ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 72

pommu

Administrator
Staff member
நிலவு 72

வந்தனாவுடனேயே அதிக நேரம் தங்கி இருந்த சுகானாவுக்கு இதயத்தில் சுள்ளென்று வலித்துக் கொண்டு இருந்தது. வந்தனாவின் பிரச்சனை முன்னே தனது பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது, ஆனாலும் வலித்தது.

இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று தோன்ற, அவள் தேடிச் சென்றது என்னவோ கஜனைத் தான்.

அவனும் அவளை யோசனையுடன் பார்த்தவன், "சிட் சுகானா, என்ன விஷயம்?" என்று கேட்க, "நான் ஒரு பேஷண்ட்டா வந்திருக்கேன்." என்றாள்.

அவன் புருவம் இடுங்க, விழிகளைத் தாழ்த்திக் கொண்டு, "அபார்ட் ஆயிடுச்சு..." என்றாள்.

அவனோ சட்டென கண்களை மூடி திறந்தவன், "எப்போ?" என்று கேட்டான்.

"ரெண்டு நாள் இருக்கும்..." என்று சொன்னதுமே, "ப்ச்!" என்று நெற்றியை நீவிக் கொண்டு, "சொல்லி இருக்கலாம்ல?" என்று ஆதங்கமாக கேட்டான்.

"இவ்ளோ பிரச்சனைக்கு நடுவில..." என்று அவள் ஆரம்பிக்க, "அதுக்காக சொல்லாம இருப்பியா? டோன்ட் யூ ஹேவ் சென்ஸ்? இந்த பிரச்சனை பெருசு, அந்த பிரச்சனை சிறுசுனு எதுவுமே இல்லை. அவங்க அவங்களுக்கு அவங்க பிரச்சனை பெருசுதான். உன்னை வந்தனா கூட நான் நிற்க சொல்லவே இல்லை. ஜஸ்ட் கொஞ்ச நேரம் பார்த்துக்க மட்டும் தான் சொன்னேன். நீ எதுக்கு இவ்ளோ ஸ்ட்ரெயின் பண்ணி நின்ன? உனக்கு ஹெல்த் இஸ்ஸுன்னா சொல்லிட்டு கிளம்பி இருக்கலாமே?" என்று கேட்டான்.

"அவளை இந்த நிலைமைல விட்டுட்டு போக தோனல, நீங்க அண்ணனா இருந்தாலும், அவளோட ரொம்ப பெர்ஸ்னலான ஹெல்த் இஸ்ஸுஸ் என்கிட்ட மட்டும் தானே சொன்னா, எப்படி நான் விட்டு போறது?" என்று கேட்டாள்.

வாஸ்தவம் தான், அவள் எழுந்ததும் உண்டான உடல் உபாதைகளை சங்கடம் இன்றி, அவள் பகிர்ந்து கொண்டது சுகனாவிடம் மட்டும்தான். வந்தனா, முகம் பார்த்து இதுவரை பேசி இருந்தது கஜனிடமும் சுகானாவிடமுமே.

விட்டுச் செல்ல மனம் இல்லாமல் இரவு, பகலாக விழித்து கூடவே இருந்தாள். இப்போது குழந்தையை இழந்து கொண்டு நிற்கின்றாள்.

"ஓகே ஃபைன், செக் பண்ணி டி அண்ட் சி பண்ணணுமானு பார்க்கணும், ராமுக்கு தெரியுமா?" என்று கேட்டான்.

இல்லை என்று தலையாட்டினாள்.

"ஹேவ் யூ லாஸ்ட் யுவர் மைண்ட்?" என்று கேட்டபடி, ராம்குமாருக்கு அழைத்தவன், "ரூமுக்கு வா." என்று சொல்ல, அவனும் வந்தான்.

கஜனுக்கு எப்படி அவனிடம் சொல்வது என்று தெரியவில்லை.

