ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369) - கதை திரி

Status
Not open for further replies.

T23

Moderator
அத்தியாயம்- 1


"அம்மா வேலை எல்லாம் முடிச்சுட்டேன். அப்போ நான் கிளம்பட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே தன் முந்தானையில் கைகளை துடைத்தாள் அவ்வீட்டின் சமையல்காரி.

தன் மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த தேவி "சரி" என சொல்ல வருவதற்குள்,

அந்த வீட்டின் பெரிய மனுஷி ரஞ்சிதம் "அதுக்குள்ள என்ன அவசரம்..? இன்னும் நாங்க குடிச்ச டீ கிளாஸ் எல்லாம் இருக்கு. அதை யாரு கழுவி வைப்பா? டானு மணி ஆறு அடிக்க கூடாது... கிளம்புறேன்னு வந்து நிக்கிறா பாரு வேலைக்காரி" என்று முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு பேசியதை கேட்ட பணிப் பெண்ணிற்கு இதயம் வலித்தாலும்,

தன் மேடிட்ட வயிற்றை வருடியவள் ஒரு பெருமூச்சோடு "சரிம்மா" என்று மட்டும் கூறி விட்டு அவர்கள் குடித்து வைத்து விட்டு போன காலி டம்ளரை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அதை சுத்தம் செய்யும் பொருட்டு.

அப்பொழுது தேவி "ஏன்ம்மா அவளை படாத பாடு படுத்துற? பாவம் மாசம் இருக்கா. அதான் எல்லா வேலையும் முடிச்சிட்டால்ல? இரண்டு கிளாஸ் தானே நான் கழுவி வைக்க மாட்டேனா?" என்று கேட்ட மகளை முகம் சுழித்துக் கொண்டு பார்த்த ரஞ்சிதம்,

"இப்போ என்னடி, அதான் மாசம் ஆனா சம்பளம் வாங்குறால்ல. மாசமா இருந்தா வீட்டுல இருக்க சொல்லு. எதுக்கு வீட்டு வேலைக்கு எல்லாம்
வரணும்..? இந்த மாதிரி வேலைக்காரிக்கு எல்லாம் வக்காலத்து வாங்கிட்டு என் கிட்ட வராதே தேவி" என்று கடுகடுக்க...

இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வீட்டு பாடத்தை எழுதியபடி "பாட்டி அப்போ நானும் அம்மா வயித்துல இருக்கும் போது, நீ அம்மாவையும் இப்படி தான் வேலைக்காரி மாதிரி நடத்துனீயா?" என்று கேட்டு அந்த நோட்டில் ஒரு பெரிய கோடு ஒன்றை போட்டாள் அச்சிறுமி.

அதை கேட்ட பாட்டியோ "என் மவ ஏன்டி வேலைக்காரியா இருக்கணும்..? அவ பிறக்கும் போதே தங்க தொட்டில பிறந்தவடி. வேலைக்காரிங்க தான் வேலைக்காரியாவே இருக்கணும்"

"ஓ அப்போ அம்மா உன் வயித்துல பொறக்கலையா? தங்க தொட்டிக்கா பொறந்தாங்க" என்று கேட்டு அடுத்த கோடு போட,

அதற்கும் பதில் சொல்ல வாய் திறக்கும் போது,

வாசலில் "ஆன்ட்டி... அம்மா" என்று இழுத்தபடி தயங்கிக் கொண்டு வந்து நின்றான் ஒரு சிறுப்பையன்.

அவனின் பார்வையோ அங்கே டேபிளில் அமர்ந்து பாடம் எழுதிக் கொண்டே தன் அம்மாவிற்கு பரிந்துரையாக பேசிய அச்சிறுமியின் மீது நன்றியுடன் பதிய... அச்சிறுமியும் அவனை புன்னகையோடு பார்த்தாள்.

"இதோ வந்துடுச்சி பாரு, வேலைக்காரியோட மவன்" என ரஞ்சிதம் பாட்டி கூற...

அதுவரை தன் மகள் பேசியதில் லயித்து போய் அமர்ந்து இருந்த பாட்டியின் பேத்தியின் மகள் தேவி தலையை நிமிர்த்தி பார்த்து,

"அட வாடா குமார். எப்படி இருக்க? ஸ்கூல் எல்லாம் ஒழுங்கா போறீயா?" என்று கேட்டாள்.

"ம் ஆன்ட்டி" என்று மட்டும் பதில் தந்தவன், "அம்மா" என்று தயங்கினான்.

"வருவாங்க நீ உள்ள வா" என்று கூறிய மகளை முறைத்து பார்த்த ரஞ்சிதம்,

"அவனோட அந்த அழுக்கு சட்டையை பார்த்தியா தேவி? இதே அழுக்கோட உள்ள வந்தா நமக்கு தான் நோய் வரும்" என சொல்லும் தாயை இயலாமையுடன் பார்த்தாள் மகள்.

அதற்குள் சமையலறையிலிருந்து வேலையை முடித்து விட்டு பணிப்பெண் வந்து விட, அன்னையின் சோர்ந்து போன முகத்தை பார்த்ததும் மகனின் முகம் வதங்கி போய் விட்டது.

"அம்மா நான் வேலை எல்லாம் முடிச்சிட்டேன். கிளம்பட்டுமா?" என்று மீண்டும் அனுமதி கேட்டாள்.

"எப்போ பாரு கிளம்புறதுலையே இரு" என்று பாட்டி வழக்கம் போல் திட்ட...

அதுவரை அமைதியாக வாசலிலே நின்று இருந்த குமார் "பாட்டி அம்மா டாக்டர்கிட்ட போகணும். இன்னிக்கு கூட்டி வர சொல்லி இருக்காங்க. அதான் நானும் அப்பாவும் ஆட்டோ எடுத்துட்டு வந்து இருக்கோம்" என்றான்.

"அடி செருப்பால. யாருடா உனக்கு பாட்டி. ஒழுக்கமா மரியாதை கொடுத்து அம்மானு பணிவோடு பேச கத்துக்கோ. இந்த திமிர் தனம் எல்லாம் என் கிட்ட வச்சிக்காத" என்று சத்தம் போட்டார் ரஞ்சிதம்.

அவரின் அதட்டலில் சற்று பயந்தாலும் சரி என்பது போல் தலையை ஆட்டியவனுக்கு தானாக கண்கள் கூட குளமாக மாறியது.

அச்சமயம் "ஓ அப்போ பாட்டினு கூப்பிடுறது மரியாதை இல்லையா பாட்டி?" என்ற சிறுமியோ "அச்சோ" என்று வாயை பொற்றிக் கொண்டவள் "சரிங்க முதலாளி அம்மா" என்று பாவனை செய்தாள்.

தன் பேத்தியை முறைத்து பார்த்து விட்டு மகளிடம் முறைப்பை கொடுக்க,

தேவியோ "நீ ஏன்ம்மா சின்ன பசங்க முன்னாடி இப்படி எல்லாம் நடந்துக்கிற. அவளை பத்தி தான் தெரியும்ல. அவ முன்னாடி பேசுறதை வச்சி நம்ம கிட்ட கேள்வியா கேட்பானு. இப்போ குமார் உன்னை பாட்டினு கூப்பிடுறதுல என்னம்மா மரியாதை குறைஞ்சி போச்சு உனக்கு?" என்று தாயிடம் சற்று குற்றம்சாட்டியவள்,

குமாரிடம் திரும்பி "இதை உன் அம்மா எங்க கிட்ட சொல்லவே இல்லை குமாரு. நீ அம்மாவை அழைச்சி போ" என்று சொன்னவள்,

அவளிடம் திரும்பி "என்னடி இது. முன்னாடியே சொல்ல மாட்டியா?" என்று ஆற்றாமையுடன் கேட்டாள்.

"இல்லம்மா எப்படியோ சாயங்காலம் தானேனு" என்று இழுத்தவளை முறைத்து பார்த்து,

"ஆமா எப்போ நாள் கொடுத்து இருக்காங்க?"

"இன்னும் பத்து நாள் இருக்கு ம்மா"

"அடிப்பாவி! பத்து நாள்ல டெலிவரி வச்சிட்டு இப்படி வந்து மாடு மாதிரி வேலை செய்துட்டு இருக்க"

"என்னம்மா பன்றது. எங்கள போல வேலைக்காரங்களுக்கு இது தானே சோறு போடுது. ஒரு நாள் சுகம் இல்லனு சொல்லிப்படுத்துட்டா அடுத்த நாள் சாப்பாட்டுக்கு நாங்க எங்கேம்மா போறது. அது மட்டும் இல்லை இந்த நேரத்தில் வேலை செய்தா தான் சுகபிரசவம் நடக்கும். அதுவும் இல்லாமல் இது இரண்டாவது குழந்தை தானே. அதனால பயம் இல்லம்மா" என்று பேசியவளை ஆச்சரியமாக பார்த்தாள் அவள்.

'ஒரு வேலைக்காரியா இருந்தால், இதையெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டுமா? ஒருவேளை தன் கர்ப்ப காலத்தில் தன்னால் இது போன்று வேலைகளை செய்ய முடியுமா?' என்று யோசித்து பார்த்தவளின் மன கண் முன் அவளின் கர்ப்பகாலம் நிழலாட,

அந்த சமயத்தில் தன் தாயை விட, தன்னை நன்றாக பார்த்துக் கொண்டவளை ஒரு வித நட்பு உணர்வோடு களைத்து போய் தன் முன் நிற்பவளை நேருக்கு நேர் பார்த்தாள்.

