ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 3

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 3

இருவரும் இறுக்கமாக இருக்க, அடுத்த கணமே மினிஸ்டரின் அழைப்பில் ஒருங்கே இருவரும் உள்ளே சென்றார்கள். அவர்களை இருக்க சொன்ன மினிஸ்டர் விருத்தாச்சலம் கரிகாலனை அழுத்தமாக பார்த்து "இங்க பாருப்பா, எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியல, நேரடியாவே கேட்கிறேன் அந்த ப்ராஜெக்ட்டை அக்செப்ட் பண்ண முடியுமா இல்லையா?" என்று கேட்க அவனோ "எந்த அப்ரூவலும் இல்லாம எப்படி சார் அப்ரூவ் பண்ண சொல்றீங்க? இது நம்ம சமூகத்துக்கு தேவையே இல்லாத ப்ராஜெக்ட். சரி அத விட்டாலும், அதுக்கு அப்ரூவல் கொடுத்து நான் கம்பி எண்ணனுமா ? அத டிராப் பண்ண சொல்றது தான் பெட்டெர்" என்று கொஞ்சமும் வளையாமல் பேசினான். அவரால் அவனை அந்த இடத்தில் இருந்து தூக்க முடியும்.. ஆனால் அவன் மக்களின் ஆதரவுக்கு உரியவன். அவனை மாறுதல் செய்து, அந்த மாவட்டத்தின் ஓட்டுக்களை அவரும் இழக்க விரும்பவில்லை. அது தான் அவனிடம் அவர் கீழிறங்கி பேச ஒரே காரணம்.

உடனே மதுபாலா, "சார், முன்ன பின்ன கம்பியே எண்ணாத போல பேசுறாரே" என்று சொல்ல, அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன் கண்கள் அவளது நெற்றியில் இருந்த தளும்பில் பதிந்து மீள, "சார், அனாவசியமா பேச வேணாம்னு நினைக்கிறன்" என்று சொன்னான். அவளோ "எது அனாவசியம், எல்லாமே அவசியம் தான். அன்னைக்கு நான் மட்டும் கேஸ் போட்டு இருந்தா ஐயா இப்போ களி தான் சாப்பிட்டு இருக்கணும் " என்று சொல்ல, தாடையை நீவியவாறு அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் " அதே சமயம் நானும் வாயை திறந்து இருந்தேன்னா இந்த பதவி எப்போவுமே கனவு தான்" என்றவன் மினிஸ்டரைப் பார்த்து "நான் கிளம்புறேன் சார்" என்று சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறினான். அவன் முதுகை வெறித்துப் பார்த்தவள் "பார்த்தீங்களா என்ன பேசிட்டு போறான்னு" என்று சீற "கொஞ்சம் பொறுமையா இரு மதுபாலா, அவனை விட்டு தான் பிடிக்கணும்" என்று அவர் சொன்னார். அவளோ பெருமூச்சுடன் "என்னத்தை விட்டு என்னத்தை பிடிக்க போறீங்களோ ?" என்று சொல்ல அவரோ "அத விடு, இன்னைக்கு நைட்டும் கெஸ்ட் ஹவுஸுக்கு" என்று ஆரம்பிக்க வராத வெட்கத்தை வரவழைத்தவள் "நீங்க கூப்பிட்டு இல்லன்னு சொல்லுவேனா?" என்று சிணுங்களாக கேட்டாள். அவள் மனமோ "கட்டயில போற வயசில நம்மள படுத்தி எடுக்குது இந்த மனுஷன், துருபிடிச்ச துப்பாக்கிக்கு தோட்டா தான் ஒரு கேடு" என்று முணு முணுத்துக் கொண்டது.

