ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 22

lashnivetha

New member

அத்தியாயம் 22

"ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கியா?" என்று அவன் நேரடியாக கேட்க, அவள் முகத்தில் ஒரு அதிர்ச்சி... சட்டென தன்னை நிதானப்படுத்தியவள், "எப்படி தெரியும்?" என்று கேட்டாள்.

"என் கிட்ட ஏன் சொல்லல? எல்லாத்துக்கும் மேல எதுக்கு இப்போ குடிக்கிற?" என்று கேட்க, அவளோ, "இதனால தான் குடிக்கிறேன்... எதுக்குடா என்னை ப்ரெக்னன்ட் ஆக்குன?" என்று கேட்டாள்...

அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"ஹேய் என்னடி பேசுற?" என்று அவன் அதிர, அவனை விழி விரித்து பார்த்தவள், "எனக்கு இந்த குழந்தை வேணாம்... உன்னால என் வாழ்க்கையே போச்சு" என்று சீறினாள்...

அவனுக்கு இன்னுமே புரியவில்லை...

"என்ன உளர்ற?" என்று கேட்க, "நான் ஒன்னும் உளறல, நான் எதுக்கு உன் கிட்ட வந்தேன் தெரியுமா?" என்று கேட்டாள்...

வீரராகவன் புரியாமல் பார்த்தான்...

"நான் ஒன்னும் உன்ன லவ் எல்லாம் பண்ணல... எனக்கு மனோஜ்ஜை தான் பிடிக்கும்... அவன் சொல்லி தான் உன் ஆஃபீஸ்ல சேர்ந்தேன்... ஸ்பை ஆஹ் தான் சேர்ந்தேன்... நீ என்னை பிடிக்கும்னு சொன்ன, நானும் அத மனோஜ் கிட்ட சொன்னேன்... அவன் தான் உன்னை கல்யாணம் பண்ண சொன்னான்... அதனால தான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்... உன்னோட ப்ராஜெக்ட் எல்லாம் அவன் கிட்ட போறதுக்கு நான் தான் காரணம்... நான் தான் எல்லா டேட்டாவும் திருடி கொடுத்தேன்... உன்னை பக்கத்துல நெருங்க விட கூடாதுன்னு தான் நினச்சேன்... ஆனா நீ மேன்லியா இருந்த... எனக்கும் பீலிங்க்ஸை கண்ட்ரோல் பண்ண முடியல... இப்போ பார்த்தா ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்... இப்போ நான் எப்படி மனோஜ் கிட்ட திரும்பி போவேன்?" என்று சொன்னவள் வெறி பிடித்த போல கத்த, அவளால் உண்டான துரோகத்தின் வலி வீரராகவனின் நெஞ்சில் மெதுவாக ஏறியது...

அப்படியே இருந்தபடி அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்...

அவன் வாழ்வில் வந்த காதல் என்றால் அது இவள் மட்டும் தான்...

ஜீரணிக்க முடியவில்லை அவனால்... அவளை வெறித்துப் பார்த்தான்.

அவளோ தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டே, "எனக்கு இந்த குழந்தை வேணாம், என்னை விட்ரு, எனக்கு டைவர்ஸ் வேணும்... எனக்கு மனோஜ் தான் வேணும்... அவன் பணம், புகழ் முன்னாடி நீ எல்லாம் கால் தூசு" என்று வெறுப்பை காரி உமிழ்ந்தாள்...

அவனுக்கு வலித்தது...

அதுவும் தனது குழந்தை வேண்டாம் என்று அவள் சொல்வதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை... தனது காதலை அவன் இழக்க தயாராக இருந்தாலும் குழந்தையை இழக்க தயாராக இல்லை...

"என் குழந்தையை பெத்து கொடுத்துட்டு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ, உனக்கு எவ்ளோ பணம் வேணுமோ கொடுக்கிறேன்" என்றான்...

"எவ்ளோ கொடுப்ப? உன்னை விட மனோஜ் மில்லியனர்... உன் குழந்தையை பெத்து என் பாடி ஷேப் மாறிச்சுன்னா அப்புறம் அவன் என்னை ஏத்துப்பானா?" என்று கேட்டாள்.

அருகே இருந்த நீர் பாட்டிலை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்து விடலாமா? என்று தோன்றும் அளவுக்கு கோபம் வந்தது... அடக்கிக் கொண்டான்...

சட்டென இரு கைகளாலும் அவள் கையை பற்றியவன், "ப்ளீஸ் மோனி, குழந்தையை ஒன்னும் பண்ணிடாதே" என்று எதற்கும் யாரிடமும் மண்டியிடாதவன் குழந்தைக்காக அவளிடம் மண்டியிட்டான்...

