ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தகார காதகம் கதை திரி

Status
Not open for further replies.

Rishma hutha

New member
Wonderland writer
InShot_20241029_200443648.jpg


காதகம் 01

நள்ளிரவு கூடவே இருள் நிறைந்த கானகம், வழமை போல் இன்றும் உடல் ஒன்று அதே முறையில் கொல்லப்பட்டு அந்த கானகத்தின் நடுவே வீசப்பட்டிருந்தது "அந்தகார காதகம் ஒன்பது" என்று அந்த இறந்த உருவத்தின் இரத்ததால் எழுதப்பட்ட வெண்ணிற ஆடை ஒன்றினால் இறந்த உருவம் மூடப்பட்டிருந்தது.

இந்த தொடர் கொலைகள் இன்று நேற்று என்றில்லை, கடந்த ஒரு வருடமாக தொடர்கிறது. இதோ ஒன்பதாவது கொலையும் நிகழ்ந்துவிட்டது.

காவல்துறையின் கண்ணில் சிக்காமல் தம்பிக்கும் கொலையாளி வெகு சீக்கிரத்தில் சிக்கிகொள்வாரா?
_________________________

காலையில் சமையல் வேலைகளை முடித்து, மேலே உள்ள அறையை நோக்கிய சாரதா "ரம்யா சாப்பாடு ரெடி கீழ வாம்மா" என்று குரல் கொடுத்தவர்.. மீண்டும் சமயறைக்குள் நுழைந்து கொண்டார்.

கணவனையும் மகனையும் இழந்த சாரதா தனியாளாக தான் இருந்தார். கடந்த இரண்டு வருடங்களா அவர் கூட்டுக்குள் ரம்யஸ்ரீயும் நுழைந்து கொண்டாள்.

அவளுக்கு இருந்த ஒரே உறவு அவளது தாத்தா ராமசாமி தான். இரண்டு வருடங்களின் முன் அவர் இறைவனடி சேர்ந்திருக்க, நிலவன் அவளை தனித்து விடவில்லை கூடவே அழைத்து செல்வதாக சொல்லியும், பிடிவாதமாக மறுத்தவளால் சாரதா அவர் துணைக்கு வரவேண்டும் என்னும் போது மறுக்க தோன்றவில்லை.. இதுவும் நிலவன் வேலை என்பதை அவள் அறிவாள் தான். இருந்தும் மறுக்கவில்லை..

(நிலவன், ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே கதையோட நாயகன்.. ரம்யாவின் தாத்தா ராமசாமி கான்ஸ்டபிளாக வேலை செய்த காவல் நிலையத்தில் ஏசிபியாக பணியாற்றியவன், ரம்யாவின் இக்கட்டான சூழ்நிலையில் அவளுக்கு உதவி, அவளை மீட்டெடுத்தவன். சாரதாவின் கணவன் மகன் இறப்புக்கு முக்கிய காரணம் இவன் தான்.. அதில் அவருக்கு முரண்பாடு இருக்கவில்லை அந்த கொடூரர்கள் உயிரோடிருப்பதில் அவருக்கும் உடன்பாடில்லை)


"சாரதாம்மா, இன்னைக்கு ஒரு முக்கியமா கேஸ் சீக்கிரமே போகணும், அங்க ஏதாச்சும் சாப்பிட்டுக்கிறேன்" என்றவள் கடிவாளமிடாத குதிரை போல் ஓடமுயல, பிடித்துக்கொண்டார் சாரதா.

"அதெல்லாம் ஒன்னும் டைம் ஆகாது, ரெண்டு வாய் சாப்பிடுறதுல எதுவும் குறஞ்சி போய்ட போறதில்ல உக்காரு"என்று அதட்டி உக்கார வைத்தவர் "என்ன தலை போற வேலையா இருந்தாலும் முதல்ல நம்ம உடம்ப நாம பாத்துக்கணும் அப்போ தான் நம்ம உடம்பும் மனசும் நம்மள பாத்துக்கும், இப்படியே என்னையே பாத்திட்டு இருந்தேன்னு வையேன் நாளைக்கு தான் கோட்டுக்கு போவ" என்றார்.

அவர் பேசியதையே இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு இறுதி வசனத்திலயே அவசரம் புரிய, "அச்சோ சாரதாம்மா இப்படி பேசி உங்க அழகுல டெய்லி என்னையே மறக்க வெச்சிடுறீங்க போங்க" என்றவள் ஒரு சப்பாத்தியை சாப்பிட்டு முடித்து "செம டேஸ்டா இருக்கு சாரதாம்மா ஒன்னோட போகவும் மனசில்ல அதனால இது" என்று இன்னொன்றை மசாலாவுடன் சுற்றி எடுத்துக்கொண்டவள் அவளது ஸ்கூட்டியை நோக்கி ஓடினாள்.

"ஈவினிங் பொண்ணு பார்க்க வராங்க ரம்யா, சீக்கரம் வந்துடு" என்க "வரேன் வரேன்" என்று அங்கிருந்தே கத்தியவளோ கிளம்பி இருந்தாள்.

________________________

அங்கே முன்னால் ஐஜி பாலமுரளிகிருஷ்ணனின் வீட்டிலோ சத்தமாக தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

"சென்னையை உளுக்கிக்கொண்டிருக்கும் தொடர் கொலைகளின் வரிசையில் நேற்று அதே கானகத்தில் அடுத்த உடல் கிடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சுந்திரமாக கொலைகளை செய்யும் அந்த கொலையாளி நோக்கம் என்ன என்பதை இந்த முறையேனும் காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்காமல் கொலையாளியை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதே மக்களின் கேள்விக்குறியாக உள்ளது?" என்ற செய்தி வாசிப்பாளரின் குரல் அந்த அறையை நிறைக்க, அந்த நேரம் உள்ளே வரும் தம்பியை கண்ட அமரகத்தியனோ தொலைக்காட்சி பெட்டியை அனைத்திருந்தான்.

