ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

அத்தியாயம் 8

புருஷோத்தமனுக்கு மனமே ஆறவில்லை.

"நான் என்ன கதைச்சிட்டு இருக்கேன், நீ என்ன கதைச்சிட்டு இருக்கா?" என்று கேட்க, அவரை ஆழ்ந்து பார்த்தவன், "உங்கள போல வப்பாட்டியா வச்சுக்க நான் ஒண்டும் அவளை கேட்கல, கல்யாணம் கட்டுறேன் எண்டு தான் சொல்றன்" என்றான்...

பவித்ரனுக்கே அவன் இப்படி அவ்வளவு பேர் முன்னால் பேசுவது கடுப்பாகி விட, "என்னடா கதைச்சிட்டு இருக்க?" என்று சீறினான்.

புருஷோத்தமனோ, "நீ எல்லாம் என்ன மனுஷன்?" என்று அழுகையுடன் கேட்க, "உங்கட சீத்துவம் தெரிஞ்சா, அவளை எவனும் கல்யாணம் கட்ட மாட்டான்... அவள் அனாதையா நிக்க நான் தானே காரணம் எண்டு சொல்றீங்க... சரி நானே காரணமா இருக்கிறேன்... அதுக்கான பரிகாரமாவும் இத பண்ணுறேன்" என்றான்.

"நீ கல்யாணம் கட்டுனா மட்டும் செத்து போனவள் வந்திடுவாளா? ஒருத்தியை கொண்டுட்டு கல்யாணத்தை பத்தி கதைச்சிட்டு இருக்கிற" என்று அவர் மாறி சீற, "நான் அவள்ட்ட கதைச்சது பிழை தான்..." என்று அவன் ஆரம்பிக்க, "அவர் ஒண்டும் கொல்லவே இல்லை, அம்மா உங்கள பத்தி தான் இரவு கவலைப்பட்டு கதைச்சவங்க, அப்ப நீங்க தான் காரணம் எண்டு நான் சொல்லவா?" என்று அவ்வளவு பேர் முன்னிலையில் அழுகையுடன் கேட்டாள் நாராயணி...

இறப்பு வீட்டில் இப்படி இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது அவளுக்கும் கோபத்தை தான் கொடுத்தது...

அவன் வேறு திருமணம் பற்றி பேசிக் கொண்டு இருப்பது அவ்வளவு ஆத்திரத்தை கொடுத்தது...

புருஷோத்தமன் மீதும் கோபம் வந்தது, ஜனார்த்தனன் மீதும் கோபம் வந்தது...

எல்லாவற்றையும் சேர்த்து அவள் குரலுயர்த்தி பேசி விட, வாயடைத்து போனார் புருஷோத்தமன்.

ஜனார்த்தனன் சட்டென தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

அது ஏனோ தெரியவில்லை, புருஷோத்தமன் பேச வந்தால் மட்டும் தன்னிலை இழந்து கத்தி விடுகிறான்...

இறப்பு வீட்டில் தான் இப்போது நடந்து கொண்டது சரி இல்லை என்று அவனுக்கும் புரிய, "இப்போ சரியா? இனியும் எனக்கு மேல பழி போடோணுமா?" என்று புருஷோத்தமனிடம் கேட்டவனோ, "நான் வெளிய நிக்கிறேன் டா, இங்க இருந்தா ஏதாவது கதைச்சிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, நாராயணி அழுகையுடன் பிரேதம் அருகே அமர்ந்து கொண்டாள்.

புருஷோத்தமனும் இடிந்து போய் அங்கே அமர்ந்தவர், "அப்ப அவள் சாக நான் தான் காரணமா? அவளை நான் நல்லாவே வாழ விடல, எல்லாம் என்ட பிழை தான்" என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட, "அப்பா" என்று பவித்ரன் தான் அவரை சமாதானம் செய்ய முயன்றான்.

இடையில் கையை குற்றியபடி வானத்தை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் ஜனார்த்தனன்...

இன்னும் பூரண நிலவு அப்படியே இருந்தது...

முதல் நாள் தான் பௌர்ணமி ஆயிற்றே...

சற்று நேரம் முன்னால் நிஜமாகவே அவன் பதறி தான் விட்டான்...

