அத்தியாயம் 6
அவளும் அறைக்குள் வந்து விட்டாள்.
சர்வஜித்தோ மேலிருந்து கீழ் இறங்கி அவள் அறைக்குள் நுழைய முற்பட, "அங்கே எங்கடா போற?" என்று கேட்டுக் கொண்டே சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார் மருதநாயகம்...
அவனுக்கோ எரிச்சலாக இருந்தது...
"அந்த பொண்ண பார்க்க" என்றான்...
"கட்டிக்க போற பொண்ணு பேர் தெரியாதா? ஆதிரையாழ்" என்றார் அவர்... அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "ஆதிரையாழைப் பார்க்க" என்றான்...
"கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார் அவர்...
"கல்யாணம் நடக்குமா?" என்றான் அவன் புருவத்தை இடுக்கி...
"கண்டிப்பா நடக்கும்... ம்ம்" என்று அவர் கண்களை மூடி திறந்து சொல்ல, அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டே, "தாத்தா நான் சொல்றத கேளுங்க" என்று ஆரம்பிக்க, "இப்போ ரூமுக்குள்ள போக போறியா? இல்லை வக்கீலை வர வைக்கட்டுமா?" என்று கேட்டார்...
ஒரே வார்த்தையில் அவனை அடக்கி விட, அவரை அழுத்தமாக பார்த்து விட்டு அவனும் மாடியேறிப் போனான்...
அறைக்குள் வந்தவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை... எரிச்சலாக இருந்தது...
அதுவும் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்க நினைக்க தலை விண் விண்ணென்று வலித்தது...
ஆதிரையாழ் தான் மனைவி என்று எண்ணும் போது அவனுக்கு மயக்கம் வராத குறை தான்...
தனக்கு அவள் எந்த வகையிலும் நிகர் இல்லை என்று நினைத்தவன் ஒவ்வொன்றாக யோசித்தான்...
அவன் மாஸ்டர்ஸ் முடித்து இருக்கின்றான்... அதுவும் அமெரிக்க யூனிவெர்சிட்டியில்... அவளை பார்த்தால் கல்லூரியை கண்ணால் பார்த்த போலவே தெரியவில்லை அவனுக்கு...
படிப்புக்கு அடுத்து பழக்கவழக்கம் என்று பார்த்தால் அவள் கிராமத்து பழக்கவழக்கங்களை கொண்டவள்...
அவனுக்கு கொஞ்சமும் பொருத்தமாக இருக்க மாட்டாள்...
அழகை பற்றி அசை போட்டான்...
அலையலையான முடி...
அங்கும் இங்கும் பறந்துக் கொண்டு இருக்கும்...
தலையை உலுக்கிக் கொண்டான்...
அவன் பால் வண்ண நிறத்தில் இருப்பான்...
அவள் மாநிறத்துக்கும் வெண்ணிறத்துக்கும் நடுவிலான ஒரு நிறம்...
தாவணி தான் அணிவாள்...
'என் வேலைக்காரினு சொல்ல கூட அவ பொருத்தமா இருக்க மாட்டா... இதுல பொண்டாட்டியா?' என்று எரிச்சலுடன் நினைத்தவனோ, "இந்த பெருசு ஒன்னும் பண்ண விட மாட்டார்... அந்த பெருசு சொத்தெல்லாம் என் கைக்கு வந்ததுமே டைவர்ஸ் பண்ணிடனும்..." என்று முடிவெடுத்த பின்னர் தான் மூச்சே வந்தது அவனுக்கு...
ஆனாலும் அவள் தான் சொன்னதை கேட்கவில்லை என்று கடுப்பு அவனுக்கு இருக்க தான் செய்தது...
அன்று அவனுக்கும் தூக்கம் இல்லை...
அவளுக்கும் தூக்கம் இல்லை...
அடுத்த நாள் காலையில் சர்வஜித் எழுந்த சமயம், வீடெல்லாம் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது...
