ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

திட்டும் பார்வை ... ஒட்டும் இதயம் ❤❤ - கதைத்திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 9


அன்று விக்ரமின் பின்னாடியே கைகளை பிசைந்து கொண்டு திரிந்து கொண்டிருந்தாள் நறுமுகை...



அவன் கூறிய வேலைகளை எல்லாம் புயல் வேகத்தில் செய்தாலும் அவனிடம் எப்படி கேட்பது? எவ்வாறு கேட்பது? என்கிற தயக்கத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தாள்...


லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவனை பார்த்தவாறு மெல்ல அவன் அருகே வந்த நின்றவள் எப்படி கேட்பது என தயக்கத்துடன் நின்றிருக்க ..லேப்டாப்பில் பார்வை பதித்திருந்தவன் கடை கண்ணால் கைகளை பிசைந்தவாரு நின்றிருந்தவளை கண்டவன்,


" என்ன விஷயம்..?" என அழுத்தமாய் கேட்டதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த நறுமுகைக்கு அப்பாடா என்றானது.. அவனே பேச்சினை ஆரம்பித்து வைத்திருந்தமையால் ..


"அ...அது.. சார்.. இன்னிக்கு சீக்கிரம் ..வீட்டுக்கு போகணும்.." என்றதும் புருவங்கள் இடுங்க அவளை தலை திருப்பி பார்த்த விக்ரம் ,


"எதுக்கு..?"


" அது ..என் சொந்தக்காரங்க ஃபங்ஷனுக்கு போகணும் சார்..." என்றதும் சலிப்பாக அவளை பார்த்துவிட்டு லேப்டாப்பில் பார்வை பதித்தவன் ,


"பங்க்ஷன் ரொம்ப முக்கியமா நறுமுகை .....இங்க வேலை அவ்வளவு இருக்கு.. நீங்க அதெல்லாம் விட்டுட்டு ஃபங்ஷன் போகணும்னு சொல்றீங்க..?" என அடிக்குரலில் சீறியவனை எச்சில் விழுங்கி கொண்டு பார்த்த நறுமுகைக்கு விட்டால் அழுகையே வந்துவிடும் போல,


" சா..சார் ..ப்..ப்ளீஸ்.. சார்.. கண்டிப்பா ஃபங்ஷன் போயே ஆகணும்.. சார் ..என்னோட சித்தப்பா பையனுக்கு கல்யாணம் சார் ...ப்ளீஸ் சார்.." என இல்லாத சித்தப்பாவினை விக்ரமிற்காக இருப்பதாக பொய் கூறியவளை அமர்த்தலாக பார்த்த விக்ரம் மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு,


" இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா..??? கடைசி நிமிஷத்துல தான் வந்து சொல்லுவிங்களா நறுமுகை..?" என அவன் முகம் இயல்பாக இருந்தாலும் குரலில் அவ்வளவு கோபம் தேங்கி இருந்தது.. அவளுக்கோ ஐயோடா என்றானது...

"ம்ம்ம்...எனக்கே இன்னிக்கி காலைல தான் சொன்னாங்க.." என வாய் விட்டதும் அவளை முகம் சுருக்கி பார்த்தவன்,


"வாட்..?? காலையில தான் சொன்னாங்களா..?? நெஜமாவே உங்க சித்தப்பா பையனுக்கு கல்யாணமா..? இல்ல பொய் சொல்லிட்டு வேற ஏதாவது எங்கேயாவது போற ஐடியா இருக்கா..?" என சற்று காட்டமாக கேட்டதும் நறுமுகை அவனை நிமிர்ந்து பார்த்து,


" அது சித்தப்பாக்கும் அப்பாவுக்கும் கொஞ்சம் ஃபேமிலி பிரச்சனை.. போக கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. இன்னைக்கு மார்னிங் தான் கண்டிப்பா கல்யாணத்துக்கு போய் ஆகணும்னு சொல்லிட்டாங்க சார் ..அத தான் சொல்ல வந்தேன்.." என ஒருவழியாய் திரித்து கூறிவிட்டாள்...


அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன்,


"ம்ம்ம்... என்னவோ சொல்றீங்க வேலையெல்லாம் முடிச்சிட்டீங்களா..?" பலமாக தலையை ஆட்டியவள்,

" முடிச்சிட்டேன் சார் ..நீங்க சொன்ன எல்லாமே முடிச்சிட்டேன்..
இலையெல்லாம் நல்லா காஞ்சிருச்சு சார் ...நீங்க சொன்ன மாதிரி அது நல்லா பொடி பண்ணி எத்தனால் ஊத்தி வச்சிட்டேன்... நீங்க சொன்ன மெத்தட்ல சாரும் எடுத்து வச்சுட்டேன் .. ஃப்ரிட்ஜ்லையும் ஸ்டோர் பண்ணி வச்சுட்டேன்... " என்றவளை சிறு தலையசைப்புடன் பார்த்தவன்,


"வெவரமா தான் இருக்கீங்க...காரியம் ஆகனும்னா டக்கு டக்குனு வேலை ஆகுது... சரி கிளம்புங்க நாளைக்கு வருவீங்களா மாட்டீங்களா..?" என கேட்டதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள்,


" அது கல்யாணம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வந்துடுறேன் சார் .." என்றவளை மார்க்கமாக பார்த்து வைத்தவன் சரியென தன் வேலையை பார்க்கலானான்...


விட்டால் போதும் என்று லேபில் இருந்து தன் பையை எடுத்துக் கொண்டவள் கிளம்பும் சமயம் கவிதாவை தான் தேடினாள்.. கவிதாவும் ட்ரேயில் சில பல பொருட்களை வைத்துக்கொண்டு படியேறி வந்தவள் நறுமுகையே பார்த்ததும் இரு புருவங்களை உயர்த்தி என்னவென கேட்டாள்...


அவளை நெருங்கி சென்ற நறுமுகை,


" வீட்டுக்கு கிளம்புறேன் கவிதா.."


" விட்டுட்டாரா..?? சரி சரிடி... பார்த்து போ.. என்ன ஏதுன்னு போன் பண்ணி சொல்லு.." என்றதும்,

"சரிடி.. வரேன் யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத..."


" சரி சரி சொல்லல.." என கவிதாவிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி சென்றாள் நறுமுகை...




ஆடி அசைந்து வந்த மகளை பரபரப்பாக நோக்கிய சுரதை,


" சீக்கிரம் வா.. சமைச்சு வச்சிருக்கேன் சீக்கிரம் சாப்பிடு ரெடி ஆகணும் இல்ல ..?" என்றதும் பையினை தூக்கி சோஃபாவில் போட்டபடி அன்னையை முறைத்து வைத்தவள்,


" வேலையே இல்லம்மா உங்களுக்கு... உயிரை வாங்குறீங்க..!" என சிடுசிடுத்ததும் அதை எல்லாம் அலட்சியம் செய்தபடி தட்டில் உணவுடன் வந்த சுரதை,


"ப்ச்.. இன்னும் இங்க தான் நின்னுட்டு இருக்கியா..? சீக்கிரம் போய் கை கழுவிட்டு வா... சாப்பிடுவ" என அவள் கூறுவதை பொருட்டாக கூட கருதாது நிற்கும் அன்னையை முறைக்கு மட்டுமே முடிந்தது நறுமுகையால் ...

வெயிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைக் கிள்ளிட, ஏதும் பேசாது அன்னையிடமிருந்து தட்டினை வாங்கியவள் முதலில் வயிறார உண்டு முடித்தாள்...


அதற்காகவே காத்திருந்தது போல கை கழுவி வந்தவளிடம்,

" இன்னொரு முறை குளிச்சிடுறியா..?" என வாயெல்லாம் பல்லாக கேட்ட சுரதையை இப்போது அனல் தெறிக்க பார்த்த நறுமுகை,


" ம்மாஆஆ... சும்மா இரு சொல்லிட்டேன்.. காண்டு ஏத்திக்கிட்டு இருக்க... நான் இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதுல நான் இன்னொருவாட்டி வேற குளிக்கணுமா ..??? நீங்க பண்ற வேலைக்கு...."

"சரிடி... சரிடி ரொம்ப சலிச்சுக்காத ...நீ ரெடி ஆகு அதுவே போதும்.." என்றதும் அச்சமயம் நறுமுகையின் பெரியப்பா மகளான ராகினியும் ரோகிணியும் வந்திருந்தனர்...


ராகினி நறுமுகையை விட ஐந்து வயது சிறியவள்.. அவள் தற்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பார்க்கிறாள்...ரோகிணி பத்தாம் வகுப்பு படிக்கிறாள் ..


இருவரும் இன்று அரை நாள் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்திருந்தனர்.. வரும்போதே ஆடையை மட்டும் அணிந்து வந்திருந்தவர்கள், அணிகலன்கள் அனைத்தையும் பாக்ஸ் ஒன்றில் போட்டு கையோடு கொண்டு வந்து விட்டிருந்தனர்...


