ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369) - கதை திரி

Status
Not open for further replies.

T23

Moderator
அத்தியாயம்- 5

தன் அண்ணன் அழைத்ததும் நின்று திரும்பி பார்த்த பைரவி "என்ன?" என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.

அவனோ புறங்கையை ஓங்கி "அறைஞ்சனா பாரு. என்னடி இந்த வயசுலே கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காம புருவத்தை உயர்த்தி பேசுற?" என்று கேட்டவனை பயத்துடன் பார்த்தாலும்,

"வேற எப்படி கேட்க சொல்ற. ஒரு அண்ணன் மாதிரியா நீ இருக்க? அண்ணன்னா என்ன தெரியுமா? தங்கச்சி கேட்கிற லாலிபாப் மிட்டாயை வாங்கி தரது. ஆனால் உன்கிட்ட ஒரு அஞ்சு ரூபாய் கூட இல்லனு நேத்து என் தலையில் கொட்டினவன் தானே நீ" என்று நேற்று கொட்டு வாங்கியதற்கு இன்று தலையை தேய்த்து விட்டாள்.

தங்கையின் கேள்வியில் அன்பு சங்கடமாக உணர்ந்தாலும் வழக்கமாக அவள் பேசுவது தானே என்று சற்று சாந்தமாக "சரிவிடு இன்னிக்கு அம்மா கிட்ட காசு கேட்டு வாங்கி தரேன்" என்று சொன்னவனை கேவலமாக பார்த்து வைத்தாள்.

தங்கையின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன் "சரி வா வா... நானே உன்னை கொண்டு போய் ஸ்கூல விடுறேன்" என சொல்லிக் கொண்டே தன் வண்டியை எடுக்க.

பைரவியோ கடுப்பாக "இதுக்கு நேரடியாவே என்னை ஸ்கூலுக்கு கூட்டி போறேனு சொல்லி இருக்கலாம். எதுக்கு இப்படி சுத்தி வளைச்சி பேசுற?" என்று கேட்டுக் கொண்டே "ம்மா, நான் அண்ணன் கூடவே ஸ்கூல் போறேன்" என்று வீட்டை நோக்கி குரல் கொடுத்தாள் பைரவி.

அவரும் "சரிடி" என்று சொல்ல. அன்புவும் தங்கையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றான்.

தங்கையின் பள்ளிக்கூடத்தில் பைரவியை இறக்கி விட்டவன் தன் சட்டை பாக்கெட்டிலிருந்த லாலிபாப்பை எடுத்து கொடுத்தான்.

அதை பார்த்த பைரவின் முகம் பூப்போல் மலர லாலிபாப்பை வாங்கிக் கொண்டே "எப்போடா வாங்கின?" என்று கேட்டாள்.

அவனோ "நேத்து நைட்டு... வீட்டுக்கு வந்து பார்த்தப்ப நீ தூங்கிட்டு இருந்த சரி காலையில் தரலாம்னு வச்சி இருந்தேன்" என்று சொல்லி தங்கையின் தலையை பிடித்து ஆட்டி விட்டவன் "சரி கிளம்பு" என்று சொன்னான்.

அவளும் சரியென்பது போல் தலையை ஆட்டிவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவள் திரும்பி "இப்படி சுத்துறதுக்கு வேலைக்காவது போகலாம்ல? அம்மா பாவம் தனியா எவ்வளவு தான் கஷ்டப்படுவாங்க" என்று கேட்டவளை பொய்யாக முறைத்து பார்த்த அன்பு,

"பெரிய மனுஷி போல பேசாதடி" என்று சொன்னவன் வண்டியை எடுத்துக் கொண்டே "நீ வேணா பாரு இந்த டைம் போலீஸ் ட்ரைனிங்ல ஐயா பாஸ் ஆக தான் போறேன். போலீஸ் சட்டையை போட தான் போறேன். அப்போ உன்னை சைலன்சர் வச்ச வண்டி கொண்டு வந்து ஸ்கூல விட தான் போறேன். நீயும் என்னை பார்த்து பாராட்ட தான் போற" என்று சொன்னவன் தங்கையை உள்ளே போகும் படி கூறிவிட்டு அவள் சென்றதும் அங்கே இருந்து கிளம்பியவன் நேராக வீட்டிற்குச் சென்றான்.

வீட்டினுள் நுழைந்தவுடனே "ஏம்மா எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பைரவியை தனியா எங்கேயும் அனுப்பாதேனு. நான் சொல்றதை எங்கேயாவது கேட்குறீயா நீ?" என்று சட்டை பட்டனை கழட்டியபடி கத்தினான் அன்பு.

அவன் தாயோ "இப்போ எதுக்குடா கத்துற? இன்னும் எத்தனை வருஷத்துக்கு பொத்தி பொத்தி வச்சிட்டு, தங்கச்சிக்கு பாதுகாப்பா இருப்ப? பொம்பளை பிள்ளைடா. ஒரு நாலு இடம் தனியா போய் வந்தா தானே அவளுக்கும் வெளியுலகம் பழக்கமாகும்" என பேசிய அன்னையை முறைத்து பார்த்தவன்,

"ஒரு அம்மா போலவா பேசுற? எனக்கு இருக்கிற பயம் கூட உனக்கு இருக்க மாட்டிக்கிது. வெளியே ஆம்பள பசங்களுக்கு கூட பாதுகாப்பு இல்ல. இதுல நீ பொம்பளை புள்ளைய தனியா போய் பழக சொல்ற, எனக்கு இருக்கிற பயம் உனக்கு இருக்கா?" என்று மேலும் கத்தினான்.

அவரோ "ஆமா இன்னும் மடில தூக்கி வச்சி கொஞ்சிட்டு இரு. ஊர் உலகத்துல எத்தனையோ அண்ணங்களை பார்த்து இருக்கேன்டா. ஆனால் உன்னை போல ஒரு பைத்தியக்கார அண்ணனை நான் பார்த்ததே இல்லை. ஒழுங்கா சொல்றதை கேளு அன்பு. அவளை தனியா வாழ பழக்கி விடு. இல்ல எல்லாத்துக்கும் எப்போவும் அவ உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருப்பா, நீ ஒரு நாள் இல்லனா அவளோட நிலைமை ரொம்ப மோசமா போயிடும்" என்று மகனுக்கு புத்தி கூற முயன்றார்.

அதை கேட்ட அன்பு "நீயெல்லாம் தாயே இல்ல பேய். தங்கச்சியை கையில தாங்குற பிள்ளையை பாராட்டி தான் நான் பார்த்து இருக்கேன். உன்னை மாதிரி திட்டி யாரையும் நான் பார்த்தது இல்லை. இதுக்காகவே சீக்கிரம் போலீஸாகி பெத்த குழந்தை அதுவும் பெண் குழந்தையை சரியாக பாதுகாக்காத தாயினு உன்னை பிடிச்சி ஜெயிலுக்குள்ள போடல என் பெயர் அன்பே இல்லை" என்று அவன் மிகவும் தீவிரமாக பேசிக் கொண்டு இருக்க.

சமையலறையில் இருந்து வந்த ஒருத்தியோ அவன் தலையில் கரண்டியால் அடிப்போட்டவள் "நடுவீட்ல நின்னுட்டு என்னடா காமெடி பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டாள்.

அவளின் குரலில் சடுதியாக பின்னால் திரும்பி பார்க்க, அங்கே சுடிதார் அணிந்து ஷாலை நடுமத்தியில் கட்டிக் கொண்டு நெற்றியில் ஆங்காங்கே வியர்வை முத்துகள் துளிர்த்து இருக்க. கையில் கரண்டியுடன் அவனை பார்த்து திமிராக நின்று இருந்தவள் புருவத்தை உயர்த்தி அவன் இருந்த கோலத்தை காட்டி உதட்டுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

அப்பொழுது தான், தான் மேல் சட்டையை கழட்டியது நினைவு வர... தன் அன்னையை முறைத்து பார்த்து விட்டு, வீட்டின் பின் பக்கம் இருக்கும் குளியலறைக்குள் நுழைந்தான்.

அவன் போவதை அடக்கப்பட்ட புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்த அன்பின் தாய் "என்னவாம் உன்னை பார்த்ததுக்கு என்னை முறைச்சிட்டு போறான்?" என்று கேட்டார்.

அவளோ "ஐயாவுக்கு என் மேல கோபம் அத்தை அதான். நீங்க போய் வேலையை பாருங்க, அவன் ரெடியாகி வந்ததும் நான் டிபன் எடுத்து வச்சிட்டு வேலைக்கு கிளம்புறேன்" என்று சொன்னவளை சலிப்பாக பார்த்து விட்டு வெளியேச் சென்றார் அன்புவின் தாய்.

அன்புவும் குளித்து முடித்து விட்டு தயாராகி வந்தவன் "அம்மா அந்த லப்பர் இட்லியை எடுத்துட்டு வந்து வை. குரு சாரை பார்க்க போகணும். அவரை கொஞ்சம் கையில போட்டு வச்சிகிட்டா கண்டிப்பா போலீஸாக்கி விட்டுடுவாரு. ஆனா" என்று பேசிக் கொண்டே தொலைகாட்சிப் பெட்டியை போட்டவன் பார்வை அப்படியே நகர்ந்து போக,
அங்கே இரண்டு தட்டை எடுத்து வந்தவளின் மீது படிந்தது.

உடனே கோபம் கொண்டவன் எழுந்துக் கொள்ள முயல, "அன்பே" என்றவளின் அதட்டலான குரலில் அப்படியே அமர்ந்தான் அன்பு.

அவளோ தட்டை வைத்தபடி "என்ன பழக்கம் இது? என் மேல கோபம் இருந்தா அதை என் கிட்ட மட்டும் காட்டு. சாப்பாடு மேலையும் மத்தவங்க மேலையும் காட்டினா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். உனக்கு மட்டும் தான் கோபப்பட தெரியுமா என்ன?" என்று கேட்டவளை நிமிர்ந்து முறைத்து பார்த்தான்.

அவளோ "என்ன?" என்றிட,

"அம்மா எங்கே?" என கேட்டான்.

"அத்தை கிருஷ்ணாயில் வாங்க ரேஷனுக்கு போய் இருக்காங்க" என்று கூறிவிட்டு உள்ளே போனவள் பூரியும் கிழங்கும் எடுத்து வந்து வைத்தாள்.

அதை புருவம் இடுங்க பார்த்து "இது என்ன பூரி? அம்மா பூரியெல்லாம் செய்ய மாட்டாங்களே?" என்றவன் அதை எடுத்து தன் தட்டில் வைத்து உண்ண ஆரம்பித்தான்.

