ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 6

"ஏன்டாஇன்னும் குளிக்கல? குளிச்சிட்டு வா சாப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு சித்ரா அங்கிருந்து நகர்ந்ததும் தான் அவனுக்கு மூச்சு வந்தது. கயல் அவனை சந்தேகமாக பார்த்தபடி நிற்க, "ஏய் நீ இன்னும் போகலையா?" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே குளித்து விட்டு வந்த மித்ரா, "ஏய் மேன் என் டிரஸ் எல்லாம் எங்க?" என்று கேட்க விஷ்வா விழி விரித்து நிற்க தொடங்கினான்.

அதை கேட்டு வாயில் கை வைத்த படி கயல் உள்ளே எட்டி பார்க்க போக, "போடி" என்ற படி கதவை அடித்து சாத்தியவன் மித்ராவிடம் உடைகளை கட்டிலின் கீழ் இருந்து எடுத்து கொடுத்து விட்டு அவளை போக சொல்லி அவசரப் படுத்தினான். அவளும் சிரித்தபடி, "என்ன பயமோ?" என்று முணு முணுத்துக் கொண்டே வெளியே போக ஆயத்தமானாள். வெளியே வந்தவள் நேரே போய் கயல் அறைக்குள் நுழைந்துக் கொள்ள அவளை கயல் முறைத்து பார்த்தாள்.

உடனே அவள், "ஏன்மா என்னை அப்படி பார்க்கிற?" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க, "ஏன்டி உனக்கு தெரியாதா?" என்றபடி கயலின் மேசையில் இருந்த புத்தகத்தை எடுத்து விரித்து பார்க்க தொடங்கினாள்.

மித்ராவை பொறுத்தவரை எப்படியும் விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்க போறது நிச்சயம். இரு வீட்டிலும் எதிர்ப்பில்லை என்ற தைரியத்தில் அங்கிருந்த புத்தகத்தை திறந்து பூரிப்புடன் படிக்க தொடங்கினாள்.

அதே சமயம் சாணக்கியனுடன் வீட்டுக்கு வந்த வசுந்தரா கண்ணாடியில் தன்னை பார்த்து அதிர்ந்து நின்றாள். புதிதாக உருவாக்கிய மகவு இருக்கும் வயிற்றில் ரத்தம் தோய்ந்த அவன் ஐந்து விரலடையாளங்கள் இருந்தன. இதை பார்த்தவள் மனம் பதற கண்களில் கண்ணீர் வழிய சற்று நேரம் நின்றவள் அப்படியே கட்டிலில் போய் விம்மியபடி படுத்துக் கொண்டாள்.

அவளால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போக அழுதே தனது வலியை தீர்க்க தொடங்கினாள்.

காலையில் இருந்து அவள் சாப்பிடாமல் இருப்பதை அறிந்த சாணக்கியன், அவளை எழுப்ப அறைக்குள் வந்து, "வசுந்தரா சாப்பிட வா" என்று குப்புற படுத்து இருந்தவளை அழைக்க அவளோ தான் அழுததை மறைக்கும் பொருட்டு, "எனக்கு வேணாம்" என்று முகத்தை தலையணைக்குள் புகுத்திக் கொண்டாள்.

அவளின் குரலே கூறியது அவள் அழுதத்துக்குரிய சான்றை.

சாணக்கியனுக்கு முதல் முறை அவள் அழுதது மனசை கரைத்தது போல, "இங்கே பாரு வசு... என்ன என்றாலும் மனசு விட்டு பேசு" என்று முதல் முறை இளகிய குரலில் கேட்டான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி எழுப்பியவன், "இப்போ சொல்லு" என்று தலையை வருட அவன் கையை தட்டி விட்டவள்,

"இந்த கை எத்தனை கொலைகளை பண்ணி இருக்கும்?" என்று ஆதங்கமாக கண்ணீருடன் கேட்டாள்.

