அத்தியாயம் 31
அவள் கண்களை மூடிய கணத்தில் சட்டென கதவை திறந்து கொண்டே நுழைந்தார் வேதவல்லி...அவ்வளவு நேரம் அவளை பார்த்துக் கொண்டே இருந்தவருக்கு ஏனோ மனம் பிசைய ஆரம்பித்தது...
காலையில் வம்சி கிருஷ்ணா வேறு அவ்வளவு தடவை சொல்லி விட்டு சென்றதில் இருந்தே அவருக்கு அவள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் தான்... மேலும் வம்சி கிருஷ்ணாவை தொலைக்காட்சியில் பார்க்காமல் அவள் இவ்வளவு நேரம் உள்ளே இருக்க வாய்ப்பில்லை என்றும் அவருக்கு தெரியும்...
அவர்கள் காதலையும், நேசத்தையும் கண் கூடாக பார்த்தவர் அவர்...
அதனால் தான் மனம் கேட்காமல் எழுந்து வந்து கதவை திறந்தவருக்கு தூக்கி வாரிப் போட்டது...
ரத்த வெள்ளத்தில் அவள்...
பதறி விட்டார்...
"ஐயோ என்னாச்சு? யாராச்சும் சீக்கிரம் வாங்க" என்று கத்திக் கொண்டே அவள் அருகே அவர் ஓடி வர, அவர் பதறியது வீட்டில் இருந்த எல்லாரும் கேட்க, வசந்தி மற்றும் குருமூர்த்தி என எல்லாரும் அங்கே பதறி ஓடி வந்தார்கள்... வேதவல்லியை பார்த்துக் கொண்டே மெதுவாக கண்களை மூடினாள் தேன்மொழி...
அடுத்த கணமே, அவளை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று இருக்க, வாசலில் நின்று காரை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்ற வேதவல்லிக்கு கண்களை கலங்கி விட்டது...
என்ன இருந்தாலும் அவரும் தாய் அல்லவா?
வேகமாக சாமியறைக்குள் சென்றவரோ, "கடவுளே, அம்மாவுக்கும் குழந்தைக்கும் எதுவுமே ஆக கூடாது... அவங்க நல்ல படியா வீட்டுக்கு வரணும்.. அப்படி வந்துட்டா நான் என் முடியை உனக்கு காணிக்கையா தரேன்" என்று கடவுளை வேண்டினார்...
தேன்மொழியை பழி வாங்கும் உணர்வை தேக்கி வைக்கும் பொருட்டு எந்த முடியை வெட்ட சம்மதித்தாரோ அதே முடியை தேன்மொழி மற்றும் அவள் குழந்தையின் உயிருக்காக காணிக்கையாக கொடுக்க முன் வந்து விட்டார்...
நீண்ட நேரம் சாமி அறையினுள்ளேயே அமர்ந்து இருந்தார்...
இதே சமயம் தேன்மொழியையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்...
அவளை பிரசவ அறைக்குள் அழைத்தும் சென்று விட்டார்கள்...
குருமூர்த்தியோ அவசரமாக அழைத்தது என்னவோ வம்சி கிருஷ்ணாவுக்கு தான்...
வம்சி கிருஷ்ணாவுக்கு அந்த தருணம் மிக மிக முக்கியமான தருணம்...
அவனை மேடைக்கு அழைக்க ஆயத்தமான நேரம் அது...
அவன் அலைபேசி அலறியது...
குருமூர்த்தி தான் எடுத்து இருந்தார்...
அதனை எடுத்து காதில் வைக்க, "வம்சி" என்று ஆரம்பித்தவர் நடந்த எல்லாவற்றையும் சொல்ல, அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டன...
சாதாரண பிரசவம் என்றால் இந்தளவு பதட்டம் இருந்து இருக்காது...
அவள் விழுந்து இருக்கின்றாள் என்று கேட்டதுமே அவன் இதயம் வேகமாக துடித்தது...
