அத்தியாயம் 21
சர்வஜித்தோ தனது அலுவலக வேலை எல்லாம் முடித்து விட்டு விடுமுறை நேரம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்...
இம்முறை ஃபெர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் தான் தனக்கும் ஆதிரையாழுக்கு போட்டு இருந்தான்...
அவளோ விமானத்தில் ஏறியதுமே, "இது என்ன இவ்ளோ நல்லா இருக்கு... வரும் போது இப்படி இல்லையே" என்றாள்.
"ஃபெர்ஸ்ட் க்ளாஸ்னா அப்படி தான்" என்றான் சர்வஜித்...
"என்ன வித்தியாசம்?" என்றாள் அவள்...
"பணம் தான் வித்தியாசம்" என்ற அவன் பதிலுக்கு, "எவ்ளோ ஆச்சு?" என்று கேட்டாள்.
"சொன்னா மலைச்சிடுவ" என்று சொல்லிக் கொண்டே, தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான் அவன்...
அவளுக்கும் களைப்பாக இருக்க அப்படியே படுத்து தூங்கி விட்டாள்.
வழக்கம் போல நீண்ட நேர பயணம்...
சாப்பிடுவது, தூங்குவது, படம் பார்ப்பது என்று நேரம் கடந்தது...
பயண முடிவில் விமானமும் இந்தியாவை வந்து அடைந்து இருந்தது...
அவளை அழைத்துக் கொண்டே, விமானத்தில் இருந்து இறங்கி தனது பெட்டிகளை எடுத்துக் கொண்டே விமான நிலையம் சென்றான்...
இம்முறையும் முத்து அவர்களை அழைத்துப் போக வந்து இருக்க, "அதே கார் ஆஹ்?" என்று கேட்டான் சர்வஜித்...
"இல்ல தம்பி... யாழ் பொண்ணு வர்றதால வேற கார்" என்று சொல்ல, "க்கும்" என்று மனதுக்குள் சுளித்துக் கொண்டே ஆதிரையாழுடன் காரில் ஏறினான்...
அவளுடன் பின்னால் தான் அமர்ந்து இருந்தான்...
அவளோ அவன் தோளில் படுத்து தூங்கியே விட்டாள்.
சற்று நேரத்தில் வீடும் வந்து சேர்ந்தது...
அவர்களுக்காக வாசலில் காத்துக் கொண்டே நின்று இருந்தார் மருதநாயகம்...
சர்வஜித்தோ காரில் இருந்து ஆதிரையாழுடன் இறங்கிக் கொள்ள, "வாம்மா வாம்மா, உன்னை பார்த்து எவ்ளோ நாள்" என்று மருதநாயகம் சொல்ல, அவரை நோக்கி வேகமாக சென்ற ஆதிரையாழோ, "ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா" என்று அவர் காலில் விழுந்து விட்டாள்.
"சந்தோஷமா இருப்பேம்மா" என்று சொல்லி அவள் தலையை வருடிவிட்டு எழ வைக்க, அழுதுக் கொண்டே எழுந்தவளோ, "உங்கள எல்லாம் பார்க்காம ரொம்ப கஷ்டமா போச்சு" என்று சொன்னாள்.
"அது தான் இன்னும் ஒரு மாசம் இங்க இருக்க போறியே" என்று சொல்லி விட்டு அங்கே ஜீன்ஸ் ஷேர்ட்டுடன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் நின்ற சர்வஜித்தைப் பார்த்தவர், "டேய்" என்று ஆரம்பிக்க, "இப்போ வேஷ்டி கட்டணும் அவ்வளவு தானே... கட்டிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, உள்ளேச் செல்ல, அவரோ, "பையன் ரொம்ப திருந்திட்டான் போல" என்று ஆதிரையாழிடம் சொல்லி சிரிக்க, அவளும் மெதுவாக புன்னகைத்துக் கொண்டாள்.
சர்வஜித்தும் அறைக்குள் சென்று குளித்து விட்டு அறைக்குள் வந்தவன், வேஷ்டி மற்றும் ஷேர்ட்டை அணிந்த கணம், ஆதிரையாழும் தலைக்கு குளித்து விட்டு தலையில் டவலைக் கட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்த சர்வஜித், ஒரு பெருமூச்சுடன் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டே தலையை துவட்ட, அவளோ அவனுக்கு பக்கவாட்டாக நின்றுக் கொண்டே தலையை துவட்டினாள்...
அவள் விழிகள் அவனை தான் ரசித்தன...
வேஷ்டி சட்டையில் அவளுக்கு பிடித்த போல கம்பீரமாக இருந்தான்...