நறுமுகையை பார்த்து ,


"என்னக்கா ரெடியாகிட்டியா?" என நக்கலாக கேட்ட ராகினியை பல்லை கடித்துப் பார்த்த நறுமுகை,


"இப்பதான் உன் சித்தி என்கிட்ட வாங்கி கட்டிகிட்டாங்க ..இப்ப நீ வாங்க போறியா? தள்ளுடி" என அவளை முந்திக்கொண்டு அறைக்குச் சென்று கதவை அடைத்தவள், புடவை அணிந்து கொண்டு கதவை திறந்தாள்...


அதற்காகவே காத்திருந்தது போல ராகினியும் ரோகிணியும் தாங்கள் கொண்டு வந்த பையினை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றனர்...


"சீக்கிரம் ஏசியை போடுடீ... ரொம்பவே வேர்க்குது. .." என ரோகிணி கூறியதும் ராகினி ரிமோட்டை எடுத்து ஏசியை போட்டு விட்டு தன் தலை முடியை அவிழ்த்து விட்டாள்...


பின் ஒவ்வொருவரும் அவரவருக்கு மாற்றி மாற்றி தலைவாரி அழகாய் அலங்காரம் செய்து தயாராகிட.. நேரம் சிட்டாய் பறந்தது ..

வளவன் கூட அன்று மதியமே வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்.. நறுமுகையின் பெரியம்மாவான வித்யாவும் வீட்டிற்கு வந்துவிட, பாரி மட்டும் மாலை போல வந்து விடுவதாக கூறியிருந்தார்..


அனைவரும் தயாராகி வீட்டினை சற்று ஒதுங்க வைத்தனர்...அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்த்து பார்த்து சரி செய்து கொண்டிருந்தார் வளவன்...


"சுரதை எல்லாம் ரெடி பண்ணிட்டியா? "


" ரெடியாதாங்க இருக்கு.. அவங்க எப்ப கிளம்பி வராங்கன்னு கேளுங்க ..அவங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி சூடா போட்டா கரெக்டா இருக்கும்.."


"ம்ம்ம்... எல்லாம் சரியா இருக்கணும் சொல்லிட்டேன்.. அவ ரெடி ஆயிட்டாளா..?" என்ற கணம் ராகினியும் ரோகிணியும் பளிச்சென்று தயாராகி அறையில் இருந்து வெளிவந்து நின்று,


" நாங்க ரெடி சித்தப்பா.. அக்கா தான் ரெடி ஆயிட்டு இருக்கா.."


" நல்லா இருக்கீங்க... சீக்கிரம் உங்க அக்காவை ரெடியாக சொல்லுங்க... எல்லாரும் ரூம்ல தான் இருக்கணும்.. எப்போ கூப்பிடறோமோ அப்பதான் உங்க அக்காவை கூட்டிட்டு வரணும்.. சரியா..?" என்றதும் தலையை பலமாக ஆட்டி வைத்தனர் அந்த சில்வண்டுகள் இரண்டும் ...


ஆம் நறுமுகையே பெண் பார்க்க தான் இன்று வர விருப்பதாக தெரிவித்து இருந்தார் வளவன்.. அதுவும் இன்று காலையில் தான் விஷயத்தையே அவளிடம் தெரிவித்து இருந்தனர் அவளது பெற்றோர்கள்...



கேட்ட அவளது முகம் விளக்கெண்ணையை குடித்தது போல அஷ்ட கோணல் ஆகியது..

தந்தையிடம் மறுத்து பேச முடியாது ..தாயிடம் கெஞ்சிப் பார்த்தாள்.. மிஞ்சிப் பார்த்தாள் ஒன்றும் வேலைக்காகவில்லை..


" நீ எதுவா இருந்தாலும் உங்க அப்பா கிட்ட பேசிக்கோ ..!" என ஒற்றை வார்த்தையில் மகளை அடக்கி விட்டிருந்தார் சுரதை ...



சரியாக ஐந்து மணி அளவில் வீட்டின் முன்னே காரின் சத்தம் கேட்டது ...


அறைக்குள் இருந்த நறுமுகைக்கு அவ்வளவு நேரம் இருந்த இதம் எல்லாம் மறைந்து ஒரு வித பதட்டமும் பயமும் தொற்றிக்கொள்ள கைகளை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள்...


அவள் அருகே அமர்ந்திருந்த ராகினியும் கண்ணாடியை பார்த்து,


" முகை இந்த லிப் ஷேட் எனக்கு கரெக்ட்டா இருக்குல்ல..??" என கேட்டவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தவள்,


" பொண்ணு என்னை பார்க்க வராங்களா..?? இல்ல உங்களை பார்க்க வராங்களாடி ..?"


"ப்ச்..யாரை பார்க்க வந்தா என்ன..?? நாங்களும் பளிச்சுன்னு இருக்க வேணாமா..?" என்றதும் அவளது தலையிலேயே கொட்டி வைத்தாள் முகை ..