"இதோ வரேன்" என்று சொல்லிக் கொண்டே அருகே இருந்த கெளதம் கிருஷ்ணாவை பார்த்தவன், "நீயே என் சார்புல அவார்ட் வாங்கிடு, தேன்மொழி கீழே விழுந்து ஹாஸ்பிடல் கொண்டு போய் இருக்காங்க... போகவே ரெண்டு மணி நேரம் ஆய்டும்... நான் உடனே கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் கௌதம் கிருஷ்ணாவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாக வெளியேறிய சமயம், "சிறந்த பாடகருக்கான விருதை பெற்றுக் கொள்வதற்காக வம்சி கிருஷ்ணாவை மேடைக்கு அழைக்கின்றோம்" என்ற அறிவிப்பும் வந்தது...
அவனுக்கு அந்த அழைப்பு கூட காதில் கேட்கவில்லை...
மனம் முழுதும் அவன் கண்ணம்மாவின் எண்ணம்...
அவன் குழந்தையின் எண்ணம்...
என்ன ஆகி இருக்குமோ என்கின்ற பதட்டம்...
அந்த பதட்டத்துடனேயே காரில் ஏறிக் கொண்டவன் சாரதியிடம் ஹாஸ்பிடல் நோக்கி காரை செலுத்த சொன்னான்...
இதே சமயம் வேறு வழி இல்லாமல் வம்சி கிருஷ்ணாவுக்கு கிடைக்க இருந்த விருதை அவன் சார்பாக கெளதம் கிருஷ்ணா தான் வாங்கிக் கொண்டான்...
காரில் பயணித்துக் கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவுக்கோ பதட்டம் அடங்கவில்லை...
வசந்திக்கு அழைத்தவன், "டாக்டர் என்னம்மா சொன்னார்?" என்று கேட்டவனின் குரல் மொத்தமாக உடைந்து போனது...
"கொஞ்சம் க்ரிட்டிக்கல் டிலிவேரி தானாம், ஆனா நேரத்துக்கு கொண்டு வந்தது நல்லதுன்னு சொல்லி இருக்காங்க" என்றார்...
"எதுவும் ஆய்டாதுல்லம்மா" என்றான் தழுதழுத்த குரலில்...
"ஒன்னும் ஆகாதுடா, நீ ரிலாக்ஸ் ஆஹ் வந்துடு..." என்றார்...
ஆனாலும் அவனுக்கு மனம் அமைதியடையவில்லை...
பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை வசந்திக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்...
அவனுக்கு பயணம் செய்த இரெண்டு மணி நேரங்களும் நரக வேதனை...
அவளை பார்த்து விட்டால் மனம் அமைதி அடைந்து விடும் அவனுக்கு...
நெற்றியை அழுந்த நீவிக் கொண்டான்...
தலை விண் விண்ணென்று வலித்தது...
வலி நிவாரண மாத்திரை போட்டுக் கொண்டான்...
அவன் பதட்டத்தை பார்த்த சாரதியோ, "சார் கொஞ்சம் கண்ணை மூடி ரெஸ்ட் எடுங்க, சீக்கிரம் நாம போய்டலாம்" என்றான்...
அவன் ஓய்வெடுக்கும் நிலையிலா இருக்கின்றான்?
குழந்தையை பற்றியும் தேன்மொழியைப் பற்றியும் அவன் எண்ணங்கள் சுழன்று கொண்டு இருந்தன...
இதே சமயம் மௌனமாக பிரசவ வலியை அனுபவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி...
கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...
குழந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்கின்ற வைராக்கியம் அவளுக்கு...
அவள் அருகே நின்று இருந்த வைத்தியரோ, "புஷ் புஷ்" என்று அவளை உந்திக் கொண்டே இருந்தார்...
முயற்சிக்கிறாள்... முடியவில்லை...
ஒரு கட்டத்தில் களைத்து போகின்றாள்...
கிட்டத்தட்ட இரு மணி நேரங்களின் போராட்டம்...
வம்சி கிருஷ்ணாவும் ஹாஸ்பிடலை அடைந்து இருந்தவன், மாஸ்க்கை போட்டுக் கொண்டே வேகமாக அவள் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரசவ அறையை நோக்கி ஓடிச் சென்றான்...
