3.நந்தவனப் பூக்கள்
மாலை வேளை,தண்டையார்பேட்டை.
ரகுநந்தன் தொழிற்சாலையில் சீர்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை வசதிகளை பார்வையிட்டு
விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தான்.மெயின் ரோட்டில் ஏதோ மறியல் என்பதால் தண்டையார்பேட்டை யின் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை.வண்டியின் வேகம் குறைந்து மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.ஆங்காங்கே சிறுவர்கள் குழுக்களாக விளையாடிக் கொண்டிருந்தனர்.இளம் வயது
புள்ளிங்கோக்கள் டியோ பைக்கில் காரை முந்தி கொண்டு சென்றனர்.வயதான புள்ளிங்கோக்கள் டீக்கடையில் முகாம் இட்டிருந்தனர்.ரகு வட சென்னை பகுதியின் அதிசயங்களை ரசித்து கொண்டிருந்த போது தான் அது நிகழ்ந்தது.
வீட்டில் அபிக்கு இருப்பு கொள்ளவில்லை;நேற்று கண்ட கான மயிலை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என மனம் பரபரத்தது.மனம் சொல்வதை மீற முடியுமா? எங்கே காண்பது எப்படி காண்பது என தவித்தான்.இந்த உணர்வுக்கு பெயர் தெரியாவிடினும் அவளை காண்பதே பிரதானமாக இருந்தது.சரி நேற்று சென்ற அதே கோவிலுக்கு போய் பார்க்கலாம் என முடிவுக்கு வந்தவனாய் பைக் சாவி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.படிகளில் இறங்கிய போது " டேய் கண்ணா எங்க டா போற " என்றபடி வந்தார், ருக்மணி." என்னம்மா இது வெளியே போகும் போது இப்படி கேட்கிற " என சிணுங்கினான், மகன்." அய்யோ சாரிடா செல்லம்.என் அபிகுட்டி போற விடயம் நல்லபடியாக நடக்கும்.ஆல் தி பெஸ்ட் சரியா " என்ற அன்னையின் தாடை தொட்டு முத்தம் கொஞ்சி " பாய் அம்முகுட்டி " என்று கூறி பறந்தான், திருவல்லிக்கேணிக்கு.
தண்டையார்பேட்டை
ரகு ரசனை உடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போது வேகமாக பறந்து வந்த சிறிய கல் கார் கண்ணாடியை உடைத்தது.ரகு கல் வந்த திசையை நோக்கிய போது இரு கரங்கள் ஒரு வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து அவசரமாக விலகின.நடந்த விடயத்தில் ரகுவை விட கோபத்தில் கொந்தளித்தது, டிரைவர் தாம்.
" சார் இப்போல்லாம் சின்ன பசங்க அட்டூழியம் அதிகமாக போய்ட்டு சார்.பெத்தவங்களும் வேலை பிஸி ல கண்டுக்க மாட்றாங்க.இதை எல்லாம் இப்படியே விடகூடாது சார்.இருங்க சார் இப்பவே புத்தியில் உறைக்கிற மாதிரி திட்டிட்டு வரேன் " என பொங்கிய டிரைவரை அடக்கி விட்டு தானே சென்றான் அந்த வீட்டிற்கு.டிரைவர் இருக்கும் கோபத்தில் அவனை அனுப்பினால் பிரச்சினை பெரியதாகும் என்ற பயம் அவனுக்கு.தானே சென்று மிதமாக அறிவுறுத்தலாம் என எண்ணி அவ்வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.மூன்று முறை அடித்த பின் சரி போய் விடலாம் என திரும்பிய போது கதவு திறந்தது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
' அவள் வருவாளா ' என்ற பாடலை முணுமுணுத்த வண்ணம் பைக் லிருந்து
இறங்கி வண்டி சாவியை எடுத்து கொண்டான்.அவசர அவசரமாக செருப்புகளை ஸ்டாண்ட-ல் சேர்த்து விட்டு உள்ளே சென்று தேடலானான்.மற்றவர்களின் வியந்த பார்வையை கண்டு கொள்ளாது பரபரப்பாக தேடினான்.கோவில் முழுக்க நன்றாக தேடியும் அவளை காணாது மனம் சோர்ந்தான்,அபி.தொய்ந்த நடையுடன் அவன் கிளம்ப எத்தனித்த போது அந்த அதிசயம் நடந்தது.