அவளும் அவன் அருகில் கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே "நான் தான் செஞ்சேன்" என்றவள் அடுத்த வாய் பூரியை எடுத்து மெதுவாக மெல்ல ஆரம்பித்தவள்,

"குரு சாருக்கு எவ்வளவு பணம் தரணும்?" என்று கேட்டாள்.

அன்புவோ "ஒரு அஞ்சு லட்சம் கொடுத்தா போதும்னு நினைக்கிறேன். என் கூட்டாளி பையன் அவ்வளவு பணம் தான் கொடுத்ததா சொல்றான்" என்று சொன்னதை கேட்டு சட்டென்று அவளுக்கு விக்கல் வந்து விட்டது.

அன்புவோ அவள் தலையை தட்டி கொடுத்தவன் தண்ணீயை எடுத்து கொடுத்தபடி "பார்த்து சாப்பிட மாட்டியாடி?" என்று சற்று அதட்டலாக கேட்க.

அவன் கண்களில் தெரிந்த காதலை கண்டவள் "சாருக்கு கோபம் போயிடுச்சி போல" என்று நக்கலாக அவள் தலையை தட்டிக் கொண்டு இருந்த கரத்தை பார்த்தாள்.

அதை கவனித்தவன் பொய்யாக அவளை முறைத்து விட்டு "மூடிக்கிட்டு சாப்புடுடி" என்றவன் இதழ் மெல்ல விரிந்தது புன்னகையில்.

அவளும் அதை கண்டுக் கொண்டவள் தன் தட்டில் இருந்த பூரியை பிடுங்கி எடுத்து அதில் கிழங்கை சுருட்டி எடுத்தவள் அன்பின் உதட்டருகில் கொண்டு போனாள்.

அன்போ பூரியையும் அவளையும் பார்த்தவன் "என்னை இவ்வளவு ஈசியா சமாளிக்கிற இரண்டாவது ஆளு நீதான்டி" என்று சொல்லிக் கொண்டே அவள் ஊட்டிய பூரியை வாங்கிக் கொண்டான்.

அவளோ "ம்... என்ன பண்றது உன்னையெல்லாம் சமாளிக்கலனா அப்புறம் காலம் பூரா எப்படி குப்பை கொட்ட முடியும்?" என்றவள் சற்று இறங்கிய குரலில் "நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம்" என சொல்லி அவனை ஓர விழியால் அவள் பார்க்க சட்டென அவன் முகம் இறுகி போனது.

அவளோ அவன் தோளில் ஆதரவாக சாய்ந்துக் கொண்டு "அன்பு சீக்கிரம் ரிசல்ட் வரணும்னு வேண்டிக்கிறேன்டா. நீ மட்டும் போலீஸாகிட்டேனு வை... இந்த தொல்லையே இருக்காதுல. நான் டெய்லி இப்படி வந்து உன்னை பார்த்துட்டு போறதை விட உன் கூடவே இருந்திடுவேன்லடா" என்றாள்.

அன்பும் தட்டிலே கையை கழுவியவன் அவளின் தலையை பிடித்து நகர்த்தி விட்டு "நாளைக்கு எத்தனை மணிக்கு வராங்க?" என்று கேட்டான்.

அவளோ "நாலு மணிக்குனு பேசிட்டு இருந்தாங்க" என்று கூற,

அவனிடம் "சரி நான் பார்த்துகிறேன்" என்று மட்டும் பதில் கூறியவன் எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு அதை சுத்தம் செய்து வைத்தான்.

அவளும் எழுந்து வந்து தான் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்தவள் தன் கைப்பையை மாட்டிக் கொண்டு அதிலிருந்த ஐநூறு ரூபாய் எடுத்து அன்பின் சட்டை பையில் திணித்தவள் எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்து விட்டு,

"நான் கிளம்புறேன். ஈவீனிங் பைரவியை வீட்ல விட்டு என் ஆபிஸ் பக்கம் வா" என்று கூறி விட்டு விலகி நடக்க போனவளின் கரத்தை எட்டி பிடித்தவன் அவள் தவடையை அழுத்தமாக மற்றொரு கரத்தால் பிடித்து பெண்ணவளின் இதழில் ஆழ்ந்து முத்தம் ஒன்றை வைத்தவன் விழி அவளின் நயனங்களை ஊடுருவி பார்த்துக் கொண்டே,

"என்னை மீறி எவனும் உன்னை நெருங்க கூட விட மாட்டேன்டி. உன் கழுத்துல தாலினு ஒன்னு ஏறுனா அது நான் கட்டுறதா தான் இருக்கும். பயப்படாம இருடி நாளைக்கு எந்த கூமுட்டையும் உன்னை பொண்ணு பார்க்க வர மாட்டான்" என்று நம்பிக்கையளித்தான் அவளனவன்.

அவளோ "இதோடா பயமா எனக்கா? என் அன்பு இருக்கும் போது நான் பயந்தா அப்புறம் நான் உன் மேலையும் நம்ம காதல் மேலையும் வச்சி இருக்கிற நம்பிக்கை குறைஞ்சி போனது போல ஆகிடும்டா. எனக்கு தெரியும் எப்படி இருந்தாலும் நாளைக்கு எவனும் இல்ல இல்ல... நீ என்ன சொன்ன?" என்று அவன் சட்டையின் காலரை இழுத்து கேட்டவளை ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்த்துக் கொண்டு,

சிரித்தபடி "ஹான்... கூமுட்டைனு சொன்னேன்" என்றான்.

அவளும் அதே போல் சிரித்துக் கொண்டே "ம்...அந்த கூமுட்டை வர மாட்டான்னு தெரியும். நீ வரவும் விட மாட்டனு தெரியும்" என சொல்லிக் கொண்டே அவனை விட்டு விலகி நடந்தவளின் கரத்தை மீண்டும் பிடித்தவன்,

"இருடி நானே விடுறேன். தனியா போகாதே" என்றான்.

அவளோ "ம்..." என்று சம்மதமாக தலையை ஆட்டியவள் அவன் தோளில் முகம் புதைத்தபடி வண்டியில் அமர்ந்தவள்,

"அன்பு என்னை எப்போவும் விட்டு போக மாட்ட தானே?" என்று ஒரு வித ஆசையில் பேதையவள் கேட்க.

இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே அவள் முகத்தை கண்ணாடியில் கண்டவன் ஒற்றை கரத்தை பின்னால் அவளின் தலையை பிடித்து ஆட்டி விட்டபடி,

"எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னை விட்டு இல்ல... உன்னை தனியா கூட எங்கேயும் விட்டு இருக்க மாட்டேன்டி என் வைரமே" என்று இதயத்திலிருந்து அன்பு வாக்கு கொடுக்க... மங்கையவளின் விழி ஓரம் நீர் பறந்து காற்றில் கலந்தது.

அதையும் கண்ணாடியூடு பார்த்தவன் அவள் கரத்தை முன்னிழுத்து தன் நெஞ்சோடு பொற்றிக் கொண்டான்.

அவர்களின் நெருக்கத்தை பார்த்த அத்தெரு மக்கள் சிலர் வெட்கப்பட்டுக் கொள்ள... பலர் பொறாமையில் அவர்கள் இருவரையும் திட்டிக் கொண்டனர்.

அதே நேரம் அவர்கள் போவதை பார்த்த அன்பின் தாயோ 'எப்போவும் எம்புள்ளைங்க இப்படி சண்டை போடாம ஒற்றுமையா இருக்கணும் தாயே' என்று மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அந்த வேண்டுதலை அவர் அருகில் நின்று காதில் வாங்கிய அச்சிறுப் பெண்ணோ மர்மமாக புன்னகைத்துக் கொண்டாள்.

ஒரு சிறு பெண்ணின் சிரிப்பொலியை கேட்ட அன்பின் தாய் யாரென்று திரும்பி பார்க்க... அங்கே புன்னகை முகத்தோடு நின்று இருந்த சிறுமியை கண்டு திகைத்து போய்,

"நீ...நீ... உ...உ...ன்னை எங்கேயோ பார்த்து இருக்கேன்" என்று சொன்னார்.

லைக் அண்ட் கமெண்ட் கேட்டா போடுவாங்களா போட மாட்டாங்களா? சரி கேட்டு தான் பார்ப்போம். போற போக்குல அப்படியே ஒரு லைக் கமெண்ட் போட்டு போங்க மக்களே!

Thread 'உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி' https://pommutamilnovels.com/threads/உதிரம்-உமிழ்ந்து-ஊமையானதடி-369-கருத்து-திரி.1333/
 

T23

Moderator
அத்தியாயம்- 6

அன்று இரவு தாயை அணைத்தபடியே உறங்கி இருந்த மகனை சண்முகம் சற்று தள்ளி படுக்க வைத்து விட்டு மனைவியை சரியாகப்படுக்க சொன்னார்.

கஸ்தூரியோ "என்னங்க என்ன இவன் இப்படியெல்லாம் சொல்றான். எனக்கு என்னவோ ரொம்ப மனசு பிசையுற மாதிரியே இருக்கு" என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

"கஸ்தூரி அவன் ஏதோ கனவு கண்டுட்டு பயத்துல உளறிட்டு இருக்கான். சின்ன பையன் சொல்றது எல்லாம் பெருசா எடுத்துட்டு இருப்பீயா? இந்த மாதிரி நேரத்துல நீ அமைதியா இருக்கணும். இப்படி கண்டதை யோசிச்சிட்டு இருக்க" என்று மனைவியை சமாதானம் செய்ய முயன்றார் சண்முகம்.

"ஆனாலும் குமார் சொன்னது போல நம்மளை ஒரு லாரி இடிக்க வந்துச்சு தானே?" என்று கஸ்தூரி சற்று நடுங்கிய குரலில் கேட்டவளை சலிப்பாக பார்த்து,

"அதான் நான் சட்டுனு ஆட்டோவை சந்துக்குள்ள திருப்பி ஹாஸ்ப்பிட்டல் கொண்டு போய்ட்டேன்ல. அதை பார்த்து கூட உன் மவன் பயத்துல கனவு கண்டு இருக்கலாம்" என்றார்.

கஸ்தூரியோ விடாமல் "ஒருவேளை அப்படி அந்த லாரி இடிச்சி இருந்தா இந்நேரம் நம்ம யாருமே இந்த உலகத்துல இருந்து இருக்க மாட்டோம்ல" என உளறிக் கொண்டு இருந்த மனைவியை எப்படி சாந்தப்படுத்துவது என்றே சண்முகத்திற்கு தெரியவில்லை.