இதே சமயம், வைத்தியரோ, "கொஞ்சம் ட்ரை பண்ணுங்கம்மா, நீங்க முயற்சி பண்ணுனா தான் முடியும்" என்று சொன்னதுமே, தனது பலம் எல்லாம் திரட்டியவள் குழந்தையை பெற்று எடுத்தாள்.
அவன் அறையின் வாசலை அடைந்த நேரமும் குழந்தை பிறந்த நேரமும் ஒன்றாக தான் இருந்தது... தந்தை வந்ததை அறிந்து தந்தையை பார்க்க, வெளியே ஓடி வந்து விட்டது போலும் அவன் குழந்தை....
வாசலில் கைகளை பிசைந்து கொண்டே நின்று இருந்த மகாலக்ஷ்மியும், வசந்தியும் குருமூர்த்தியும், உள்ளே பிறந்த குழந்தையின் சத்தத்தைக் கேட்டதுமே இதழ் பிரித்து சிரித்துக் கொண்டார்கள்...
வம்சி கிருஷ்ணாவோ, ஓடி வந்த களைப்பில் சுவரில் சாய்ந்து நின்று குழந்தையின் சத்தம் கேட்டு நிம்மதி பெருமூச்சுடன் இதழ் பிரித்து சிரித்து இருந்தான்...
அவர்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் தலை வாரிசு பிறந்து விட்டான்...
ஆம் பிறந்தது ஆண் குழந்தை...
பெண்களுக்கு பிரசவம் என்பது இன்னொரு ஜென்மம் என்று சும்மாவா சொன்னார்கள்?
குழந்தையின் குரலை கேட்டதும் தான் தேன்மொழிக்கு அப்படி ஒரு நிம்மதி...
"ஆண் குழந்தை பிறந்து இருக்கும்மா" என்று வைத்தியர் சொல்லிக் கொண்டே குழந்தையை அவள் மார்பில் படுக்க வைக்க, குழந்தையை நெகிழ்வுடன் கைகளால் அணைத்துக் கொண்டே கண்களை மெதுவாக மூடிக் கொண்டே தாய்மையை உணர்ந்தாள்...
சிறிது நேரத்தில் வைத்தியர் வெளியேறி வர, வம்சி கிருஷ்ணாவோ அவரை நோக்கி சென்றான்...
"கங்கிராட்ஸ் வம்சி சார் ஆண் குழந்தை பிறந்து இருக்கு" என்றார் அவர்... அவனோ சட்டென்று, "கண்ணம்மா" என்று ஆரம்பித்தவன், "ச்ச, சாரி தேன்மொழி எப்படி இருக்கா?" என்றான்...
வைத்தியரோ, "ஷீ இஸ் ஃபைன், நேரத்துக்கு கொண்டு வந்ததால தான் ரெண்டு பேரையும் காப்பாத்த முடிஞ்சது... விழுந்ததால பெரிய அடி ஒன்னும் இல்லை... யூ ஷுட் தேங்க் காட் ஃபோர் தட்... சின்ன பாடி பெயின் இருக்கும்... அவ்ளோ தான்... சீக்கிரம் அது ஓகே ஆய்டும்..." என்றவர் சட்டென்று நிறுத்தி, "ஆமா கண்ணம்மா யாரு?" என்றார்...
அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது, அடக்கிக் கொண்டே, "தேன்மொழி தான்" என்றான்... "நம்பலாமா?" என்றார் அவர்...
"அவ கிட்டயே கேட்டு பாருங்க" என்றான் அவன் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே...
"ஹேய் ஜஸ்ட் ஜோக்கிங்... ஐ க்னோ யூ ஆர் தெ பெஸ்ட் ஹஸ்பண்ட்" என்று கண் சிமிட்டி சொன்னவரோ, "தனி ரூமுக்கு இண்டோர் ரூட் மூலம் இப்போ ஷிஃப்ட் பண்ணி இருப்பாங்க, நீங்க போய் பாருங்க" என்று சொல்லிக் கொண்டே தனி அறை எண்ணையும் சொல்லி விட்டு அவர் நகர்ந்து விட, அவர்களும் தேன்மொழியை தேடி சென்றார்கள்...