அவளோ, "இல்ல, எனக்கு மனோஜ் தான் வேணும்" என்றாள்.

அசிங்கமாக இருந்தது அவனுக்கு... கட்டிய மனைவி இப்படி பேசுவதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? குழந்தை அவள் கருவில் இருப்பதால் ஆத்திரத்தை காட்டவும் முடியவில்லை...

குரலை செருமிக் கொண்டவனோ, "என் குழந்தை எனக்கு வேணும் மோனி... ப்ளீஸ்" என்றான் கெஞ்சுதலாக.... கெஞ்சி அறியாதவன், தன்னிலை விட்டு இறங்கி காலில் விழாத குறையாக கெஞ்சினான்... விட்டால் காலில் கூட விழுந்து இருப்பான்...

மோனிஷாவோ, "இவன் நம்மள விட மாட்டான் போல... அவனுக்கு தெரியாம தான் அபார்ட் பண்ணனும்" என்று நினைத்துக் கொண்டே, "ஐ நீட் டைம்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் விறு விறுவென அறைக்குள் சென்றாள்.

கண் முன்னே துரோகம் செய்து விட்டு செல்கின்றாள்... தட்டிக் கேட்க முடியவில்லை...

குழந்தைக்காக பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவனுக்கு... தன் மீதே வெறுப்பாக இருந்தது... அன்றிரவு அறையை மோனிஷா திறக்கவே இல்லை...

அவன் தனி அறையில் படுக்க வேண்டிய கட்டாயம்...

அவனுக்கு தூக்கம் தொலைந்து போனது... துரோகம் ஒரு பக்கம், காதலின் வலி மறுபக்கம், குழந்தையை இழந்து விடுவோமோ என்கின்ற பதட்டம் இன்னொரு பக்கம்...

காலையில் அவன் எழுந்த போதும் அவள் அறைக் கதவு திறக்கப்படவில்லை... அவனாக கதவை தட்டினான்...

"தூங்க கூட முடியல" என்று திட்டினாள் உள்ளே இருந்து...

"ஆஃபீஸ் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு அவனும் வந்து விட்டான்...

மனம் படபடப்பாகவே இருந்தது... ஏதோ தவறு நடக்க போவதாக மனம் சொல்லிக் கொண்டே இருந்தது...

அன்று மாலை அவனுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் மோனிஷாவிடம் இருந்து வந்தது...

"நான் குழந்தையை அபார்ட் பண்ணிட்டேன்... மனோஜ் கிட்டயே போயிடுறேன்..." என்று அவளது ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பி இருந்தாள் மோனிஷா... நொறுங்கி விட்டான் அவன்... மனதில் இருந்து ஏதோ இறங்கி போவது போன்ற உணர்வு...

ஒட்டு மொத்த பெண்கள் மீதும் அளவு கடந்த வெறுப்பு...

அவனுக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும்... அதுவும் தன்னுடைய குழந்தை என்று சொன்னதுமே அப்படி ஒரு பற்று... அதனால் தான் அவள் அவ்வளவு பேசியும் அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் குழந்தைக்காக கெஞ்சினான்...

ஆனால் அவளோ சுயநலமாக தன்னுடைய முடிவை எடுத்து விட்டாள்.

மனைவி வேறு ஒருவனுடன் ஓடிச் சென்று விட்டாள் என்று சொல்வது எந்த பெரிய அவமானம்...

அவனுக்கு அவமானத்தை விட குழந்தையின் இறப்பு வலித்தது...

கண்களை மூடி திறந்தவன் தொலைபேசியை தூக்கி மேசையில் போட்டு விட்டு அப்படியே இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தான்...

அவன் மனதினுள் உணர்வுகளின் பிரவாகம்...

தாடி மீசைக்குள் இருந்த இறுக்கமான தாடைகள் மேலும் இறுகின...

கழுத்தின் நரம்புகள் புடைத்து கிளம்பின...

அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தான்...

ஒரு பெண்ணினால் ஒட்டு மொத்த பெண்கள் மீதும் அவனுக்கு வெறுப்பு மேலிட்டது...

எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று தெரியவில்லை...

அவன் கண் விழித்த சமயம், அவன் கன்னத்தில் கண்ணீர் கசிந்து இருந்தது...

இதுவரைக்கும் அவன் யாருக்காகவும் அழுதது இல்லை...

ஸ்ட்ராங் பெர்சனாலிட்டி தான் அவன்...

அவனையே அசைத்து விட்டது மோனிஷாவின் துரோகம்...

அதற்காக அவள் பின்னால் சென்று பழி வாங்கி தன் வாழ்க்கையை கெடுக்க அவன் யோசிக்கவில்லை...