அதே சமயம், அலுவலகத்தில் இருந்த கரிகாலன் மனதில் மதுபாலாவின் எண்ணமே ஓடிக் கொண்டு இருந்தது. அவன் உருகி உருகி காதலித்தவள் இல்லையே இந்த மதுபாலா. ஆம் அவள் தான் அவனது முதலாவது மனைவி. கரிகாலனின் தாய் தேடி தேடி தெரிந்தெடுத்த பேரழகி அவள். ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தாள் போக போக தான் அவள் குணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தது. எப்போவுமே தனது அழகில் எல்லை இல்லாத திமிரை உடையவள், கரிகாலனும் அவள் அழகை ஆராதிக்கும் சிறந்த கணவனாக தான் இருந்தான்.

அவளுக்கும் கலெக்டர் பொண்டாட்டி என்னும் பெருமிதத்தில் மிடுக்காகவே வலம் வந்தாள். திருமணம் செய்து மூன்று மாதத்தில் கர்ப்பமாகி விட்டவளை அவன் கையில் வைத்து தாங்கினான் என்று தான் கூற வேண்டும். அவன் தாயும் அவளுக்கு மாமியாராக இல்லாமல் அம்மாவா இருந்தார்.

இப்படியான ஒரு நாளில் தான் நேர்மையான கரிகாலனிடம் ஒரு வேலையை முடிக்க அனுமதி பெற முடியாமல் திண்டாடிய அந்த பிரதேச நகை கடை வியாபாரி ஒருவனின் கடைக்கு மதுபாலா மூக்குத்தி வாங்க சென்று இருந்தாள்.

அது கரிகாலனின் மனைவி என்று அறிந்த அந்த வியாபாரி விஜிதன் கூல் ட்ரின்க் தொடக்கம் எல்லாம் கொடுத்து அவளை கவனிக்க அவளும் அந்த கவனிப்பில் மெய் மறந்து போனாள். உடனே அவன் "ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்" என்று சொல்ல அவளோ "அது எனக்கு தெரியும்" என்றாள் மிடுக்காக. அவள் அழகில் அவனும் மயங்கி போனது என்னவோ உண்மை தான். அவள் மூக்குத்தி வாங்க வந்தாலும் பெரிய பெரிய தங்க நெக்லஸில் பார்வையை செலுத்தியவள் விட்ட பெருமூச்சை கண்டவன் "என்ன மேடம் நெக்லஸ் பிடிச்சிருக்கா?" என்று கேட்க அவளோ "ம்ம் பிடிச்சு என்ன பயன். அதுக்கு எல்லாம் கொடுத்து வச்சு இருக்கணும் " என்றாள் . அவனோ "கரிகாலன் சார் கிட்ட சொன்னா வாங்கி தர போறார்" என்று சொல்ல, அவளோ "க்கும், கேட்டது எல்லாம் வாங்கி தந்தாலும் இப்படி பெரிய பெரிய நெக்லஸ் வாங்குறதுக்கு கைல காசு வேணுமே" என்று சலித்துக் கொள்ள அவனோ "சாருக்கு உழைக்க தெரில" என்று நூல் விட ஆரம்பித்தான். அவளோ "உழைக்க தெரிலயா?" என்று புரியாமல் கேட்க அவனோ "ஆமா மேடம் ஒரே கையெழுத்து பல லட்சம் கொடுக்க நானே ரெடி, ஆனா அந்த கையெழுத்தை தான் போட மாட்டேங்குறாரே" என்று சொல்ல அதைக் கேட்டு "ஒரு கையெழுத்துக்கு பல லட்சமா அம்மாடியோவ்" என்று வாயில் கை வைக்க விஜிதனோ "ஆமா மேடம், நீங்க மட்டும் எனக்கு கையெழுத்து வாங்கி கொடுத்தீங்கன்னா இந்த தேவையான நகையை நானே அன்பளிப்பா தருவேன். இப்போ இந்த நெக்லஸை வச்சுக்கோங்க, " என்று அவள் ஆசைப்பட்ட நெக்லஸை அசால்டாக தூக்கி கொடுக்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அதை பெற்றுக் கொண்டவள் முகமோ அப்பட்டமாக அதிர்ச்சியை காட்ட "ஒரு கையெழுத்துக்கு நெக்லஸா? நல்லா இருக்கே, கண்டிப்பா கையெழுத்து வாங்கி வரேன்" என்று சொன்னவள் வீட்டுக்கு விரைந்தாள். அதே சமயம் , வேலையில் இருந்து வந்த கரிகாலனோ குளித்து விட்டு வந்தவன் அங்கே அமர்ந்து இருந்த மதுபாலாவின் அருகே நெருங்கி அமர்ந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் "என்னடி இப்போ கூட இவ்ளோ அழகா இருக்க? டாக்டர் வேற கட்டுப்பாடா இருக்க சொல்லி இருக்கார், ஆனா என்னால முடியல," என்று சொன்னவன் இதழ்கள் அவள் கழுத்தில் பயணம் செய்ய , அவன் இதழ்களில் தட்டுப்பட்டது அவள் அணிந்திருந்த புது நெக்லஸ் தான் . உடனே அவளை விட்டு விலக, அவன் இதழ் செய்த சாகசத்தில் கண் மூடி இருந்தவள் தனது கண்களை மெதுவாக திறந்து கொள்ள, "யாரடி இது வாங்கி தந்தாங்க?" என்று புருவம் சுருக்கி கேட்டான் கரிகாலன். அவளோ "ஓஹ் இத பத்தி தான் சொல்லணும்னு நினச்சேன், நகை கடை வச்சு இருக்கிற விஜிதன் தான் தந்தார், நீங்க ஏதோ கையெழுத்து போடணுமாமே, போட்டு விடுங்க, அதுக்கு தான் இந்த அன்பளிப்பு" என்று சர்வசாதாரணமாக சொல்ல அவன் விழிகளோ அதிர்ச்சியும் கோபமுமாக விரிந்து கொண்டது.

