அத்தியாயம் 6
அன்று இரவே கையில் காகிதம் மற்றும் பேனாவுடன் வீட்டின் பின் புறம் இருக்கும் திண்ணையில் அமர்ந்து விட்டாள் தேன்மொழி...கண்களில் கண்ணீர், கைகளில் நடுக்கம்...
ஆம் வம்சி கிருஷ்ணாவை சுற்றி வரும் தென்றல் அவள் தான்... இடது கைப்பழக்கம் உள்ளவள்...
இசையில் ஆர்வம்கொண்டிருப்பவளுக்கு அவன் இசை தான் உயிர் மூச்சு...
காதல், மோகம், கோபம், கண்ணீர் என்று அனைத்து உணர்வுகளையும் அவன் குரலிலும் இசையிலும் உணர்ந்து இருக்கின்றாள்...
அவன் காதல் பாடல் பாடும் போது, அவளும் காதலித்து இருக்கின்றாள்...
அவன் மோகமான பாடல் பாடும் கணங்களில் அவளும் மோகம் கொண்டு இருக்கின்றாள்...
அவள் சோகமான பாடல் பாடும் கணங்களில் அவளும் அழுது இருக்கின்றாள்...
அப்பப்பா எத்தனை உணர்வுகள் அவன் குரலில்...
அனைத்தையும் அவளுக்குள் மொத்தமாக கடத்தி விடுகின்றானே...
அவன் இசையை நேசிக்க ஆரம்பித்தவள், இப்போது அவனையும் நேசிக்க ஆரம்பித்து விட்டாள்...
அவள் குரலை அவள் தொலைத்ததில் இருந்தே, அவள் உணர்வுகளையும் தொலைத்து தான் இருந்தாள்.
அனைத்தையும் மீண்டும் தட்டி எழுப்பி அவளை மீண்டும் புத்துணர்ச்சியாக வைத்து இருந்தது அவன் இசை மட்டும் தான்...
அவளது வம்சி கிருஷ்ணாவின் இசை தான்...
அந்த இன்னிசை மட்டும் இல்லை என்றால் அவளிடம் இந்த வேகமும் புன்னகையும் இருந்து இருக்காது...
தன்னை மீட்டெடுத்த அவன் இசைக்கு அடிமையானவள் தான் இந்த தென்றல் என்னும் தேன்மொழி...
யாருக்கும் தெரியாத தனது உணர்வுகளை அவனுக்கு ஒவ்வொரு மாதமும் கடிதமாக வடிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவன் வாசிக்கின்றானோ இல்லையோ எழுதி கொண்டே இருக்கின்றாள்...
அதில் ஒரு ஆத்மார்த்த திருப்தி அவளுக்கு...
அவனுடன் பேசுவது போன்ற உணர்வை இந்த கடிதங்கள் அவளுக்கு கொடுத்து விடுகின்றன...
அவள் காதலையும் சொல்லி விட்டாள், ஆனால் இனி அவனுக்கு அவளால் கடிதங்கள் எழுத முடியாத நிலை...
அவனுக்கு அவள் எழுத போகும் இறுதி கடிதம் இது...
அழுகை மட்டுமே வந்தது...
அடைய முடியாது என்று தெரிந்தும் ஆசைப்பட்ட தன் மேல் கோபம் வந்தது...
எப்படியும் இந்த காதல் ஏமாற்றத்தில் முடியும் என்று அவளுக்கு ஏற்கனவே தெரியும்...
ஆனால் இவ்வளவு சீக்கிரம் முற்றுப் பெறும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை...
திருமணம் நடந்து விட்டால், இந்த கடிதம் எழுத முடியாது...
அது அவள் கணவனுக்கு செய்யும் துரோகமாகி விடும் என்று உணர்ந்தவளோ தன்னவனுக்கான இறுதி கடிதத்தை எழுத காகிதத்தில் பேனாவை வைத்தாள்...
எழுத முடியவில்லை... கை நடுங்கியது...
கண்களை கண்ணீர் நிறைத்து இருக்க, எதுவும் தெளிவாக தெரியவில்லை...
அணிந்திருந்த சுடிதாரின் ஷாலினால் கண்களை துடைத்துக் கொண்டாள்.
காதல் இவ்வளவு வலியை கொடுக்கும் என்று தெரிந்தால் காதலித்து இருக்க மாட்டாளோ என்னவோ... உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு...
'அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு' என்று ஆரம்பித்து விட்டாள்...
என்ன எழுதுவது என்று தெரியவில்லை...
அவன் எப்படியும் வாசிக்க போவது இல்லை என்பது அவள் நம்பிக்கை...
"உங்களுக்கு நான் எழுதும் இறுதி கடிதம்" என்று ஆரம்பித்து எழுதினாள்...
அழுதழுது எழுதினாள்...
கண்களில் வழிந்த கண்ணீரை அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.
வழக்கமாக அவனுக்கு கடிதம் எழுதும் போது அவள் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டே இருக்கும்...
இன்று அவள் முயன்றாலும் புன்னகைக்க முடியவில்லை...
மேல் நோக்கி வளைய வேண்டிய அவள் இதழ்கள் கீழ் நோக்கியே வளைந்தன...
வாழ்க்கையில் பெரிய பெரிய சந்தோஷங்களை இழந்தவளுக்கு கிடைத்தது என்னவோ இந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் தான்...
வம்சி கிருஷ்ணாவின் இசை, அவன் மேல் உள்ள ஒரு தலை காதல், அவனுக்கு எழுதும் கடிதங்கள், அவள் பார்க்கும் ஆசிரியர் வேலை...
அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தவை இவை தான்...
இப்போது எல்லாமே ஒரே நேரத்தில் கையை விட்டு போவது போன்ற உணர்வு...
அவளை ஜீவனுடன் வைத்து இருக்கும் வம்சி கிருஷ்ணாவின் குரலை அவளால் இனி கேட்க முடியுமா என்று தெரியவில்லை...
அதற்கு ரஞ்சன் சம்மதிப்பானா? என்றும் புரியவில்லை...
அவனை பார்த்தால் சற்று கடுமையானவன் போல தான் தேன்மொழிக்கு தெரிந்தது...
பாட்டு கேட்க கூடாது என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்று அவளுக்கு ஒரு பதட்டம்...
பெண்கள் திருமணம் செய்வது சந்தோஷமாக வாழ தானே...
ஆனால் நிதர்சனத்தில் சந்தோஷத்தை எல்லாம் புதைத்து விட்டு தான் பலர் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள்...
அப்படியான பெண்களுள் இப்போது தேன்மொழியும் அடங்கி விட்டாள்.
கடிதத்தையும் எழுதி முடித்து விட்டாள்...
அவள் பெயர் அருகே அவள் கண்ணீர் துளி...
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, கடிதத்தை மடித்து நோட் புக்கினுள் வைத்துக் கொண்டாள்.
முதலாம் தேதிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருந்தன...
இரு வாரங்களில் இந்த கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, வீட்டினுள் நுழைந்தாள்...
மகாலக்ஷ்மி அருகே சென்று படுத்துக் கொண்டாள்...
தூக்கம் வரவில்லை...
புரண்டு புரண்டு படுத்தாள், வம்சி கிருஷ்ணாவின் எண்ணமே மீண்டும் மீண்டும் வந்தது...
சட்டென தொலைபேசியை எடுத்து வம்சி கிருஷ்ணாவின் பாடலை ஹெட் செட்டில் போட்டுக் கொண்டே, கண்களை மூடினாள்...
அவன் குரல் அவளுக்கு தாலாட்டாக மாற, அப்படியே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் ஸ்கூலுக்கு சென்றவளோ தனது சக ஆசிரியையிடம் விடயத்தை சொன்னாள்.
அவரோ, "கல்யாணம் பண்ணுறதுக்கும் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்று ஆதங்கப்பட்டார்...
இந்த விடயம் எப்படியோ பரவி ப்ரின்சிபால் வரை சென்று விட்டது...
அவருக்கும் அதே ஆதங்கம் தான்...
தேன்மொழி போல ஒரு அன்பான மற்றும் திறமையான ஆசிரியரை தேடி பிடிப்பது கஷ்டம்...
அவளால் எத்தனையோ மாணவர்கள் நிறைய கற்று இருக்கின்றார்கள்...
அவள் செல்வது மாணவர்களுக்கு தான் இழப்பு என்று அவருக்கு தெரியும்...
சாதாரண மாணவர்களுக்கு கற்பிப்பதும் விசேஷ தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதும் ஒன்று அல்ல...
