அத்தியாயம் 30
அடுத்த நாள் காலையில் கல்யாணியின் திருமணத்துக்காக அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்...கண்ணாடி முன்னே நின்றபடி அவ்விடம் வைக்கப்பட்டு இருந்த நகைகளை விழி விரித்துப் பார்த்தாள் தேன்மொழி...
அவளுக்கு இது எல்லாம் அணிந்து கொஞ்சமும் பழக்கம் இல்லை...
வம்சி கிருஷ்ணா விடுவதாக இல்லை...
எல்லாமே வாங்கிக் கொடுத்து இருந்தான்...
மறுத்தாலும் அவன் மனம் கஷ்டப்படும் என்று அவளுக்கு தெரியும்...
அவன் வாங்கிக் கொடுத்த மெரூன் நிற பட்டுப் புடவையை உடுத்தியவளோ பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
இதே சமயம் அவளுக்கு சற்று பின்னால் வந்து நின்றான் வம்சி கிருஷ்ணா...
அவளது பட்டுப் புடவைக்கு பொருத்தமாக மெரூன் நிற ஷேர்ட் அணிந்து வேஷ்டியும் அணிந்து இருந்தான்...
கண்ணாடியூடே அவனை ரசித்துப் பார்த்தவள், கைகளால், "சூப்பர்" என்று சைகை செய்ய, அவனோ, "நீ மட்டும் என்னவாம்?" என்று கேட்டுக் கொண்டே, நகைகள் நடுவே இருந்த நெக்லஸை எடுத்தவன், அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே, அவள் கழுத்தில் அணிந்து விட்டான்...
அவளோ மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, ஜிமிக்கியை எடுத்து காதில் அணிய, அவள் இடை பற்றி பின்னால் நின்றபடியே அவள் கன்னத்துடன் தனது கன்னம் வைத்து உரசிக் கொண்டே கண்ணாடியில் தெரிந்த இருவரின் விம்பங்களையும் பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "செம்ம அழகா இருக்க கண்ணம்மா" என்றான்...
அவளோ வெட்கத்துடன் கண்களை மூடி திறந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் இருவரும் ஆயத்தமாகி முன்னறைக்கும் வந்து விட்டார்கள்...
அதே சமயம் கெளதம் கிருஷ்ணா, யாதவ் கிருஷ்ணா, வசந்தி மற்றும் குருமூர்த்தி என அனைவரும் வந்து சேர்ந்த பின்னரும் வேதவல்லி இன்னும் வரவில்லை...
கல்யாணத்துக்கு செல்லும் பொருட்டு புடவையை அணிந்து இருந்தாலும் யோசனையுடன் கண்ணாடியை வெறித்தபடி அமர்ந்து இருந்தார்...
போக வேண்டும் என்று பாசம் இழுத்தாலும், வேண்டா வேறுப்பாக கொடுத்த அழைப்புக்கு செல்ல வேண்டுமா? என்கின்ற எண்ணமும் இருந்தது...
குருமூர்த்தியோ, "நேற்று ரதிதேவி வந்து அம்மா கிட்ட சொன்னா தானே" என்று கேட்க, வசந்தியோ, "ம்ம் சொன்னா" என்று சொன்னார்...
குருமூர்த்தி பெருமூச்சுடன் அவர் அறைக் கதவை நோக்கி சென்றவர், அதனை தட்ட முதலே கதவை திறந்து கொண்டே வெளியே வந்தார் வேதவல்லி...
"கிளம்பலாம்" என்று சொன்ன குருமூர்த்தியோ அனைவரையும் அழைத்துக் கொண்டே திருமண மண்டபத்துக்கு நேரத்துக்கே புறப்பட்டு விட்டார்...
அங்கே பெண் வீட்டினரின் சார்பில் அனைவரும் வந்தவர்களை வரவேற்று உபசரிக்க, ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தார் வேதவல்லி...
அவர் முகத்தில் வலியின் ரேகைகள்...
தான் முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கல்யாணியின் திருமணம்...
