ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 4

அத்தியாயம் 4

கையில் இருந்த கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவனுக்கு தன்னை பற்றி தெரிந்து விட்டால் அவன் எதிர்வினை எப்படி இருக்கும் என்று வேறு பயமாக இருந்தது.

பதட்டத்துடன் அவள் நின்று இருக்க, பஸ்ஸும் வந்தது...

ஏறிக் கொண்டவளுக்கு நிதானம் என்பது கொஞ்சமே இல்லை...

அதன் விளைவு, கல்லூரியை தாண்டி பஸ் சென்றதும் தான் அவளுக்கு நிதானமே வந்தது.

"ஐயோ அண்ணா நிப்பாட்டுங்க" என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னால் செல்ல, அங்கே அமர்ந்து இருந்த பெரியவரோ, "காதல் கனவு ஏதும் கண்டுட்டு இருந்து இருக்கும் போல" என்று தனது அளப்பெரிய கருத்தை அவ்விடத்தில் முன் வைத்தார்...

அவளை யார் என்று கூட தெரியாமல் இப்படி அவர் பேசியது கோபத்தை கொடுத்தது...

அதற்காக அவருடன் சண்டை போடும் மனநிலை எல்லாம் அவளுக்கு இல்லை...

மூளை முழுவதும் ஜனார்த்தனன் ஆக்கிரமித்து இருந்தான்.

கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டே, அவள் கேன்டீனுக்கு செல்ல, அங்கே அவளுக்காக காத்துக் கொண்டு இருந்த ரித்விகாவோ, "கெதியா வாடி" என்று சொல்லி அவள் கையை பற்றி அழைத்து சென்றாள்.

போகும் போது அவளுக்கு கரித்து கொட்ட தவறவில்லை...

"உன்னால தான் எல்லா பிரச்சனையும்" என்று அவள் சொன்னது நாராயணிக்கு நெஞ்சே அடைத்து விட்ட உணர்வை தான் கொடுத்தது...

இப்படி வரும் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவே இல்லையே...

ரித்விகாவையும் தவறு சொல்ல முடியாது...

பயத்தில் பேசிக் கொண்டு இருக்கின்றாள்.

யாராக இருந்தாலும் இந்த பயம் வருவது இயல்பு தானே...

"சொறி டி, நான் தான் பிழை விட்டுட்டேன் எண்டு அவர்ட்ட சொல்றேன்" என்று சொல்லி அவளை சமாதானம் செய்ய முயன்றாள் நாராயணி.

"நீ சொன்னா கேட்பாரா என்ன? இனி சைன் வைக்க சொல்லி பாரு, எனக்கு பேய் வரும்" என்று திட்டிக் கொண்டே சென்றவள், ஜனார்த்தனனின் அறையை நெருங்க நெருங்க வேகத்தை குறைத்தாள்.

ஜனார்த்தனனின் அறையின் வாசலையும் அடைந்து விட்டார்கள்...

அங்கே சென்று வரும் விரிவுரையாளர்கள் அவர்களை பார்த்து விட்டு செல்ல, "கெதியா உள்ளே போகலாம், எல்லாரும் பார்த்துட்டு போறாங்க" என்றாள் நாராயணி.

"உனக்கு அவ்வளவு தைரியமா?" என்று கேட்க, "அதுக்காக இங்கயே இருக்க முடியுமா? நான் என்ன சைன் வைக்க சொல்லிட்டு படத்துக்கா போனேன்? அம்மாவை ஹொஸ்பிடலுக்கு தானே கூட்டிப் போனேன்... உண்மையை நான் சொல்றேன்" என்று சொல்ல, "சரி வா" என்று சொல்லி, "எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்று வெளியே நின்று சொன்னாள் ரித்விகா...

அதுவரை லேப்டாப்பை பார்த்துக் கொண்டு இருந்த ஜனார்த்தனனும் விழிகளை உயர்த்தி வாசலில் தயங்கி நின்ற இருவரையும் பார்த்தவன், தலையை அசைத்து உள்ளே வர சொல்ல, இருவரும் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள்...