குரலை செருமிக் கொண்டு, "அபார்ட் ஆயிடுச்சாம்..." என்று சொல்ல, அதிர்ந்து தனக்கு அருகே அமர்ந்து இருந்தவளைப் பார்த்தான்.

அவளோ விழிகளைத் தாழ்த்திக் கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, சட்டென இதழ் கடித்து உணர்வுகளை அடக்கிய ராம்குமாரும், "டி அண்ட் சி பண்ணணும்னா பண்ணிடலாம்." என்றான்.

"ம்ம்..." என்றவன் அதற்கான வழிகளைப் பார்த்தான்.

வீட்டுக்கும் விடையத்தை சொல்லி இருக்க, அவர்களுக்கோ நெஞ்சமே அடைத்து விட்டது.

"எத்தனை கஷ்டத்தை தான் இந்த கடவுள் கொடுப்பார்? அவருக்கு இரக்கமே இல்லையா?" என்று துளசி வாய் விட்டே அழுது திட்டினாள்.

சுகானாவுக்கு சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அனுப்பிய கஜனோ, "ரெஸ்ட் எடு, கொஞ்ச நாள் ஹாஸ்பிடல் வரணும்னு இல்லை. உடம்பை பார்த்துக்கோ..." என்று சொல்ல, அவளும் வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்.

ராம்குமார் தான் அழைத்து வந்தான். எதுவும் அவளிடம் பேசவில்லை. அவளும் பேசவில்லை. வீட்டுக்கு வந்ததுமே அவளை அணைத்து விடுவித்த ஜெயந்தி, "கொஞ்சம் ஓய்வு எடும்மா, வயசு இருக்கு, எதுக்கும் கவலைப்படாதே..." என்று சொல்ல, "ம்ம்..." என்று அறைக்குள் நுழைந்தாள்.

ராம்குமாரும் உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டு விட்டு, அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

"என்ன ராம்?" என்று அவள் தழுதழுத்த குரலில் கேட்க, அவள் அருகே வந்தவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். காற்றுப் புக முடியாத இறுகிய அணைப்பு அது. அழுதாள். விம்மி வெடித்து அழுதாள். அதுவரை அடக்கி வைத்து இருந்த வலி எல்லாம் சேர்த்து அழுதாள், அவனுக்கும் வலித்தது.

அவள் தலையை அழகாக வருடிக் கொடுக்க, அவனை அணைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் தூங்கி இருந்தாள் பெண்ணவள்.

நாட்கள் மெதுவாக நகர்ந்தது.

வந்தனா ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்ல வேண்டிய நாளும் வந்து சேர்ந்து விட்டது. இத்தனை நாட்கள் அவள் யாரையும் பார்க்க முடியாது என்று சொல்லி இருந்தாள். இன்று வீட்டுக்கு சென்றால் எல்லாரையும் பார்க்க வேண்டும். எல்லோருமே அவளுக்காக அழத்தான் போகின்றார்கள். ஏற்கனவே, உயிரோடு ஏன் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு இருப்பவள் அவள்.

வீட்டில் உள்ளவர்களின் அழுகை, அவளை உயிரோடு சாகடித்து விடுமே?! அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் வந்த கஜனிடம், "என்னால வீட்டுக்கு போக முடியாது..." என்றாள்.

அவனோ பெருமூச்சுடன் அவள் அருகே இருக்கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன், "ஒருத்தர்கிட்ட நீ இப்போ பேசணும்..." என்றான்.

"என்னால யார்கூடவும் பேச முடியாது. எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கல, செத்துடலாம் போல இருக்கு அண்ணா..." என்றாள் அழுகையுடன்.

"உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனுங்க தான் சாகணும் வந்தனா, செத்துட்டானுங்க... நீ வாழ வேண்டிய பொண்ணுடி..." என்றான்.

