ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காத்திருந்தாயா காதலே -Rerun

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
காத்திருந்தாயா காதலே -rerun

ஏற்கனவே 2021 இதே தளத்தில் நான் எழுதிய கதை.படிச்சு பார்த்து சொல்லுங்க எப்படி இருக்குன்னு.
 

swwee

Active member
Wonderland writer
அத்யாயம் 1

கேள் பெருந்தலைவா! எம் வதனசுந்தர இளவரசி அச்சூரிய தேவனுக்கு நிகரான தேஜஸ் நிறைந்தவள்,தகிக்கும் நிலவுக்கு இணையான தைரியம் கொண்டவள்,மென்பனி குணம் படைத்தவள். பாதுகாப்பாய் அழைத்து வருவாய், உன் மக்கள் இனி எம்மக்கள். பார் வழி ஞானம் மிகுந்த பட்சி ஆண்ட்ரு துணைக்கு வருவனாம் என்றார் மாக்கியவல்லி. அசிதன் உண்டு துணைக்கு, தளபதி அவன் பயம்கொள்வானோ! வீரம் நிறைந்த மண் மகன் அவன், ஒற்றையாள் பலமாக கிளம்பி புகர்ந்தான் சதாத்ரு நதிக்கரையில் அமைந்த வனத்தில்.


இஸ்தான்புல் நகரின் எல்லையில்,அழகிய மர்மரா கடலில் மிதக்கும் கப்பலில் உலகளாவிய முக்கிய கொள்ளைகூட்ட தலைவர்கள் அனைவரும் ஒருங்கே கூடியிருந்தனர். கிட்டத்தட்ட 100 வருடமாக மூன்று தலைமுறையாக தொழில் செய்யும் ‘ஜங்குரோ’ கூட்ட தலைவன் அவன் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தான்.

விபரம் இது தான். சீன கருப்பு சந்தையில் கிடைத்த குப்பி ஒன்றை வாங்கியிருக்கிறான் இந்திய பிஸ்னஸ்மேன் ஒருவன். அவனை ஏமாற்றி போலியை கைமாற்றி அசலை ‘ஜங்குரோ’ கூட்டம் தலைவனிடம் சேர்க்கவேண்டும். இவர்கள் எல்லோரின் உதவி கிடைத்தும் அது அவன் கைக்கு கிடைக்கவில்லை.கோபம் குறையவில்லை.இத்தனை பேரை ஏமாற்றி அதை ஒருவன் பாதுகாக்கிறான் என்ற எண்ணமே அசிங்கமாக இருந்தது நம் தலைவனுக்கு.

கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அதிபுத்திசாலி மூடன் ஒருவன் அந்த பிஸ்னஸ்மேனை விபத்தில் கொன்றும் விட்டான். அந்த பொருளையும் கோட்டைவிட்டான். அப்படியும் தேடிபிடித்து எடுத்து வந்தால் போலியானது அது. இப்போது சூழல் சிக்கலாகி போனது.செத்தவனோ பெரும் பணக்கார வியாபாரி,மூன்றுக்கு மேற்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறுபவன். விடுமா பாதுகாப்பு துறை! இப்போது இன்டர்போல் அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் அந்த பணக்காரன் பின்னால் இருக்கும் மாஃபியா அனைத்தையும் சமாளித்தாக வேண்டும்.

இன்னொரு மூர்க முட்டாள் அவர்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் ஆதங்க சங்கடத்தை வெளிப்படுத்தினான் “அது என்ன? வெறும் 2 பில்லியன் டாலர் இருக்குமா,அதுற்கு இணையாக இருக்கும் வேறு ஆண்டிக் பீஸ் கொள்ளை அடித்து கொடுக்கிறேன்,வேண்டுமானால் அதையும் விட விலை மதிப்பு அதிகம் உள்ள பீஸ் கூட கொடுக்கிறேன், இதற்காக தொந்திரவு செய்யாதே.தொழில் தடைபடுகிறது”

ஜங்குரோ கூட்ட தலைவன் பெருஞ்சிரிப்பு சிரித்தான்.அவன் சிரிப்பில் கோபம், எரிச்சல், அட முட்டாளே! என ஆயிர உணர்ச்சிகள் இருந்தது. இந்த மாக்கான்களுக்கு என்ன தெரியும்? ஆயுத கடத்தல்,ஆர்கன்ஸ் கடத்தல், ஆள் கடத்தல், விட்டால் கொலை,கொள்ளை,மிரட்டல். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வாழ்க்கை வாழ்கிறோமென்ற எண்ணமாவது இருக்குமா?

அது! அந்த ஆன்டிக் பீஸ்! உலோக குப்பி கேட்டதை கொடுக்கும் அக்ஷய பாத்திரம். நம்ப முடியாத பேரதிசயம். துருக்கிய புராண ஹீரோ கைரா போல வாழமுடியும். சீன புராண ஹீரோ ஹக்ஸியன் போல நிரந்தர வாழ்வு வாழ முடியும்.கர்ணனுக்கு கவசகுண்டலம் போல அது கூட இருந்தால் நம்மை நாம் பாதுகாத்துகொள்ளவும் முடியும், நினைத்ததை சாதிக்கவும் முடியும்.

ஐந்து வருடங்களுக்கு முன் சீனாவில் நடக்கும் ஏலத்தில் விடபடும் அந்த உலோக குப்பியை கடத்தி கொடுக்குமாறு ஒருவன் வந்தான்.பதிலுக்கு அமெரிக்க பணக்காரன் ஒருவனின் ரகசிய தகவல்கள் தருவதாக விலை பேசினான். அப்போதைக்கு அந்த ரகசியம் இவனுக்கு தேவையாக இருக்க வேலை ஒத்துகொண்டு களவாடினான்.

களவாடலும் ஒன்றும் சுலபமாக இல்லை, இவனைபோல நிறைய கூட்டம் அதன் பின்னே இருந்தது.நிறைய சிக்கல்கள், கொலைகள், திட்டங்களுக்கு பின்தான் குப்பி அவன் கைக்கு வந்தது.குப்பி அவனிடம் இருக்கிறது என்று தெரிந்துகொண்ட ஜப்பானிய ஆய்வாளன் ஒருவன் இவனை தேடிவந்து அவனுக்கு கொடுத்தால் நிறைய பணம் கொடுப்பதாக சொல்ல; கைக்குள் அடங்கும் இந்த குப்பிக்கு இத்தனை ஆட்கள் போட்டியா? அப்படியென்ன இருக்கிறது அவன் யோசிக்கும் போதே கிரேக்க நாகரிகம் விரிவடைந்த காலத்து பொருள் என்றும், தெய்வாம்சம் நிறைந்தது என்றும், இது உடனிருந்தால் நினைப்பது எல்லாம் கிடைக்கும் என்ற தகவல் தெரிந்தது. அப்படியும் அவன் அதை பெரிதாக நம்பி விடவில்லை. ரகசியம் பண்டமாற்றதுக்கு காத்திருந்த சமயம் அவனுடன், அவன் அறையில் வைத்திருந்தான். ‘என்ன தலைவலி வேலைடா இது! இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே’ அவன் நினைக்கும் எல்லாமும் அவன் நினைத்தபடியே நடக்க தொடங்கியது.வேண்டுமென நினைத்த பெண் தானாக மடியில் வந்து விழுந்தாள், கடற்படை ரோந்தில் மாட்டியிருக்க வேண்டியவன் தப்பினான்,நம்மிடம் இருக்கும் ரக்ஷ குப்பி நம்மை காப்பாற்றுகிறதோஎன்று எண்ணி முடிப்பதற்குள் அவனிடமிருந்து அது காணாமல் போனது.அவனுடன் பலகாலமாக இருக்கும் சமையல்காரன் வெறும் 10,000 அமெரிக்க டாலருக்கு திருடி விற்றுருக்கிறான்.

அது தானோ காரணம் என்றிருந்த மனம் அதுதான் காரணம் என்றாகும் சமயம் அதன் மீது மோகம் கூடிவிட்டது தலைவனுக்கு. குப்பி அவன் கையில் இருந்தால் உலகையே ஆட்டிப் படைக்கலாம் என்ற எண்ணம் வலுக்க தொடங்கியது. அவன் தேடுதல் வேட்டை தோல்வியில் முடிவது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன ஆனாலும் சரி, அது அவன் கைக்கு வந்தே ஆக வேண்டும் என்ற வெறி பிடித்தது.