உள்ளே வந்ததுமே, "சேர் அம்மாவை நான் ஹொஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனனான், அதான் சைன் வைக்க சொன்னனான். ரித்விகா ல எந்த பிழையும் இல்ல" என்று சொல்ல, "அப்போ கள்ள சைன் அடிச்சது பிழை இல்லையா?" என்று அவளையே பார்த்துக் கொண்டு கேட்டான் ஜனார்த்தனன்.

நாராயணியோ, "பிழை தான், ஆனா அதுக்கு நான் தான் காரணம்" என்றாள்.

குற்றத்தை மொத்தமாக தன் மீதே போட்டுக் கொள்ள, அவனும் குரலை செருமிக் கொண்டே எழுந்தவன், அப்படியே நடந்து வந்து, அங்கே இருந்த மேசையில் சாய்ந்து நின்றபடி, நாராயணியை பார்த்தவன், "அப்ப ரித்விகாவை அனுப்பிடலாமா?" என்று கேட்டான்.

அவன் விழிகளை இப்போது தான் அருகில் பார்த்தாள்.

பெரிய விழிகள்...

கூர்மையாக இருந்தன... அதற்கு ஏற்ற போல தடித்த புருவமும் அவனுக்கு...

கன்னங்கள் இறுகிப் போய் இருந்தது...

ஆண்மையின் இலக்கணமான அவன் தோற்றம் அவளுக்கு பயத்தை தான் கொடுத்தது...

"ஓம்" என்றாள்.

இப்போது ரித்விகாவை பார்த்தவன், "யூ கேன் கோ" என்றான்...

அவளும், "ஓகே சேர்" என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தாலும், நாராயணியை நினைக்கவே பாவமாக இருந்தது...

ஏதோ ஒரு கோபத்தில் திட்டி விட்டாள்.

ஆனால் இப்போது அவளே மொத்த குற்றத்தையும் ஏற்றுக் கொண்டு, தன்னை விடுதலை செய்ததை நினைத்து, ஒரு மாதிரி ஆகி விட, சற்று தள்ளி நின்று அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

தனக்கு முன்னே நின்ற ஜனார்த்தனனை மிரட்சியாக தான் பார்த்தாள் நாராயணி.

மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு நின்றவன் விழிகள் அவளில் மேலிருந்து கீழ் படிந்தன. ப்ரவுன் நிற சுடிதார் அணிந்து இருந்தாள்.

நீளமான முடியை பின்னி இருந்தாள்.பஸ்ஸில் வந்ததால் என்னவோ முடி கலைந்து இருந்தது...

அதுவே அவளுக்கு அழகாக தான் இருந்தது...

நெற்றியில் சின்ன கருப்பு பொட்டை தவிர எதுவும் இல்லை...

அழுத விழிகள் சிவந்து இருந்தன...

விழிகளுடன் சேர்ந்து மூக்கும் சிவந்து இருந்தது...

குரலை செருமிக் கொண்டே, சற்று குனிந்தவன், "படிக்க விருப்பம் இல்லையா?" என்று கேட்டான்...

அவளோ, "அப்படி இல்ல சேர்" என்று அவசரமாக சொல்ல, "ஒண்டும் பிரச்சனை இல்லை, உன்ட அம்மாவை மிஸ்டர் புருஷோத்தமன் வச்சு இருக்கிற போல, நான் உன்னை வச்சு கொள்ளுறேன்" என்று சொன்னான்...

சுருக்கென்று இருந்தது அவளுக்கு...

என்ன பேசி விட்டான் அவன்...

அவனை விலுக்கென்று ஏறிட்டுப் பார்த்தாள்.

கண நேரத்தில் கண்களை கண்ணீர் நிரப்பி இருக்க, ஒற்றைக் கண்ணில் இருந்து கண்ணீர் சட்டென விழுந்து விட்டது...

