ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 79

pommu

Administrator
Staff member
நிலவு 79

நாட்கள் நகர்ந்தன...

நிறைமாத குழந்தையை சுமந்து கொண்டு இருந்தாள் ராகவி. கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டு இருந்தாள். அர்ஜுனை இத்தனை நாட்கள் அவள் பார்க்கவே இல்லை. ஆசை இருந்தது, அவனைப் பார்க்க வேண்டும் என்று மனம் பிசைந்து கொண்டு இருந்தது.

சில சமயம், "எனக்கு அர்ஜுனை பார்க்கணும் அண்ணா..." என்று வாய் விட்டே கஜனிடம் கேட்டு இருக்கின்றாள்.

"குழந்தை பிறக்கட்டும் ராகவி." என்று அவன் பதில் அழுத்தமாக வெளிவரும்.

அவனுக்கோ அர்ஜுனை தொந்தரவு செய்ய சென்று, அவன் ஊரை விட்டு மொத்தமாக கண் காணாத இடத்துக்கு சென்று விட்டால் என்ன செய்வது என்று பயம். அர்ஜுன் தனது கண் பார்வையில் இருக்கும்வரை, எப்படியோ அவர்களது வாழ்க்கையினை சரி செய்துவிட முடியும் என்று அவனுக்கு தெரியும். தொலைதூரம் போய் விட்டால் எல்லாமே கைமீறி போய்விடும். அர்ஜுனை பார்க்க செல்ல வேண்டும் என்றால், அவன் மனநிலை மாற வேண்டும்.

அதற்கு காலம் தவிர எந்த மருந்தும் இல்லை. அதனால் தான் அழுத்தமாக யாரிடமும் அவனைப் பற்றி மூச்சு கூட கஜன் விடவில்லை.

வளைகாப்பு வைப்பது பற்றி வீட்டில் எல்லோருமே பேச ஆரம்பித்து இருக்க, "எனக்கு எதுவுமே வேணாம்..." என்று ஆணித்தரமாக சொல்லி விட்டாள் ராகவி.

அதனை மீறி என்ன செய்துவிட முடியும்? இன்னும் ஒரு வாரத்தில் ராகவிக்கு பிரசவம் நடைபெற இருந்தது. ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்த கஜனைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

ஷூவை போட்டுவிட்டு அவள் அருகே வந்து அமர்ந்தவன், அவள் தலையை அழுந்த பற்றி வருடிக் கொண்டு, "என்னடி கன்னுகுட்டி?" என்று கேட்டான்.

இத்தனை நாட்கள் கழித்து அவனிடம் இருந்து இப்படி ஒரு செல்லமான அழைப்பு.

அவள் விழிகள் கலங்க தலையைத் தாழ்த்திக் கொண்டு, "அர்ஜுனுக்கு டெலிவரி பத்தி தெரியுமா?" என்று கேட்டாள்.

பெருமூச்சுடன் இதழ் குவித்து ஊதிக் கொண்டு, "சொல்லிடுறேன்." என்றபடி எழுந்து கொள்ள, "வருவாரா?" என்று அடுத்த கேள்வி அவளிடம்.

"நோ ஐடியா." என்று இதழ்களைப் பிதுக்கிவிட்டு, அங்கே குழந்தையுடன் நின்ற பல்லவி அருகே சென்றான்.

அவனைப் பார்த்து குழந்தையும் வாய்விட்டு சிரிக்க, "என் யாழி குட்டி" என்று சொல்லி குழந்தையினைக் குனிந்து முத்தமிட, அவன் மூச்சுக் காற்று பல்லவியின் முகத்தில் சட்டென பட்டது.

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு கண்களை மூடி திறக்க, "வர்றேன் பல்லவி." என்று மென் சிரிப்புடன் சொல்ல, அவளும் தலையாட்டிக் கொண்டாள்.

