ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆண் தேவதை

காதல் என்ற பெயரில் எத்தனை விதமான அநியாங்கள் நடக்கின்றன பெண்களின் கற்பை பறிக்கிறார்கள்,அழகை அழிக்கிறார்கள், சமுதாயத்தின் முன் கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள் இந்த கல் நெஞ்சு படைத்த ஆண்கள். தாங்களும் ஒரு பெண்ணுக்கு பிறந்தவர்கள் எனபதை ஏன் மறந்து போகிறார்கள் இந்த அக்கிரமக்கார்ர்கள்:mad::mad::mad::mad:
 

Selvi2003

Member
சூரிய ஒளி ஜன்னலினூடு அவள் வதனத்தை அடைய, அந்த வெளிச்சத்தில் கண் விழித்தாள் பிரியங்கா. படுத்தபடி சிறிது நேரம் விட்டத்தை பார்த்தவள் கண்களோ அடுத்து முன்னால் சுவரில் தொங்கிக் கொண்டு இருந்த நாட்காட்டியில் பதிய அன்றைய திகதியை பார்த்ததுமே மனம் கனத்துப் போன உணர்வு. இந்நேரம் மண மேடையில் அமர்ந்து இன்னொருவன் மனைவியாக மாறி இருக்க வேண்டிய தருணமது.. ஆனால் இன்றோ எழுந்து கோர்ட்டுக்கு போக ஆயத்தமாக வேண்டிய சூழ்நிலை. அனைவரும் எப்போதும் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவளோ மனம் கேட்காமல் இன்று வேறு பெண்ணிற்கு தாலி கட்ட இருக்கும் தனது முன்னாள் மணாளனுக்கு திருமண வாழ்த்தை அனுப்பி விட்டு விரக்தி புன்னகையுடன் எழுந்து அமர்ந்தவளுக்கு பாதத்தை தூக்கி வைக்க கூட மனதில் தெம்பில்லை. சிறகு உடைந்த பறவையின் நிலை அவளுக்கு. பெருமூச்சுடன் விரக்தியாக புன்னகைத்தவள் அடுத்து சென்றது குளியலறைக்கே.. அங்கு முகத்தை அடித்துக் கழுவியவள் கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக் கொண்டாள். சில நிதர்சனங்களை வாழ்க்கையில் அங்கீகரித்து தான் ஆக வேண்டும் என்று நினைத்தவளது கண்களோ அவளையும் மீறி கலங்கி போயின. எவ்வளவு நேரம் தான் வலியே இல்லாத போல் அவளால் நடிக்க முடியும்?
வாயை மூடி வலியை தனக்குள் விழுங்கிக் கொண்டவள் குளித்து ஆயத்தமாகி அறைக் கதவை திறக்க, அவள் முகத்தை ஏறிட்டு பார்த்த அவள் தந்தையின் கண்கள் கலங்க, அவள் தாயோ திருநீறு எடுத்து வந்து அவள் நெற்றியில் இட்டவர் "பொய்ட்டு வாம்மா" என்றார். கூட வர ஆயத்தமான தந்தையை தடுத்து நிறுத்தியவள் "தனியா பொய்ட்டு வரேன்பா" என்று சொல்லி விட்டு அருகில் இருக்கும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தாள்.
சிறகொடிந்து இன்று நடை பயிலும் பெண்ணவளோ அன்று சிறகு விரித்து வலம் வந்த தங்க சிலையாவாள். ஐந்தரை அடி உயரத்தில் நீளமான கூந்தலுடன் , பிரம்மன் அனைத்து அழகையும் ஒரே பெண்ணில் கொட்டிப் படைத்த பேரழகி அவள். சினிமா நடிகைகளை எல்லாம் எம்மாத்திரம் என்று கேட்கும் அளவுக்கு இருந்தவள் பின்னே சுற்றாத வாலிபர்கள் இல்லை. ஆனாலும் நடுத்தர குடும்பத்துப் பெண்ணான அவள், இந்த காதலில் விழுந்து விடாமல் படித்து முன்னேறி ஒரு கம்பெனியிலும் வேலைக்கு சேர்ந்து கொண்டாள்.