அதற்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கற்பிக்கும் திறன்கள் என்று நிறைய விடயங்கள் தேவைப்படும்...
அனைத்தும் தேன்மொழியிடம் இருந்தது...
தேன்மொழியை அழைத்து பேசி பார்த்தார்...
அவளுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
தன் நிலைமையை சைகையால் விளக்கினாள்... அவருக்கும் புரிந்தது...
"சரிம்மா பார்த்துக்கலாம், கல்யாண தேதி நிச்சயம் ஆனதும் சொல்லு, அந்த நேரம் நீ லீவு போட்டு போ... உன்னோட ராஜினாமா கடிதத்தை கல்யாணத்துக்கு அப்புறம் கொடு... உன் புருஷன் கிட்ட கடைசியா ஒரு தடவை கேட்டு பாரு... அப்போவும் இல்லன்னு சொன்னா மட்டும் ராஜினாமா பண்ணிடு..." என்றார்...
அவளை விட அவருக்கு மனமே இல்லை...
சம்மதமாக தலையாட்டிக் கொண்டாள்.
அவளுக்கு நம்பிக்கை இல்லை தான்...
ஆனால் அவர் மனதையும் அவள் நோகடிக்க விரும்பவில்லை...
அதனால் சரியென்று தலையை ஆட்டினாள்...
அன்று மாலை யாதவ் கிருஷ்ணாவின் வீட்டுக்கு அவனுக்கு டியூஷன் எடுப்பதற்காக வந்து இருந்தாள்...
நேரத்துக்கே வந்து விட்டாள்.
வசந்தியிடம் பேச வேண்டி இருந்தது அவளுக்கு...
"என்ன இன்னைக்கு நேரத்துக்கே வந்தாச்சு போல" என்று சுவர் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே ஜாடை பேசினார் வேதவல்லி...
அவளோ பெருமூச்சுடன், அங்கே நின்ற வசந்தியை பார்த்தாள்.
வசந்தியும், "என்னம்மா இன்னைக்கு நேரத்துக்கே வந்துட்ட?" என்று கேட்க, அவளோ, சைகை மொழியால் "நான் இன்னைல இருந்து டியூஷனுக்கு வர மாட்டேன்" என்று சொன்னாள்.
வேதவல்லியோ, "ஊமைச்சி என்ன பேசுறான்னு புரிய மாட்டேங்குதே" என்று முணு முணுக்க, வசந்திக்கோ அதிர்ச்சி...
"என்னம்மா சொல்ற?" என்றார்...
அவளோ, "எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு" என்று கைகளை அசைத்து சொன்னதுமே அதிர்ந்த வசந்தியின் இதழ்கள் மெதுவாக விரிந்தன...
"நிஜமாவா? ரொம்ப சந்தோஷம்டா" என்று அவள் அருகே வந்து அவள் நெற்றியில் முத்தம் பதிக்க, கலங்கிய கண்களுடன் சிரித்துக் கொண்டாள் பெண்ணவள்...
"க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... என்னாச்சுன்னு சொல்லு" என்று வேதவல்லி அங்கே இருந்து அதட்ட, "நம்ம தேன்மொழிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம் அத்தை" என்றார் வசந்தி சந்தோஷமாக...
"யாரோ தியாகி அமைஞ்சுட்டான் போல" என்று சொல்லிக் கொண்டே டி வி யைப் பார்க்க, தேன்மொழிக்கு அந்த வார்த்தைகள் என்னவோ செய்தன...
உணர்வுகளை அடக்கிக் கொண்டே வசந்தியை பார்த்தவர், ரஞ்சன் வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்ன விடயத்தை சொன்னாள்.
வசந்திக்கு ஏமாற்றம் தான்...
ஆனால் தனது சுயநலத்துக்காக அவள் வாழ்க்கையை அநியாய படுத்த முடியாதே...
"பரவாயில்லம்மா, நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்" என்றார்...
"என்னவாம்" என்றார் வேதவல்லி மீண்டும்...
"இனி டியூஷனுக்கு வர மாட்டேன்னு சொல்றா அத்தை" என்று சொல்ல, "நல்ல விஷயம், இனி வாழ்க்கையை பார்க்க சொல்லு" என்று சொன்ன வேதவல்லிக்கு அவள் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொன்னதில் அப்படி ஒரு சந்தோஷம்...