கண்டுபிடித்து தருவோருக்கு ஜங்குரோ வளர்த்திருக்கும் இந்த நெட்வர்க் மொத்தமும் கொடுப்பதாக சொல்லி அனுப்பிவைத்தான். இண்டு இடுக்கு, மூலை முடுக்கெல்லாம் ஜங்குரோ கூடத்திற்கு ஆள்பலம் இருக்கிறது. வானம்,பூமி,காற்று எதுவும் ஜங்குரோ தலைவன் சொல்படி கேட்கும்.யாருக்கு தான் ஆசை வராது..!

இந்திய நாட்டின் பலம் அதன் சீதோஷ்ண நிலை.நான்கு வகையான காலநிலையும் சீராக காணுவதால் இயற்கை அன்னை விரிந்து பறந்து மக்கள் தொகை கூடினாலும்,குறைந்தாலும் அதற்கு ஏற்றார் போல செழிப்பாக வளங்களை வாரிகொடுக்கிறாள். பாரத நாட்டின் பெருமை அதன் இயற்கை வளத்திலும், வரலாறு பேசும் அடையாளங்களிலும் என்பது உலகறியும்.

ராஜஸ்தான் மாநிலம், உச்சி வெயில் கொளுத்தும் தல்வாரா நகரம்.ஆராதனா அங்கே வந்து ஐந்து நாட்கள் ஆகிறது. மாஹி ஆறு பறந்து விரிந்து ஓடி அணைகளில் தடைபட்டு பிரிந்து கிளைகளாக சென்று மக்களுடன் சேர்கிறாள்.அந்த ஆற்று படுக்கையில் பழைய கட்டிடத்தை தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருக்கிறாள். அவளுடன் சுற்றுலா வந்திருக்கும் ஆட்கள் ராஜஸ்தான் நிலவியல் பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டிருக்கின்றனர்.சுற்றுலா அவளுக்கு இஷ்டமான ஒன்றுதான் , இந்த சுற்றுலாவோ,இந்த கும்பலோ அவளுக்கு கொஞ்சமும் சகிக்கவில்லை. எந்நேரமும் வரலாறு ஆய்வுகள் பேசும் கும்பல். அவை அவள் தூக்கத்திலும் வந்து இம்சை செய்கிறது. அவள் வகையில் இது சுற்றுலாவும் அல்லவே.அதனாலோ என்னவோ சகிக்க முடியாமல் இருக்கிறது போல.

அவள் கார்டியன் ஏஞ்சல் இதுதான் உனக்கு சிறந்ததென அனுப்பி வைத்துவிட்டார்,ஏற்றுக்கொண்டாயிற்று. என்ன செய்ய எரிச்சலை கட்டுப்படுத்திக்கொள்வோமென இருக்கிறாள்.

அவர்கள் டெல்லியில் இறங்கியதும் இவள் பிரிந்து வந்திருக்கலாம் ஆனால் தொல்பொருள் ஆயவாளர் நோவா சிஹாரி இந்தியாவில் இருக்கிறாராம். இந்த வரலாற்று மாணவர் குழுவுடன் போனால் ஏதாவது ஒரு சைட்டில் அவரை காண நேரலாம் தானே! அந்த எண்ணத்தில் மட்டுமே இவர்களை சகித்துக்கொண்டிருக்கிறாள். அவளோ பக்கா பிஸ்னஸ்-வுமன் இவர்களோ வரலாற்று காலங்களையும் என்ன நடந்திருக்க முடியும், என்ன மாதிரியான எண்ண போக்கு இருந்திருக்க கூடும் என்பதையும் அவரவர் கருத்து பேச சிலநேரம் எரிச்சல் கூடுகிறது. கடந்த காலத்தில் என்ன இருக்கிறது! எதிர்காலத்தை அமைப்பதில் தானே எல்லாம் இருகிறது.

சீக்கிரம் கோயம்பத்தூர் சென்று வக்கீல் விஸ்வநாதனிடம் சேர்ந்துவிட வேண்டும் இதுவே அவள் எண்ணம். ஒவ்வொரு நாளும் அவள் அம்மா பாதுகாப்பாக இருக்க வேண்டும் அவர்கள் நிறுவனம் எந்த நஷ்டமும் இல்லாமல் நடக்க வேண்டும் சீக்கிரம் நிம்மதி கிடைக்க வேண்டும் நினைத்துக்கொண்டே கண் அயர்கிறாள்.

நடக்கும்!நடக்கணும்! நடக்கும் தானே!
 

swwee

Active member
Wonderland writer
2


நக்கணையார் பகுதி குறுநில சாம்ராஜ்ஜியம் அழிந்துபோனதே!
மக்களை மீட்டு அழைத்துவந்து மாக்கியவல்லியிடம் ஒப்படைத்தான் தளபதி.ராஜ்ஜியம் சூபிக்ஷமடைய ஐம்பூதம் சாட்சியாக இயற்கை வளங்களை துதித்து அவர்கள் நடத்திய புனித யாகத்தை கெடுத்த படைகளால் இளவரசி யாகத்தின் ரக்ஷ கலசை சுமந்து காணாமல் போனாள்.
எங்கள் சுந்தரவதன இளவரசி அழகி, உயர் சிந்தனை உடையவள், தைரியசாலி, கலைநயம் மிகுந்தவளென புகழ்ந்த ஆண்ட்ரூ; அவள் வாசம் தேடிபறக்க, அதை தொடர்ந்து அடர்வன காட்டில் தடைகளை உடைத்து, வேட்டையாடி அழித்து முன்னேறினான் தளபதி அவன். சாந்தமான இயற்கை அன்னை கண்ணியவள் பாதம் பதித்த பூமி இதுவென கூட சொல்லாமல் அவள் வேட்டையாடி வீசி எரிந்திருந்த புலியை தன்னுள் புதைத்து கொண்டாள்.அவள் பாதம் மிதிபட்டு சுருங்கி போயிருந்த புற்களோ அடர்நிறம் கொண்டு மீண்டும் உயிர்த்தெழுந்து கண்டுபிடி கண்டுபிடி என்று அவனை சிரித்து கேலி பேசியது.


"...ஒளிர் தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி… "டி.எம் சவுந்தரராஜன் அழகாய் பாட சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு மரகதம் அதை ரசித்து கேட்டுக்கொண்டே ‘என்ன இவன இன்னமும் காணலை’ சஞ்சலப்பட்டார்.

மணி பத்தரை ஆனது, பேரன் வந்து சேர்ந்தான். அவன் அருண் பூரணச்சந்திரன், சன் ஆப் பூரணச்சந்திரன்.டைரக்டர் ஆப் பூர்ணா இன்டஸ்ட்ரீஸ். நினைக்கும் போதே பிரம்மாண்டமாக தோன்றும் இந்தப்பதவி அவனுக்கு சந்தோஷமான விஷயம் இல்லை. அவன் பாட்டிக்கோ அடிநாக்கில் இனிப்பின் தித்திப்பு.

கார் பார்க் செய்துவிட்டு வந்தவனுக்கு ஜாதிமல்லி கொடிபடர்ந்து பூ உதிர்த்திருந்த முன் வாசல் போர்டிகோவில் சாய்வு நாற்காலியில் பாட்டு கேட்டுக்கொண்டு மேகத்தில் உலவும் நிலவை ரசிக்கும் பாட்டியை கண்டு கோபம் கோபமாக வந்தது, “ஏய் கிழவி…” மனதிற்குள் சத்தமாக கருவ, அவனை கண்டும் காணாமல் இருந்த பாட்டி திரும்பிப்பார்த்து என்ன தம்பி என்றாள். ஐயோ! மனசுல நினைக்கிறது எல்லாம் கேட்க தொடங்கிடுச்சா? நினைத்தவன் ஒண்ணுமில்ல, சொல்லிவிட்டு சோர்ந்தபடி வீட்டுக்குள் நடந்தான்.