இன்னும் அவருக்கு மாப்பிள்ளை யார்? என்ன வேலை செய்கின்றான்? என்று கூட தெரியாது...
யாரோ ஒரு மூன்றாவது மனிதன் போல அமர்ந்து இருக்கின்றார்...
அவரை விசாரிக்க கூட யாரும் இல்லை...
முதல் எல்லாம் தானே சென்று அனைவரிடமும் பேசுவார்...
இப்போது அதற்கும் அவருக்கு தெம்பில்லை...
மனதில் வலி இருக்கும் போது எப்படி உடலில் தெம்பு வரும்?
பெருமூச்சுடன் அமர்ந்து இருந்தவரை நோக்கி சோடா நீட்டப்பட்டது...
நீட்டி இருந்தது வேறு யாரும் அல்ல, யாதவ் கிருஷ்ணா தான்...
அவரோ அவனை விழி விரித்துப் பார்த்தார்...
சொந்த வீட்டிலேயே எந்த உறவை அவர் மதிக்காமல் உடலின் குறையை வைத்து உதாசீனப்படுத்தினாரோ, அந்த உறவு தான் இன்று அவர் அருகே யாரும் இல்லாத நேரத்தில் கூட இருக்கின்றது...
தன்னை மீறி கண்ணீர்...
புடவை முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டே, அவன் நீட்டிய சோடாவை வாங்கிக் கொண்டார்...
யாதவ் கிருஷ்ணாவோ மென் புன்னகையுடன் நகரப் போக, சட்டென்று அவன் கையை பிடித்தவர் அருகே இருந்த இருக்கையை கண்களால் காட்ட, அவனோ அவரை விசித்திரமாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான்...
அவனுக்கு வீட்டில் நடந்த எந்த விஷயங்களும் தெரியாது...
வழக்கமாக இருக்கும் வேதவல்லி இல்லை இப்போது இருப்பது என்று மட்டும் அவனுக்கு தெரியும்...
அவர் முகத்தில் சோர்வையும் சோகத்தையும் கண்டவனுக்கு மனம் கேட்கவில்லை...
சோடாவை எடுத்துக் கொண்டே நீட்டி விட்டான்...
அவருக்கோ முதல் அங்கீகாரம் அவனிடம் இருந்து கிடைத்த போல உணர்வு...
குறைகள் என்பவை உடலில் இல்லை, மனதில் தான் இருக்கின்றது என்று அவர் உணர ஆரம்பித்த தருணம்...
அவர் தூக்கி கொண்டாடிய யாரும் அவர் அருகே இல்லை...
ஆனால் அவர் வெறுத்து ஒதுக்கியவன் அவர் அருகே இருக்கின்றான்...
தன்னை நினைத்தே வெட்கிப் போனவர், "நீ சோடா குடிச்சியா?" என்று கேட்டார்...
அவனோ அவர் இதழ் அசைவை வைத்து அவர் பேசுவதை யூகித்தவன், "ஆம்" என்கின்ற ரீதியில் தலையாட்ட, அவரோ ஒற்றைக் கையால், அவன் கரத்தை பெருமூச்சுடன் வருடியவருக்கு, இன்னும் கண்ணீர் நிற்கவில்லை...
மீண்டும் மீண்டும் புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டார்...
அவனோ அவர் அழுவதை விசித்திரமாக பார்த்தான்...
அடுத்தவர்களை அழ வைத்து தானே அவருக்கு பழக்கம்...
அவர் அழுவது அவனுக்கு விசித்திரமாக தானே இருக்கும்...
கையில் இருந்த சோடாவை கீழே வைத்தவர், அருகே இருந்தவன் நெற்றியில் முத்தம் பதித்தார்...
அவனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அவர் அன்பை அவன் மறுக்கவில்லை... அப்படியே இருந்தான்... அதனை தொடர்ந்து அவன் தலையை வருடிக் கொண்டே, "நீ போய் வேலையை பாருப்பா" என்றார்...
அவனும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே எழுந்தான்...
மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த யாரின் கண்ணிலும் இந்த காட்சி படவில்லை...