கிராமத்து முறையில் ஒரு திருமணம்...
கதவை திறந்து சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தவனை நோக்கி வந்தார் மருதநாயகம். அவருக்கு பின்னே தாம்பூலத்துடன் முத்து வர, "உன்னோட வேஷ்டி சட்டை எல்லாம் இங்க இருக்கு... பால் வைக்கணும்... நான் தானே எல்லாம் பண்ணனும்... கீழ வா" என்று சொல்லி விட்டுச் செல்ல, அவனோ கட்டிலில் வைத்து விட்டு போன வேஷ்டி சட்டையை பெருமூச்சுடன் பார்த்து விட்டு கீழேச் சென்றான்...
அவனுக்கு பால் தலைக்கு வைத்து முடிய, அவனும் ஆயத்தமாக அறைக்குள் சென்று விட்டான்... அதனை தொடர்ந்து ஆதிரையாழுக்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன...
அவர்கள் தோட்டத்திலேயே குல தெய்வம் கோவில் இருந்தது...
ஐயர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு அங்கே காத்துக் கொண்டு இருந்தார்...
சர்வஜித்துக்கோ சலிப்பாக இருந்தது எல்லாம்...
ஆனாலும் "வக்கீலை கூப்பிடவா?" என்று கேட்டு மருதநாயகம் ஒரு வழி பண்ணி விடுவார் என்று அவனுக்கு தெரியும்... அதனால் ஒன்றும் சொல்லாமல் கோவிலுக்குச் சென்றான்... அவன் கழுத்தில் மாலையை கொண்டு வந்து போட்டு விட்டான் முத்து...
இந்த சம்பிரதாயங்கள் அவனுக்கு தெரியாது என்று இல்லை...
கேள்விப்பட்டு இருக்கின்றான்.. சில நண்பர்களின் திருமணத்தில் பார்த்தும் இருக்கின்றான்...
அவனுக்கோ சாமி கும்பிடும் பழக்கமே இல்லை... அதனால் சன்னிதானத்தில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அப்படியே நின்று இருந்தான்...
சற்று நேரத்தில் புடவையில் மங்களகரமாக வந்தாள் ஆதிரையாழ்...
அவளை புன்னகையுடன் பார்த்த மருதநாயகமோ, "வாம்மா யாழ்... மகாலக்ஷ்மி போல இருக்க" என்று மெச்சிக் கொள்ள, 'க்கும்' என்று நினைத்துக் கொண்டான் சர்வஜித்...
ஆதிரையாழை சர்வஜித்துக்கு அருகே நிற்க வைத்து இருந்தார்கள்...
அவளுக்கோ அவன் அருகே நிற்கும் போதே உதறல் எடுத்தது... கடைக்கண்ணால் ஏறிட்டுப் பார்த்தாள்.
அவன் தோள்பட்டை உயரத்தில் தான் அவள் இருந்தாள்...
'எம்புட்டு உசரம்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பெண்ணவள்...
அப்படியே கண்களை மூடி சாமி கும்பிட ஆரம்பித்து விட்டாள். ஐயரும் மந்திரங்களை சொல்லிக் கொண்டே சம்பிரதாயங்களை முடித்து விட்டு, தாலியை தேங்காயில் வைத்து சர்வஜித்திடம் நீட்டினார்...
அவனோ அதனை எடுத்துக் கொண்டே மருதநாயகத்தை பார்க்க, அவரோ, "எத்தனை முடிச்சுனு தெரியுமா?" என்று நக்கல் தொனியில் கேட்டார்...
"மூணு தானே" என்று கேட்டுக் கொண்டே, அருகே நின்ற ஆதிரையாழின் கழுத்தில் தாலியை கட்டினான் சர்வஜித்...
இது எல்லாம் கண்களை மூடி நின்ற ஆதிரையாழுக்கு கேட்டாலும் அவள் கண்களை திறக்கவே இல்லை...