அவன் வார்த்தைகள் ஒரு உயிரை எடுத்து விட்டதோ என்று இதயம் நொறுங்கியே விட்டது...

என்ன தான் புருஷோத்தமனிடம் திமிராக அவன் பதில் சொன்னாலும், உள்ளுக்குள் மொத்தமாக உடைந்து போய் தான் விட்டான்...

காட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவு தான்...

இப்போது மட்டும் நாரயணி, கருணாவின் இறப்புக்கு அவன் காரணம் இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுக்க இந்த குற்ற உணர்வுடன் தானே அவன் இருந்து இருப்பான்...

அவளது ஒரு வார்த்தை, அவன் இதயத்தை இப்போது கொஞ்சம் நிதானமாக துடிக்க வைத்துக் கொண்டு இருந்தது...

விளையாடி விட்டு வந்ததால், வியர்த்து போய் வேறு இருந்தான்...

அவள் அழும் குரல் இப்போதும் காதில் கேட்டுக் கொண்டு இருந்தது.

அவள் அழுகை அவனை என்னவோ செய்து கொண்டும் இருந்தது...

அவன் இன்று சொன்னது வாய் வார்த்தைக்கு அல்ல. மனதார சொன்ன வார்த்தைகள் அவை...

அவளை வாழ்க்கை முழுவதும் வைத்து பார்த்துக் கொள்ள அவன் தயாராக தான் இருக்கின்றான்...

அவள் அழகு தான் அவனை முதலில் ஈர்த்து இருந்தது...

அதன் பிறகு, தந்தையின் பணத்தில் வாழ அவள் விரும்பவில்லை என்று சொன்ன அந்த தன்மானம் ஈர்த்து இருந்தது...

இப்போது அத்தனை பேர் முன்னிலையில், அவ்வளவு வலி நடுவே, அவன் மீது விழுந்து பழியை துடைத்து அவனுக்கு குற்ற உணர்வில் இருந்து விமோச்சனம் கொடுத்தாளே, அது ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது...

இத்தனை நாட்கள் அவளுக்கான அங்கீகாரம் யாரும் கொடுக்கவில்லை என்று அவன் அறிவான்...

இனி அவன் அவளுக்கான அங்கீகாரத்தை கொடுக்க தயாராகி விட்டான்.

முகத்தை அழுந்த தேய்த்தபடி நின்றவனின் தோளில் கையை போட்ட பவித்ரனோ, "எங்க வச்சு என்ன கதைக்கிறது எண்டு இல்லையா?" என்று கேட்டான்.

"இப்போ என்ன தப்பா கதைச்சிட்டேன்?" என்று அவன் கேட்டான்...

"என்ன கதைச்சியா? அவளை கல்யாணம் கட்டுறேன் எண்டு அவ்வளவு பேருக்கு முன்னால சொல்றா? நாளைக்கு அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைய வேணாமா?" என்று கேட்டான்.

அவனை பக்கவாட்டாக திரும்பி ஆழ்ந்து பார்த்தவன், "அது தான் கல்யாணம் கட்டுறேன் எண்டு சொல்லிட்டேனே, நீ எதுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க போறா?" என்று கேட்டானே பார்க்கலாம்.

பவித்ரனுக்கு மயக்கம் வராத குறை தான்...

"என்னடா விளையாடிட்டு இருக்கியா? அது தான் நீ இதுக்கு காரணம் இல்ல எண்டு அந்த பிள்ளை சொல்லிட்டாளே" என்று அவன் சொல்ல, "நான் அதுக்காக மட்டும் அவளை கல்யாணம் கட்டுறேன் எண்டு சொல்லவே இல்லை" என்றான்.

பவித்ரன் அவனை புரியாமல் பார்க்க, ஒரு பெருமூச்சுடன் முன்னால் திரும்பியவன், "நான் அண்டைக்கு கதைச்சிட்டு இருந்தது நாராயணி பத்தி தான்" என்றான்.