அப்பொழுது பாட்டியோ "ஏன்டி அதான் உனக்கு புருஷன் ஒருத்தன் இருக்கான்ல. அவனை வேலைக்கு போக சொல்ல வேண்டியது தானே..? புருஷன் இல்லனா கூட ஏதோ பரிதாபம் வரும்" என்று பரிதாபப் படுவதற்கு கூட... அதற்கான நியாயமான காரணத்தை தேடுபவரை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து விட்டாள்.

அடைமழை அடித்து ஓய்ந்து இருக்க... அந்த குளிரில் கிழிந்து போன ஒரு போர்வையால் தன்னை முழுமையாக அதற்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டு இருந்த வயதான ஒரு பெண்மணியிடம் ஒரு கப் டீயை நீட்டினார் அந்த இடத்தின் சொந்தக்காரர்.

"ஏன் பாட்டிம்மா எத்தனை தடவை சொல்றேன். இப்படி வந்து வீட்டுக்கு முன்னாடி உட்காரத-னு. எங்கேயாவது சொல்றதை கேட்கிறீயா? பாரு இந்த மழையில் இப்படி வந்து உட்கார்ந்துட்டு இருக்கணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?" என்று கேட்டார்.

அவரோ நடுங்கும் கரத்தால் அந்த தேனீரை உதட்டில் வைத்து உறிஞ்சியபடி "ஐயா என்னை பார்த்தா உங்களுக்கே இவ்வளவு வேதனையா இருக்குனு சொல்றீங்களே... அப்போ எனக்கான நியாயத்தை வாங்கிக் கொடுங்கய்யா. அதுக்கு அப்புறம் நான் உங்க வீட்டு பக்கமே வர மாட்டேன்" என்று கூறிவிட்டு மீண்டும் தேனீரை குடித்தார்.

அவரும் தன் தேனீரை குடித்து முடித்து விட்டு இருளான அந்த பாதையை ஒரு முறை சுற்றி பார்த்தவர் "இங்க பாருங்கம்மா, நீங்க எத்தனை தடவை வந்து கேட்டாலும் சரி... இது தான் என் பதில், உங்க கேஸை மேல் அதிகாரிக்கு எல்லாம் கொண்டு போக முடியாது. அது மட்டும்மில்லை நீங்க எந்த பணமும் கொடுக்காம உங்க கேஸை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக சொன்னா எப்படிம்மா? ஏதோ அன்னிக்கு போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்து பாவப்பட்டதுக்கு, இப்படி தினமும் என்னை இம்சை செய்யுறீங்க" என்றவர் தன் மணிபர்சை எடுத்து அதிலிருந்த இரு நூறு நோட்டுகளை எடுத்து அப்பெண்மணியின் கரத்தில் திணித்து,

"இந்த காசை வச்சிட்டு ஊர் போய் சேருங்க. உங்க கேஸ் அடுத்த கட்டம் போனா நானே உங்களை வந்து அழைச்சி வரேன்" என்று சற்று தன்மையாகவே பேசினார்.

தன் கரத்திலிருந்த பணத்தை வெறித்து பார்த்த பெரியவளோ "ஐயா ஒரு போலீஸா இருந்துட்டு நீங்களே இப்படி பேசலாமா? அப்போ எங்கள மாதிரி ஒன்னும் இல்லாதவங்க எங்க போய் நியாயத்தை கேட்பாங்க?" என்று கண்ணீர் வடித்தவரை பார்க்க அவருக்கே பாவமாக இருந்தது.

பின் ஒன்றா இரண்டா கிட்டத்தட்ட ஒரு வருடமாக காவல் நிலையத்திற்கு ஓயாமல் நடந்து தனக்கான நியாயத்தை கேட்டுக் கொண்டு அல்லவா இருக்கிறார் அந்த வயதானப் பெண்மணி.

கரத்திலிருந்த இரு நோட்டுகளையும் மீண்டும் அந்த காவல் அதிகாரியிடம் கொடுத்து விட்டு புலம்பிக் கொண்டே அங்கே இருந்து நகர்ந்தார்.

சூரியன் உதிர்த்த நேரம் அத்தெருவின் மக்கள் தன் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறியபடி ஓர் வீட்டின் முன் வந்து நின்றனர்.

அங்கே கைகால் தலை என மொத்த உடலையும் ஒரு வெள்ளை துணியில் சுற்றி, குளிர்ப்பெட்டியினுள் வைத்து அதற்கு மேல் மாலைகள் போடப்பட்டு இருந்தது ஒரு ஆணின் சடலம்.

அதன் அருகில் அவனின் தாய் தன் மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டு "ராசா" என்று மட்டும் அழைத்தபடி அமர்ந்து இருந்தார்.

அவனின் தலை மாட்டில் வாசல்படியில் கட்டிய புதிய தாலியில் இன்னும் மஞ்சள் கூட காயாது சுமந்துக் கொண்டு உடைந்து போய் அவனின் வதனத்தையே வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் அவனின் மனைவி.

அச்சமயம் எங்கு இருந்தோ வந்த ஒருத்தரோ "அப்போவே சொன்னேன்டி. இவன் உனக்கு வேணாம். இவனை நம்பி போனா உன்னை நடுதெருவில விட்டுடுவான். உன் வாழ்க்கை சீரழிஞ்சு போகும் சொன்னேன் கேட்டியாடி" என்று கேட்டுக் கொண்டே அவள் முதுகில் இயலாமையுடன் அடித்தார்.

ஆனால் அவளோ எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி சிலைப் போல் அமர்ந்து இருந்தவளின் விழி ஒரு கணம் கூட தன் முன் உயிரற்று கிடப்பவனை விட்டு அகலவில்லை.

அகற்றினால் எங்கே காணாமல் போய் விடுவானோ என்ற அச்சத்தில் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

ஆனால், அவன் தான் ஏற்கனவே காணாமல் போய் விட்டான் என்று அறியவில்லையோ அப்பேதை பெண்.

விழிகளில் நீர் கூட வழியவில்லை அவளுக்கு. அந்த நீர் கூட, இமைகளை மறைத்து மங்கலாகி அவன் மறைந்து விடுவானோ என்ற பயத்தில்.

இவ்வுலகை விட்டு மறைந்து போன அவனின் உயிரை இன்னும் அவள் உணரவில்லையோ அந்த முட்டாள் பெண்.

காதலித்தவனின் கரத்தால் ஏறிய தாலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவளின் பிடி மேலும் இறுகியது.

இது தான் சாக்கு என்று அவளின் தாலியை யாராவது பறித்து விடுவார்களோ என்று தவிப்பில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் எதற்காக பயந்துக் கொண்டு இருந்தாளோ அந்நேரமும் வந்து விட்டது. அவளின் கண்பார்வையில் இருந்து அவள் கணவனை எடுத்துக் கொண்டுச் செல்ல... அவள் மனமோ வேகமாக துடிக்க ஆரம்பிக்க... தன் நெஞ்சோடு அவன் கட்டிய அந்த தாலியை இறுக்க பற்றிக் கொண்டாள்.

ஆனால் அவனே இப்பொழுது அவளுக்கு சொந்தம் இல்லையென்று ஆனதும்... அவன் கரத்தால் ஏறிய தாலி மட்டும் அவளிடம் சொந்தம் கொண்டாட விட்டு விடுவார்களா என்ன?

முதலில் எது செய்கிறார்களோ இல்லையோ, கணவனை இழந்த பெண்ணின் பூவையும் பொட்டையும் தாலியையும் முதலில் பறித்து எடுப்பது தானே இவர்களின் வழக்கம்.

அதை இப்பொழுது இவளுக்காக மாற்றிக் கொள்வார்களா என்ன?

யாருக்காவும் எப்பொழுதும் ஒருக்காலமும் இச்சடங்குகளை மாற்றிக் கொள்ள போவதில்லை நம் சமுதாயத்தினர்.

ஆனால் கணவன் இறந்து விட்டால், அவன் கட்டிய அந்த தாலி மட்டும் தானே கணவனுக்கு சொந்தம். ஒரு பெண்ணின் பூவும் பொட்டும் அவள் பிறந்ததிலிருந்து அவள் தாய் தானே அவளுக்கு சூடி அழகு பார்த்தது?

அப்படி பார்த்தால் பெண்களுக்கு அவள் தாய் கொடுத்த இந்த பூவும் பொட்டும் அவர்களுக்கு நிரந்தரமானது தானே?

இக்கேள்வியை அப்பெண் கேட்டால் ஏதோ அவளை ஒரு விசித்திரமானவளாக்கும், நம் கலாச்சாரத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறாள் என்று அவளின் கூக்குரலை எழமாலே செய்து விடுவார்கள் நம் மனிதர்கள்.

காலங்கள் மாறினாலும்.. இது போன்ற சடங்குகள் மாறுவதில்லை.


Thread 'உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி' https://pommutamilnovels.com/threads/உதிரம்-உமிழ்ந்து-ஊமையானதடி-369-கருத்து-திரி.1333/
 

T23

Moderator
அத்தியாயம்- 2

கணவனின் மரணத்தில் இடிந்து போய் அமர்ந்து இருந்தவளின் அருகில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் தாய் "கழுத்தில் தாலி ஏறிய ஒன்பதாவது நாளிலே இப்படி ஏறிய தாலியை இறக்க வச்சிட்டானே அந்த ஆண்டவன். அய்யோ இனிமேல் என் மவளோட வாழ்க்கை என்னாக போகுதோ" என்று தெரு முனை வரை அந்த வீட்டில் இருப்பவர்களின் ஒப்பாரி சத்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒரு மனைவி கணவனை மட்டும் இழக்கவில்லை... ஒரு தாய் தன் மகனையும் இழந்து இருக்கிறாள் தானே. ஆனால் அதை பற்றி யாருமே அங்கே வாயை திறக்கவில்லை.

