
அத்தியாயம் 11
குணவதி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர இரண்டு நாட்கள் ஆனது..
அந்த இரண்டு நாட்களும், குணவதியின் அருகில் இருந்தது என்னவோ பிருந்தாவும், நிரோவும் தான்..
அப்பொழுதும் அவ்வியக்தன் வீட்டிற்குள் வரமாட்டேன் என பிடிவாதமாக இருந்தார் குணவதி..
அவரால் அவ்வியக்தனின் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை..
எவ்வளவு பாரதூரமான வார்த்தைகள்..
அதை நினைக்க, நினைக்க அவருக்கு மனம் ஆறவில்லை.
தான் பெற்றெடுத்த மகன் தன்னை இப்படி தூற்றுவதை எந்தத் தாயால் தான் பொறுத்துக் கொள்ள முடியும்..
“நான் அங்கே வரலை பிருந்தா, என்னை நம்ம வீட்டுல கொண்டு போய் விடு.. இல்லைன்னா நீங்க வர்ற வரைக்கும் நான் ஆசிரமத்துல தங்கிக்கிறேன்..” என்றவரை கூரிய விழிகளால் துளைத்தெடுப்பது போல் பார்த்தாள் பிருந்தா..
“அப்போ நீங்க, உங்க பையன் சொன்னதை உண்மைன்னு ஒத்துக்கிட்டு ஊரை விட்டுப் போகப் போறீங்க?.. அப்படித்தானே” என சற்று காட்டமாக கேட்ட பிருந்தாவை பார்த்து திருதிருவென்று முழித்தார் குணவதி.
எப்படி அவரால் ஏத்துக் கொள்ள முடியும்?. செய்யாத தவறை ஒத்துக் கொண்டு தண்டனை அனுபவிக்க அவரால் முடியுமா என்ன?
“என்னம்மா அப்படியே இருக்கீங்க?.. அப்போ நீங்க தப்பு பண்ணீங்களா?..” என்ற பிருந்தாவை சட்டென்று திரும்பிப் பார்த்தவரின் கண்களில் அப்படியொரு கோபத்தின் ஜூவாலை தான் தெரிந்தது..
“என்னைப் பார்த்தா உனக்கு தப்பு பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு பிருந்தா?.. நான் தப்பானவளா?..” என்றவருக்கு அவ்வளவு கோபம் வந்தது..
“ஆமா” என்றவளை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தார் குணவதி..
“ஆமா வா?.. பிருந்தா நான் தப்பானவளா?” என்றவரின் நா தழுதழுத்தது..
“கண்டிப்பா ஆமான்னு தான் சொல்லுவேன்.. இப்போ நீங்க இந்த வீட்டை விட்டுப் போயிட்டீங்கன்னா, உங்க பையன் ஒருத்தன் போதும், உங்களை தப்பானவங்கன்னு முத்திரைக் குத்திட.. அதுக்கப்புறம் சாகுற வரைக்கும் நீங்க ஓடிப்போனவங்கிற பேரோட வாழணும்.. அது உங்களுக்குப் பரவாயில்லையா?..” என்றவளின் வார்த்தையில் ஒரு கணம் சற்று அமைதியானார் குணவதி..
அவள் சொல்வது உண்மைதானே, தன்னைப் பற்றி தன் மகன் அவதூறு கூறும் போது அதை உலகம் ஏற்க மறுக்குமா என்ன?..
நிச்சயமாக தன்னைப் பற்றி தவறாகத்தான் பேசும்.. அதற்கு நானே இடம் கொடுக்கலாமா என நினைத்தவர் பிருந்தாவுடன் அவ்வியக்தன் வீட்டிற்கு வர சம்மதித்தார்..
அவருக்கு அதில் சிறிதும் விருப்பமில்லையென்றாலும், தன் மீதுள்ள பழியை நீக்க வேண்டும் என நினைத்தார்..
“சரிம்மா நான் அந்த வீட்டுக்கு வர்றேன்..” என்றார்..