பேரன் ஓட்டம் கண்டு சிரித்த பாட்டி பாவம் ரெஸ்ட் எடுக்கட்டுமென்று எண்ணிக்கொண்டாள். பேரன் எத்தனை அலுப்பாக வந்தாலும் பாவம் பார்க்காமல் இருந்துக்கொள்ள பழகிக்கொண்டாள்.

கோவை மரகதம் என்றால் ஊரறியும். 18 வயதில் திருமணம் செய்துகொண்டு வந்தவர் அடுத்த 10 வருடம் தெரிந்ததெல்லாம் குடும்பம் மட்டுமே. பேர் சொல்ல ஆண் பிள்ளை, வீட்டை செழிக்க வைக்கும் பெண் பிள்ளையென மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை. திடீரென கணவர் இறந்துவிட அடுத்த 3 வருடத்தில் அவர்கள் சொத்தெல்லாம் பாதியாக குறைந்தது, தன் இரக்க குணத்தில் சுற்றத்தால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து தொழிலில் இறங்கினார். கரைந்து போனதை காட்டிலும் அதிகமாக சேர்த்தார். 70 வயதென்றாலும் 50 வயது தோற்றம். அனுபவமோ நூற்றி நாற்பதை காணும். உழைப்பே உயர்வு தருமென்று அறிந்தவர்.ஆசை பேத்தி அமிர்தா உக்ரைனில் மருத்துவம் படிக்க செல்ல ,அவள் கூடவே மருமகளும் சென்றிருக்க அவர்களுக்கு துணையாக மகனையும் அனுப்பி வைத்துவிட்டார்.

கடுமையாக உழைத்து வந்தவருக்கு எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் சோம்பேறி பேரன்கள் அருண், பால்கி என்று செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணன்; இருவரையும் பார்த்து எரிச்சல் ஆனது. 25வயதிலும் சுகபோக வாழ்வு வாழும் பேரன்களை திருத்த முடிவு செய்தார்.

இளநிலைப்படிப்பு முடிந்து மேற்படிப்பு படிக்க அமெரிக்கா போகிறோம் என்றார்கள். சரி போ என்று விட்டால் குடி, ஆட்டம் பாட்டம், விளையாட்டு என்று அதிலேயே திளைத்துப்போனார்கள். இந்தியா இழுத்து வந்து தொழில் பார்க்க சொன்னால் பார்க்கமாட்டோம் அனிமேட்டட் கேம்ஸ் தயாரிப்போம் என்றார்கள். கோபம் வந்துவிட்டது, என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து அருணையும் பாலகிருஷ்ணனயையும் தொழிலில் இறக்கிவிட்டார்.

அறைக்கு வந்த அருண் கோபம் கொஞ்சமும் குறையவில்லை அவன் ஆசை தெரியாமல் தொழிலில் இறக்கினார் பாட்டி, சரி போ குடும்பத்தொழில் தானே அவன் தானே பார்க்கவேண்டும் என்று விடலாம்! அவன் என்ன செய்தாலும், பேசினாலும்,முடிவு செய்தாலும் கூட அடுத்த பத்து நிமிடத்தில் அவருக்கு தெரிந்துவிடுகிறது.

ஒருநாள் அக்கவுண்ட் செக்ஷனில் வேலை பார்க்கும் திவ்யாவிடம் 10 நிமிடம் அதிகமாய் பேசினான், அன்றிரவு பாட்டி 3 மணிநேரம் அட்வைஸ் செய்து அவன் மண்டையை காய வைத்துவிட்டார்.அடுத்தநாள் திவ்யாவும் வேறு பக்கம் மாற்றப்பட்டாள். அது மட்டுமா, அவன் பாட்டியின் கைபொம்மை என்கிற பெயர் கம்பெனி முழுக்க பரவி அவமானமாகிவிட்டது.

எப்படி இருந்த பாட்டி இப்படி ஆகிவிட்டார்.வேலையில் ஸ்ட்ரிக்ட் என்று அறிந்தவன்தான் ஆனாலும் அன்பானவர் என்று தெரிந்து வைத்திருந்தான். ஒரே ஒரு நாள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தான், இன்றைக்கு வரை அனுபவிக்கிறான்.

இது மட்டுமா அவனுக்கு மனஅழுத்தம் என்றால் இன்னொன்றும் இருக்கிறது இதையெல்லாம் காட்டிலும் பெரிது அது.ஒரு கனவு. ஒரே ஒரு கனவு ஓராயிரம் முறை நினைவில் வந்து நிற்கும் அந்த கனவை வெளியே சொல்லவே முடியாது. அப்படியான கனவு. அது வர தொடங்கிய நாள் முதல் அவன் அவனாக இல்லை.

மருத்துவரை நாடி கவலையை சொன்னால் அவர் அலட்டாமல் இதெல்லாம் ‘நேச்சர் கால்’ மிஸ்டர் அருண் பெருசு செய்யாதீங்க, கல்யாணம் செய்துக்கங்க எல்லாம் சரியாகும் என்றார்.கேட்டதும் கொதித்துப்போனான் அவன். கடந்த இரண்டரை வருடமாக பாட்டியிடம் பாடுபடுவது பத்தாதா இதில் கல்யாணம் செய்து கமிட்மென்ட் வாழ்க்கையில் நுழைந்து அவஸ்தைப்பட வேண்டுமா? பால்கியோ, ‘மச்சான் பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டிருந்தா உனக்கு எதுவுமே தப்பா,தொந்தரவாதான் தெரியும். சிரிச்ச முகமா அணுகி பார் எல்லாம் பிடிக்கும்’ என அட்வைஸ் செய்தான்.இவன் யார் இவன் அவன் அவஸ்தை புரியாமல் அட்வைஸ் மழை பொழிபவன், நிம்மதியாக தூங்க கூட முடியல, எவனுக்கு புரியுது இது? அவன் புலம்பலாகிப்போனது.

பால்கி பொறுத்தவரை அருணுக்கு அனிமேஷனில்தான் இஷ்டம், பாட்டி சொல்லும் வேலை செய்ய பிடிக்கவில்லை அதனால்தான் புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அருணின் உள்மனசு அவஸ்தைகளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அருணால் அதை வெளிப்படையாகவும் சொல்ல முடியவில்லை.

என்ன நடந்தாலும் என்ன செய்தாலும் மச்சான் கூட இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பால்கிக்கு இருக்கிறது, அதேபோல பாட்டி அவர்கள் நன்மைக்காகதான் செய்கிறார் என்கிற எண்ணமும் அவனுக்கு இருக்கிறது.

அவன் அண்ணன்கள் போல பால்கியும் வேலை, குடும்பம் என்று செட்டில் ஆகி விடுவான் என்றாலும் அருணுடன் ஜாலியாக சுற்றுவதை பழகியிருக்கிறான்.அவன் திருந்த வேண்டுமென்றால் அவன் மச்சாணும் திருந்தவேண்டுமல்லவா.

தங்கை அமிர்தாவிடம் கேட்டு சிறந்த மனநல மருத்துவர் யாரையேனும் அணுகலாம் என்று நினைத்த அருண் சென்னையில் ஒருவரை கண்டுகொண்டு அவரிடம் பேசினான்.

அவன் இன்னார் பேரன், இன்னார் சொந்தம் என எந்த அடையாளமும் தெரியாத மருத்துவரிடம் கூச்சப்படாமல் அருண் அவன் மனதில் உள்ள உணர்வுகளை, பயத்தை வெளியே சொல்ல, மனநல மருத்துவர் 'நீங்க தூக்கமில்லாம இருக்கீங்க அதனால தூக்க மாத்திரை எழுதிக்கொடுக்கிறேன். பதட்டம் குறைந்ததும் அடுத்தமுறை வாங்க' என்று அவனுக்கு ஆலோசனை சொன்னார்.

தூக்க மாத்திரை உதவியில் அருண் ஓரளவுக்கு தூங்கினாலும் அந்த கனவு தொந்தரவு கொடுத்துக்கொண்டேதான் இருந்தது.

இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்காக அவர் மருத்துவமனையில் காத்திருந்தான். நர்ஸ் நெக்ஸ்ட் போங்க சார் சொல்ல எழுந்தவன் மீது எதோ மோத,நின்றான். காளானுக்கு கை கால் முளைத்தது போல இருந்தவள் பெண் ஒருத்தி அவன் மீது இடித்திருந்தாள். அணைத்திருந்த அவள் அவன் நெஞ்சு வரை தான் இருந்தாள். சாரி என்று இவன் சொல்ல, அணைப்பில் இருந்து விடுபட்டு தலையை ஆட்டி கீழே விழுந்ததை சேகரித்து கொண்டு நகர்ந்து விட்டாள் பெண்.

உள்ளே சென்று டாக்டர் "எப்படி இருக்கீங்க அருண்" கேட்க இடித்த க்ஷணம் தலை மேல் தூக்கி கண்கள் பார்த்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தாள். மனமோ அம்முகத்தை கையில் ஏந்தி கண் பார்த்து முத்தம் கொடுக்காமல் போனியே அருண் கேட்டது. விதுவிதுர்த்து போனான். இது என்ன இன்னொரு புது வியாதி! இல்லை மருத்துவர் சொல்வதுபோல வயதிற்கு ஏற்ற உடல் தேவைக்கான தேடலா?

மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி, மேற்கொண்டு ட்ரீட்மெண்ட் ஆலோசனை வாங்கிவந்தான்.
 

swwee

Active member
Wonderland writer
3

அடர்வனம் அதனுள் முப்பத்து முக்கோடி ஜீவராசிகளுக்கு இடம் அளித்து, உணவளித்து சாந்தமாக இருக்கும் வேளை, தலைவன் அவன் கண்ணுக்கு அழகிய செந்தாமரைகளும்,அல்லி பூக்களும் பூத்து குலுங்கும் குளம் தென்பட்டது. மீன்கள் துள்ளி குதிக்கும் கண்ணுக்கு இனிய காட்சியில் அழகிய குளத்திலிருந்து காயங்கள் இருந்தும்,குருதி வழிந்தும், மேனி மினுமினுக்க, கார் குழல் கழுத்தில் ஓட்டி மேனியின் ஒரு பாதியை மறைதிருக்க எழுந்த வந்து பெண் அவனை பார்த்ததும் புலி பதுங்குவது போல பதுங்கி அவன் மீது பாய்ந்து தரையில் தள்ளி அவன் மார் மீது அமர்ந்தாள். கூர் விழிகள் யாரடா நீ என்று கேட்க பதில் சொல்லாமல் பெண் அவள் அழகில் உணர்வற்று போனான். வதனா,வதனா இரைச்சலாக அழைத்த ஆண்ட்ரு, தளபதி அவரை ஒன்றும் செய்துவிடாதே மங்கையே! என்றது. பேராசைக்காரன் மந்திரி அவன் எண்ணம் சாதித்து கொள்ள வீரனை அனுப்பியிருக்கிறான். பேரழகி அவனை பார்த்து ஆண்ட்ரூ கூற்று உண்மையா பார்வை பார்த்து நேர்த்தியாக புருவம் உயர்த்தி கேட்க, நாட்டை ஆள போகும் இளவரசி என கண்டுகொண்டவன், நேர் பார்வையை தழைத்துகொண்டான்.ஆண்ட்ருவை பார்த்தவள் என்னை யாராலும் அப்பிரதேசம் அழைத்து போகமுடியாது, கனவு காணாமல் திரும்பி போகலாம்.கிரேக்க நாகரீகமென மாக்கியவல்லி செய்யும் கூத்துக்கு துணை போகமட்டாள் இவள், கோபமாக மொழிந்தவள் பக்கம் இருந்த ஆடை எடுத்து அழகாய் உடுத்தி கம்பீர நடை நடந்தாள். தேவலோக எழில்மேனி மங்கையின் மேல் வசீகரிப்பில் மானுடன் அவன்,குழைந்து உருகி போனான் காதல் தன்னில்.

நேரம் போவது தெரியாமல் பால்கியும் அருணும் வேலை செய்துகொண்டே இருக்க, வரிசையாக கையெழுத்திட்டு வந்தவன் அன்றைய தேதி கவனித்தான் பால்கி. “மச்சான் அடுத்த வாரம் உனக்கு பிறந்த நாள் வருதுடா” உற்சாகமாக கூவினான்.

எப்போதும் பாட்டி மரகதம் அவன் பிறந்தநாளுக்கு அவன் ஆசைப்பட்டு கேட்பதை வாங்கி கொடுப்பார்.போன முறை கூட அருணுக்கு மினி கூப்பர் கார் வாங்கிக்கொடுத்தாள்.அடுத்த பர்த்டேக்கு பாட்டியிடம் 20 லட்ச ரூபாய் வாங்கி அனிமேஷன் கம்பெனி தொடங்கவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தான்.அதை இப்போது பால்கி நினைவுபடுத்தவும் முடிவு செய்துகொண்டான்.இதைப்பற்றி பாட்டியிடம் அவன் கண்டிப்பாக பேசப் போகிறான்.

அவன் எதிர்பார்த்தது போலவே பாட்டியும் கண்ணா உன் பர்த்டே வருது இந்த வாட்டி என்ன வேணும் உனக்கு சொல்லு என்று கேட்டார்.20 லட்ச ரூபாய் கொடுங்க நான் தனியா ஒரு அனிமேஷன் கம்பெனி ஒன்னு தொடங்கணும். தைரியமாய் கேட்டுவிட்டான்.

எப்போதும்போல விலை உயர்ந்த கார் கேட்பான் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அவன் கேட்ட பணத்தை பற்றியும் அவன் தொடங்க நினைக்கும் கம்பெனி பற்றியும் பேச எரிச்சல் ஆகிப்போனது. ஆர்கானிக் உணவுகளுக்கு மார்கெட் இருக்கிறதென ஒரு நாள் உணவின் போது ஆர்வமாக பேசினான்.அதை நினைவில் கொண்டு அவனுக்கென்று தனியாக எஸ்டேட் வாங்க பேசியிருக்கிறார் அவர். அதெல்லாம் பேரன் கண்ணுக்குத் தெரியவில்லை தனியாக தொழில் தொடங்குகிறானாம், அதுவும் தெரியாத தொழில். அவரை பொறுத்தவரை இந்த கம்ப்யூட்டர் சேர்ந்த தொழில் எல்லாம் அதிக முதல் போட்டு கொஞ்சமே இலாபம் கொடுப்பது.அதிலும் வீடியோ கேம்ஸ் சின்ன பிள்ளைகளை விளையாட்டு என்று சொல்லிகொண்டு சோம்பேறித்தனம் வளர்க்கும் விளையாட்டு. அவர் பேரன் அப்படி ஒரு தொழில் செய்வதா?

இத்தனைக்கும் இன்னொரு புது யூனிட் சகல வசதிகள் நிறைந்து திருப்பூர் ரோட்டில் கட்டி முடிக்கப்பட்டு காத்திருக்கிறது. அதன் போதாத காலம் சில பிரச்சனைகளில் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது அந்த எரிச்சல் நினைவுக்கு வர கோபத்தில் ‘இத்தனை உனக்காக நாங்கள் செய்தும் அது என்ன எனக்கு பிடிக்காததே செய்ய நினைக்கிறாய்’ கேட்டுவிட்டார்.

அருணுக்கு கோபம் வந்துவிட்டது உங்களுக்கு பேரன் என்றால் நான் அதெல்லாம் செய்யக் கூடாதா? நான் தனிமனிதன் தானே! எனக்கும் ஆசை இருக்கும்தானே! உங்கள் பேரன் உங்களை போல நிறுவனம் தொடங்கி ஜெய்பேன் என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை. அப்படியெல்லாம் கையாலாகாதவன் இல்லை இந்த அருண். முன் கோபத்தை காட்டிவிட்டு போனான்.

அதன்பின் 3 நாட்களாய் வீடு வெறுமையாக கிடக்கிறது. குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி நிறைந்திருந்தது. பாட்டியின் எண்ணம் பேரனுக்கு புரியவில்லை, பேரனின் எண்ணம் பாட்டியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வெவ்வேறு நிலையில் இருந்துகொண்டு யோசிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் தப்பென நிரூபணம் செய்வதில் முனைப்புடன் காத்திருந்தனர்.