"எனக்கே பயமா இருக்குன்னு பதறிட்டு இருக்கேன்.. நீங்க வேற அட்டகாசம் பண்றீங்களா..?? போங்கடி வெளியில .."

"ஐய... நாங்க போனா அப்புறம் வந்திருக்கிற மாப்பிள்ளை நாங்க தான் பொண்ணு நினைச்சுக்க போறாங்க..?? என்னடி..!" என தங்கையிடம் கேட்டு விட இருவரும் சேர்ந்து கையை தட்டி கொண்டனர்...

அதை பார்த்து முகைக்கு வயிறு எல்லாம் எரிந்தது ...


ரோகிணி தான் ,


"ராகி விடுடி ..ஏற்கனவே முகை கடுப்புல இருக்கா.. நீ கவலைப்படாத முகை இந்த பஜ்ஜியை வாயில வச்சுக்கோ எல்லாம் சரியாயிடும்.." என சுட சுடச்சுட இருவரது தாய்மார்களும் போட்ட பஜ்ஜி தட்டில் இருக்க அதைத்தான் அவளது வாயில் திணித்து இருந்தாள்...

"ஏன்டீ இப்படி என்னை சாகடிக்கிறீங்க..?? தள்ளி போங்கடீ... நான் பஜ்ஜி சாப்பிட்டு மனசை ஆத்துறேன்.." என பஜ்ஜியை அவசர அவசரமாய் முழுங்கி கொண்டு இருந்தாள் முகை ...


பெரியவர்கள் நால்வரும்,


" வாங்க ..வாங்க .." என வந்திருப்பவர்களை வரவேற்கும் சத்தம் நன்றாகவே கேட்டது அறைக்குள்...


கதவை லேசாய் திறந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ராகினி தான் தலை திருப்பி முகையை பார்த்து ,


"மாப்பிள்ளை சூப்பர் .." என்றதும் சட்டென பயம் பிடித்துக் கொண்டது நறுமுகைக்கு..


கைகள் எல்லாம் சில்லிட அவளுக்கு அருகே பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோகிணி தான்,


" பயப்படாத முகை.. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடு அவ்வளவு தானே.. எதுக்கு இப்படி பயந்து சாகுற ..?" என இயல்பாக தான் கூறினாள் ..


ஆனால் அதை ஏற்கும் மன நிலையில் தான் நறுமுகை இல்லை..


சிறிது நேரம் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள் பின்பு வித்யா அறைக்கு உள்ளே வந்தவர்,


" வா முகை.. வர சொல்றாங்க.." என்றதும் பக் என்று ஆனது நறுமுகைக்கு..

" பயமா இருக்கு பெரியம்மா..." என்றவளை வாஞ்சையாக பார்த்தவர் ,


"ஒன்னும் இல்ல.. வா.. பார்த்துட்டு மட்டும் போ.." என்றதும் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்...


தலை குனிந்தபடி நின்றிருந்தவளுக்கு பயம் உச்சத்தில் இருந்தது எனலாம்..

ஏனோ உள்ளங்கால் முதல் உள்ளங்கை வரை அனைத்தும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது..

அச்சமயம் காபி கோப்பைகள் அடங்கிய ட்ரேவை கொண்டு வந்த சுரதை மகள் கையில் திணித்து ,


"எல்லாருக்கும் கொடு." என்றதும் தலை குனிந்தவாறு முதலில் தன் தந்தைக்கு கொடுத்திட, அவரும்,

" வந்தவங்களுக்கு கொடுடா.." என்றதும் அவருக்கு அருகே சோஃபாவில் அமர்ந்திருந்த தன் தந்தை வயதுடைய ஒருவருக்கு தந்தாள்...


மெல்ல தலை உயர்த்தி சிறு புன்னகை உதிர்த்தவள் பின் அவருக்கு அருகே அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு தந்தாள்...அவரும் நறுமுகையை தான் புன்னகை முகமாக பார்த்தவாறு இருந்தார்...


நறுமுகையும் மென் புன்னகையுடன் பார்த்தவள் பின்பு திரும்பிட ,


"பையன் அங்க இருக்காங்க... அவங்களுக்கு கொடும்மா.." என்றதும் முகைக்கு அடி வயிற்றில் ஏதோ உருண்டது...


தலை குனிந்து வந்திருந்த மாப்பிள்ளை பையனின் அருகே சென்று ட்ரேவினை நீட்டிட, அதை தனது நீண்ட விரல்கள் அடங்கிய கரங்களால் கச்சிதமாய் கோப்பையை பிடித்து எடுத்ததும் அவனது கரத்தை பார்த்த நறுமுகை மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அங்க அமர்ந்திருந்த உருவத்தினை பார்த்தவளது இதயம் நின்று துடித்தது ...