கஸ்தூரி கூறுவது என்னவோ உண்மை தானே. ஒருவேளை அவர்களை நோக்கி வந்த லாரி இவர்களின் ஆட்டோவை பதம் பார்த்து இருந்தால், இந்நேரம் இவர்களின் மொத்த குடும்பமும் இம்மண்ணை விட்டு உயிர் துறந்து இருப்பார்கள் அல்லவா.

"கஸ்தூரி ரொம்ப யோசிக்காதடி. அப்புறம் உள்ள இருக்கிற பாப்பா பயப்பட போகுது" என்று சொல்லி மனைவியை உறங்க வைக்க முயன்றார்.

குழந்தையை பற்றி கூறியதும் கஸ்தூரி அமைதியாக படுத்து விட, சண்முகமும் அசதியில் அப்படியே கண்ணயர்ந்தார்.

கையில் இருந்த காகிதத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜா.

சம்பத்தின் மரணத்தின் முடிவு தான் அது. அதில் தெளிவாக தற்கொலை என்று எழுதி இருப்பதை பார்த்துக் கொண்டு இருந்தவனின் முகத்தில் என்ன உணர்வு என்றே அங்கே நின்று இருந்த யாராலையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அப்பொழுது ஒரு துணைக் காவல் அதிகாரி "சார் நீங்க கேட்ட டீடைல்ஸ். அன்னிக்கு மினிஸ்டர் சார் பார்ட்டிக்கு போனவங்க யார் யாருனு இதுல இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அந்த கோப்பையை அவன் அமர்ந்து இருந்த டேபிளில் வைத்தான்.

ராஜாவும் தலையசைப்புடன் அதை வாங்கி பார்த்தவனின் கண்ணில் விழுந்தது என்னவோ இரண்டாம் இடத்தில் இருந்த அவன் பெயர் 'ராஜா' என்று தான்.

அதை ஒரு பெருமூச்சோடு பார்த்தவன் விழியில் முதல் இடத்தில் இருந்த 'குரு' என்ற பெயரை பார்த்ததும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது.

"கமிஷனர் குரு சாரும் வந்து இருந்தாரா என்ன?" என்று சந்தேகமாக ராஜா கேட்க.

அவனை அனைவரும் ஒரு மார்க்கமாக பார்த்தனர்.

"சார் நீங்க கிளம்பி போனதுக்கு அப்புறம் வந்தார் சார். அவரும் சம்பத் சாரும் தான் ஒன்னா கிளம்புனாங்க" என்று துணை காவல் அதிகாரி கூற, ராஜாவின் முகம் கருமையாக மாற தொடங்கியது.

அதில் கையிலிருந்த காகிதத்தை இறுக்கியவன், ஆத்திரத்தில் அதை கசக்கி எறிந்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அடுத்த வினாடி ராஜாவின் கைப்பேசி அலற, அதில் தெரிந்த கமிஷனர் நம்பரை பார்த்தவன் எடுத்து காதில் வைத்து,

"சொல்லுங்க சார்" என்றான்.

"என்ன ராஜா சம்பத் கேஸை விசாரிக்கிற போல" என்று நக்கலாக அவர் கேட்க.

ராஜாவோ "கொலை பண்ணது யார்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அதை விசாரிச்சி என்ன சார் பண்ண சொல்றீங்க..? எப்படி இருந்தாலும் கொலை பண்ண அந்த கபோதியை பிடிக்க முடியாது. அப்படி அந்த நாயை பிடிச்சாலும் சுட்டு கொல்லவா முடியும்?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் பேச,

எதிர்முனையில் இருந்த கமிஷனரோ "ஏய்...ஏய் யாரை கபோதினு சொல்ற. ஒரு கமிஷனர்னு மரியாதை இருக்கா உனக்கு?" என்று கேட்ட வார்த்தையில் ஏளனமாக சிரித்த ராஜா,

"சார் நான் கொலை பண்ணவனை தானே திட்டுறேன். நீங்க ஏன் இப்படி கோபப்படுறீங்க?" என்று ஏளனமாக சொன்னவன், "அப்புறம் சார் என் போன்ல ஆட்டோமேட்டிக் ரெகார்ட் இருக்கு. நீங்க பேசுறது பதிவாகிட போகுது சார்" என ஏகத்துக்கும் நக்கலாக கூறினான் ராஜா.

"உன்னை... உன்னை சும்மா விட மாட்டேன்டா. உன் வேலையே இல்லாம பண்றேன் இரு" என்று அவர் கத்த...

அவனோ "அய்யோ சார் உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாகிடுச்சினு நினைக்கிறேன். நீங்க என்னை இப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்க கூடாதுனு தான் அன்னிக்கு" என்றவன் ஒரு கணம் நிறுத்திவிட்டு அவன் முன் நின்றுக் கொண்டு அவனின் வாயையே பார்த்தபடி நின்று இருந்தவர்களை எரிச்சலாக பார்த்து,

"இங்க என்னையா ஷோவா காட்டுறேன். கிளம்புங்க" என்று அதட்டினான்.

அவர்களும் அவசரமாக சல்யூட் அடித்து விட்டு வெளியேறி இருந்தனர்.

பின் வசதியாக அந்த சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன் ஒற்றை கரத்தை பின் தலையில் வைத்துக் கொண்டு மற்றொரு கரத்தால் அலைப்பேசியை காதில் பொருத்தியவன் திமிராக,

"சார்..." என்று இழுத்தான்.

அவரோ "சொல்லுய்யா... அன்னிக்கு என்னது?" என்று கேட்க.

ராஜாவோ "பார்த்தீங்களா அதுக்குள்ள மறந்துட்டிங்க. அதான் சார்... காசு பணம் துட்டு மணி" என்று பாடலாகவே பாடிக்காட்டியவன் கடைசியைக "போட்டோ சார் போட்டோ" என சிரித்தபடி கூறினான்.

அதில் கடுப்பான கமிஷ்னரோ "ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர் மாதிரியா பேசுற. முதல என் ரூமுக்கு வாய்யா... உன் கூட போன்ல பேச கூட பயம் வருது" என்று தன் எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டு அவர் சொல்ல.

அவனோ அதே நக்கலான தோரணையில் "நான் இப்போ உங்க ரூமுக்கு வந்தா அது உங்களுக்கு தான் தலைவலி சார்..." என்று இழுத்தான்.

அவரோ "நீ வரவே தேவையில்லை. ஆனால் உன்னை ஒரு நாள் நான் போடாம விட மாட்டேன்" என சொன்னதை கேட்டு,

"அய்யோ சார் நான் பொண்ணு இல்லை" என்று சொன்ன கணம் அவர் ஆங்கிலத்தில் திட்டிவிட்டு அழைப்பை துண்டித்தவர் நெற்றியை நீவியபடி அமர்ந்து இருந்தார்.

இங்கே அழைப்பு நின்றதுமே... அதுவரை ராஜாவின் உதட்டில் இருந்த சிரிப்பு அப்படியே உறைந்து போக, முகம் இறுகி போனது.

"ஒரு நாள் நீ என்ன என்னை போடுறது. நான் போட்டு தள்ளுறேன்டா உன்னை" என்று முணுமுணுத்தான்.

அந்நேரம் அங்கே இருந்த மரத்தில் இரு கிளிகள் அமர்ந்து ஏதோ சத்தத்துடன் தங்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்தவன் மனம் லேசாக மாற, தன் இதயத்தை தடவிக் கொடுத்தவன்,

"உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி?" என சொல்லிக் கொண்டான்.

மிகவும் சோர்வாக வீட்டிற்குள் வந்த சமுத்ராவை பார்த்த அவள் மாமியார் "என்ன சமு ரொம்ப வேலையா?" என்று கேட்டார்.

அவளோ "இல்ல அத்தை. கொஞ்சம் தலைவலி" என்று சொன்னவள் "அத்தை நான் கொஞ்ச நேரம் ரூம்ல போய் படுத்து தூங்குறேன். ஒரு ஏழு மணி போல எழுந்து வரேன் அத்தை. அதுவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்றவள் அவர் தலையை அசைத்ததும் தனதறைக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டு கைப்பையை தூக்கி கட்டிலில் எறிந்தவள் அப்படியே கதவின் மீது சாய்ந்து இமைகளை மூடி தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

ஆனாலும் அவள் செவிகளில் சுழன்றுக் கொண்டு இருந்த சொற்கள் அவளை நிதானத்திற்கு கொண்டு வர விடவில்லை.

இரு கரத்தாலும் காதை பொற்றிக் கொண்டு அப்படியே கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்து இருப்பக்கமும் தலையை ஆட்டிக் கொண்டு,

"போதும்" என்று கத்தினாள்.

ஆனால் அவளின் அந்த குரல் அந்த அறையின் கதவை தாண்டி வெளியே போகவேயில்லை.

கலங்கி போன இமைகளை பிரித்தவள் அதை துடைத்துக் கொண்டே எழுந்து வந்து அங்கே மேசையின் மீது இருந்த புகைப்படத்தை எடுத்தாள்.

அதில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்த இருவரின் பிம்பத்தையும் ஏக்கத்தோடு வருடிக் கொடுத்தவள்,

"என்னை மன்னிச்சிடு அன்பு. நான் இதை செய்ய தான் போறேன். நீ இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேணாம்டா. ஆனால் நீ வேணும். நீ மட்டுமே வேணும்" என்றவள் அன்பும் அவளும் இருந்த அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தவளின் நினைவுகளோ அவர்களின் கடந்த காலத்தை நோக்கிச் சென்றது.
 

T23

Moderator
அத்தியாயம்- 7

அன்று பொழுது முடிய நேரம்... சமுத்ரா கூறியது போல், அன்பு அவளை அழைத்துக் கொண்டுச் செல்ல அவளின் அலுவலகத்திற்கு முன் வந்து நின்றுக் கொண்டு இருந்தான்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் வரை காத்திருந்தவனுக்கு பொறுமை தான் கடல் கடந்து போய்க் கொண்டு இருந்தது.

கரத்திலிருந்த கடைசி வெண்சுருட்டை (சிகரெட்) சலிப்புடன் ஊதி முடித்த நேரம் சமுத்ரா அவசர அவசரமாக தன் கைப்பையை மாட்டிக் கொண்டு ஓடி வந்தாள்.

"பைரவியை வீட்ல விட்டியா?" என கேட்டவளுக்கு மெல்ல மூச்சு வாங்கியது.