அவனோ சாதாரணமாக, "கணக்கில்லை" என்றான். அவன் இளக்கமான பதிலில் சினம் தெறிக்க பார்த்தவள், "ஒரு உயிரை எடுக்கும் போது உங்களுக்கு கொஞ்சமும் மனசு உறுத்தாதா? ஏன் வாழ்க்கைல இவ்வளவு பாவத்தை சம்பாதிக்கிறீங்க? என்னால முடியல உங்க கூட இப்படி வாழுறதுக்கு... மனசே ரணமாக இருக்கு. நீங்க தொடும் போது அருவருப்பாக இருக்கு. எனக்கு இந்த சாக்கடையில் வாழ விருப்பமில்லை" என்று வெடித்து கதறினாள்.

முதல் முறை அவள் இவ்வாறு பேசிய கோபத்தில் பொறுமை இழந்தவன், "ஏய்" என்றபடி அவள் கழுத்தை பிடித்த போது, "என்னையும் கொன்னுருங்க நானும் செத்து போறேன்" என்று கண்ணீர் மல்க சொன்னவளின் கண்களை நோக்கியவன், "ச்ச" என்றபடி தனது கையை அவள் கழுத்தில் இருந்து இழுத்து எடுத்தான்.

அவளை எரித்து விடுவது போல பார்த்தவன், "இங்க பாரு நான் ஒன்றும் நல்லவனுங்கள கொலை பண்ணல... உன்னாலயும் உன் கையாலாகாத டிபார்மென்ட் மூலமும் தண்டனை கொடுக்க முடியாத பொறுக்கிகளை தான் கொலை பண்ணுறேன். அதுவும் குற்றம் குறையணும் என்பதற்காகவும் மக்கள் நல்லா இருக்கணும் என்பதற்காகவும் தான்... எனக்கு அது தப்பா தெரியல...இன்னைக்கு என்னை கொலை பண்ண வந்தவனுங்களுக்கு மாலை போட்டு வரவேற்க சொல்றியா?" என்று சீறியவனுக்கு இப்போதும் அவன் தொடுவது அருவருப்பு என்று அவள் கூறிய விடயத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

அந்த நினைப்பே அவன் கோபத்தை மேலும் தூண்டி விட, "நான் தொட்டா உனக்கு அருவருப்பாக இருக்குதா? நீ என்னடி என்னை வேணாம்னு சொல்றது? எனக்கு நீ வேணாம். இப்போவே வா நான் உன்ன உங்க வீட்டுல விடுறேன்" என்றவன் அவள் கையை பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு ஹாலுக்குள் சென்றான்.

அந்நேரம் பார்த்து விஷ்வாவும் வெளியில் வர, வசுந்தராவை தர தர என இழுத்து வந்த சாணக்கியனை பார்த்த மகாலிங்கம், "டேய் அவளை விடுடா... கர்ப்பமான பொண்ணுடா" என்று கர்ஜிக்க அறைக்குள் இருந்த அனைவரும் அவர் சத்தம் கேட்டு மண்டபத்தில் வந்து குவிந்தனர்.

கண்களில் கண்ணீருடன் அவன் பின்னால் இழு பட்டு வரும் தனது அக்காவை பார்த்து மித்ராவுக்கு கவலை முண்ட, "அத்தான் நிற்பாட்டுங்க" என்றபடி சாணக்கியன் முன்னால் போய் நின்றாள் அவள்...

'இவ எப்போ இங்க வந்தா?' என்று மகாலிங்கமும் சித்ராவும் யோசிக்க... மித்ராவை உறுத்து விழித்த சாணக்கியன் வசுந்தராவின் கையை முன்னால் இழுத்து தன் முன்னால் நிறுத்தியவன், "உன் அக்கா கூட எனக்கு வாழ இஷ்டமில்லை. கூட்டிட்டு போ..." என்று கர்ஜித்தபடி வாசலை காட்டினான்.

அவன் கூற்றில் அதிர்ந்து அனைவரும் நிற்க, "டேய் அந்த பொண்ணு மாசமா இருக்குடா." என்று சித்ரா ஆதங்கத்துடன் உரைத்த பின்னரே வசுந்தரா கர்ப்பமான விஷயம் அனைவர்க்கும் தெரிய வந்தது. வசுந்தரா கர்ப்பமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை அவள் வாழ்க்கை அழிய போவதை நினைத்து கவலைபடுவதா என்று தெரியாமல் தவித்த மித்ரா, வசுவை அணைத்துக் கொண்டு, "என்னக்கா ஆச்சு?" என்று வினவினாள்.