"என்னது லஞ்சம் வாங்குனியா ?" என்று கேட்க அவளோ "லஞ்சம் இல்ல அன்பளிப்பு" என்றாள். உடனே அவன் "மது, என் கோபத்தை கிளறாத, ரெண்டும் ஒன்னு தான். வா இத கொண்டு போய் கொடுத்துட்டு வந்திடுவோம், என்னால நீ காட்டுற இடத்தில கையெழுத்து போட முடியாது" என்க, "என்னது? கொடுக்கணுமா? உங்களுக்கென்ன பைத்தியமா? இதோட பெறுமதி தெரியுமா?" என்று கேட்க அவனோ "எனக்கு எல்லா மண்ணாங்கட்டியும் தெரியும், நீ முதல் கிளம்பு" என்றான் அழுத்தமாக., அவளோ "நான் கர்ப்பமா இருக்கேன் என் ஆசைய நிறைவேற்ற மாட்டிங்களா?" என்று கேட்க "அடிங் " என்று கையை கோபத்தில் ஓங்கி விட்டான் அவன். பெருமூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவன் "சொன்னா கேளு, வா போய் கொடுத்துட்டு வந்திடலாம். இல்லன்னா என் கிட்ட அடிவாங்கியே செத்துடுவ " என்று என்றும் இல்லாமல் அன்று கோபத்தில் அவன் சீற அவளும் கொஞ்சம் பயந்து தான் போனாள்.

"எனக்கு முடிவெடுக்க சுதந்திரமே இல்ல" என்று முணு முணுத்தவள் அவன் கோபத்தை பார்த்து கொஞ்சம் பயத்துடன் அவன் கூட புறப்பட்டான். அடுத்த கணமே காரில் விஜிதனின் வீட்டுக்கு சென்றவன் அவள் கழுத்தில் கிடந்த நெக்லஸை அவன் முகத்தில் வீசி "இது தான் லாஸ்ட் வார்னிங், இனி உன் நிழல் என் பொண்டாட்டி மேல பட்டாலும் கொன்னுடுவேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தவன் சங்கடமாக நின்ற அவளை பார்த்து "இனி அவன் அது தந்தான் இவன் இது தந்தான்னு வாங்கிட்டு வந்தா உன்னையும் கொன்னுடுவேன்" என்று சீறிவிட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டான்.