"வா ஆதி, என்னாச்சு இந்த முறையாச்சும் எதனா எவிடென்ஸ் சிக்கிச்சா?" என்று கேட்க, அவன் தம்பி அருளாதித்யனோ அவனருகில் அமர்ந்தவன், இடம் வலமாக தலையாட்டியவன் உதட்டை பிதுக்கயபடி "நோ அமர் விக்ட்டிம் செம சார்ப், ஒரு சின்ன வித்தியாசம் கூட இல்லை.. அந்த காட்டுக்கு நடுவுல பாடிய போட்டும் விடியிற வர எந்த அனிமலும் அட்டாக் பண்ணல ஏன் கிட்ட கூட நெருங்கல, இத்தனைக்கும் பிளடால தான் எழுதியே வைக்கிறான்"

"ஏதாச்சும் மெடிசின் இன்ஜெக்ட் பண்ணி இருப்பானோ?" என்று அமர் சந்தேகமாக கேட்க, ஆதியோ "இல்ல அமர் அப்படியும் செக் பண்ணி பாத்தாச்சு எந்த யூஸும் இல்ல.. உடம்புல எந்த மருந்தும் இல்ல.. கொலையாளியோட மோடிவ் கொலை செய்றது மட்டுமில்ல, அத உலகத்துக்கு வெளிப்படுத்தனும் என்கிறதுல ஸ்ட்ரோங்கா இருக்கான். மேலிடத்துல இருந்தும் பிரஷர் சீக்கிரம் கண்டு பிடிச்சே ஆகணும்" என்றவன் சொல்லி கொண்டிருக்க,

"வீட்டுலையும் தொடங்கியாச்சா கொலை கொள்ளனு.. அப்பா தான் அப்படியே சுத்துனாருன்னா நீங்களும் ஏன் டா படுத்துறீங்க, வீட்டுக்குள்ள வந்தா எல்லாம் மறந்துட்டு வந்துடனும்" என்று இருவரையும் முறைத்து நின்றார் தாய் நீலவேணி.

"அப்போ ஊர்ல எனக்கு அம்னீஷியாவானு கேப்பாங்களே நீலு பேபி, என்ன பண்ணுறதாம்?" என்றவன் அவர் பதில் பேசும் முன் அவனறைக்குள் நுழைந்திருந்தான்.

அமரும் "ஓகேமா நான் காலேஜ் போறேன்" என்றவன் அங்கிருந்து சென்றிருந்தான்.

போகும் அவனை பார்த்தவருக்கு மனது வலிக்கவே செய்தது.. எப்படி நீதிமன்றத்தில் சிங்கம் போல் சுற்றியவன், இவன் வாதாடினால் தோல்வி இருக்காது என்று குறுகிய காலத்திலேயே பெயர் எடுத்தவன். இன்றோ அதனை தவிர்த்து, அவன் கற்ற கல்லூரியின் மாணவர்களுக்கு பாடமெடுத்து கொண்டிருக்கிறான்.

அமரகத்தியன் செய்த குற்றம் ஒன்றுக்காக ஐந்தாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவன். இதோ விடுதலையாகி ஐந்தாண்டுகள் கடந்து விட்டது.. ஆனால் இன்றுவரை திருமணத்துக்கும் சரி அவனது வக்கீல் தொழிலுக்கும் சரி பெரிய பூட்டாய் போட்டுவிட்டான்.

நேரே அவன் கல்லூரிக்குள் நுழைய போனவன், அருகில் இருக்கும் மருத்துவ கல்லூரியை ஒரு முறை பார்க்க தவறவில்லை.. ஆழ மூச்செடுத்து கொண்டவனோ சட்டக்கல்லூரிக்குள் நுழைந்துகொண்டான்.

எப்போதும் போல் பாடவேளை முடிய அங்கே இருக்கும் மரத்தின் கீழ் அமர்ந்தவனுக்கு பழைய ஞாபகங்கள்..
_________________

அது அமருக்கு இறுதி வருடம், அன்று புதிதாக மாணவர்கள் வருவதனால் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். ஓரளவுக்கு ராகிங் நடந்தது தான் ஆனால் அவன் அதில் ஒன்றவில்லை, சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவன் ஏதோ யோசனையுடன் எழுந்து சற்று தூரம் இருக்கும் மரத்தினருகே செல்ல, பக்கத்து மருத்துவ கல்லூரியின் வாளாகம் தெரிந்தது. கூடவே அங்கும் ராகிங் தான் நடந்துகொண்டிருக்க, திரும்பி நடக்க முயன்றவனை நடையை தடுத்தது ஒரு குரல்.

"என்ன விட்டுடுங்கோ, நேக்கு இதெல்லாம் பயம்.. தோப்புனார் தான் நான் வேண்டான்னு சொல்லியும் இங்கேயே சீட்டு வாங்கிட்டார்" என்று அழுகுறலில் பேச, அமரோ 'அட மாமி' என்று எண்ணியபடி மீண்டும் அங்கே பார்வையியை செலுத்த, முன்னே நின்ற மாணவன் ஒருவன் அவளை மறைத்து நின்றிருந்ததனால் அவள் முகம் சரியாக தெரியவில்லை, ஆனால் அவள் கைகள் புடவை முந்தானையின் நுனியை திருகுவது தெரிந்தது.

"அப்போ மாமியோட தோப்பனார் லஞ்சம் கொடுத்து சீட்டு வாங்கிட்டாரா?" என்று ஒருத்தன் வேண்டும் என்றே கேட்க, "அச்சச்சோ இல்லை, நேக்கே கெடச்சது, நேக்கு இரத்தம் பார்த்தா பயமோல்லையோ அதான் மாட்டேன்னுட்டேன்" என்று அவனுக்கு விளக்கிகொண்டிருக்க, இன்னொருத்தனோ "மாமியோட பேர் என்ன?" என்று கேட்க, இங்க அமரும் ஆர்வமாக நின்றிருந்தான்.. அவளோ, "அன்னபூரணி" என்றாள் நடுங்கிய குரலில்..

"சார்..சார்.." என்ற கிளார்க் ஒருத்தரின் குரல் அவனை உலகுக்கு கொண்டு வர, "என்னாச்சு" என்றான்.

"சார் டீன் உங்கள வர சொன்னங்க" என்று சொல்ல அவனோ, "ஓகே நான் வரேன் நீங்க போங்க" என்றவன் மனதில் அவளின் தாக்கம் 'மாமி மிஸ் யூ டி' என்று எண்ணிக்கொண்டது அவன் மனம்.