வசுந்தராவோ அழுகையை தவிர எந்த பதிலும் சொல்லவில்லை. சாணக்கியனிடம் வந்த மித்ரா, "அக்கா கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டா அத்தான்... என்னாச்சு ப்ளீஸ் சொல்லுங்க" என்று கெஞ்சலாக கேட்டாள்.

மித்ராவை பார்த்தவன், "உன் கிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை அவ கூட வாழ எனக்கு பிடிக்கல. அவ்வளவு தான்" என்றான்.

யாரும் காரணமில்லாமல் மனைவியை தள்ளி வைப்பாங்களா? அதுவும் இந்த நிலையில் என்று யோசித்தவள் அக்காவின் வாழ்க்கைக்காக சற்று நிதானித்து, "அவ என்ன பண்ணினாலும் மன்னிச்சு அவள ஏத்துக்கோங்க அத்தான்" என்றாள்.

அவள் கெஞ்சியதை சகிக்க முடியாத மகாலிங்கம், "சாணக்கியா, நீ செய்றது நல்லா இல்ல. மாசமா இருக்கிற பொண்ண இப்படி கஷ்டப்படுத்தாதே" என்று கர்ஜிக்க அவரை சாவகாசமாக பார்த்தவன், "எனக்கு இவளை பிடிக்கல... எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதும் உங்க கடமை முடிஞ்சு போச்சு. என் வாழ்க்கைல தலையிட உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்றான் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு... மகன் முதல் முறை இவ்வாறு அவமானப்படுத்தியதால் மனம் கோணியவர், "இனி என்னடி நமக்கு இங்கே வேலை? வா..." என்று சித்ராவை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டார்.

விஷ்வாவை பார்த்த மித்ரா அவன் எதுவும் பேசாமல் நிற்பது கோபத்தை வரவழைக்க, "விஷ்வா, கயல் நீங்களாச்சும் உங்க அண்ணா பண்ணுற அநியாயத்தை தட்டி கேட்க மாட்டீங்களா?" என்று ஆற்றாமையுடன் அவர்களை பார்த்து கேட்க சாணக்கியனோ, "அப்பாக்கு சொன்னது தான் அவங்களுக்கும்" என்றான் இளக்காரமாக.

தங்கை அவமானப்படுவதை பொறுக்க முடியாமல் மித்ராவை பார்த்த வசுந்தரா, "வா போகலாம்" என்றாள் கண்ணீரை துடைத்தபடி.

"நீ சும்மா இரு அக்கா" என்று அவளை பார்த்து உறுமியவள்,

"இங்க பாருங்க சாணக்கியன்" என்று கூறியதில் அவன் அதிர்ந்து நோக்க,

"பொண்டாட்டிய ஒழுங்கா வச்சுக்க தெரியாதவங்களுக்கெல்லாம் எதுக்கு மரியாதை? நீங்க அவளை அனுபவிச்சிட்டு அவ வயித்தில பிள்ளையையும் கொடுத்திட்டு இப்போ வேணாம்னு சொல்றீங்க. நீங்கெல்லாம் மனுஷனே இல்ல மிருகம்... உங்க உடம்பு தேவைக்காகத்தானா எங்க அக்கா வாழ்க்கையை வீணாக்குனீங்க??? உங்களை நான் சும்மா விட மாட்டேன்" என்று சுட்டு விரலை நீட்டி பேசியவளின் கன்னம் அடுத்த கணம் பழுத்திருந்தது.

அவளை ஓங்கி அறைந்த விஷ்வா அவளை சினம் தெறிக்க நோக்கி, "அவர் கிட்ட பேசவே பயப்படுவாங்க... நீ கை நீட்டி பேசுறியா? கேட்க ஆளில்ல என்று நினைச்சியா? வெளியே போடி" என்று சீறினான்.