பவித்ரனின் விழிகள் அதிர்ந்து விரிய, "நான் அவளை வாழ்க்கை முழுக்க வச்சு பார்த்து கொள்ளுறேன், உன்ட அப்பா ஒண்டும் பார்த்து கிழிக்க தேவல, இதெல்லாம் முடியட்டும், அத பத்தி கதைப்பம், இப்ப நாளைக்கு நடக்க போறத பத்தி கதைக்கலாம்" என்றான்

தலையை உலுக்கிக் கொண்ட பவித்ரனோ, "சரி வா, நாளைக்கு, டென்ட் அடிக்கோணும், சவப்பெட்டி எடுக்கணும்" என்று சொல்ல, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடன் இறுதி கிரியைகளுக்கான வேலைகளை பார்க்க கிளம்பி இருந்தான் ஜனார்த்தனன்.

நாராயணிக்கு அழுகை நிற்கவே இல்லை.

அவளுக்கென்று இருந்த ஒரே உயிர்...

அவளால் புருஷோத்தமனுடன் பேசவோ, அவர் தயவில் வாழவோ கண்டிப்பாக முடியாது...

அவர் மீது அந்தளவு வெறுப்பு கொட்டி கிடக்கின்றது...

அவர் தாய்க்கு செய்த பாவத்தையும் அவர் மனைவிக்கு செய்த துரோகத்தையும் ஒரு பெண்ணாக அவளால் கடந்து விட முடியவில்லை...

அவரால் அவள் பட்ட வேதனைகள் ஏராளம்...

ஜனார்த்தனன் கூட அவ்வளவு மட்டமாக பேசினானே.

யார் காரணம், அவர் தானே காரணம்...

அடுத்து என்ன என்று தெரியாத நிலை அவளுக்கு...

அவள் கல்வி முடிய இன்னுமே ஆறு மாதங்கள் இருந்தன...

அதன் பிறகு வேலை எடுக்க வேண்டும்...

தனது சொந்த காலில் நிற்க வேண்டும்...

அவளுக்கென்று யாருமே இல்லை...

ஆனால் அதுவரை புருஷோத்தமன் தயவில் வாழ வேண்டும் என்று நினைக்கவே வெறுப்பாக இருந்தது.

தன்னை நேசித்த ஒரே உயிரின் இழப்பு அவளை மொத்தமாக உருக்குலைத்து இருக்க, அழுகை மட்டுமே அவளிடம்...

பவித்ரனும் ஜனார்த்தனனும் தான் எல்லா வேலைகளையும் பார்த்தார்கள்.

ஜனார்த்தனன் தான் வண்டி ஓட்டிக் கொண்டு இருக்க, அருகே அமர்ந்து இருந்த பவித்ரனின் அலைபேசி அலறியது...

எடுத்து காதில் வைத்தான்.

நிர்மலா தான் எடுத்து இருந்தார்.

"அப்பா எப்படி இருக்கார்?" என்று கேட்டார்...

மனம் கேட்கவே இல்லை...

அவருக்கு ஏதும் ஆகி விடுமோ என்று பயம் நிர்மலாவுக்கு...

"அழுதுட்டு இருக்கார், பிரச்சனை இல்லம்மா, நான் பார்த்துக் கொள்ளுறேன்" என்றான்.

"தனியா விட்டு வந்திடாதே டா, நைட் அவருக்கு டேப்லேட்ஸ் வாங்கி கொடுத்துடு. சாப்பிட சொல்லு" என்றார்.

குரலில் அவ்வளவு அக்கறை.

பவித்ரனுக்கு தாய் மீது அதீத பாசத்துக்கு அவரது இந்த குணமும் காரணம்.

அவர் கேட்க கேட்க, அவனுக்கு தாயை நினைத்து தான் அழுத்தம் உண்டானது.

"எப்படி அம்மா உங்களால இப்பிடி இருக்க ஏலுமா இருக்கு?" என்று கேட்டே விட்டான்...

அவரிடம் மௌனம்.

"சரி நான் வைக்கிறேன்" என்று வைத்து விட்டார்...

அவனும் பெருமூச்சுடன் இருக்கையில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன், "ஃபார்மசி இருந்தா நிப்பாட்டு, அப்பாவுக்கு டப்ளேட்ஸ் வாங்கோணும்" என்றான்...

ஜனார்த்தனனுக்கு புரிந்து விட்டது.

"இப்பிடி பட்ட மாமியை விட்டு இந்த வேலை பாக்கிறதுக்கு உன்ட அப்பாவுக்கு எப்படி தான் மனசு வந்திச்சோ?" என்று ஆரம்பித்து விட்டான்.