"எனக்கு வாழ்க்கையே வேணாம். எனக்கு திரும்ப திரும்ப அதே நினைப்புதான் வருது. என்ன நினைச்சாலே அருவருப்பா இருக்கு..." என்று முகத்தை மூடி அழுத்தவளின் கையை இழுத்து பற்றிப் பிடித்தவன்,

"அழாதம்மா... எவ்ளோ நாளைக்கு அழப் போற? இப்போ ஒருத்தர்கிட்ட நீ பேசணும்." என்றான்.

"இல்ல, நான் யாரையும் பார்க்க விரும்பல..." என்று அவள் அவனை அழுதபடி பார்த்துக் கொண்டு சொல்ல, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் விஜய்.

அவன் விழிகளோ கலங்கி இருந்தன.

"வந்தனா..." என்றான் தழுதழுத்த குரலில்.

அவனை அதிர்ந்து பார்த்து விட்டு விழிகளைத் தாழ்த்தியவள், "அவரை போக சொல்லுங்க..." என்றாள்.

"உனக்காக அந்த ரெண்டு நாய்ங்களையும் கொன்னது அவன் தான், அவன்கூட பேசும்மா..." என்றான் கஜன்.

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

கஜனை அதிர்ந்து பார்க்க பெருமூச்சுடன் எழுந்தவன், "அவன்கூட பேசு, என்ன பேசணுமோ மனசு விட்டு பேசு." என்று சொல்லிவிட்டு வெளியேற, விஜய்யும் அவள் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்தவன், "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டான்.

அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

"என் மேல பரிதாபமா விஜய்?" என்று ஆத்திரமும் வலியுமாகக் கேட்டாள்.

"இல்ல, காதல்..." என்றான்.

"அன்னைக்கு வேணாம்னு தானே சொன்னீங்க?" என்று கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,

"என்னை விட உன்னை வேற யாரும் நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன். இப்போ என்னை தவிர உன்னை யாரும் நல்லா பார்த்துக்க முடியாதுனு தோனுது." என்றான்.

சட்டென அவனில் இருந்து பார்வையை அகற்றியவள், "என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்றாள்.

சட்டென அவள் கையைப் பற்றி பிடித்து விட்டான்.

"விஜய் விடுங்க..." என்று அவள் உருவ முற்பட, "ப்ளீஸ் வந்தனா..." என்று இன்னும் இறுக பற்றிக் கொண்டவனோ, அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டு,

"அன்னைக்கு என்ன பார்க்க வந்து தானே இப்படி ஆச்சு? என்னால தானே இப்படி ஆச்சு? எனக்கு உன்னை பிடிக்கும் வந்தனா... நீ சொன்ன போல, அன்னைக்கே என் மனசுல இருந்த காதலை சொல்லி, வீட்ல போராடி இருந்தா இப்படி எல்லாம் ஆகி இருக்காது ல?" என்று கேட்டான்.

அவனது கலங்கி இருந்த விழிகளில் இருந்து நீர் வழிந்தது, அழுகின்றான். அவளுக்காக அழுகின்றான்.

அவனை அதிர்ந்து பார்த்துவிட்டு, "இல்ல விஜய், உங்களால இல்லை, என்னால தான்..." என்று சொல்ல, "என்னை கல்யாணம் பண்ணிக்கோ வந்தனா ப்ளீஸ்..." என்றான் கெஞ்சுதலாக.

"எனக்கே என் உடம்பை நினைச்சா அருவருப்பா இருக்கு விஜய். நான் உங்களுக்கு வேணாம்..." என்று சொல்ல, "என்னடி சொல்ற? உடம்புல என்னடி இருக்கு?" என்று கேட்டான்.

"நீங்க என்ன சொன்னாலும் என்னால சம்மதிக்க முடியாது." என்று சொல்லிக் கொண்டு அவள் விலக முயன்றாள்.