அவள் உள்ளம் கவர்ந்தவனின் அறையில் ஒரு கணம் அதிர்ந்து நின்றவளுக்கு சற்று முன் அவன் கைகளில் குழைந்தது நினைவுக்கு வந்து தொலைத்தது. 'ச்ச இவன நம்பி நான் என்னை இழந்திட்டேனே' என்று வலியுடன் நினைத்தவள், அவனை உறுத்து ஒரு கணம் பார்த்து விட்டு, "வா அக்கா போகலாம்" என்று வசுந்தராவை இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. கயல் தடுக்க நினைத்தாலும் சாணக்கியனுக்கு பயந்து அமைதியாக நின்றாள்.வசுந்தராவை ஒதுக்கி சாணக்கியனால் இருக்க முடிந்தாலும்... மித்ராவை ஒதுக்கி விஷ்வாவால் இருக்க முடியவில்லை. அண்ணன் செய்தது தவறு என்று அறிந்தாலும் மித்ரா அவ்வாறு மரியாதை இல்லாமல் சாணக்கியனை பேசியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் அவள் நினைவுகள் அவனை வதைத்தது.

வீட்டுக்கு வந்த மித்ராவும் வசுந்தராவும் தந்தையிடம் எதுவும் கூறாமல் இருக்க மகாலிங்கத்திடம் நடந்ததை கேட்ட விருதாச்சலத்தின் ரத்தம் கொதித்தாலும் மகளின் வாழ்க்கையின் பொருட்டு மௌனம் காத்தார்.

ஒரு வாரம் கழித்து விருதாச்சலத்தின் வீட்டுக்குச் சென்றான் விஷ்வா. வசுந்தராவும் விருதாச்சலமும் வேலைக்குச் சென்றிருக்க மித்ராவின் தாய் லட்சுமி கோவிலுக்குச் சென்றிருந்தார்.

அனைத்தையும் அறிந்து விட்டே அவன் வீட்டினுள் நுழைந்திருந்தான்.

மித்ராவின் அறையை தட்டியதும் அழுதபடி படுத்திருந்தவள் எழும்பி வந்து கதவை திறக்க அவளின் அழுது சிவந்த கண்களை பார்த்து மனம் வெதும்ப தொடங்கினான்.

அவன் வந்ததும் அவன் மேல் அவளுக்கு ஆத்திரம் பொங்க அறைக்குள் நுழைய போனவனை தடுத்தவள், "என்ன விஷயம்?" என்று கதவை மறைத்து நின்றபடி கேட்டாள்.

"எப்படி இருக்க???" என்றவனிடம், "உனக்கு அது தேவையில்லாதது" என்று முகத்திலடித்தபடி கூறியவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், "எனக்கு எல்லாம் தேவையானது தான்" என்றான்.

மேலும், "நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கேன்" என நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

பெரிய ஜோக் சொன்னனது போல் கை தட்டி சிரித்தவள், "அப்புறம்?" என்று கேட்க அவனுக்கோ கோபம் எகிறியது.

இப்போது கோபத்தை காட்ட முடியாது என்று நினைத்தவன், "மித்ரா நமக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்ல தானே" என்று சொல்ல, "நமக்குள்ள பிரச்சனை இல்லையா? அன்னைக்கு என்னை அறைஞ்சது மறந்திடுச்சா???" என்று கேட்டவளிடம், "நீ பேசியதும் தப்பு தானே?" என்று தன்மையாக சொன்னான்.

"எங்க அக்கா வாழ்க்கையை சீரழிச்சவரோடு நான் எப்படி மரியாதையாக பேசுறது???" என்று கேட்டவளை நிதானமாக பார்த்தவன், "கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே சரி ஆகி இருப்பாங்க... நீ எதுக்கு மரியாதை இல்லாம பேசணும்?" என்று கேட்டான்.

"உங்கண்ணா பேசியதுக்கு நான் அப்படித்தான் பேசுவேன்" என்று முரண்டு பிடித்தவளிடம்

பொறுமையை கடைப்பிடித்தவன், "இங்க பாரு நாம பண்ணின தப்புக்காச்சும் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

"பரவாயில்லையே... உன் அண்ணன் போல இல்லாம என்னை பத்தி யோசிக்கிறியே..." என்றவளை சீற்றம் கொண்டு பார்த்தவன், "இப்போ எதுக்குடி அவரை குறை சொல்லிட்டே இருக்க??? நம்ம வாழ்க்கையை மட்டும் பாருடி" என்று அவள் முகத்தை ஏந்த போனவனை கரம் கொண்டு தட்டி விட்டவள், "இப்போ யோசிக்கிறேன்டா உன்ன நம்பி என்னையே இழந்துட்டேன்" என்றாள் கண்கள் கலங்க.

