அத்தியாயம் 23
வீரராகவன் அவளது பார்வை மாற்றத்தை கவனிக்கவில்லை, சகஜமாக தான் இருந்தான்...
கொண்டு வந்த உணவை அங்கே இருந்த மேசையில் வைத்து விட்டு தனது அறைக்குள் குளிக்க நுழைந்து விட்டான்...
இப்போது தான் அக்ஷயாவுக்கு சங்கடமாக இருந்தது... ஒரே அறையில் இருவரும் அன்றைய இரவை கழிக்க வேண்டும்... நினைக்கவே மூச்சு முட்டியது...
அலை பாய்ந்து கொண்டு இருந்த மனதை எப்படி அடக்குவது என்று தெரியவே இல்லை...
அவன் எப்படியும் அத்து மீற மாட்டான் என்று தெரியும்...
ஆனாலும் ஒரு வித தயக்கம்...
யோசனையுடனேயே குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இருக்கவும் குளித்து முடித்து விட்டு வீரராகவனும் நெடுஞ்செழியனும் வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது...
அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர, குழந்தையை கையில் வைத்துக் கொண்டே நின்று இருந்தாள் அக்ஷயா...
நாற்காலியில் அமர்ந்த வீரராகவனோ சட்டென்று எழுந்து அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கியவன், "நீ இரு" என்று சொல்ல, அவளோ, "நீங்க சாப்பிடலையா?" என்று அவன் விழிகளை பார்த்து கேட்டாள்.
அவன் விழிகளை அதிகமாக தவிர்ப்பவள் அவள்...
இன்று ஏனோ தவிர்க்க தோன்றவே இல்லை...
அவன் கதையை கேட்டதில் இருந்தே அவன் மீது இருந்த கோபம் எங்கே போனது என்று அவளுக்கு தெரியவே இல்லை...
நிதானமாக யோசித்து பார்த்தாள்.
வேலையில் கடினமாக இருப்பான் அவன்... அதனை தவிர்த்து அவளை எந்த விதத்திலும் காயப்படுத்தவே இல்லை...
திருமணம் செய்து அழைத்து வந்தவன் குழந்தையிடம் அவ்வளவு அன்பாக இருக்கின்றான்...
அவளுக்கும் எந்த குறையும் வைக்கவில்லை...
ஆள் வைத்து அவளை நல்ல விதமாக தான் பார்த்துக் கொள்கின்றான்...
அப்படி இருக்கும் போது அவன் மீது ஏன் இந்த வெறுப்பு என்று தன்னை தானே கேட்டுக் கொண்டாள் பெண்ணவள்...
அவனும் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், "எனக்கு இப்போ பசிக்கல... நீ முதல் சாப்பிடு" என்றான்...
உண்மை என்னவோ அவனுக்கு கொடூர பசி தான்...
ஆனால் காட்டிக் கொள்ளவில்லை அவளுக்காக...
நெடுஞ்செழியனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் குரலை செருமி வீரராகவனின் முறைப்பை பதிலாக பெற்றுக் கொள்ள, மனோகரி மகனின் சேஷ்டையை பார்த்து இதழ் பிரித்து சிரித்துக் கொள்ள, அக்ஷயா இதற்கு மேல் நின்றால் காட்சி பொருளாகி விடுவோம் என்று உணர்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்...
அதுவரை தனிஷாவை தூக்கிக் கொண்டே நடந்தான் வீரராகவன்...
அக்ஷயாவோ அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டவள் கையை கழுவி விட்டு குழந்தையை வாங்கிக் கொள்ள வீரராகவன் அருகே செல்ல, தனிஷாவோ வீரராகவனின் மார்பில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
அவன் முன்னே வந்து நின்றவளோ, "நான் சாப்பிட்டேன்" என்று சொல்லி இரு கைகளையும் நீட்டி குழந்தையை வாங்க இரு கைகளையும் நீட்டினாள்.
அவனும் சற்று குனிந்து குழந்தையை அவளிடம் கொடுக்க எத்தனிக்க, இருவரின் கைகளும் தாராளமாக உரசிக் கொண்டன...
எப்போதும் குழந்தையை பரிமாற்றும் போது இந்த ஸ்பரிச தீண்டல்கள் சகஜமாக இருந்த போதிலும் இன்று அக்ஷயாவுக்கு என்னவோ போல இருந்தது...
குழந்தையை தயக்கத்துடன் வாங்கிக் கொண்டவளோ, அவனை பார்க்காமலே அறைக்குள் நுழைந்து கொள்ள, அவனும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட எத்தனித்தான்...