_____________________

அங்கே கோர்ட் வளாகத்தில் போலீஸ் ஜீப்பை நிறுத்திய ஏசிபி ஆதி இறங்கிற, பின்னால் கைதியை பிடித்தபடி அவன் நண்பன் அசோக் இறங்கினான்,

இருவரும் உள்ளே நுழைய வாதம் தொடங்கப்படிருந்தது. வாதாடிக்கொண்டிருந்தது வேறு யாருமில்ல ரம்யஸ்ரீ தான். வக்கீல் வேணுகோபாலிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் வழக்கறிஞராக இருந்தவள் எடுத்துக்கொண்ட முதல் வழக்கு இது.

கணவனை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற குற்றதுக்காக காமாட்சி என்ற நடுத்தர வயது பெண்மணி கைதாகி இருந்தார். அவரது மகள் தான் தாய் நிரபராதி என்பதாகவும் தந்தை தங்களை கொடுமை படுத்தியாதாகவும் அதனாலேயே தாய் கொல்ல முயன்றதாகவும் கூறி வழக்கு பதிவு செய்திருந்தாள்.

சரியாக அந்த நேரம் "யுவர் ஹானர், இந்த வழக்கை விசாரணை செய்த ஏசிபி மிஸ்டர் அருளாதித்யன விசாரிக்க அனுமதி கோருகிறேன்" என்று அனுமதி கோர, நீதிபதியின் அனுமதியின் பின் "அருளாதித்யன்" என்று மூன்று முறை அழைக்கபட்டதும் கூண்டில் ஏறினான் ஆதி.

"மிஸ்டர் அருளாதித்யன், இந்த கொலை முயற்சி தற்காப்புக்காக செய்யப்பட்டதுனு தெரிஞ்சும் போதிய விசாரணை இல்லாம இவர் தான் குற்றவாளினு அரஸ்ட் பண்ணி இருக்கீங்க, ஒரு போலீஸ் ஆபிசரா இது தப்புனு உங்களுக்கு தோனலயா?"

"முதல்ல இது தற்காப்புக்கு பண்ணதுன்னு குற்றம் சுமத்தபட்டவங்க சொல்லல அன்ட் அதுக்கான எவிடன்ஸும் கிடைக்கல அப்பறம் எத வெச்சு லாயர் மேடம் அது தற்காப்புக்கு பண்ணதுனு எங்களால கண்டுபிடிக்க முடியும்.. சோ என் கடமைய தான் நான் செஞ்சேன்" என்றவன் முடிக்க,

"ஆதாரம் கிடைக்கணும்னா விசாரிக்கணும் ஏசிபி சார்.. நீங்க போகலாம்" என்று நக்கலாக சொன்னவள்.. அவர் இறங்கியதும், ஆதாரம் அடங்கிய கோப்பு ஒன்றை நீதிபதியிடம் கொடுத்தாள்.

"யுவர் ஹானர், குற்றம் சுமத்தட்ட என் கட்சிகாரர் குற்றவுணர்ச்சி காரணமாக அவர் செய்த செயலை நியாயப்படுத்த முயலவில்லை, ஆனால் அவர் கணவர் தினமும் குடித்துவிட்டு அவரை தாக்கியாகவும் சம்பந்தப்பட்ட நாளன்றும் வாக்குவாதம் வழுத்ததில் என் கட்சிக்காரரை கத்தியால் குத்த முயன்றதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதற்கான ஆதரமாக அதே ஏரியாவை சேர்ந்த மூவரை சாட்சியாக அழைக்கிறேன்" என்றவள் மேலும் வாதத்தை தொடங்க,

ஆதியோ 'இந்த மொளகா எதுக்கு முறைக்கான்னே தெரியாமட்டேங்குதே' என்று எண்ணியபடி நின்றிருந்தான் ஆதி.

வழக்கு முடிவில் அந்த பெண்மணி நிரபராதி என்றே தீர்ப்பு வந்திருந்தது. முதல் வெற்றி அவளுக்கு அவளது நண்பர்களுடன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவள் வெளியே வர, "வாழ்த்துக்கள் லாயர் மேடம்" என்றான் ஆதி

அதற்கு அவளோ மீண்டும் முறைத்தபடி வெளியேற 'எதுக்கு முறைக்கான்னே தெரிய மாட்டேங்குதே' என்று எண்ணியவளும் வெளியேறி இருந்தான்.



காதகம் தொடரும்..

ஆஷா சாரா..



'ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே' கதைல வந்த ஆதி ரம்யா வோட கதை தான் இது.. அந்த கதை படிக்காதவங்களுக்கும் புரியிற மாதிரி தான் முடிஞ்சளவு எழுத ட்ரை பண்ணுறேன். உங்க ஆதரவ தொடர்ந்து கொடுத்தீங்கனா எனக்கு உதவியா இருக்கும். அடுத்த அத்தியாயம் புதன் கிழமை பதிவிடப்படும்.

போட்டி ஒன்னுக்கும் இன்னொரு கதை எழுதுறதுனால ரெண்டு நாளைக்கு ஒரு முறை அத்தியாயம் பதிவிடுறேன்.. அடுத்த அத்தியாயம் எப்போ வரும்னு முடிஞ்ச அளவுக்கு சொல்லுறேன்.
 
Last edited:

Rishma hutha

New member
Wonderland writer
InShot_20241029_200443648.jpg

காதகம் 02

சர்வ அலங்காரத்தோட கண்ணாடி முன்னே அமர்ந்திருந்த ரம்யாவின் மனதிலோ என்ன ஓடுகிறது என்பது அவளையன்றி யாரறிவார்.. பெரு மூச்சு ஒன்று விட்டுக்கொண்டவள் வெளியே கேட்ட இரு வீட்டாரின் சத்தத்தில் காதுகளை அடைத்துக்கொண்டாள்..

நடந்துகொண்டிருப்பது பெண் பார்க்கும் படலம், ஆனால் சந்தோசமாக வரவேற்க வேண்டியவள் மனதிலோ சஞ்சலம். நிலவன் குடும்பமும் நண்பர்கள் பட்டாளமும் சாரதாவும் அவளுக்காக கூடி இருந்தனர் சபையில்..