பணத்துக்காக தானே விட்டு சென்றாள்.

பணத்துக்காக தானே தனது குழந்தையை கொன்றாள்...

அந்த பணத்தை நிறையவே சம்பாதிக்க வேண்டும் என்கின்ற வெறி தோன்றியது...

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தான்...

அவன் வலி அனைத்தையும் ஒரு துளி கண்ணீரில் கரைத்து விட்டு, அடிபட்ட சிங்கமாக எழுந்து நின்றான்...

அடுத்த கணமே தொலைபேசியை எடுத்து தனபாலனுக்கு அழைத்தவன், "நான் மோனிஷாவை டைவர்ஸ் பண்ணுறேன்" என்றான்...

அவரிடம் இருந்து ஏன் என்கின்ற கேள்வி...

"உங்க பையன் மேல தப்பு இல்ல" என்று மட்டும் ஒரு பதில் அவனிடம் இருந்து...

இதற்கு மேல் கேட்டாலும் சொல்ல மாட்டான் என்று தனபாலனுக்கு நன்கு தெரியும்... சொன்னால் அவர் தாங்க மாட்டார் என்று வீரராகவனுக்கும் தெரியும்...

கோர்ட்டை கழட்டி ஆஃபீஸின் அறைக்குள்ளேயே போட்டு விட்டு, ஷேர்ட்டின் கையினை முட்டி வரை மடித்துக் கொண்டே வெளியேறி சென்றவன், நேரே காரை எடுத்துக் கொண்டே சென்றது என்னவோ நெடுஞ்செழியனிடம் தான்...

சின்ன வயதில் இருந்து இருவரும் நண்பர்கள்... ஒன்றாக படித்தவர்கள்...

அனைத்தையும் நெடுஞ்செழியனிடம் சொல்லி விட்டால் அவனுக்கு பாரம் இறங்கிய போல இருக்கும் என்று வீரராகவனுக்கு தோன்றியது...

துரியோதனன் கர்ணன் நட்பு போல அவர்கள் நட்பு...

அவனை கண்டதுமே, "வீரா, உன் முகம் ஏன் இப்படி இருக்கு?" என்று கேட்டான் நெடுஞ்செழியன்...

"உன் கிட்ட நிறைய பேசணும் செழியா... லிக்கர் இருக்கா?" என்று கேட்டுக் கொண்டே அவன் வீட்டின் ஹாலில் அமர, அவனும் மதுபாட்டில்களையும் குவளைகளையும் எடுத்து வந்தான்...

மதுவை குவளையில் ஊற்றிக் கொண்டே, "நான் டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்" என்றான்...

நெடுஞ்செழியன் அதிர்ந்து விட்டான்...

"என்னடா சொல்ற?" என்று கேட்க, "வாழ்க்கைல தோத்துட்டேன் டா" என்று சொன்னவன் குரலில் அப்படி ஒரு வலி...

அனைத்தையும் சொன்னான்... வலியை கரைத்தான்...

நெடுஞ்செழியனுக்கு அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது...

"ஹேய் விட்டு தள்ளு, உனக்குன்னு ஒருத்தி வருவா" என்றான்...

"எந்த மண்ணாங்கட்டியும் எனக்கு வேணாம், இந்த பொண்ணுங்களையே நம்ப மாட்டேன்... எல்லாமே காசுக்காக அலையுறவங்க தான்" என்று மொத்த பெண் சமூகத்தின் மீதே வெறுப்பை வாரி இறைத்தான்...

மறுத்து பேசினாலும் பயன் இல்லை என்று நெடுஞ்செழியன் மௌனம் காத்தான்...

அடுத்த ஒரு வாரத்திலேயே விவாகரத்துக்கு விண்ணப்பித்தான் வீரராகவன்...

மோனிஷாவின் முகத்தை கூட அவன் பார்க்க விரும்பவில்லை...

அவளோ இது தான் வாய்ப்பென்று கோர்ட்டில் கோடிக்கணக்கில் பணம் கேட்டாள்...

அவனும் கொடுத்தான்...

சொத்தை விற்றுக் கொடுத்தான்... விவாகரத்தும் பெற்று இருந்தான்.

அவன் தொழில் பலத்த அடி வாங்கியது...

அவளது துரோகத்தின் முன்னே அவனுக்கு இதெல்லாம் பெரிதாக தெரியவே இல்லை...

தன் திறமை மீது நம்பிக்கை இருந்தது...

மறுபடியும் பூச்சியத்தில் இருந்து...

இம்முறை அசுரத்தனமாக உழைத்தான்...

எங்கே எல்லாம் பணம் உழைக்க வாய்ப்பிருக்கின்றதோ அங்கே எல்லாம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினான்...

