ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

அத்தியாயம் 7

சற்று நேரத்தில் சிம்மனின் அறைக்கதவு தட்டப்பட்டது.

எழுந்து வந்து திறந்தது என்னவோ ராகினி தான்...

"அத்தை வர சொன்னாங்க" என்று சொல்லி விட்டு வித்யா செல்ல, "ம்ம்" என்றபடி அவளை பின் தொடர்ந்து சென்ற ராகினியோ, "நிஜமாவே நீங்க தான் இந்த வீட்டு மூத்த மருமகளா?" என்று கேட்டாள்.

அவளை திரும்பி பார்த்து முறைத்த வித்யாவோ, "இங்க இப்படி தான் இருக்கனும்" என்று சொன்னாள்.

"ஏன்?" என்று கேட்க, "கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும்" என்று சொன்னாள் அவள்...

ராகினியும் யோசனையுடன் அவளை பின் தொடர்ந்து சென்றாள்.

முன்னறையில் நீலாம்பரி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க, அவர் முன்னே தான் வனிதா, காந்தினி, பூங்கோடி எல்லாம் நின்று இருந்தார்கள்...

இப்போது வித்யாவும் ராகினியும் வந்து நின்று இருந்தார்கள்...

நீலாம்பரியோ, "ராகினி" என்று சொல்ல, அவளும் அவரை ஆழ்ந்து பார்க்க, "இந்த வீட்டோட சட்டம் தெரியுமா?" என்று கேட்டார்...

'சொன்னா தானே தெரியும்' என்று நினைத்தவள் இல்லை என்று தலையாட்ட, தனது இடையில் இருந்த திறப்பை எடுத்து தூக்கி காட்டியவர், "இது இந்த வீட்டோட சாவி, இத வச்சு இருக்கிறவங்க தான் இந்த வீட்டோட எஜமானி, இத என் அத்தை என் கிட்ட கொடுத்தாங்க, இதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சம் நெஞ்சம் இல்லை... நான் ஒரே மருமகளா இருந்தும் அவங்க என்னை அவ்ளோ கஷ்டப்படுத்தி தான் சாவியை கொடுத்தாங்க, ஆனா இங்க ரெண்டு பேர் இருக்கீங்க... என் மனச கவர்ந்த மருமகளுக்கு தான் சாவி கிடைக்கும்" என்று சொன்னார்...

'அப்போ இந்தம்மாவும் வேலைக்காரியா இருந்து தான் முதலாளி ஆகி இருக்கு' என்று நினைத்த ராகினியோ, "ம்ம்" என்று சொல்ல, "என் மக பூங்கோடி உனக்கு நான் போட்ட வேலை லிஸ்ட் எல்லாம் கொடுப்பா, ஃபொல்லோவ் பண்ணிக்கோ" என்று சொன்னார்.

அதற்கும் பூம் பூம் மாடு போல தலையாட்ட, "இப்போ நீ வருஷத்துக்கு பலகாரம் சுடுற வேலையை பார்க்கலாம்" என்றார்.

அவளும், "ம்ம்" என்றாள்.

"வித்யா அழைச்சு போ" என்று சொல்ல, "வா" என்று சொல்லி அவளை வித்யா அழைத்து செல்ல, "அக்கா, எனக்கும் உனக்கும் தான் அப்போ காம்பெடிஷன் ஆஹ்?" என்று கேட்டாள் ராகினி...

"என்னடி மரியாதை குறையுது" என்றாள் அவள்...

"பெருசா வயசு வித்தியாசம் இருக்காது தானே... இதுல மரியாதை லாம் எதுக்கு?" என்று கேட்டாள் ராகினி...

அவளை மேலிருந்து கீழ் பார்த்த வித்யாவும், "சரி விடு, எனக்கும் உனக்கும் தான் போட்டி" என்றாள் மிடுக்காக.

"அது இருக்கட்டும், எலி காயுதுன்னு எலி புழுக்கை ஏன் காயுது?" என்று கேட்டாள்.

வித்யா அவளை அதிர்ந்து பார்க்க, "காந்தினி வனிதாவை பத்தி தான் கேக்கிறேன்" என்றாள்.

"ஆஹ், அவங்க பாண்டியனை கட்டிக்க இந்த வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சாங்க, இப்போ எப்படி நிறுத்துறதுன்னு தெரியாம அத்தைக்கு பயந்துக்கிட்டு பண்ணிட்டு இருக்காங்க" என்றாள்.