காரணம் இறந்து போனவன் திருமணம் முடிந்து ஒன்பதே நாளான புது மாப்பிள்ளை.

நல்லதோ கெட்டதோ புதுமையானதுக்கு தானே மதிப்பு அதிகம்.

அதே சமயம் கூட்டத்தில் இருந்த ஒருவரோ "இப்படி அவனை எமனுக்கு வாரிக் கொடுக்க தான் ஒன்பது நாளுக்கு முன்ன கட்டிக்கிட்டு வந்தீயா ஆத்தா மகராசி. உன்னை எப்போ கட்டினானோ அப்போல இருந்து அவனுக்கு பிரச்சனை தான். இப்போ அவனோட உசுரையே எடுத்துட்டியே" என்று அப்பெரிய மனிதி சொல்லி முடிக்கும் முன் அந்த வார்த்தைகள் அப்படியே பயத்தில் நின்று விட்டு இருந்தன.

தன் முன் முடியெல்லாம் விரித்து விட்டப்படி முகம் எல்லாம் கருமையாக கண்கள் சிவக்க... கரத்தில் அருவாமனையை பிடித்துக் கொண்டு ஆக்கோரஷத்தில் பத்ரகாளியாக மாறி நின்றுக் கொண்டு இருந்த பெண்ணை பார்த்து பயத்தின் உச்சிக்கே சென்றார்.

தன் கழுத்தை பதம் பார்த்து விடும் இடைவெளியில் இருந்த அருவாமனையை துடித்துக் கொண்டு இருந்த கண்களாலே காட்டி, "ஆத்தா சமுத்ரா நான் வயசான கிழவித்தா. ஏதோ ஒரு ஆதங்கத்துல அப்படி பேசிட்டேன். மன்னிச்சிடும்மா. அந்த மனையை கொஞ்சம் தள்ளி பிடி சமுத்ரா. கழுத்துல வெட்டிட போகுது" என்றார் பயத்துடன்.

"ஏன் கிழவி இந்த பயம் இருக்குல. அப்புறம் என்ன இதுக்கு வியாக்கானம் பேசுற? அவன் எமன் கிட்ட போனா நான் தான் காரணமா? அவனோட விதி அவ்வளவு தான். உன்ன விட ஏன் இங்க இருக்கிற எல்லார் விடவும் இழப்பும் வலியும் அதிகம் இருக்கிறது எனக்கும் அவனோட அம்மாவுக்கும் தான். சொல்ல சொல்ல கேட்காம பிரச்சனையை தேடி போனது அவன்.

இப்போ ஒரேடியா அவன் போய் சேர்ந்துட்டான். ஆனா பழி மட்டும் என் மேல. கேட்டா தாலிக்கட்டின மனைவி. அவ வந்த ராசி சரியில்லைனு ஒன்னு கூடி பேச வேண்டியது. என் மனசு எப்படி துடிச்சிட்டு இருக்கும்னு கூட யோசிக்க மாட்டிங்களா? ஆறு வருஷ காதல்... மூணு மாச போராட்டம்... எல்லாத்தையும் ஒன்பது நாள்ல நான் தொலைச்சிட்டு நின்னுட்டு இருக்கேன்.

அதை பத்தி கொஞ்சம் கூட வருத்தப்படாம அவன் போய் செத்ததுக்கு என் மேல பழியை போடுற நீ?" என்று ஆவேசமாக ஆரம்பித்தவள் கண்ணீரோடு பேசி மீண்டும் ஆவேசத்துடனே முடித்தாள்.

அவள் நின்று இருந்த தோரணையை பார்த்து அவருக்கு ஈரக் கொலையே நடுங்கி போனது.

சமுத்ராவின் தாயோ "சமு என்ன பண்ற..? இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க அமைதியா இருக்கணும்" என முழுமையாக கூறி கூட முடிக்கவில்லை.

அதே ஆக்ரோஷத்தில் தாயின் புறம் திரும்பியவள் "நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த பொண்ணை பார்த்து அந்த கிழவி பழி போடுறா. நீ தாலியை இறக்கின பொண்ணு அமைதியா உட்காரணும்னு சொல்ற.

ஆமா இப்போ என்ன உனக்கு அக்கறை? என் கல்யாணத்துக்கு கூட வராத ஆளு தானே நீ. இப்போ என்ன இங்கே வந்து நிக்கிற. என்ன நீ சொன்ன பேச்சை கேட்காம அவனை கட்டிக்கிட்டு வந்து இப்போ வாழ்க்கையை அழிச்சிட்டு நிக்கிறதை பார்க்க வந்து இருக்கியா?" என்று கேட்ட மகளை அதிர்ச்சியுடன் வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

"என்னடி பேசுற? நான் உன் அம்மாடி. அப்படி எல்லாம் நினைப்பேனா?" என்றவரை உறுத்து பார்த்து,

"அப்படி நீ நினைக்கலனா இந்நேரம் அந்த கிழவியை நாலு திட்டு திட்டி இருக்கணுமே. ஆனால் நீ என்னை அடக்குற"

"ஏய் சமு அவங்க வயசுல பெரியவங்கடி. அதுவும் இல்லாமல் நீ இந்த நிலைமையில இப்படி குரலை எல்லாம் உயர்த்தி நாலு பேர் முன்னாடி பேசலாமா?" என்று கேட்ட தாயை தீயாய் முறைத்தாள் சமுத்ரா.

"ச்சீ நீயெல்லாம் அம்மா" என்று முகத்தை திருப்பிக் கொண்டவள், அங்கே திகைப்புடன் நின்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்த மனிதர்களை கண்டாள்.

பின் இடுப்பை தாண்டி அடர்த்தியாக நீளமாக அவிழ்ந்து இருந்த அவள் சிகையை வாரி முடிச்சிட்டவள்,

"நீங்க எல்லாருமே பொண்ணுங்க தானே? இப்போ நான் நிக்கிற இடத்தில் நீங்க யாராவது இருந்து இருந்தா... இந்த கிழவி பேசினதை கேட்டு உங்களுக்கு எல்லாம் எப்படி வலிச்சி இருக்கும். இங்க நிக்கிற ஒவ்வொருத்தருக்கும் தெரியும் நானும் என் புருஷனும் ஆறு வருஷமா எப்படி எல்லாம் காதலிச்சோம்னு. அவனோட ஒவ்வொரு வெற்றிக்கு காரணம் சொல்லி என்னை கொண்டாடுவான். உங்களுக்கு தெரியும் தானே.

அப்படி இருக்கும் போது, இப்போ அவன் செத்து போனதுக்கு நான் காரணம்னு சொன்னா என்னால தாங்க முடியுமா? எப்படி... எப்படியா என் புருஷன் சாவுக்கு நானே காரணமா இருப்பேன்" என்று கண்ணீர் மல்க கேட்டவள் அப்படியே சுருண்டு அமர்ந்தாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் கண்ணீர் துளியும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களின் மனதை கலங்க வைத்தது மட்டும் இல்லாமல் கண்ணீரையும் வர வைத்தது.

நம் நாட்டில் பெண்களே பெண்களுக்கு எதிரி என்று இச்சம்பவத்தை பார்த்து பலர் புரிந்துக் கொண்டனர்.

தன் அம்மாவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிய குமார் தன் தந்தையிடம் கோபமாக "அப்பா இனிமே அம்மாவை இந்த வீட்டுக்கு வேலைக்கு அனுப்பாதப்பா. அந்த கிழவி ரொம்ப ஓவரா பேசுது. அம்மாவை எப்படியெல்லாம் வேலை வாங்குது தெரியுமா?" என்று கவலையுடன் சொன்னான்.

ஆட்டோவை எடுத்து ஓட்ட ஆரம்பித்த சண்முகம் "இதோ பாருடா பெரிய மனுஷனுக்கு கோபம் எல்லாம் வருது" என்று கிண்டலோடு மகனை பார்த்தவர் விழிகள் கண்ணாடியின் வழியாக சோர்ந்து இருந்தாலும் மகனின் வார்த்தையில் தோன்றிய புன்னகையோடு அமர்ந்து இருந்த நிறைமாத மனைவியை பார்த்த சண்முகத்திற்கு சிறு கவலையாக இருந்தாலும், வேலை செய்தால் தானே அடுத்த வேளை சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் போது அவரும் என்ன தான் செய்வார்.

குழந்தை பிறந்தால் எப்படியோ அடுத்த ஐந்து மாதத்திற்கு மனைவி வேலைக்குச் செல்ல மாட்டாள். அதுவரை குடும்பத்தை எப்படி நடத்துவது என்று கவலையில் யோசித்துக் கொண்டே சண்முகம் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு இருக்க..

எதிர்திசையில் திடீரென எங்கோ இருந்த வந்த ஒரு பெரிய லாரி இவர்களின் ஆட்டோவை தூக்கி வீசி விட்டு நிற்காமல் போக... டமார் என்ற பெரிய சத்தத்துடன் சேர்ந்து, "அம்மா" என்று மூவரின் அலறல் சத்தமும் ஒலிக்க ஆட்டோ நான்கு முறை உருண்டு தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

அங்கே சாலையில் இருந்த மனிதர்களோ அந்த கோர விபத்தை பார்த்து பதறிக் கொண்டு ஆட்டோவின் அருகில் வர... அந்த இடமே உதிரத்தின் நிறமாக மாறி இருந்தது.

