அத்தியாயம் 9
அன்று ஜனார்த்தனனும் பவித்ரனும் புருஷோத்தமனும் அங்கே தான் நின்று இருந்தார்கள்..
ஜனார்த்தனன் வீட்டுக்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.
கனகசிங்கம், "சரி பார்த்துக்கோ" என்று சொல்லி விட்டு வைத்த போதிலும் மகனின் நடவடிக்கை விசித்திரமாக தான் இருந்தது...
நாராயணியை பிடிக்கவில்லை என்றான்.
அவளுக்கு தாறு மாறாக பேசினான்...
இன்னும் பேசப் போவதாகவும் சொன்னான்.
இன்று அவள் வீட்டில் உதவிக்கு நிற்கின்றான்...
இன்னுமே அவன் புருஷோத்தமனிடம் திருமணம் பற்றி பேசியது அவர்கள் காதுக்கு வரவில்லை...
வந்திருந்தால் அவர்களுக்கு மயக்கமே வந்திருக்கும்...
அன்று இரவு பொட்டு தூக்கம் இல்லை யாருக்கும்...
நாராயணி தாயின் உடலை விட்டு கொஞ்சமும் நகரவில்லை...
ஜனார்த்தனனும் சேர்ந்து வந்தவர்களுடன் டென்ட் அடித்து, எல்லாமே இறங்கி செய்தவன், மெதுவாக வீட்டினுள் எட்டிப் பார்த்தான்...
நிலத்தில் அமர்ந்து, சுவரில் தலை சாய்த்து, தாயின் உடலையே பார்த்துக் கொண்டு இருந்த நாராயணி தான் தென்பட்டாள்.
அவள் தோற்றம் அவனுக்கு என்னவோ செய்தது...
இந்தளவு அவனுக்குள் அவள் புதைந்து இருப்பாள் என்று அவனுக்கு தெரியாது...
என்ன தான் அவன் கரடு முரடாக இருந்தாலும் ஒருவரை பிடித்து விட்டால், அந்த உறவுக்கு உண்மையாக இருப்பான்...
அது பவித்ரனுடனான நட்பு என்றாலும் சரி, நாராயணி மீதான காதல் என்றாலும் சரி...
சட்டென எப்போதும் விட்டு கொடுத்து விட மாட்டான்...
அவளை பார்த்து விட்டு, அங்கே நின்ற மாலாவைப் பார்த்தான்.
அவரிடம் தான் அவன் இலைக்கஞ்சி குடிக்க வருவான் என்பதால் அவருடன் அவனுக்கு நல்ல பழக்கமும் இருந்தது...
"மாலா அக்கா, நாராயணிக்கு டீயாவது போட்டு கொடுங்க, இப்பிடியே அழுதுட்டே இருந்தா என்னத்துக்கு ஆகுறது?" என்று கேட்டான்.
"குடுத்தேன் தம்பி, குடிக்கவே இல்லை, இப்படியே இந்த புள்ள இருக்காள், மனசே கேட்கல, தனியா என்ன செய்ய போறாளோ?" என்று பேச, "நான் தான் அவளை பார்த்து கொள்ளுவேன் எண்டு சொல்லி இருக்கேன் எல்லா" என்றான்...
அதுவரை அவன் கோபத்தில் பேசி இருக்கின்றான் என்று எல்லாரும் நினைத்து இருக்க, 'அது கோபத்தில் மட்டும் பேசிய பேச்சு அல்ல' என்று அவன் நிரூபித்துக் கொண்டு இருந்தான் அவன்...
"உண்மையாவா தம்பி?" என்று அவர் கேட்க, "ம்ம்" என்று சொல்லி விட்டு அவன் நகர்ந்து விட்டான்.
அன்றைய நாள் நாராயணியின் வீட்டுக்கு வெளியே தான் பவித்ரனுடன் பேசிக் கொண்டு அமர்ந்து இருந்தான் ஜனார்த்தனன்.
ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருவரும் தூங்கிக் கொண்டு இருக்க, அவர்களுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்தார் மாலா.
அதனை எடுத்துக் கொண்டே, "நாராயணிக்கு கொடுத்தீங்களா?" என்று கேட்டான்.
அவரும், "ம்ம் குடுத்தேன்" என்று சொல்லி விட்டு சென்று விட்டார்...
இப்போது பவித்ரனோ பெருமூச்சுடன், "இது எப்போ இருந்து?" என்று கேட்டான்...
ஜனார்த்தனனோ, "மாலா அக்கா கிட்ட தான் இலைக்கஞ்சி குடிக்க வருவேன், யார் எண்டு தெரியாமலே பிடிச்சு போச்சு... தெரிஞ்சதும் கோபம்..." என்றான்.