அவன் போகும் வழியே, "இது சிங்கர் வம்சி கிருஷ்ணா தானே" என்று அவனை தாண்டி சென்றவர்கள் சொல்ல, சட்டென்று மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டவனுக்கு முதல் முறை பிரபலமாக இருப்பது எரிச்சலாக இருந்தது...
சந்தோஷமாக பொது இடத்தில் நடக்க கூட முடியவில்லை...
அவள் அறையையும் அடைந்து விட்டார்கள்...
வம்சி கிருஷ்ணா தான் அறையை திறந்து கொண்டே முதலில் உள்ளே நுழைந்தான்...
கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த தேன்மொழியோ அவனை பார்த்து மென்மையாக புன்னகைக்க, அவனோ வேகமாக தேன்மொழி அருகே வந்து நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டே அமர்ந்தவன், அவள் கையை பற்றி, "மூச்சே நின்னு போச்சு கண்ணம்மா" என்றான்...
அவளோ கண்ணீருடன் புன்னகைத்தவள் கண்களால் தொட்டிலில் இருந்த குழந்தையை காட்ட, அவள் கரத்தில் முத்தம் பதித்தவனின் கண்கள் கலங்கிப் போக, மெதுவாக எழுந்து குழந்தை அருகே சென்றான்...
வசந்தி குழந்தையை முதலில் தூக்கிக் கொண்டவர், "உன் கலர்ல வருவான்டா... நீயும் இதே போல தான் இருந்த" என்று சொல்லிக் கொண்டே, அவனிடம் குழந்தையை நீட்ட, அவன் குழந்தையை ஆசையாக மார்புடன் அணைத்துக் தூக்கிக் கொண்டே தேன்மொழியை பார்த்தான்...
அவளோ அவனிடம், "அவார்ட் வாங்கிட்டிங்களா?" என்று சைகையில் கேட்க, அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "கௌதமை வாங்க சொல்லிட்டேன்... எனக்கு இந்த அவார்ட் போதும்" என்றான் குழந்தையை கண்களால் காட்டி...
"இந்த அவார்ட் முன்னாடி அந்த அவார்ட்லாம் ஒண்ணுமே இல்லையே" என்று குருமூர்த்தி சொல்ல, "அப்படி சொல்லுங்கப்பா" என்று சொல்லிக் கொண்டே தேன்மொழியைப் பார்த்தவன் குழந்தையுடன் அவள் அருகே இருந்த இருக்கையில் அமர, அவளோ கைகளால் குழந்தையின் பிஞ்சு ஸ்பரிசத்தை ஆசையுடன் வருடினாள்...
அவளை மென் சிரிப்புடன் பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "நேரத்துக்கு கொண்டு வந்தது நல்லதுன்னு டாக்டர் சொன்னார்... பாட்டி தான் சத்தம் போட்டதால தான் தெரிஞ்சுதுன்னு அம்மா சொன்னாங்க, வாட்ச் என்னாச்சு?" என்று கேட்டான்...
அவளுக்கு முகம் இறுகி போக, "பட்டி அறுந்து போச்சு, அதனால கைல கட்டல" என்றாள் சைகை மொழியில்.
இப்போது இறுகியது என்னவோ அவன் முகம் தான்...
"அப்போ வாட்ச் கட்டி இருக்கேன்னு பொய் சொன்னியா?" என்றான்...
குரலில் இறுக்கம்...
அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
அவள் பக்கம் இருக்கும் தவறு தானே அது...
அவன் விழிகளை பார்க்காமலே, ஆம் என்று தலையாட்ட, "உன் பேச்சை கேட்காம நானே கட்டி விட்டு போய் இருக்கணும்... எதுக்கு தேன்மொழி பொய் சொன்ன?" என்றான்...
அவன் கண்ணம்மா என்கின்ற அழைப்பு தேன்மொழியாக மாறி இருந்தது...