எப்போதுமே அந்தஸ்து என்று அதனை கட்டிக் கொண்டே இருப்பவர் தான் வேதவல்லி...
வெளி ஆட்கள் என்றால் வேலைக்காரர்களுக்கு மட்டுமே அந்த வீட்டினுள் வேலை செய்ய அனுமதி இருக்க வேண்டும் என்று குறுகிய வட்டத்துக்குள் யோசிப்பவர்...
அனைத்துக்கும் மேல் வசந்தியின் தூரத்து உறவு தான் தேன்மொழி என்று சொன்னதும் அவருக்கு அவள் மேல் இன்னும் வெறுப்பு...
மருமகள் மேல் இருக்கும் கோபம் எல்லாம் தேன்மொழி மேல் கொட்டப்பட்டது...
வசந்தியின் குடும்பத்தினரை அவமானப்படுத்திவதில் வேதவல்லிக்கு அப்படி ஒரு சிற்றின்பம்...
அதன் விளைவு தான் பார்க்கும் போதெல்லாம் வார்த்தைகளால் தேன்மொழியை அவர் கொட்டிக் கொண்டு இருக்க காரணம்...
அவருக்கு பதில் சொல்லி பயன் இல்லை, சொன்னாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்று உணர்ந்த தேன்மொழியோ வசந்தியை பார்த்து தலையசைத்து விட்டு யாதவ் கிருஷ்ணனின் அறையை நோக்கி நடந்தாள்...
யாதவ் கிருஷ்ணாவோ அவளை கண்டதுமே சந்தோஷமா சிரித்துக் கொண்டான்.
அவனுக்கு அவள் தான் தனது உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்த கூடிய நபர்...
தாயிடம் அவன் பேசினாலும் அவர் கண்ணில் எப்போதுமே ஒரு வலியை அவன் கவனித்தது உண்டு...
தன்னை நினைத்து தான் கவலைப்படுகிறார் என்று அவனுக்கு தெரியும்...
அதனாலேயே அவருடன் இயல்பாக மனம் விட்டு பேச அவனுக்கு கஷ்டமாக இருக்கும்...
தன்னை பரிதாபமாக பார்க்காத ஒருத்தர் அவனுக்கு வேண்டும்...
கெளதம் கிருஷ்ணா இயல்பாக சைகை மொழியில் பேசினாலும் அவன் விழிகளிலும் அந்த பரிதாபம் இருக்கும்... அவனுக்கு அது கொஞ்சமும் பிடிக்காது...
வம்சி கிருஷ்ணா அவனுடன் சும்மா கூட பேச மாட்டான்...
யாதவ் கிருஷ்ணாவை கண்டாலே அவன் விழிகளை வேறு எங்கேயாவது திருப்பி விடுவான்...
அவனாக சென்று பேச நினைத்தாலும் வம்சி கிருஷ்ணாவுக்கு சைகை மொழி அந்தளவு புரியாது... ஏதோ கொஞ்சம் தெரியும் அவ்வளவு தான்... அவன் தந்தை குருமூர்த்தியோ வீட்டில் நிற்பதே இல்லை...
அனைவரும் இருந்தும் மனதால் தனிமையில் இருப்பவன் தான் அவன்...
அவனுக்கு இந்த பரிதாப பார்வையும் வேண்டாம்...
இந்த ஒதுக்கமும் வேண்டாம்...
இந்த பரிதாபப்பார்வையையும் ஒதுக்கத்தையும் தவிர அவனுக்கு எதுவும் அவன் குடும்பத்தில் இருந்து கிடைக்கவில்லை...
அவனுக்கு தேவையான சிநேகம் கிடைக்கவில்லை...
எல்லாரும் அவன் தேவைகளை தான் பார்ப்பார்கள் தவிர, அவன் உணர்வுகளை யாரினாலும் புரிந்து கொள்ள முயலவில்லை...
அவன் எதிர்பார்த்த சிநேகம் கிடைத்தது அவனுக்கு தேன்மொழியிடம் இருந்து தான்...
தன்னை போல பேச முடியாமல் தவிக்கும் தேன்மொழியுடன் பேசும் போது மட்டும் தான் யாதவ் கிருஷ்ணாவுக்கு இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்த கூடியதாக இருந்தது...