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து இருந்த வேதவல்லிக்கு கல்யாணியை பார்க்க வேண்டும் போல இருந்தது...
அங்கே வேலை செய்து திரிந்த பெண்ணை அழைத்தவர், "கல்யாண பொண்ணோட அறை எங்க?" என்று கேட்க, அந்த பெண்ணும் வழியை காட்ட, அந்த அறையை நோக்கி சென்றார்...
வாசலில் நின்று கதவை தட்டினார்...
"உள்ளே வாங்க" என்று கல்யாணியின் குரல் கேட்டது...
கதவை திறந்து கொண்டே உள்ளே செல்ல, அங்கே இரு அலங்காரம் செய்யும் பெண்கள் கல்யாணியுடன் நின்று இருந்தார்கள்...
அவரைக் கண்டதுமே, கல்யாணியின் விழிகள் விரிய, அருகே நின்ற பெண்களிடம், "கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்" என்று சொல்ல, அவர்களும் வெளியேறி விட்டார்கள்.
அவரோ கல்யாணி அருகே கலங்கிய கண்களுடன் வந்தவர், "என் கிட்ட ஒரு வார்த்தை ஏன் கல்யாணி சொல்லாம விட்ட?" என்று நேரடியாகவே கேட்டு விட்டார்...
அவளோ பெருமூச்சுடன் எழுந்தவள், "எப்படி பாட்டி சொல்ல சொல்றீங்க? நீங்க பண்ணுன வேலை சரியான வேலையா? என்னை எப்படி எல்லாம் உசுப்பேத்தி கீழ் தரமான வேலை பார்க்க வச்சீங்க... சின்ன வயசில இருந்து தேவை இல்லாத ஆசையை எனக்கு எதுக்கு வளர்த்தீங்க? இதெல்லாம் மறந்துட்டு உங்க கிட்ட வந்து நான் நல்ல விஷயம் சொல்லணுமா? பயமா இருக்கு பாட்டி... வம்சி மாமாவையும் தேன்மொழியையும் பிரிக்க நினைச்ச போல என்னையும் ஷியாமையும் பிரிக்க மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?" என்று கேட்டு விட்டாள்.
சுருக்கென்று தைத்தது அவருக்கு...
அவளை அடிபட்ட பார்வை பார்த்தவர், "அப்படி பண்ணுவேன்னு நினைக்கிறியா?" என்று கேட்டார்...
"பண்ண மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்? பிரிக்கிறது ஒண்ணும் உங்களுக்கு புதுசு இல்லையே" என்றாள் மீண்டும்... அவரிடம் பதில் இல்லை...
"எல்லாம் உனக்காக தானே பண்ணினேன்" என்று அவர் ஆரம்பிக்க, "தப்பு பாட்டி, ஒருத்தங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவங்களை பிடிக்காதவங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க நினைக்கிறது தப்பு... இந்த வேலையை என்னோட நிறுத்துக்கோங்க, மிருதுளா மற்றும் கெளதம் மாமா விஷயத்துல இத பண்ணிடாதீங்க... அவங்களுக்கு யாரை பிடிச்சு இருக்கோ, கல்யாணம் பண்ணிக்கட்டும்... எல்லாத்துக்கும் மேல கல்யாணம் பண்ணுனவங்கள பிரிக்கிறது எவ்ளோ பெரிய பாவம் தெரியும்... அந்த பாவத்தை என்னையும் சேர்த்து பண்ண வச்சுடீங்களே... வம்சி மாமா வேணும்னு லூசு தனமா நான் உளறுன நேரம், ரெண்டு அறை போட்டு அது தப்புன்னு சொல்லி இருக்கணும் நீங்க... அத விட்டுட்டு நீங்க பண்ணுனது எவ்ளோ அசிங்கமான வேலை தெரியுமா?" என்று சொன்னவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "இதுக்கு மேல உங்க கிட்ட பேசுனா நான் உங்கள கஷ்டப்படுத்திடுவேன்... நீங்க கிளம்புங்க" என்று சொல்லிக் கொண்டே, வெளியே நின்ற அலங்காரம் செய்யும் பெண்களை அழைக்க, வேதவல்லியோ தளர்ந்த நடையுடன் தான் அங்கிருந்து வெளியேறி இருந்தார்...
