ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 28

அத்தியாயம் 28

அதனை தொடர்ந்து சர்வஜித், மாடி ஏறி குளிக்கச் சென்றான்...

அவனுக்கு குளிக்கும் போதும் அவள் நினைவு தான்...

இத்தனை வருடங்கள் அவள் நினைவுகள் அவனை விட்டு அகன்றதும் இல்லை, நினைவுகளுக்கு அவன் கட்டுப்பாடு விதித்ததும் இல்லை...

தலையை உலுக்கிக் கொண்டே, ஹங்கேரில் இருந்த டவலை எடுத்து இடுப்பில் கட்டியபடி வெளியே வந்தான்...

மருதநாயகம் மற்றும் ரணதீரன் பற்றி அவனுக்கு இப்போது வருத்தம் இல்லை...

அவர்களுடன் நல்ல உறவு முறையை கட்டி எழுப்பி விட்டான்...

ஆனால் ஆதிரையாழ் அவனுக்கு இப்போதும் கேள்விக்குறி தான்...

அவன் முதல் பார்த்த ஆதிரையாழ் அல்ல இவள்...

கோபப்பட தெரியாது அவளுக்கு...

இப்போது இவள் தொட்டதுக்கு எல்லாம் கோபப்படுகின்றாள்...

அவள் கோபத்திலும் நியாயம் அவனுக்கு புரிந்தது... அந்த நிமிர்வும் அவனுக்கு பிடித்து இருந்தது...

ஆனால் அடிபணிய அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே தலையை துவட்ட, வாசல் கதவு தட்டப்பட்டது...

"கம் இன்" என்றான்...

கதவை திறந்துக் கொண்டே வந்தது என்னவோ ஆதிரையாழ் தான்... இடையில் டவலுடன் நிற்பவனை பார்த்தவளோ, "ச்ச, இந்த கோலத்துல, கம் இன் சொல்ல தானா வேணும்?" என்று முணு முணுத்துக் கொண்டே, அவனை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"ரஜினி பட போஸ்டர் போல அங்க பார்த்துட்டு நின்னா என்ன அர்த்தம்? எதுக்கு வந்த?" என்று அவளை ஒரு கணம் பார்த்து விட்டு கண்ணாடியில் பார்த்து தலையை கோதிக் கொண்டே கேட்டான்...

அவனோ, "பண்ணுறதையும் பண்ணிட்டு கிண்டல் தான் ஒரு குறை" என்று வாய்க்குள் முணு முணுத்து விட்டு, "தீரன் காலைல குளிச்சிட்டு வந்து டவலை ட்ரெஸ்ஸிங் டேபிள்ல போட்டான்... இப்போ எடுத்து காயப் போடணும்... அத எடுக்க தான் வந்தேன்..." என்றாள்.

"எடு" என்றவன் தனக்கு முன்னே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த தீரனின் டவலைப் பார்த்தான்...

அவளுக்கோ கடுப்பு, எடுத்து கொடுத்தால் என்ன? என்று தோன்றியது...

ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "எடுத்து கொடுத்தா என்ன?" என்று கேட்க, அவனோ, "என்னால முடியாது... நீயே எடு" என்றான் அவளை அழுந்த பார்த்துக் கொண்டே...

அவனை அவள் ஏறிட்டுப் பார்க்கவே இல்லை...

விறு விறுவென ட்ரெஸ்ஸிங் டேபிள் அருகே சென்றாள்.

ட்ரெஸ்ஸிங் டேபிளுடன் ஒட்டியபடி தான் அவன் நின்று இருந்தான்...

அவனை நெருங்கி கையை நீட்டி தான் டவலை எடுக்க வேண்டும்...

கடுப்பாக இருந்தது அவளுக்கு...

அவன் அருகே பக்க வாட்டாக சென்று சற்று குனிந்து கையை மட்டும் நீட்டி, டவலை தொட்டு விட்டாள். அவன் பெரிய உருவத்துடன் அவளுக்கும் டவலுக்கும் நடுவே நின்று இருக்க, அவளுக்கு டவலை பார்க்க முடியவில்லை...

பார்க்க எத்தனித்தால் அவனை தாண்டி தான் பார்க்க வேண்டும்...

அதனால் பார்க்க விரும்பாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டே, டவலை இழுக்க முயன்றாள்...

"ஆதிரா" என்று அவன் அவள் பெயரை சொல்லி ஏதோ சொல்ல வர முதலே டவலை இழுத்தவள், விறு விறுவென செல்ல, "ஏய் ஆதிரா" என்று அவன் சற்று அழுத்தமாகவே அழைத்து இருந்தான்...