அவனோ அவளை பார்க்காமல் கண்ணாடியில் தனது விம்பத்தை பார்த்துக் கொண்டே, "அப்படியே பார்த்துட்டு நிக்கிற? சைட் அடிக்கிறியா?" என்று கேட்க, அவளோ, "ஐயோ இல்லையே" என்றாள் அவசரமாக...
சட்டென அவளை திரும்பி இப்போது ஆழமாக பார்த்தவன், "பொய் சொல்லாதடி" என்றான் ஹஸ்கி குரலில்...
அவளோ சட்டென தலையை குனிந்துக் கொண்டவளோ, "பொய் இல்லையே" என்றாள்.
அவனோ அடுத்த கணமே, தனது கையை, புடவையூடு தெரிந்த வெற்றிடையில் வைத்து தன்னை நோக்கி இழுக்க, பெண்ணவளோ அவன் திண்ணிய மார்பில் மோதி நின்றவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவள் விழிகளோடு விழிகளை கலக்க விட்டவனோ அவள் நெற்றியை பார்த்துக் கொண்டே, "குங்குமம் வைக்கலையா?" என்று கேட்டான்...
"வைக்கணும்" என்றாள் பெண்ணவள்...
கையை அப்படியே நீட்டி, ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த குங்கும சிமிழை எடுக்க, அவள் கன்னங்களோ வெட்கத்தினால் சிவந்து போனது...
அவளை பார்த்துக் கொண்டே, குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைக்க, அவள் இதழ்களோ மெலிதாக விரிய, தலையை மேல் நோக்கி நிமிர்த்தியவள் கண்களை அப்படியே மூடிக் கொண்டாள்.
அவளையும் மீறி அவள் கண்ணில் இருந்து கண்ணீர் கசிந்தது...
அவனோ அவளை பார்த்துக் கொண்டே குங்கும சிமிழை மீண்டும் ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்தவன், அப்படியே அவள் இடையை ஒற்றைக் கையால் பிடித்து, கழுத்தை அடுத்த கையால் பிடித்து, விரிந்து இருந்த அவள் இதழ்களில் அழுந்த இதழ் பதித்தான்...
எவ்வளவு நேரம் முத்தமிட்டார்கள் என்று தெரியவில்லை...
கீழே, "இன்னுமா வரல" என்று மருதநாயகம் போட்ட சத்தத்தில் தான் நிதானத்துக்கு வந்த சர்வஜித்தோ அவளை விட்டு மெதுவாக விலகினான்...
அவள் அப்படியே மோன நிலையில் தான் நின்று இருந்தாள்.
அவளை பார்த்துக் கொண்டே, தனது கீழ் இதழ்களை கடித்தவனோ, "என்னடி, அப்படியே நிற்கிற ப்லான் ஆஹ்?" என்று கேட்க, சட்டென கண்களை விரித்துக் கொண்டவளுக்கு அவனை பார்க்கவே வெட்கமாக இருந்தது...
சட்டென்று தலையை குனிந்துக் கொண்டாள்.
அவனோ மென் புன்னகையுடன், "சீக்கிரம் வா" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, அவளோ ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே கண்ணாடி முன்னே நின்று தன்னையே பார்த்தான்...
அவள் இடையில் அவன் விரல்களில் இருந்த குங்குமம் பட்டு தடம் இருந்தது...
வெட்கப்பட்டு புன்னகைத்துக் கொண்டே, புடவையை சரி செய்து இடையை மறைத்துக் கொண்டாள்.
அவன் வைத்த குங்குமத்தையும் பார்த்தவளுக்கு, அவன் முத்தமிட்டதை நினைக்க நினைக்க, அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது...
இன்னுமே அவன் அருகாமை தேவைப்பட்டது...
இந்த காதல் விசித்திரமானது என்று நினைத்துக் கொண்டே தலையை க்ளிப் போட்டு விரித்து விட்டவள், எடுத்து வைத்து இருந்த மல்லிகை பூவையும் தலைக்கு வைத்துக் கொண்டே கீழிறங்கிச் சென்றாள்.
மருதநாயகமும் சர்வஜித்தும் அவளுக்காக காத்துக் கொண்டே அமர்ந்து இருக்க, "எனக்காக சாப்பிடாம இருக்கீங்களா தாத்தா?" என்று கேட்டுக் கொண்டே, அவளே அவர்கள் தட்டில் உணவை பரிமாறினாள்...
மருதநாயகமோ, "எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று விழி விரித்து சொன்னவருக்கு உண்மையாகவே அப்படி ஒரு பரவசம்...
அவள் சந்தோஷமாக வாழ்வதை பார்த்தவருக்கு கண்கள் கூட ஆனந்தத்தில் கலங்கி போயின...