"அதெல்லாம் விட்டாச்சு. ஆபிஸ் முடிஞ்சி எவ்வளவு நேரம் ஆச்சு. ஏன்டி இவ்வளவு லேட்?" என கேட்டுக் கொண்டே அவளின் கைப்பையை வாங்கி தனது பைக்கின் முன்னால் வைக்க முயன்றவனுக்கு வழக்கத்தை விட கைப்பை இன்று கனமாக இருப்பது போல் உணர்வு தோன்ற, புருவங்களை சுருக்கி சமுத்ராவை பார்த்தான்.

சமுத்ராவோ அவனை பார்த்து புன்னகையுடன் ஒற்றை புருவம் தூக்கி என்னவென்ற தோரணையில் கேட்டவள் அதே பார்வையிலே பையை திறந்து பார்க்க சொன்னாள்.

அன்புவும் குழப்பத்துடன் சமுத்ராவின் கைப்பையை திறந்து பார்த்தவன் விழிகள் வியப்பில் விரிந்துக் கொண்டன.

"அடியே ஏதுடி இவ்வளவு பணம்?" என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டான் அன்பு.

சமுத்ராவோ பையை மூடிவிட்டு "முதல நீ குரு சார் வீட்டுக்கு வண்டியை விடு. இதுல நீ காலையில் கேட்ட ஐந்து லட்சம் இருக்கு. இதை கொண்டு போய் அவர் கிட்ட கொடுத்து உன் வேலையை உறுதிப்படுத்திட்டு வந்திடலாம்" என்று பேசிக் கொண்டே பையை எடுத்து தோளில் மாட்டியவள் அவன் பின்னால் அமர்ந்து அவனை வண்டியை எடுக்கும்படி மீண்டும் கூறினாள்.

அன்புவோ "ஏய் விளையாடாத சமு. முதல இந்த பணம் எப்படி வந்துச்சி சொல்லுடி?" என்றான் சற்று காட்டமாக.

அவளோ சாதாரணமாக "என் மொத்த நகையையும் வித்துட்டேன்டா" என்று எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அவள் பேசிய அந்த கணம் அன்பு பேச்சற்று போக, அவளின் கைப்பேசி அலறியது.

அதை எடுத்து பார்த்தவளுக்கு தொடுதிரையில் அம்மா என்று ஒளிர்ந்துக் கொண்டு இருப்பதை கண்டு நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

'அதுக்குள்ள நகை எடுத்த மேட்டர் வீட்ல தெரிஞ்சிடுச்சா?' என்று யோசித்தவள் எப்படியோ சமாளித்து தானே ஆக வேண்டும் என்று அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

எதிர்முனையிலோ "அடியே பேங்க்ல இருந்த நகையெல்லாம் எடுத்துட்டு போனீயா?" என்று அவள் அன்னை கேட்க.

"ஆமா" என்றாள் ஒற்றை வரியில்.

"லூசாடி நீ? அதெல்லாம் உன் கல்யாணத்துக்கு சேர்த்து வச்ச நகை சமுத்ரா. விளையாடாம நகையை கொண்டுவா" என்று கூற,

"வீட்ல வந்து பேசுறேன் ம்மா" என அழைப்பை வைத்தவள், "டேய் பைக்கை எடுடா" என்றாள்.

அன்புவிற்கும் அவள் தாய் பேசியது கேட்டு விட அடக்கபட்ட கோபத்துடன் "முத நீ கீழே இறங்கு" என்று கூறியதை கேட்டு புரியாமல் வண்டியிலிருந்து இறங்கினாள் சமுத்ரா.

அவனோ கோபம் சற்றும் குறையாமல் "இப்போ எதுக்கு நகை எல்லாத்தையும் வித்த? நான் உன் கிட்ட பணம் கேட்டேனா?" என்று பற்களை கடித்தபடியே பேசினான்.

அவனின் முகத்தில் தெரிந்த கோபத்தை புரிந்துக் கொண்டவள் அவனை சாந்தப்படுத்த நினைத்த சமுத்ராவோ அவன் தோளின் மீது கை வைத்து "அன்பு" என பேச வர,

சட்டென கோபத்தில் அவள் கரத்தை தட்டி விட்டவன் "வேணாம் சமு. நான் செம கோபத்துல இருக்கேன். அமைதியா சொல்றேன் ஒழுங்கா உன் பணத்தை எடுத்துட்டு போய் நகையை மீட்டுட்டு வா. என் வேலைக்கான பணத்தை எப்படி கொடுக்கணும்னு எனக்கு தெரியும். நீ உன் நகையை வித்து தான் பணம் கொடுக்கணும்னு இல்லை" என்று மிகுந்த ஆத்திரத்தில் பேசிக் கொண்டு இருந்தவனின் கன்னத்தில் சட்டென்று அறைந்து விட்டாள் சமுத்ரா.

பின் அவனின் சட்டையின் காலரை பிடித்து அவளை நோக்கி இழுத்தவள் "இனி என் கையை இது போல தட்டி விட்ட... நான் மனுஷியா இருக்க மாட்டேன். ஆமா என்னடா பேசுற? உன் பணம் என் பணம்னு. எப்போல இருந்து உன்னுது என்னுது ஆச்சு வார்த்தை எல்லாம். எப்போவுமே நமக்கு எல்லாமே நம்மளோடையது தானேடா" என்று கேட்டவளுக்கு கண் கூட கலங்கி விட்டது.

பெண்ணவளின் குரலில் தெரிந்த கரகரப்பையும் அவள் கண்கள் கலங்கியதையும் கண்டவனுக்கு கோபம் சற்று மட்டுபட தன் வலக்கரத்தால் அவள் கன்னம் தாங்கி ஒற்றை விழியில் வழிந்த கண்ணீரை தன் பெருவிரலால் துடைத்து விட்டவன்,

"இப்போ எதுக்குடி அழுகுற?" எனக் கேட்டுக் கொண்டே அவளை அப்படியே தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு "சமு இந்த பணம் எனக்கு வேணாம்டி. சொன்னா புரிஞ்சுக்கோ. ஏற்கனவே உங்க வீட்ல நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சு சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. இதுல நீ உன் நகை" என அவன் சொல்ல... அவனை நிமிர்ந்து முறைத்தவளின் பார்வையை கண்டு புன்னகைத்தவன்,

"சரி இந்த நகையை எல்லாம் எனக்காக நீ வித்துட்டனு தெரிஞ்சா அவ்வளவு தான் உங்க அம்மா சாமி ஆடிடுவாங்க. அதனால சொல்றதை கேளுடி. பணத்தை நானே ரெடி பண்ணிக்கிறேன். நீ போய் நகையை திருப்பி வாங்கிட்டு வா" என்று கூறினான்.

அவளோ இல்லை என்று தலையை ஆட்டியவள் "உன்னால இருக்கிற இந்த கொஞ்ச நாள்ல இவ்வளவு பணம் ஏற்பாடு பண்ண முடியாது அன்பு. எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இந்த நகை எல்லாம் உனக்கும் சொந்தமானது தானே" என்று பேசியவளை இடைமறித்து,

"சமு எல்லாமே டையலாக்கா நல்லா இருக்கும். ஆனால் நடைமுறைக்கு செட்டாகாது. நான் சொல்றதை கேளு போ போய் நகையை மீட்டுட்டு வா" என்று பொறுமையாகவே கூறினான்.

அவளோ பிடிவாதமாக இல்லை என்று தலையை ஆட்ட, அதற்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடியுமா என்ன?

அவளை முறைத்து பார்த்துக் கொண்டே கோபத்துடன் வண்டியை எடுத்தவன் "ஏறு" என்று பைக்கை முறுக்கினான்.

அவளோ அவனுக்கு மேல் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தவள் அவன் தோளை பிடித்துக் கொள்ளாமல் வண்டியில் இருந்த கம்பியை பிடித்துக் கொள்ள, அதில் மேலும் கடுப்பான அன்பு,

"இப்போ எதுக்குடி கம்பியை பிடிச்சிட்டு இருக்க?" என கேட்டதுக்கு கூட அவள் பதில் கூறாமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக இருந்து விட்டாள்.

அவனும் கோபத்துடனே வண்டியை எடுத்தவன் அவள் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை.

சமுத்ராவின் வீட்டின் வாசலில் அவளை இறக்கி விட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவளோ அவனை ஒரு முறை கூட பார்க்காமல் விறுவிறுவென வீட்டினுள் செல்ல,"ஏய் நில்லுடி" என்று கடுப்பானான்.

சமுத்ராவின் அன்னையோ வாசலில் வந்து நின்று அன்பை முறைத்து பார்க்க, அவர் பின்னால் சமுத்ராவின் தந்தை சுரேந்திரன் வந்து அன்பை கோபமாக பார்த்து "எத்தனை தடவை சொல்றேன் என் பொண்ணு பின்னாடி சுத்தாதேனு" என்று அன்பை திட்ட ஆரம்பிக்க.

அவனோ அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தன்னிடம் முகம் காட்டாமல் போனவளை மனதில் திட்டிக் கொண்டு வண்டியை முறுக்கினான்.

சுரேந்திரனோ "நாளைக்கு என் பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்காராங்க பார்க்க வராங்க. இந்த பக்கம் வந்தா உன்னை வெட்டி போட்டு நான் ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்" என்று எச்சரித்தார்.

அன்போ அவரை கீழ் இருந்து மேல் வரை பார்த்து விட்டு "நீங்க என் பொண்டாட்டிக்கு வேற மாப்பிள்ளை பார்த்தா, நான் உங்க பொண்டாட்டிக்கு வேற மாப்பிள்ளை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சொல்லி கழுத்தை வெட்டுவது போல் சைகை செய்ய.

சமுத்ராவின் அன்னையோ "அடியாத்தி" என்று நெஞ்சில் கை வைத்துக் கொள்ள... சுரேந்திரனோ,

"அடி செருப்பால நாயே. யார் பொண்டாட்டிக்கு யார் மாப்பிள்ளை பார்க்கிறது" என்று கட்டி இருந்த வேஷ்டியை மடித்து விட்டபடி வாசலில் தேங்காய் உறிக்க வைத்து இருந்த அருவா கத்தியை எடுத்துக் கொண்டு முன்னே வர.

அன்புவும் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியவன் "உங்க பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் சொல்லும் போது என்னை வெட்டி போடுற அளவுக்கு கோபம் வருதுல. அதே போல தான் என் பொண்டாட்டிக்கு நீங்க மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொல்லும் போது, உங்களை கூர்கூரா வெட்டி போடணும் போல வெறியாகுது" என்று தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவனும் மல்லுக்கு நின்றான்.