தனியாக தயாராகி கொள்வதாக உள்ளே வந்து, இதோ தயாராகியும் முடித்திருந்தாள். அந்த நேரம் கதவை திறந்து உள்ளே வந்தார் சாரதா.

"அட ரம்யா அழகா இருக்கடா என் கண்ணே பட்டுடும் போல.. அவ்வளவு அழகா இருக்க" என்றவர் கண் மை எடுத்து அவள் காதின் பின் பக்கம் வைத்து விட்டார்.

அவளோ "உங்கள விடவா சரதாம்மா" என்று கண்சிமிட்டி கேட்க, அவரோ கலக்கத்துடன் "இந்த முறையாச்சும் உண்மைய சொல்றேன்னு கிளம்பதடா ப்ளீஸ்" என்றார் அவளது கரங்களை பற்றியப்படி..

அதற்கவளோ "அதெப்படி சாரதம்மா எல்லாம் சொல்லி ஆகணும் தான" என்க, அவரோ "வாழ்க்கைல சில விஷயம் மறைவாவே இருக்குறது நல்லது டா" என்றார்.

அவளோ அவரது கரத்தை பற்றியவள் "எனக்கு நடந்த கொடுமைக்காக நான் கல்யாணமே வேணான்னு சொல்லலையே சாரதாம்மா.. எவனோ பண்ண தப்புக்கு நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கனும் அதனாலேயே நான் கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா என்ன பத்தி முழுசா தெரிஞ்ச ஒருத்தர்.. என்ன எனக்காக மட்டுமே நேசிக்கிற ஒருத்தர், என்னோட கடந்த காலத்த வெறும் கடந்தகாலமா மட்டுமே பார்க்க கூடிய ஒருத்தர் வேணும்.. இப்போ எனக்காக ஒரு அம்மாவா நீங்களும், எல்லாமாவும் நிலவன் மாமா பேமிலி இருக்காங்க.. என்ன அந்த சிடுவேஷன்ல இருந்து வெளிய கொண்டு வர அவங்க உதவுன மாதிரி வாழ்க்கை முழுக்க என் உணர்வுகளை புரிஞ்சிக்க ஒருத்தர் வேணும் சாரதாம்மா" என்றவள் சிறு இடைவெளி விட்டு மீண்டும் ஆரம்பித்தாள்.

"எந்த ஒளிவு மறைவும் இல்லாம வாழப்போற வாழ்க்கை சாரதாம்மா.. மனசோட சேர்த்து உடம்பையும் நம்பி பகிர்ந்துக்க போற ஒருத்தர்கிட்ட எப்படி மறைக்க முடியும்.. நான் தப்பு பண்ணாத ஒரு விஷயத்தை மறைக்கிறதுக்கு நான் தயாரா இல்ல" என்றாள்.

அவருக்கும் அவளது நியாயம் புரியத்தான் செய்தது, ஆனால் அப்படி அவள் எதிர்பார்க்கும் ஆண்களை தேடி கண்டிப்பிடிப்பது தான் குதிரை கொம்பாகிற்றே.. அதிலும் கடந்த இரண்டு வருடமாக இந்த ஒரு காரணத்துக்காக அவளை வேண்டாம் என்றவர்கள் ஏராளம்.

"சரி உனக்கு கடவுள் நீ ஆசைப்படுற போல ஒருத்தன கொடுப்பார், என்னோட வேண்டுதலும் அதுதான்" என்றவர் பேசிகொண்டிருக்க, வெளியே அழைப்பதாக உறவுக்கார பெண்ணோருத்தி சொல்லி சென்றியிருக்க, சாரதாவும் அவளை வெளியே அழைத்து சென்றிருந்தார்.

பொதுவான பேச்சுவார்த்தை முடிய, எப்போதும் போல் தனியே பேசுவதற்கு அனுமதி கேட்டிருந்தாள் ரம்யா.. விளைவு சிறிது நேரத்திலே அவள் அறையில் நின்றிருந்தனர் ரம்யாவும், மாப்பிள்ளையாக வந்தவனும்..

"ஐ அம் சோ லக்கிங்க, இவ்வளவு அழகான பொண்ணு எனக்கு கிடைக்குனு நான் எதிர்பாக்கவே இல்லை.. அழகோட சேர்த்து படிச்ச பொண்ணா அதுவும் லாயரா இருக்கீங்க இத விட என்ன வேணும்" என்று அவன் பாட்டுக்கு பேசிகொண்டிருக்க, அமைதியாக நெஞ்சக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் நின்றிருந்தாள்.

"என்னங்க ரம்யா நானே பேசுறேன்.. பேச கூப்பிட்ட நீங்க அமைதியா இருக்கீங்க?.. ஓஓ வெக்கமா? பையன் எனக்கே வெக்கம் வருது உங்களுக்கு வராதா என்ன?" என்று அதற்கும் அவனே காரணம் தேடிக்கொண்டான்.

"என்ன பத்தி வேற எதுவும் தெரிஞ்சிக்க வேணாமா முருகன், அதுக்குள்ள நான் ஓகேனு பிக்ஸ் பண்ணுறீங்க?" என்று அவளிடம் இருந்து கேள்வி வந்தது.

"அழகு அறிவு கூடவே ஐஜி நிலவன் சாரோட ரிலேடிவ் இதவிட என்னங்க வேணும்"

"சூப்பர் முருகன், இது மூனும் ஒரு வாழ்க்கைக்கு போதும்கிறீங்க.. ஓகே நீங்க பிளஸ் பாயிண்டா சொன்ன மூனும் என்கிட்ட இருக்கு, கூடவே பதினாறு வயசுல நாலு பேரால கற்பலிக்கபட்ட பொண்ணுன்னு கூடவே ஒரு பெயரும் இருக்கு, உங்களுக்கு ஓகேல? அதான் நீங்க எதிர்பார்த்த மூனும் இருக்கே" என்றவள் முடிக்க மாப்பிளை முருகன் முகமோ சட்டென மாற, "வீட்டுக்கு போய்ட்டு முடிவு என்னனு பெரியவங்க சொல்லுவாங்க" என்றவன் வெளியேறி இருந்தான்.