வெண்ணிற ஷேர்ட் அணிந்து முட்டிவரை மடித்து விட்டு இருந்தான். கையில் கைக்கடிகாரம் இருந்தது. தாடி, மீசை ட்ரிம் செய்து இருந்தான். அவன் மனதை மட்டுமே இத்தனை நாட்களாக ரசித்தவள், அவன் தோற்றத்தையும் ஆசையாக ரசித்துப் பார்த்தாள். அவன் நாசியின் கூர்மையை எப்போதுமே வியந்து பார்ப்பாள். 'கிளி மூக்கு' என்று மனதுக்குள் சொல்லியும் கொள்வாள்.

பின்னங்கழுத்தை வருடிக் கொண்டு நடந்து சென்றவனை, ரசனையாக பார்த்துக் கொண்டவளது இதழ்களுக்குள் புன்னகை அரும்ப, தலையை உலுக்கி விட்டு வேலையைப் பார்க்க தொடங்கி விட்டாள்.

வெளியேறி தனது வண்டியில் ஏறியவனுக்கு ராகவியின் எண்ணம்தான் ஓடிக் கொண்டு இருந்தது. அவள் தவிப்பு புரிகின்றது. நேசம் புரிகின்றது. அதற்காக அவனை இழுத்துக் கொண்டு வந்து வாழ சொல்லி கட்டாயப்படுத்த முடியாதே! அவர்கள் வாழ்க்கை கட்டாயத்தில் தான் ஆரம்பித்தது. அதே தவறு மீண்டும் நடந்துவிட கூடாது என்று ஆசைப்படுகின்றான்.

இந்தமுறை நேசத்துடன் அவர்கள் வாழ்க்கை தொடங்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு அவனுக்கு இருந்தது.

அன்று ஹாஸ்பிடலில் அமர்ந்து இருக்க, அவனைத் தேடி ராம்குமார் மற்றும் சுகானா வந்து இருந்தார்கள்.

அவன் இதழ்கள் அவர்களைப் பார்த்ததுமே சட்டென விரிய, "என்னை பார்க்க வந்து இருக்கீங்கன்னா..." என்று இழுத்தான்.

"ஐ ஆம் ப்ரெக்னன்ட்!" என்று சுகானா சொல்ல, "தேங்க் காட்! செக் பண்ணிடலாம்." என்று சொல்லி அவளை பரிசோதித்தவன், "ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே, நிறைய ரெஸ்ட் எடு. டேய் ராம் பார்த்துக்கோ." என்று அவனுக்கும் அறிவுறுத்தல்களை சொல்ல, அவர்களும் சந்தோஷமாக கிளம்பி விட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இயல்பாகிக் கொண்டு இருந்தது.

மெதுவாக கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு இப்போது நேத்ராவின் எண்ணம். அவள் வாழ்க்கை சீராக செல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் அவனுக்கு எப்போதுமே இருக்கின்றது. அவனுக்காக திருமணம் செய்கின்றேன் என்றுதான் சொன்னாள். என்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றது என்று அவனுக்கு உறுத்திக் கொண்டு இருந்தது.

***

இதே கணம், நேத்ரா குளித்துவிட்டு வந்த ஜீவிதனின் இடையை, பின்னால் இருந்து அணைத்து அவனது வெற்று முதுகில் கன்னத்தைப் பதித்தாள்.

"என்னடி?" என்று அவன் குரல் கரகரப்பாக வர, மெதுவாக விலகி அவன் முன்னே வந்து நின்றவள், "இன்னைக்கு கொஞ்சம் லேட்டா ஸ்டேஷனுக்கு போங்க." என்றாள்.

"என்ன விளையாடுறியா? எனக்கு முக்கியமான கேஸ்..." என்று முடிக்க முதல், கால் பெருவிரலில் எம்பி அவன் மீதி வார்த்தைகளை அவளே தனக்குள் உள்வாங்கிக் கொள்ள, அவனோ கண்களை மூடி உஷ்ண பெருமூச்சை விட்டுக் கொண்டான்.

மெதுவாக விலகிக் கொண்டு அவன் விழிகளைப் பார்க்க, "எனக்கு ஓகே தான்..." என்று தனது இடையில் இருந்த டவலில் கையை வைக்க, "அட! ச்ச..." என்று அவன் கையைத் தட்டி விட்டவள், "எப்போ பார்த்தாலும் இதே நினைப்பு தானா?" என்று கேட்டாள்.