பாட்டிக்காவது நம்ம பேரன் என்கிற பாசம் இருக்கிறது,பேரனோ பாட்டியை எதிரியாக காண தொடங்கிவிட்டான். பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொள்வதை விட பேசாமல் போவது சிறந்தது என்கிற முடிவில் இருந்தனர் இருவரும்.

நாட்கள் நகர்ந்தது,அடுத்த நாள் பிறந்தநாள் என்றிருக்க பால்கிக்கு அழைத்தார் பாட்டி.பேரன்களிடம் சமாதானம் பேசினர். “என்னதான் வேணும் இப்போ?” கோபம் குறையாமல் இருந்த அருண் "இத்தனை நாள் உங்க கம்பெனிய பார்த்துக்கிட்டோம்தானே அதுக்கு சம்பளமா 10 லட்ச ரூபாய் கொடுங்க"கேட்டான்.

கொதித்துப் போனார் மரகதம். “இது உன் சொத்து, இதிலிருந்து என்ன சம்பளம் எதிர்பார்க்கிற, இது எல்லாமே உனக்கு தானே” வாதிட, “இல்ல பாட்டி இது உங்க சம்பாதியம் இது எனக்கு வேண்டாம். நானா உருவாக்குற கம்பெனி, அதிலிருந்து வர்ற காசு எனக்கு போதும்” என்றான். அவன் பேசுவது இன்னமும் கோபம் கொடுக்க ஏற்கனவே அவனிடம் பேச வேண்டிய விஷயத்தை மாற்றி அவனுக்கு ஒரு சேலஞ்ச் வைத்தார் பாட்டி.

திருப்பூர் ரோட்டில் இருக்கும் புது யூனிட் திறந்து நல்லபடியாக ஓடி, அதில் வரும் லாபம் மொத்தமும் அவனே எடுத்துக்கொள்ளலாம் என்றார். இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்துகொண்ட பேரன் “அதெல்லாம் முடியாது நீங்க பத்து லட்ச ரூபா கொடுங்க மேற்கொண்டு பத்து லட்ச ரூபா அதுல இருந்து நான் எடுத்துக்குறேன்” என்றான்.

உடல் முழுக்க நிறைந்திருந்த கோபத்திலும் பேரனின் புத்திசாலித்தனத்தை நினைத்து அதிலும் பெருமைதான் கொண்டார் மரகதம்.

“சரி அப்படியே ஆகட்டும்” என்றார். இப்போது பேரன்கள் இருவரும் முகத்திலும் மகிழ்ச்சி தென்பட்டது. அவரவர் வேலைக்கு திரும்ப எத்தனிக்கும் தருணம் மெதுவாய் பாட்டி ‘நாளை முதல் அந்த யூனிட் தொடங்க உங்களுக்கு உதவியாக ஒரு பெண் வருவாள்’ என்றார்.

அருணும் பால்கியும் அதிர்ந்து பார்த்தனர். மேற்கொண்டு அவளை பற்றிய தகவல் எதுவும் பேசாத பாட்டி “அவள் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு” சொல்லிவிட்டு கம்பீரமாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார்.

அருண் கூச்சலிட்டான். “அவ்வளவு நம்பிக்கை எங்க மேல இல்லைன்னா எதுக்கு பெண்ணை அனுப்புறீங்க”

பால்கி “சும்மா இருடா” அதட்டினான்

“கிழவி நம்மள பிரிக்க பாக்குது மச்சான்… அதான் ஏதோ பொண்ணை வேலைக்கு எடுத்துருக்காங்க. விடகூடாது மச்சான் விடகூடாது” போருக்கு தயாராவது போல சீறினான்.

“டேய்..! விடு பாட்டி நம்ம நல்லதுக்கு தான் செய்வாங்க. நான் காலைல வரேன். நீ சண்டைபோடாமல் சாப்பிட்டு தூங்கு.வரது வரட்டும்,பார்த்துக்கலாம்” தேற்றி கிளம்பிவிட்டான் பால்கி.

முன்தினம் மாலை எப்போதும் போல மதியம் ரெஸ்ட் எடுப்பவரை தொந்திரவு செய்தது கைபேசி அழைப்பு. அழைப்பது வக்கீல் விசுவநாதன். எடுத்து பேசினார் மரகதம்.

“அம்மா, விச்சு பேசுறேன். நல்லாயிருக்கீங்களா”
“சொல்லுங்க தம்பி”
“ஒரு உதவி கேட்டு கூப்பிட்டிருக்கேன்”
“நீ ஹாஸ்பத்ரியில இருக்கேன்னு சொன்னாங்களே தம்பி”
“ஆமாங்கமா. அதான் உங்க கிட்ட உதவி கேட்க கூப்பிட்டேன்”
“சொல்லுப்பா. செய்றேன்”
மரகதம் அப்படி சொல்லியதும் மடை திறந்த அணை போல பேசினார் விச்சு.

தெரிந்த பெண் இங்கிலாந்திலிருந்து வந்திருக்கிறாள்.அவள் அப்பாவுக்கு உலகளவில் பிஸ்னஸ்.அதில் ஏதோ பிரச்சனை ஒரு சதி விபத்தில் அவர் இறந்துவிட்டார். அவருடன் அதே காரில் பயணித்த அந்த பெண் உயிர் பிழைத்திருந்தாலும், தொண்டையில் பிரச்சனையாகி, மனதளவிலும் பாதித்து குரல் பறி போனது.

விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தால்,அவள் அம்மா விச்சு அட்ரஸ் கொடுத்து அங்கே போய்விடு என்று அனுப்பிவிட்டு விட்டார்.

இந்தியா வந்த பெண்ணோ மன அமைதி இன்றி தவிக்கிறாள். பெண்ணுக்கு இன்னமும் ஆபத்து தொடர்கிறது. எந்த நேரமும் அவளுக்கு பாதுகாப்பு முக்கியம். உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். திறமையானவள்,நன்றாக உழைப்பவளும் கூட... நிலமை எடுத்து சொல்லி மரகதம் பதில் கேட்டு நின்றார்.

மரகதம் யோசித்தார். “சரியப்பா அவளை என்னை வந்து பார்க்க சொல்லு” சொல்லி அழைப்பை துண்டித்தார்.

அன்று மத்தியம் மரகதத்தை சந்திக்க வந்த பெண்ணை பார்த்த அவரால் நம்பவே முடியவில்லை, இந்த பெண்ணால் பேச முடியாதா? கையில் சிறு கவர் எடுத்து வந்தவள் அவரிடம் நீட்டினாள்.

வெளுத்த ஜீன்ஸ், கருப்பு டி-ஷர்ட் காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ. சின்ன பிள்ளை போல இருந்த பெண் பெயர் ஆராதனா. ஆரு என்று அழைக்கலாம், படித்திருப்பது ஃபேஷன் டிசைன் தொடர்ந்து எம்பி. ஏ ஏற்கனவே நிறுவனத்தை கையாண்ட அனுபவம் இருக்கிறது. தமிழ் பேச தெரிந்தாலும் படிக்க தெரியாது. அவள் கையில் இருக்கும் ஃபோனில் டைப் செய்தால் அவளுக்கு பதிலாக அது பேசும், அதனால் அவளால் வேலை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்று அவளால் முடிந்த வரையில் செய்கையிலும் வாய்ஸ் ஆப்'பிலும் பேச மரகதம் அவள் தன்னம்பிக்கை கண்டு சொக்கிபோனார்.

பேத்தி போல தெரியும் பெண்ணை ரொம்பவும் பிடித்து போக, இதோ உனக்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறேன் கண்ணே என்று அத்தனை நாள் சும்மா நிற்கும் பேரனின் காரை அவள் பாதுகாப்பிற்கு என்று கொடுத்தும் விட்டார். உயர்வகை கார், ரோட்டில் விபத்து என்றாலும் ஏர் பேக் விரிந்து ஓட்டுபவரை காப்பாற்றும்.அதிலும் பேரன் அவன் தேவைக்கு நிறைய மாற்றியமைத்திருக்கிறான்.அத்தனை செலவு செய்து ஓட்டாமல் இருந்தால் எப்படி? இந்த பெண் ஓட்டட்டும் நல்ல எண்ணத்தில்கொடுத்துவிட்டார்.