"நான் உன்ன ஏமாத்தல மித்ரா... இப்போ கூட உன்ன கல்யாணம் பண்ணிக்க தான் வந்தேன்" என்றான் மனதில் வருத்தத்தை தேக்கி. அவன் வருந்துமளவுக்கு தன்னிலைமை ஆகிவிட்டதே என்ற ஆதங்கத்தில் சீற்றமாக, "அண்ணன் செய்த தப்பை தட்டி கேட்க முடியாத ஒரு பொ*** பயல் எனக்கு வேணாம்" என்றவளை அறைய கை ஓங்கியவன், "ச்ச" என்றபடி கையை கீழே விட்டான்.

"நீ ப்ரெக்னன்ட் ஆனா என்ன பண்ணுவ ?? இப்படித்தான் வேணாம்னு சொல்வியா?" என்று கேட்டதும் அவள் மனதுக்குள் நாட்களை கணக்கிட்ட வாறே, "அதுக்கு வாய்ப்பில்லை" என்றாள். அவளுடன் பேசி களைத்தவன், "இங்க பாரு மித்ரா என் வாழ்க்கையில் வந்த முதல் பொண்ணும் கடைசி பொண்ணும் நீ தான்... உன்னை தொட்டு விட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணுமளவுக்கு நான் கெட்டவன் இல்லை... நீ என்னை இவ்வளவு திட்டியும் நான் பொறுமையாக போறதுக்கு காரணம் நான் உன்னை தொட்ட குற்ற உணர்ச்சியால் தான்... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என்றவனை பார்த்தவள் கேலியாக சிரித்தபடி, "உன் கூட இருந்ததுக்கெல்லாம் உன்னை கட்டிக்க முடியாது" என்று இளக்காரமாக கூறியவளை சினம் பொங்க பார்த்து, "தாலி கட்டாம என்னோட இணைந்த நீ தவறான பொண்ணா?" என்று கேட்க அவள் மனமோ, 'என் காதலை கொச்சைபடுத்திட்டியேடா' என்று ஓலமிட்டது. அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், "ஆமாம்... அப்படியே வச்சுக்கோ" என்றாள் வீராப்பாக.

அவளின் பதிலால் மனமுடைந்தவன் தான் பேசியதை நினைத்து வருந்தியபடி, "ஏன் டி இப்படியெல்லாம் பேசுற ???" என்றான் நெகிழ்ந்த குரலில். அவனின் வலியான வார்த்தைகளால் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரம் யோசித்து விட்டு பெரு மூச்செடுத்தவன் தனது கழுத்திலுள்ள மாலையை கழட்டி அவள் கழுத்தில் அணிவித்து விட்டு அவளை இறுக்கி அணைத்து அவள் காதுக்குள், "நீ தப்பானவ இல்லனு எனக்கு தெரியும். உனக்கு எப்போ தோணுதோ அப்போ என் கிட்ட வா..." என்றபடி அவளை விட்டு விலகி நின்றவன் விறு விறு வென வெளியேறிவிட்டான்.

ஒரு காதல் ஜோடி மனது நிறைய காதலை வைத்துக் கொண்டு தவித்திருக்க வசுந்தரா மனமோ ரணத்தின் உச்சத்தில் இருந்தது. தனது வாழ்க்கையை நினைத்து பொங்கி வரும் கண்ணீரை வீட்டினரின் மன நிம்மதிக்காக அடக்கிக் கொண்டு நாட்களை கடத்த தொடங்கினாள். சாணக்கியனோ வேலை அலுவலகம் என்று இருபத்து நான்கு மணி நேரமும் அதை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்.