கல்யாண மண்டபத்தில் மீண்டும் சோர்வாக வந்து அமர்ந்து கொண்டார்...
சற்று நேரத்தில் திருமண சம்பிரதாயங்களும் ஆரம்பித்து விட்டன...
கல்யாணி வந்து ஷியாம் அருகே அமர்ந்தும் விட்டாள்.
ஆசீர்வாதம் வாங்க தாலி கொண்டு வரப்பட்டது...
அதனை தொட்டு வணங்கிய வேதவல்லிக்கு அங்கே இருக்கவே முடியவில்லை...
மனம் எல்லாம் அழுத்தம்...
தான் செய்தது தவறு என்று புரிந்து விட்டது...
ஆனாலும் அவரை ஒதுக்கி வைத்து விட்டார்களே...
மீண்டும் உறவுகளின் அன்பை எப்படி பெற்றுக் கொள்வது என்று அவருக்கு தெரியவே இல்லை... கண்ணாடி பாத்திரத்தை நொறுக்கி விட்டு ஒட்ட முடியாமல் திண்டாடுபவனின் நிலை தான் அவருக்கு...
அப்படியே அமர்ந்து இருந்தார்...
சற்று நேரத்தில் ஷியாமும் மங்கள நாணை கல்யாணியின் கழுத்தில் அணிவித்து விட்டான்...
எழுந்து நின்று அர்ச்சதை தூவிய வேதவல்லியோ அதற்கு மேல் அங்கே நிற்காமல் தளர்ந்த நடையுடன் வெளியேறி இருந்தார்... மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய தனக்கு தகுதியே இல்லை என்று அவர் உணர்ந்தார்...
வெளியே நின்ற டிரைவரிடம் சென்றவர், "வீட்டுக்கு போகலாம்பா" என்று சொல்லிக் கொண்டே காரில் ஏற, "உடம்பு சரி இல்லையாம்மா? ஐயா கிட்ட சொல்லட்டுமா?" என்று கேட்டான் சாரதி...
"மனசு தான் சரி இல்லை..." என்றபடி காரில் ஏற, அவனும் அவரை அழைத்துக் கொண்டே வீட்டுக்கு புறப்பட்டு விட்டான்...
வீட்டுக்கு வந்ததுமே அவன் குருமூர்த்திக்கு அழைத்து விடயத்தை சொல்ல, அவரோ, "ஓகே" என்றபடி அலைபேசியை வைத்தவரோ, அருகே நின்ற ரதிதேவியிடம், "அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க" என்று சொல்ல, ரதிதேவியிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே...
அன்றில் இருந்து வேதவல்லி இன்னுமே தளர்ந்து போனார்...
அவர் வாய்க்கு பயந்து அவரிடம் வந்தும் யாரும் பேசுவது இல்லை, அவரும் தன்னுடைய திமிரை விட்டு பேச முனைவது இல்லை... அவரிடம் பேசி இருந்தாலோ அவர் பேசி இருந்தாலோ அவர் மாற்றம் தெரிந்து இருக்கும்... அவர் மாற்றம் யாருக்கும் தெரியாமலே நாட்களும் நகர ஆரம்பித்து விட்டன...
மொத்தமாக தனித்துப் போனார்...
குடும்பத்தில் இருப்பவர்கள் ஒதுக்குவதை தாண்டி, அவரே தன்னை தானே ஒதுக்கிக் கொண்டார்...
ஷியாம் மற்றும் கல்யாணியின் திருமணத்தின் பின்னர் மொத்தமாக மௌனித்து விட்ட வேதவல்லியை அவதானித்தார் வசந்தி...
"அத்தை இப்போ எல்லாம் எதுவுமே பேசுறது இல்லைங்க" என்று குருமூர்த்தியிடம் சொல்ல, அவரோ, "திருந்திட்டாங்க போல" என்று சொல்லிக் கொண்டே கடந்து விட்டார்...