ஆட்டோ மேல் ஏறியவர் முதலில் குமாரை தூக்கி வெளியே எடுக்க...

அவனோ ரத்தம் வழிந்த நிலையிலும் "என் அம்மாவும் பாப்பா..." என்று சொல்லிக் கொண்டே மயங்கி சரிந்தான்.

அடுத்ததாக அவளை உள்ளே இருந்து தூக்கி கீழே தலைகீழாக கொடுக்க... தூக்கியவரின் கரத்திலே அவள் கால் இடுக்கிலிருந்து உதிரம் வழிந்து, கருவில் இருந்த குழந்தை குருதியுடன் வழுக்கிக் கொண்டு அவர் கரங்களில் விழுந்தது.

இக்காட்சியை பார்த்த அனைவரின் இதயமும் நடுங்கி போனது. விழிகளும் நீரால் நிரம்பி போக... பாதி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவளை மகன் அருகில் படுக்க வைத்து விட்டு ஆட்டோவின் மேல் நின்று இருந்தவரின் கரத்தில் இருந்த குழந்தையை வாங்க கையை நீட்ட...

அவரோ இல்லை என்பது போல் மன கனத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு ரத்தம் வழிய இறந்து போன அச்சிறு சிசுவை அவர் கையில் கொடுத்தார்.

அவளின் உயிரின் உதிரம் உமிழ்ந்து ஊமையாகி போனது.

அதை அவள் உணர்ந்து இருந்தாளோ என்னவோ... ஊமையாக கண்ணீர் வடித்தவளும் அப்படியே மயங்கி போனாள்.

பின் அடுத்து சண்முகத்தை தூக்கிவிட... அவரோ அவரின் உயிரில் உதிர்த்த சிசுவை போல் நாடி துடிப்பு இல்லாமல் இருந்தார்.

அப்பொழுதே புரிந்துக் கொண்டார்கள் அவரும் இறந்து போனதை.

பாதியாக நசுங்கிய ஆட்டோவை பார்த்தவர்களின் விழிகள் அங்கே தொப்புள்கொடி கூட வெட்டி எடுக்காமல் இந்த உலகத்தை பார்க்கும் முன்னே சடலமாக மீட்ட சிறு பிஞ்சை கண்ணீரோடு பார்த்தவர்கள் மீதம் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த இரு உயிரையும் குருதி வழிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

உதிரம் கூட காயாமல் வழிந்துக் கொண்டு இருந்த சிசுவை பார்க்க பார்க்க அனைவரின் இதயமும் நடுங்க தொடங்கியது.

தினமும் நிற்கும் இடத்தில் இன்றும் நின்றுக் கொண்டு இருந்த பெரிய மனுஷியை பார்த்தவருக்கு எரிச்சலாக இருந்தது.

ஜீப்பை விட்டு கீழே இறங்கி வந்த காவலாளியோ "ஏன் பாட்டிம்மா உனக்கு தினமும் சொல்லிட்டே இருக்கணுமா? அதான் நான் சொன்னேன்ல, உன் கேஸ் அடுத்த கட்டத்துக்கு போச்சுனா நானே உன்னை கூப்பிட்டு விடுறேனு. ஏன் இப்படி தினமும் வந்து என் உயிரை வாங்குற?" என்று அவரை திட்டிக் கொண்டே கேட்டின் கதவை திறந்தார்.

அந்த பாட்டியோ இன்றும் மூடிய அதே முக்காடோடு "எனக்கு இது பழகி போச்சு யா. நீ திட்டுறதும் பழகி போச்சு. சரிய்யா நான் கிளம்புறேன். இந்தா புடி இது விக்க எடுத்துட்டு போன மாம்பழம். வித்து மீதி ஒரு இரண்டு பழம் கிடந்துச்சி. இங்கே கிளம்பும் போது உன் நினைப்பு வந்துச்சு யா. அதான் எடுத்தான்தேன். இந்த பழத்தோட ருசி ரொம்ப அருமையா இருக்கும்.

நீ ஒரு வாய் கடிச்சி சாப்பிட்டனா, பொறவு முழு பழத்தையும் சாப்பிடாம கொட்டையை கீழே வைக்க மாட்ட. இந்தா புடி" என்று அவர் கரத்தில் அந்த இரண்டு மாம்பழத்தையும் திணித்து விட்டு அசைந்து அசைந்து நடந்துச் சென்றார்.

அவர் போவதையும் அந்த மாம்பழத்தையும் மாறி மாறி பார்த்த காவலாளியோ ஒரு பெருமூச்சோடு தலையை அசைத்து விட்டு உள்ளே போனவருக்கு பசி கூட எடுக்கவில்லை. அடித்த போதையில்.

அவரை விருந்தாளியாக அழைத்த விருந்தில் சிறியதாக மது அருந்தி இருந்தாலும், அதன் போதை அவரை சற்று மங்க செய்தது என்னவோ உண்மை தான்.

"விருந்துனு கூப்பிட்டு என்ன கருமத்தை குடிக்க கொடுத்தானுங்களோ. இப்படி போதையாகுது. இந்த போதையில தான் பாவம் அந்த பாட்டிக்கிட்ட கத்திட்டேன்" என்று குழறியப்படி வீட்டினுள் நுழைந்தவர் பாட்டிக் கொடுத்த மாம்பழத்தை மேசையின் மீது வைத்து விட்டு சீருடையை கழட்டி எறிந்தார்.

பின் டிவியை போட்டு விட்டு சோபாவில் அமர்ந்தவர் முன் பொல்லாதவன் படம் ஓடிக் கொண்டு இருக்க... அதில் தனுஷ் தன் வண்டியை தொலைத்து விட்டு தேடும் காட்சி போய்க் கொண்டு இருக்க. அதை இளக்காரமாக சிரித்தப்படி பார்த்தவரின் விழியில் இப்பொழுது அந்த மாம்பழம் விழுந்தது.

"அப்படி என்ன இது அவ்வளவு ருசியா இருக்குமா என்ன? கிழவி ஓவர் பில்டப் பண்ணிட்டு போச்சு. சரி ஒன்னை எடுத்து சாப்பிட்டு தான் பார்ப்போம்" என்று உளறிக் கொண்டே அந்த மாம்பழத்தை அப்படியே எடுத்து கடித்து மெல்ல ஆரம்பித்தார்.

"அட ஆமா செம டேஸ்ட்டா இருக்கே. இந்த மாதிரி டேஸ்ட் இருக்கிற மாம்பழத்தை நான் சாப்பிட்டதே இல்லை" என்று அதை முழுவதும் சாப்பிட்டு முடித்தவர் அடுத்த மாம்பழத்தை எடுத்து கடிக்க ஆரம்பித்தார்.

அதையும் சாறு ஒழுக உண்டவர் அடுத்து மேசையை பார்த்தார். அங்கே மீதம் ஒன்று இருந்தது.

புருவம் சுருக்கி அதை சற்று யோசனையாக பார்த்தவர் "கிழவி இரண்டு பழம் கொடுத்துச்சா? இல்ல மூணா? ஆனால் என் காதில் இரண்டு பழம் தான் விழுந்தது. ஒருவேளை மூணு பழம் கொடுத்துட்டு... சும்மா இரண்டு பழம் சொல்லி இருக்கும். எது எப்படியோ மாம்பழம் செமயா இருக்கு. பசியும் எடுக்குது சோ இதையும் சாப்பிட்ட வேண்டியது தான்" என்று போதையின் மயக்கத்தில் அவர் அந்த மூன்றாவது மாம்பழத்தையும் சாப்பிட்டு முடித்தார்.


மறுநாள் தலைப்பு செய்தி...

ஒரு காவலாளரே தன் வீட்டில் அதிகப்படியான கஞ்சா அடித்து இறந்து கிடக்கிறார் என்று தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டு இருப்பதை மெல்லிய கீற்றோடு வன்ம நிறைந்த பார்வையோடு பார்த்துக் கொண்டு இருந்தது இரு விழிகள்.

உங்கள் கருத்துகள் தான்.. என்னை ஊக்குவிக்கும்.


Thread 'உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி' https://pommutamilnovels.com/threads/உதிரம்-உமிழ்ந்து-ஊமையானதடி-369-கருத்து-திரி.1333/
 

T23

Moderator
அத்தியாயம்- 3

மருத்துவமனையின் பொது அறையிலிருந்த ஒரு படுக்கையிலிருந்து மெல்ல கண்களை திறந்தான் அவன்.

அவனால் இமைகளை பிரிக்க முடியவில்லை. அப்படி ஒரு வலி உடல் முழுவதும் அவனுக்கு.

அவன் உடலில் கட்டு போடாத இடமே இல்லை. இத்தனை காயங்களையும் தாங்கிக் கொண்டு தன் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு வாழ்வதற்காக போராடிக் கொண்டு இருந்தான்.

தலையில் போடப்பட்டு இருந்த அந்த பெரிய கட்டு வேறு அவனுக்கு பாரமாக இருக்க... அதன் வலியில் சிறிது முனங்கியங்கபடி மெதுவாக அதே சமயம் லேசாக கண்களை திறந்து பார்த்தான்.

அந்த இடத்தில் பலரின் பேச்சு சத்தமும்... அங்கே அங்கே பொறுத்தி வைக்கப்பட்டு இருந்த இயந்திரத்தின் ஒலியும், சட்டென நாசியில் நுழையும் மருந்தின் வாசமும் அவன் எங்கே இருக்கிறான் என்று உணர வைத்து இருந்தது.

