனது.

"அவ ரொம்பவே பாவம் அர்ஜுன். எவ்ளோ மனசு வருத்தப்பட்டானு உனக்கு தெரியுமா? தூக்கமே இல்லாம டிப்ரெஷன் மாத்திரை எடுத்துக்கிட்டா. கவுன்சிலிங் போனா, நான் யார்கிட்டயும் சொல்லல, உன்கிட்ட தான் சொல்றேன்." என்றான்.

அர்ஜுன் அதிர்ந்து விட்டான்.

"என்ன சொல்றீங்க?" என்று அதிர, "வந்திடுடா... அவளுக்காக வந்திடு." என்று கெஞ்சுதலாக கேட்டான்.

இதற்கு மேல் எப்படி அவனால் மறுக்க முடியும்?

கண்களை மூடி திறந்தவன், "வந்திடுறேன்." என்று சொல்ல, "இப்போவே கிளம்பலாம்." என்றான்.

"வீட்டு ஓனர்கிட்ட சொல்லணும், கடை முதலாளிகிட்ட சொல்லணும்." என்று சொல்ல,

"மாப்பிள்ளைகிட்ட சொன்னா அவர் பார்த்துப்பார். நீ மனசு மாற முதல் நான் அழைச்சிட்டு போயிடணும்." என்று அவனை அவசரப்படுத்த,

அர்ஜுனோ, "நான் மனசெல்லாம் மாற மாட்டேன். வர்றேன்னு சொல்லிட்டேன்ல?" என்று சொன்னவன் பார்த்தீபனுடன் புறப்பட்டு இருந்தான்.

அர்ஜுன் தான் வண்டியை ஓட்டினான்.

"ட்ரைவர் வச்சுக்கலாம்ல? எதுக்கு நீங்களே ட்ரைவ் பண்ணுறீங்க?" என்று பார்த்தீபனுக்கு திட்டும் விழுந்தது.

"ட்ரைவர் கூடதான் இங்க வந்தோம். அவனுக்கு வேலைன்னு கிளம்பிட்டான்." என்று சொன்னவனோ, "தாடி என்னடா இப்படி வளர்ந்து இருக்கு?" என்று கேட்க,

"வளர்த்து பார்க்கலாம்னு யோசிச்சேன்." என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டான்.

வீட்டுக்கு வந்ததுமே கார் கதவைத் திறந்தவன் வீட்டினுள் செல்ல, அவனை அதிர்ந்து பார்த்த பைரவியோ, "வந்துட்டியா அர்ஜுன்...?" என்று சொல்லிக் கொண்டு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளை அணைத்துக் கொண்டு, "டிப்ரெஷன் டேப்லெட் எடுத்தீங்களா?" என்று கேட்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "ம்ம்..." என்று சொன்னாள்.

அவனும் பெருமூச்சுடன், "உங்க கூடவே வந்திடுறேன், ஆனா சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்." என்றான்.

"உன் பொண்டாட்டிய பத்தியோ, குழந்தையை பத்தியோ எதுவும் பேச மாட்டோம், ஓகேயா?" என்று கேட்க, அவனும் ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டான்.

"நீ அம்மான்னு கூப்பிடவே இல்லடா..." என்று அவள் ஆதங்கமாக கேட்க,

இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவனோ, "அம்மா... அம்மா... அம்மா... போதுமா?" என்று கேட்க, அவளும் அழுகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

என்னதான் அவன் ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாறி விட்டாலும், இன்னும் அவன் பைரவியின் செல்ல மகன்தான். அம்மாவையும் மகனையும் பார்த்து இருந்த பார்த்தீபனிடம் ஒரு நிறைவான புன்னகை.

இத்தனை நாட்கள் சின்ன பையன் என்றுதான் பார்த்தீபன் அவனை நினைத்து இருந்தான், இக்கணம் பெரிய மனுஷனாக தெரிந்தான்.

மாறி விட்டான்!

நிறையவே மாறி விட்டான்!

அவர்களை மனதார மன்னித்து ஒன்றிவிடும் அளவுக்கு முதிர்ச்சியடைந்து விட்டான். வன்மம் வளர்க்காமல், மன்னிக்க கற்றுக் கொண்டானே?!

இதனைவிட என்ன மாற்றம் அவனிடம் வந்துவிட முடியும்?

'நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல...' என்று இத்தனை நாட்கள் வாயினால் தான் சொல்லி இருக்கின்றான். இன்று வார்த்தைகளால் சொல்லவில்லை, செயலால் நிரூபித்து விட்டான்.
 
Top