"என்ன கொடுமையோ" என்று சொன்ன ராகினி, "அப்போ பூங்கொடி?" என்று கேட்க, "அவ பெருசா வேலை எல்லாம் பார்க்க மாட்டா, அத்தை சொல்றத நமக்கு சொல்லுவா, நம்ம பக்கம் தான் அவ... அத்தை வந்தா சிக்னல் கொடுப்பா... அவ எப்போவும் சாமி, பஜனை, அன்னலட்சுமி சாமியார்ன்னு சுத்துவா" என்று சொன்னாள்.

"ஓஹோ" என்று சொன்ன ராகினி சமையலறைக்குள்ளும் வந்து விட்டாள்.

அங்கே எல்லோரும் வருஷ பிறப்புக்காக சமைத்துக் கொண்டு இருந்தார்கள்.

வித்யாவோ, அவர்களுடன் சேர்ந்து அடுப்பில் வெந்து போக ஆரம்பித்து விட்டாள்.

வித்யா அருகே வந்தவள், "திறப்பு வேணும்னா நான் டூப்ளிகேட் பண்ணி கொடுக்கிறேன், எதுக்கு இந்த வீணா போன வேலை?" என்று கேட்க, அவளை முறைத்த வித்யாவோ, "என்னடி பேசியே மனச கலைக்கலாம்னு பார்க்கிறியா? அப்படியே திறப்பை வாங்கிக்கலாம்னு மாஸ்டர் பிளான் போடுறியா?" என்று கேட்டாள்.

"உன் நல்லதுக்கு தான் சொன்னேன், கேட்டா கேளு, கேட்காட்டி போ" என்று சொல்லி விட்டு, அப்படியும் இப்படியும் நடந்து திரிந்தாள்.

பெரிதாக வேலை எல்லாம் செய்யவில்லை...

சும்மா நடந்து திரிந்தாள் அவ்வளவு தான்...

"இவ சரியான வேலை கள்ளி போல" என்று வனிதாவும் காந்தினியும் முணுமுணுத்துக் கொள்ள, வேலம்மாவோ, 'என் பொண்ணுங்க இடத்தை பிடிச்சிட்டு, பவுசு காட்டி திரியிரியா?' என்று நினைத்தவர், "இங்க வா ராகினி, இந்த முறுக்கை பிழி" என்று முறுக்கு உரலை கொடுத்தார்...

'இந்தம்மா தான் அந்த ரெண்டு முறை பொண்ணுங்க அம்மா போல, அதான் என்னை பார்த்ததும் மூக்கு வேர்த்துட்டு' என்று நினைத்துக் கொண்டே, "கொடுங்க" என்றபடி முறுக்கு உரலை பிடுங்கி எடுத்தவள், அதனை பிழிய, அதுவோ முறுக்கு வடிவத்தில் வரவே இல்லை.

"இப்படி முறுக்கு இருக்குமா? ஒழுங்கா பிழி" என்று வேலம்மா சொல்ல, "எனக்கு இது தான் வரும்" என்றாள்.

"இவ சரியான வாயாடியா இருக்கா. அடக்கி வைக்கணும்" என்று வனிதா காந்தினியிடம் சொல்ல, "ம்ம், அவளை ஓட ஓட விரட்டணும்" என்றாள் காந்தினி.

இஷ்டத்துக்கு அவள் முறுக்கை பிழிந்து விட்டு செல்ல, அதனை பார்த்த வேலம்மாவோ, 'இந்த முறுக்கை சுட்டு அண்ணி கிட்ட கொடுத்து இவளை சிக்க வைக்கணும்' என்று நினைத்ததுடன் மட்டும் அல்லாமல், அதனை செயல்படுத்தவும் தொடங்கி விட்டார்.

ராகினியோ, சமையலறையை சுற்றி பார்த்துக் கொண்டே நடந்தாள்...

'ப்பா, ஒரு வீடு சைசுக்கு இருக்கு, இங்கேயே பாயை போட்டு மல்லாக்க படுக்கலாம் போல' என்று நினைத்துக் கொண்டே, குளிர்சாதன பெட்டியை திறந்தாள்.

அங்கே இருந்த பொருட்களை பார்த்து மலைத்து போனவளுக்கு விஸ்கி கண்ணில் பட்டது...

'அட இது நம்ம பொருளாச்சே' என்று நினைத்தவளுக்கு இரு கண்களும் பளிச்சிட, ராகினி, நீ அடக்க ஒடுக்கமான மருமக, கட்டுப்படுத்திக்கிட்டு கதவை மூடு' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்ட, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே கதவை மூடிய தருணம், "ஹெலோ" என்று ஒரு குரல்...