சட்டென அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கியவன், "வந்தனா ப்ளீஸ்... நான் சொல்றத கேளு, இதெல்லாம் ஒன்னுமே இல்லை. உன் மனசுல இன்னுமே நான் இருக்கேன்னு எனக்கு தெரியும். என் மனசுல நீ மட்டும் தான் இருக்க. கல்யாணம் பண்ணிக்கலாம், சந்தோஷமா வாழலாம், நிறைய குழந்தைங்க பெத்துக்கலாம்." என்றான்.

அவளுக்கு அவன் பேசப் பேச அழுகை வந்தது. இதுவே கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பேசி இருந்தால் ரசித்து இருப்பாள். இப்போது தன் மீதே கோபம் வந்தது.

"என்னால முடியாது விஜய்..." என்று அவன் கையினைப் பற்றி இறக்கிக் கொண்டவளோ, "இதெல்லாம் ஏற்கனவே சொல்லி இருக்கலாமே விஜய். எவ்ளோ சந்தோஷமா இருந்து இருப்பேன்? இப்போ என்னால கொஞ்சம் கூட சந்தோஷப்பட முடியல. ஆத்திரம் வருது, கோபம் வருது, என் மேலயே வெறுப்பா இருக்கு..." என்று வாய் விட்டு அழுதவளை இறுக அணைத்துக் கொண்டான்.

ஆம், அணைத்துக் கொண்டான் தான்.

அவளுக்கு அழுகை நிற்கவே இல்லை. அவன் ஷேர்ட் நனையும் அளவுக்கு அழுது தீர்த்தாள்.

"நான் என்ன தப்பு பண்ணுனேன்? எனக்கு ஏன் இப்படி ஆச்சு?" என்று கேட்டு அழ,

"அவனுங்க செத்துடானுங்க வந்தனா, நீ எதுக்கும் இனி அழக் கூடாது. நான் இருக்கேன், வாழ்க்கை முழுக்க இருக்கேன். கூடவே இருப்பேன்." என்றான்.

"நீங்க உங்க முறைப் பொண்ணையே கட்டிக்கோங்க..." என்று சொன்னவளிடம், "எனக்கு அப்படி ஒரு முறைப் பொண்ணே இல்ல." என்றான்.

அவள் விலக முயல, "அப்படியே இருடி கொஞ்ச நேரம்..." என்று சொல்லி, அவளைத் தனக்குள் கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டான்.

அவளுக்குள் இருந்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அணைப்பில் குறைந்தது. அவள் ஆழமாக காதலித்தவன், அவளை அணைத்துக் கொண்டு இருக்கின்றான். திருமணம் செய்ய கேட்கின்றான். குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கின்றான். இதெல்லாம் அவள் ஆசைப்பட்டது தான். ஆனால் இக்கணம் ரசிக்கவே முடியவில்லை.

அவன் அணைப்பில் இருந்தவாறே, "நீங்க ஒன்னும் எனக்கு வாழ்க்கை கொடுக்க தேவல..." என்றாள் அழுகையுடன்.

"நான் ஒன்னும் வாழ்க்கை கொடுக்கல, சேர்ந்து வாழாலாம்னு சொல்றேன்." என்றான்.

அவனைத் தள்ளிவிட்டு அமர்ந்தவள் அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்து, "நான் கன்னிப் பொண்ணு இல்லை விஜய்." என்றாள். சொல்லும் போதே நொறுங்கி விட்டாள்.

"உன் மனசுல நான் மட்டும் தானே இத்தனை நாளா இருக்கேன் வந்தனா. எனக்கு அதுதான் வேணும். எனக்கு உன் உடம்பை பத்தி எல்லாம் கவலை இல்லை. வாழ்க்கைல இந்த ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் ஒரு அங்கம் மட்டும்தான். அது மட்டுமே வாழ்க்கை இல்லை. உன் மனசுல நான் இருக்கேன், என் மனசுல நீ இருக்க, இதுக்கு மேல என்ன வேணும்? நீ ஆசைப்பட்ட போல சந்தோஷமா வாழலாம், என்னை கல்யாணம் பண்ணிக்கோடி..." என்றான்.