காதல் சொல்ல வந்தவர் யாரையும் அவள் அசிங்கப்படுத்தியது இல்லை, கண்ணியமாகவே மறுப்பு தெரிவிப்பவளுக்கு வசை பாடும் ஆண்களும் அடக்கம். அதனைக் கூட புன்னகையுடன் கடந்து சென்றவளின் வீடு தேடி ஒரு பணக்கார குடும்பம் மகனின் ஆசையை நிறைவேற்ற பெண் கேட்டு வந்து இருந்தார்கள்.
பணம் என்றதும் பிரியங்காவின் தந்தை முதலில் தயங்கிய போதும் , அவர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்து திருமண திகதியையும் குறித்துக் கொண்டார்கள்.
இன்று இந்த திகதியில் திருமணம் நடக்க வேண்டியது, ஆனால் அவளவனோ வேறு பெண்ணுக்கு கணவனாக அந்த தருணத்தில் போய் விட, இவளோ பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு இருந்தாள். அவள் அருகே ஒரு தாய் மகளுடன் நிற்க, அந்த குழந்தையோ பிரியங்காவையே மிரட்சியாக பார்த்துக் கொண்டு இருந்தது. தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தவள் அங்கு தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் குழந்தையை கண்டு மெல்லிய சிரிப்புடன் தனது தோளில் கிடந்த ஷாலை எடுத்து தலையை மறைத்துக் கொண்டாள். அவள் இதழ்கள் புன்னகைத்தாலும் மனதிலோ ஆணியால் அடிப்பது போன்ற வலி அது.
அதே மன நிலையுடன் பஸ்ஸில் ஏறி ஒரு பெண் அருகே இருக்கப் போக, அந்த பெண்ணோ இருக்கையில் இடமே விடாமல் அமர்ந்து கொண்டார். அதைக் கண்டவளுக்கோ "இப்படி வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்?" என்று சத்தமாக கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் உணர்வுகளை தனக்குள் அடக்கியவள் கம்பியை பிடித்துக் கொண்டே நின்று இருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் எப்போது உருண்டு விழும் என்ற நிலையில் இருக்க, அவள் இறங்கும் இடமும் வந்து சேர்ந்தது. இறங்கி கோர்ட்டை நோக்கி நடந்தவளில் அங்கிருந்த அனைவர் விழிகளும் பதிந்து மீண்டது. இந்த பார்வைக்கு பழக்கப்பட்டவள் அனைவரையும் தாண்டி சென்று கோர்ட்டினுள் நுழைந்தாள்.
அவளைக் கண்டதுமே அவளை தேடி வந்த வக்கீல், "நம்ம கேஸ் தான்மா முதலில " என்றதும் அவளும் சம்மதமாக தலையை ஆட்டினாள். நீதிபதியும் அங்கு வந்து சேர, அடுத்து வாக்கு மூலத்துக்காக பிரியங்காவின் பெயர் மூன்று முறை அழைக்கப்பட்டது. எழுந்து சென்று கூண்டில் ஏறியவள் தன்னை மறைத்து இருந்த ஷாலை விலக்கி நீதிபதியை பார்க்க அவர் கண்கள் கூட கலங்கி போனது. ரதியாக இருந்தவள் முகமோ ஆசிட் வீச்சினால் முற்றாக சிதைந்து முடியின் ஒரு பக்கம் வழுக்கையாகி, கண் ஒன்று பார்வை மங்கி இருக்க, அவளைக் கண்டதுமே அங்கு இருந்த அனைவர் முகமும் பேய் அறைந்தது போல ஆனது. நீதிபதியோ முதலில் தன்னை சுதாகரித்தபடி "சொல்லுங்கம்மா என்ன நடந்தது?" என்று கேட்க , அவளையே வக்கிரமாக பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்த மிருகத்தை ஏறிட்டு பார்த்தாள். அவன் முகத்தில் எதையோ சாதித்த உணர்வு, ஆம் அவன் தான் நினைத்ததை சாதித்து விட்டான் அல்லவா?