அவள் எதிர்பார்த்தது தான், ஆனால் விரக்தியாய் ஒரு புன்னகை சிந்தியவள் கண்களை மூடிதிறந்தாள்.. இன்னும் அவள் கடக்க வேண்டிய பாதை அதிகம் அதற்கு ஓடவேண்டிய தைரியம் அவளிடம் அதிகமாகவே இருக்கிறது..

_________________________

அடுத்தநாள் ஐஜியை சந்திப்பதற்காக வந்திருந்த ஆதிக்கு அனுமதி கிடைக்க உள்ளே நுழைந்தவன் சலியூட் அடித்து நிற்க, "உக்காரு ஆதி" என்றான் நிலவன்.

"சார் அந்த மர்டர் கேஸ் பைல்" என்றவன் கோப்பு ஒன்றை கொடுக்க, வாங்கிய நிலவனோ "ரொம்ப இழுத்துட்டே போகுது ஆதி இந்த கேஸ் மேலிடத்துல இருந்து பிரஷர் ஜாஸ்தியாகுது" என்றான்.

ஆதியோ "மினிஸ்டர் வஜ்ரவேல்" என்று கேள்வியாக நிறுத்த, நிலவனோ ஆமோதித்தவன் "எஸ் ஆதி மினிஸ்டர் வஜ்ரவேலோட பையன், இறந்தவன் ஒருத்தனோட நண்பன், சோ அவர் மகனுக்கு ஏதாச்சும் ஆகிடும்ங்கிற பயத்துல ரொம்ப இன்வோல்வ் ஆகுறாரு இந்த கேஸ்ல" என்றான்.

ஆதியோ, "ம்ம் பயம் இருக்கனும் தான்" என்றான் அவன் நாடியில் கைவைத்து சொல்ல, நிலவனோ "இறந்த ஒன்பது பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தரோட எந்த தொடர்பும் இல்லனு உன் உன் கேஸ் ரிப்போட் சொல்லுது, அப்பறம் எதுக்காக ஆதி அவருக்கு திடீர்னு இப்படி ஒரு எண்ணம்" என்று சந்தேகமாக வினவ

ஆதி, "இறந்த ஒன்பது பேருமே பசங்க தான சார், அன்ட் இறந்தவன் லாஸ்ட்டா வஜ்ராவேலோட பையன் அகிலனுக்கு தான் கால் பண்ணி இருக்கான்.. அதான் அவரோட பயம் எங்க பையன் எதுலயும் போய் சிக்கிக்க போறானேனு" என்றதும் நிலவனுக்கு அது புது தகவல்.

"ம்ம்ம்ம், இன்டரெஸ்ட்டிங்.. சீக்கிரமே குற்றவாளிய நெருங்கணும் ஆதி என்னனு பாத்துட்டு எனக்கு இன்போர்ம் பண்ணு அடுத்த கொலைக்குள்ள நாம பல ஸ்டப் முன்னேறி இருக்கனும்" என்றான் நிலவன் தீவிரமாக,

"ம்ம்ம் கண்டிப்பா சார், ஐ வில் ட்ரை மை பெஸ்ட்" என்ற ஆதி சலியூட் அடித்து வெளியேற முனைய,

"அப்பறம் சார் எப்படி இருக்காரு ஆதி?" என்ற நிலவனின் கேள்விக்கு, "அவருக்கு என்ன சார் இப்போவும் விரைப்பா தான் இருக்காரு" என்றவனது முகத்தில் சிறு இறுக்கம்.

"கேட்டதா சொல்லு ஆதி முடிஞ்சா இந்த வீக் வந்து பாக்குறேன்" என்றவன் சிரிப்புடன் சொல்ல ஆதியோ தலையாட்டி வெளியேறிஇருந்தான்..

_____________________

அன்றிரவு அங்கே அடர்ந்த காட்டுக்குள் அமைந்திருக்கும் மறைவான இடம், மறைக்கப்பட்ட இடம்.. அடுத்த கொலைகான அஸ்திவாரம் தீட்டப்பட்டிருந்தது..

அங்கே ஒரு உருவமோ ஒருபெண்ணை அந்த அறைக்குள் தோளில் சாய்த்தபடி அழைத்து வந்திருந்தது..

உள்ளே இருந்த இரும்பு கட்டில் ஒன்றில் அந்த பெண்ணை கிடத்திய உருவாமோ "அந்தகார காதகம் பத்து" என்று எழுதி வைத்திருந்த காகிதம் ஒன்றை அந்த பெண்ணில் நெஞ்சில் ஒட்டி, இன்னும் பதினைந்து நாளுக்கு பின்னான நாள் ஒன்றின் திகதியையும் பத்து மணி என்ற நேரத்தையும் அந்த காகிதத்தில் எழுதி வைத்தது..

எதற்கான அந்த நாள் நேரம் குறிக்கப்பட்டது? கொலைக்கான நேரமா?? இல்லை வேறு ஏதேனுமா??

____________________

அடுத்த நாள் காலை இன்னும் விடியல் புலர்ந்திருக்கவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அமரகத்தியன்.. இரவு அவளவனின் எண்ணத்தில் முழ்கி இருந்தவன் தூங்கவே நேரமாகி இருந்தது..

அந்த அறையில் அவன் வாழ்க்கையை போலவே அவனது டைரியும் ஜன்னல் காற்றினால் அசைத்து திருப்பப்பட்டு கொண்டிருக்க, தட்டுதலின் முடிவில் ஒரு பெண்ணின் கைக்குட்டை அதில் காதல் சின்னமாக அமர்ந்திருந்தது.

அது அவளின் கைக்குட்டை அவனிடம் எப்படி? என்ற கேள்விக்கான பதில் அவன் டரியில்...


அன்றோடு அமர் அவளை கண்டு ஒருவாரம் ஆகி இருந்தது.. இத்தனைக்கும் முகம் பார்க்காத பெண், அன்று எப்படியாவது முகத்தை பார்த்து விடலாம் என்று எண்ணியவன் அங்கேயே நின்றிருக்க, அவன் நண்பனின் விடாத அழைப்பில் அங்கிருந்து அரைமனதாய் தன் அகன்று சென்றான். ஆனால் மனதில் அவள் குரல் மீண்டும் ஒலித்துகொண்டே தான் இருந்தது..

