பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு...
அவனோ, "வந்துட்டோம்... அப்புறம் மெசேஜ் பண்ணுறேன்" என்று அவளுக்கு செய்தி அனுப்பி விட்டு, காரில் இருந்து இறங்கிக் கொண்டே கெளதம் கிருஷ்ணாவுடன் உள்ளே நுழைந்தான்...
அவன் உள்ளே நுழைந்ததுமே அரங்கில் இருந்த அவன் ரசிகர்களோ, "வம்சி" என்று சத்தமாக கத்தி, விசிலடித்து, கூச்சல் போட, அவர்களை நோக்கி சிரித்தபடி கையை அசைத்துக் காட்டி விட்டு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்து விட்டான்...
அமர்ந்தவனிடம் தொடர்ச்சியாக பிரபலங்கள் வந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்...
இதே சமயம் அறைக்குள் இருந்து வெளியே சென்று சற்று நேரம் முன்னறையில் தொலைக்காட்சியின் முன்னே அமர்ந்து இருந்தாள் தேன்மொழி...
"ஏதும் வேணுமாம்மா?" என்று பாக்கியா வந்து கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டியவள், அதில் போய்க்கொண்டு இருந்த பாடல் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவள் ஆர்வத்துக்கு காரணம் இசை மட்டும் அல்ல, அதில் நடுவராக இருந்தது என்னவோ வம்சி கிருஷ்ணா தான்...
அவளுக்கு சற்று தள்ளி இருந்த இருக்கையில் தான் வேதவல்லி அமர்ந்து இருந்தார்...
அவள் வம்சி கிருஷ்ணாவை கன்னத்தில் கையை வைத்து ரசனையாக பார்ப்பதை, அழுந்த பார்த்து விட்டு தொலைக்காட்சியை அவரும் பார்க்க தொடங்கினார்...
சற்று நேரத்தில், தேன்மொழிக்கு கழிப்பறைக்கு செல்ல வேண்டிய தேவை... கர்ப்பமாக இருந்தால் இந்த உடல் உபாதைகள் சகஜம் தானே...
அவள் எழுந்து அறைக்குள் செல்வதையும் வேதவல்லி அழுத்தமாக பார்த்தார்...
"இப்படி ரசிச்சு பார்த்துட்டு இருந்தவ, இடைல எந்திரிச்சு போறாளே... பாத்ரூமுக்குள்ள போறா போல" என்று சரியாகவும் யூகித்துக் கொண்டார்...
தேன்மொழியோ கழிப்பறைக்குள் சென்று விட்டு சற்று நேரத்தில் வெளியேறி இருந்தளோ வாசலை நோக்கி நடந்து வந்த தருணம், ஈரமாக இருந்த அவள் பாதங்கள் வழுக்க, சட்டென இடுப்பு அடி பட கீழே விழுந்து விட்டாள். எதிர்பாராத விபத்து...
அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிய, இதழ்கள் மட்டுமே 'அம்மா' என்கின்ற தோரணையில் அசைந்தன... குரல் வெளியே வரவில்லை...
கண்களை இருட்டிக் கொண்டு வந்தது... எழுந்து கொள்ள தெம்பில்லை... அவசரமாக மணிக்கட்டை தொட்டுப் பார்த்தாள், கையில் கடிகாரம் இல்லை...
பதறி விட்டாள்...
கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...
கவனமாக இருக்க சொல்லி வம்சி கிருஷ்ணா வார்த்தைக்கு வார்த்தை சொல்லிச் சென்றானே... கவனம் சிதறி விட்டாளே...
மனம் வலித்தது...
அதனுடன் சேர்ந்து இடையில் சுள்ளென்ற வலி,
காலடியில் பிசு பிசுப்பு... உதிரத்தின் பிசு பிசுப்பு அது...
விழுந்த அதிர்வில், குழந்தையும் வெளியில் வர எத்தனித்து விட்டது போலும்...
ஆம் பிரசவ வலி...
பயந்து விட்டாள்...
பதறியும் போனாள்...
தன்னை விட குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்கின்ற தாயின் பரிதவிப்பு அவளுக்கு...
இதழ்களை அசைத்து சத்தம் போட முனைந்தாள்...
சத்தம் வந்தால் தானே...
குரலை பறித்த கடவுள் மேல் ஆத்திரம் வந்தது...
"கடவுளே... என் கிட்ட இருந்து நீ கடைசியா பறிச்சது என்னோட குரலா மட்டுமே இருக்கட்டும், நானும் பாப்பாவும் அவரை எப்படியும் பார்க்கணும்" என்று கடவுளிடம் மனதுக்குள் வேண்டிக் கொண்டே, கையை தூக்கி வயிற்றில் வைத்து தனது குழந்தையின் அசைவை உணர முயன்றாள்...
யாரும் தன்னை காக்க வந்து விட மாட்டார்களா? என்கின்ற ஏக்கம் அவள் கண்ணில்...
பிரசவ வலியை கூட மௌனமாக கடக்க வேண்டிய விதி அவளுடையதோ... வாசலையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தன...
ஒரு கட்டத்தில் கண்களும் சொருக ஆரம்பித்தும் இருந்தன...
வாழ்வா? சாவா? என்கின்ற விளிம்பில் அவளும் அவள் சிசுவும்...