"என்ன கோபம்?" என்று பவித்ரன் கேட்க, "ஆஹ் ஏன் உன்ட தங்கச்சியா பிறந்து தொழைச்சா எண்டு கோபம்... அதான் வார்த்தையை விட்டேன்... அப்புறம் நான் செஞ்சது பிழை எண்டு எனக்கே விளங்கிச்சு... அவ மேல இருக்கிற பிடித்தம் குறையவே இல்லை. கூடுனது தான் மிச்சம்... படிச்சு முடிய அவளை தான் கல்யாணம் கட்டலாம் எண்டு இருந்தேன், அதுக்குள்ள இப்பிடி ஆயிட்டு" என்றான்...
பவித்ரன் தலையை உலுக்கிக் கொண்டே, "நீயாடா இப்பிடி?" என்று கேட்டான்.
"ஏன் டா எனக்கு என்ன? நான் லவ் பண்ண கூடாதா?" என்று கேட்டான்.
"பண்ணலாம், நீ பண்ணுன வேலைக்கு அவள் சரி எண்டு சொல்லுவாளா?" என்று கேட்க, அவன் முகம் இறுக, "பிடிக்கல எண்டாலும் கல்யாணம் கட்ட தான் வேணும்" என்றான்.
"இது எல்லாம் அராஜகம்" என்று பவித்ரன் சொல்ல, "நான் என்ன அவளை கொடுமை படுத்தவா போறேன், போக போக பிடிச்சிடும்" என்றான்.
"இது எங்க போய் முடிய போகுதோ?" என்று பவித்ரன் சொல்ல, "இல்ல தெரியாம தான் கேக்கிறேன், உன்ட அப்பா பண்ணுன வேலைக்கு அவளுக்கு யாரை கட்டி கொடுக்க போறார்? இமிடேஷன் தோடு தான் போட்டு இருக்காள், பொட்டு தங்கம் வாங்கி கொடுக்கல, வீடு வாசல் இல்லை, மாமியை மீறி இதெல்லாம் செய்யவும் ஏலாது, என்னை விட நல்ல மாப்பிள்ளை உன்ட தங்கச்சிக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை, கூட யோசிக்காம என்ட கல்யாணத்தை நடத்தி வைக்கிற வழியை பாரு" என்றான்.
"டேய் என்னையும் ஏன் டா கூட்டு சேக்கிற??" என்று கேட்க, "நீ தானே அண்ணன், செஞ்சு தான் ஆகணும்" என்றான்...
அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, காஃபியை குடித்த பவித்ரன், "அவள் படிச்சு முடியட்டும்" என்றான்.
"என்னது? படிச்சு முடிக்கோணுமா? அதுக்கு ஆறு மாசம் இருக்கு, அது வரைக்கும் அவள் இங்க தனியா இருக்கணுமா?" என்று கேட்டான் ஜனார்த்தனன்.
"அதுக்கு எண்டு படிக்கிற பிள்ளைய கல்யாணம் கட்டி வைக்கலாமா?" என்று பவித்ரன் கேட்க, "கட்டி வைக்கலாம், தப்பில்ல, மீதியை நான் பார்த்துக் கொள்ளுறன்" என்றான்.
"என்ன முடிவில தான் இருக்கா?" என்று ஆரம்பித்த பவித்ரன் நெற்றியை நீவி விட்டு, "சரி எல்லாம் முடியட்டும், இத பத்தி கதைப்பம்" என்று சொன்னான்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு உடலை அடக்கம் செய்வதாக இருந்தது...
அவளது கல்லூரி நண்பர்கள் காலையிலேயே வர ஆரம்பித்து விட்டார்கள்...
வந்தவர்களுக்கு ஜனார்த்தனனை கண்டதுமே அதிர்ச்சி...
அப்படியே நின்று விட, "இப்ப எதுக்கு என்ன பார்த்துட்டு இருக்கீங்க, உள்ளே போங்க" என்று அவர்களை அதட்டி விட்டு, அவன் வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
இளஞ்செழியன் மட்டும் வந்திருந்தான்.
நேரம் கடந்து செல்ல, உடலை எடுக்க எல்லாரும் குழுமி விட, பெண்ணவள், "அம்மா" என்று அடிக்குரலில் கத்தி கதற ஆரம்பித்து விட்டாள்.
உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை தூக்கிய ஜனார்த்தனனின் விழிகள் பெண்ணவளில் படிந்தது...
அவள் கதறல் அவன் மனதையும் அழுத்தியது...