இப்படியே அடுத்த அடுத்த மாதங்கள் நகர்ந்து இருக்கும்...
தேன்மொழிக்கு நிறை மாதமும் வந்து விட்டது...
இன்னும் இரு வாரங்களில் பிரசவ வலி உண்டாக வாய்ப்பு இருக்கின்றது என்று வைத்தியர் சொல்லி திகதியும் குறித்து இருந்தார்...
வைத்தியரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த வம்சி கிருஷ்ணாவுக்கோ இருப்பு கொள்ளவே இல்லை...
பதட்டம்...
"வலி வந்தா உடனே சொல்லிடு கண்ணம்மா" என்று மீண்டும் மீண்டும் சொன்னான்...
அவள் தலையாட்டி சலித்தே போய்விட்டாள்...
"கைல இருக்கிற வாட்சை கழட்டதம்மா" என்றான்...
அவளோ கையால் அவன் வாயை மூடியவள், "முடியல" என்றார் சைகையில் சொல்ல, "பயமா இருக்குடி... நாளைக்கு அவார்ட் ஃபங்க்ஷனுக்கு நான் போகாம நிற்கவா?" என்று கேட்டான்.
ஆம் அடுத்த நாள் அவனுக்கு சிறந்த பாடகருக்கான விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...
போகவே அவனுக்கு இஷ்டம் இல்லை...
ஆனால் அவன் இத்தனை வருடங்கள் எதிர்பார்த்த விருதுகளில் ஒன்று அது...
முதல் முறை கிடைக்கின்றது...
தேன்மொழி தான் விடவில்லை...
"பிரசவத்துக்கு இன்னும் ரெண்டு வாரங்கள் இருக்கு, கண்டிப்பா போகணும்" என்று கட்டளை போட்டு விட்டாள்.
அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து தான் விருது வழங்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்...
அருகே என்றால் தேன்மொழியையும் கைக்குள் வைத்து அழைத்து சென்று இருப்பான்...
இந்த நேரத்தில் தூர பயணத்துக்கு தேன்மொழியை அழைத்து செல்லவும் அவனுக்கு இஷ்டம் இல்லை... இடையில் வலி வந்து விட்டால் என்ன செய்வது என்று தடுமாற்றம் வேறு...
நின்று விடலாமா என்று யோசித்தான்... கெளதம் வீட்டில் இருந்தால் கூட பரவாயில்லை... அவனும் வம்சி கிருஷ்ணாவுடன் விருது வழங்கும் நிகழ்வுக்கு வருகின்றான்...
வம்சி கிருஷ்ணாவுக்கு அதனால் தான் இந்த யோசனை...
தேன்மொழி விட்டால் தானே...
போகாமல் நிற்க அனுமதி கேட்டவனை முறைத்தவள், "அப்புறம் நான் உங்க முகத்தை கூட பார்க்க மாட்டேன்" என்றாள் சைகையில்... அவனோ பெருமூச்சுடன், "சரி போய்ட்டு வரேன்... பத்திரமா இருந்துக்கோ" என்று சொல்லிக் கொண்டான்...
அடுத்த நாள் காலையில் கோர்ட் ஷூட்டில் நின்றவனுக்கு முன்னே நின்ற தேன்மொழியோ அவனுக்கு டையை கட்டி விட்டாள். அவனோ அவள் இடையில் கையை வைத்து இருந்தவன், "வாட்ச் எங்க?" என்று கேட்க, அவளோ, மேசையை காட்டியவள், "கட்டுவேன்" என்றாள் சைகையில்.
"மறந்துடாதே கண்ணம்மா, எதுன்னாலும் எலார்ம்மை அழுத்திடு... அம்மாவும் அப்பாவும் வீட்ல தான் இருக்காங்க... உடனே வந்திடுவாங்க... புரியுதா?" என்றான்...
அவளோ சலிப்புடன், "சரி" என்கின்ற ரீதியில் தலையாட்ட, அவனோ, "எனக்கு ஏனோ மனசு ஒரு மாதிரி இருக்கு, நான் நின்னுடவா?" என்றான் மீண்டும்...