நல்லவேளை அதை இன்னுமும் பேரன்கள் கண்டு பிடிக்கவில்லை.

அந்த பிறந்தநாள் வித்தியாசமாக இருந்தது அருணுக்கு. உற்சாக துள்ளல் குறைந்திருந்தது. கழுத இன்னமும் என்ன பர்த்டே வேண்டி கிடக்கு என்கிற எண்ணம் வந்திருந்தது. பார்ட்டி போகலாம், ஊர் சுற்றலாம் என்கிற எண்ணம் சுத்தமாக வரவில்லை. அவர்கள் டெலிவரி செய்ய வேண்டியது நேரத்திற்கு சரியாக சென்றதா, இவர்களுக்கு வரவேண்டிய பணம் வந்ததா எண்ணம் மட்டுமே மனதில் அதிகம் இருந்தது.

நண்பர்கள் வாழ்த்து அழைப்பு குறைந்திருந்தது. கடமையாக பேங்க்’காரான் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தான். இதையெல்லாம் எப்போதும் கவனிக்காதவன் இம்முறை கவனித்தான். சோஷியல் மீடியாவில் வாழ்த்தியிருந்த நண்பர்களின் வேலை,அது எங்கே செய்கிறார்கள் என்று கவனித்தான். அப்பா அம்மா தங்கை வீடியோ-காலில் அழைத்து வாழ்த்த, நன்றி சொன்னான்.அம்மா அவனால் முடிந்தால் பாட்டியுடன் சென்று அவர்கள் பங்குதாரராக இருக்கும் டிரஸ்ட் நடத்தும் காப்பகம் ப்ரேயரில் கலந்துக்க சொன்னாள். அவன் பர்த்டே என்றால் அவனுக்காக அவர் போய் கலந்துகொள்வார். இம்முறை அவனை போக சொன்னார்.

எப்போதும்போல காலை உற்சாகமாக வந்து கட்டிக்கொள்ளும் பால்கி மனப்பூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இவனும் உளமார்ந்த மகிழ்ச்சியுடன் தேங்க்ஸ் மச்சான் என்றான்.

பாட்டியும் தன் பங்குக்கு கிப்ட் கொடுக்க வேண்டுமல்லவா 10 லட்ச ரூபாய் செக்கை நீட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராண்டி என்றார். கோபம் என்றாலும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான். “தீர்காயுசுடன் இருடா பேராண்டி” வாழ்த்து சொன்னவர் அடுத்தடுத்து அவர்கள் நிறுவனத்தில் நடக்க வேண்டியவைகளை பற்றி பேச தொடங்கிவிட்டார்.

அன்றைய காப்பகத்தின் காலை ப்ரேயர்க்கு பாட்டியுடன் சென்றான். மனமார்ந்த வாழ்த்துக்கள் கிடைக்க,பால்கியை நீ போய் புது யூனிட் பார் என அனுப்பிவிட்டு அவன் பார்க்கவேண்டிய வேலையெல்லாம் பார்த்துவிட்டு புது யூனிட்டுக்கு சென்றான்.

அருணுடன் காப்பகத்தில் காலை டிபன் முடித்ததும் புது யூனிட் வந்தவன், ஆராதனாவை கண்டதும் இது என்ன ஸ்கூல் பிள்ளை போல இருக்கிறாள் பெண் என்றே நினைத்தான். வட்டமுகம், அணிந்திருந்தத ஜீன்ஸும் அதற்கேற்றார் போல ஷர்ட்டும் அல்லாத ட்ஷிர்ட்டும் அல்லாத மேல் அங்கி. காலில் ஸ்போர்ட் ஷு,அது அவளை இன்னமும் சின்ன பிள்ளையாக காட்டியது. பாஸ்கெட் பால் விளையாட கூப்பிட்டு போகலாம், கூடை எட்டாமல் போகும்.இவர்கள் ஈசியாக ஜெய்த்துவிடுவார்கள் எண்ணிக்கொண்டான்.

அவள் அறிமுகம் செய்துகொண்டு தன்னை பற்றி தெரிவித்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனான். அவளுக்கு எந்த வகையில் உதவி என்றாலும் அவன் செய்வதாக சொல்ல, ஆருவுக்கு உளமார்ந்த மகிழ்ச்சி என்றால் அவனுக்கு நாம் திமிர்பிடித்த பெண்ணென எண்ணி கற்பனை செய்ததென்ன நிகழ்வதென்ன பிரமிப்பு.

பால்கிக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் திருமணம் ஆகி குடும்பமாக வாழ, செல்ல பிள்ளை பால்கி அவர்கள் வீட்டை பொறுத்தவரை ஆட்டம் ஆடும் சேட்டை செய்யும் மகன்தான். மரகதம்தான் செல்லம் கொடுத்து கெடுக்கிறார் என்பது மருமகன் கூற்று, அதனாலேயே அவனையும் மாற்றி காட்டுகிறேன் என்று அருனுடன் சேர்ந்து பாட்டி அவனையும் வறுத்தெடுக்கிறார்.

அருணுடன் சேர்ந்தால் மட்டுமே சேட்டை செய்யும் பிள்ளை இவன். சிறுவயதில் இருந்தே அருணையும் அவனையும் பிரித்து வைத்துப் பார்த்து விட்டார்கள், இரண்டு நாட்களுக்கு மேல் இரண்டு பேரும் ஏதேனும் செய்து ஒன்றாகி விடுகிறார்கள். இதோ இப்போது புதிதாக பாட்டி ஒரு முயற்சி எடுத்திருக்கிறார் இந்த புது யூனிட் பால்கி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதன் லாபம் அருணுக்கு கொடுப்பேன் என்றிருக்கிறார். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்.
 

swwee

Active member
Wonderland writer
4


பெண் அவள் ஆடை கிழிபட்ட இடங்களில் தாவர வேர்களை கொண்டு நெய்திருந்தாள். காயங்களுக்கு பச்சிலை பத்து செய்து கட்டிகொண்டாள். வீர மங்கை இடையில் வாள் கூடவே சுழற்றி அடிக்கும் எரிவளை-தகடு வைத்திருந்தாள். புலி போல பதுங்கி நடந்தாள்.பறவைகள் சூழ்ந்த இடத்தில் அவைகளை போல சத்தமிட்டு அழைத்து பேசினாள். மிருங்கங்களிடம் கருணை காட்டினாள்.அவனிடம் கோபம் காட்டினாள். பேரிளம் அரசி! திரும்புவோம் சாம்ராஜ்யம்.அவன் கேட்க, என்னோடு மல்யுத்தம் செய்கிறாயா? நீ வென்றால் வருகிறேன் கிண்டல் பேசினாள் பெண். மதி மயங்கி காதல் கொண்ட உள்ளமோ அவள் மேனி தீண்ட ஆசை கொண்டது.மக்கள் நலம் விரும்பும் தளபதி அறிவோ இளவரசி அவள்,கண் தழைத்து பணிந்து போ என்றது. ஆண் மனம் அறியாத மங்கை ஒயில் நடை நடக்க, சுற்றி இருக்கும் பூக்கள் வதன சுந்தர இளவரசி வாழ்க என்றது அவன் உள்ளம் போலே.
அணிகலன் யாவும் இல்லாமலும் பேரழகி பளிங்கு போல மேனியின் பளபளப்புக்கு காரணம் என்னவோ கேட்டதாம் ரீங்கார வாண்டு; கேளடி தேன்சிட்டே பெண் அவள் அற்புத எழில் அத்துவமூர்த்தியின் சிறந்த படைப்பெனினும் நன்நெஞ்ச பெண்ணவள் மனசஞ்சலம் கொடியது. மதிமயங்கிய மாக்கியவல்லி நாட்டை விற்றுவிட்டானே பாவி,அவன் சூழ்ச்சியை வீரம் மட்டும்கொண்டு வெல்ல இயலாது.படைத்தோன் துணையும் வேண்டுமாம்.