"சும்மா இருந்தவன்கிட்ட லேட்டா வேலைக்கு போக சொல்ற, கிஸ் அடிக்கிற, வேற என்ன நான் நினைக்கிறது?" என்று சிரித்துக் கொண்டு கேட்க, அவன் கையைப் பற்றி தனது வயிற்றில் வைத்துக் கொண்டு அவன் காதருகே எம்பியவள்,

"உள்ளுக்குள்ள குட்டி போலீஸ் மாமா இருக்கார்..." என்று சொன்னதுமே அவனுக்கு ஆச்சரியம்.

"ஹேய் நிஜமாவா?" என்று அவளை விழி விரித்துப் பார்த்து புன்னகையுடன் கேட்க, அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "விடிய விடிய பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு, ஏதோ சூரிய பகவான் மூலம் நான் ப்ரெக்னன்ட் ஆன போல ரியாக்ஷன் கொடுக்கிறீங்க?" என்று கேட்டாள்.

அவனோ சத்தமாக சிரித்தபடி அவள் இதழ்களில் ஆழ்ந்த முத்தம் பதித்து விலகியவன், "வீட்ல சொல்லிட்டியா?" என்று கேட்க, "உரிய ஆள்கிட்ட தானே முதல்ல சொல்லணும்..." என்று கண் சிமிட்டி சொல்ல, அவளை காற்றுப் புகமுடியாதது போல இறுக அணைத்து இருந்தான்.

அதனைத் தொடர்ந்து இரு வீட்டிலும் சொல்லி இருக்க, "மாமாகிட்ட செக்கப் பண்ணிட்டு வந்திடலாம்." என்றாள் நேத்ரா.

"இப்பவே கிளம்பிடலாம்..." என்று சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பியும் விட்டான்.

அடுத்து உள்ளே வந்த ஜீவிதனையும் நேத்ராவையும் விழி விரித்துப் பார்த்தான் கஜன். இன்றுதான் அவளைப் பற்றி நினைத்தான். அவளே வந்து இருக்கின்றாள்.

"எப்படி இருக்கீங்க?" என்று இருவரிடமும் கேட்டவன், "சிட்." என்று சொல்ல, "நாங்க நல்லா இருக்கோம் மாமா, நீங்க?" என்று கேட்டாள் நேத்ரா.

"ரொம்ப நல்லா இருக்கேன், என்ன விஷயம்?" என்று அவன் இழுவையாக கேட்க, நேத்ரா மென் புன்னகையுடன், "ப்ரெக்னன்ட்டா இருக்கேன்." என்றாள்.

அவன் இதழ்கள் தாராளமாக விரிந்தன.

"ஓஹ் மை காட்!" என்று சிரித்துக் கொண்டு கழுத்தை வருடியவன், "கங்கிராட்ஸ்டா!" என்று ஜீவிதனிடம் சொல்ல, "தேங்க்ஸ்!" என்றான் அவன் புன்னகையுடன்.

ஜீவிதன் கஜனையே ஆச்சரியமாக பார்த்து இருந்தான். நேத்ரா சந்தோஷமாக இருக்கின்றாள் என்று சொன்னதுமே, அப்படி ஒரு நிறைவான இதழ் நிறைந்த புன்னகை கஜனிடம்.

நேத்ராவுக்காக இவ்வளவு சந்தோஷப்பட முடியுமா என்று தோன்றும் அளவுக்கு, அவன் விழிகளும் சேர்ந்து சிரித்துக் கொள்ள, "செக் பண்ணிடலாம்." என்று சொன்னவன் கர்ப்பத்தையும் உறுதி செய்து இருந்தான்.

அதனைத் தொடர்ந்து அவள் எடுக்க வேண்டிய மாத்திரைகளை எழுதிக் கொடுக்க, ஜீவிதனின் அலைபேசி அலறியது.

"எக்ஸ்கியூஸ் மீ..." என்று அவன் அலைபேசியுடன் வெளியேறி இருந்தான்.