“சரி அம்மா, நாங்க டிஸ்சார்ஜ் சம்மரி எல்லாம் வாங்கிட்டு வர்றோம்.” என பிருந்தாவும், நிரோவும் என வெளியே செல்ல நினைத்து, அறையின் கதவை திறக்க.. அங்கு நின்றிருந்த லக்ஷ்மணனை பார்த்து இருவருக்கும் மூச்சே அடைத்து விட்டது..
“ஹாய்” என பிருந்தாவை பார்த்து கையாட்ட, அவள் முகத்தை சுழித்தாள்..
நிரோவும் எதுவும் புரியாமல் விழித்தாள்..
அதிர்ச்சியாகி நின்றிருந்த இருவரையும் பார்க்காமல், லக்ஷ்மணன் தன் கையிலிருந்த சிவப்பு நிற பூங்கொத்தை எடுத்துக் கொண்டு குணவதியின் அருகில் சென்றார்..
அப்பொழுது தான் பிருந்தாவிடம் சண்டை போட்டு, டயர்டாகியிருந்த குணவதி கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்..
அவரின் மூடிய விழிகள் அலைப்புறுவதையும் பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மணன், குணவதியின் காதிற்கு அருகே பேச குனிந்தார்..
“இவர் என்னடி பண்ணிட்டு இருக்கார்?..”
“ஹான் மன்மதன் அவதாரம் பண்ணிட்டு இருக்கார்.. அப்பனுக்கும் புள்ளைக்கும் இதே பொழைப்பா போச்சி?” என சம்பந்தமேயில்லாமல் சிடுசிடுத்தாள் பிருந்தா..
“நீ எதுக்குடி இப்போ நாய் நக்குன மூஞ்சை வச்சிருக்க?..” என்ற நிரோவை திரும்பி பார்த்து முறைத்த பிருந்தா,
“வர வர உனக்கு ரொம்ப வாயாகிடுச்சி. வாடி.. இம்சை பண்ணாம..” என்றவள், நிரோவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள்..
அந்த அறையில் இருந்தது என்னவோ குணவதியும், லக்ஷமணனனும் மட்டுமே..
திடீரென்று ஏதோ ஒரு வித உள்ளுணர்வில் கண்களை திறந்த குணவதிக்கு, தன்னருகில் நின்றிருந்த கணவனைப் பார்த்ததும் பேரதிர்ச்சி..
சட்டென்று பயத்தில் முகம் வெளிறி விட்டது..
அவரின் வெளிறிய முகத்தைப் பார்த்த லக்ஷ்மணன், “ஹேய்ய்.. கூல். கூல்.. மா.. என்ன இப்படி பயப்படுற?.. இரு தண்ணீ குடி..” என பிளாஸ்க்கில் இருந்த தண்ணீரை ஊற்றிக் கொடுக்க, வேண்டாம் என முறுக்கிக் கொள்ள, அவரின் தலையை தன் இடதுகரத்தால் பற்றி, அவருக்கு மறுக்க, மறுக்க தண்ணீரை புகட்டினார் லக்ஷ்மணன்..
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்த குணவதிக்கு மூச்சு முட்ட ஆரம்பிக்க, சட்டென்று லக்ஷ்மணன் கையை தட்டி விட்டவர், வேகமாக தன் மூச்சுக்களை தான் எடுத்தார்..
“என்னாச்சி குணா?..” என்றவரை எரிப்பது போல் முறைத்தார்..
“என்ன என்னாச்சி?.. தண்ணீ கொஞ்சமாக குடிக்கணும்.. இப்படியா ஊத்துறது?.. ஆமா நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க?..” என கோபமாக கேட்ட குணவதி இப்பொழுது தான் அவர் அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்..
பூக்கள் பாேட்ட பச்சை நிற சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார்.. முன்தொந்தி வேறு அவருக்கு முன்னால் இரண்டு இன்ச் முன்னால் வந்து நின்றது..
அவரையும், அவரின் ஆடையையும் பார்த்து முகத்தை சுழித்தார்..