இப்படியே நாட்கள் பல கடந்தாலும் மித்ரா விஷ்வாவை தேடி போகவில்லை. அதுக்கு ஒரே காரணம் அவள் அக்காவின் வாழ்க்கை... ஒரு நாள் விஷ்வா வேலை விட்டு வரும் போது சிக்னல் லைட்டில் போலீஸ் ஜீப்பில் விறைப்பாக உட்கார்ந்திருந்த மித்ராவை கண்டதும் அவன் புதைக்கப்பட்ட காதல் மீண்டும் வெளி வந்தது.

அவளிடம் அத்து மீறி அவளை ஆட்கொண்ட நினைவுகள் அவனை குற்ற உணர்ச்சியால் கொல்ல எப்படியாவது அவளை கல்யாணம் பண்ண முடிவெடுத்து உடனடியாக விருத்தாச்சலம் முன்னால் போய் நின்றான்.

அவரிடம் நேரடியாகவே, "எனக்கு உங்க மகள் மித்ராவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்... அவளுக்கும் என் மீது விருப்பம்... ஆனால் அண்ணா அண்ணியின் பிரச்சனையால் எங்க ரெண்டு பேருக்கும் சின்ன மனஸ்தாபம்... நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நீங்க உதவி செய்யணும் ப்ளீஸ் மாமா" என்றான் எந்த வித பயமும் இன்றி.

அவனின் தைரியத்தில் ஒரு கணம் பிரமித்தவருக்கு முதல் பெண்ணின் வாழ்க்கை நினைவு வந்து தொலைத்தது. குரலை செருமியபடி, "இங்க பாருப்பா... மித்ராவுக்கு உன்னோட விருப்பம் என்னும் விஷயம் எனக்கு சந்தேகமாக இருக்கு. அதுக்கும் மேல உங்க அண்ணா என் மகளுக்கு செய்த வேலைக்கு என் இன்னோரு பொண்ணையும் உங்க குடும்பத்துக்கு கொடுத்து என்னால வருத்தப்பட முடியாது." என்று திட்டவட்டமாக கூற பொறுமை இழந்தவன் நடந்ததை ஒன்று விடாமல் அவரிடம் கூறிவிட்டு அவரை பார்க்க சங்கடப்பட்டு குனிந்துக் கொண்டான்.

அவன் கூறியதை கேட்டு முகத்தை சுளித்தவருக்கு கோபம் வந்தாலும் அதை காட்ட முடியாமல் அவருக்கும் சங்கடமாக இருக்க என்ன செய்வது என்று நிதானமாக யோசித்தார். இரு பெண்களின் வாழ்க்கையும் இப்படி ஊசலாடுவதை நினைத்து வருந்தியவருக்கு தெரியும் மித்ராவிடம் பேசி சம்மதம் வாங்க முடியாது என்று. உடனே அவருக்கு ஒரு யோசனை உதிக்க அவனை நிமிர்ந்து பார்த்து, "அவளை என் அதிகாரம் மூலம் மகாலிங்கத்துக்கு பாதுகாப்பு கடமைக்காக அனுப்பி வைப்பேன்... அவளிடம் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டியது உன் பொறுப்பு..." என்றார். அவரிடம் நன்றி கூறி விட்டு விஷ்வா வெளியேறியதும் மகாலிங்கத்துக்கு அழைத்து அனைத்தையும் கூறினார்.

மகாலிங்கத்துக்கோ தனது இரு மகன்களையும் நினைத்து தலையை கொண்டு சுவற்றில் முட்டலாம் போல இருந்தது.

"ரெண்டும் தருதலைகள் என்னவோ பண்ணி தொலைக்கட்டும்" என்று திட்டியவர் தனது வேலையை பார்க்க தொடங்கி விட்டார்.

வசுந்தராவோ சாணக்கியனுடன் சேரவும் முடியாமல் பிரியவும் முடியாமல் வாழ்க்கையை நடத்தினாள். இந்த சந்தர்ப்பத்தில் தான் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றதும் அந்த பத்திரிக்கைகாரன் கொலை செய்ய பட்டதும். அதன் பிறகு சாணக்கியனை வசுந்தரா சென்று சந்தித்த நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடந்தன.