"டேய் விடுடா" என்று அவன் சொல்ல, "எப்பிடி விட சொல்லுற? எத்தனை பேருக்கு கஷ்டம் உன்ட அப்பாவால? அண்டைக்கு நாராயணி அவளுக்கான அங்கீகாரமே இல்லை எண்டு அழுதாள். மாமி எப்படி எல்லாம் மனவருத்தப்பட்டாவு எண்டு நானும் பார்த்தேன் தானே... ஒருத்தியை கல்யாணம் கட்டுனா கடைசி வரைக்கும் உண்மையா இருக்கனும்... ஏலா எண்டா டிவோர்ஸ் பண்ணிட்டு இஷ்டப்படி திரியணும்... எனக்கு வாற ஆத்திரத்துக்கு" என்று ஆரம்பிக்க, "சரிடா விடு, எத்தனை நாளைக்கு தான் ஏசிட்டே இருக்க போறா?" என்று அவன் கேட்டான்.

"முறைக்கு கோபப்பட வேண்டியது நீ, உனக்கு பதிலா நான் கோபப்பட்டுட்டு இருக்கேன்" என்றான்.

"இப்ப அதுக்கு என்ன செய்யலாம் எண்டு சொல்ற? கோபம் எல்லாத்துக்கும் தீர்வு இல்லை" என்று பவித்ரன் சொல்ல, "உன்னை போல எனக்கு பரந்த மனசு எல்லாம் இல்லை, இதுவே என்ட அப்பாவா இருந்தா, அவருக்கு நானே விஷம் வச்சு கொண்டு இருப்பேன்" என்றான்.

"என்னடா இப்பிடி எல்லாம் கதைக்கிற?" என்று அவன் கேட்க, ஃபார்மஸியும் வந்து விட்டது.

"சரி வாங்குறத வாங்கிட்டு வா, டென்ட் அடிக்கிற பொடியனுகள்ட்ட போகணும்" என்று சொன்னான்...

அதனை தொடர்ந்து, பவித்ரனும் மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்திருக்க, இருவரும் அடுத்த வேலைகளை பார்க்க கிளம்பி விட்டார்கள்.

சற்று நேரத்தில் நாரயாணியின் வீட்டுக்கும் வந்து விட்டார்கள்...

பவித்ரன் புருஷோத்தமன் அருகே வந்தவன், அவருக்கு மாத்திரைகளை கொடுத்து விட்டு, அங்கே அமர்ந்து இருந்த நாராயணியை பார்த்தான்...

அவனுக்கு தங்கை முறை தான்...

நேரில் பார்த்தது இல்லை.

இன்று தான் பார்க்கின்றான்...

பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

அவள் மீது கோபம் இல்லை என்றாலும், நிர்மலா மனம் கஷ்டப்பட கூடாது என்று விலகி தான் நடந்தான்...

இனியும் அப்படி தான் நடக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு...

நிர்மலாவுக்கு என்று ஆறுதல் அவனும் திவ்யாவும் தானே...

அதனாலேயே அவளை ஒரு பார்வையுடன் அவன் கடந்து விட, வீட்டினுள் நுழைந்து, எல்லா வேலைகளையும் பார்த்தது என்னவோ ஜனார்த்தனன் தான்...

அவனுக்கு சின்ன நெருடல் கூட இல்லை...

தான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் வீடு என்கின்ற மனநிலை தான்...

புருஷோத்தமன் பக்கமே அவன் திரும்பவில்லை...

அவரும் அவனை பார்க்கவில்லை...

பார்த்துக் கொண்டாலோ பேசிக் கொண்டாலோ சண்டை தானே வரும்...

அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் அழகாக தவிர்த்து இருந்தார்கள்...

இதெல்லாம் உணரும் நிலையே இல்லாமல் சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் நாராயணி...

ஜனார்தனனுக்கு அவளுடன் பேசி ஆக வேண்டிய கட்டாயம்.

கருணாவின் புடவை தேவைப்பட்டது...

அவளுக்கு தானே தெரியும்...

அவள் அருகே வந்தவன், "நாராயணி" என்றான்...

மென்மையாக...