இப்போது நேத்ரா கஜனைப் பார்த்துக் கொண்டு, "சந்தோஷமா இருக்கீங்களா மாமா?" என்று கேட்டாள்.

அவளை ஏறிட்டுப் பார்த்தபடி கைகளைக் கோர்த்துக் கொண்டு உடலை முன்னோக்கி சரித்தவன், "ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா." என்றான்.

"நீங்க சந்தோஷமா இருக்கணும் மாமா." என்றாள்.

"சந்தோஷமா தானடி இருக்கேன்..." என்று அவன் சொல்ல, "யாழினியோட நிறுத்திடாம, அவளுக்கு தம்பி, தங்கச்சினு நிறைய குழந்தைங்க பெத்து சந்தோஷமா இருக்கணும்." என்றாள்.

சட்டென வாயில் கையை வைத்தபடி அவளை ஆச்சரியமாக பார்த்தவன், "எனக்கே அட்வைஸ் பண்ணுற அளவுக்கு வளர்ந்துட்டியா என்ன?" என்று கேட்டான்.

"இப்போ சொல்ல எனக்கு தகுதி இருக்குல்ல...?" என்றாள்.

அவனும் சத்தமாக சிரித்துக் கொண்டு, "ம்ம்... அத பத்தி யோசிக்கலாம்." என்று அக்கணம் அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

ஜீவிதனுக்கு அழைத்து இருந்த சப் இன்ஸ்பெக்டரோ, "எதுக்கு சார் கால் பண்ண சொன்னீங்க?" என்று கேட்க,

அவனும், "ஸ்டேஷன்ல என்ன நடக்குதுன்னு கேட்கதான்..." என்று சொல்லி அவனுடன் பேசிவிட்டு வைத்தவன் நேத்ரா, கஜனுடன் இலகுவாக பேசட்டும் என்றுதான் விலகி சென்றதே!

தான் இருந்தால் கண்டிப்பாக அவளுக்கு ஒரு சங்கடம் இருக்கும் என்று, அவனுக்கு தெரிந்துதான் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து இருந்தான்.

சற்று நேரம் கழித்து அவன் உள்ளே செல்ல கஜனோ, "அடுத்த செக்கப் டேட் எழுதி இருக்கேன், அழைச்சிட்டு வந்திடு. டாப்லெட்ஸ் எழுதி இருக்கேன்." என்று சொல்ல, "தேங்க்ஸ் அண்ணன்." என்றான் அவன்.

மேலும் தொடர்ந்த ஜீவிதனோ, "அர்ஜுனை பார்த்தீங்களா?" என்று கேட்க, "இன்னைக்கு ஈவ்னிங் பார்த்து பேசணும், அடுத்த வாரம் ராகவிக்கு டெலிவரி டேட் இருக்கு, சொல்லணும்ல..." என்றான்.

"அவன் மனசு மாறுனா நல்லா இருக்கும்." என்று ஜீவிதன் உண்மையான வருத்தத்துடன் சொல்ல, "மாறுவான்னு நம்புவோம்." என்று சொல்லிக் கொண்டான் கஜன்.

ஜீவிதனும், "அப்போ நாங்க கிளம்புறோம்." என்றபடி எழுந்து கொள்ள, அவனுக்கு கையைக் குலுக்கிவிட்டு நேத்ராவை கஜன் பார்க்க, "கிளம்புறேன் மாமா." என்று சொல்ல, "உடம்பை பார்த்துக்கோ, புரியுதா?" என்று கேட்டான்.

அவளும் ஆமோதிப்பாக தலையை அசைத்து விட்டு கிளம்பி விட்டாள்.

அன்று மாலையில் கஜன் தனது வண்டியை எடுத்துக் கொண்டு சென்றது என்னவோ அர்ஜுனை தேடிதான். இடைப்பட்ட நாட்களில் அவனுடன் அலைபேசியில் பேசி இருக்கின்றான். அவனும் கஜனிடம் வாங்கிய பணத்தை திரும்ப அவன் வங்கி கணக்கில் போட்டும் விட்டான். வேண்டாம் என்று சொன்னால் கேட்கவா போகின்றான் என்கின்ற நினைப்பில், அவனும் பணத்தைப் பற்றி அர்ஜுனிடம் பேசவில்லை. அடிக்கடி நேரில் சென்று தொந்தரவு செய்ய விரும்பாமல் தான் விலகி இருந்தான். அவனைப் பற்றி கடை முதலாளி செல்வத்திடம் விசாரித்தான்.