அவள் ஒரு வாரம் வரவில்லை என்றாலே அவன் முகம் வாடிவிடும்...
அதனை கண்டு வசந்தியும் தேன்மொழிக்கு மெசேஜ் அனுப்பி அவளை எப்படியாவது வரவைத்து விடுவார்...
அந்தளவு தேன்மொழியுடம் நெருங்கிய ஒருவன் அவன்...
அது தேன்மொழிக்கும் தெரியும்...
அவனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது என்று அவளுக்குள் தடுமாற்றம்...
இருக்கையில் அமர்ந்து அவனுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள்... கிளம்பும் போது சொல்லலலாம் என்று நினைத்து இருந்தாள்.
யாதவ் கிருஷ்ணாவோ அவள் சொல்ல போகும் விடயம் பற்றி அறியாமல் சந்தோஷமாக பயிற்சியை செய்து கொண்டு இருக்க, டியூஷன் முடியும் நேரமும் வந்து விட்டது...
யாதவ் கிருஷ்ணாவை பார்த்த தேன்மொழியோ, "நான் இனி டியூஷனுக்கு வர மாட்டேன்" என்று சைகையால் சொன்னாள்.
அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிய, "ஏன்? பாட்டி ஏதும் சொன்னாங்களா?" என்று கையசைத்து கேட்டான்...
"இல்லை" என்ற தோரணையில் தலையாட்டியவளோ தனக்கு திருமணம் ஆக போகும் விடயத்தை சொல்ல, அவனோ, "கல்யாணம் பண்ணுனா வேலை பண்ண கூடாதுன்னு இல்லையே... ஆம்பிளைங்க வேலைக்கு போறாங்க தானே" என்றான்...
அவனுக்கே புரிகின்றது...
ஆனால் இந்த சமுதாயத்துக்கு புரியவில்லையே என்கின்ற ஆதங்கம் அவளுக்கு...
அவளோ விரக்தியாக புன்னகைத்து இதழ்களை பிதுக்க, "அப்போ நிஜமா வரமாட்டீங்களா? இதுக்கப்புறம் உங்கள நான் பார்க்க முடியாதா?" என்று கேட்கும் போதே அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது...
தேன்மொழிக்கு பாவமாக இருந்தது...
அவளுக்கும் கண்கள் கலங்க, இல்லை என்ற ரீதியில் தலையாட்ட, அவனோ அப்படியே மேசையில் படுத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்...
எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்து போனாள் பெண்ணவள்...
அவன் தோளில் கையை வைக்க, அவனோ, கண்களை துடைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், "நீங்க இந்த கல்யாணம் பண்ணிக்க வேணாமே" என்றான் கெஞ்சுதலாக சைகையை செய்து கொண்டே... இறுதியில் கை கூப்பி கெஞ்சினான்...
அதை தானே அவளும் நினைக்கின்றாள்...
ஆனால் அவள் நினைப்பது எல்லாம் நடந்து விடுவது இல்லையே...
கூப்பிய அவன் கையை பற்றி இறக்கி விட்டவளோ, "அம்மா விட மாட்டாங்க" என்று பதில் சொல்லிக் கொண்டே எழுந்தவளுக்கு அங்கே இதற்கு மேல் இருந்தால் தன்னை பேசியே அவன் மனதை கரைத்து விடுவான் என்று புரிந்தது...
விறு விறுவென அறையில் இருந்து அவள் வெளியேற, அவள் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான் யாதவ் கிருஷ்ணா...
அவள் மாடியில் இருந்து இறங்கி கீழே வந்த நேரம், அங்கே நின்ற வசந்தியோ, "அடுத்த வாரம் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்..." என்றார்.
அவள் பணம் கொடுத்தால் வாங்க மாட்டாள் என்று அவருக்கு தெரியும்... அதனால் மகாலக்ஷ்மியிடம் அவள் திருமணத்துக்காக பணம் கொடுத்து வர அவர் நினைத்து இருந்தார்...
அவளும் சம்மதமாக தலையாட்ட, "யாதவ் என்ன சொன்னான்?" என்று கேட்டார்.
அவளோ அவன் அழுவதை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளுக்கு கண்கள் கலங்க, "நீ இல்லன்னா அவனுக்கு ரொம்ப கஷ்டமாகிடும்... இன்னொரு டீச்சர் நான் ஏற்பாடு பண்ணுறேன்... வேற வழி இல்லையே..." என்று வசந்தி பெருமூச்சுடன் சொல்ல, அவளும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்...