மீண்டும் ஒருமுறை இமைகளை அழுத்தமாக மூடி திறந்தவன் இப்பொழுது பார்வையை சுழல விட்டான்.

அது நிறைய நபர்கள் நடமாடும் இடம் என்று உணர்ந்தவன் மெதுவாக எழுந்துக் கொள்ள முயன்றான்.

ஆனால் அவனின் காயத்தின் வீரியம் அவனை எழும்ப விடாமல் தடுக்க...

தலையை மட்டுமே இடம் வலம் என்று சுற்றினான்.

அதிலும் வலியை கொடுக்க, "ம்ச்" என்று அலுத்தபடி நேராக பார்த்தான்.

அங்கே ஒரு சிறுமி அவனையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டவன் மெல்ல தன் கரத்தை உயர்த்த நினைத்தான்.

ஆனால் அதுவோ எழாமல் அவனுக்கு சதி செய்ய, உதட்டை மெதுவாக பிரித்தவன் வார்த்தை வெளியே கூட வரவில்லை.

ஆனால் அவனின் அந்த உச்சரிப்பு அச்சிறுமிக்கு புரிந்ததோ என்னவோ அவன் அருகில் சென்று,

"என்ன வேணும் உனக்கு?" என்று கேட்டது.

அவனோ "இ...இது..." என்று பேச முயன்றவனுக்கு தலையின் பாரம் வலியை ஏற்படுத்த "ஸ்..." என்று கோபமாக கண்ணை இறுக்கமாக மூடினான்.

"இது ஜி. ஹெச் ஹாஸ்பிடல்" என்று அவன் முழுமையாக கேட்காமலே பதில் சொன்னாள் அவள்.

அவனும் கண்களை மூடியபடி "ம்" என்று மட்டும் பதில் தந்தவன் விழி தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வடித்தது.

அவன் கண்ணீரை தன் கரத்தால் துடைத்து விட்ட பெண்ணவளோ "அழாத அன்பு" என்று சொல்லி அடுத்த பக்கம் சென்று அந்த விழிகளின் ஓரம் இருந்த கண்ணீரை துடைத்து விட்டு "அடிப்பட்டது வலிக்குதா?" என்று கேட்டாள்.

அவன் பெயரை அச்சிறுமி கூறியதும் பட்டென்று நயனங்களை விரித்தவன் அவளை உற்று நோக்கினான்.

"உ... உனக்கு எ... என் பெயர் தெரியுமா?" என்று கேட்டான் அவன்.

"ம்... எனக்கு மட்டும் இல்லை. இங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரியும். பழைய பேஷன்ட் புது பேஷன்ட்னு எல்லாருக்குமே தெரியும்" என்று கூறி மென்மையாக புன்னகைத்த அச்சிறுமி கட்டு போட்டப்பட்டு இருந்த அவன் கரத்தை தன் கரத்தால் பிடித்து,

"நீ கண் முழிக்கணும்னு இங்க இருக்கிறவங்க... போனவங்க எல்லாரும் வேண்டாத நாள் இல்லை. இப்போ தான் நீ கண் முழிச்சிட்டல. இனி எல்லாமே நல்லதா தான் நடக்கும்" என்று சொல்லி மென்மையாக அவன் கரத்தில் அழுத்தத்தை கொடுத்தாள்.

அதில் தன் புருவங்கள் முடிச்சிட, அவளையே பார்த்தவன் "எனக்கு என்னாச்சு?" என்று கேட்டான்.

அவளோ பதில் கூறாமல் மெதுவாக சிரித்து விட்டு "இரு நான் போய் அம்மாவை அழைச்சி வரேன்" என்று மட்டும் கூறிவிட்டு அங்கே இருந்து நடந்துச் சென்றவளையே வைத்த கண் எடுக்காமல் அவன் பார்த்துக் கொண்டு இருக்க...

அவன் நினைவுகளோ 'இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேன்' என்று சிந்திக்க ஆரம்பிக்க, அவன் தலைப்பாரமாக மாறி மீண்டும் வலியை கொடுத்தது.

அந்த நேரம் "சிஸ்டர் 369 நம்பர் பேஷன்ட் கண் முழிச்சிட்டாரு. நீங்க போய் டியூட்டில இருக்கிற டாக்டர் கிட்ட சொல்லுங்க" என்று ஒரு செவிலியர் உடன் இருந்த செவிலியரிடம் கூறிக் கொண்டே அவன் அருகில் சென்றார்.

"அன்பு, அன்பு" என்று அழைத்துக் கொண்டே அவனின் நாடியை பரிசோதித்தார் செவிலியர்.

அதற்குள் மருத்துவரும் வந்து விட, அவனை பரிசோதித்து விட்டு "கோமால இருந்து முழிச்சிட்டான். இனி ஆபத்து இல்லை" என்று கூறினார்.

மருத்துவர் கூறியதை கேட்டுக் கொண்டு அவன் இருந்தாலும், அவன் விழிகள் அச்சிறுமி போன திசையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

பின் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளில் ஒன்று இரண்டை மாற்றி விட்டு மருத்துவர் அன்பின் நெஞ்சில் தட்டி "ரொம்ப பிடிவாதக்காரன் நீ. சாகவே மாட்டேனு போராடி உயிர் பிழைச்சிட்ட" என்று தட்டிக் கொடுத்து விட்டு அவர் போக,

அவர் சொன்னதை விளங்காமல் அன்பு செவிலியரை பார்த்தான்.

செவிலியரோ அவனை மென்மையாக பார்த்து "வலி எதுவும் தெரியாமல் இருக்க, நான் இப்போ உனக்கு ஒரு ஊசி போடுறேன். கொஞ்ச நேரம் தூங்கு அன்பு. இப்போ தானே கண் முழிச்சி இருக்க. சோ உனக்கு நடந்ததை ரியலைஸ் பண்ண டைம் எடுக்கும். நீ முழிச்சி இருந்து நடந்ததை யோசிச்சா அது உனக்கு தான் ஆபத்து. சோ மெதுவா ஒன்னு ஒன்னா நினைவுக்கு கொண்டு வரலாம். சரியா" என்று புன்னகையோடு பேசிக் கொண்டே அவனுக்கு ஊசியை போட்டார்.

அன்போ "நர்ஸ் எ... என் அம்மா" என்று மெதுவாக அவன் கேட்க...

அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவர் சிறிது தயங்கி விட்டு "வருவாங்க... இப்போ நீ ரெஸ்ட் எடு" என்றார்.

ஆனால் அவனோ "எனக்கு என்னாச்சு?" என்று அடுத்த கேள்வி கேட்க.

அவரோ "இப்போ கேள்வியெல்லாம் வேணாம் அன்பு. முதல நீ ரெக்கவர் ஆகி வா ஓகே" என்று அங்கே இருந்து நகர போனவரை தடுத்து,

"ஒரு நிமிசம், இங்கே இருந்த அந்த சின்ன பொண்ணு" என்று அவன் முழுமையாக சொல்லி முடிக்கும் முன் உறக்கத்திற்குச் சென்று இருந்தான் அன்பு.

அவனை புருவங்கள் சுருங்க பார்த்த செவிலியரோ புரியாமல் அங்கே இருந்து நகர்ந்தார்.

பரபரப்பாக செயல் பட்டுக் கொண்டு இருந்தது அந்த இடமே. பல பத்திரிக்கை நிபுணர்கள் பலர் அங்கே காத்திருந்தனர்.

பின்னே ஒரு காவல் அதிகாரியே அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்து அவர் வீட்டில் இறந்து போனது என்ன சிறிய விஷயமா?

இந்த பத்திரிக்கையாளர்களுக்கு இது எவ்வளவு பெரிய நியூஸ்.

அதை பற்றிய தகவல்களை அறியாமல் விட்டு விடுவார்களா என்ன?

காவல் நிலையத்தினுள் "என்ன கருமம் ய்யா இது. அந்த சம்பத்க்கு செத்து போக வேற வழியே இல்லையா? சாராயத்துல கஞ்சா கலந்து குடிச்சி தற்கொலை பண்ணி இருக்கான் முட்டாள். இதுல லட்டர் வேற,

'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை நான் தான். நான் பண்ண பாவத்துக்கு நானே தண்டனையை கொடுத்துக்கிறேன். என் மரணம் தான் அதுக்கு சரி'

இந்த லட்டரை ப்ரெஸ் கிட்ட காட்டினா ஒரு பையன் நம்புவானா? என்னவோ நம்ம தான் கேஸ் வெளியே போக கூடாதுனு நாடகம் போடுறதா கதை கட்டி விட மாட்டானுங்க. எனக்கு மண்டை காயுது. மேலிடத்துல இருந்து போன் மேல போன். என்னத்தய்யா அங்க கிழிச்சிட்டு இருக்கீங்கனு கேட்டு" என்று கட்டுக்கடங்காத கோபத்தில் கத்திக் கொண்டு இருந்தார் அசிஸ்டன்ட் கமிஷனர் ராஜா.

"சார் சம்பத் சார் இப்படி பண்ணுவாருனு நாங்க யாரும் எதிர்பார்க்கல" என்று ஒருவர் கூற... அவரை முறைத்து பார்த்த ராஜா,

"கஞ்சா அடிச்ச மூதேவிக்கு சார்னு மரியாதை தான் ஒரு குறைச்சல்" என்று அவரிடமும் எரிந்து விழுந்தான்.