அவள் கண்ணீர் அவனுக்கு ஏதோ ஒரு இதத்தை கொடுத்தது...

அவள் மீது காரணமே இல்லாத கோபம்...

புருஷோத்தமனுக்கு மகளாக பிறந்து விட்டாள் என்று கோபம்...

தன் மனதை காந்தம் போல ஈர்த்து எடுத்து விட்டாள் என்று கோபம்...

எல்லாவற்றுக்கும் சேர்த்து அவன் பேசிய இந்த பேச்சும், அவளிடம் இருந்து வந்த கண்ணீரும் ஒரு வித கீழ்தரமான சந்தோஷத்தை கொடுக்க, அவன் இதழ்களில் ஒரு வன்ம புன்னகை படிய, அங்கே இருந்த கையெழுத்து போட்ட பத்திரத்தை தூக்கி காட்டியவன், "முடிவை சொல்லு, என்ன ஆக்ஷன் எடுக்கலாம் எண்டு நான் யோசிக்கிறேன்" என்றான்...

என்ன பேசிக் கொண்டு இருக்கின்றான் என்று தான் தோன்றியது...

அழுகையும் கோபமும் சேர்ந்து வர, "என்ன ஆக்ஷன் வேணும் எண்டாலும் எடுங்க" என்று திக்கி திணறி சொல்லி விட்டாள்.

"முறையில்லாம பிறந்த உனக்கு இவ்வளவு எகத்தாளமா?" என்றான்.

பேசவும் கூடாதா?

என்ன வார்த்தைகள் இவை?

இத்தனை நாட்கள் யாரும் இந்த வார்த்தையை சொல்லி விட கூடாது என்று தானே எல்லோரிடமும் எட்ட நின்று பழகிக் கொண்டு இருந்தாள்.

அவன் வாயினால் இதனை கேட்கும் நிலைக்கு வந்து விட்டாளே.

அழுகை பொத்துக் கொண்டு வந்தது...

சத்தம் போட்டு அழ வேண்டும் போல இருந்தது...

தாய் தந்தை செய்த தவறுக்கு அவளும் என்ன தான் செய்வாள்?

ஏற்கனவே அவன் தந்தை அவளை கொன்று விடுவதாக சொல்லி விட்டு சென்றார்...

அதற்கு கொஞ்சமும் குறையாமல் அவன் கொச்சையாக பேசிக் கொண்டு இருக்கின்றான்...

அவனை விட அவன் தந்தையே மேல் என்று தோன்றியது...

பேச்சும் வரவில்லை...

அவன் முன்னே நிற்கவே மேல் கூசியது...

தலையை தாழ்த்திக் கொண்டே, கீழ் அதரங்களை கடித்துக் கொண்டவள், அழுகையை அடக்க பெரும்பாடு பட்டாள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, "சரி போ, இது தான் லாஸ்ட் வோர்னிங், நான் கதைச்ச விஷயம் உனக்குள்ள இருக்கோணும், வெளிய போனா மனுஷனா இருக்க மாட்டேன்" என்று அதற்கும் ஒரு மிரட்டல்...

பேசுவதையும் பேசி விட்டு, அவளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாமே.

என்ன மனிதன் இவன்? என்று தான் தோன்றியது...

அடுத்த கணமே, அவனை பார்க்காமல் தலையை தாழ்த்தியபடி வெளியே வந்தாள்.

அங்கே நின்ற ரித்விகாவோ, "என்னடி நடந்தது? சொறி கோபத்துல உனக்கு ஏசிட்டேன்" என்று சொல்ல, அவள் பதில் சொல்லவில்லை, அவளுக்கு அழுகை தான் வந்தது...

சுவரில் சாய்ந்து நின்றவள், சுடிதாரின் ஷாலினால் முகத்தை மூடி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஏய் என்னடி நடந்தது? இப்ப எதுக்கு இப்பிடி அழுறா?" என்று கேட்டாள்.