விஜிதனுக்கு அவன் உதாசீனம் கோபத்தை பெருக்க, "நிழல் என்னடா உன் பொண்டாட்டியையே என் வசமாக்கிறேன் பாரு.. அப்புறம் இந்த மூஞ்சை எங்க கொண்டு வச்சுக்க போறான்னு நானும் பார்க்கிறேன் " என்று சவால் விட்டு இருந்தவனுக்கு மதுபாலாவின் அழகில் ஒரு மயக்கம் இருக்கத் தான் செய்தது.

மதுபாலாவும் வீட்டுக்கு கரிகாலனுடன் சென்றாலும் விஜிதனை நினைத்து ஒரு உறுத்தல் உருவாக அடுத்த நாளே அவன் நகைக்கடை பையில் இருந்த அவன் தொலைபேசிக்கு அழைக்க மறுமுனையில் எடுத்த விஜிதன் "விஜி ஜுவெல்லரீஸ் " என்று சொன்னான். அவளுக்கும் அவன் பெயர் தெரிந்து இருக்க "விஜிதன் இருக்காரா?" என்று கேட்டாள் அவள். அவனும் "நான் தான் பேசுறேன் நீங்க?" என்று கேட்க "நான் மதுபாலா, கரிகாலனோட மனைவி" என்று ஆரம்பிக்க விஜிதனோ "அட, ஆடு தானா தலையை கொடுக்குது" என்று நினைத்தவன் "இருங்க என் ஹாண்ட் போன்ல இருந்து கால் பண்றேன்" என்று போனை எடுத்துக் கொண்டு தனி அறைக்குள் நுழைந்தான். அவளும் அவன் அழைப்பை ஏற்றவள் "நேற்று நடந்து கிட்டத்துக்கு சாரி" என்று சொல்ல, அவனோ "இவ்ளோ அழகான பொண்ணு சாரி கேட்கலாமா? அத விடுங்க, போனா போகுது, நீங்க எப்படி இருக்கீங்க? " என்று அழகாக பேச ஆரம்பித்தான்.

இப்படி தரம் கெட்டு நடப்பவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் என்று தெரியாமல் அவளும் அவன் பேச்சில் மயங்கி பேச ஆரம்பித்தாள். அவன் வேறு அவளை அடிக்கடி அழகி என்று சொல்லி மனம் குளிர வைக்க, இந்த கானல் நீர் உறவில் அவளும் தடம் மாறி போனாள். எப்போதும் கரிகாலன் அவள் செலவு செய்வதற்கு கணக்கு கேட்க மாட்டான், இதுவே அவளுக்கு சாதகமாக போக, அவனுடன் போனில் பேசியே நாட்களை கடத்த ஆரம்பித்தாள். அவனும் அவளை வர்ணிப்பது, புகழ்வது," கரிகாலனுக்கு ரசனை இல்லை, இவ்ளோ அழகான பொண்டாட்டிய நான் எப்படி வச்சு இருப்பேன் தெரியுமா?" என்றெல்லாம் பேசி பேசி அவள் மனதை மயக்க,அவளும் மயங்கி போனவள் கரிகாலனிடம் ஒரு விலகலை காட்ட ஆரம்பித்தாள். பகலில் வேலை கூட செய்யாமல் அறையில் அவள் அடைந்து கிடக்க, அவள் மாமியாரும் மாமனாரும் கூட அவள் கர்ப்பமாக இருப்பதால் கேள்வி கேட்காமல் இருந்தது அவளுக்கும் வசதியாகி போனது.