சமுத்ராவின் அன்னையோ "ஏங்க சண்டை வேண்டாம் வந்திடுங்க. தெரு ஆளுங்க எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க" என்று அவரை தடுத்து நிறுத்த முயன்றார்.

சுரேந்திரனோ அவனுக்கு மேல் எகிறிக் கொண்டு "யாரு வீட்டு பொண்ணு யாருக்கு பொண்டாட்டி..? பிச்சைக்கார நாய் நீ. அடுத்த வேலை சோத்துக்கே நீ அடுத்தவங்க தயவுல தான் இருக்க. இதுல என் பொண்ணு கேட்குதா உனக்கு..? என் பொண்ணை கட்டிக்கிட்டா இந்த சொத்து எல்லாம் உனக்கு வந்திடும் திட்டம் போட்டு தானே அவ பின்னாடியே படிக்கிற வயசுல இருந்து சுத்திகிட்டு இருக்க" என்று அன்பை கேவலப்படுத்தினார்.

அன்புவோ தன் ஒட்டு மொத்த கட்டுப்பாட்டையும் இழந்து அவரை அடிக்க கை ஓங்க போன கணம் யாரும் எதிர்பார்க்காத செயல் போல் சமுத்ரா அன்புவுக்கும் தன் தந்தைக்கும் நடுவில் வந்து நின்றவள் தன்னை பெற்றவர் என்றும் பாராமல் தன் ஆள் காட்டி விரலை நிமிர்த்தி,

"இனி ஒரு முறை என் அன்பை பத்தி தப்பா பேசுனீங்க அப்பானு கூட பார்க்க மாட்டேன். உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என் அன்பை பத்தி பேச? ஆமா அவனுக்கு வேலை வெட்டி இல்லை தான். இன்னும் அம்மா சாம்பாதிக்கிற காசுல தான் சாப்பிட்டு இருக்கான். அதுல உங்களுக்கு என்ன வந்துச்சு? அவன் ஒன்னும் கொள்ளையடிச்சோ திருடியோ வாழலையே. அம்மா சம்பாத்தியத்தில் தானே வாழுறான். இதுல அசிங்கபட என்ன இருக்கு?

இல்ல எனக்கு புரியல. இப்போ நான் வேலைக்கு போகாம வீட்ல இருந்துட்டு நீங்க கொடுக்கிற காசு, துணி, சாப்பாடுனு வாழ்ந்துட்டு இருந்தா அது கௌரவம். அதுவே ஒரு பையன் இருந்தா அசிங்கமா? என்னப்பா உங்க நியாயம்?

என் அன்பு வேலை தேடாம ஒன்னும் இல்ல. அவனோட கனவே போலீஸ் ஆகணும் தான். அதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கான்னு உங்களுக்கும் தெரியும். ஏன் இந்த ஏரியாவுல இருக்கிற எல்லாருக்குமே தெரியும் தானே. தெரிஞ்சுக்கிட்டே அவனை அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க.

நாங்க ஆறு வருஷமா லவ் பண்றோம் உங்க எல்லாருக்குமே தெரியும். கடந்த மூணு மாசமா எங்க கல்யாணத்துக்காக உங்க கிட்ட போராடிட்டு இருக்கோம். ஆனால் நீங்க அதையெல்லாம் கண்டுக்காம ஒவ்வொரு மாப்பிள்ளையா கொண்டு வருவீங்க. அவன் பார்த்துட்டு சும்மா இருப்பானா?" என்றவள் அன்பின் கையை பிடித்து அவர் முன் நிற்க வைத்து,

"ஒருவேளை நாளைக்கே இவன் போலீஸாகி வந்து நின்னா, முதல் ஆளா உங்களை புடிச்சி ஜெயில போட மாட்டான்?" என்று கோபத்துடன் கேட்டவள் அன்பிடம் திரும்பி "என்னடா அது தானே பண்ணுவ?" என்று கேள்வியாகவே பேச்சை முடித்தாள்.

இத்தனை நேரம் தனக்காக பேசியவளை பெருமையாக பார்த்துக் கொண்டு நின்றவன் அவளின் கடைசி வார்த்தைகளில் சிரிப்பு வந்து விட...கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன் அவரை பார்த்தான்.

அவரோ "ஹான் போடுவான் போடுவான். என்னனு ஜெயில புடிச்சி போடுவாரு துரை. விட்டா நீயே ஒரு பொய் கேஸ் கொடுத்து பெத்த அப்பனையே கம்பிக்குள்ள தள்ளிடுவ போல" என்று மகளை திட்ட ஆரம்பிக்க.

அன்போ "உங்களோட இந்த திட்டு, முறைப்பு, கோபம் எல்லாம் என்னோட இருக்கணும். அந்த பக்கம் போச்சு?" என்று தன் கை காப்பை முறுக்கினான்.

அதற்குள் சமுத்ராவின் அன்னையோ "ஏன்டி கொஞ்சமாச்சும் உனக்கு புத்தி இருக்கா? எவனோ ஒருத்தன், உன் அப்பாவை அடிக்க வரான். சண்டை பிடிக்கிறான். ஆனால் நீ என்னடானா உன் அப்பாவுக்காக பேசாம, அவனுக்காக பேசிட்டு இருக்க" என்று கோப பட,

சமுத்ராவோ "உன் புருஷனுக்காக பேச நீ இருக்க. என் புருஷனுக்காக நான் தான் பேச முடியும். உனக்கு எப்படி உன் புருஷன் முக்கியமோ, அதே போல தான் எனக்கு என் புருஷன் முக்கியம்" என்று திட்டவட்டமாக அவள் கூற, அத்தெரு மக்களோ வாய் மேல் கை வைத்துக் கொண்டு ஆவென்று பார்த்தனர்.

சுரேந்திரனோ "அடி கழுத. யாரு புருஷன். இந்த ஒன்னும் இல்லாதவனா?" என்று அவர் மறுபடியும் ஆரம்பிக்க...

"அப்பா போதும். உங்க பேச்சு ரொம்ப ஓவரா போகுது. திரும்ப திரும்ப அன்பை ஒன்னும் இல்லாதவன் சொல்லாதீங்க. அப்புறம் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று கூறினாள்.

அவரோ "என்னடி பண்ணுவ? ஒன்னுத்துக்கும் உதவாதவன் முன்னாடி பெத்த அப்பனையே எதிர்த்து பேசுற நீயெல்லாம் ஒழுக்கமான பொண்ணா?" என்று கோபத்தில் மகளை திட்டியவர் மனைவியிடம் திரும்பி "பொண்ணை எந்த லட்சணத்துல வளர்த்து வச்சி இருக்க பாருடி" என்று மனைவியிடமும் எகிறினார்.

அன்புவோ அதுவரை இருந்த பொறுமை மொத்தமும் காற்றில் பறந்து போக, "என் முன்னாடியே சமுவை தப்பா பேசுறீங்க" என ஆத்திரமாக கேட்டுக் கொண்டே அவர் சட்டையை கொத்தாக பிடித்தவன்,

"பெத்த பொண்ணையே இத்தனை பேர் முன்னாடி தப்பா பேசுறீயே ச்சீ நீயெல்லாம் ஒரு நல்ல அப்பாவாயா?" என்று கேட்டவன் அவரை கீழே தள்ளி விட்டு விழுந்து இருந்த அருவா கத்தியை ஆக்ரோஷமாக கையில் எடுத்தான் அன்பு.

அனைவரும் அடுத்து என்ன என்பது போல் திகைத்து போய் பார்த்தனர்.

நாமும் என்னவென்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


ப்ளீஸ் நண்பர்களே படித்து விட்டு அப்படியே செல்லாமல் இரு இரண்டு வரி போட முடியவில்லை என்றாலும் ஒரு வரி கதை நல்லா இருக்கா இல்லையா மட்டும் சொல்லிட்டு போங்க. இல்ல போர் அடிச்சாலும் சொல்லிட்டு போங்க.
 

T23

Moderator
அத்தியாயம்- 8

தன் வீட்டின் மெத்தையில் இருந்து சோம்பல் விட்டபடி எழுந்த ராஜா முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு தன் கைப்பேசியை எடுத்தான்.

அதில் வந்து நிறைந்து இருந்த குறுஞ்செய்தியை தவிர்த்தவன் வேற ஏதாவது செய்தி இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.

வழக்கம் போல் எந்த மாற்றமும் இன்றி அந்த தொடுதிரை மிளிர்ந்துக் கொண்டு இருக்க, அதை வைத்துவிட்டு பெருமூச்சுடன் எழுந்தவன் குளியலறையை நோக்கிச் சென்றான்.

குளித்து முடித்து விட்டு தன் காக்கி சட்டையை மாட்டியவன் தலையை படிய வாரிவிட்டு... துப்பாக்கியை எடுத்து முதுகில் சொருகியவன் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு கமிஷனர் ஆபீஸ் நோக்கிச் சென்றான்.

அதற்குள் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடமிருந்து அழைப்பு வர, ஓட்டுநரை வண்டி எடுக்க சொல்லிவிட்டு அழைப்பை ஏற்று காதில் பொருத்திக் கொண்டே "ம் சொல்லுய்யா" என்றான்.

அவனோ "சார் மார்னிங் ஜாகிங் போன மினிஸ்டரோட பையனை காணுமாம்... கமிஷ்னர் சார் உங்களை உடனே மினிஸ்டர் வீட்டுக்கு போக சொன்னாரு. அவரும் அங்கே தான் வந்துட்டு இருக்காராம்" என்று சொன்னதை கேட்ட ராஜாவோ அதிர்ச்சியுடன்,

"வாட்..! எப்போ மிஸ்ஸிங்?" என்று கேட்டான்.

இன்ஸ்பெக்டரோ "ஒரு ஒன் ஹவர் இருக்கும் சார்" என சொன்னதை கேட்டவனுக்கு கோபம் தலைக்கேறியது.

"யோவ் காலங்காத்தால ஏன்ய்யா கடுப்பை கிளப்புற. ஜாகிங் போய் ஒன் ஹவர் தானே ஆகுது. அவன் ஜாகிங் முடிச்சுட்டு அப்படியே பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு தானே வருவான். ஒரு ஒன் ஹவர் காணும்னா உடனே பரப்பரப்பாகிடுவீங்களா? இதுவே சாதாரண மக்கள் யாராவது இப்படி ஒன் ஹவர்ல காணும்னு கம்ப்ளைன்ட் கொடுத்தா இவ்வளவு விசுவாசமா வேலை செய்வீங்களாய்யா?" என்று பேசிய ராஜாவின் வாகனம் மினிஸ்டர் வீட்டின் முன் நின்றது.