அழகே உருவானவளிடம் காதலை சொன்னவர்களில் அவனும் ஒருவன்.. அவளுக்கு திருமணம் என்று சொன்னதுமே தனக்கு கிடைக்காத அழகு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற வெறியில் அவள் முகத்தில் அமிலத்தை வீசி அவள் அழகை முற்றாக உருகுலைத்தவன் அவன்.
அவளோ அவனை ஏறிட்டு பார்த்து, "இப்போ சந்தோஷமா தினேஷ், இது தான் உன் காதலா? இப்போ கூட பயமில்லாம நீ நிற்க ஒரே காரணம் நீ காசை வச்சு வெளிய வர முடியும் என்கிற அந்த தைரியம் தானே" என்று கேட்க சிரித்துக் கொண்டு இருந்த அவன் முகம் பேயறைந்தது போல ஆனது. அவள் அழுவாள் ,கதறுவாள் என்று நினைத்து இருக்க, அவளோ நிமிர்ந்து நின்று அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டல்லவா இருக்கிறாள்?. அடுத்து நீதிபதியை பார்த்தவள் " யுவர் ஹானர் எனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச அடுத்த நாளே என்னோட முகத்துல ஆசிட் அடிச்சது தினேஷ் தான்,.. நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கே தெரில,, அவன் தன்னோட லவ்வை சொன்ன போது கூட நான் கண்ணியமா தான் பதில் சொன்னேன், அழகா பிறந்தது தான் தப்பா? ஒரு பொண்ணை காதலிக்கும் போது அவ சந்தோஷமா இருக்கணும்னு நினச்சா அது தான் உண்மையான காதல், இப்படி அசிட் அடிச்சு ஒரு பொண்ணை முழுசா நிர்மூலமாக்கிறது தான் காதலா? அழகு ரெண்டாம் பட்சம் ஆனா அசிட் பட்டதும் அந்த வலி எப்படி இருக்கும் தெரியுமா?" என்று கேட்ட போதே அவள் கண்ணில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் உருண்டு விழுந்தது. கண்களை துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவள் "நமக்கு ஒரு சின்ன தீ காயம் பட்டாலே எவ்வளவு எரியும்? இது முழுக்க முழுக்க என் முகம் கழுத்து மார்புன்னு எல்லாமே சேர்த்து எரியும் போது அந்த வலி சொல்லவே முடியாது.. என் கண் ஒன்னு தான் இப்போ தெளிவா தெரியும்,, என் அடுத்த கண் " என்றவள் இரு பக்கமும் தலையாட்டிவிட்டு, "இன்னைக்கு எனக்கு கல்யாண நாள், அசிட் அடிச்சதுமே என்னை கல்யாணம் பண்ண வந்த மாப்பிள்ளை என்னை வேணாம்னு சொல்லிட்டார், இங்க அழகுக்கு தான் மதிப்பு.. , பஸ் ஸ்டாண்ட்ல என் கிட்ட தினமும் முத்தம் கேட்கிற சின்ன பொண்ணு, இன்னைக்கு என்னை பார்த்து பயந்து போய் நிற்கிறா , பஸ்ல என்னை ஏதோ அருவருத்த பொருள் போல பார்க்கிறாங்க, ரொம்ப வலிக்குது.. இந்த வலியில இருந்து நான் மீண்டு வர இந்த சமுதாயம் என்னை விட மாட்டேங்குறாங்க," என்று அவள் பேசி முடிக்கவே அனைவர் கண்களும் அங்கே கலங்கி போயின.