“குணா நீ நம்ம வீட்டுக்கு வர்றீயா?..” என்றவரின் குரலில் அவ்வளவு ஏக்கம்..
“ஏன் அந்த எலிசபெத் ஒடிட்டாளா?.” என தன்னையும் மீறி ஆதங்கமாக வெளிவந்தன வார்த்தைகள் குணவதியிடம் இருந்து..
அவரின் வார்த்தைகளில் சட்டென்று முகம் வாடினார் லக்ஷ்மணன்..
“சாரி லக்ஷ்மி.. நடந்ததை மறந்துடு, என்னோட வாழ வந்திடுன்னு கூப்பிடுறதுக்காக நான் இங்கே வரலை.. கடைசி வரை உன் கூட நிழலா வரணும்னு ஆசைப்படுறேன்.. நீ என்னைப் புருஷனா நினைக்கலைன்னாலும் பரவாயில்லை.. ஒரு பாடிகார்டா உன் வாழ்க்கை முழுவதும் வரணும்னு ஆசைப்படுறேன்..” என்றவரை ஏற இறங்க பார்த்த குணவதி கேலியாக உதட்டை சுழித்தாள்..
“நான் உங்களை புருஷனா இல்லை மனுசனா கூட மதிக்க மாட்டேன்.. ப்ளீஸ் என் வாழ்க்கையில இருக்கிற களங்கத்தை மட்டும் நான் துடைச்சிட்டு நான் போயிடுவேன்.. நீங்க அதுவரைக்கும் என்னை நெருங்காம இருங்க போதும்..” என பேச்சை முறித்துக் கொண்டவர், “பிருந்தா.. பிருந்தா..” என வேகமாக குரல் கொடுத்தார்..
அவர் நிச்சயமாக குரல் கொடுப்பார் என பிருந்தாவும் நினைத்தாளோ என்னவோ அறைக்கு வெளியில் தான் காத்திருந்தாள்.
அவர் அழைப்புக்கு உள்ளே பிருந்தாவின் பார்வை, லக்ஷ்மணனை ஒரு கணம் தொட்டு மீண்டது..
“பிருந்தா வீட்டுக்குப் போகலாமா?..” என கேட்டுக் கொண்டவர், இறங்க முற்பட, சட்டென்று அவரின் தோளைப் பற்றி சரியாக அமர வைத்தார் லக்ஷ்மணன்..
தன் கணவனின் தீண்டலில், “ப்ச்ச்ச.. என்னை விடுங்க.” என குணவதியின் சத்தம் போட,
“சார் அவுங்களை ஏன் டென்சன் பண்றீங்க?.. எங்க அம்மாவை பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்.. தயவுசெஞ்சு நீங்க வெளியே போறீங்களா?” என்ற பிருந்தாவை திரும்பி பார்த்து முறைத்துக் கொண்டே வெளியேறினார் லக்ஷ்மணன்..
“ரொம்ப டென்சன் படுத்திட்டாரா அம்மா?..” என குணவதியிடம் மெல்லிய குரலில் கேட்டார் பிருந்தா..
“ரொம்ப.. ரொம்ப.. பண்ண தப்புக்கு புருஷனா இல்லாம, காலம் பூரா என் கூட பாடிகார்டா வர அவர் தயாரா?.. பார்த்தீயா கிழவனுக்கு குசும்பை… தொப்பை முன்னாடி வர்றவங்களை இடிச்சித் தள்ளுற மாதிரி வச்சிக்கிட்டு, இவரு எனக்கு காவலா வர்றாம்..” என புலம்பினார்..
“சரி விடுங்கம்மா, அவர் ஏதாவது செஞ்சிட்டுப் போறாரு.. நம்மளுக்கு என்ன அதைப் பத்தி, நீங்க வாங்க ம்மா..” என கைத்தாங்கலாக குணவதியை அழைத்துக் கொண்டு, தாங்கள் பிடித்திருந்த கால் டாக்சியில் அவ்வியக்தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
“அம்மா நீங்க வெய்ட் பண்ணுங்க நான் வர்றேன்..” என்ற பிருந்தா வேகமாக வீட்டிற்குள் உள்ளே நுழைந்தாள்..