ஆம் அங்கு இருந்தது வேறு யாரும் அல்ல விக்ரம் தான் ..


முழுக்கை லெனின் வெள்ளை சட்டையும் அதற்கு பொருத்தமான நீல நிற ஜீன்ஸ் அணிந்து இ
ருந்தான்...


கூர் விழிகளால் அவளையே பார்த்தவாறு அவள் தந்த காபியினை ஒரு மிடறு குடித்து விட்டு அவளை அழுத்தமாய் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..அவனது பார்வையில் நறுமுகைக்கு நெஞ்சமே அடைத்துவிட்டது...



 
அத்தியாயம் 10

மாப்பிள்ளை வீட்டினர் எடுத்து தந்த இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி மணமேடையில் நின்றிருந்தாள் நறுமுகை...



நடப்பது யாவும் கனவா? இல்லை நிஜமா? என அவள் ஒரு தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள்...



பெண் பார்த்து விட்டு சென்றதை இன்னமும் அவளால் நம்பிடவே முடியவில்லை..



அதுவும் விக்ரமை தான் தனக்கு வரனாக பார்த்திருப்பதை துளி அளவும் அவளால் நம்பிட முடியவில்லை...



ஆனால் நடந்தது அனைத்தும் நிஜம் என்று மண்டையில் உரைக்கவும் மறுநாள் வழக்கத்தை விட அவசரமாக கல்லூரிக்கு கிளம்பி சென்று இருந்தாள்...



நிச்சயம் தன்னை பார்க்க அவன் சீக்கிரம் வருவான் என எதிர்பார்த்து இருக்க ..ஆனால் விக்ரமோ வழக்கமாய் வரும் நேரத்திற்கு வந்தவன் நறுமுகையை சின்னதாய் கூட ஒரு சலன பார்வை பார்க்கவில்லை ...



முன்பு எப்படி அவளிடம் நடந்து கொள்வானோ..? எப்படி பார்ப்பானோ ?? அதே போலத்தான் அப்போதும் இருந்தான்...



இந்நிலையில் குழம்பித்தான் போனால் நறுமுகை... உண்மையில் நேற்று வந்தது விக்ரம் தானா ..? அல்லது அவனைப் போல வேறு யாருமா..? என்கிற யோசனை வந்திட அவனிடம் என்னென்னவோ கேட்க வேண்டும் என இருந்தவள் ஒரு வார்த்தை கூட கேட்காது அவன் சொன்ன வேலைகளை செய்தபடி தன் எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தாள்...



அன்று வீட்டிற்கு சென்றவளிடம் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தற்போது நிச்சயதார்த்தத்தை மட்டும் வைத்துக் கொள்ளலாம் எனவும் வைகாசி மாத முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குள் மாப்பிள்ளைக்கும் வேலை உறுதியாகிவிடும் என்றும் கூறியிருந்தனர் ...



கேட்ட அவளுக்கு தலையே சுற்றி விட்டது ...சுரதை வேறு,



" மாப்பிள்ளை உன் காலேஜ் தானாமானே... உனக்கு தெரியுமா..?" என கேட்டதும் என்ன பதில் கூறுவது என முழித்த நறுமுகையை கண்ட வளவன்,



" அங்க ஏகப்பட்ட பேர் படிக்கிறாங்க.. இவளுக்கு ஒவ்வொருத்தரையும் பாக்குறது தான் வேலையா..? சும்மா விடு.." என அதட்டி இருந்தார்...



ஆனால் இவர்கள் மாப்பிள்ளையாக பார்த்து இருக்கும் பையன் தான் தனக்கு ப்ராஜெக்ட் செய்ய கைடாக இருக்கிறான் என கூறினால் பெற்றோர்கள் என்ன எண்ணுவார்களோ என நினைத்து அமைதியாக இருந்து விட்டாள்..



ஒன்று மட்டும் உறுதியானது நிச்சயம் நேற்று வந்தது விக்ரம் தான்.. வேறு யாரும் அல்ல ..



ஆனால் அவளுக்கு இருக்கும் சந்தேகம் அவன் எப்படி தனக்கு சம்மதம் தெரிவித்தான் என்பது தான்...



ஒரு வேலை அவனது பெற்றோர் கட்டாயப்படுத்தி இருப்பார்களோ..?.. அவனைப் பார்த்தால் யாரும் கட்டாயப்படுத்தி கேட்பவன் போல தெரியவில்லையே..