அவரோ அதன் பின் வாயை முடிக் கொள்ள... அருகில் இருந்த ஏட்டோ மெல்ல தன் முன்னால் நின்ற கான்ஸ்டபிளிடம் "வாயை வச்சிட்டு கொஞ்சம் நேரம் அமைதியா இருவோம். அந்த மனுஷன் தான் வயசுக்கு மரியாதை எல்லாம் கொடுக்க மாட்டாருனு தெரியும்ல. அப்புறம் என்ன நொன்னைக்கு முந்திரிக்கொட்டை மாதிரி பேசுறீங்க. வயசான காலத்துல அமைதியா இருந்துட்டு ரிட்டயர்மென்ட் வாங்கிட்டு போற வழியை பாருங்க" என்று மெதுவாக முணுமுணுத்தான்.

பின்னால் நின்றவனை தலையை மட்டும் திருப்பி பார்த்து "நீ மூடு" என்று செய்கை செய்தவர் அமைதியாக அவர்கள் முன் போனில் பேசியடி குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டு இருந்தவனை பார்க்க ஆரம்பித்தார்.

ஆஜானுபாகுவான உடல் அமைப்பும், முறுக்கி விட்டு இருந்த மீசையையும் பார்த்தவருக்கு அந்த அய்யனார் அப்பனே நேரில் வந்து சினத்துடன் கர்ஜித்துக் கொண்டு நடப்பது போல் தான் அந்த காட்சி அவர் கண்ணுக்கு தெரிந்தது.

என்ன சிறிய வித்தியாசம் என்றால், அந்த அருவாள் மட்டும் அவன் கரத்தில் இருந்தால், அப்படியே அந்த அய்யனார் அப்பனே நேரில் தரிசனம் கொடுத்தது போல் இருந்து இருக்குமோ என்னவோ. இப்பொழுது அவருக்கு.

தன் கைப்பேசியை அணைத்து விட்டு சிங்கம் போல் கர்ஜனையுடன் "முதல இந்த மீடியாக்காரங்களை துரத்தி விடுங்கய்யா. ஒரு இரண்டு பேர் சம்பத் வீட்டுக்கு முன்ன காவலுக்கு நில்லுங்க. நேத்து யார் யார் எல்லாம் மினிஸ்டர் வீட்டு பார்ட்டிக்கு போனாங்கனு லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்பி விடுங்க" என்று கட்டளையிட்டவன் விறுவிறுவென அந்த காவல்நிலையத்தில் இருந்து வெளியேறினான்.

தன் வாகனத்தில் வந்து அமர்ந்தவன் சாரதியை வாகனத்தை எடுக்க சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

ஒரு மாதம் கடந்து இருந்தது... அன்று சமுத்ரா பேசிய பேச்சிலிருந்து அந்த வீட்டு பக்கம் ஒருவரும் செல்லவில்லை.

அவ்வளவு ஏன் சமுத்ராவின் அன்னை கூட அதன் பிறகு தன் மகளை காண செல்லவில்லை.

காண செல்லவில்லை என்று சொல்வதை விட, சமுத்ரா அவரை வரவிடவில்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

அடுப்பில் பாலை வைத்தவள், குளித்து முடித்து விட்டு தன் கணவன் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி விட்டு, கொதித்துக் கொண்டு இருந்த பாலின் அடுப்பை அணைத்தவள்,

அவளிற்கும் அவள் மாமியாருக்கும் தேனீர் கலந்து எடுத்துக் கொண்டுச் சென்றாள்.

"அத்தை டீ" என்று நீட்ட,

அதை எந்த மறுப்பும் இல்லாமல் வாங்கிக் கொண்டு ஒரு வாய் குடித்தவர் "நீ நிச்சயம் வேலைக்கு போய் தான் ஆகணுமா சமுத்ரா?" என்று கேட்டார்.

"அடுத்த வேலை சோறு நம்ம சாப்பிட்டு தானே அத்தை ஆகணும். நான் இருக்கிற தைரியத்தில் தான் மனுஷன் உங்களை என் கிட்ட விட்டு செத்து போய்ட்டாரு. அவரோட அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தணும்ல" என்று அவர் அருகில் அமர்ந்து டீயை குடித்தாள் சமுத்ரா.

"அது இல்ல சமுத்ரா. உனக்கு என்ன வயசாகிடுச்சி. இப்படி என்னை போல முண்டமா இருக்க. உனக்குனு ஒரு வாழ்க்கை" என்று ஆரம்பித்தவரை ஒரு பெருமூச்சோடு பார்த்து விட்டு, அவர் குடித்து முடித்து இருந்த டம்ளரை வாங்கிக் கொண்டு,

"கணவனை இழந்த பொண்ணுங்க எல்லாரும் சொல்ற அதே டைலாக் நானும் சொல்லுவேன் நினைக்காதீங்க அத்தை. எனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு தான். ஆனால் அது எப்போனு எனக்கே தெரியாது. இங்கேயும், இங்கேயும்" என்று தன் மூளையையும் நெஞ்சையும் சுட்டி காட்டியவள்,

"இங்க இருந்து எப்போ உங்க பையனோட நினைப்பு போகுதோ அப்போ நான் என்னோட அடுத்த கட்ட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன் அத்தை. அதுவரை இந்த பேச்சை எடுக்காதீங்க. அப்புறம் உங்க பையனை மறக்கிறது ரொம்ப கஷ்டமாகிடும்" என்று தன் வலியை மென்று முழுங்கிக் கொண்டு சிரித்தபடி பேசியவளை வியப்பாக தான் பார்த்தார் அவர்.

"அவன் அடிக்கடி சொல்லிட்டே இருப்பான். 'யம்மா அவ ரொம்ப அழுத்தக்காரிம்மா... இரும்பு மனுஷி. அடிக்க அடிக்க தன்னை மெருகேத்திக்கிட்டே இருப்பா' சொல்லிட்டே இருப்பான். அவன் சொன்னது எந்த அளவுக்கு நிஜம்னு இப்போ நேரில் பார்க்கிறேன்" என்றவர் அவளை பாசத்தோடு பார்த்தார்.

அவளும் எதுவும் பேசாமல் தன் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டவள் "அத்தை சாப்பாடு எல்லாம் செய்து வச்சிட்டேன். அப்புறமா அந்த சாமன்களை மட்டும் கழுவி வச்சிடுங்க. நான் கிளம்புறேன்" என்று வாசற்படியில் செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.

அவரும் சரியென்று தலையை ஆட்டியவர் நடந்து போகும் மருமகளை கண்ணீரோடு பார்த்தார்.

தெருவில் இருக்கும் வீட்டின் மனிதர்களோ சமுத்ரா வருவதை அறிந்து அவர் அவர் முகத்தை திருப்பிக் கொள்ள... அப்பொழுது தான் வேலைக்குச் செல்ல வெளியே வந்த சில மனிதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் உள்ளேச் சென்று தண்ணீர் குடித்து விட்டு அவள் சென்றதும் வெளியே வந்து அவர் அவர்கள் பணியை பார்க்க ஆரம்பித்தனர்.

பெண்களாக பிறந்தாலே இந்த கொடுமைகள் எல்லாம் கடந்து தான் வர வேண்டி இருக்குமோ?

அதுவும் கணவனை இழந்த பெண்கள் என்றால் விதி விலக்கு எல்லாம் வேறு தான்.

அவர்களுக்கும் இதயம் ஒன்று இருக்கும்... அதற்கும் வலிக்கும் என்பதை எத்தனை சுலபத்தில் மறந்து விடுகிறார்கள் நம் போன்ற மனிதர்கள்.

இதையெல்லாம் சமுத்ரா வேலைக்குச் செல்ல வெளியே வர தொடங்கிய நாளிலிருந்து இந்த ஒதுக்கத்தை உணர்ந்தவள் மெல்லிய புன்னகையோடு வலியுடனே அனைத்தையும் கடந்து வர ஆரம்பித்தாள்.

கதையை பற்றி ஒரு நான்கு வரிகள் கூறிவிட்டு செல்லுங்கள்.


Thread 'உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி' https://pommutamilnovels.com/threads/உதிரம்-உமிழ்ந்து-ஊமையானதடி-369-கருத்து-திரி.1333/
 

T23

Moderator
அத்தியாயம்- 4

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் முதுகில் சுளிர் என்று வலியும் எரிச்சலும் ஏற்பட, பதறியடித்துக் கொண்டு கண்களை திறந்தவன் சுற்றி முற்றி அவ்விடத்தை பார்த்தான்.

அது பார்ப்பதற்கு அவன் இல்லம் போல் தெரிய, கண்களை கசக்கிக் கொண்டு மேலும் இமைகளை விரித்து பார்த்தான்.

அப்பொழுது "டேய் குமாரே என்னடா இப்படி தான் தூங்கிட்டே இருப்பீயா? எவ்வளவு நேரம் உன்னை எழுப்புறது. அதான் அப்பா ஒரு அடி போட்டாரு. வலிக்குதாடா" என்று அவன் தாய் மகனின் முதுகை வாஞ்சையாக தடவி விட்டபடி கேட்டாள் அவன் தாய் கஸ்தூரி.

அவனோ அன்னையின் குரலில் சட்டென திரும்பி பார்த்தவன் விழிகளில் முதலில் படிந்தது என்னவோ தாயின் மேடிட்ட வயிறு தான்.

அதன் பிறகு தான் அவன் கருவிழி அன்னையின் முகத்தை நிமிர்ந்து பார்த்தது.