அவளுக்கு கடுப்பாகி விட்டது...
அவன் டையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள், அவன் இதழில் இதழ் பதித்து விலகிக் கொண்டே, "இது நீங்க ரொம்ப நாளா ஆசைப்பட்ட விருது... வாங்கிட்டு தான் வரணும்... ஒரு நாள் மட்டும் தானே... நாளைல இருந்து என் கூட தானே இருக்க போறீங்க... இன்னும் பிரசவத்துக்கு ரெண்டு வாரம் இருக்கு... புரியுதா?" என்றாள் சைகையில்...
அவனுக்கு ஒரு வித தடுமாற்றம்...
ஆனால் அவளை மீறவும் விருப்பவில்லை...
ஆழ்ந்த மூச்செடுத்தபடி, குனிந்து அவள் மேடிட்ட வயிற்றின் அருகே இதழ்களை கொண்டு வந்தவன், "அம்மாவை தொல்லை பண்ணாத கண்ணா" என்று சொல்லி அவள் வயிற்றில் முத்தம் பதிக்க, அவன் தலையை மெதுவாக வருடினாள் தேன்மொழி...
அதனை தொடர்ந்து பெருமூச்சுடன் தனது மொத்த உயரத்துக்கு எழுந்து நின்றவன், "பத்திரமா இருந்துக்கோ" என்று இத்துடன் பத்தாவது தடவை சொல்லி விட்டான்...
அவளை மட்டும் அல்ல, வீட்டில் இருந்த குருமூர்த்தியையும் வசந்தியையும் கூட இதையே சொல்லி ஒரு வழி பண்ணி விட்டான்...
வேதவல்லியோ அவன் திரும்ப திரும்ப சொல்வதை விசித்திரமாக பார்த்துக் கொண்டே ஓரமாக அமர்ந்து இருந்தார்...
சற்று நேரத்தில் கெளதம் கிருஷ்ணாவும் கீழிறங்கி வந்து விட, "பத்திரமா இருந்துக்கோம்மா" என்று தேன்மொழியின் கன்னத்தில் தட்டி சொல்ல, கெளதம் கிருஷ்ணாவோ, "டேய் போதும்டா, என்னாலேயே முடியல... சீக்கிரம் வா... நீ காதல் மன்னன்னு நொடிக்கு ஒரு தடவை ப்ரூஃப் பண்ணுற" என்று சொல்ல, வம்சி கிருஷ்ணாவும் சிரித்தபடி கிளம்பி விட்டான்...
வசந்தியோ, "ஏதும்னா சொல்லும்மா" என்று சொல்ல, தேன்மொழியும் சம்மதமாக தலையை அசைத்து விட்டு அறைக்குள் நுழைந்தவள், அங்கே மேசையில் இருந்த வாட்சை எடுத்து கையில் கட்டப் போனாள்...
அவள் கட்டுவதற்காக இழுத்த வேகத்தில் வாட்ச்சின் பட்டி சட்டென்று அறுந்து விட்டது...
'அச்சோ, இது என்ன இப்படி ஆயிடுச்சு... அவர் கிட்ட சொன்னா பட்டியை மாத்திட்டு தான் அடுத்த வேலை பார்ப்பார்... வந்ததும் சொல்லிக்கலாம்... இங்கயே வச்சுக்கலாம்... நாம தான் எங்கேயும் போக போறது இல்லையே" என்று நினைத்துக் கொண்டே, கட்டிலில் அமர்ந்தாள்...
"வாட்ச் கட்டியாச்சா கண்ணம்மா? சாப்பிட்டியாம்மா? தண்ணி குடிச்சியாம்மா?" என்று வம்சி கிருஷ்ணாவிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்க, அவளோ, அனைத்துக்கும், "ஆமா" என்று பதில் அனுப்பி இருந்தாள்.
அவன் பயணம் செய்த இரு மணி நேரங்களும் அவளுக்கு தான் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான்...
அவர்களின் விருது வழங்கும் விழா நடக்கும் மண்டபமும் வந்து சேர்ந்து விட்டது...