அவளோ, அவனை திரும்பி பார்த்த கணம், அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"ச்சீ, கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே, முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொள்ள, அவனோ தன்னை குனிந்து பார்த்து விட்டு அவளைப் பார்த்தவன், "ஹேய், நீ என் டவலை உறுவிட்டு போனா நான் என்ன பண்ணுறது?" என்று கேட்க, அவளோ, அப்போது தான் கையில் இருந்த டவலைப் பார்த்தாள்...

அவளோ, "ஆத்தி" என்று நினைத்துக் கொண்டே டவலை தூக்கி கீழே போட்டு விட்டு, அங்கிருந்து நகர முயல, "டவலை கைல கொடுத்துட்டு போ" என்றான் அதிகாரமாக...

அவளுக்கு பதிலுக்கு கோபம் தான் வந்தது...

"இல்ல மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் நகர போக, அவள் கையை எட்டி பிடித்து இருந்தான்...

அவளோ, கையை உறுவ முயன்றாள்...

அவன் பிடி இறுகியது...

அவளுக்கு வலித்தது...

அதுவரை அவனைப் பார்க்கவில்லை...

இப்போது அவன் ஹேசல் விழிகளைப் பார்த்தாள்...

"வலிக்குது" என்று அவள் சொன்னதுமே, "ஐ டோன்ட் கெயார், எனக்கு என்னோட டவல் வேணும்" என்றான்...

அவளுக்கு எடுத்து கொடுக்க மனம் இல்லை...

அவன் அதட்டி தான் செய்ய அவளுக்கு விருப்பம் இல்லை...

அவன் மீது அப்படி ஒரு ஆத்திரம் அவளுக்கு...

"எப்போவுமே என்னை காயப்படுத்துறதுல ஒரு சந்தோஷம்ல, அப்போ மனசால இப்போ உடம்பால" என்றாள்...

அவன் விழிகளை பார்த்துக் கொண்டே கூறினாள்...

அவள் வார்த்தைகளை கேட்டவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை... சட்டென்று கையை விட்டவன், கீழே கிடந்த தனது டவலை எடுத்து இடையில் கட்டிக் கொண்டே, ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த ரணதீரனின் டவலை எடுத்து அவளிடம் நீட்ட, அதுவரை தலையை குனிந்தபடி நின்று இருந்தவளோ அந்த டவலை வாங்கிக் கொண்டே விறு விறுவென வெளியேறி இருந்தாள்.

அவள் முதுகை ஆழ்ந்து பார்த்து விட்டு, சர்வஜித்தும் தனது வேலைகளை பார்க்க தொடங்கி விட்டான்...

அன்று அவன் நாள் மருதநாயகத்துடன் கடக்க, அன்று மதியம் ரணதீரனை அழைத்து வர முத்துவுடன் புறப்பட்டு இருந்தான்...

பெரிய அளவான பாடசாலை அல்ல அது...

சில பல உடைசல்கள் வேறு... அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் முத்துவுடன் ரணதீரனின் வகுப்பறையை நோக்கிச் சென்றான்...

வெளியே சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்து இருந்தார்கள்...

மல்டி மில்லியனர் அவன்...

அவன் குழந்தை படிப்பதோ வெகு சாதாரண பாடசாலையில்...

முதல் என்றால் வானுக்கும் பூமிக்கும் தாம் தூம் என்று குதித்து இருப்பான்...

இப்போது அவன் மனமோ, 'அவனாவது நல்ல விதமா வளரட்டும்' என்று நினைத்தது...

பணத்தை கொட்டி கொட்டி வளர்த்து தானே சர்வஜித் இப்படி திமிருடன் இருக்கின்றான்...

இந்த குணம் மகனுக்கு வர கூடாது என்று அவனாகவே நினைத்துக் கொண்டான்...

வகுப்பு முடிந்து மணி அடித்ததுமே, சர்வஜித்துக்காக காத்துக் கொண்டு இருந்த ரணதீரனோ, "அப்பா" என்று சொல்லிக் கொண்டே ஓடி வர, அவனை புன்னகையுடன் தூக்கிக் கொண்டான் சர்வஜித்...

ரணதீரனுக்கு சந்தோஷம் தாங்க முடியவே இல்லை...

அவன் ஆசைப்பட்ட தருணம் அல்லவா இது?

சட்டென அங்கே வந்த அவன் நண்பர்களை பார்த்தவன், "இது தான் என் அப்பா", "இது தான் என் அப்பா" என்று எல்லோரிடமும் சொன்னான்...