எப்படியாவது அவளை கண்டுகொள்ள அவன் மனம் விளைந்தது என்னவோ உண்மைதான்.. அவன் எண்ணி இருந்தாள் அங்கே மருத்துவ கல்லூரி மாணவர்கள் யாரிடமாவது அவள் பெயரை சொல்லி கேட்டிருக்க முடியும் ஆனால் மருத்துவ கல்லூரி ஆண் மாணவர்களுக்கும் சட்ட கல்லூரி ஆண் மாணவர்களுக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும் அதனாலேயே அவன் அமைதியும்.

அன்று ஏதோ தேர்வு இருந்தது.. அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பியவனின் பைக் அன்றென்று ஏதோ தகராறு செய்தது.. ஆதியுடன் செல்லலாம் என்றால் அவனும் சென்றுவிட்டான்.

வேறு வழி இல்லாமல் பேருந்தில் ஏறியவனுக்கு கோபம் தான் மனதை நிறைத்திருந்தது.. சென்று ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவன் வெளியில் வேடிக்கை பார்த்தபடி வர "நான் செத்த இங்க உக்காரலாமா" என்றொரு குரல்.. அவனுக்கு சந்தேகமே இல்லை அவள் தான். சட்டென்று திரும்பியவனின் கண்களில் அவள் முகம்..

மனதில் இருந்த கோபம் எங்கு என்றது என்றே தெரியாத அளவுக்கு பரவசத்தால் நிரம்பி இருந்தது.. அவளோ மீண்டும் "அண்ணா" என்று அழைக்க திடீரென கோபம் வரப்பெற்றவனோ ஒன்றும் சொல்லாமல் தள்ளி அமர்ந்தான்..

அவளும் அமர்ந்தவள் "நன்னா உக்காந்துக்கோங்க ணா" அவனுக்கு இடம் கொடுத்தபடி சொல்ல,

இவனோ "அண்ணனாம் அண்ணன் வேற வார்த்தை கிடைக்கலயா இவளுக்கு" என்றவன் வாய்க்குள் முனுமுனுக்க, மனதோ, 'அவா அத்துக்காரரையும் அண்ணானு தான் சொல்லுவா' என்று பாயிண்ட் எடுத்துகொடுக்க, அவன் இதழ்கள் விரிந்தது..

பேசுவோமா வேண்டாமா என பல போராட்டம் அவனுள்.. அவன் கல்லூரியில் அவனிடம் பேச எத்தனையோ பெண்கள் தவம் இருக்க இவனோ அவன் மாமியின் முன் என்ன பேச என்று கேள்வியோடு அமர்ந்திருந்தான்.

ஒருவழியாக தைரியம் வந்து பேசலாம் என்று திரும்ப நிறுத்தம் வந்திருந்தது.. அவளும் இறங்க அமைதியாய் இறங்க போனவன் அவள் இருக்கையை பார்க்க கைக்குட்டை காதல் சின்னமாய் அவனை காத்திருந்தது..


அவனது டயரியில் கைக்குட்டை இருந்த இடத்துக்கு கீழே, "அவள் விட்டுச்சென்ற கைக்குட்டையை தொடவே நடுங்கும் விரல்களுக்கு அவளை ஸ்பரிசிக்கும் வரமும் என்றோ" என்ற வரிகள் அவன் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது..



காதகம் தொடரும்...

ஆஷா சாரா...


அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை பதிவிடப்படும்..
 
Last edited:

Rishma hutha

New member
Wonderland writer
InShot_20241029_200443648.jpgகாதகம் 03

ரம்யாவோ அந்த உணவகத்தின் முன்னே அவளது ஸ்கூட்டியை நிறுத்தவும் நான்காவது தடவையாக அவளது தொலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.

கோபத்துடன் அழைப்பை உயிர்பித்து காதில் வைத்தவள், "அடியேய் கவி, வர்றேன்னு சொல்லிட்டு தானடி வண்டிய எடுத்தேன்.. பத்து நிமிஷம் போறதுக்குள்ள உயிர் போற மாதிரி அத்தன தடவ கூப்பிட்டுட்டே இருக்க, இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வையேன், அப்படியே திரும்பி போய்டுவேன் பாத்துக்க" என்று திட்டியபடியே அழைப்பை துண்டித்து, உள்ளே நுழைந்தவள் அமர்ந்திருந்த தோழியை கண்டுகொண்டு, அவளருகில் சென்று அமர்ந்தாள்.

"ஏண்டி ரம்யா திட்டுற, ஒரு மாதிரி பயமா இருக்குடி.. நீ வர முதல் அவங்க வந்தாங்கன்னா என்ன பண்றது அதான் கூப்பிட்டேன்" என்று விட்டாள் அழுது விடுவது போல் பேச,

"என்னடி நீ.. ஒரு டாக்டர் நீயே எல்லாத்துக்கும் பயப்படலாமா? தைரியமா பேஸ் பண்ணுடி" என்றவள் நேரத்தை பார்க்க, மாலை நான்கு மணி ஆக இன்னும் பத்து நிமிடம் இருந்தது.

"அப்பறம் அவர உனக்கு பிடிச்சிருக்கா இல்ல வீட்டுல பாத்துட்டாங்கனு ஓகே சொல்லிட்டியா?" என்றதும் அவள் தோழி ராகவியின் முகம் வெக்கத்தில் சிவந்தது.

ராகவியோ மெல்லிய குரலில் "பிடிச்சிருக்குடி" என்க, "அடப்பாருடா மேடத்துக்கு வெக்கத்த, என்ன பண்றாரு உன் ஆளு?" என்று கேட்டவள், சோர்வின் காரணமாக, அந்த சாப்பாட்டு மேசை மீதே தலை சாய்த்துக் கொண்டாள்.