ஆதிரையாழோ மென்மையாக புன்னகைக்க, "ஃபீல் பண்ணாம சாப்பிடுங்க தாத்தா" என்று சொல்லிக் கொண்டே சர்வஜித் சாப்பிட்டான்...
அவரும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சாப்பிட்டவர், "நீயும் சாப்பிடும்மா" என்று சொல்ல, "நீங்க சாப்பிட்டு முடிங்க" என்று ஆதிரையாழ் சொல்ல, "ஆதிரா வந்து சாப்பிடு" என்று கண்களால் தனக்கு அருகே இருந்த இருக்கையை காட்ட, அவளும் அமர்ந்து சாப்பிட்டாள்...
ஆதிரையாழுக்கும் சரி, மருதநாயகத்துக்கும் சரி, சர்வஜித்தின் மாற்றத்தினால் மனமும் வயிறும் ஒருங்கே நிறைந்தது...
"ஒரு மாசம் நிற்ப தானே சர்வா?" என்று கேட்டார் மருதநாயகம்...
"ஆமா தாத்தா, அடுத்த மாசம் தான் டிக்கெட் போட்டு இருக்கேன்" என்று சொல்ல, மருதநாயகமோ, "டேட் சொல்லு, நீ போறதுக்கு முதல் வாரம் வக்கீலை சென்னைல இருந்து வர சொல்லணும்" என்று சொல்ல, அவனும் திகதியை சொன்னான்...
அவரும், அதனை கை தொலைப்பேசியில் பதிந்து வைத்துக் கொண்டார்...
அன்று சாப்பிட்டு விட்டு பயணக் களைப்பில் ஆதிரையாழும் சர்வஜித்தும் தூங்கிப் போனார்கள்...
அடுத்த நாள் காலை முதல் நாட்கள் சந்தோஷமாக நகர தொடங்கின...
வழக்கமாக சர்வஜித்தை வைத்து செய்யும் மருதநாயகம் அவனுக்கு ஒன்றுமே கஷ்டம் கொடுக்கவில்லை...
அவனும் அனுசரணையாக நடந்தான்...
மதியம் போல, "ரெண்டு பேரும் தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு வர்றது" என்றார் மருதநாயகம்...
ஆதிரையாழும், "சரி தாத்தா" என்று சொல்லிக் கொண்டே சர்வஜித்தைப் பார்க்க, அவனோ, "ம்ம் வா" என்று சொல்லிக் கொண்டே நடந்தான்...
இருவரும் கைகளை கோர்க்கவில்லை என்றாலும் நெருங்கி நடந்தார்கள்...
ஆதிரையாழோ அவனை கடைக்கண்ணால் பார்த்தாள்...
'இவருக்கு எல்லா உடுப்பும் பொருத்தமா இருக்கு' என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை...
ஜீன்ஸ் ஷேர்ட் கோட்டில் இருக்கும் அதே கம்பீரம் வேஷ்டி சட்டையிலும் இருந்தது...
சட்டையை முட்டி வரை மடித்துக் கொண்டே, அவன் நடக்கும் போது அவளால் அவனை ரசிக்காமல் இருக்க முடியவே இல்லை...
தாடி மீசை வைத்து இருந்தான்...
அந்த மீசையை முறுக்கி விட்டால் வேஷ்டி சட்டைக்கு இன்னும் எடுப்பாக இருக்கும் என்று தோன்றியது...
ஆனால் அதற்கு அவளுக்கு தைரியம் இருக்கவே இல்லை...
அப்படியே தோப்பை சுற்றி பார்த்துக் கொண்டே இருக்க, அவளுக்கு மாமரம் தென்பட்டது...
சட்டென அவளுக்கு அவன் வேஷ்டி அவிழ்ந்த நினைவு வர, சட்டென சிரித்து விட்டாள்.
அதுவரை அவளை பார்க்காத சர்வஜித்தோ சட்டென அவளை திரும்பிப் பார்த்து, "என்னாச்சு?" என்று கேட்டான்.
"ஒன்னும் இல்ல" என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டே...
"சொல்லுடி" என்றான் அதட்டலாக...
அவளோ எப்படி சொல்வது என்று தெரியாமல் நிற்க, அவளை இன்னும் நெருங்கி தோள்களுடன் உரசி நின்றவன் சற்று குனிந்து, "இப்போ சொல்ல போறியா இல்லையா?" என்று கேட்டான்...
அவளோ, "நிஜமாவே ஒன்னும் இல்ல" என்று சொல்ல, அவனோ சுற்றி பார்த்தான்.