அவளின் கண்களில் பட்டது, அவ்வியக்தன் யாரிடமோ கோபமாக பேசிக் கொண்டிருக்கும் காட்சி தான்..
அவன் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தார்.. அவர் அருகில் 20 வயது கொண்ட இளம்பெண், தன் போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள்..
“யார் இவர்கள்?..” என நினைத்தாலும், பிருந்தாவின் கால்கள் தானாக கிச்சனை நோக்கிச் சென்றது..
அவளைப் பார்த்ததும் அனைவரும் வழிவிட்டு நின்றனர்..
“என்ன வேணும்?.” என கம்பீரக்குரலில் திரும்பிப் பார்த்தாள் பிருந்தா..
சோபாவில் அவ்வியக்தனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்மணி தான் இங்கு வந்திருந்தார்..
“ஆர்த்தி கரைச்சி எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்..” என்றவள் மஞ்சள் நீருடன் சுண்ணாம்பு கலந்தாள்..
அவள் செய்வதை கண்களை சுருக்கிப் பார்த்த அந்த பெண்மணி, “யாருக்கு இந்த ஆர்த்தி?..” என கேட்டவரை திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள் பிருந்தா..
சட்டென்று அவருக்கு குப்பென்று வேர்த்து விட்டது..
தன்னை இவ்வளவு அழுத்தமாக பார்க்கும் பெண்ணை முதல் பார்வையிலேயே அவருக்குப் பிடிக்காமல் போனது..
அவரையே சட்டை செய்யாமல், நேராக பூஜை அறைக்குச் சென்றவள், வெத்தலை கற்பூரம், வத்திப்பெட்டி என எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..
வந்தவளுக்கு பேரதிர்ச்சி..
அவள் உள்ளே செல்லும் போது கைத்தாங்கலாக குணவதியை பிடித்திருந்தது நிரோ தான்..
ஆனால் இப்போது லக்ஷ்மணன் அல்லவா பிடித்திருக்கிறார்..
ஆர்த்தி எடுத்தால் இருவருக்கும் சேரந்தல்லவா ஆர்த்தி எடுக்க வேண்டும் என நினைத்தவளுக்கு கோபம் தான் வந்தது..
“சார் கொஞ்சம் தள்ளி நிக்குறீங்களா?. அம்மாவுக்கு ஆர்த்தி எடுக்கணும்..”
“இல்லை குணா கொஞ்சம் கனத்த உடம்பு.. அந்தப் பொண்ணால பிடிக்க முடியாம தள்ளாடுனா, அதான் நான் வந்து பிடிச்சிருக்கேன்.. நீ இப்படியே எங்களை சேர்ந்த மாதிரி ஆர்த்தி எடேன்..” என்றவரின் குரலில் அவ்வளவு ஆசை..
நரநரவென பல்லைக் கடித்துக் கொண்டே குணாவைப் பார்க்க, அவராே நிற்கக்கூட முடியாமல் சற்று தள்ளாடியபடி தான் இருந்தார்..
குணவதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பிருந்தாவின் கைகள் தானாக அவருக்கு ஆலம் சுற்ற ஆரம்பித்தது..
கூடவே குழம்பில் போடும் கருவேப்பிலை போன்று லக்ஷ்மணனுக்கு சேர்த்தே சுற்றப்பட்டது..
ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த குணவதி மெல்ல அடியெடுத்து உள்ளே வைக்க, அவரின் ஒட்டு மொத்த பாரத்தையும் தன் மேல் வாங்கியபடி அவருடன் சேர்ந்தே உள்ளே நுழைந்தார் லக்ஷ்மணன்..
ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த அவ்வியக்தன், வேகமாக தன்னறைக்குள் சென்று நுழைந்து விட்டான்..
அங்கு நடக்கும் அனைத்தையும் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர்..