எப்பொழுதும் போல் அதே புன்னகை முகம். பாய்ந்து அன்னையை அணைத்துக் கொண்டன் பயத்தில் நடுங்க ஆரம்பித்தவன் அழவும் செய்தான்.

கஸ்தூரியும் மகனை அணைத்தப்படி "என்னடா அப்பா ரொம்ப வேகமா அடிச்சிட்டாரா? ரொம்ப வலிக்குதா என்ன? இப்போ எதுக்குடா இப்படி அழுகுற?" என்று புரியாமல் குமாரிடம் கேட்டுவிட்டு தன் கணவனை முறைத்தபடி "நான் தான் அவனை அடிச்சி எழுப்பாதீங்கனு சொன்னேன்ல. இப்போ பாருங்க வலியில் எப்படி அழுவுறான்னு. பாவம் புள்ளையால சின்ன வலியை கூட தாங்க முடியல" என்று அவள் கண்களும் தானாக கலங்கியது.

மகனின் குலுங்கும் உடலை கண்டு சற்று அதிர்ந்து போன சண்முகம் "அடியே நான் வேகமா எல்லாம் அடிக்கலடி. சாதாரணமா தான் தட்டினேன்" என்று சொன்னவர் ஆட்டோவினுள் தலையை விட்டு குமாரை தன் பக்கம் இழுத்தவர் அவனை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி விட்டு,

"டேய் கண்ணா ரொம்ப வலிக்குதாப்பா?" என்று முதுகை வருடிக் கொடுத்து கேட்டார்.

தந்தையின் முகத்தை பார்த்த குமாருக்கு மேலும் அழுகை முட்டிக் கொண்டு வர... தன் தந்தையையும் பாய்ந்து கட்டிக் கொண்டவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

அதற்குள் ஆட்டோவிலிருந்து கீழே இறங்கிய கஸ்தூரி கணவனை பார்த்து "என்னங்க ஆச்சு இவனுக்கு..? ஏன் இப்படி அழுறான்..? ரொம்ப தேம்புறாங்க மூச்சு அடைச்சிக்க போகுது" என்று அவள் பதற, மகனை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்த சண்முகமோ அவனுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து மகனின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தார்.

பின்னால் வந்த கஸ்தூரியோ "இவன் அழுறதை பார்த்தா நீங்க ரொம்ப வேகமா அடிச்சிட்டீங்கனு நினைக்கிறேன். அதான் அவனால வலியை தாங்கிக் கொள்ளவே முடியல" என்று கணவனிடம் சண்டைக்கு போக தயாரானாள்.

சண்முகத்திற்கும் அது புரியவில்லை தான். அத்தனை வேகமாகவா தாம் அடித்து விட்டோம் என்ற குழப்பத்தோடு மகனின் முகத்தை பார்த்தார்.

அவனோ அவனின் வீட்டையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு முழித்தபடி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நின்றான்.

குமாரின் கன்னத்தை வருடிக் கொடுத்து அவன் தவடையை பிடித்து அவரை பார்க்க வைத்த சண்முகம்,

"குமாரே நிஜமா அப்பா அடிச்சதுக்கா அழுவுற?" என்று கேட்டார்.

குமாரோ இல்லை என்று தலையை ஆட்டியவன் விம்மலுடனே "நம்ம எல்லாரும் செத்து போய்ட்டோம்ப்பா" என்று சொல்லி மேலும் அழ... மற்ற இருவருக்குமே தூக்கிவாரி போட்டது.

"எதே செத்து போய்ட்டோமா? அடேய் இதோ பாருடா கை கால் எல்லாம் நல்லா தான் இருக்கு. நம்ம ஒன்னும் சாகல உயிரோட தான் இருக்கோம்" என்று குமாரின் தந்தை சண்முகம் கூற...

கணவனை முறைத்து பார்த்த கஸ்தூரி மகனின் தலையை ஆதரவாக வருடியவள் "தங்கம் என்னடா தூக்கத்துல கனவு கண்டியா?" என்று கேட்டாள்.

குமாரோ அவசரமாக தலையை இருப்பக்கம் ஆட்டியவன் "இல்லம்மா நெஜமா தான் சொல்றேன். நம்ம ஹாப்பிட்டல் போகும் போது எதிர்க்க ஒரு லாரி வந்துச்சா, அந்த லாரி தான் நம்ம ஆட்டோவை தூக்கி வீசிட்டு போச்சு. அப்போ நம்ம ஆட்டோ உருண்டு போய் விழுந்துச்சி. அதுல அப்பா தான் முதல செத்து போனாரு" என்று தந்தையின் புறம் குமார் விரலை நீட்ட,

அதில் திடுக்கிட்டு போன அவன் தந்தை "என்னது நான் முதல செத்து போனேனா? ஏன்டா கனவுல கூட என்னைய தான் முதல போட்டு தள்ளுவியா?" என்று ஆற்றாமையோடு கேட்டார் சண்முகம்.

"இது ரொம்ப முக்கியம் பாருங்க" என்று கணவனை கடிந்தவள் மகனிடம் "அப்புறம் என்னாச்சு?" என்று கேட்டாள்.

குமாரோ "அதுக்கு அப்புறம் என்னை தூக்கி அப்பா பக்கத்துல வச்சாங்க"

"ஓ நீயும் செத்து போய்ட்டியா?" என்று மாட்டி இருந்த சட்டை பட்டனை கழட்டியபடி சண்முகம் கேட்க...

அங்கே இருந்த ஒரு புக்கை எடுத்து கணவனின் மீது எரிந்தவள் "புள்ளை கிட்ட பேசுற பேச்சா இது?" என்று கேட்டவள் மகனை பார்த்து மேலும் கூறும்படி சொன்னாள்.

"ஆமா உன் புள்ளை கனவுல என்னை போட்டு தள்ளி இருக்கான். அது உனக்கு பெருசா தெரியல. உன் புள்ளையை பத்தி சொன்னதும் கோபம் வருதோ?"

"ஏங்க அவனே ஏதோ கெட்ட கனவு கண்டு பயத்துல அழுதுட்டு இருக்கான். அவனை சமாதானப் படுத்தாம, கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க" என்றவள் மகனிடம்,

"அப்புறம் என்னாச்சு?" என்று கேட்டாள்.

அவன் கண்ட கனவை வெளியே சொன்னால், அதன் தாக்கத்திலிருந்து மகன் வெளியே வந்து தெளிவு பெறுவான் என்று நினைத்தாள் கஸ்தூரி. அதனாலே அவன் மனதில் இருப்பதை கூறட்டும் என்று அமைதியாக இருந்தாள்.

குமாரோ அதற்கு பிறகு அன்னையின் இடுப்பை கட்டிக் கொண்டு தலையை நிமிர்த்தி கஸ்தூரியை பார்த்து,

"அப்புறம் உங்களையும் தூக்கி என் பக்கத்துல படுக்க வச்சாங்க. அதுக்கு பிறகு... நம்ம நம்ம பாப்பா" என்று மீண்டும் விம்ம ஆரம்பிக்க,

கஸ்தூரியின் மனம் ஏனோ பிசைய ஆரம்பித்தது. மகன் என்னவோ கனவு தான் கண்டு இருக்கிறான் என்று அவள் யோசித்தாலும், மகனின் அழுகையும் வார்த்தையும் அவளை என்னவோ செய்தது.

ஒரு கையால் மகனை அணைத்து இருந்தவள் மற்றொரு கரத்தால் தன் சிசுவை வருடிக் கொண்டு தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.

நேராக அலுவலகம் வந்த சமுத்ராவை வந்ததும் வராததுமாக மேனேஜர் சங்கர் அழைக்கிறார் என்று பணியாள் சொல்லிவிட்டு போக,

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டவள் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு மேனேஜரின் அறையை நோக்கி நடந்தாள்.

அதுவரை அவள் அருகில் அமர்ந்து கணினியை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அவள் எழுந்து போனதும்,

"பார்த்தீங்களா? நான் தான் அப்போவே சொன்னேனே. இந்த சமுத்ராவுக்கும் மேனேஜருக்கும் ஏதோ கனெக்சன் இருக்குனு. அப்போ என்னவோ அவள் உத்தமி பத்தினினு சொன்னீங்க. இப்போ என்ன சொல்றீங்க?" என்று அந்த குழுவில் இருந்த வாணி என்ற ஒருத்தி கேட்டாள்.

அதற்கு அருகில் இருந்த மகாலட்சுமியோ "ஆமாப்பா... நம்ம இவங்க சொல்லும் போது நம்பவே இல்ல. ஆனால் பாருங்களேன் அந்த சமு பொண்ணு வந்து உட்கார்ந்ததும் நம்ம மேனேஜர் கூப்பிடுறதை" என்று சொல்ல.

அதற்கு அடுத்து இருந்த செல்வமோ "ச்சைக் நான் கூட புருஷனை இழந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருப்பானு நினைச்சேன். இப்படி புருஷன் செத்து கொஞ்ச நாளிலே அடுத்த ஆளை தேடிட்டு போறா, இவ எல்லாம் ஒழுக்கமானவ த்தூ" என்று அவர் சொல்லி முடித்து திரும்பிய கணம் அதிர்ந்து போய் விட்டனர் அனைவரும்.

அங்கே அவர்களை தீயாய் முறைத்து பார்த்துக் கொண்டு நின்று இருந்த சமுத்ரா, ஒரு வார்த்தை கூட அவர்களை பார்த்து எதுவும் கேட்காமல் தன் கைப்பையை எடுத்து மாட்டியவள் திரும்பி நடந்துக் கொண்டே தன் தலை முடியை தூக்கி காட்டி செய்கை செய்தாள்.