திரும்பி பார்த்தாள்.

அங்கே மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு நின்றது என்னவோ காந்தினியும் வனிதாவும் தான்...

"நீ தான் ராகினியா?" என்றாள் வனிதா மிடுக்காக, "உனக்கென்ன செவிடா, அது தான் எல்லாருக்கும் தெரியுமே" என்றாள் ராகினி.

"என்னை இன்சல்ட் பண்ணுறா டி, நீயும் பார்த்துட்டு இருக்கியே, ஏறி மிதி" என்றாள் காந்தினியிடம்...

காந்தினி ராகினியை முறைத்துப் பார்த்தவள், "நான் பயங்கரமானவ" என்றாள்.

ராகினி அவர்களை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "ஆமா ஆமா பயமா இருக்கு" என்று கிண்டலாக சொல்லி விட்டு நகர, "உன்னை சும்மா விட மாட்டோம்" என்று வீர வசனம் பேசினார்கள்...

'இருக்கிற ரோதைனைல ல இதுங்க வேற, முடியல டா சாமி' என்று நினைத்தபடி வெளியே வர, அங்கே ஜோடியாக வந்தார்கள் ஷாருக்கானும் முருகனும்.

"மகளே ஏதும் பிரச்சனையா? ஏன் முகம் டல்லா இருக்கு?" என்று ஷாருக்கான் கேட்க, "அப்பா, நான் சொல்ற ரெண்டு பேரையும் நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க" என்று சொல்லி அங்கே நின்ற காந்தினி மற்றும் வனிதாவை காட்டி விட்டு சென்றாள்.

அவள் சென்றதுமே, "பார்த்துகிறதுன்னா என்ன மச்சான்" என்று ஷாருக்கான் கேட்க, "சைட் அடிக்கிறது" என்றான் முருகன்.

"அப்போ அந்த பப்லி எனக்கு, ஸீரோ சைஸ் உனக்கு" என்று ஷாருக்கான் பங்கு பிரித்துக் கொண்டான்.

ஒரு வேலையும் செய்யாமல் அவள் அன்று சுற்றி திரிந்தாலும் முறுக்கு வடிவில் அவளுக்கு ஆப்பு வந்து அமர்ந்தது...

அன்று மாலை நேரம் போல, வீட்டுக்கு திரும்பி இருந்தார் நீலாம்பரி...

எல்லாவற்றையும் மேற்பார்வை செய்து விட்டு வீட்டுக்கு திரும்புவது அவர் வழக்கம்...

அவர் வருகின்றார் என்று சொன்னதுமே, வீடு லைப்ரரி போல அமைதியாகி விட்டது...

'என்ன எல்லாரும் சட்டுன்னு சைலன்ட் ஆயிட்டாங்க?' என்று நினைத்த ராகினியும் எட்டிப் பார்க்க, அங்கே வந்து நின்றது நீலாம்பரியின் கார்...

'ஓஹோ இது தான் அந்த சைலேண்டுக்கு காரணமா?' என்று நினைத்துக் கொண்டே, வித்யாவை பார்க்க, அதுவரை மேலோட்டமாக வீட்டை துடைத்துக் கொண்டு இருந்த வித்யா அழுத்தி அழுத்தி துடைக்க ஆரம்பித்து விட்டாள்.

கஷ்டப்பட்டு வேலை பார்ப்பது போல பாவனை வேறு...

"பார்த்து பார்த்து நிலம் தேய்ஞ்சிட போகுது" என்று ராகினி ஜாடை பேச, அவளை ஏறிட்டு முறைத்தாள் வித்யா...

"கண்ணாலேயே எரிச்சிடுவா போல" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தவள், "சரி நம்மளும் ஏதாவது துடைப்போம்" என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்த பூச்சாடிகளை துடைக்க ஆரம்பித்தாள்.

இன்னும் வெற்றி வேந்தன் மற்றும் சிம்மரசபாண்டியன் வீட்டுக்கு வரவில்லை...

நீலாம்பரி அப்படியே வந்து ஹாலில் அமர, வேலம்மாவோ, "முறுக்கும் டீயும் கொடுக்கட்டுமா அண்ணி?" என்று கேட்டார்...

அவரும், "ம்ம் கொடு" என்று சொல்ல, அவரும் முறுக்கு மற்றும் டீயை கொண்டு வந்து கொடுத்தவர், "உங்க ரெண்டாவது மருமக பண்ணுன முறுக்கு தான்" என்று சொல்லி முடிக்க முதல், "ராகினி" என்று ஒரு அதட்டல்.