குறுகிய காலத்தில் இப்படி ஒரு அசுர வளர்ச்சி யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்...

மனோஜ்ஜுக்கும் திருமணம் நடந்தது... ஆனால் வேறு யாருடனோ நடந்தது... மோனிஷா செய்த துரோகத்துக்கு கடவுளே அவளுக்கு கொடுத்த தண்டனை போலும்...

ஏற்கனவே திருமணம் செய்த மோனிஷாவை அவன் திருமணம் செய்ய தயாராக இருக்கவே இல்லை...

மோனிஷாவும் மீண்டும் வீரராகவனிடம் வரவில்லை... அவன் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டே சிங்கப்பூரை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்று விட்டாள்.

அவன் தொழிலில் மட்டுமே மும்முரமாக இருக்க, தனபாலன் அவனிடம் விந்து தானம் கேட்டு இருந்தார்... ஏற்கனவே குழந்தை இழந்த வலியில் இருந்தவனோ தன்னால் யாருக்கும் குழந்தை செல்வம் கிடைத்தால் நல்லது என்று நினைத்து தான் தானமும் கொடுத்தான்...

அது இப்போது தனிஷாவாக உருப்பெற்று இருந்தது...

மோனிஷா கொடுத்த வடுவில் இருந்து வெளியே வர உழைக்க ஆரம்பித்தவன் இப்போது தான் தனது வேகத்தை தனிஷாவுக்காக குறைத்து இருக்கின்றான்...

அவன் கதையை மொத்தமாக சொன்ன மனோகரியோ, "நான் வீரராகவனுக்கு உன் விஷயத்தில திட்டுனதால தான் செழியன் இந்த கதையை என் கிட்ட சொன்னான்... அவன் அவனது ஃப்ரெண்டுக்கு ரொம்ப விசுவாசம், இத கேட்ட அப்புறம் வீரராகவன் மேல இருந்த தப்பான அபிப்ராயம் எனக்கு மாறிடுச்சு" என்றார்...

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்த அக்ஷயாவுக்கோ மனதில் ஒரு மெல்லிய வலி... எந்த பெரிய துரோகத்தை தாங்கிக் கொண்டு இருக்கின்றான்...

அவன் முகத்தில் வலிக்கான சின்ன அடையாளம் கூட இல்லையே... தனக்கு நடந்த துரோகத்துக்கு சற்றும் குறைவானது அல்ல அவனுக்கு நடந்த துரோகம் என்று அக்ஷயாவுக்கு புரிந்தது...

பெண்கள் மீது அவன் வெறுப்பு வார்த்தைகள் ஏன் என்றும் தெரிந்தது...

எப்படி மனோகரிக்கு வீரராகவன் மீது இருந்த அபிப்ராயம் மாறியதோ அதே போல ஒரு மாற்றம் அக்ஷயாவிடமும்...

"நான் சொன்னேன்னு யார் கிட்டயும் சொல்லாதே" என்றார் மனோகரி...

"சரி ஆன்டி" என்றாள்.

அவன் அழவில்லை என்பதால் மோனிஷாவின் துரோகம் அவனுக்கு வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லையே...

வலியை தாங்க கூடிய உறுதியான உள்ளம் உடையவன் அவன்...

மோனிஷாவின் உண்மை முகம் தெரியாமல் காதலை கொட்டி கொடுத்தவன்... அந்த காதல் மீண்டும் அவனுள் அரும்புமா என்பது சந்தேகம் தான்...

அதனை தொடர்ந்து தனது தாய் தந்தையை பார்த்த கதையை மனோகரியிடம் சொன்னாள் அக்ஷயா...

அவரோ, "அவங்க கிட்ட நீ தான்மா போய் பேசணும்" என்றார்...

அவளுக்கோ கண்கள் கலங்கி போக, "அவங்களுக்கு என்ன பார்க்கவே பிடிக்கல ஆன்டி" என்று சொன்னாள்.

"அப்படி தான் இருக்கும்... நீ பண்ணுனதும் தப்பு தானே... போய் பேசு, கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க, சில உறவுகள் தொடர்பே இல்லாம போக நம்மளோட தயக்கம் தான் காரணம்..." என்று சொல்ல, அவளும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டாள்.

இதே சமயம், இரவு உணவை வாங்கிக் கொண்டே வீரராகவனும் நெடுஞ்செழியனும் வீட்டினுள் நுழைய, வீரராகவனை ஏறிட்டு பார்த்தாள் அக்ஷயா...


இதுவரை இல்லாத ஒரு கோணத்தில் அவள் பார்வை அவன் மீது படிந்தது...
Veera kathaiya ketu akshiya avanoda closa aavala 🤔
 
Top