சர்வஜித்தின் கையில் இருந்து கீழே இறங்கியவனோ, அங்கே வந்த அவன் நண்பர்களை தட்டி தட்டி சொன்னான்...

"என் அப்பா ஓடி எல்லாம் போகல" என்று அனைவரிடமும் சொல்ல சொல்ல, சர்வஜித்துக்கு பாரம் ஏறியது...

இதுவரை அவன் செய்த செயலின் வீரியம் புரியவில்லை...

இப்போது புரிந்தது...

ரணதீரனின் ஏக்கம் புரிந்தது...

எதிர்பார்ப்பு புரிந்தது...

அந்த பிஞ்சு மனதில் இந்த வயதில் உண்டான வலி புரிந்தது...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, ரணதீரனை தூக்கிக் கொண்டவனோ, "உன் பிரின்சிபாலை பார்க்கலாமா?" என்று கேட்க, "ம்ம்... பார்க்கலாமே" என்றான்...

அடுத்து முத்துவுடன் சர்வஜித் சென்றது என்னவோ அதிபரின் அறைக்கு தான்...

சர்வஜித்தைக் கண்டதுமே, "வாங்க சார், அப்பா அமெரிக்காவில இருந்து வந்து இருக்காருனு இன்னைக்கு முழுக்க தீரன் சொல்லிட்டே இருந்தான்னு டீச்சர்ஸ் சொன்னாங்க" என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே சர்வஜித்தை வரவேற்க, சர்வஜித்தும் அவர் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான்...

அவன் இருந்ததுமே, "அப்புறம் சொல்லுங்க சார், தீரனை அழைச்சிட்டு அமெரிக்கா போக போறீங்களா?" என்று அவர் கேட்க, அவனோ, "ம்ம், அத அப்புறம் பேசிக்கலாம்... முதல் உங்க ஸ்கூலை மொத்தமா ரினோவேட் பண்ண எவ்ளோ செலவாகும்?" என்று கேட்டான்...

அவரோ அவனை அதிர்ந்து பார்த்தவர், "பண்ணி கொடுக்க போறீங்களா?" என்று கேட்க, ஆமோதிப்பாக தலையாட்டினான்...

அதிபருக்கு கண்கள் கலங்கி விட்டது...

"ரொம்ப சந்தோஷம் சார்... எத்தனையோ அரசியல்வாதிங்க இருக்காங்க, ஆனா இந்த ஸ்கூல் இப்படியே தான் இருக்கு... தீரனோட கொள்ளு தாத்தா தான் மேசை, எல்லாம் வாங்கி கொடுத்தார்... அவர் பேரன்னு நிரூபிச்சுட்டீங்க... உங்க மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பீங்க" என்று சொல்ல, "அதுல என்ன இருக்கு?" என்று அவன் ஆரம்பிக்க முதலே, "பணத்தை சாகும் போது கொண்டா போக போறோம்... அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறதுல இருக்கிற சந்தோசம் தெரியுமா? அப்படி தானே அப்பா" என்றான் ரணதீரன்...

அவனை சர்வஜித் அதிர்ந்து பார்த்தான்...

ரணதீரனோ, "தாத்தா அப்படி தான் சொல்லுவார்..." என்று சொல்ல, ரணதீரனும், "உண்மை தான்" என்று சொல்லிக் கொண்டே அதிபரிடம் விடை பெற்று புறப்பட்டு விட்டான்...

அவனுக்கே இன்று பாடம் எடுக்கிறான் அவன் மகன்...

முதல் முறை, தன்னால் மட்டும் ஏன் ரணதீரன் போல சின்ன வயதில் யோசிக்க முடியவில்லை என்று தன் மீதே கோபம் வந்தது...

ஆழ்ந்த மூச்சை எடுத்து அடக்கிக் கொண்டான்...

அன்றும் அவர்கள் நாள் கல கலவென தான் நகர்ந்தன...

என்ன தான் மருதநாயகம் மற்றும் ரணதீரனுடன் சர்வஜித் ஒன்றிப் போனாலும், அவனால் ஒன்ற முடியாத ஒரே ஜீவனாக நின்று இருந்தாள் ஆதிரையாழ்...

நாட்கள் நகர்ந்தாலும் அவளுக்குள் மாற்றம் இல்லை... அதே கோபம், அதே ஆத்திரம் அவன் மேல் அப்படியே இருந்தது...

ஆனால் அவன் மாறினான்...

அவன் ஈகோ கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கியது...


அவளிடம் பணியவில்லை என்றாலும் சீண்டி அவளுடன் பேசும் அளவுக்கு அவனிடம் மாற்றம்...
Super sis
 
Top