"போலீஸ்டி" என்ற ராகவிக்கு நண்பியின் முகத்தில் தெரிந்த சோர்வு அப்போது தான் புரிய, "என்னாச்சு ரம்யா? ரொம்ப சோர்வா தெரியிற, ரொம்ப வேலையோ? நான் வேற உன்ன கஷ்டப்படுத்திட்டேனே.. நீ வேணா வீட்டுக்கு போடி நான் சமாளிச்சுப்பேன்" என்ற தோழியை பார்த்து புன்னகைத்தவள் "ச்சே அதெல்லாம் ஒன்னுமில்லடி, புது கேஸ் ஒன்னு அதான் மோர்னிங் இருந்து ஒரே அலைச்சல்.. வீட்டுக்கு போய் சாப்டு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவேன்.. இப்படி வேலை பாக்குறது எனக்கு பழக்கம் தான்டி நீ ஒர்ரி பண்ணிக்காத விடு" என்றவள் மீண்டும் கடிகாரத்தில் கண்ணை பதிக்க அதுவோ சரியாக நான்கில் நின்றது..

அப்போது சரியாக ரம்யாவின் பின்னே "ஹாய் ராகவி" என்றொரு குரல், அதில் அவளது அத்தனை சோர்வும் வடிய திரும்பி பார்த்தவள், அவள் எதிர்பார்த்த அந்த குரலுக்கு சொந்தக்காரன் அருளாதித்யன் அங்கே நின்றிருந்தான்.

இவளை கண்ட அதிர்ச்சி அவன் முகத்திலும் ஒரு முறை தோன்றி மறைய, "என்ன ராகவி நேரத்துக்கே வந்துடீங்க போலிருக்கு, இவங்க யாரு உங்க பிரண்டா?" என்றான் வேண்டுமென்றே அவளை தெரியாதது போல்.. அதில் கோபம் கொண்டவள் அவனை முறைக்க தவறவில்லை..

'அதான பார்த்தேன் என்னடா மொளகா இன்னைக்கு முறைக்கலயேன்னு.. இதோ பார்வையாலயே எரிக்க ஆரம்பிச்சிட்டா' என்று மனதில் எண்ணியவன் அவளை ஓரப்பார்வை பார்த்தான்.

ரம்யாவால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.. தலை சுத்துவதை போல் ஒரு உணர்வு கூடவே மூச்சும் முட்ட தொடங்கியது.. எங்கே மயங்கி விடுவோமோ என்ற யோசனையுடன் பையை இறுக பற்றியபடி அமர்ந்திருக்க, "என்னடா என் ஆள ரொம்ப ஓட்டிட்டியா?" என்று கேட்டபடி அவன் நண்பன் ஆதி அருகே வந்து அமர்ந்தான்.

ரம்யாக்கு தான் நடப்பது என்ன என்று உணர சில வினாடிகள் தேவைப்பட்டது.. புரிந்துகொண்ட விடயம் அவளை சற்று ஆசுவாசபடுத்த, கூடவே அவளிடம் இதழ் விரியா புன்னகை.

அது சரியாக குறி தப்பாமல் ஆதியின் கண்கள் என்னும் இலக்கை அடைந்திருந்ததில், அவன் புருவத்தில் நெளிவு..

"நீங்க எதுவும் பயப்படலயே ராகவி.. இவன் சும்மா உங்கள டீஸ் பண்ணி இருக்கான்" என்ற அசோக்கை கேள்வியாக பார்த்த ராகவி, "என்னாச்சுங்க ஏன் பயப்படணும்?" என்று கேட்க அவன் பார்வையோ ஆதியை அடைய, அவனோ இடம் வலமாக தலையசைத்தான்.

'அடப்பாவி முதல் சந்திப்பிலேயே இப்படி பல்பு வாங்க வெச்சிட்டியேடா' என்று நண்பனை மனதுக்குள் திட்டிக்கொள்ள, அவன் முழியை பார்த்த ஆதி தான்.. "அது ஒன்னுமில்ல ராகவி.. இவன் கார் பார்க் பண்ணிட்டு வர கேப்பில உங்கள கலாய்க்க போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.. அதான் அப்படி கேக்குறான்" என்று காரணத்தை சொல்லி இருந்தான்.

அதன் பின் பொதுவான சில பேச்சுவார்த்தை தொடர, அப்போதும் ரம்யா அமைதியாகவே இருந்தாள்.. புது ஜோடி இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணிய ஆதியோ, "வக்கீல் மேடம் உங்க கூட கொஞ்சம் பேசணும் வெளியே வரீங்களா?" என்க, அவளோ என்னவென்று கேள்வியாக அவனை நோக்க, அசோக் ராகவி இருவரையும் கண் காட்டியவன் முன்னே நடக்க புரிந்து கொண்டவளும் அவன் பின்னே சென்றாள்..

அவளுடன் அந்த உணவகத்தில் அமைக்கப் பட்டிருந்த நீர் தடாகத்தின் முன் நின்றவன்..

"நான் தான் மாப்பிளைனு பயந்துட்டியோ?" என்க, அவளோ எதுவும் புரியாதவள் போல் முகத்தை வைத்துக்கொண்டவள், கேள்வியாய் புருவம் உயர்த்தினாள்.

"பார்வையால சமாளிச்சது போதும் பதில் சொல்லு" என்றான் அவன் விடாமல்..

"இப்போ என்ன பதில் சொல்லணும் உங்களுக்கு.. நீங்க மாப்பிளையா இருந்தா எனக்கென்ன இல்லனா எனக்கென்ன" என்று கோபத்தில் வெடித்தாள்..

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.. பேச்சை மத்தணும்னா ஒன்னு அழுவாங்க இல்லையா கோபப்படுவாங்க.. டிஸ்கஸ்டிங்" என்றதும் அவள் கோபம் எல்லை கடந்தது..

"ஹெலோ சார் பொண்ணுங்கள பத்தி பேச உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.. பொண்ணுங்களோட மனவலிமை என்னனு தெரியுமா சார் உங்களுக்கு, பேசும் போது யார்கிட்ட பேசுறோம் என்ன பேசுறோம்னு தெரியாம பேசுற நீங்க எல்லாம், எங்களோட கோபத்தையும் அழுகையும் டிஸ்கஸ்டிங்னு சொல்றது தான் வேடிக்கையா இருக்கு" என்று கோபமாய் பேசியவளுக்கு, ஏற்கனவே இருந்த சோர்வும் தொற்றிக்கொள்ள உடம்பில் லேசான நடுக்கம், கண்கள் இருட்டுவதை போலிருக்க.. இவன் முன் மயங்கி விழுவதா என்று எண்ணியவள் திரும்பி நடக்க முயன்றது தான் தாமதம் அங்கேயே நிலை தடுமாறி சரிந்திருந்தாள்..