இவனது ஒற்றை பார்வைக்கு எதிரில் இருப்பவர் அடங்கி போய்விடுவார் அப்படி இருக்கையில் இவன் மற்றவருக்கு அடங்கி இருப்பானா..? என தனக்குள்ளேயே ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த நறுமுகைக்கு தலையை வெடித்து விடும் போலானது...



நாளை அவனிடம் பேசியே தீர வேண்டும் என முடிவெடுத்த பின்னர் தான் அவளால் நிம்மதியாய் உறங்கவே முடிந்தது ...



மறுநாள் அவன் எதையோ வேலை சம்பந்தமாய் லேப்டாப்பை பார்த்தபடியே அவளிடம் கூறிக் கொண்டிருக்க, அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட நறுமுகை அங்கிருந்து செல்லாது அப்படியே நின்றாள்..



நிச்சயம் அவள் இன்று விடவே மாட்டாள் ஏதேனும் கேட்பாள் என விக்ரமும் எதிர்பார்த்து தான் இருந்தான் ..பொறுத்து பொறுத்துப் பார்த்த நறுமுகை அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு பொறுமை இழந்தவளாய் ,



"எப்படி சம்மதிச்சீங்க..?" என்று தான் முதல் கேள்வியை கேட்டு வைத்தாள் ...



அவனும் சிறிது கூட தடுமாறவில்லை.. தன் வேலையை லேப்டாப்பில் பார்த்தவாரே,



"ஏன் பிடிக்கலையா..?" என கேட்டதும் அடுத்த நொடி,



" உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சுதுன்னு கேட்கிறேன்.." என்ற நறுமுகையின்‌ அழுத்தமான கேள்வியில் சட்டென தன் வேலையை நிறுத்தி விட்டு தலை திருப்பி அவளைப் பார்த்தான் விக்ரம்...



அவன் இப்படி தன்னை திடுமென பார்க்க கூடும் என எதிர்பாராததால் தடுமாறிய நறுமுகை தலை குனிந்து நின்று,



" உங்களுக்கு என்னை பிடிக்காது.. அது மட்டும் இல்லாம எனக்கு பேசிக் நாலேஜ் கூட கிடையாது.. முட்டாள் முட்டாள்னு திட்டிக்கிட்டே இருப்பீங்க.. கண்டிப்பா நீங்க இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லி இருப்பீங்க ...எனக்கு தெரியும்.. உங்க அப்பா அம்மா ஃபோர்ஸ் பண்ணு சம்மதிச்சீங்களா...? எங்க அப்பா வேற உங்க வீட்டு சைட்ல இருந்து ஓகே சொல்லிட்டதா சொன்னாங்க..



நீங்க உங்க அம்மா அப்பா கிட்ட பேசுங்க.. இல்லன்னா நானே கூட என் அப்பாகிட்ட சொல்லிடுறேன் .." என்றவளை நாடியில் கை வைத்து கூர் வழிகளால் அளந்த விக்ரம்,



" என்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணல ...என் முழு மனசோட தான் நான் சம்மதம் சொன்னேன் ..போதுமா..?" என்றவனின் வார்த்தைகளை கேட்ட நறுமுகைக்கு சட்டென அடிவயிற்றில் ஏதோ ஒன்று செய்தது.. அது பட்டாம்பூச்சி பறந்ததா அல்லது கம்பளிப்பூச்சி குத்தியதா என்று தான் அவளுக்கு கண்டறிய முடியவில்லை..



"எ... என்ன ..சொல்றீங்க..?? உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே .." என மெல்லிய குரலில் பதற்றமாய் கூறியதும் விக்ரம்,



" நான் சொன்னேனா உன்கிட்ட "



" ஆனா நீங்க அப்படித்தானே நடந்துப்பிங்க... அது மட்டும் இல்லாம நீங்க பிஎச்டி முடிச்சு இருக்கீங்க.. எனக்கு எதுவுமே தெரியாது ..அப்புறம் என்னை முட்டாள் முட்டாள்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி சொல்லி குத்தி காட்டவா ...?" என்றதும் அவளை ஆழ்ந்து பார்த்த விக்ரம்,



" இது வேற ..அது வேற.. அதை புரிஞ்சுக்கோ நறுமுகை.. வீட்ல கேட்டாங்க எனக்கு ஓகேன்னு தோணுச்சு ..சரின்னு சொன்னேன்.. சப்போஸ் உனக்கு பிடிக்கலைன்னா தாராளமா நீ சொல்லு ..நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.." என திட்டவட்டமாக கூறியதும் என்ன பதில் சொல்வது என திணறிய நறுமுகை,



" எனக்கு எங்க அப்பா முடிவு தான் எல்லாமே .." என மெல்ல உரைத்ததும் குறும்பாக அவளை பார்த்து விட்டு லேப்டாப்பில் கவனம் பதித்தவன்,



" அப்போ உனக்கு என்னை பிடிக்கல.. அப்படித்தானே..? அதை சொல்றதுக்கு தானே வந்த..??" என போட்டு வாங்கவும் பதறியவள் ,



"அப்படி எல்லாம் இல்ல.. செட்டாகுமானு ஒரு சந்தேகம்.."