அங்கே வேலையாட்கள் வேலை செய்துக் கொண்டு நின்று இருந்தார்கள்...
கண்களை சுழல விட்ட பின்னர் அவளை பார்த்தவன், "இப்போ நீ சொல்லலைனா அமெரிக்காவுல பப்ளிக்ல கிஸ் அடிச்ச போல இப்போ அடிச்சிடுவேன்" என்று சொல்ல, பெண்ணவளோ அதிர்ந்து வாயில் கையை வைக்க, "கண்டிப்பா பண்ணுவேன்... நான் பண்ணுவேன்னு உனக்கும் தெரியும்" என்று சொன்னவன் விழிகள் அவளை மோகமாக தீண்ட, பதறிய பெண்ணவளோ, "ஐயோ அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க, நான் சொல்லிடுறேன்" என்றாள்.
"ம்ம்... சொல்லுடி" என்றான் அவன்...
"போன முறை உங்க வேஷ்டி அவிழ்ந்தது நினைவு வந்திடுச்சு" என்று சொன்னவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போக சட்டென்று தலையை குனிந்துக் கொண்டாள்.
"எத எல்லாம் நினைவு வச்சு இருக்கா பாரு" என்று சொல்லிக் கொண்டே, அவன் அங்கிருந்து வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நகர, அவன் முதுகை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தாள் பெண்ணவள்...
அவனோ மாமரம் அருகே சென்று அண்ணார்ந்து பார்த்தான்...
கொத்து கொத்தாக மாமரம் காய்த்து நின்றது...
அப்படியே அவளை திரும்பி பார்த்தவன், "மாங்காய் வேணுமா?" என்று கேட்க, அவளோ, "ம்ம்" என்றாள் அவனையே பார்த்துக் கொண்டு...
அவனோ, "அப்படியே நின்னா என்ன அர்த்தம்... வேணும்னா நீ தான் வந்து பறிக்கணும்" என்றான்...
அவளோ, "பக்கத்தில தானே இருக்கு... உங்களுக்கு எட்டும்ல" என்று சொல்ல, "அதெல்லாம் முடியாது நீ வா" என்றான்...
அவளும் அவன் அருகே சென்றாள்.
"உன்னை தூக்குறேன், நீ பறிச்சுக்கோ" என்றான்...
அவள் விழிகளோ அவன் வேஷ்டியில் படிய, "இன்னைக்கு விழாது... இறுக்கமா கட்டி இருக்கேன்" என்றான்...
அவளும், "ம்ம்" என்று மெல்லிய புன்னகையுடன் சொல்ல, அவளை தொடையில் அணைத்து தூக்கிக் கொண்டான்...
அவளோ கையை நீட்டி, மாங்காயை பறித்துக் கொண்டதில், அவள் புடவை விலகியது...
அவளது வெண்ணிற வயிறு அவனது முகத்துக்கு நேரே அப்பட்டமாக தெரிந்தது...
பெருமூச்சு விட்டுக் கொண்டான்...
அவனுக்கும் உணர்வுகளை எவ்வளவு நேரம் தான் அடக்க முடியும்...
இதனை எல்லாம் அறியாமல் மாங்காய் பறித்துக் கொண்டே இருந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
ஆம் அவன் தாடி மீசை அவள் வயிற்றில் உரச, சட்டென்று அவனை குனிந்து பார்த்தாள்.
அவனோ அவளை ஏறிட்டு மோகமாக பார்த்துக் கொண்டே, அவள் வயிற்றில் இதழ்களை பதிக்க, பதறி விட்டாள் பெண்ணவள்...
சுற்றி எத்தனை பேர் வேலை செய்துக் கொண்டு இருக்கின்றார்கள்...
ஆனால் சர்வஜித்தோ காரியத்தில் கண்ணாக இருக்கின்றான்...
"ஐயோ" என்று சொல்லிக் கொண்டே மாங்காய்களை கீழே போட்டவள், அவனது சிகையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டே, தன்னில் இருந்து விலக்க போராடியபடி, "எல்லாரும் பார்க்க போறாங்க" என்றாள் சிணுங்கலாக...
அவனும் சட்டென விலகி, அவளை பார்த்துக் கொண்டே, அவளை கீழே இறக்கியவன், "எப்போ நைட் வரும்னு இருக்கு" என்று அவளை பார்த்து ஒரு மார்க்கமாக சொல்லி விட்டு விறு விறுவென செல்ல, அவளுக்கோ கன்னங்கள் சிவந்து போயின...
இதழில் வெட்க புன்னகை... அதே புன்னகையுடன் கீழே கிடந்த மாங்காய்களை எடுத்துக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.