மேலும் தொடர்ந்தவள் "இந்த கேஸ்ல ஆஜர் ஆக வேணாம்னு நிறைய பேர் சொன்னாங்க, என்னை ஏதும் இவன் பண்ணிடுவான்னு பயம் காட்டினாங்க, அப்படி என்ன பண்ண முடியும் ? என் கிட்ட எஞ்சி இருக்கிறது என்னோட கற்பும் என்னோட உயிரும் தான், அவன் நினச்சா கூட அவனால என்னை கற்பழிக்க முடியாது, என்னை முழுசா பார்த்தாலே பயந்துடுவான், அவன் போட்ட கோலம் தான் என் உடம்பு முழுதும் இருக்கு, எனக்கு கல்யாணமே கனவு தான், அப்படி கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்தா கூட, என் குழந்தைக்கு பாலூட்ட கூட முடியாம என் மார்பு சிதைஞ்சு போய் இருக்கு.. அத நினைக்கும் போதே எப்படி வலிக்கும் தெரியுமா? இப்போ மீதி இருக்கிறது என் உயிர் மட்டும் தான்.. அது போனா போகட்டும், ஆனா தப்பு செய்தவன் தைரியமா நடமாட கூடாதுன்னு தான் இந்த கேஸ் போட்டேன், " என்று சொன்னவளது நிமிர்வில் நீதிபதியே புன்னகைத்துக் கொண்டார். உடனே அவள் தரப்பு வக்கீல் "யுவர் ஹானர் , இந்த சம்பவத்துக்கு சாட்சியாக பக்கத்துல இருந்த கடையில மாட்டி இருந்த சி சி டி வி காட்சி" என்று சொல்ல தினேஷுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அவன் எதிர்பார்க்காத சாட்சி அல்லவா அது? யாரும் தைரியமாக வந்து சாட்சி சொல்ல பயந்த கணத்தில் ஒரு கருவி அவனுக்கு எதிராக திரும்பி இருக்கிறது அல்லவா? அவன் மோட்டார் வண்டியில் வந்து தினேஷ் ஆசிட் அடித்ததும் அவள் முகத்தை மூடியபடி வலியில் நிலத்தில் விழுந்து துடிப்பதும் தெளிவாக அந்த காட்சியில் பதிந்திருந்தது.
அதைக் கண்டதுமே அனைவரும் உறைந்து போக, அவளோ விரக்தியாக சிரித்தபடி "இது உங்களுக்கு சாதாரண காட்சி தான், எனக்கு உயிர் போற வலி, " என்றவள் நீதிபதியிடம் "உங்க பொண்ணுக்கு இப்படி நடந்தா என்ன பண்ணி இருப்பீங்க யுவர் ஹானர் ? செய்யாத தப்புக்கு ஏன் எனக்கு இந்த தண்டனை? " என்று தனது முகத்தை காட்டி கேட்க கேட்க, அவரோ மெலிதாக அவளைப் பார்த்து புன்னகைத்தவர் "கண்டிப்பா என் பொண்ணுக்கு நீதி வாங்கி கொடுப்பேன் மா " என்றவர் பெருமூச்சோடு உடனடியாக தீர்ப்பெழுத ஆரம்பித்தார்.