" அதுலாம் செட் ஆகும் பார்த்துக்கலாம்.." என்றதும் சரியென தலையசைத்து நகர முயன்றவளிடம் ஏதோ நினைவு வந்தவனாய் ,



"ஒரு நிமிஷம்.. இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது புரிஞ்சுதா..??? எப்போ யார்கிட்ட சொல்லனும்னு நான் சொல்றேன் அதுவரைக்கும் ஒருத்தருக்கும் தெரியக்கூடாது.. தெரிஞ்சா தேவை இல்லாம இஷ்யூஸ் வரும் ..அப்புறம் உனக்கு வேற கையை மாத்துவாங்க ..எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல கல்யாணம்னு சொல்லிட்டு இருக்காங்க.. அதுவரைக்கும் நம்ம ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சுக்க இது ஒரு நல்ல சான்ஸ்னு நினைக்கிறேன்..என்ன சொல்ற..?" மறுக்க எக்காரணமும் இல்லை என்பதால் சரியென மண்டையை ஆட்டி வைத்தாள்..



" கவிதாக்கு கூட சொல்ல கூடாது ..புரிஞ்சுதா.?" என இன்னும் அழுத்தம் கூட்டி கூறியதும் சரியென சலிப்பாக தலையாட்டி நறுமுகை அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் ...



அதன் பின்னர் நாட்கள் இயல்பாய் தான் கடந்தன... இவள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என அவன் வரம்பு மீறவும் இல்லை.. அதிகப்படியாய் பேசவும் இல்லை ..எப்போதும் போலவே பேசினான்,வேலைகளை சொன்னான், அவ்வளவே...



நிச்சயத்தை மட்டும் சீக்கிரம் வைக்க வேண்டும் என அவனது பெற்றோர் வற்புறுத்தியதால் இதோ நிச்சயப்பட்டு எடுத்து மண்டபமும் பிடித்து அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு மேடையில் அமர்ந்திருக்கிறாள் நறுமுகை ...



மணமகன் அறையில் கிரே கலர் பேண்ட்டும் மெல்லிய இளஞ்சிவப்பு நிற சட்டையும் அணிந்து கைகடிகாரத்தை மாட்டியவன் ஒன்றுக்கு இரண்டு முறை அனைத்தும் சரியாக இருக்கிறதா என கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு நின்று இருந்தான் விக்ரம்...



அவனின் நினைவுகளோ பின்னே சென்றது... அவனது அன்னை சுகன்யா தான் நறுமுகையின் புகைப்படத்தை அவனிடம் காட்டியது..



அவன் தற்போது திருமணம் வேண்டாம் என்றெல்லாம் எண்ணவில்லை.. அவனை பொறுத்தவரை அந்தந்த வயதில் அனைத்தும் நடந்திட வேண்டும் என்று தான் எண்ணிடுவான் ...



அதனால் அன்னை திருமண பேச்சை எடுத்ததும் சரியென ஒப்புக்கொண்டவன் இன்னும் சிறிது மாதங்களில் தனக்கும் வேலை கிடைத்துவிடும் தனக்கென ஒரு பெண் வந்துவிட்டால் இன்னும் நன்னாக இருக்கும் என எண்ணியவன் அன்னை காட்டிய புகைப்படத்தை வாங்கி பார்த்தவன் உண்மையில் அதிர்ந்து தான் போனான்.. அதிலிருந்து நறுமுகையை கண்டு..



அவளது குடும்பத்தை பற்றி சுகன்யா புட்டு புட்டு வைக்க.. அனைத்தும் மண்டையில் ஏறினாலும் தான் யோசித்துக் கூறுவதாக அன்னையிடம் தெரிவித்து விட்டிருந்தான் விக்ரம் ...



லேபிற்கு வந்தவனது பார்வை முழுவதும் நறுமுகை இடம்தான் இருந்தது ..



அவளுக்கு குறை எதுவும் சொல்லிட முடியாது ..பார்த்ததும் ஈர்த்து விடும் தோற்றம் தான்.. பளிச்சென்று இருக்கிறாள்... வயதுக்கு உரிய அனைத்தும் செழிப்பாக உள்ளது ..என உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றையும் அளந்தவனுக்கு தான் இவ்வாறு அவளை அவளுக்கே தெரியாமல் ஆராய்வது தவறு என மூளை எச்சரித்தாலும் தன் வாழ்நாள் முழுவதும் வரப்போகிறவளை அறிந்து கொள்வது ஒன்றும் தவறு இல்லையே என அவனது மனம் முரண்டியது ...