சுலபமாக தன்னை ஏற்றுக்கொண்ட பால்கியிடம் சிறிதும் சஞ்சலமில்லா தோழமை பிறந்தது ஆராதனாவிற்கு.அவளை போலவே சும்மா இருத்தல் பிடிக்காமல் என்னவெல்லாம் செய்யலாம் என பேச்சை அவன் தொடக்க, அடுத்தடுத்த வேலை பட்டியல் இட்டனர் ஆருவும் பால்கியும்.அதில் முக்கியமான பணி,முதல் பணி மின்சார இணைப்பு கொடுப்பது.அதன்பின்தான் இயந்திரங்களை அமைத்து பணிக்கு ஆள் எடுத்து ஓட்ட முடியும்.

மின்சார இணைவு பற்றி பேசுகிறேன் என்று கைபேசியில் பேசபோன பால்கியை காணவில்லை,எங்கே போனானோ நினைத்தவள் அடுத்து என்ன செய்யலாம், அடுத்த கட்ட பணி என்னவாக இருக்க முடியும் என்பதை பட்டியலிட்டாள். நேரம் போனது.

புது யூனிட்டின் வாசல் வந்து இறங்கிய அருண் கண்களில்பட்டது மினி-கூப்பர் கார். எல்லா காரும் நம்ம கார் ஆகிடுமா நினைத்தவன், ஆபிஸ் அறை மேல் தளத்தில் உள்ளதை கண்டு வேகவேகமாக படி ஏறிசென்றான்.

இன்னமும் பால்கியை காணவில்லையே கதவு திறந்து காலடி எடுத்துவைத்தவள் சட்டென அதன் வாசற்படி தடுத்து கீழே விழ போனாள், பயத்தில் கண்களை மூடிக்கொண்டவள், போச்சு இன்னைக்கு நம்ம மண்ட காலி என நினைக்க; திம்மென்ற நெஞ்சின் மீது மோதி கண் திறந்து பார்க்கும் சமயம் அவன் இதழ்.அவள் இதழை தீண்டியது.வெறும் தீண்டல் என்று நினைத்த தருணம் அவள் அதரத்தை கவ்வியவன் ஆழ் முத்தம் பதித்தான்.

நிகழ்ந்ததை கிரகித்து சுயநினைவு வந்தும் மயக்கம் சூழ்ந்திருந்தது அவளுள். இந்நேரம் இந்த ஷணம் நிம்மதி வாழ்க்கை முழுவதும் வேண்டுவது போல இருந்தது.

வேகமாக மாடி ஏறி வந்தவன் மீது பாய்ந்து வந்தவளை கண்டவணுக்கு அதிர்ச்சியில் பேச்சு எழவில்லை. அவன் மீது விழுந்தவள் பளீச் முகமும் செவ்விதழும் அவன் கண்ணுக்கு தெரிய, மைக்ரோ செகண்டில் எழுந்த ஆசை அவனுக்கே ஆச்சரியம்தான். அதை அடுத்த கணமே செயல்படுத்தியதில் பேரதிர்ச்சி பிரளயம் அவனுக்குள்.

நீண்ட நெடு அமைதியை எழுந்து நின்று தன்னை சமநிலை செய்துகொண்டு ‘சாரி’ சொல்லி களைத்தான் அருண். அவனை போல பதற்றத்தை மறைக்க முடியாமல் வெளிப்படையாக நடுங்கும் பெண் அந்த படிகளிலே அமர அவளை உலுக்கி ‘ஆர் யூ ஆல் ரைட்,ஸ்பீக் அப்’ சொல்லிகொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு வந்த பால்கி “என்னாச்சு, ஆரு என்ன இப்படி உட்கார்ந்திருக்கே" பதறினான். "பச்...ஸ்டெப்ல கால் தடுக்கி விழுந்துட்டாங்க. அந்த அதிர்ச்சி இன்னும் போகல போல”தகவல் சொன்னவன் “ஆமா நீ எங்கடா போன " எரிச்சலாக கேட்டான்.

பால்கி,”ஐயோ மச்சி உன் கைமுட்டில இரத்தம் வருதேடா” அதிகமாக பதறினான்
அருண் “இருடா இவங்க இன்னும் நார்மல் ஆகல, ஹலோ, ஆர் யூ ஓகே. எதாச்சும் பேசுங்க”அழுத்தமாக அவளை உலுக்க

“ஆரூ எழுந்துறீங்க. உள்ள வந்து உட்காருங்க. டேய் நீயும் வா, உள்ள வந்து தண்ணி குடி, நான் வாட்ச்மேனை ஜுஸ் வாங்கிட்டு வர சொல்றேன்” நிலமை சீராக்க தன்னால் முடிந்தத செய்து ஆராதனாவை உள்ளே கூட்டி வந்து உட்கார வைத்தான் பால்கி.

சொல்வதை செய்தாலும் அவள் பார்வை எதையோ வெறித்து பார்த்து யோசனையில் நின்றது. “மச்சி ஆராதனா....” பால்கி தொடங்க சட்டென நினைவுக்கு வந்தவள் அவனை கைபிடித்து நிறுத்தி ‘நான் சொல்கிறேன்’ செய்கையில் சொல்லி அருணுக்கு எடுத்து வந்த லெட்டர் கொடுத்தாள். பால்கியிடமும் அப்படி லெட்டர் கொடுத்து தான் அறிமுகம் செய்திருந்தாள்.

“பிரிச்சு படி மச்சான்” பால்கி ஊக்க பிரித்துபார்த்தான்.

கவர் திறந்து படிக்க தொடங்கினான் அருண்.பெயர் ஆராதனா, ஆரு என்று அழைக்கலாம். இது என்ன வேலைக்கு வரவங்க இப்போல்லாம் ரெஸ்யுமில் செல்ல பெயர் எல்லாம் போட தொடங்கிவிட்டார்களா எண்ணி கொண்டவன் மேற்கொண்டு பார்த்தான். பிரிட்டிஷ் இந்தியன் என்று இருந்தது. அதாவது மேடம் இங்கிலாந்து வாழ் இந்திய பெண். அது சரி! படிப்பு எம்.பி.ஏ, படிப்பு கிடக்குது கழுத, அவங்களும் தான் எம்.பி.ஏ அதனால் என்ன?
அப்பா சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டார், அம்மா ரிச்மண்ட்டில் இருக்கிறார். இந்தியாவில் வக்கீல் விஸ்வநாதனை தெரியும். தமிழ் புரிந்துகொள்வாள், படிக்க தெரியாது.அவள் பதிமூன்று வயது வரை அவர்கள் டெல்லியில் இருந்தார்களாம். அதனால் ஹிந்தி தெரியும். கோபம் அதிகம் வரும்,கார் ஓட்ட பிடிக்கும், கோயம்புத்தூர் மாநகரம் மிகவும் பிடித்திருக்கிறது.அவளுக்கென்று நகரத்திற்கு வெளியே விச்சு அங்கிள் சகல பாதுகாப்பு வசதியுடன் வீடு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.மரகதம் பாட்டி அவள் போக்குவரத்திற்கு கார் கொடுத்திருக்கிறார்.அவளால் முடிந்த பெஸ்ட் முயற்சி செய்து இந்த யூனிட் தொடங்க உழைக்கலாம் என்றிருந்த லெட்டரில் அடுத்து வந்த எழுத்துக்கள் சிவப்பு மையில் இருந்தது.

ஆண்கள் இருவரும் ஒரே மாதிரி வாய் பிளந்தது அவள் முகத்தை அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம் கலந்து நோக்க தவறவில்லை. அவள் ஒற்றை புருவம் உயர்த்தி தலை ஆட்டி ஆமாம் நீங்கள் படித்தது உண்மையே! எனக்கு வாய் பேச வராது, அதாவது சத்தம் எழுப்ப கூட முடியாது என்று செய்கையில் சொன்னாள்.