அதைக் கண்ட தினேஷின் விழிகள் விரிந்து கொண்டது, ஆம் அவன் பணம் கொடுத்து வாங்கிய நீதிபதி அல்லவா அவர், கல்லுக்குள்ளும் ஈரம் போல, பிரியங்காவை தனது மகள் ஸ்தானத்தில் வைத்து பார்த்தவர் மனம் வலிக்க ஆரம்பிக்க, அவனுக்கு பதினைந்து வருட கடுங்காவல் தண்டனை எழுதி தீர்ப்பளித்தவர் அவனை இளகாரமாக பார்த்து விட்டு எழுந்து கொள்ள, அவரை நோக்கி கரம் கூப்பியவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
என்ன தான் அவனுக்கு தண்டனை கொடுத்தாலும் காலம் முழுதும் அவளுடன் இருக்கும் அந்த வலியினை அவ்வளவு இலகுவில் ஆற்றி விட முடியுமா என்ன? அவளை பார்க்க தவம் இருந்த கண்கள் அனைத்தும் இப்போது அருவருப்பில் உலா வர, மனதுக்குள் நொறுங்கி போனாள். தான் அழகு என்ற திமிர் இல்லாத பாவை அவளை அந்த அழகே இப்போது சிதைத்து இருந்தது. மனதுக்குள் முதன் முறை "ஏன் கடவுளே என்னை அழகா படைச்ச?" என்று குமுறியவள் மனமோ அழகை மட்டுமே ஆதாரமாக கொண்டு சுழலும் இந்த சமூகத்தை முற்றாக வெறுத்தது.
அங்கு அவளையே அனைவரும் பரிதாபமாக பார்க்க, அந்த பார்வையை வெறுத்தவள் அங்கிருந்து அகன்று ஒரு பூங்காவில் வந்து இருந்து கொண்டாள். அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் , "தான் காதலித்த பெண்ணின் சந்தோஷத்தை சிதைப்பதற்கு பெயர் தானா காதல்? அப்போ என் அழகை தான் எல்லாரும் விரும்பி இருக்கிறாங்களா ? நல்ல மனசுக்கு இங்க மதிப்பே இல்லையா?" என்று தினேஷ் தொடக்கம் தன்னை திருமணம் செய்ய வந்தவன் வரை நினைத்தவள் மனமோ தன்னிலை எண்ணி கண்ணீர் வடிக்க, அவள் முன்னே கைக்குட்டையை நீட்டியபடி அவள் அருகே இருந்தான் கார்த்திக்..
அவன் வேறு யாருமல்ல அவளுடன் வேலை செய்யும் நண்பன் தான். ஒரு காலத்தில் அவளிடம் காதலை சொன்னவர்களில் ஒருவன், அவள் திருமணம் என்றதுமே அவளை வாழ்த்திய நல்லுள்ளம் அவன். அவனை திரும்பி பக்கவாட்டாக பார்த்தவள் அவன் கை குட்டையை வாங்கி கண்ணீரை துடைத்தபடி "எப்படி இருக்க கார்த்திக்?" என்று கேட்க, அவனோ "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டான். அதைக் கேட்டவள் கண்கள் விரிய அவனைப் பார்த்து "என் மேல பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்று கேட்க அவனோ "நான் எதுக்குடி உன் மேல பரிதாபப்படணும்? பரிதாபபடுற அளவுக்கு உனக்கு என்ன ஆச்சு? நல்லா தானே இருக்க... நான் காதலிச்ச மனசு வேகண்ட் ஆஹ் இருக்குன்னு நினைக்கிறன்..கல்யாணம் பண்ணிக்கலாமா? " என்று சொல்லி அவளைப் பார்த்து மீண்டும் கேட்க , அவள் ஒற்றைக் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, "மனசு ரொம்ப பாரமா இருக்கு கார்த்திக், ஐ நீட் எ ஹக் " என்றாள். அடுத்த கணமே அவளை காற்றுப் புக முடியாமல் இறுக அணைத்து இருந்தான் அவளவன்.. வக்கிர ஆண்கள் மத்தியில் வலியில் துடித்துக் கொண்டு இருக்கும் அவளை காக்க வந்த ஆண் தேவதை அவன். ஆண்களில் அசுரர்கள் மட்டும் அல்ல ஆண் தேவதைகளும் இருக்கிறார்கள் என்று அவளுக்கு உணர்த்தி இருந்தான் கார்த்திக். அவளும் அவன் அணைப்பில் குழந்தை போல, அவள் மன வலியை கண்ணீரில் கரைத்துக் கொண்டாள்.
அருமையான கதை 👌👌👌👌👌
 
Top