பொறுமையாக எடுத்துக் கூறினால் அனைத்தையும் புரிந்து கொள்கிறாள்.. தன்னிடம் எதிர்த்து பேச வில்லை ..அவளது தோழிகள் அவளுக்கு எதிராய் நடந்திருந்தாலும் முழுதாய் ஒதுக்கிடாது எல்லையுடனே பழகுகிறாள் ..



படிப்பை தவிர வேறு எதிலும் கலந்து கொள்ளாது ஒதுங்கி விடுவதில்லை ...தானே முன்வந்து கலந்து கொள்கிறாள் ..அதை பொங்கல் அன்று போட்டிகளில் அவள் கலந்து கொண்டதை பார்த்திருக்கிறானே...



அனைத்தையும் பொறுமையாய் யோசித்தான்.. முக்கியமாக அவனை எதிர்த்து அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை... இத்தனைக்கும் அவன் அவளிடம் கடுமையாக தான் நடந்து கொண்டிருக்கிறான்..


ஆனால் ஒரு முறை கூட வெறுப்பாய் அவனை பார்ப்பதோ, எதிர்த்து கேள்வி கேட்டதோ இல்லை.. அனைத்தையும் யோசித்துப் பார்த்த விக்ரம் அன்னையிடம் சரி என கூறிவிட்டான்...



அவ்வளவு தான் சுகன்யா அன்றைய வாரமே பெண் பார்க்க செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டார்..



அவளுக்கும் ஏதேனும் தெரியும் தன்னிடம் ஏதேனும் கேட்பாள் என எதிர்பார்த்தான் தான்.. ஆனால் அவளோ சித்தப்பா பையனுக்கு கல்யாணம் என கூறி விடுமுறை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது விக்ரமிற்கு...



சரி எவ்வளவு தூரம் தான் செல்கிறாள் என பார்ப்போம் என எண்ணித்தான் அவனும் வேண்டுமென்றே பிகு செய்து பின்பு சரியென விடுமுறை தந்திருந்தான்...



அன்று வீட்டில் தன்னை அவள் கண்டதும் அதிர்ந்த அவளது முகம் இப்போது வரை நியாபகத்தில் உள்ளது...



அனைத்தையும் நினைத்து பார்த்து எண்ணி சிரித்தவனை அழைத்திருந்தனர் உறவினர்கள் ...



ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் உதட்டில் உறைந்த சிறு புன்னகையுடன் மேடை வந்திட , அங்கு தலை நிறைய பூ வைத்து மிதமான அலங்காரத்துடன் நின்றிருந்தவளை ஒரு கணம் அழுத்தமாய் பார்த்தவன் பின் உறவினர்களுக்கு வணக்கம் வைத்தான்...





பெரியவர்கள் முன்னிலையில் லக்கின பத்திரிக்கையை புரோகிதர் வாசித்திட பின் தட்டில் சீர் வரிசைகளை இருவீட்டினரும் மாற்றி நிச்சயித்துக் கொண்டனர்...




அதைத் தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் இருவரிடமும் மோதிரத்தை தந்திட முதலில் விக்ரம் தான் மெல்ல அவளது மருதாணி இட்ட மென் கரத்தை பற்றி மோதிரத்தை போட்டு விட்டான்...



அவனது ஸ்பரிசத்தில் ஜில்லென்று ஆனது நறுமுகைக்கு சட்டென முகமெல்லாம் சூடாகிட...அவளது நெஞ்சமோ உணர்ச்சியில் ஏறி இறங்கியது...




அடுத்ததாய் அவளிடம் மோதிரம் தந்திட விக்ரமின் முரட்டு கரத்தை பிடித்ததும் பயம் தான் தொற்றிக்கொண்டது அவளை...
எச்சிலை விழுங்கி கொண்டு அவனது விரலில் மோதிரம் போட்டதும் கச்சிதமாய் பொருந்திக் கொண்டது அவனது விரலுக்கு அவள் அணிவித்த மோதிரம்...



அதன் பின் இருவரது கரமும் சேர்ந்தே இறங்கிட...விலகிட பார்த்தவளது கரத்தை கெட்டியாய் பிடித்து கொண்டான் விக்ரம்...



அதன்பின் இருவரையும் அமர வைத்து இரு குடும்பத்தாரும் நலங்கு வைத்து மகிழ்ந்தனர்...


அன்றைய தினம் ஜோடிகள் இருவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது...





 
Status
Not open for further replies.
Top