அவளால் சொல்ல முடியுமா என்ன? யாருக்கும் அவள் பிறப்பை பற்றி தெரியாதே...

இதனை சொல்லி தன்னை தானே அசிங்கப்படுத்தவும் முடியாது...

அதற்காக அவன் பேசியதை அப்படியே கடந்து விடவும் முடியாது...

அடிப்படை நாகரீகம் இல்லாமல் அல்லவா பேசி இருக்கின்றான்.

"ஒண்டும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே, முகத்தை ஷாலினால் துடைத்தபடி அவள் நடக்க, அருகே நடந்த ரித்விகாவோ, "பெரிய கேஸ் ஆயிட்டா?" என்று கேட்டாள்.

"ஐயோ அப்பிடி எல்லாம் இல்லை, அத பத்தி கதைக்காதே" என்று சொல்லிக் கொண்டே நடந்தவளுக்கு அன்று எந்த பாடமும் மூளையில் ஏறவே இல்லை...

அவன் வார்த்தைகளே மூளையை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன.

நினைக்க நினைக்க அழுகை தான் வந்தது...

லெக்சர் ஹாலில் உட்கார கூட முடியவில்லை...

எப்போது வீட்டுக்கு செல்லலாம் மனநிலை தான்...

பாடம் முடிந்ததும் முதல் ஆளாக வெளியேறி வந்தவள், பஸ் ஸ்டாப்பை நோக்கி சென்றாள்.

வழக்கம் போல அவள் நண்பர்கள் பஸ் வரும்வரை பேசி சிரித்தபடி இருந்தார்கள்...

அவளால் அதில் கலந்து கொள்ளவே முடியவில்லை...

பஸ் நிலையத்தில் நின்றவளுக்கு அந்த இடத்தை கடந்து செல்லும் ஜனார்த்தனனின் கார் தென்பட்டது...

சட்டென விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

அவன் விழிகளில் அவள் தென்பட, சன் க்ளாஸ் அணிந்து கொண்டே வண்டியை செலுத்தியவனோ அவளை ஒரு கணம் பார்த்து விட்டே வீட்டுக்கு வண்டியை விட்டான்...

அவளால் மூச்சு விட கூட முடியாத நிலைமை...

தலை வெடித்து விடும் உணர்வு தான்.

"என்னடி முகம் டல்லா இருக்கு? ஜனார்த்தனன் சேர் சரியா ஏசி போட்டாரா?" என்று அந்த விஷயத்தையே நண்பர்களும் திரும்ப திரும்ப கேட்க, 'என்னை கொஞ்சம் சும்மா விடுறீங்களா?' என்று கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு...

உணர்வுகளை அடக்கிக் கொண்டே, அவ்விடம் வந்த பஸ்ஸில் ஏறியவள் வீட்டுக்கும் வந்து சேர்ந்து விட்டாள்.

வீட்டினுள் வந்தவளுக்கு, நிலை கொள்ளவே முடியவில்லை...

என்ன வார்த்தைகள் எல்லாம் பேசி விட்டான்...

அவள் முகத்தை பார்த்ததுமே, "என்ன புள்ள நடந்தது?" என்று கேட்டார் கருணா...

அதற்காக காத்துக் கொண்டு இருந்த போலவே, அவரை அணைத்து விம்மி வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"இப்ப எதுக்கு இப்பிடி அழுறா?" என்று அவர் அவளை உலுக்க, "அம்மா, இண்டைக்கு அவன் என்ன கேட்டான் தெரியுமா?" என்று ஆரம்பித்தாள்.

அவன் வயதுக்கு கூட அவள் மரியாதை கொடுக்க விரும்பவில்லை...

அவன் பேசியதற்கு மரியாதை ஒன்று தான் கேடு என்று நினைத்து விட்டாள் போலும்.