*************************************************************************************



மித்ரா வேலைக்கு மகாலிங்கத்தின் வீட்டுக்கு வந்த சமயம் கயல் வேலைக்குச் சென்று இருந்ததால் அவளை சந்திக்க முடியாமல் போய் விட்டது. அன்று கயல் வந்த சமயம் மித்ரா வீட்டுக்குச் சென்று இருந்தாள்.

அடுத்த நாள் விருதாச்சலத்துடன் சென்று இறந்த பத்திரிக்கையாளனை பார்த்து விட்டு வந்த மித்ரா அவர் வீட்டு வாசலில் நிற்க, வேலைக்குச் சென்று வந்த கயல் அப்போது தான் மித்ரா வாசலில் நிற்பதை கண்டு கொண்டாள்.

"ஹே எப்படி இருக்க?" என்று கேட்ட கயலிடம், "ஏதோ இருக்கேன்" என்றவளுக்கு தெரியும் அவளின் ஜீரணிக்க முடியாத திருமணத்தை பற்றி... குடும்ப பிரச்சனையால் கயலின் திருமணத்துக்கு மித்ரா குடும்பம் சமூகமளிக்க முடியாவிட்டாலும் அவள் திருமணத்தை பற்றி கேள்வி பட்டிருந்தாள்.

கேட்பதா? இல்லையா? என்று யோசித்தவள் எதுவும் கேட்காமலே அவளின் சோகமான கண்களில் இருந்து அவள் வாழ்க்கையின் சோகத்தை கண்டுக் கொண்டாள்.

இந்த வீட்டு மூன்று பெண்களுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனை என்று மனதுக்குள் சலித்தவளை நோக்கி, "உள்ள வா" என்று கயல் கூப்பிட, "இல்லை" என்றவள் வெளியில் நின்றுக் கொண்டாள்.

அடுத்த நாள் முக்கிய புள்ளி இண்டஸ்ட்ரியலிஸ்ட் விஷ்வநாத் கடத்தப்பட்டிருந்தார். அவரை கண்டு பிடிக்க சொல்லி ஏகப்பட்ட புகார்கள் மத்தியில் போலீஸ் நிலையம் கதி கலங்கி போய் இருந்தது. அதை சி. ஐ டி யிடம் ஒப்படைத்தவர்களுக்கு இது சாதாரண விஷயமாக தெரியவில்லை.

அவனை கடத்தியது வேறு யாரும் இல்லை, சாணக்கியன் தான்... விஸ்வநாத் தான் அங்கு பல பெண்கள் காணாமல் போனதுக்கு காரணமாக இருந்தவன். பெண்களை கடத்தி அவர்களை வெளி இடங்களுக்கு விற்பனை செய்வதை மறைமுக தொழிலாக கொண்டிருந்தான்.

போலீஸ் தேடியும் பெண்களை கடத்துவது யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

கண்டு பிடித்தவர்களுக்கு அவனை நெருங்க முடியாதளவு செல்வாக்கு மிக்கவன் அவன். ஆனால் ஒரே மோப்பத்தில் சாணக்கியன் அவனை கண்டு பிடித்து தூக்கி இருந்தான். கடத்தியது மட்டும் அல்லாமல் அவனின் ரகசிய இடத்தில் வைத்து பல சித்திரவதைகள் செய்ய தொடங்கி இருந்தான்.

இரு நாட்கள் கழித்து டிவி யில் விஷ்வநாத் உடல் கண்டுபிடிக்க பட்டதாக செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதை மகாலிங்கம் சாணக்கியன் மற்றும் விஷ்வா உட்காந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடமைக்கு வந்த மித்ராவும் நின்றபடி அதை பார்க்க கயலோ காத்தமுத்துவுக்கு காலை சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

காத்தமுத்துவை அன்று தான் முதன் முதலில் பார்த்த மித்ரா புருவம் சுளித்து, "இது..." என்று தடுமாற கயல் அவளாகவே வந்து, "என் புருஷன்" என்றாள் கண்களில் தேங்கிய வலியுடன். "அதில்லடி இவரை எங்கேயோ..." என்றபடி அவனை கூர்ந்து பார்க்க காத்தமுத்துவோ மற்றைய பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவர்களின் உரையாடலை உதட்டில் மிக மிக மெல்லிய சிரிப்புடன் சாணக்கியன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் பார்த்து வரிசையாக சி.ஐ .டி கார்கள் மந்திரி வளாகத்துக்குள் படையெடுத்து வந்தன. எல்லோரும் பதட்டமாக எழுந்து நின்றனர் சாணக்கியனை தவிர.