அவள் பேசும் போதே நடுங்கியவளது உடல் மாற்றத்தில் ஏதோ நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்தவன். அவள் மயங்கி சரியும் போதே சுதாகரித்து கரங்களில் தாங்கியிருந்தான்.

____________________

இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது, வீட்டுக்கு அப்போதுதான் வந்த அமர், சிறிது நேரத்தில் குளித்து இரவு உடையில் கீழே வர, "வா அமர் சாப்பிடலாம்" என்றார் தாய் நீலவேணி.

"ஆதி இன்னும் வரலையாமா?" என்றபடி அவனும் சாப்பாட்டு மேசையில் சென்று அமர, நீலவேணியோ, "அவன் என்னைக்கு நேரத்துக்கு வந்திருக்கான்.. முன்ன அவரு பண்ண வேலைய இப்போ இவன் பண்ணிட்டு இருக்கான்.. சொன்னா கேக்குறதும் இல்ல" என்றார்.

"அவன் வேல அப்படி, வந்துடுவான் மா" என்றவன் தட்டை எடுத்து வைக்க, நீலவேணியோ பரிமாறிய படி, "புரியுது அமர் ஆனா பயமா இருக்கே, கொலை அது இதுனு சுத்துறானேனு வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்கேன்" என்றவர் முகமோ கவலையில் சுருங்கியது.

"மா.. நான் இருக்கேன்ல பயப்படாதீங்க, பாத்துப்பேன்.. சரி அப்பா எங்க காணோம், சாப்டாங்களா?" என்றான்.

"சாப்டு தூங்கிட்டாங்க அமர், டேப்லெட் போடணும்ல அதான் நேரத்துக்கே சாப்பாடு முடிச்சிட்டாங்க" என்று அவனுக்கு பரிமாறினார்..

அவர் வைத்த உணவை பார்த்தவன் முகத்திலோ புன்னகை, கூடவே 'குண்டு பூசணி' என்று மனம் எண்ணிக்கொண்டது..

________________________

இரண்டாவது முறை அவளை பார்த்து ஒரு மாதம் கடந்திருந்தது. அதன் பின் ஒரு முறை தான் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.. இடைப்பட்ட நேரத்தில் அவனுக்கு இறுதி பரீட்சை ஆரம்பித்ததில் பெரிதாக அவனுக்கு நேரம் இருக்கவில்லை.. அவ்வப்போது அவள் எண்ணம் வரும் போதெல்லாம் மனதில் 'குண்டு பூசணி' என்று எண்ணிக்கொள்வான். அதற்கு காரணம் அவர்களது மூன்றாவது சந்திப்பு தான்..

அன்று சட்டக்கல்லூரியில் பரீட்சை முதல் நாள், அதே நேரத்தில் தான் மருத்துவ கல்லூரியிலும் பரீட்சை ஆரம்பமாகி இருந்தது.

அன்று அவளை பேருந்தில் பார்த்ததிலிருந்து அமரின் பயணம் பேருந்துக்கு இடம் மாறி இருந்தது..

அன்றும் பேருந்தில் அமர்ந்திருந்தவன் முன்னால் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தாள் அவனது மாமி..

அமர் நன்றாக கற்கும் மாணவன் என்பதால் அவனுக்கு பிரச்சனை இருக்கவில்லை, ஆனால் அவன் மாமியோ படிக்காமல் தூங்கியதால் நண்பியிடம் அழுது கொண்டிருந்தாள்..

"ஏன் பூரணி அழுற விடு பாத்துக்கலாம், இதுக்கெல்லாம் அழுவாங்களா? நீ நல்லா படிக்கிற பொண்ணு தான, என்னாச்சு?" என்று அருகில் அமர்ந்திருந்த அவள் தோழி வினவ, அன்னபூரணியோ "நோக்கென்னடி மா என் கஷ்டம் நேக்கு.. நேத்து துவாதசியோனோ அதுனால ஆத்துல நல்லா இருப்பதொரு காய் போட்டு சுட சுட நெய்யிட்டு அம்மா கதம்ப சாதம் பண்ணி குடுத்தாளா.. வாய்ல ஜலம் ஊரிடுத்து.. சுட சுட நிறையா சாப்பிட்டேன்.. இதுல தோப்பனார் வேற பெருமாள் பிரசாதம் கோவில்ல இருந்து கொண்டு வந்தார்.. சம்பார தோசை வேற இருந்தது, அதுவும் நன்னா இருக்கவும் சாப்பிட்டேன். அப்பறம் என்ன கண்ண கட்டிடுத்து... அதனால படிக்கலடிமா" என்று சோகமாய் சொல்லி முடிக்க, பின்னால் இருந்து கேட்டுகொண்டிருந்தவன் மனதோ, 'அச்சோ பாவம் என் மாமி.. நல்லா குண்டு பூசணிக்கா மாதிரி இருக்கும் போதே நினச்சேன்' என்று செல்லமாய் எண்ணிகொண்டான்.

அன்றிலிருந்து அவளை எண்ணுகையில் அந்த செல்லப்பெயரே முதலில் வந்து ஒட்டிக்கொள்ளும் அவன் நாவில்..


இன்றும் தாய் வைத்த பூசணிக்காய் குழம்பில் அவள் எண்ணமே எழுந்தது, அவளில் மூழ்கி இருந்தவனிடம் நீலவேணி ஏதோ கேட்க, அவனும் என்னவென்று புரியாமல் தலையசைத்திருந்தான்.

அவருக்கோ சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை "டேய் அமர் அப்போ உனக்கு ஓகேவா டா" என்று ஆர்ப்பரித்தவர் சாமி அறைக்குள் நுழைந்து கொண்டார்.. இவனுக்கு தான் எதற்கு சரி என்றோம் என்று தெரியாமலே போனது..



காதகம் தொடரும்..

ஆஷா சாரா..



அடுத்த அத்தியாயம் செவ்வாய் பதிவிடப்படும்..
 
Last edited:
Status
Not open for further replies.
Top