ஆம், அவள் மனதில் இன்னுமே அவன் இருக்கின்றான், உண்மை தான். ஆனால் அவளுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருக்கும் போது, இந்த கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பது என்று தடுமாற்றம்.

"என்னை உண்மையாவே பிடிக்குமா விஜய்?" என்று கேட்டான்.

"உனக்காக ரெண்டு கொலை பண்ணி இருக்கேன்." என்றான்.

நெகிழ்ந்து விட்டாள், இறுக அணைத்துக் கொண்டாள். விம்மி விம்மி அழுதாள்.

அழுது கொண்டு, "என்னை தொடும் போது உங்களுக்கு அருவருப்பா இருக்கும் விஜய், ஏற்கனவே ரெண்டு பேர்..." என்று ஆரம்பித்தவளது மீதி வார்த்தைகளை, விழுங்கி இருந்தது என்னவோ அவன்தான்.

எப்போது அவள் முகத்தைத் தாங்கி அதிரடியாக முத்தமிட்டான் என்று அவளுக்கே தெரியாது. முதலில் அதிர்ந்தவள் விழிகள் அழுகையுடன் மூடிக் கொள்ள, மெதுவாக விலகி அவள் விழிகளுடன் விழிகளைக் கலக்க விட்டவனோ, "இப்படி எல்லாம் இனி என்கிட்ட பேசக் கூடாது, புரியுதா?" என்றான்.

"இப்போ எதுக்கு கிஸ் பண்ணுனீங்க?" என்று அவனை முறைத்துக் கொண்டு கேட்க, "எனக்கு கடன் வச்சு பழக்கம் இல்லை, அன்னைக்கு கொடுத்ததை திரும்பி கொடுத்தேன்." என்றான்.

அவளுடன் இயல்பாக பேசி, அவளை அந்த வலிக்குள் இருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும். நடந்ததை அவள் நினைக்க விடவே கூடாது. அவள் நினைவு முழுக்க முழுக்க அவனில் மட்டுமே இருக்க வேண்டும். அவளை சுற்றி அன்பாக இருப்பவர்களிடம் இருக்க வேண்டும். அவளை பரிதாபமாக பார்க்க பார்க்க, அவளுக்கு இன்னுமே வலிக்கும். அவள் வீட்டினரையும் பார்க்க முடியாது என்று சொன்னது அதற்காக தான். அவர்கள் அழுகை அவளையும் அழுத்தும்.

அதனால் தான் விஜய்யும் அவளுடன் எதார்த்தமாக பேச ஆரம்பித்து இருக்க, "உங்களுக்கு இப்படி எல்லாம் பேச வருமா?" என்று அதிர்ந்து கேட்டாள்.

"இதுக்கு மேலயும் பேசுவேன், முதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம்..." என்றான்.

"எங்க வீட்ல பேசணும்..." என்றாள்.

"நான் பேசுறேன்." என்றான்.

"இப்போ சம்மதம் தான் சொல்வாங்க, என்னை யாரு கட்டிக்க போறா? யாருமே கிடைக்க மாட்டாங்கனு நீங்க அவங்களுக்கு ஒரு ஆப்ஷன்தான். ஆனா எனக்கு..." என்று சொல்லிக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "உயிரே நீங்கதான் விஜய்..." என்றாள்.

"இப்படி பேசாதடி..." என்று சொல்லிக் கொண்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

எவ்வளவு நேரம் அவர்கள் பேசினார்கள் என்று தெரியாது. அழுகை, வலி, ஆதங்கம், கோபம், சந்தோஷம், காதல் என்று எல்லா உணர்வுகளும் சங்கமிக்க, அத்தனை நாட்கள் கஜன் பேசியும் மனம் சமநிலைப்படாதவள், விஜய்யுடன் பேசி கொஞ்ச நேரத்திலேயே தன்னை வெளியே கொண்டுவர ஆரம்பித்து இருந்தாள்.