தண்டையார்பேட்டை
உள்ளே சென்று பார்த்தால் தபு கூடவே ஒரு சின்ன வாண்டு.இளம் சிவப்பு நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து தலைமுடியை குதிரை வால் போட்டு இருந்தாள். பக்கத்தில் இருந்த மேசையில் ஒரு கல்டா பெல்டா மற்றும் சில கற்கள்." இன்னா சார் என் வூட்டுக்கு வந்திருக்க சரி வா இந்த சேரில் வந்து குந்து" என அவளது பாணியில் வரவேற்றவள் ,அவன் முக பாவனையை கவனித்து விட்டு , " ஓ அந்த உடைஞ்சு போன கார் கண்ணாடி உன்னுதா? சாரி பா.அது இந்த ஏரியால ஒருத்தன் என்னாண்ட ராங்கு காட்டுனான்.அவன் மண்டைக்கு வச்ச குறி.ஊடால நீ வந்துட்ட " என முகத்தில் சிரிப்புடன் துளி கூட பயம் இல்லாது விளக்கினாள்.அவள் பேசிய பாணி மற்றும் பாவனையில் இதழோரம் பூத்த புன்னகையை கட்டுபடுத்தி கொண்ட ரகு " வீட்டில் பெரியவங்க யாரும் இருந்தா கூப்பிடு " என்றான் ,ரகு தன் அமைதியான குரலில்.
" அய்யோ அம்மா கடைக்கு போயிருக்கு சார்.அதுக்கு தெரிஞ்சா தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்ரும்.இப்போ இன்னா கார் கண்ணாடி போயிடுச்சு அவ்ளோ தான" என்றவள் ரூமுக்கு சென்று தன் பன்றி வடிவ உண்டியலை எடுத்து வந்து " இந்தா சார் இதுல எவ்ளோ இருக்குன்னு சரியா தெரியாது.ஆயிரம் இரண்டாயிரம் இருக்கும்.இத உன் கார் கண்ணாடியை சரி பண்ண வச்சுக்கோ " என்றபடி அவன் கையில் வைத்தாள்.
" இதெல்லாம் வேண்டாம்.இனிமே இது மாதிரி செய்யாதே " என மறுக்க " சார் இந்த தங்க புஷ்பம் அய்யோ உளறிட்டேனே.இப்போ சொன்னதை மறந்திரு சார்.ஹான் இந்த தபு யார் கிட்டயும் கடனாளியா இருக்க மாட்டா.ஏற்கனவே உன் கம்பெனிக்கு வந்த நேரம் என் வேலை வேற போய்ட்டு.இதுல நீ இங்க இருக்கிறதை அம்மா பாத்துச்சு அவ்ளோ தான் கிளம்பு சார் " என வலுக்கட்டாயமாக உண்டியலை அவன் கையில் திணித்து வீட்டை விட்டு தள்ளாத குறையாக அவனை அனுப்பி வைத்தாள்.காரில் ஏறிய பின் அந்த உண்டியலை பார்த்து புன்னகைத்து கொண்டே ' தங்க புஷ்பம்.கூடிய சீக்கிரம் உனக்கு வேலை கிடைக்க செய்கிறேன் ' என மானசீகமாக உறுதி கூறினான்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
இவன் அலுத்து போய் கோவில் வாசலுக்கு வந்த போது கோடை காலத்தில் கிடைக்கும் மோர் போல கோவிலுக்கு வந்தாள், பனிமலர்.நேற்று மயில் போல் இருந்தவள் இன்று பிங்க் நிற சேலை மற்றும் தலை குளித்து சென்டர் கிளிப் போட்டு விரித்த கூந்தலில் புதிதாய் பூத்த பன்னீர் ரோஜா போல் இருந்தாள்.' ஐ மயில் வந்துட்டு பா ' என குதூகளித்தவன் அப்போது தான் வந்தவன் போல் அவள் பின்னாலே கோவிலிற்குள் சென்றான்.இவனை பார்த்து வியந்த ஐயருக்கு ஒரு அசட்டு புன்னகையை பதிலாக தந்தான்.