அதிலிருந்து கெத்தாக இறங்கியவனை உறைந்து போய் பார்த்துக் கொண்டு இருந்த இன்ஸ்பெக்டரின் கைப்பேசி காதில் பொருத்தி வைக்கப்பட்ட கையிலிருந்து நழுவி கீழே விழ போக, அதை சட்டென பிடித்த ராஜாவோ,

"யோவ் காஸ்ட்லியான போனை கீழே விடுற? என்ன என்னை விட அதிகமா சம்பாதிக்கிறனு திமிரோ" என்று அவன் வாங்கும் லஞ்சத்தை மறைமுகமாக சொல்லி அந்த இன்ஸ்பெக்டரை தாக்கினான்.

அவனோ அவசரமாக சல்யூட் அடித்து விட்டு "அய்யோ சார் அப்படி எல்லாம் இல்ல. நான் இப்போ திருந்திட்டேன். சம்பத் சார் டெத்க்கு அப்புறம் நான் லஞ்சம் வாங்குறதே இல்லை" என்று கூறிக் கொண்டே ராஜாவின் பின்னால் நடந்தான்.

ஆனால் அவன் மனமோ 'இவ்வளவு நேரம் என் கிட்ட சோஷியலை பத்தி பேசிட்டு இங்க வந்து நிக்குறாரு. அப்போ நம்ம கிட்ட பேசுறது எல்லாம் பில்டப்புக்கு தான் போல. இந்த மனுஷனுக்கும் மினிஸ்டர்னு வந்ததும் பயம் வந்து இருக்கும். அதான் சொன்ன உடனே ஓடி வந்துட்டாரு' என்று நினைத்துக் கொண்டு இருந்த சமயம்,

"என்னய்யா இவனே பயந்து தான் வந்து நிக்கிறான்னு யோசிக்கிறீயோ" என்று சரியாக ராஜா கேட்டு விட,

அவனோ "அய்யோ அப்படி எல்லாம் இல்ல சார்" என்றவன் 'இவர் முன்னாடி மனசுல கூட எதுவும் யோசிக்க கூடாது. சரியா சொல்றாரு' என்று எண்ணியவன் ராஜாவுடன் அமைதியாக நடந்தான்.

ராஜாவோ அந்த பெரிய வீட்டையும் அதன் சுற்று புறத்தையும் கவனித்துக் கொண்டே நடந்தவன் அங்கே தோட்டத்தில் மினிஸ்டர் பதற்றத்துடன் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அருகில் இருந்த இன்ஸ்பெக்டரிடம்,

"உங்க மினிஸ்டர் ரொம்ப டென்ஷனா இருக்காரு போல. ஒரு ஒன் ஹவர் பையனை காணும்னதும் இவ்வளவு பயப்புடுறாரே, சில மனிதர்கள் பல வருஷமா அவங்க பசங்களோ அம்மாவோ அப்பாவோ தங்கையோ தம்பியோ ஏன் லவ்வர் பொண்டாட்டினு இப்படி ஏதாவது ஒரு உறவுமுறையை தொலைச்சிட்டு இன்னும் தேடிட்டு இருக்காங்களே அவங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும். என்னைக்காவது மக்களை பத்தி யோசிச்சி இருக்காராய்யா உங்க மினிஸ்டர்" என்று அவன் காதில் சொல்ல...

அவனுக்கோ என்ன பேசுவது என்றே தெரியாமல் ராஜாவை பார்த்துக் கொண்டு மட்டும் நடந்தான்.

அதற்குள் ராஜாவும் இன்ஸ்பெக்டர் துரையும் அவர் அருகில் செல்ல, மினிஸ்டர் பெருமாள் "இது தான் நீ வர சீக்கிரமா? என்னவோ அந்த குரு உன்னை பத்தி ஆஹா ஓஹோனு சொன்னான். நீ என்னடானா பத்து நிமிசம் லேட்டா வந்து நிக்கிற? உன் கிட்ட இன்பார்ம் பண்ணி இவ்வளவு நேரம் ஆச்சு ஒரு பரபரப்பு இருக்கா உன்கிட்ட..? ஏன்னா காணாம போனது என் பையன் தானே. உனக்கென்ன வந்துச்சு. உன் வீட்ல இருந்து யாராவது இப்படி காணாம போய் இருந்தா அந்த வலி தெரிஞ்சு இருக்கும்" என்று அவர் சொல்வதை எந்த ஒரு உணர்வுமின்றி கேட்டவன் அவன் முன் சுற்றிக் கொண்டு இருந்த ஒரு பூச்சியை சட்டென்று தன் இருக்கரத்தாலும் தட்டி அதை நசுக்கினான்.

அவனின் இந்த செயலில் மினிஸ்டரே ஒரு அடி பின்னால் செல்ல, ராஜாவோ தன் கரத்தின் நடுவே தன் உயிரை விட்டு இருந்த பூச்சியை ஊதி விட்டு ஏளனமாக "சும்மா காதுக்கிட்ட வந்து சத்தம் போட்டுகிட்டே இருக்கு. அதான் பட்டுனு போட்டு தள்ளிட்டேன்" என மினிஸ்டரை பார்த்தபடி சொன்னவன்,

"சார் நீங்க ஏதோ பேசிட்டு இருந்தீங்க. சாரி பூச்சி மேல கவனம் இருந்ததால நீங்க பேசுறதை சரியாக கேட்க முடியல" மிகுந்த நக்கலுடன் ராஜா பேச, அவனை அதிர்ந்து தான் பார்த்தார் பெருமாள்.

அதற்குள் அவர் அருகில் நின்று இருந்த ஒரு அடியாளோ "யோவ் என்னய்யா எங்க ஐயா" என அவன் சொல்லி முடிக்கும் முன்னே தன் கன்னத்தை பிடித்தபடி இருந்த இடத்திற்கே மீண்டும் சென்று நின்றான்.

ராஜாவோ தன் கரத்தை உதறிக் கொண்டே "ஒரு ரௌடி நீ, என்னையே மரியாதை இல்லாம பேசுறீயா? சாவடிச்சிடுவேன் உன்னை" என்று தன் ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.

அவன் அடித்த சத்தத்தில் துரையோ "ஸப்பா என்னா அடி" என்று மிரட்சியுடன் ராஜாவை பார்க்க. அவனோ என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

துரை ஒன்னும் இல்லை என்கிற ரீதியில் தலையை ஆட்ட, அந்த நேரம் கமிஷனர் குரு அங்கே வந்து சேர, பெருமாளோ அவசரமாக அவர் அருகில் சென்று,

"என்னய்யா இது? என் பையனை கண்டுபிடிச்சி தருவான்னு இவனை" என்று ஆரம்பித்தவர் ராஜா பார்த்த பார்வையில் சற்று தன் குரலின் தோரணையை மாற்றிக் கொண்டு "ராஜா தம்பியை அனுப்பி வச்ச. ஆனால் தம்பி வந்ததும் நம்ம ஆளுங்க கிட்டையே சண்டைக்கு நிக்குறான்"

"சார் உங்க ஆளுங்கனு சொல்லுங்க" என்று கூறி ராஜா கமிஷ்னருக்கு சல்யூட் அடித்து விட்டு "சார் எனக்கு தெரிஞ்சு இவரோட பையன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவான்னு நினைக்கிறேன். ஏன்னா இந்த வீட்டை சுற்றி பார்த்த வரைக்கும் தெரிஞ்ச விஷயம், இவர் பையன் ஜாகிங் போய் இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா பார்க்கிங் ஏரியாவுல ஒரு கார் வெளியே போன டையரோட அடையாளம் இருக்கு.

கண்டிப்பா மினிஸ்டரோ இல்லை அவரோட மனைவியோ எடுத்து போக வாய்ப்பில்லை. ஒருவேளை இந்த தடிமாடுங்க எடுத்து போக சந்தேகம் வந்தாலும் அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா பெருமாள் சார் கூட எப்போவும் சுத்திட்டு இருக்கிறது இவன் ஒருத்தன் தான். இவனை தவிர இவங்களோட பொருட்கள் மேல கை வைக்க யாருக்கும் தைரியம் இல்ல. இது உங்களுக்கே தெரியும். சோ இவர் பையன் கார் எடுத்துட்டு தான் எங்கேயோ போய் இருக்கணும்" என்றவன்,

"சந்தேகம் இருந்தா இங்க இருக்கிற சிசிடிவி புட்டேஜ் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு நின்றான்.

இவ்வளவு நேரம் ராஜா பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த பெருமாள் யோசனையுடன் இருக்க.

குருவோ "அந்த டையர் அடையாளம் ஏன் உள்ள வந்த காரோடதா இருக்க கூடாது?" என்று கேட்டார்.

ராஜாவோ "உள்ள வந்த கார்னா... அப்போ அந்த கார் இங்கே தானே நின்னுட்டு இருக்கணும். அதே மாதிரி மினிஸ்டரை தேடி வர்றவங்க கார் எப்போவும் வாசல தானே சார் நிற்கும். அது மட்டும் இல்ல பார்க்கிங்ல நிறுத்தி இருந்த காரோட இடத்துல இப்போ எந்த காரும் இல்லையே. மினிஸ்டரோட இன்னொரு கார் கொஞ்சம் தள்ளி உள்ளே தான் இருக்கு. அவர் பையனோட கார் தான் அது நிற்கும் இடத்தில் இல்லை" என்று ராஜா சரியாக கூற,

அவன் சொன்ன விஷயங்களை வைத்து குரு பெருமாளை பார்த்தார்.

பெருமாளும் "தம்பி சொல்ற போல இருக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா நேத்து நைட் அவன் லவ் மேட்டர் தெரிஞ்சு நான் சத்தம் போட்டேன். சோ அதுல கோவிச்சிட்டு போக வாய்ப்பு இருக்கு" என்றார்.

ராஜாவின் அருகில் இருந்த துரையின் மனமோ 'நம்ம கூட தானே இருந்தாரு. இதெல்லாம் எப்போ நோட் பண்ணாரு..? மனுஷனுக்கு கை மட்டும் தான் பேசும்னு நினைச்சேன். ஆனால் இல்ல அவரோட உடம்பு முழுக்க மூளை தான் போல. அதான் சாதாரண டையர் மேட்டரை வச்சி என்ன நடந்து இருக்கும்னு சொல்லிட்டாரு' என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

ராஜாவோ "சார் நான் போய் சிசிடிவி புட்டேஜை செக் பண்ணிட்டு வரேன்" என சொல்லிக் கொண்டே அவன் நடக்க ஆரம்பிக்க.