நீண்ட நேரம் கழித்து விஜய் வெளியே வர, "என்ன சொன்னா?" என்று கஜன் கேட்க, "கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா." என்றான்.

கஜனோ சட்டென அவனை இறுக அணைத்து விடுவித்தவன், "நான் இத்தனை நாள் அவகிட்ட பேசுனேன், சைக்காலஜிஸ்ட் பேசுனாங்க, அவகிட்ட மனசளவுல எந்த இம்ப்ரூவ்மெண்ட்ஸ்ம் இல்ல. ரியலி, லவ் இஸ் சம்திங் மேஜிக்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றான்.

வந்தனா அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். இன்றுதான் அவள் புன்னகையை இத்தனை நாட்களில் பார்க்கின்றான்.

அவனும் அழகாக சிரித்தவன், "வீட்டுக்கு கிளம்பலாமா?" என்று கேட்க, "ம்ம்..." என்று சொல்லிக் கொண்டாள்.

அன்றே அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். விஜய்யும் கூடவே வந்தான். உள்ளே வந்தவளை இறுக அணைத்துக் கொண்டாள் விஜயா. அழுகை வந்தது, அவளுக்கு பிடிக்காது என்று அடக்கிக் கொண்டாள்.

அவள் முகத்தைத் தாங்கியவள், "எப்படிம்மா இருக்க?" என்று கேட்கும் போதே, சட்டென கண்ணீர் வழிய அதனைத் துடைத்துக் கொண்டாள் விஜயா.

கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு இருக்கின்றாள் என்று வந்தனாவுக்கு தெரிந்தது.

"அழுறதுன்னா அழுதிடுங்க, ரொம்ப கஷ்டப்பட வேணாம்." என்று மெதுவாக நகர முற்பட்ட சமயம், தயாளன் முன்னே வந்து நின்றான் விஜய்.

தயாளன் வந்தனாவையே வலியுடன் பார்த்துக் கொண்டு நின்றவன், தனக்கு முன்னே நின்ற விஜய்யை புரியாமல் பார்க்க, "உங்க பொண்ண எனக்கு கொடுக்கிறீங்களா? வாழ்க்கை முழுக்க கண் கலங்காம நான் பார்த்துக்கிறேன்." என்று கேட்டு விட்டான்.

வந்தனாவோ இதழ் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டு, "இனி உங்க பொண்ண அவரை தவிர யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கப்பா, இப்போவாச்சும் அவருக்கு என்ன கொடுக்கலாமே?" என்று சொல்லி விட்டாள்.

சக்திவேலுக்கு அவள் பேசியதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவளை இறுக அணைத்துக் கொண்டு, "என்னம்மா இப்படி எல்லாம் பேசுற?" என்று கேட்க,

"என்னால முடியல பெரியப்பா, அழக் கூடாதுனு நினைக்கிறேன், உறுதியா இருக்கணும்னு நினைக்கிறேன். என்னால முடியலையே..." என்று விம்மி அழுதாள்.

அதுவரை அழுகையை அடக்கி வைத்து இருந்த விஜயா, "இப்படி எல்லாம் பேசாதம்மா..." என்று வாய் விட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள். அழுகையை அவளால் அடக்கவே முடியவில்லை.

தயாளானோ கலங்கிய கண்களுடன் நின்று இருந்த விஜய்யை பார்த்தவன், "அவ உன் கூட இருந்தா தான் அழாம இருப்பான்னா நீயே அவளை அழைச்சிட்டு போயிடு. அவ இனி அழுறத பார்க்கிற தெம்பு எனக்கு இல்லை..." என்று உடைந்து போய் சொன்னவன், அவன் கையைப் பற்றிக் கொண்டு அதற்குள் முகம் புதைத்துக் கொண்டான்.

விஜய்யோ, "ஐயா..." என்று சொல்ல, சட்டேனே நிமிர்ந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம் கஜன்." என்று சொல்ல, அவனும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டான்.
 
Top