பனிமலர் அவனை கண்டுக்கொண்டது போல் காட்டி கொள்ள வில்லை எனினும் அவளுக்குள் ஒரு இனம் புரியாத பதற்றம்.அவனின் குறுகுறுத்த பார்வையும் குறும்புச்சிரிப்பும் அவளை இனிமையாக இம்சித்தன.பூஜை முடிந்து ஐயர் தந்த கொஞ்சமே கொஞ்ச அளவு குங்குமத்தை கூட இட்டுக் கொள்ள முடியாமல் அவளது கை நடுங்கியது.
இன்றும் அவள் கையில் இருந்த குங்குமம் தவற இவன் தன் கையில் இருந்த குங்குமத்தை நீட்டினான் " இந்தாங்க.எடுத்து வச்சுக்கோங்க.இல்லாட்டி சாமி கண்ணை குத்திரும் " என்றபடி.இவன் செய்கையில் திகைத்தவள் மெளனத்தின் வழியே மறுப்பை தெரிவித்து விட்டு விலகி நடந்தாள் .இவன் மனம் ஏமாற்றத்தில் கசங்கியது; ஏன் மனதில் சிறு கோபம் கூட துளிர்த்தது.
வெளியே வந்தால் அடைமழை இவர்களை அரவணைக்க காத்திருந்தது.' அட! மயில் ஆடுனா மழை வரும்.இங்கே என் மயில் வந்ததுக்கே மழை வந்துட்டா பேஷ் பேஷ் ' என மனதிற்குள் நினைத்தவனின் கண்கள் அவளிடமே நிலைத்திருந்தன.மழை முடியும் வரை இருவருமே கோவில் வாசலில் காத்திருந்தனர்.அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஆனால் அந்த மெளனமே அவனுக்கு போதுமானதாய்.
அவளை பார்த்து கொண்டிருப்பதே இவனுக்கு வரமாய்.இவன் பார்வை அவள் மனதை துளைக்க குனிந்த தலையை நிமிர்த்தவில்லை , பனிமலர்.
சிறிது நேரம் கழித்து அவளை கார் வந்து ஏற்றி செல்கையில் இந்த பொன் மாலைப் பொழுது முடிவிற்கு வந்தது.கார் கிளம்பும் போது அவள் கார் கண்ணாடியை இறக்கி தன்னை ஒருமுறை பார்த்ததை கண்டு இவன் மனம் குத்தாட்டம் போட்டது.இதே உற்சாகத்துடன் வீட்டிற்கு திரும்பினான்,அபிநந்தன்.
இரவு வேளை நந்தன் வீடு.