"புத்திசாலி பையன் டாக்டர், அவனால கடைல இப்போ நல்ல வியாபாரம் போகுது." என்று சொன்னார்.

செல்வத்துக்கு அர்ஜுனை பற்றி எதுவும் தெரியாது. கஜன் கொண்டு விட்ட பையன் என்று மட்டுமே தெரியும். அவரும் சற்று பழமையானவர் என்பதால், எதனையும் தூண்டி துருவவில்லை. கடை முதலாளி சொன்னதைக் கேட்டு சிரிப்புதான் அவனுக்கு வந்தது. எத்தனை கடைகளை நிர்வகித்தவன் அவன்? அவனுக்கு எப்படி கடையை நடத்த வேண்டும் என்று அத்துப்படி ஆயிற்றே! அவன் வேலை செய்யும் கடை செழிக்கவில்லை என்றால்தான் அதிசயம்.

அவர்கள் கடையின் பிரம்மாண்டத்துடன் ஒப்பிடும் போது, இது சாதாரண சூப்பர் மார்க்கெட்தான். இதுவரை அர்ஜுனுக்கு தேவையான பெரிய இடைவெளியை கஜன் கொடுத்து இருந்தான். இனியும் அப்படியே விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளுடன் சேர்த்து ஆகவேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இன்று அவனே நேரில் சென்றான்.

வண்டியை பார்க் செய்து விட்டு, ‘பார்வதி ஸ்டோர்ஸ்’ என்னும் பெயர் பலகையைப் பார்த்துக் கொண்டு இறங்கினான். பிடரியை வருடிக் கொண்டு உள்ளே நுழைந்தான். பில் போடும் இடத்தில் ஒரு பெண்தான் நின்று இருந்தாள்.

அவளை நோக்கி வர, "சார்!" என்று சொன்னாள் அவள்.

"அர்ஜுன் எங்க?" என்று கேட்டான்.

"அவர் ஸ்டோர் ரூம்ல..." என்று பெண்ணவள் சொல்ல, "ஓகே." என்று சொல்லிக் கொண்டு நகர்ந்து பொருட்களை பார்க்க தொடங்கி விட்டான். என்ன வாங்குவது என்ற தடுமாற்றம் அவனுக்கு. நேற்றுதான் எல்லாமே வீட்டில் வாங்கி குவித்து இருந்தார்கள். தேவை என்று இக்கணம் அவனுக்கு ஒன்றும் இல்லை.

ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வந்தவனுக்கு ராகவி காலையில், ‘ஐஸ்க்ரீம் சாப்பிடணும் போல இருக்கும்மா.’ என்று துளசியிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

அங்கே இருந்த குளிர்சாதனப்பெட்டியில் இருந்து, அவளுக்கு பிடிச்ச சாக்லேட் ஐஸ்க்ரீமை எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்துக்கு அவன் வர, அங்கே அர்ஜுனிடம் பில் போடும் இடத்தில் நின்ற பெண் பேசிக் கொண்டு இருந்தாள்.

வழக்கம் போல கருப்பு நிற ஷேர்ட் மற்றும் ஜீன்ஸ்தான். “இந்த கலரை இவன் விடவே மாட்டானா?” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான் கஜன்.

அவளுக்கு பில் போடும் சிஸ்டத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

"இத எத்தனை தடவை உனக்கு சொல்லி கொடுக்கிறது லதா?" என்று அவளுக்கு திட்டும் விழுந்தது, கொட்டும் விழுந்தது.

அவளோ தலையைத் தேய்த்துக் கொண்டு, அவனை மென் சிரிப்புடன் பார்த்து விட்டு சிஸ்டத்தை பார்த்தாள்.