அவள் மூடி இருந்த கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...
தனக்கு திருமணம் நடக்கும் என்றெல்லாம் அவள் கனவு கண்டதே இல்லை...
தனது நிலையை உணர்ந்து சராசரி பெண்களின் கனவுகளை கூட அவள் புதைத்துக் கொண்டு தான் வாழ்ந்தவள்...
இந்த நேரத்தில் தாய்,தந்தை இல்லையே என்கின்ற ஏக்கம் அவளிடம்... அது கண்ணீராக வெளி வந்தது...
சர்வஜித் அதனை கவனித்துக் கொண்டே மூன்றாவது முடிச்சை போட்ட நேரம் அவள் விழிகளை திறந்து அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவன் முகம் இறுக்கமாக இருந்தது...
விழிகளில் ஒரு அழுத்தம்...
அவளை இப்போதும் அனல் தெறிக்க தான் பார்த்துக் கொண்டே தாலி கட்டினான்... அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் சட்டென அவள் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
தாலி கட்டி முடித்ததை தொடர்ந்து ஏகப்பட்ட சம்பிரதாயங்கள்...
சர்வஜித்தின் இதழ்கள் புன்னகைக்கவே இல்லை...
ஆதிரையாழினாலும் சிரிக்க முடியவில்லை... சிரிக்க முயன்று தோற்றுப் போனாள்.
திருமணம் முடிந்ததுமே அவள் மருதநாயகத்தின் காலில் விழ, அவள் அருகே அப்படியே நின்று இருந்தான் சர்வஜித்...
"டேய் விழுடா" என்று மருதநாயகம் அதட்டிய பின்னரே காலில் விழுந்தான்...
அவனுக்கு யார் காலிலும் விழுவதே பிடிக்காது அல்லவா? அவன் காலில் விழுந்ததை எல்லாம் கல்வெட்டில் தான் குறித்து வைக்க வேண்டும்...
அனைத்து சம்பிரதாயங்களும் முடிய வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள்...
அங்கே பெரிய விருந்தே ஊர் மக்களுக்கு மருதநாயகம் ஏற்பாடு செய்து இருக்க, வேறு வழி இல்லாமல் அங்கே அமர்ந்து இருந்தான் சர்வஜித்...
அவனுக்கோ இதெல்லாம் எப்போது முடியும் என்கின்ற எண்ணம் தான்...
அனைத்தும் முடிந்து அவனும் அறைக்குள் சென்று விட்டான்...
இப்போது தான் ஆதிரையாழுக்கு உதறல் எடுத்தது...
அடுத்து முதல் இரவு... அவன் அறைக்குள் செல்ல வேண்டும்... நினைக்கவே தலை சுற்றிக் கொண்டே வந்தது...
குளித்து விட்டு அவனுக்காக எடுத்து வைத்த வேஷ்டியை கட்டிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து இருந்தான்...
அளவு கடந்த அழுத்தம்...
சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பித்தவன் மனமோ ஆதிரையாழ் மீது கொலைவெறியில் தான் இருந்தது...
எப்படிப்பட்டவன் அவன்...
இப்போது இங்கே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றான் அல்லவா?
இந்த சொத்தெல்லாம் வேண்டாம் போய் தொலைவோம் என்று தோன்றும் அளவுக்கு அழுத்தம்...
ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு சொத்து இல்லாமல் போக அவன் மனமும் இடம் கொடுக்கவே இல்லை...
அவ்வளவு வைராக்கியம் அவனுக்கு...
இதே சமயம், முதலிரவுக்கு அங்கே இருக்கும் பெண்கள் ஆதிரையாழை அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள்...
அவளுக்கு உயிர் அவளிடத்தில் இல்லை...
அப்படி ஒரு பயம்...
என்ன செய்ய போகின்றான் என்று பயம்...