ஆரம்பத்தில் நட்பாக ஆரம்பித்த அவர்கள் உறவு நாட்கள் செல்ல செல்ல தாம்பத்தியம் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு முன்னேறி இருந்தது. அவனும் அவளுக்கு நகைகள் யாருக்கும் தெரியாமல் பரிசாக அடிக்கடி அளித்து வர அதை அவள் ரகசியமாக பத்திரப்படுத்தி வேறு வைத்து இருந்தாள். கரிகாலனுக்கு வேலை பளு ஒரு பக்கம், மனைவி மீது எல்லை கடந்த நம்பிக்கை மறுபக்கம் என, அவளை சந்தேகப்பட அவனுக்கு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

இப்படியான ஒரு நாளில் மதுபாலா எட்டு மாத கர்ப்பமாக இருக்கும் போது விஜிதனும் அவளும் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து இருந்தார்கள். அவனோ "உன் புருஷன் பக்கத்தில வர்றதே இல்லையா?" என்று கேட்க அவளோ "டாக்டர் ஆறு மாசத்துக்கு விலகி இருக்க சொல்லி இருக்கார், " என்றாள். அவனோ "அது தான் எட்டு மாசம் ஆச்சே" என்று சொல்ல அவளும் "நான் அவர் வரும் போது தூங்கி இருப்பேன் " என்று சொல்ல அவனோ "இல்லாட்டி மட்டும்" என்று நக்கலாக சொன்னான். அவளோ "அப்படி சொல்ல முடியாது, கர்ப்பமாக முதல் என்னை ஒரு வழி பண்ணிடுவார்" என்று இருவருக்கும் இருக்கும் அந்தரங்கத்தை வாய் கூசாமல் அவனிடம் சொல்ல, " அவனுக்கு இப்போ உன் மேல இண்டெர்ஸ்ட் இல்ல, கல்யாணம் ஆன புதுசுல அப்படி தான் இருக்கும். இப்போவும் அதே காதலோடு இருந்தா தான் உண்மையான காதல்" என்று சொல்ல அவளோ "அப்போ இன்னைக்கு செக் பண்ணிடலாமா?" என்று கேட்டாள். அவனோ "கண்டிப்பா, செக் பண்ணிட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு, நீ கர்ப்பமா இருக்கிறதா சொல்லி நைசா நழுவ பார்ப்பான்" என்று ஏதோ கண்ட மேனிக்கு அடித்து விட, நிஜமாக நடந்ததும் அதுவாகி போக, கரிகாலன் மீது மதுபாலாவின் நம்பிக்கை மொத்தமாக சிதைந்து போனது.

குளித்து விட்டு வந்த கரிகாலனை அவளாக நெருங்கி இதழ் மேல் இதழ் பதித்து தாம்பத்யத்துக்கு அழைத்த போதும் அவன் அவள் உடல் நிலையை யோசித்து "முதல் நம்ம குழந்தை பிறக்கட்டும் மது" என்று சொல்ல விஜிதன் பேச்சில் மயங்கி இருந்தவள் கரிகாலனை கையாலாகாதவன் லிஸ்டில் சேர்த்து விட்டாள்.
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 3)


அடிப்பாவி?இவ அவசரத்துக்கும் ஆத்திரத்திற்கும் அவன் தலையைத்தான் உருட்டணுமா ?
அச்சோ பாவம் கரிகாலன் !இவனோட அம்மா தெரியாத்தனமா இவளை கட்டி வைச்சு உண்மையிலேயே அவன் தலையில பெரிய கல்லாத்தான் தூக்கிப் போட்டு, அவனோட ஜோலியையே முடிச்சிட்டாங்கன்னு தோணுது. அது சரி, இவ விஜிதனுக்குத் தானே ரூட் விட்டுட்டிருந்தா.... அப்புறம் எப்படி விருத்தாச்சலத்தோட கெஸ்ட் ஹவுஸ்க்கு தாழ்ப்பாள் ஆனா...? அய்யய்யோ ! அப்ப விஜிதனையும் டீல்ல விட்டுட்டாளா...? ச்சே... என்ன பொம்பளையோ இந்த மதுபாலா...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top