பெருமாள் அவசரமாக "இல்லை வேணாம்" என்று தடுக்க.

மற்றொரு புறம் கமிஷ்னர் பதற்றத்துடன் "இல்ல" என்று சொன்னார்.

இருவரையும் புருவம் சுருக்கி பார்த்த ராஜாவோ சந்தேகமாக "ஏன் சார்?" என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

அவர்கள் இவருவருமே பதற்றமாக ஒரே நேரத்தில் "சிசிடிவி கேமரா ரிப்பேர் ஆகிடுச்சி" என சொல்ல, மேலும் சந்தேகத்துடன் அவர்களை கண்டான்.

"அது எப்படி சார் மினிஸ்டர் சாரோட வீட்டு சிசிடிவி ரிப்பேர் ஆகி இருக்குனு உங்களுக்கு தெரியும்?" என்று ஆராய்ச்சியாக கமிஷ்னரை பார்த்தான்.

குருவோ வெளிறி போன தன் முகத்தை மறைக்க முடியாமல் "அது...அது" என்று ஏதோ பேச வர,

பெருமாளோ அவசரமாக "இவன் கமிஷ்னர் ஆகுறதுக்கு முன்ன என் ப்ரெண்ட்ல. சோ நான் எதுவா இருந்தாலும் என் ப்ரெண்ட் கிட்ட தான் முதல சொல்லுவேன்" என்று கூற,

கமிஷ்னரும் "ஹான்... ஆமா அதான்" என்று கூறினார்.

அவர்கள் சொல்வதை "ஓ" என்ற நக்கல் வார்த்தையோடு ராஜா கடந்து இருந்தாலும், அவன் உதட்டிற்குள் புன்னகையை அடக்க முயன்றான்.

அந்த நேரம் மினிஸ்டர் பெருமாள் பையனின் கார் வந்து நிற்க... அதை பார்த்த பெருமாளோ,

"அட தம்பி சொன்னது போல பையனோட கார் வந்துடுச்சி. நீங்க சூப்பர் போலீஸ் தம்பி" என ராஜாவின் கரத்தை பிடித்து குலுக்கி விட்டவர் வேகமாக தன் மகன் கார் அருகில் சென்றார்.

குருவும் "வெல்டன்" என ராஜாவின் தோளை தட்டி விட்டுச் செல்ல,

ராஜாவோ "இப்போ என்ன பண்ணிட்டேன்னு பாராட்டிட்டு போறாங்க துரை" என ஒன்றும் தெரியாத பாவனையில் கேட்டான்.

துரைக்கோ என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்தவன் "அது நீங்க இவ்வளவு ஈசியா" என தயங்கி தயங்கி சொல்ல.

"நீ இப்படி சொல்லி முடிக்கிறதுக்குள்ள அங்கே என்ன நடந்துச்சினு தெரியாம போயிடும். அப்படியே சொல்லிட்டே என் பின்னாடி வா" என ராஜா கட்டளையாக கூறிவிட்டு முன்னே நடக்க,

"எதே சொல்லிட்டே வரணுமா?" என்று அதிர்ச்சியுடன் அவன் பின்னால் சென்றான்.

அதற்குள் வீட்டிற்குள் இருந்த பெருமாளின் மனைவி "என் புள்ளை வந்துட்டானா?" என்று கேட்டுக் கொண்டே பாசத்துடன் ஓடி வர.

பெருமாளோ தன் மகனின் கார் கதவை திறந்தார்.

அதிலிருந்து அந்த வீட்டின் டிரைவர் இறங்க, பெருமாளோ "உனக்கா கதவை திறந்து விட்டேன்..?ஏன் சார் நீங்களே திறந்துட்டு வர மாட்டீங்களோ?" என்று கோபத்துடன் கேட்டவரை தள்ளி விட்டு அவர் மனைவி ஜெயந்தி "என்ன நீ இருக்க..? என் பையன் எங்கே?" என்று கேட்டார்.

ஓட்டுநரோ நடுக்கத்துடன் "பி... பின்னாடி...பின்னாடி சீட்ல" என்று கை நீட்டி பின் இருக்கையை காட்ட,

ஜெயந்தி அவசரமாக பின் இருக்கையின் கதவை திறக்க, அதில் உதிரங்கள் வழிந்து சடலமாக தன் அன்னையின் நெஞ்சின் மீதே சாய்ந்து இருந்தான் அவர்களின் மகன் அகில்.

அதை பார்த்த அனைவரும் ஸ்தம்பித்து போக,

"அட நான் சொன்ன மாதிரி காரும் பையனும் வந்துட்டாங்க பார்த்தீங்களா?" என்று ராஜா கூற, அவனை அனல் தெறிக்க பார்த்தார் பெருமாள்.

ராஜாவோ வாய் மேல் கையை வைத்து "ஆனா இப்படி செத்து போய் வருவான்னு தெரியாம போச்சே" என்று கூறினான்.

"அச்சோ பாவம்" என்று வருந்த வேறு செய்ய... அதில் கோபத்தின் உச்சிக்கே பெருமாள் போய் அவன் காக்கி சட்டையை பிடிக்க போக, குரு தான் அவரை தடுத்து சாந்தப்படுத்த முயன்றார்.
 

T23

Moderator
அத்தியாயம்- 9

அன்புவின் ஆக்ரோஷத்தை கண்ட அனைவரும் ஆடித் தான் போயினர். சுரேந்திரனுக்கு பயத்தில் உடல் எல்லாம் நடுக்க ஆரம்பித்து விட, அவர் மனைவி சுரேந்திரனின் முன் வந்து இருக்கரம் கூப்பி "அவரை விட்டுடுங்க தம்பி" என்று அழுகையுடன் கேட்டார்.

அன்புவின் அருகில் அதிர்ச்சியில் வாயை பொற்றிக் கொண்டு இருந்த சமுத்ராவோ நடுங்கியபடி அவன் கரத்தை பிடித்து "அ...அன்... அன்பு என்ன பண்றடா" என்றாள்.

அவனோ அதே ஆக்ரோஷத்துடன் அவளை பார்க்காமலே "உன்னையே தப்பா பேசுனா நான் சும்மா விடுவேனா? அது உன் அப்பாவா இருந்தாலும் சரி கொன்னுட்டு தான் மறுவேலை" என்றவன் ஏந்திய அருவாளை கீழே இறக்கவேயில்லை.

சமுத்ரா தான் அவன் கரத்திலிருந்த அருவாளை பிடுங்கி தூரம் எறிந்தவள் ஒற்றை கையால் அவன் தவடையை பற்றி தன்னை நோக்கி பார்க்க வைத்தாள்.

அதுவரை இருந்த அந்த கோபக் கண்கள் அவள் புறம் திரும்பி அந்த கணம் தன் கனிவை காட்ட, அதில் அவளின் உள்ளம் தான் உருகியது.

அப்பொழுது யாருடைய போன் மணியோ "உள்ளமே உனக்கு தான் உசுரே உனக்கு தான்" என்ற பாடலை ஒலித்துக் கொண்டு இருக்க. அவன் விழிகளை விட்டு தன் விழிகளை அகற்றாமல் "அப்பா இப்போவும் கேட்கிறேன். இவனை உங்க வீட்டு மாப்பிள்ளையா ஏத்துப்பீங்களா? இல்லையா?" என்று கேட்டாள்.

அதுவரை பயத்தில் இருந்த சுரேந்திரன் மகள் தன்னை பார்த்து கூட கேள்வி கேட்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தட்டு தடுமாறி எழுந்து நின்றவர் "உன்னை கொன்னு போட்டாலும் போடுவேனே தவிர, இந்த காவாலி பையனுக்கு கட்டி வைக்க மாட்டேன்" என்று பதற்றமாகவே கூறினார்.

எங்கே மீண்டும் தன்னை தாக்கி விடுவானோ என்ற அச்சம் அவருக்குள் இருந்துக் கொண்டே இருந்தது.

அவரின் வார்த்தையில் மீண்டும் கோபம் ஏறிய கண்களோடு அவரை முறைத்து பார்க்க திரும்ப நினைத்தவனின் தவடையை அழுத்தமாக பிடித்தவள் அவன் விழிகளோடு விழிகள் சேர்த்து வைத்தபடி "என் கழுத்துல தாலி கட்டு அன்பு. இப்போவே இந்த நிமிஷமே. இனி நான் சுரேந்திரனோட பொண்ணு இல்ல. அன்புவோட மனைவியா மட்டும் தான் இருக்கணும் நினைக்கிறேன்" என்று அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு பேசினாள்.

அவளின் வார்த்தையில் அனைவரும் அதிர்ந்து போக, சுரேந்திரன் ஒரு அடி முன்னே வந்து "ஏய் சமு" என சொல்ல வர, சட்டென்று அவரை கோபமாக பார்த்தான் அன்பு.

அவள் அன்னையும் "சமு என்னடி இதெல்லாம். இப்படி நடுரோட்டுல நின்னு எங்க மானத்தை வாங்கிடாதடி. சொல்றதை கேளு எதுவா இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கலாம்" என்று மகளின் கரத்தை பிடிக்க வர, விழிகளை மட்டும் திருப்பி சமுத்ரா தன் தாயை பார்த்த பார்வையில் அப்படியே நின்று விட்டார் அவர்.

அங்கே இருந்தவர்களோ ஆளாளுக்கு சமுத்ராவிற்கு புத்தி சொல்ல முன் வந்தனர்.

"என்னம்மா சமுத்ரா நீ ரொம்ப தங்கமான பொண்ணுனு இல்ல நினைச்சேன். இப்படி காதலுக்காக உங்க அப்பா அம்மாவையே தெருவுல நிக்க வச்சி அசிங்கப்படுத்துவீயா?" என்று ஒருவர் கூற,

இன்னொருவாரோ "இது கலிகாலம், காலம் எப்படி மாறுது பாருங்க. முன்ன எல்லாம் ஓடி போய் தான் கல்யாணம் பண்ணுவாங்க. ஆனால் இப்போ நடுரோட்ல நின்னு அப்பா அம்மா முன்னாடியே தாலியை கட்டிக்க போகுதுங்க. எங்கே போய் முடிய போகுதோ" என்று பேச,

மற்றொருவரோ "இப்படி பெத்தவங்க வயித்து எரிச்சலை வாங்கிட்டு இதுங்க நல்லாவா இருக்க போகுதுங்க. கெட்டு சீரழிஞ்சு போக போகுதுங்க" என்று வார்த்தைகளால் அவளின் மனதை காயப்படுத்திக் கொண்டு இருந்தனர் அங்கே நின்று இருந்த அனைவரும்.