அறைக்குள் வந்த அக்ஷயாவோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தவள், குளியலறைக்குள் நுழைந்து முகத்தை அடித்து கழுவி விட்டு வந்து கட்டிலின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
அவள் அருகே குழந்தை படுத்து இருக்க, குழந்தைக்கு அடுத்த பக்கம் வீரராகவனுக்காக இடம் விட்டு இருந்தாள். அவன் வரும்வரை அவளுக்கு விழித்து இருக்க சங்கடமாக இருந்தது...
அதனாலேயே தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடி படுத்து இருக்க, நெடுஞ்செழியனுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தான் வீரராகவன்...
கையை கழுவி விட்டு எழுந்த வீரராகவனை பார்த்த நெடுஞ்செழியனோ, "காலைல எட்டு மணிக்கு ரெடி ஆய்டுடா" என்று சொல்ல, "ம்ம், குட் நைட் டா" என்று பதில் அழித்து விட்டு வீரராகவனும் அறைக்குள் நுழைந்தான்...
இரவு விளக்கு மட்டும் போடப்பட்டு இருக்க, குழந்தையை அணைத்துக் கொண்டே படுத்து இருந்தாள் அக்ஷயா...
அவளோ தூங்காமல் கண்களை சும்மா தான் மூடி இருந்தாள்.
அவன் உள்ளே நுழைந்ததை கதவு திறக்கும் சத்தம் கொண்டே அறிந்து கொண்டவளுக்கு கண்களை திறக்கும் அளவுக்கு தைரியம் இருக்கவே இல்லை...
அவனோ அவளை பார்த்து விட்டு கட்டிலின் மறுபுறம் படுத்தவன், "கஷ்டப்பட்டு தூங்குற போல நடிக்க தேவல..." என்று சொல்லி விட்டு அவளுக்கு முதுகு காட்டி படுக்க, அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது...
எப்படியோ தான் தூங்கவில்லை என்று கண்டு கொண்டவளோ மெதுவாக கண்களை விரித்த போது, அவளுக்கு தெரிந்தது என்னவோ அவன் பின் பக்க டீ ஷேர்ட் தான்...
இதழ்களுக்குள் தன்னையும் மீறிய மெல்லிய சிரிப்பு அவளுக்கு...
அதே புன்னகையுடன் கண்களை மூடிக் கொள்ள, "நாளைக்கு எட்டு மணிக்கு ரெடியா நிற்கணும்" என்று அவனிடம் இருந்து ஒரு கட்டளை...
இப்போதும் அவளுக்கு ஏனோ சிரிப்பு தான் வந்தது...
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே, "ஓகே" என்று சொன்னவள் தூங்கி போனாள்.
அடுத்த நாள் காலையில் அக்ஷயா கண்களை விரித்த போது வீரராகவன் ஷேர்ட்டை போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று இருந்தான்...
"நல்ல வேளை கொஞ்ச நேரம் முன்னாடி எழும்பல" என்று நினைத்துக் கொண்டே, பக்கத்தில் திரும்பி பார்க்க குழந்தை படுத்து இருந்த இடம் வெறுமையாக இருந்தது...
பதறி எழுந்து அமர்ந்தவள், "தனிஷா" என்று கண்ணாடியூடு தெரிந்த வீரராகவனின் விம்பத்தை பார்த்து கேட்க, அவனோ, அவளை கண்ணாடியூடு பார்த்துக் கொண்டே, ஷேர்ட் பட்டனை போட்டவன், "வெளிய மனோகரி ஆன்டி வச்சு இருக்காங்க, நீ குளிச்சு ரெடி ஆகு" என்றான்... அவளும், "தனிஷாவை குளிக்க வைக்க வேணாமா?" என்று கேட்க, "நான் குளிக்க வச்சுட்டேன்" என்று சொல்லிக் கொண்டே, தலையை கையினால் கோதினான்...
"அப்போ ரெடி ஆக்க வேணாமா?" என்று கேட்டுக் கொண்டே அக்ஷயா எழுந்து கொள்ள, "எல்லாமே நான் பண்ணிட்டேன்" என்று பதில் சொல்லிக் கொண்டே, அவன் ஷேர்ட் கையை முட்டி வரை மடித்துக் கொண்டே வெளியேற, அவளோ அவனை பிரமிப்பாக தான் பார்த்தாள்.
கண்களை மூடி திறந்து தலையை இரு பக்கமும் ஆட்டியவள் டவலை எடுத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள்.
திரும்பி வந்தவளும் கதவை தாழிட்டு விட்டு அவன் வாங்கி கொடுத்த புடவையை அணிந்தவள், அவன் கொடுத்து இருந்த நகைகளையும் அணிந்தாள்.