கண்களை மூடி பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே, பூத உடலை நால்வரில் ஒருவராக தூக்கி சென்றான்.
மயானத்துக்கு சென்று விட்டு, வீட்டுக்கும் கிளம்பி விட்டான்.
பவித்ரன் புருஷோத்தமனை வீட்டுக்கு அழைத்து செல்ல, ஜனார்த்தனன் தனியாக தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்...
ஷவரின் கீழ் நீரை திறந்து விட்டு நின்றவன் மனதில் நாராயணி தவிர எந்த எண்ணமும் இல்லை...
அக்கம் பக்கத்தவர்கள் மிஞ்சி மிஞ்சி போனால் எட்டு நாட்கள் வரை கூட நிற்பார்கள்...
அதன் பிறகு அவள் தனியாக தானே வீட்டில் நின்றாக வேண்டும்...
யார் அவளுக்கு துணையாக இருப்பார்கள்?
எப்படியும் புருஷோத்தமனை அங்கே சென்று நிற்க நிர்மலா விட மாட்டார்...
அதற்காக அவரை குற்றம் சொல்லவும் முடியாது...
புருஷோத்தமன் வந்து நிற்பதை நாராயணி கூட விரும்ப மாட்டாள்...
எல்லாமே யோசித்தவன் தனக்குள்ளேயே திட்டம் ஒன்றைப் போட்டு விட்டு, கொஞ்ச நேரம் தூங்க சென்றான்.
அன்று மாலை நேரம் போல, பவித்ரனுக்கு அழைத்தான்.
"நாராயணி வீட்டுக்கு போகலையா?" என்று கேட்டான்.
"அப்பா போய்ட்டார் டா" என்று அவன் சொல்ல, 'சரி வா, நாமளும் போவம்" என்றான்.
பவித்ரனும், "சரி, பிக்கப் பண்ணிட்டு போ" என்றான்.
ஜனார்த்தனன் அவனை ஏற்றிக் கொண்டு சென்றான்.
நாராயணி வீட்டில் அக்கம் பக்கத்தினர் தவிர சொந்தக் காரர்கள் என்று யாரும் இல்லை.
அங்கே அமர்ந்து இருந்த புருஷோத்தமனின் விழிகள் உள்ளே வந்த ஜனார்த்தனனில் யோசனையாக தான் படிந்தது...
நேற்று வந்தது வரை சரி தான்...
ஆனால் தினமும் ஏன் வருகின்றான் என்று அவருக்கு யோசனை...
அவரை அழுத்தமாக பார்த்து விட்டு தான் அவன் கடந்து சென்றான்.
நாராயணி கருணாவின் புகைப்படத்துக்கு விளக்கு வைத்து விட்டு, அங்கே தான் அமர்ந்து இருந்தாள்.
வந்தவர்கள் அவளிடம் பேசி விட்டு சென்றார்கள்...
அக்கம் பக்கத்தினர் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தார்கள்...
ஜனார்த்தனன் அவளை பார்த்துக் கொண்டான் தவிர, எதுவும் பேசவில்லை...
இரவு பதினொரு மணி போல தான் வீட்டுக்கே கிளம்பினான்...
அடுத்த நாள் அவன் வேலைக்கு சென்றாக வேண்டும்...
அதனால் கிளம்பி விட்டான்...
இப்படியே தினமும் மாலை பவித்ரனுடன் வந்து தான் போவான்...
அது நாராயணி கண்ணிலும் பட தவறவில்லை...
பவித்ரனுடன் தான் அவன் வந்து செல்கின்றாள் என்கின்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு...
அவனை பற்றி அவளுக்கு நிதர்சனம் அக்கணம் புரியவில்லை...
அவளும் அதனை சாதாரணமாக கடந்து விட, எட்டு கிரியையும் நடந்து முடிந்தது...
புருஷோத்தமன் தான் எல்லாம் செய்து இருந்தார்...
அன்று புருஷோத்தமனுக்கு அழைத்த திவ்யாவோ, "அப்பா, இதுக்கு பிறகும் அங்க தான் நிக்கிறதா எண்டு அம்மா கெக்கிறாவு" என்றாள்.
கேட்ட தோரணையிலேயே நிர்மலாவின் மனநிலை புருஷோத்தமனுக்கு புரிந்து விட்டது...
அவரை கண்டிப்பாக இங்கே நிற்க நிர்மலா அனுமதிக்க போவது இல்லை. எட்டு நாட்கள் அவருக்கு அனுமதி கொடுத்ததே பெரிய விஷயம்...