"யாரு புள்ள?" என்று அவர் பதறிக் கொண்டே கேட்க, "அந்த ஜனார்த்தனன் தான்... உன்ட அம்மாவை புருஷோத்தமன் வச்சு இருக்கிற போல, நான் உன்னை வச்சு இருக்கேன் எண்டு சொல்றான் அம்மா" என்று சத்தமாக விம்மி வெடித்து அழுதாள்.

கருணாவுக்கு நெஞ்சே அடைத்து விட்டது...

என்ன மாதிரியான வார்த்தைகளை தனது மகளை பார்த்து கூறி விட்டான்...

தனது வாழ்க்கை சீரழிந்ததை நினைத்து நினைத்தே அவர் இதய நோயாளி ஆகி விட்டார்...

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவருக்கு ஆத்திரம் தான் வந்தது...

அவளை பிரித்து நிறுத்தியவர் அலைபேசியை எடுத்து அழைத்தது என்னவோ புருஷோத்தமனுக்கு தான்...

அவரும் வீட்டில் இருந்தவர், கருணாவின் எண்ணை யோசனையுடன் பார்த்துக் கொண்டே காதில் வைத்தார்.

"இப்ப நீங்க வீட்டிற்கு வாங்க" என்றார்.

"அம்மா, அவரை எதுக்கு கூப்பிடுறீங்க?" என்று அருகே அழுது கொண்டே நாராயணி கேட்க, "நீ சும்மா இரு" என்று சொன்ன கருணாவோ, "இப்ப நீங்க வீட்டுக்கு வாங்க" என்று மீண்டும் சொல்ல, புருஷோத்தமனோ, "என்ன நடந்தது?" என்று கேட்டது.

"நீங்க இப்ப வீட்டுக்கு வரல என்டா, நானும் என்ட மகளும் விஷம் குடிச்சு செத்திருவோம்" என்றார்.

புருஷோத்தமன் பதறி விட்டார், "நீ வை, நான் வாறன்" என்று சொல்லி விட்டு அவர்களின் வீட்டுக்கு புறப்பட்டு விட்டார்...

இதே சமயம் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்ட நாராயணி, ஜன்னல் அருகே அமர்ந்து வெளியே வெறித்துக் கொண்டு இருந்தாள்.

அவன் வார்த்தைகளை நினைக்க நினைக்க நெஞ்சில் நெருஞ்சி முள் குத்தும் உணர்வு தான்.

அப்படியே அமர்ந்து இருந்தவளுக்கு சற்று நேரத்தில் வீட்டுக்குள், "என்ன நடந்தது?" என்று கேட்டுக் கொண்டே நுழைந்த புருஷோத்தமனின் குரல் கேட்டது...

அந்த வீடே அதிரும் வண்ணம் அழுகையுடன் நியாயம் கேட்க ஆரம்பித்து இருந்தார் கருணா.

நாராயணிக்கு எல்லாமே கேட்டாலும், முன்னறைக்கு செல்ல கொஞ்சமும் அவளுக்கு இஷ்டம் இல்லை...

முக்கியமாக புருஷோத்தமனை பார்க்கவே வெறுப்பாக இருந்தது...

என்ன மாதிரியான வார்த்தைகள் ஜனார்த்தனன் சொன்னது?? இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை.

பெயர் தான் டாக்டர் ஜனார்த்தனன் கனகசிங்கம்... பி எச் டி ஹோல்டர். ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு கேவலமானது. சராசரிக்கும் கீழானது தானே...

ஒரு விரிவுரையாளர் பேசும் பேச்சா இது??

படித்த படிப்புக்கும்.அவன் நடத்தைக்கு ஏணி வைத்தால் கூட எட்டாது.

இதற்கு அவளுக்கு வயது வெறும் இருபத்து மூன்று தான்.