நீண்ட நாட்கள் கழித்து தன்னை அலங்கரித்துக் கொள்கின்றாள்...
இன்று அவளுக்கே அவள் அழகாக தெரிவது போன்ற உணர்வு...
வேண்டாவெறுப்பாக ஆயத்தமாகாமல் ஆசையுடன் ஆயத்தமானவளுக்கு இன்னுமே நெடுஞ்செழியன் திருமணம் செய்ய இருக்கும் பெண் யாரென்று தெரியவில்லை...
தன்னை ஒரு கணம் கண்ணாடியில் ரசனையாக பார்த்து விட்டு கதவை திறந்து கொண்டே வெளியேற, அங்கே குழந்தையுடன் அமர்ந்து இருந்த வீரராகவனோ சோஃபாவில் இருந்தவாறே அவளை ஏறிட்டு பார்த்தான்...
அவன் விழிகள் அவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய, அவளுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது... அவனில் இருந்து பார்வையை அகற்றி அங்கே இருந்த மனோகரியை பார்க்க, "ரெடி ஆயிடியாம்மா? இந்த தட்டை நீ தான் தூக்கிட்டு வரணும்" என்று நிச்சயதார்த்த தட்டை அவளிடம் நீட்ட, அவள் அதிர்ந்து போனாள்.
"நானா?" என்று அதிர்ந்து கேட்டவளை புன் சிரிப்புடன் பார்த்தவர், "சுமங்கலி தானே" என்று அவள் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமத்தை பார்த்துக் கொண்டே கேட்க, அக்ஷயாவின் விழிகளோ தன்னையும் மீறி அதற்கு உரியவனை கடைக்கண்ணால் வருடி மீள, அதனை அவனும் கவனிக்க தவறவே இல்லை...
அடுத்து நிச்சயதார்த்த தட்டை வாங்கிக் கொண்டவளோ, "இன்னும் பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லை" என்றாள்.
"கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்" என்று அங்கே இருந்த நெடுஞ்செழியன் சொல்ல, அவளும் பெருமூச்சுடன் வீரராகவனை பார்க்க, அவனோ குழந்தையுடன் எழுந்து நின்றவன், "வா" என்று சொல்லிக் கொண்டே, அவள் அருகே நடந்தான்...
மனோகரியோ, "ஊருக்கு போனதும் வீட்ல சொல்லி மூணு பேரும் சுத்தி போட்டுக்கோங்க, என் கண்ணே பட்டிடுச்சு" என்று சொல்ல, அக்ஷயா எதுவும் சொல்லாமல் தலையை குனிந்தபடி நடக்க, வீரராகவன், "ம்ம்" என்ற பதிலை மட்டும் இறுக்கமான குரலில் வழங்கினான்...
அனைவரும் காரில் ஏறிக் கொள்ள காரும் புறப்பட்டது...
நெடுஞ்செழியன் வேஷ்டி சட்டையில் கீர்த்தனாவின் வீட்டை வந்து அடைய, கையில் நிச்சய தட்டுடன் நடந்து வீரராகவனுடன் அக்ஷயா இறங்கினாள்.
அங்கே வாசலில் நின்று இருந்த கீர்த்தனாவின் குடும்பத்தை பார்த்த அக்ஷயாவுக்கோ தூக்கி வாரிப் போட்டது... சட்டென அதிர்ச்சியுடன் திரும்பி அருகே நின்ற வீரராகவனை பார்த்தவள், "கீர்த்தனா தான் பொண்ணா?" என்று விழி விரித்து கேட்க, "கண்ணை ரொம்ப விரிக்காதே" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னான் வீரராகவன்...
அவளோ, "கீர்த்தனா தான் பொண்ணா?" என்று மீண்டும் கேட்டாள்.
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே வீரராகவன் நடக்க, "என் கிட்ட அவ சொல்லவே இல்லையே" என்றாள் அவள் ஏமாற்றமான குரலில்...
உடனே அவளுக்கு மறுபக்கம் நடந்து வந்த மனோகரியோ, "அவளுக்கே இப்போ தான் தெரியும்" என்று சொல்ல, அவரை புரியாமல் பார்த்தாள் அக்ஷயா...
மனோகரியோ, "அவளுக்கே இது சர்ப்ரைஸ் தான்" என்று சிரித்தபடி சொல்ல, இப்போது தான் அக்ஷயாவின் முகம் தெளிந்தது...
எங்கே நண்பி தன்னிடம் மறைத்து விட்டாளோ என்று அவளுக்கு தோன்றிய ஏமாற்றம் மறைய, மென் புன்னகையுடனேயே வீட்டினுள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள்.