"குமர் பெட்டையை எப்படி தனியா விட்டுட்டு வாறது?" என்று அவர் கேட்டுக் கொண்டே இருக்க, அவ்விடம் தான் நின்று இருந்த நாராயணியோ, "நீங்க வெளிக்கிடுங்க நான் இருப்பேன்" என்றான்.
அது திவ்யாவுக்கும் தெளிவாக கேட்டது...
அவளுக்கு கொஞ்சம் கவலை தான்...
இந்த வயதில் தனியாக இருப்பது எவ்வளவு கொடுமை என்று தெரியும். அவளை விட சின்ன பெண் வேறு...
ஆனால் நிர்மலா விட்டு கொடுக்கவும் மாட்டார் என்றும் தெரியும்...
"சரி நான் வைக்கிறேன்" என்று திவ்யா வைத்து விட, "உன்னை எப்படி தனியா விட்டுட்டு போறது?" என்றார் புருஷோத்தமன்...
"நீங்க வெளிக்கிடுங்க எண்டு சொல்றன் எல்லா, எனக்கு தனியா இருக்க ஏலும், ஏதும் தேவை எண்டா மாலா அக்காட்ட கேக்கிறேன்" என்றாள்.
அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத தவிப்பு...
நிர்மலாவையும் சமாளிக்க முடியாது...
"ஏதும் எண்டா கோல் எடு" என்று சொன்னவர் வெளியேற, அவர் முதுகை வெறித்து பார்த்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டே வர, அழாமல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
அவளுக்கு தூக்கம் கொஞ்சமும் வரவில்லை...
நேரம் செல்ல செல்ல பயமாகவும் இருந்தது...
நெஞ்சே அடைத்து விடும் உணர்வு...
அவளால் தனியாக ஒரு இரவை கூட கடக்க முடியவில்லை...
தாயின் நினைவு அவளை இன்னும் வதைக்க, முட்டியில் முகத்தை மூடி கொஞ்ச நேரம் அழுதாள்.
இதயம் நின்று விடும் போல இருந்தது...
'மாலா அக்காவை கூப்பிடலாம்' என்று நினைத்துக் கொண்டே எழுந்து கொண்டவள் நேரத்தைப் பார்த்தாள்.
இரவு பதினொரு மணி...
இந்நேரத்துக்கு அவர்களை தொந்தரவு செய்வதா என்று தயக்கம் வேறு...
காதில் ஏதோ சத்தம் எல்லாம் கேட்பது போலவும் பிரம்மை.
வேறு வழி இல்லை, வாசல் கதவை திறந்து கொண்டே இரண்டடி அவள் வெளியே வைக்கவும், ஒரு உருவம் அவர்களது வாசல் கடப்பை திறந்து கொண்டே உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது...
இருளில் யார் என்றே தெரியவில்லை...
"யாரு?" என்று பயந்து கொண்டே கேட்டாள்.
"நான் தான ஜனார்த்தனன்" என்று அவன் குரல்...
அதன் பிறகு தான் அவளுக்குள் ஒரு பேரமைதி வந்தது...
அவள் அருகே வந்தவன், மெல்லிய வெளிச்சத்தில் அவளை பார்த்துக் கொண்டே, "எதுக்கு வெளியே வந்தனீ?" என்று கேட்டான்.
"தனிய இருக்க பயமா இருக்கு, மாலா அக்காவை கூப்பிட வந்தன்" என்றாள்.
"ஃபோன் எதுக்கு இருக்கு? ஏன் தனியா வெளிய வாறா?" என்று கேட்டான்.
சரியான கேள்வி தான்...
அவளுக்கு பதட்டத்தில் மூளை எல்லாம் வேலை செய்யவே இல்லையே...
"யோசிக்க முடியாம இருக்கு" என்றாள்.
அவனும் பெருமூச்சுடன், "சரி என்ட வீட்டுக்கு வா" என்றான்...
அதிர்ந்து விட்டாள்.
"என்ன?" என்றாள்.
"உனக்கு காது நல்லா கேட்கும் தானே, என்ட வீட்டுக்கு வா... உன்ட அப்பா வெளிக்கிட்டுட்டார் எண்டு தெரிஞ்ச உடனே வந்தனான். குமர் பெட்டையை தனியா விடுட்டுட்டு வருவார் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்... கட்டுன பொண்டாட்டியை விட்டுட்டு போனவர்ட்ட என்ன எதிர்பார்க்க முடியும்?" என்று கேட்டான்...