அங்கிருந்த பெண்களோ அவளை கலாய்த்த போதிலும் அவளுக்கு வெட்கமோ சிரிப்போ வரவில்லை...
முகம் பயத்தில் வெளிறி போய் தான் இருந்தது...
அங்கே அனுபவமான பெண் ஒருத்தியோ, "முதல் தடவை தான் யாழ் பயமா இருக்கும்... அப்புறம் நீயே மாப்பிள்ளையை விட மாட்டே தெரியுமா?" என்று சொல்லி சிரிக்க, அங்கே அனைவரும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டார்கள்...
ஆதிரையாழுக்கு சிரிப்பு வந்தால் தானே...
முதலிரவு ஒரு பக்கம் இருந்தாலும் அவன் முன்னே நிலையாக நிற்க முடியாத அளவு கால்களில் நடுக்கம்...
என்ன செய்வது என்றும் தெரியவில்லை...
யாரிடம் சொல்வது என்றும் புரியவில்லை...
யோசனையுடன் எழுந்துக் கொண்டவள் கையில் பால் செம்பை ஒரு பெண் திணிக்க, "மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ" என்ற ஒருத்தியோ அவள் கையில் ஒரு எண்ணெய் குப்பியையும் கொடுத்து விட்டாள்...
அது எதற்கு என்று ஆதிரையாழுக்கு தெரியவே இல்லை...
"எதுக்கு அக்கா இது?" என்று அவள் கேட்க, "சீ போ, என்னை எதுக்கு கேக்கிற? மாப்பிள்ளையை கேளு" என்று சொல்லி விட்டு அந்த பெண் செல்ல, ஆதிரையாழோ யோசனையுடன் அதனையும் எடுத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்...
ஆதிரையாழுக்கோ "ஐயோடா" என்று இருந்தது...
தட்டு தடுமாறி படிகளால் ஏறி சர்வஜித்தின் அறையையும் நெருங்கி விட்டாள் பெண்ணவள்...
சர்வஜித்தோ அவள் உள்ளே வந்ததுமே அவளை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று வெறியுடன் அமர்ந்து இருந்தான்...
முதலிரவு அறைக்குள் தயங்கி தயங்கி நுழைந்தாள் ஆதிரையாழ்.
கையில் பால் செம்புடன் அவள் உள்ளே நுழைந்து இருக்க அறையெல்லாம் புகை...
ஊதுபத்தி வாசனை வர வேண்டிய இடத்தில் வந்தது என்னவோ சிகரெட் புகை தான். இருமிக் கொண்டாள்...
அவளையே பார்த்துக் கொண்டே வாயில் சிகரெட்டுடன் அவளை நோக்கி வந்த சர்வஜித்தோ, "கையில என்ன பாலா?" என்று கேட்டுக் கொண்டே சிகரெட்டை பாலினுள் போட்டான்.
பெண்ணவள் அதிர்ந்து அவனை விழி விரித்துப் பார்க்க , அவனோ இடையில் இரு கைகளையும் குற்றியபடி அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
அவனது அழுத்தமான பார்வையில் அவளுக்கு குப்பென்று வியர்க்க, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள்...
அவன் ஹெசல் விழிகளின் பார்வை வீச்சை ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் தாங்கவே முடியவில்லை...
சட்டென தலையை குனிந்த சமயம் சொடக்கு சத்தம்...
அவனிடம் இருந்து தான்.
ஏறிட்டு மீண்டும் அவனை நோக்கினாள்.
"உன் கிட்ட நான் என்ன சொன்னேன்??" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான்.
அவளோ குரல் தழுதழுக்க, "கல்யாணத்துல சம்மதம் இல்லனு சொல்ல சொன்னீங்க" என்றாள்...
"நீ என்ன சொன்ன??" அவனிடம் இருந்து அடுத்த கேள்வி...
"சம்மதம்னு சொன்னேன்..." அவள் குரல் நலிந்து ஒலித்தது.