மீனாட்சியோ, "எப்படிம்மா இருக்க?" என்று சிரித்தபடி அக்ஷயாவிடம் கேட்க, "நல்லா இருக்கேன் ஆன்டி" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். அவர்களை அமர வைத்து, அவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறப்பட்டது...
அக்ஷயாவோ, சிற்றுண்டியை எடுக்காமல், "கீர்த்தனாவை பார்க்கணும்" என்று சொல்ல, வடிவேலோ, "கீர்த்தனா கிட்ட அழைச்சு போங்க" என்று அங்கே நின்ற பெண்ணிடம் கூற, அந்த பெண்ணும் அவளை கீர்த்தனாவின் அறைக்குள் அழைத்து சென்றாள்.
கீர்த்தனாவோ அலங்காரத்துடன் கண்ணாடி முன்னே அமர்ந்து இருந்தவள் உள்ளே நுழைந்த அக்ஷயாவை புன்னகையுடன் பார்த்தாள்.
"அட சொல்லவே இல்லடி, புது பொண்ணே" என்று சொல்லிக் கொண்டே கீர்த்தனாவுக்கு பின்னே வந்து நின்றவளோ, "ரொம்ப அழகா இருக்க" என்று சொல்லி கையாலேயே திருஷ்டி கழிக்க, கன்னங்கள் சிவக்க, மெல்லிய வெட்கத்துடன் சிரித்த கீர்த்தனாவோ, "எனக்கே இங்க வந்து தான்டி தெரியும்... உன் கிட்ட சொல்லலாம்னா சர்ப்ரைஸ் ஆஹ் இருக்கட்டும்னு செழியன் தான் சொன்னார்" என்றாள்.
அக்ஷயாவோ, "அத விடு, போனா போகுதுன்னு மன்னிச்சு விடுறேன்... ஆனா திடீர்னு எப்படி செட் ஆச்சுன்னு தானே தெரியல" என்று சொல்லிக் கொண்டே கீர்த்தனாவின் தலையில் இருந்த பூக்களை சரி செய்ய,
கீர்த்தனாவோ, "ஏற்கனவே கேட்டார்டி, நான் முடியாதுன்னு சொன்னேன்... அதுக்கப்புறம் சிங்கப்பூர் போய்ட்டார்... எனக்கும் போக போக பிடித்தம் வந்திச்சு... ஆனா சொல்ல தான் ஈகோ இடம் கொடுக்கல... இங்க அம்மா அப்பா கூப்பிடுறாங்கன்னு வந்து பார்த்தா நிச்சயத்துக்கு ரெடி ஆகி இருக்காங்க.... நானும் ஓகே சொல்லிட்டேன்" என்று கண்களை சிமிட்டி மனதில் இருந்ததை எல்லாம் சொன்னாள்.
பல விஷயங்கள் பெற்றோரிடம் பேசுவதை விட நண்பர்களிடம் வெளிப்படையாக பேசி விடுவார்கள் அல்லவா?
அப்படி தான் கீர்த்தனாவும் மனதில் இருந்ததை எல்லாம் அக்ஷயாவிடம் சொல்ல, "ரெண்டு பேரும் செம ஜோடி தான்டி" என்று புன்னகையுடன் பதிலளித்தாள் அக்ஷயா...
கீர்த்தனாவோ, "மேடம் மாப்பிள்ளை வீட்டு பக்கம் இருந்து வந்து இருக்கீங்க... சபைல தேட போறாங்க, கிளம்புங்க" என்று சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டே வெளியேறி சென்றாள்.
வீரராகவன் மீண்டும் தன் பக்கத்தில் அமர்வதற்காக நடந்து வந்தவளை ஏறிட்டுப் பார்த்தான்...
அவளோ அவனை கடைக்கண்ணால் பார்க்க, இருவரின் விழிகளும் ஒரு கணம் உரசிக் கொள்ள, சட்டென இருவரும் பார்வையை வெவ்வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள்...
அவளும் அவன் அருகே வந்து அமர்ந்து விட, அடுத்து கீர்த்தனா சபைக்கு அழைத்து வரப் பட்டாள்...
நெடுஞ்செழியனின் விழிகளோ அவளில் இருந்து விலகாமல் இருக்க, கீர்த்தனாவுக்கே ஒரு மாதிரி போய் விட்டது...
"என்ன இது இப்படியே பார்த்துட்டு இருக்கார்?" என்று நினைத்துக் கொண்டவளோ அவனது வேஷ்டி சட்டை அணிந்த கம்பீரமான தோற்றத்தை உள்வாங்கிக் கொண்டாள்.