அரைக்குறையாக உண்ட அபிக்கு பால் எடுத்து சென்றார், ருக்மணி.அங்கே அவன் காற்றோடு சைகை செய்து தனக்குத் தானே பேசி கொண்டிருந்தான்." நல்லாத்தான டா இருந்த " என்ற அன்னையிடம் " அம்மா இன்னிக்கு அந்த பனிமலரை பார்த்தேன் மா கோவில் ல்ல " என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு." நீ கோவிலுக்கு போயிருந்தியா " என்றார் வியப்பாக." அதை விடும்மா.நான் சொல்றத கேளு.இன்னிக்கு கோவில் ல்ல அந்த பொண்ணு குங்குமத்தை மிஸ் பண்ணிட்டு.சரின்னு நான் என் கையில் இருந்த குங்குமத்தை கொடுத்தேன்.அவ எடுத்துக்காம என்னை முறைக்க வேற செய்தாள் அம்மா.எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகிருச்சும்மா " என்று சிணுங்கலாய் முடித்தான்." டேய் அபிக்குட்டி பொண்ணுங்க புருசன் தர குங்குமம் தான் வச்சுப்பாங்க.இது ரொம்ப சென்சிடிவ் ஆன விடயம் டா " என்றார் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் பாவனையில்." ஓஹோ " என்றவன் கையில் பால் தம்ளரை திணித்து விட்டு " ஏதும் யோசிக்காமல் தூங்குடா கண்ணா" என்று வெளியேறினார்.
' சாரி மயிலு தெரியாம செய்திட்டேன்.ஆனால் இந்த ஜென்மத்தில் நான்தான் உன் நெற்றியில் குங்குமம் வைப்பேன் ' என மானசீகமாக அவளுடன் பேசிவிட்டு அப்படியே உறங்கினான்.கனவிலும் வந்து காதலை தொடர வைத்தாள்,அவனது மயிலு.
மறுநாள் பொழுது புலர்ந்தது.கோயம்பேடு பேருந்து நிலையம்.திருச்சி - சென்னை எஸ்.இ.சி.டி பேருந்தில் வந்து இறங்கினாள்,துளசி.கூட அவளின் ஐந்து வயது பெண் குழந்தை,தன்யா.துளசியின் வயது இருபத்தி ஒன்பது இல்லை முப்பது இருக்கலாம்.துளசி அண்மையில் கணவன் சீனிவாசனை சாலை விபத்தில் இழந்த பெண்.இவளும் பட்டத்தாரி என்பதால் கருணை அடிப்படையில் கணவனது அரசு வேலை இவளுக்கு கிடைத்தது.வேலையை தொடர சென்னை வந்திருக்கிறாள்.தோழி ஜானவி புண்ணியத்தில் சைதையில் வாடகை வீடு ரெடி.வேலை பார்க்க வேண்டிய இடம் நந்தனம்.ஜானவி ஏற்பாடு செய்த காரில் ஏறிச் சென்றனர், துளசியும் குழந்தையும்.
நந்தன் குருப் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகம்.ரகுநந்தன் அறையில் பி.ஏ.ராகவ்." ராகவ் நம்ம கம்பெனியில் உதவி மேலாளர் வேலைக்கு காலியிடம் இருக்குல்ல.தபு க்கு ஒரு இன்டர்வியூ கார்ட் அனுப்புங்க " என்றான் ஒரு பைலை படித்து கொண்டே."சார்" என அதிர்ந்தான், ராகவ்." நான் சொன்னதை செய்யுங்கள் " என்றான் அமர்ந்த குரலில்." எஸ் சார் " என பணிந்தான், ராகவ்." அப்புறம் ராகவ் ,நம்ம மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் மேனேஜர் தமிழ்ச்செல்வன் லீவ் முடிந்து வந்துட்டாரா " என்று கேள்வி எழுப்பினான்,ரகு." வந்துட்டாரு சார்.ஆனால் பாவம் மனுசன் ரொம்ப உடைஞ்சு போய் இருக்காரு சார் நடந்து முடிந்த விவாகரத்து னால " என்றான் ராகவ் குரலில் சோகம் காட்டி." ஓகே.அவரை நல்லா பார்த்துக்கோங்க. வர்க் லோடு கம்மியாக இருக்க மாதிரி பாத்துக்கோங்க " என்றான் ரகு அக்கறையாக.செல்போன் அழைத்து எடுத்து பேசிய ரகுவை பதற்றம் சூழ்ந்தது.
- பூக்கும்