அவரும், "நல்லா இரும்மா" என்று அவளுக்கு ஆசீர்வாதம் செய்து விட்டு, அங்கே அமர்ந்து இருந்த வேதவல்லியை பார்த்து விட்டு தேன்மொழியை பார்த்தவர், "அவங்க கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோம்மா" என்று சொல்ல, அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டி மறுத்தவள், விறு விறுவென வெளியேற வசந்தியே சற்று அதிர்ந்து விட்டார்...
ஆம் முதல் முறை அவள் அழுத்தத்தை அவர் பார்க்கின்றார்...
நான் குரலை தொலைத்தவள் தான், ஆனால் உணர்வுகளை தொலைக்கவில்லை என்று அடித்து சொல்லி விட்டு செல்கின்றாள்... எனக்கும் வலிக்கும், எனக்கும் கோபம் வரும், எனக்கும் தன்மானம் உண்டு என்று சொல்லாமல் சொல்கின்றாள்...
அவர் பேசியதை எல்லாம் கேட்டு விட்டு, அவர் காலில் விழ அவளுக்கு மனமும் தன் மானமும் இடம் கொடுக்கவே இல்லை...
வீட்டில் இருந்து வெளியேறி செல்பவளை வசந்தி அதிர்ந்து பார்க்க, வேதவல்லியை கேட்கவும் வேண்டுமா?
"அவளுக்கு என் கால்ல விழ முடியாதாமா? என்னையே அவமானப்படுத்துறாளா? நாசமா போவா... இந்த ஊமைச்சிக்கு வந்த திமிரை பாரு... இதுங்கள பத்தி தெரிஞ்சு தான் கடவுள் அளந்து கொடுத்து இருக்கார்... பேசாமலே இவ்ளோ திமிர் இருக்குன்னா, பேசுனா நாம இருக்கவே முடியாது போல... இவ கல்யாணம் பண்ணி சந்தோஷமாவே வாழ மாட்டா... என் வயிறெரிஞ்சு சொல்றேன்" என்று இஷ்டத்துக்கு சாபம் போட ஆரம்பித்து விட்டார்...
வசந்திக்கு அவர் பேசுவதை கேட்கவே முடியவில்லை...
திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கு அவர் சாபம் போடுவதை தாங்க முடியாமல் விறு விறுவென அங்கிருந்து அகன்று விட்டார்...
இதே சமயம் வாசலுக்கு வந்த தேன்மொழியோ சுற்றி கண்களை சுழல விட்டாள்...
வம்சி கிருஷ்ணா இருக்கும் அடையாளமே இல்லை... அவன் காரும் இல்லை...
இறுதியாக நேரில் ஒரு தடவை பார்த்து விடலாம் என்று நினைத்தாள்...
சந்தர்ப்பம் அமையவில்லை...
பெருமூச்சுடன் வெளியேறி விட்டாள்.
வீட்டுக்கு சென்றவளுக்கு பெரிய இடியாக வந்திருந்தது அவள் திருமண தேதி...
இன்னும் மூன்று வாரங்களில் திருமணம்...
'இவ்வளவு சீக்கிரமாவா?' என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவே இல்லை...
"அடுத்த வாரத்தோட ஸ்கூல் ல இருந்து நிற்க சொல்லி மாப்பிள்ளை சொல்லி இருக்கார்" என்றார் மகாலக்ஷ்மி...
'நான் வேலைக்கு போறதையே இவர் ஏன் பார்க்கிறார்' என்று மனதுக்குள் ஆதங்கப்பட்ட தேன்மொழியோ அவளது ப்ரின்சிபால் சொன்ன போல, இரு வாரங்கள் லீவு போட்டு நிற்க தான் முடிவெடுத்து இருந்தாள்.
திருமணம் முடிய ஒரு தடவை ரஞ்சனிடம் கேட்டு விட்டு, ராஜினாமா கடிதம் கொடுக்கலாம் என்பது அவள் எண்ணம்...
ரஞ்சன் மனம் மாறி விட மாட்டானா என்கின்ற எதிர்பார்ப்பு அவளுக்குள் இருக்க தான் செய்தது...