அவள் என்ன சொல்றா என்று தெரியாமல் கேட்ட செல்வம் "நம்ம எல்லாம் அவளோட ம***க்கு கூட சமம் இல்லையாம்" என்று சொல்ல.

மற்றவர்கள் அவரை திரும்பி முறைத்தனர்.

அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறிய சமுத்ராவிற்கு நெஞ்சில் பாரம் ஏறிக் கொண்டே போனது.

மனதின் கனம் தாங்க முடியாமல் அழுததை உணர்ந்தவள் நேராக பஸ் பிடித்து சுடும் வெயிலில் அந்த கடலை நோக்கி நடந்தாள்.

அவள் இருந்த அந்த மனநிலையில் அவளுக்கு அந்த வெயில் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போல்.

கொதிக்கும் கடல் மண்ணில் அலைகளை பார்த்தபடி அமர்ந்தவள் நினைவோ மேனேஜர் அறையில் நடந்ததை அசைப்போட்டது.

அவள் அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே போக, மேனேஜரோ "வா சமு" என்று வழிந்தபடி அழைத்தார்.

அவளோ "சார் என் முழு பெயரை சொல்லி கூப்பிடுங்க. இந்த சமு கிமு எல்லாம் வேணாம்" என்று முகத்தில் அடித்தது போல் அவள் சொல்ல.

சங்கரோ "அட பேர்ல என்னம்மா இருக்கு. சரி நான் கேட்டதுக்கு நீ என்ன முடிவு பண்ணி இருக்க? உன் புருஷன் செத்து போய்ட்டான்.பாவம் நீ தனியா எப்படி எல்லாத்தையும் சமாளிப்ப" என்று அவர் வெளிப்படையாகவே கூற...

அவள் காதுகள் தான் கூசிப் போனது.

"என் அப்பாவோட வயசு சார் உங்களுக்கு. ஒரு மகளா பார்க்க வேண்டிய பொண்ணை கூட படுக்க கூப்பிடுறீங்களே அசிங்கமா இல்லையா சார் உங்களுக்கு?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டாள்.

சங்கரோ "ஓ நான் வயசானவன்னு யோசிக்கிறீயா? வயசானாலும் நான் உன்னை முழுசா திரு" என்று அவர் சொல்லி முடிக்கும் முன் அனலாக அவரை முறைத்தவள்,

"உன்னெல்லாம் அடிச்சே கொல்லணும் போல இருக்கு. ஆனா என் கை உன்னை மாதிரி அசிங்கம் பிடிச்சவனை அடிக்க உன் மேல தொட்டா கூட என் புனித தன்மை போயிடும். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என்னைக்கா இருந்தாலும் உன் சாவு என் கையால தான்" என்று ஆத்திரமாக பேசியவள் விறுவிறுவென வெளியேறி தன் இருப்பிடம் வந்தாள்.

அவள் போவதை ஒரு வித இளக்காரமாக பார்த்த சங்கரோ "போடி போ, கொஞ்ச நாள் போச்சுனா நீயே என்ன தேடி வருவ" என்று தனக்கு தானே பேசிக் கொண்டார்.

பின் தன் இருப்பிடம் வந்த சமுத்ராவின் செவிகளில் உடன் பணிபுரிபவர்களின் சொற்களை கேட்டு தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாள்.

அவள் மனதோ நெருப்பாக கொதித்துக் கொண்டு இருக்க அவள் விழிகள் இப்பொழுது கண்ணீரை விட தொடங்கியது.

கணவனின் சடலத்தின் முன் அவள் கண்ணீர் சிந்தியதோடு சரி. அதன் பிறகு இன்று தான் மீண்டும் அவள் கண்ணீர் வெளியேறுகிறது.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்..? நான் அப்படி என்ன பெருசா ஆசைப்பட்டேன். என் புருஷன் கூட சந்தோஷமா வாழணும்னு மட்டும் தானே ஆசைப்பட்டேன். அந்த ஆசையும் இப்படி நிராசையா போச்சு. ஆனால் இப்போ,

ஏன் ஒரு பொண்ணால கணவன் இல்லாமல் தனியா வாழ்ந்து காட்ட முடியாதா? அப்படி வைராக்கியத்தோடு வாழ்ந்து காட்டணும்னு முடிவோடு இருந்தாலும், அந்த சங்கர் மாதிரி ஆளுங்களால நிம்மதியே இல்லாமல் போகுது.

அப்படி என்ன கெடுதல் இந்த பூமிக்கு நான் செய்துட்டேன். என் வாழ்க்கையில மட்டும் எதுக்கு இத்தனை போராட்டாங்கள்?" என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அலைகளைப் பார்த்து தீயாய் கேள்வி கேட்டாள் சமுத்ரா.

அச்சமயம் "பெண்களாக பிறந்தாவே போராட்டங்களை சமாளித்து கடந்து தானே வர வேண்டும்" என்று கேட்டபடி அவள் அருகில் ஒரு சிறிய பெண் புன்னகை முகத்தோடு வந்து அமர்ந்தாள்.

அச்சிறுமியை திரும்பி பார்த்த சமுத்ராவின் விழிகள் சுருங்கி "உ... உன்னை எ... எங்கேயோ பார்த்த போல இருக்கே" என கேட்ட அந்த கணம், அச்சிறுமி பலமாக சிரிக்க தொடங்கினாள்.

தன் காக்கிச் சட்டையை மாட்டிக் கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தவன் விழிகள் அந்த நுழைவாயிலில் ஒரு கணம் படிந்து மீள, அதன் அருகில் சென்ற ராஜாவோ நின்ற இடத்திலே அந்த இடத்தையும் அத்தெருவையும் ஒரு முறை சுற்றி பார்த்தான்.

பின் "என்ன இந்த பாட்டி அன்னிக்கு மாம்பழம் கொடுத்துட்டு போனதோட சரி. அப்புறம் ஆளையே காணுமே. எப்போவும் டியூட்டி முடிச்சுட்டு வரும் பொழுது எல்லாம் இங்கேயே நின்னுட்டு இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமா ஆளையே காணும். ஒருவேளை டிக்கெட் வாங்கிடுச்சோ" என்று புலம்பியவன் மனமோ,

'இன்னிக்கு யாரையாவது அனுப்பி அந்த பாட்டியை பத்தி விசாரிச்சிட்டு வர சொல்லணும்' என்ற முடிவோடு தன் பணிக்கு கிளம்பினான் ராஜா.

அவன் ஜீப் அந்த தெருவை தாண்டிய அதே சமயம் ராஜாவின் கைப்பேசி அலற, அதை எடுத்து காதில் வைத்தவன் "சொல்லுய்யா" என்று பேச ஆரம்பித்தான்.

மெல்ல கண்விழித்த அன்பு மீண்டும் அதே போல் கண்களை சுழல விட்டு தான் எங்கே இருக்கிறோம் என்று பார்த்தான்.

அதுவோ அவன் வீடாக இருக்க... வியப்புடன் மீண்டும் அந்த இடத்தை சுற்றி பார்த்தான்.

அச்சயம் "டேய் அன்பே என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்க. உன் கூட்டாளி பையன் ஒருத்தன் வந்து உன்னை ரொம்ப நேரமா எழுப்பிட்டு இருந்தான். ஆனால் நீ முழிச்சிக்கல நல்ல தூக்கத்துல இருந்த. சரினு உன்னைவுட்டு அவனும் வேலைக்கு கிளம்பிட்டான். நீ எழுந்ததும் நேரா முக்குட்டுக்கு வர சொன்னான்டா" என்று சீரியலை பார்த்துக் கொண்டே காய்கறிகளை அரிந்தபடி அன்பின் தாய் சொல்லிக் கொண்டு இருக்க...

அவனோ "சரிம்மா நசநசனு கத்திட்டு இருக்காத" என்று கூறிவிட்டு யோசனையோடு துண்டை எடுத்து தோளில் போட்டபடி குளிப்பதற்காக பின்பக்கம் சென்றான்.

அவன் எண்ணம் முழுவதும் "என்ன இது... நம்ம ஹாஸ்ப்பிட்டல கண்முழிச்சது போல இருந்துச்சே. அப்புறம் அந்த நர்ஸ், பார்க்க செமயா இருந்தா. ஏதோ ஊசி போட்டுச்சே" என்று தன் கையை ஆராய்ந்தான். ஆனால் அங்கே ஊசிப் போட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக... பல்லை ஒரு கையால் விலக்கிக் கொண்டு மற்றொரு கையால் தலையை சொரிந்தவனுக்கு அப்பொழுது தான் அச்சிறுமியின் நினைவு வர... சட்டென்று அவள் முகம் கண் முன் வந்து சென்றது.

அதே நேரம் "அம்மா எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். உன் தங்க புத்திரனை சாயங்காலம் வரும் போது என்னை கூட்டிட்டு வர சொல்லு" என்று அவன் தங்கை பைரவி குரல் கேட்டது.

அவனும் அவசரமாக வாயை கொப்பளித்துவிட்டு முகத்தை கழுவியவன் துண்டால் துடைத்தபடி வேகமாக அந்த வீட்டின் முன் வாசலுக்கு வந்தவன் தங்கையை பார்த்து,

"ஏய் நில்லு" என்று சொல்லி பைரவியை நிறுத்தினான்.






 
Status
Not open for further replies.
Top