அவளுக்கு சட்டென கண்கள் கலங்க, "நீங்க அப்புறம் அவார்ட் வாங்க போக மாட்டிங்களே" என்றாள் சைகையில்.
"இப்போவும் நான் அவார்ட் வாங்காம தான் வந்து இருக்கேன்... உனக்கும் குழந்தைக்கும் முன்னாடி எனக்கு அந்த அவார்ட் எல்லாம் ஒண்ணுமே இல்லை... கரெக்ட்டான நேரத்துக்கு பாட்டி வந்து இருக்கலன்னா என்ன ஆகி இருக்கும்?" என்று கேட்டான்...
அவன் குரலில் ஆதங்கம்...
அவளுக்கு கண்ணீர் வழிந்தது...
அவன் கோபம் நியாயமானது என்று தெரியும்...
அவள் கண்ணீரை கண்டதுமே, சட்டென அவன் மனம் இளகி விட அவளை பார்க்க பாவமாக இருந்தது... "இப்போ எதுக்கும்மா அழுற? சரி நான் திட்டல, அழாதே கண்ணம்மா" என்றான்...
அவளோ கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டே, "இனி உங்க கிட்ட பொய் சொல்ல மாட்டேன்" என்று சைகையால் சொல்லிக் கொண்டே அவனிடம் சத்தியம் செய்ய, "சத்தியம் எல்லாம் பண்ண தேவல..." என்றான்...
"என்னை மன்னிச்சுடுங்க" என்றாள் சைகையில்...
"தட்ஸ் ஓகே" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே, "தேன்மொழியை கொஞ்சம் எழும்பி உட்கார வை வம்சி... குழந்தைக்கு பால் கொடுக்கணும்... " என்றார் வசந்தி அவனிடம் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டே...
அவனும் அவளுக்கு எழுவதற்காக உதவி செய்தான்...
எழுந்து அமர்ந்தவளது கையில் வசந்தி குழந்தையை நீட்ட, ஆசையுடன் வாங்கிக் கொண்டவள் திரும்பி வம்சி கிருஷ்ணாவைப் பார்க்க, அவனோ, "உனக்கு பிடிச்ச பேர் யாழினியனே வச்சுடலாம்" என்றான்...
ஆம் அவள் ஏற்கனவே சொல்லி வைத்து இருந்தது தான்...
பெண் குழந்தை என்றால், "யாழினி" ஆண் குழந்தை என்றால், "யாழினியன்" என்று...
அவளும் மென் புன்னகையுடன் சம்மதமாக தலையாட்டிக் கொண்டாள்.
இருவரின் அந்நியோன்யத்தையும் காதலையும் இமைக்க மறந்து, நிம்மதியாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தார் மகாலக்ஷ்மி...
அவள் மருத்துவமனையில் ஒரு நாள் தங்க வேண்டிய கட்டாயம்...
அடுத்த நாள் வீட்டுக்கு அவளை அழைத்து சென்றார்கள்...
கையில் குழந்தையுடன் காரில் இருந்து இறங்கினாள் தேன்மொழி...
கார்க் கதவை வம்சி கிருஷ்ணா திறந்து விட, அவளுக்கும் குழந்தைக்கும் ஆரத்தி எடுத்தார் வசந்தி...
ஆண் குழந்தை பிறந்த விடயத்தை ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்த வேதவல்லிக்கு குழந்தையை தூக்க கைகள் பரபரத்தன...
உணர்வுகளை அடக்கிக் கொண்டே முன்னறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்து இருந்தார்... குழந்தையை தன்னிடம் கொடுப்பார்களா? என்கின்ற எண்ணத்தில் விலகியே நின்றார்...
தேன்மொழியும் குழந்தையை தூக்கிக் கொண்டே வம்சி கிருஷ்ணாவுடன் வீட்டினுள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.
அவள் தூக்கி வைத்து இருந்ததால் வேதவல்லிக்கு குழந்தையின் முகம் தெரியவில்லை... எம்பி பார்க்க முயன்றார்...