மிக மென்மையாக அழைத்தான்.

அந்த அழைப்பே வித்தியாசமாக இருக்க, அவள் மெதுவாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"அம்மாட சாரி ஒண்டு வேணும்" என்றான்...

கண்ணீரை துடைத்துக் கொண்டே எழுந்தவளுக்கு நிதானம் என்பதே இல்லை...

தடுமாறிக் கொண்டு இருந்தாள்.

"எந்த ரூமுக்குள்ள இருக்கு?" என்று அவனே கேட்டான்...

"இங்க" என்று அவள் கையை காட்ட, அவன் தான் முன்னால் சென்றான்.

அவள் பின்னால் தான் சென்றாள்.

அவனே அலுமாரியை திறந்தான்...

சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நல்ல புடவை என்று ஒன்றுமே இல்லை...

வழக்கமாக கணவன் இருக்கும் போது இறந்து விட்டால் கூறை புடவை (திருமணம் அன்று உடுத்த புடவை) தான் உடுப்பார்கள்...

அவனும் அதே பழக்கத்தில், "கூறை சாரி இல்லையா?" என்று கேட்டு விட்டு தான் அவளை பார்த்தான்.

அவள் விழிகள் அதிர்ந்து விரிய, "அம்மாவுக்கு தான் கல்யாணமே நடக்கலையே" என்றாள்.

சொல்லும் போதே அவள் குரல் உடைந்து போக, "அவங்க தான வாழ்க்கைல சந்தோஷமாவே இருக்கலயே, அவங்க வாழ்க்கையை தான் அவர் மொத்தமா நாசமாக்கிட்டாரே, நான் தான் அவங்கள சந்தோஷமா வச்சுக்கொள்ள நினச்சேன், இப்ப அவங்களே இல்லை" என்று சொல்லி முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவன் தான் அவள் அழுகையை பார்த்து திணறி போனான்.

ஒரு மாதிரி ஏதோ ஒன்று தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு...

கூறை புடவை பற்றி கேட்டு இருக்க கூடாதோ என்று தனக்கு தானே திட்டிக் கொண்டான்...

அவளுக்குள் எத்தனை வலிகள்...

அவளிடம் அவன் பேசிய வார்த்தைகள் எல்லாமே இப்போது அவனை சுழன்று சுழன்று அடித்தன...

அவனால் நிற்கவே முடியவில்லை.

சட்டென வெளியேறி வந்தவனோ, "நாராயணியை பாருங்க" என்று அங்கே இருந்த பெண்ணிடம் சொல்லி விட்டு, காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்...

அவன் அதிஷ்டத்துக்கு ஓரிரு புடவை கடைகள் திறந்து இருக்க, அவன் தான் கருணாவிற்கு உடுப்பதற்கு புடவை வாங்கினான்...

உரிமையுடன் அவன் வாங்கி கொடுக்கும், முதலும் கடைசியுமான புடவை அது...

வாங்கிக் கொண்டு வந்து, இறுதி கிரியை சடங்குகளை பார்ப்பவரிடம் கொடுத்து விட்டு, வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்...

நாராயணி அழுததை நினைக்க நினைக்க புருஷோத்தமன் மீது கொலைவெறி ஆத்திரம் தான்...

கைகளை கோர்த்துக் கொண்டே, விழிகளை மட்டும் உயர்த்தி முன்னால் அமர்ந்து இருந்த அவரை பார்த்தான்...

விழிகளில் அப்படி ஒரு கோபம்...

அதனை அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தது, அவனது புடைத்து எழும்பிய கழுத்து நரம்புகளில் அப்பட்டமாக தெரிந்தது...

அவன் மனதில் தோன்றிய ஒரே உணர்வு இது தான்...


"நாராயணி என் மனைவி" என்பது மட்டும் தான்...
Super sis
 

RAnuradhaRSR

New member
Excellent Excellent..
What an emotional scene..
கூறைப்புடவை கேட்டது ..பதில்...

ஜனா ...மாற்றமும்..பேச்சும் ..செயலும்...அழகு...

நாராயணி யை தாங்கி... கொண்டாடுவான்....வருங்காலத்தில்...

செதுக்கிய அழகான பதிவு...
Excellent narration...
Thanks dear
 
Top