"ஐயோ இந்தம்மா எதுக்கு என்னை கூப்பிடுது, இந்த சகுனி வேலம்மா தான் ஏதோ சொல்லி இருக்கனும்" என்று நினைத்துக் கொண்டே, அவ்விடம் சென்றவள், "அத்தை" என்றாள் மென் குரலில்...

"என்ன இது?" என்று அவள் பிழிந்த முறுக்கை தூக்கி காட்டினார்...

"முறுக்கு" என்றாள்.

"எனக்கு தெரியாதா?" என்றார்.

"நீங்க தானே கேட்டிங்க" என்று சொன்னவளோ சட்டென நாக்கை கடித்துக் கொண்டே, 'வாயை கன்ட்ரோல் பண்ணுடி' என்று தனக்கு தானே சொல்லிக் கொள்ள, "முறுக்கு பிழிய சொன்னா, வட்டம் வட்டமான பிழியாம இஷ்டத்துக்கு பிழிஞ்சு இருக்க" என்று சீறினார்.

அவளோ, "எப்படியும் கடிச்சு தானே சாப்பிட போறீங்க அத்தை" என்று சொல்லி விட்டு, 'ஐயோ என் வாய் கண்ட்ரோல் ல இருக்க மாட்டேங்குதே' என்று புலம்ப, "அத்தை, அவ வேலையே செய்யல" என்று அங்கே வந்த வனிதாவும் காந்தினியும் அவள் மீது குற்ற பத்திரிகை வாசிக்க தொடங்கி விட்டார்கள்...

'குட்டி சாத்தானுங்க' என்று ராகினி வாய்க்குள் திட்ட, "ஆமா அண்ணி, அங்கயும் இங்கயும் நடந்து தெரிஞ்சா, சரியான வேலைக்கள்ளி" என்று வேலம்மாவும் சொல்ல, 'ஆத்தாக்காரியும் சேர்ந்திடுச்சு' என்று நினைத்த ராகினி, "ஹி ஹி அப்படி எல்லாம் இல்ல" என்று ஆரம்பிக்க, "வாயை மூடு, சிரிக்கிற நீ? இன்னைக்கு பதினொரு மணி வரைக்கும் நீ வறட்டி தட்டணும்" என்றார்.

"என்னது வறட்டியா?" என்று அவள் அதிர, "ம்ம், அது தான் நாங்க இங்க கொடுக்கிற தண்டனை" என்று சொன்னார் அவர்...

'இது என்ன ஹிட்லர் ஆட்சியா இருக்கு?' என்று நினைத்தவள் வாயை கட்டுப்படுத்திய நேரம், பத்து கோடியும் ஜெயிலும் கண் முன்னே வந்து போனது...

மௌனமாகிக் கொண்டே, "இப்போ எங்க நான் வறட்டி தட்டணும்?" என்று கேட்டாள்.

"என்னடி இவ்ளோ ஆசையா கேக்கிறா" என்று வனிதாவும் காந்தினியும் பேசிக் கொண்டார்கள்...

நீலாம்பரியோ, "பூங்கோடி அழைச்சு போ" என்று சொல்ல, "வாங்க அண்ணி" என்று அவள் ராகினியை அழைத்து சென்றாள்.

வீட்டின் பின் பக்கம் பெரிய மாட்டு தொழுவமே இருந்தது...

"இங்க தான் தட்டணும்" என்று சொல்ல, 'எல்லாம் என் கிரகம்' என்று நினைத்துக் கொண்டே, அவள் சாணத்தை பிசைந்து வறட்டி தட்ட ஆரம்பித்து விட்டாள்.

இதே சமயம் தினேஷோ, 'ஐயோ அக்கா பாவம்' என்று நினைத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை...

பின்னால் செல்ல போனவனிடம், "நீ எங்க போற? உன் அக்கா தனியா செய்யணும்" என்று திட்டி விட்டார் நீலாம்பரி...


ராகினியோ, "வந்த முதல் நாளே வறட்டியா? என்ன வீடு இது... இங்க வந்து சிக்கிட்டேனே" என்று புலம்பிக் கொண்டே வறட்டியை தட்டியவள், "அடுத்து முறை சென்ட் அடிச்சுட்டு சாணம் போட சொல்லணும் இந்த மாடு கிட்ட, இந்த நாத்தம் நாறுது" என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
Super
 
Top