"மல்டி மில்லியனர்னு சொன்னதுமே பொறுக்கியா இருந்தாலும் ஓகேனு நினைச்சுட்டியா??" என்று கேட்டான்.
"ஐயோ இல்லை... தாத்தாவுக்காக தான்" என்றாள்...
"தாத்தாவுக்காக கல்யாணம் பண்ணனும்னா நீ தாத்தாவை தான் கல்யாணம் பண்ணி இருக்கணும்" சற்றும் நெருடல் இல்லாமல் வந்தன அவன் வார்த்தைகள்...
மனசாட்சி இருப்பவனிடம் தானே நெருடல் இருக்கும்...
மனசாட்சியை தொலைத்து விட்டு நிற்பவனிடம் இதனை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன??
"ஏன் இப்படி அசிங்கமா பேசுறீங்க?" கண்ணீருடன் வந்தது அவள் வார்த்தைகள்...
"ஹேய் வேற எப்படிடி பேச சொல்ற??" கோபத்தில் கணீர் என ஒலித்தது அவன் குரல்...
அவளோ விக்கித்து போய் அவனைப் பார்க்க, "அங்கே பொண்ணுங்க எல்லாம் எப்படி இருப்பாங்க தெரியுமா?? எத்தனை பொண்ணுங்க பின்னாடி வருவாங்கனு தெரியுமா?? எத்தனை ப்ரோபோசல் ஐ ரிஜெக்ட் பண்ணி இருக்கேன் தெரியுமா? அப்படி பட்ட என்னை இந்த பெருசு உன் கிட்ட சிக்க வச்சு இருக்கு... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு" என்று சொல்லிக் கொண்டே பின்னந்தலையை வருடி தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன்,
"நீ அங்க வா... அப்போ இருக்கு உனக்கு... இங்க வச்சு உன்னை ஒன்னும் பண்ண முடியாது... வேஷ்டி சட்டை கட்டி இருக்கேன் என்கிறதுக்காக பழம்னு நினைச்சுடாதே... என்னோட உண்மையான முகம் என்னனு அங்க தான்டி உனக்கு தெரியும்" என்று மிரட்டலாக சொன்னான். அவன் பேசியது அவளுக்கு பயத்தை கொடுத்தாலும் ஒரே கேள்வி மட்டும் அவள் மனதில் உறுத்தலைக் கொடுத்தது...
"நான் ஒன்னு கேட்கட்டுமா??" என்றாள்...
அவன் புருவம் இடுங்கியது...
"அப்போ அன்னைக்கு ரேப் பண்ணுறது பொழுது போக்குனு சொன்னது எல்லாம் பொய்யா??" என்று கேட்டாள்...
அவனுக்கோ சுர்ரென்று ஆத்திரம்...
கட்டுப்படுத்த முடியவில்லை... அவள் கையில் இருந்த பாலை எடுத்து அவள் தலையில் ஊற்றியவன்,
"நான் என்ன பேசிட்டு இருக்கேன்.... நீ என்ன கேட்டுட்டு இருக்க??" என்று சீற அவளோ தலையில் இருந்து பால் வடிய அவனை அதிர்ந்து பார்த்தாள்...
அவளை அனல் தெறிக்க பார்த்தவனோ, "உன்னை பார்த்தாலே கொலை பண்ணுற அளவுக்கு ஆத்திரம் வருது... என் கண் முன்னாடி நிற்காதே" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் சென்று படுத்து விட, ஆதிரையாழுக்கு கண்கள் கரித்துக் கொண்டே வந்தது...
ஆனால் இப்படியே படுக்க முடியாது என்று அவளுக்கு தெரியும்...
அவள் உடைகள் அங்கே தான் வைக்கப்பட்டு இருந்தன...
தனது பெட்டியை எடுத்து உடைகளை எடுத்துக் கொண்டே, வெளியேறி குளியலறைக்குள் சென்று விட்டாள்.