முன்னால் வந்த அதிகாரி தனது ஐடென்டி கார்டை காட்டியவர், "சார் நீங்க விஷ்வநாத்தை கொலை செய்த குற்றத்துக்காக உங்கள கைது பண்ண போகிறோம்" என்று சாணக்கியனை பார்த்து வாரண்டை நீட்டி சொன்னார்.

"சாட்சி இருக்கா?" என்று அசால்ட்டாக கேட்ட சாணக்கியனிடம் அந்த அதிகாரி தனது தொலைபேசியை நீட்ட அதில் ரகசிய இடத்தில கட்டப்பட்டு இருந்த விஷ்வநாத்தை கையை சாணக்கியன் வெட்டும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. அதை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

மகன் அர்ரெஸ்ட் ஆக போகிறான் என்ற பதட்டம் வர, "யார் வீட்ல வந்து என்ன பேசுற? நான் யார் என்று தெரியுமா உனக்கு?" என்று மகாலிங்கம் மிரட்ட அந்த அதிகாரி சற்று மிரண்டு தான் போனார்.

"சார் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது. எங்க மேல் இடத்து உத்தரவு" என்று கூற, "எவன் டா அந்த மேலிடம்?" என்று சீற தொடங்கினார் மகாலிங்கம். "கூப்பிடுடா உனக்கு உத்தரவு தந்தவனை" என்று முன்னால் நின்றவர்களை நோக்கி கர்ஜித்தவரை நோக்கி ஒரு கம்பீரமான குரல் அவரை நோக்கி வந்தது.

"மாமா அங்க இல்ல இங்க" என்று கூற அனைவரும் ஒரு சேர பின்னால் திரும்பி பார்த்தனர்.

மூவர் இருக்கும் தனி சோபாவில் கையை நீளமாக விரித்து சோபாவில் வைத்தபடி ஒரு கையில் பிஸ்டலுடன் கால் மேல் கால் போட்டபடி உட்காந்திருந்தான் காத்த முத்து.

"காத்த முத்து" என்று அதிர்ந்த விஷ்வாவை கூர்ந்து பார்த்து இல்லை என்று தலையை ஆட்டியவன், "கெளதம் கிருஷ்ணா S.P" என்றபடி தன் முழு உயரத்துக்கு எழுந்து நின்றான்.

மித்ராவின் வாயிலிருந்து, "சார் நீங்களா?" என்ற வார்த்தை வர அவளை ஒரு கணம் பார்த்தவன் ஒவ்வொருவராக தனது பார்வையை சுழல விட்டான். அனைவர் முகத்திலும் பதட்டம் இருந்தாலும் சாணக்கியன் முகம் மட்டும் நிதானமாக இருந்தது. அதை பார்த்து சிறிய புன்னகையை தவழ விட்டபடி 'நான் நினைச்சதை விட நீங்க ஸ்மார்ட் தான்' சாணக்கியனை மனதில் நினைக்க அதையே சாணக்கியனும் கௌதமை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.


நின்றபடி பெரு மூச்செடுத்த கெளதம் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக கட்டி உடலை இருபக்கமும் வளைத்தபடி, "கூனி கூனி நடிச்சு முதுகெல்லாம் ஒரே வலி" என்று கூறியபடி சாணக்கியனை நோக்கி நடந்தான்.
 
நான் நினைச்சேன் இவன் C. I. D யா தான் இருப்பான்னு 😍 ஆனா கயலுக்கும் இவனுக்கும் திருமணம் நடத்த மகாலிங்கம் எப்படி ஒத்துக்கிட்டார்ன்னு தான் சந்தேகமா இருக்கு..
மனநிலை பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சே ஒத்துக்கிட்டாரா? இல்லை இவன் cid ன்னு முதலிலே தெரியுமா??
 
Top