எழுந்தால் தனது ஆர்வம் அடுத்தவர்களுக்கு தெரிந்து விடும் என்று நினைத்தவர் தன்னை அடக்கிக் கொள்ள, தேன்மொழியோ சட்டென்று அவரைப் பார்த்தாள்.
பார்வையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டார்...
அவளோ அவரை கடந்து அறைக்குள் செல்ல முயன்றவள் ஒரு கணம் நின்று, அவரை நோக்கி திரும்பியவள் சற்றுக் குனிந்து அவர் கையில் குழந்தையை வைக்க, அவருக்கோ கண்ணீர்... சட்டென குழந்தையை அணைத்து தூக்கிக் கொண்டே, அவளை ஏறிட்டுப் பார்த்தார்...
அவரை பார்த்துக் கொண்டே, "நீங்க காப்பாத்துன குழந்தையை, நீங்க தான் வளர்த்து கொடுக்கணும்" என்றாள் சைகையில்... அவருக்கு புரியவில்லை...
"என்ன சொல்றா?" என்று வம்சி கிருஷ்ணாவிடம் கேட்க, அவனோ, அதற்கு அர்த்தத்தை சொல்ல, நெகிழ்ந்து விட்டார்...
"என் கொள்ளுப் பேரனை நான் வளர்க்காம யார் வளர்க்க போறா?" என்று கேட்டுக் கொண்டே குழந்தையை மார்புடன் அணைத்துக் கொண்டார்...
வசந்தியும் குருமூர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து திருப்தியாக புன்னகைக்க, மகாலக்ஷ்மியும் நிம்மதியாக புன்னகைத்துக் கொண்டார்...
கெளதம் கிருஷ்ணாவோ, "இன்னைக்கு பெரிய இடியுடன் கூடிய மழை இருக்காம்" என்று சிரித்தபடி சொல்ல, அவரை ஏறிட்டுப் பார்த்து முறைத்தார் வேதவல்லி...
"நீங்க எதுக்கு முறைக்கிறீங்க? டி வி ல சொன்னாங்க பாட்டி" என்று சொல்ல, வம்சி கிருஷ்ணாவோ, "டேய் சும்மா இருடா" என்று சத்தமாக சிரித்தபடி சொல்லிக் கொண்டான்...
வேதவல்லி அருகே வந்து அமர்ந்த யாதவ் கிருஷ்ணாவோ குழந்தையை வருட, "தூக்கி பார்க்க போறியாப்பா?" என்று கேட்டார் வேதவல்லி...
அவனும் அவர் இதழ் அசைவை வைத்து கேட்டதை புரிந்து கொண்டவனோ, "ஆம்" என்கின்ற ரீதியில் தலையாட்ட, அவன் கையில் குழந்தையை கொடுத்த வேதவல்லியோ எப்படி குழந்தையை தூக்குவது என்றும் சொல்லிக் கொடுத்தார்...
வசந்திக்கோ நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கி விட்டன...
இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக தானே அவர் ஏங்கிக் கொண்டு இருந்தார்...
ஒரு நிம்மதி பெருமூச்சு அவரிடம்...
விஷேட தேவை உடைய குழந்தைகளின் பெற்றோர் ஒருவருக்குமான ஏக்கம் தான் இது...
தன் குழந்தைக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்குமா? என்கின்ற ஏக்கம்...
குடும்பத்துக்குள்ளேயே ஒதுக்கத்தை சந்தித்த யாதவ் கிருஷ்ணாவுக்கு இன்று மொத்த அங்கீகாரமும் கிடைத்து விட்ட சந்தோஷமானது வசந்தி முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது...
உடலின் குறை இருப்பது தவறல்ல, ஆனால் மனதில் குறை இருப்பது மாபெரும் தவறு...
சந்தோஷமான குடும்பத்துக்கு நிறைவான மனமே ஆணி வேர்...
இன்று குறைகள் நீங்கிய மனங்கள், புது உயிரின் வருகையின் மூலம் நிறைவாக சங்கமித்துக் கொண்டன...