"உங்கட வீட்டுக்கு எப்பிடி?" என்று அவள் பதற, "என்ட அம்மா வீட்ல இருக்காங்க, பயப்படாம வா... யாரையும் நீ தொல்லை படுத்த எல்லாம் தேவலை... என்ட வீட்லயே உன்னை நல்லா பார்த்துக் கொள்ளுவாங்க" என்றான்.
"என்ட அம்மாட சாவுக்கு நீங்க காரணம் இல்ல" என்றாள் அவசரமாக.
அதனால் தான் அவன் தன்னை பொறுப்பு எடுக்கின்றானோ என்கின்ற எண்ணம் அவளுக்கு...
"அதுக்காக சொல்லல்ல, நீ வா, இப்படியே நீ தனியா இருந்து, எவனாவது வீட்டுக்குள்ள பூந்து உன்னை ஏதாவது செஞ்சா என்ன செய்வ? அதுக்கு பிறகு அழுது கத்தி என்ன பிரயோசனம்? இந்த ஏரியா வேற ஓஃப் ஏரியா" என்றான்...
அவளுக்கும் அந்த பயம் இருந்தது...
இக்கணம் அவள் பாதுகாப்பு தான் அவளுக்கு முக்கியமாக பட்டது...
"இவ்வளவு நேரம் உன்னோட நான் கதைச்சிட்டு இருக்கேன், எவனாவது பக்கத்து வீட்ல இருந்து என்ன ஏது எண்டு கேட்டனா? இல்ல தானே, இது தான் உன்ட பாதுகாப்புட லட்சணம்... இதுல தான் உன்ட அப்பா உன்னை விட்டுட்டு போயிருக்கார்" என்று சொன்னான்...
சட்டென அவளுக்கு கண்கள் கலங்கி விட, "என்ட உடுப்ப எடுத்துட்டு வாறன்" என்றாள்.
நிஜமாகவே பயந்து விட்டாள்.
அவனை விட, அவளுக்கு இக்கணம் பாதுகாப்பு என்று யாருமே இருக்கவும் இல்லை...
"புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா, வீட்ல இருந்தே கேம்பஸ் போகலாம்" என்றான்...
அவளும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றவள், எல்லாவற்றையும் அடுக்கி எடுத்து இருக்க, அவன் அதனை எடுத்துக் கொண்டு காரில் வைத்தவன், அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி இருந்தான்...
அவன் தான் ட்ரைவர் சீட்டில் இருந்தான்...
அவள் அருகே தான் இருந்தாள்.
அழுகையாக வந்தது...
அவளுக்கென்று யாருமே இல்லை...
அனாதை போல பாதுகாப்பை தேடி நடு இரவில் ஓடுகின்றாள்...
ஒரு கட்டத்துக்கு மேல் அடக்க முடியாமல், அவள் விம்மி வெடித்து அழ ஆரம்பித்து விட, அவன் எதுவும் பேசவில்லை, மௌனமாக தான் காரை ஓட்டினான்...
அவர்கள் வீடும் வந்து விட்டது... இறங்குவதற்கு முன்னர், "வீட்ல நான் சொல்றதுக்கு எல்லாம் ஓம் எண்டு தலையாட்டு போதும்" என்றான்.
அவளுக்கு எதுவும் புரியவும் இல்லை, கிரகிக்கும் மனநிலையும் இல்லை.
"ம்ம்" என்று அதற்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
காரை பார்க் செய்து விட்டு, இறங்கியவன் அவளை அழைத்துக் கொண்டு, காலிங் பெல்லை அழுத்த, கோதாவரி தான் கதவை திறந்தார்...
அங்கே வாசலில் கையில் பையுடனும் பெண்ணுடனும் நிற்கும் மகனை அதிர்ந்து தான் பார்த்தார்...
அவர் இதுவரை நாராயணியை நேரில் பார்த்தது இல்லை...
அதனால் அது யார் என்றே அவருக்கு தெரியவில்லை...
"லவ் பண்ணுன பிள்ளையை கூட்டிட்டு ஓடி வந்து இருக்கியா என்ன?" என்று தான் அவர் கேள்வி இருக்க, நாராயணி அவரை அதிர்ந்து பார்க்க, இப்போது ஜனார்த்தனனுக்கு சிரிப்பும் வர, இதழ் கடித்து அடக்கிக் கொண்டே, "அப்பிடியும் வச்சு கொள்ளலாம்" என்றபடி அவன் உள்ளே நுழைய, "ஐயோ அப்படி எல்லாம் இல்ல" என்று பதறிக் கொண்டே பதில் சொன்னாள் நாராயணி...
ஒன்றுக்கு ஒன்று முரணாக பேசுபவர்களை புரியாமல் பார்த்து இருந்தார் கோதாவரி...