படிப்பதற்கு இன்னும் ஒரு ஆண்டு அதிகமாக இருக்கின்றது. சின்ன வயதில் இருந்தே அங்கீகாரம் இல்லாமல் வளர்ந்தவள். ஆனால் இன்று அவன் கேட்ட வார்த்தையை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

தாய் கருணா மேலும் அளவு கடந்த ஆத்திரம் வந்தது... அவர் கொஞ்சம் சுதாரித்து நடந்து இருந்தால் அவளுக்கு இப்படி ஒரு இழிவான பிறப்பே உண்டாகி இருக்காதே... ஆனாலும் பாசத்தினால் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தாள்.

"உங்கட மச்சான்ட மகன் இருக்கானே, பிள்ளைட்ட என்ன கதைச்சு இருக்கான் தெரியுமா?" என்று அழுகையுடன் கேட்டார் கருணா.

"என்ன கதைச்சான்?" என்று புரியாமல் கேட்டார் புருஷோத்தமன்.

" அந்த நாசமா போனவன், உன்ட அம்மா போல நீயும் எனக்கு வப்பாட்டியா வாரியா எண்டு கேக்கிறான்... படிப்பிக்கிற பிள்ளைட்ட கேக்கிற கேள்வியா இது? சின்ன பெட்ட அவள்...அவளை பார்த்து இப்படி கேட்டு இருக்கானே. அவளுக்காக உங்களுக்கு ஒரு வார்த்தை கதைக்க ஏலாதா?" என்று தலையில் அடித்துக் கொண்டே கதறினார்.

புருஷோத்தமனுக்கு கருணா சொன்ன விஷயத்தை கேட்டதுமே அதிர்ச்சி...

"யாரு ஜனார்தனனனா அப்பிடி கதைச்சான்?" என்று அவர் அதிர, "ஓம், அவன் தான்... அவள் எப்படி அழுதாள் தெரியுமா?" என்று தாயுள்ள பரிதவிப்புடன் கேட்டார்...

ஜனார்த்தனன் என்று சொன்னதுமே வாயடைந்து போய் விட்டார் புருஷோத்தமன்...

அவன் கோபக்காரன், அழுத்தக்காரன் என்று தெரியும்.

ஆனால் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவான் என்று இன்று தான் தெரிந்து கொண்டார்.

"நான் அவன்ட கதைக்கிறேன்" என்று சொன்னார்.

"என்ன கதைச்சு கிழிக்க போறீங்க? உங்களுக்கே அந்த பொடி பயலை பார்த்தா பயம் தானே, இந்த கதை எல்லாம் கேட்டுட்டு இருக்கிறதுக்கு, நானும் என்ட பிள்ளையும் செத்து போறோம் , நீங்க உங்கட பொஞ்சாதி பிள்ளையோட சந்தோஷமா இருங்க " என்றார்.

"என்ன இப்படி எல்லாம் கதைக்கிற?" என்று அவர் பதற, "வேற என்ன செய்ய சொல்றீங்க? இந்த சீரழிஞ்ச வாழ்க்கை என்னோட போகட்டும். அவளாவது முறையா கல்யாணம் கட்டி சந்தோஷமா இருக்கோணும் எண்டு நினைக்கிறன், ஆனா அவன் சந்தோஷமா அவளை வாழவே விட மாட்டான் போல இருக்கே, என்ன கேள்வி அது? என்ட பிள்ளையும் என்னை போல வப்பாட்டியா வாழனும் எண்டு என்ன அவசியம்?" என்று அவர் நெஞ்சில் அடித்துக் கொண்டே கதறினார்.

அவர் அந்த வார்த்தையை சொன்னதும் விம்மலுடன் முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள் நாராயணி.


கருணா தவறு செய்தவர், அழுவது நியாயம், ஆனால் இந்த பிறப்பால் காரணமே இல்லாமல் பழியும் வலியுமாக அழுகையில் கரைந்தாள் இந்த காரிகை...
Super sis
 

Sanakya

New member
Dei nee avaru mela Kovamah irukum pothu nallavan nu ninachen aana ipo pesuniye andha vaartha apo neeyum avarkum unakum enna difference seiyura brain la uraikutha
 
Top