அக்கணம் கஜனும் அவ்விடத்தை அடைந்து இருக்க, அர்ஜுனோ அவனை அதிர்ந்து பார்த்தவன், "நீங்க எங்க இங்க?" என்று கேட்டான்.

லதாவோ, "அர்ஜுன், நான் சொல்லவே மறந்துட்டேன். சார் வந்ததுமே உங்கள கேட்டார்." என்று சொல்ல, "ஓஹ்!" என்று சொன்ன அர்ஜுனோ அவன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை பார்க்க, "பில் போட்டுட்டு பேசலாமா?" என்று கேட்டான்.

அர்ஜுனும், "ஓகே" என்று சொல்ல, "உங்க அண்ணனா?" என்று லதா அர்ஜுனிடம் கேட்க,

அர்ஜுனோ, "நோ... நோ..." என்று அவசரமாக மறுக்க, "நாசமா போச்சு..." என்று வாய்விட்டு சொன்ன கஜனோ, அர்ஜுனின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, "அவன் பொண்டாட்டியோட அண்ணன்." என்று சொல்லி விட்டான்.

அர்ஜுனுக்கு புரையேறிவிட, சட்டென இருமிக் கொண்டு கஜனை விழி விரித்து பக்கவாட்டாக திரும்பி அதிர்ந்து பார்க்க, "கல்யாணம் ஆயிடுச்சா?" என்று குரல் கம்ம கேட்டாள் லதா.

"குழந்தையே பிறக்க போகுது..." என்று கஜன் சொல்ல, அர்ஜுன் ஒரு பெருமூச்சுடன், "நான் பில் போடுறேன், நீ வேலையை பாரு." என்று பில் போடும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

அவனுக்கு இடம் விட்டு நகர்ந்து நின்ற லதா, "நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்டாள்.

அர்ஜுனும் குரலை செருமிக் கொண்டு, "குழந்தையே பிறக்க போகுதுன்னு சொன்னார்ல?" என்றான்.

"சொல்லவே இல்லையே..." என்று அவள் அதிர்ந்து கேட்க, அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "நீ கேட்கவே இல்லையே..." என்றான்.

கஜனோ சலிப்பாக கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்தபடி நின்று இருக்க,

லதாவும், "கேட்காதது என் தப்புதான் அண்ணன்..." என்று அர்ஜுனிடம் சொல்லிக் கொண்டு நகர்ந்து செல்ல, "என்னது அண்ணனா?" என்று கேட்டான் அர்ஜுன்.

"அதுதான் குழந்தை பிறக்க போகுதுல்ல, அங்கிள்னு கூட கூப்பிடலாம், தப்பில்ல..." என்று சொன்னபடி சென்று விட்டாள்.

"என்னது அங்கிளா?" என்று மீண்டும் அதிர்ச்சி அவனிடம்.

இதனைக் கேட்டுக் கொண்டு இருந்த கஜன் இதழ் பிரித்து சத்தமாக சிரிக்க, அவனை வெறித்துப் பார்த்த அர்ஜுனோ, "வந்த வேலையை சிறப்பா முடிச்சிட்டிங்க போல?" என்று சொல்லிக் கொண்டு பில்லை போட்டான்.

கஜனும் பர்ஸை எடுத்து பணத்தை நீட்டி இருக்க, "தட்ஸ் ஓகே, நான் பார்த்துக்கிறேன்." என்றான்.

"ராகவிக்கு தான் வாங்குறேன், நீ வாங்கி கொடுத்ததா சொல்லட்டுமா?" என்று கஜன் கேட்க, சட்டென அவன் கையில் இருந்த பணத்தைப் பறித்து எடுத்து, பணம் வைக்கும் பெட்டியில் போட்டுக் கொள்ள, அவன் தோளில் கையைப் போட்ட கஜனோ, "இங்க பேச இடம் இருக்கா?" என்று கேட்டான்.

"முன்னுக்கு ஒரு கடை இருக்கு, டீ சாப்பிட்டுட்டே பேசலாம்." என்றான் அர்ஜுன்.

அவனும் அர்ஜுனை அழைத்துக் கொண்டு டீ கடைக்கு சென்றான்.
 
Top