மேற்கொண்டு படித்ததில் அவள் பேசுவதை ஃபோனில் டைப் செய்வாள், அது அவளுக்காக பேசும் என்றும் இருந்தது. அதை படித்து அவள் முகம் பார்க்க அவள் கைபேசி எடுத்து எஸ் என்று வேகமாக டைப் செய்ய ‘எஸ்’என பெண் குரல் கேட்டது.ஆயிரம் கேள்வி சுழல் அவன் மனதில், குழப்பம் முகத்திலும் தெரிய சடசடவென டைப் அடித்தாள். திரும்பவும் தமிழ் பேசும் பெண் குரல் கேட்டது. இப்போது “என்னால் சமாளிக்க முடியும், நம்பிக்கை இருக்கிறது. என்னால் எந்த தொந்திரவு உங்களுக்கு இருக்காது” என்றது இயந்திர குரல்.

பால்கி முகம் நட்பாக புன்னகையுடன் மாற, திரும்ப லெட்டர் பார்த்தவன் அருண் முகம் மட்டும் இப்போது கோபத்தில் சிவந்தது.

அவள் நாக்கை வெளியே நீட்டி கண்களை சுருக்கி மன்னிப்பை கேட்க புரியாமல் பார்த்தான் பால்கி. அர்ஜுன் கோபம் கலந்த வருத்தத்தில் கையலாகாததனத்துடன் சிறு பிள்ளை போல "ஏய், ஏய், அது என் ஃபேவரட் கார்.நானே அதிகமா ஓட்டினது கிடையாது. அந்த கிழவிய....." பேசிக்கொண்டே வெளியே ஓடினான்.

அவள் “சாரி, இதவிட நல்ல கார், லேட்டஸ்ட் வெர்ஷன், ஆறு மாதம் கழிச்சு நான் வாங்கி தரேன் ப்ளீஸ் கொஞ்ச நாள்” கெஞ்சினாள். அவனோ அந்த நாளுக்கு போதும் போதுமென ஏற்கனவே நிறைய கண்டுவிட்ட சோர்வில் “புது கார் வாங்கி தர” கோபமாக ஆணையாக சொல்லிவிட்டு ஆபிஸ் அறைக்கு சென்று விட்டான்.

அவன் பின்னாலேயே பால்கி சமாதானம் செய்ய போக,தனியாக நின்றவள் மனதில் தனிமை உணர்வு குடிகொண்டது.

கை காயம் வலிக்க தண்ணீர் குடித்துவிட்டு “நான் ஹாஸ்பிடல் போறேன். ஜஸ்ட் சின்ன காயம் தான், ஷோல்டர் வலி இருக்கு,பாட்டிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத மச்சான்” அவசரமாக சொன்னவன் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த ஏரியா விட்டே வெளியே வந்திருந்தான்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண் மூடி ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டான். அவனா? அவனா ஒரு பெண்ணை முத்தம் கொடுத்தான், அதுவும் வாய் பேசவராத பெண்..! கேள்வி எழ அவன் மீதே அவனுக்கு கோபமும் எழுந்தது.

பாட்டி எங்கே அவன் குடிகாரன் ஆகிவிடுவானோ என்று பயப்படுவது உண்டு.சிறுவயதிருந்தே ஒழுக்கமாக வளர்ந்தவன்,வீட்டைவிட்டு வெளியே போனதும் பீர் குடித்து பார்த்தது அதில் கிடைக்கும் த்ரில் அனுபவிக்க மட்டுமே. செய்யாதே என்று கட்டுப்படுத்தி வைத்து செய்ய சான்ஸ் கிடைக்கும் சமயம் மனதில் உண்டாகும் அல்ப ஆசை அது.ஒன்றிரண்டு முறை குடித்து பார்த்ததுமே சலித்துவிட்டது. இயல்பாக உள்ளுக்குள் வளர்ந்திருந்த நெறி தவறா பண்பு இது தப்பென உரைக்க குடிப்பதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டான். பிறரை ஏமாற்றுவது, பொய் சொல்வது, துரோகம் செய்வது எல்லாம் தப்பு என்று தெரிந்திருந்தவனுக்கு பெண்ணிடம் தவறாக அவள் அனுமதியின்றி அவளிடம் முறை தவறி நடப்பது தவறு என்ற நெறி தெரிந்தும் முத்தம் கொடுத்து அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் வந்து விட்டானே.

அது ஜஸ்ட் விபத்து என்று அவனால் சும்மா கூட காரணம் சொல்ல முடியவில்லை. நடந்ததை ஸ்லோ மோஷனில் நினைவில் கொண்டு வந்தால் அவள் கண்ணில் பட்ட நிமிடம் மூளை இந்த பெண்ணை தெரியும், மருத்துவமனையில் பார்த்த பெண், அன்றே முத்தம் கொடுக்க நினைத்த பெண், இதோ கிடைத்தது வாய்ப்பென்று எண்ணங்கள் அடுக்காக எழுந்து அவள் உதட்டை கவ்வியது வரை வந்து நின்றது.
என்ன சமாதானம் சொல்லுவான் இந்த பாழாய் போன மனதிற்கு. தலைபிடித்து அமர்ந்துக்கொண்டவன் ஃபோன் அடித்தது.“மச்சான் இந்த பொண்ணுக்கு வீசிங் வருதுடா”பால்கி பதற்றமாக சொல்ல திரும்பி விரைந்தவன் கை கால் முளைத்த காளான் போல இருந்தவளை தூக்கி கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.

மருத்துவமனையில் தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டு தெளிந்தவள் மருத்துவரிடம், “கால் தடுக்கி விழுந்ததும் ஷாக் ஆகிட்டேன். இப்போ நார்மலாக இருக்கிறேன்” வாய்ஸ் ஆப் மூலம் சொல்ல, அவள் மெடிகல் ஹிஸ்டரி கேட்டு தெரிந்துகொண்டவர் கவலைபடாதே வைட்டல்ஸ் எல்லாம் நார்மலாக இருக்கிறது. “நீ தேறி வருவது உன் கையில் தான் இருக்கிறது.நன்றாக சாப்பிடு, தூங்கு எதற்கும் பயப்படாதே” என்று அவரால் முடிந்த மோட்டிவேஷன் கொடுத்து தோளில் தட்டிவிட்டு சென்றார்.

மருத்துவர் பின்னாலேயே வேகமாக சென்றவன் அந்த பெண்ணுக்கு என்ன டாக்டர் கேட்க அவரோ “மனரீதியாக அதிர்ச்சி சந்தித்து, வாய்பேச முடியாமல் போயிருக்கு. என்ன முயற்சித்தும் அவளால் சத்தம் கொடுக்க முடியவில்லை. அதை நினைத்து வருந்துகிறாள்.தைரியம் கொடுங்க. அதுதான் தேவை இப்போது. குரல் சீக்கிரம் திரும்பும்” ஆறுதலாக சொன்னார்.

அறையில் வந்து பார்க்க பால்கி கைபிடித்து அமர்ந்திருந்தவள் அவனை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்து ஃபோன் எடுத்து வேகமாக டைப் செய்தாள்.

“உடம்பு காயம் எதுவும் இல்ல, பயப்படாதீங்க. ஆபிஸ் அறை வாசலில் தடுப்பு ஸ்டெப் இருக்கு,அதை முதலில் மாற்றி அமைக்க வேண்டும். சில நேரம் எதையும் செய்ய முடியாமல் உறைந்து நிற்பேன்.அது பிரச்சனை இல்லை.பிளீஸ் என்னை வேலை விட்டு மட்டும் போக சொல்லிடாதீங்க. பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” அவள் வாய்ஸ் ஆப் பேச இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் செய்யமாட்டோம் என்று தலையை ஆட்டியவன் அறை விட்டு வெளியே வந்து விட்டான்.

அந்த தடுப்பு மொட்டை மாடியிலிருந்து படிகளின் வழியாக வரும் மழை நீர் ஆபிஸ் அறைக்குள் நுழைய கூடாது என்று கட்டியிருப்பது. சிப்காட்டில் எந்த ஆபிஸ் சென்றாலும் அப்படித்தான் இருக்கும். கீழ் தளம் இயந்திரங்கள் இருக்க, மேல் தளம் ஆபிஸ் இருக்கும், மேலிருந்து பார்த்தால் கீழே வேலை செய்பவர்கள் தெரிவார்கள். இது அனைத்தும் அவன் அறிந்ததே..!
 
Status
Not open for further replies.
Top