அத்தனை பேர் மத்தியில் அவர்களின் பேச்சுகளை காதில் வாங்கிக் கொண்டு எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் அவனை மட்டுமே பாத்துக் கொண்டு நின்றவள் விழியில் ஏனோ கண்ணீர் தேங்கியது போல் உணர்ந்தான் அன்பு.

அந்த கண்ணீரோ 'சீக்கிரம் தாலியை கட்டி என்னை இந்த மிருக கூட்டத்திலிருந்து அழைச்சி போ' என்று சொல்வது போல் உணர்ந்தவன் அவளை பார்த்தான்.

அவளின் நயனங்களை ஆழமாக பார்த்தான்.

"என் கூடவே வந்துட்டா ரொம்ப கஷ்டப்படணும்டி" என்றான் அவன்.

"உன் கூட இருக்கும் போது எனக்கு என்னடா கஷ்டம் வர போகுது" என்றாள் அவள்.

"இங்க நீ விதவிதமா சாப்பிடுற போல அங்கே இருக்காது" என்றான் அவன்.

"நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு எதுக்கு வித விதமான சாப்பாடு?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள் அவள்.

"உங்க வீட்ல இருக்கிற போல சௌகரியம் அங்க இருக்காதுடி" என்றான் அவன்.

"நீ இருக்கிற இடமே எனக்கு சொர்க்கம் தானேடா" என்றவளை அழுத்தமாக பார்த்தவன்

"கூட வந்து கஷ்டப்பட முடிவு பண்ணிட்ட? இதுக்கு மேல நானே நினைச்சாலும் உன்னை இங்க விட்டு போக என் மனசு இடம் கொடுக்காது. ஆனால் ஒரு வாக்கு தரேன். இந்த நொடியிலிருந்து உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வர விட மாட்டேன். இது நம்ம காதல் மேல சத்தியம்" என்று அவள் தலையில் சத்தியம் செய்தவனுக்கு எங்கே தெரிய போகுது. இனி வாழ்நாள் முழுவதும் அவளின் இந்த வாழ்க்கை கண்ணீரில் தான் கரைய போகுகிறது என்று. ஆனால் அதற்கும் ஒரு முடிவு அவள் எடுப்பாள் என்று இப்பொழுதே தெரிந்து இருந்தால், நிச்சயம் அவள் கழுத்தில் அவன் திருமாங்கல்யத்தை கட்டியே இருக்க மாட்டானோ என்னவோ?

அங்கே இருந்தவர்கள் அவர்களை கண்டபடி திட்ட ஆரம்பிக்க... அவனோ தன் கர்ஜிக்கும் குரலில் "ஏய்..." என்று மட்டுமே கத்த, அதில் மொத்த கூட்டமும் தன் வாயை பொற்றிக் கொண்டனர்.

பின் அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்த அன்புவோ அந்த தெரு முனையில் இருந்த ஒரு சிறிய பாம்பு புத்தின் மேல் மஞ்சள் குங்குமம் என்று மந்திரித்து வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் கயிற்றை பார்த்தான்.

"இது என்ன புதுசா இருக்கு? சாயங்காலம் கூட பார்த்தேனே இந்த இடத்துல இப்படி ஒரு பாம்பு புத்தை பார்க்கலையே?" என்று கூட்டத்தில் இருந்த ஒருத்தி கேட்டாள்.

சமுத்ராவோ "பாம்புனா அது நாகாத்தம்மா தானே. அப்போ அதுவும் ஒரு சாமி தானே. சோ அந்த கடவுளே எங்களுக்கு ஆசி வழங்கி இருக்காரு. அதனால அன்பு நீ வா அந்த தாலியை எடுத்து என் கழுத்துல கட்டு" என்று உறுதியாக கூறினாள்.

அன்புவும் சரியென்று தலையை ஆட்டியவன் அவள் கரம் பற்றி அழைத்துச் சென்று அந்த சிறிய புத்தின் மேல் இருந்த அந்த மஞ்சள்கிழங்கு கட்டி இருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தின் நேரே வைத்தபடி அவளை பார்த்தான்.

அவளின் முகமோ எந்த ஒரு பதற்றத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனையே காதலுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது "சமு சொன்னா கேளுடி" என்று அவளின் தாய் அவர்களை தடுக்க வர, மனைவியின் கரத்தை பற்றி தடுத்த சுரேந்திரன் விறுவிறுவென உள்ளேச் சென்று வாளியில் இருந்த தண்ணீரை தன் தலைக்கு மேல் ஊற்றி விட்டு "என் பொண்ணு செத்து போய்ட்டா" என சத்தமாக கத்தியவர் மனைவியின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்று விட்டார்.

தந்தையின் செயலையும் வார்த்தைகளையும் கேட்ட சமுத்ராவின் விழியில் கண்ணீர் எட்டி பார்த்த கணம், அவள் கண்ணீர் அந்த புற்றில் சிதறிய நொடி அன்பு சமுத்ராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக மாற்றி இருந்தான்.

பின் அந்த புற்றின் மீது இருந்த அந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்தவன் "இனி நீயும் நானும் வேறு வேறு இல்லை. என்னில் பாதியானவள் நீ" என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு இருப்பக்கமும் தலையை அசைத்தான். அழ கூடாது என்பது போல்.

அவளும் மெல்ல புன்னகையோடு சரியென்பது போல் தலையை ஆட்ட, அங்கே நின்று இந்த கூத்தை பார்த்தவர்கள் அவர்கள் இருவருக்குமே திட்ட தவறவில்லை.

வீட்டினுள்ளோ சமுத்ராவின் தாய் அழுதுக் கொண்டே மகளின் உடைகளை எடுத்து பையில் திணிக்க ஆரம்பித்தார்.

அதை பார்த்த சுரேந்திரன் "ஓடி போறவளுக்கு துணி தான் ஒரு கேடு" என்று மனைவியை திட்ட ஆரம்பிக்க.

அவரோ "அதான் ஓடி போறாளே அப்புறம் எதுக்கு இனி அவளோட துணிமணி எல்லாம்?" என்று மகளுக்காக மறைமுகமாக பேச ஆரம்பித்தார்.

மனைவியின் சொல்லை கேட்ட சுரேந்திரனுக்கும் அது சரியென்று பட, மனைவியை தள்ளி விட்டு அவரே சமுத்ராவின் உடைகளை திணித்து விட்டு அங்கே கட்டிலில் இருந்த அவளின் கைப்பையை எடுத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவர் அங்கே இருந்து புறப்பட தயாராக இருந்த சமுத்ரா அன்புவின் முன் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் கதவை அடித்து சாத்தினார்.

வண்டியின் பின்னால் ஏற போனவள் தன் உடமைகளை வெளியே வீசியதை கண்டு அவள் மனம் கனத்து போனாலும் இமையை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவள் அதனை எடுக்க போனாள்.

அன்புவோ அவளின் கரத்தை பிடித்து தடுக்க, அவளோ "ஒரு நிமிஷம் அன்பு" என்று சொல்லி அவளை பிடித்து இருந்த அன்புவின் கரத்தை எடுத்து விட்டவள் தன் உடமைகளை எடுத்து அவளின் வீட்டின் வாசலில் வைத்து விட்டு உள்ளே பார்த்தபடி,

"உங்க பொண்ணு தான் செத்து போய்ட்டாளே. இப்போ இருக்கிறது அன்புவோட மனைவி சமுத்ரா. அவளுக்கு என்ன வேணுமோ அதை என் புருஷன் பார்த்துப்பான். நீங்க வாங்கிக் கொடுத்த எதுவும் அன்புவோட மனைவிக்கு வேணாம். நானே சம்பாதிச்சி வாங்கின பொருட்களை மட்டும் எடுத்துக்கிறேன்" என்று கூறியவள் தன் கைப்பையையும் அவளின் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டவள் அன்புவின் வண்டியில் ஏறி அமர்ந்து "போகலாம்" என்றாள்.

அவள் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த அன்புவின் உதடுகள் தானாகவே புன்னகைத்துக் கொண்டு இருந்தது.

பின் அங்கே இருந்து புறப்பட்டவர்கள் அடுத்த தெருவில் இருக்கும் அன்புவின் வீட்டின் முன் வந்து நின்றனர்.

அதற்குள் அன்புவின் தாயிற்கும் அவன் தங்கை பைரவிக்கும் தெரு மக்கள் மூலம் விஷயம் தெரிந்து இருக்க. அன்புவின் தாயால் நிலை கொள்ள முடியவில்லை.

அவரின் செவிகளிலோ காலையில் அச்சிறு பெண் பேசிய வார்த்தைகள் தான் ரீங்காரம் அடித்துக் கொண்டிருந்தது.

காலையில்...

"உன்னை எங்கோ பார்த்து இருக்கேன்" என்று அவர் சொல்ல.

அச்சிறு பெண்ணோ "ம் பார்த்து இருக்கீங்க. ஆனால் எங்கே என்று நீங்க தான் கண்டுபிடிக்கணும்" என்று நிறுத்தியவள் சிறிய முகம் தூரத்தில் பயணித்துக் கொண்டு இருந்த அன்பு சமுத்ராவை பார்த்து கருமையாக மாற தொடங்கியது.

பின் "இன்று உன் மகனுக்கு திருமணம். திருமணம் முடிந்த ஒன்பதாவது நாளில் மரணம்" என்று உச்சரித்தாள்.

அதை கேட்ட அன்புவின் தாய் அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்துக் கொள்ள, "என்ன பாப்பா சொல்ற?" என்று கேட்டார்.

அச்சிறு பெண்ணோ சிரித்துக் கொண்டே அங்கே இருந்து நடக்க ஆரம்பிக்க. அவரோ அப்பெண்ணையும் தன் மகன் போகும் திசையையும் மாறி மாறி பார்த்தவர் ஒரு மனம் "ச்சே... நம்ம புள்ளை நம்ம கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ண மாட்டான். நானில்லாமல் என் பையன் கல்யாணமா?" என்று கேட்டுக் கொண்டது.

ஆனால் அப்பொழுது அவர் அறிந்து இருக்கவில்லை. அச்சிறு பெண் கூறியது போல் திருமணம் நடக்கும், மரணமும் நடக்கும் என்று.

இதை மாற்ற முடியுமா?

ஆனால் அவள் தான் நினைத்து விட்டாளே என்ன என்ன நடக்க வேண்டும் என்பதை!
 
Status
Not open for further replies.
Top