ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 20

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 20

இரண்டு மாதங்கள் கழித்து சித்ரா மற்றும் மலர் முன்னால் ஒரு பஞ்சாயத்து கூடி இருந்தது. கிருஷ்ணாவோ பயத்தில் வெல வெலத்து போய் நிற்க கயலோ அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். விஷ்வாவுக்கும் கிருஷ்ணா மேல் கடும் ஆத்திரம் வந்தது. வீட்டில் மகாலிங்கம் இல்லாதது அனைவர்க்கும் அப்போது நிம்மதியாக இருந்தது.

ஸ்விம்மிங் வகுப்பு முடித்து வந்த சாணக்கியன் அனைவரும் ஹாலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தான். "என்னடா இதெல்லாம்?" என்று மலர் உறும கிருஷ்ணா கண்ணில் இருந்து கண்ணீர் பொல பொல என வழிந்தது.

"இவன் வேற எதுக்கெடுத்தாலும் அழுதுட்டு" என்று சலித்தவன் கிருஷ்ணாவை நெருங்கி ரகசியமாக, "டேய், உன்ன நான் ஜஸ்ட் 2 ஹௌர்ஸ் தானேடா உன்னை விட்டிட்டு போனேன். அதுக்கிடைல என்னடா பண்ணி வச்சு இருக்க? எல்லாரும் உன்ன ஆளாளுக்கு முறைக்கிறாங்க?" என்று கேட்க. அவனுக்கு கண்ணீரை தவிர வாயில் எதுவும் வரவில்லை.

மலர் சாணக்கியனை அழைத்து கையிலிருந்த கடிதத்தை கொடுக்க அவனும் விரித்து படித்தான்.

அன்புள்ள கயல் குட்டிக்கு,

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ? நான் பெரியவனானதும் உன்னை நல்லா வச்சு இருப்பேன். உனக்கு பிடிச்ச பூந்தி லட்டு வாங்கி தருவேன். ஐ லவ் யு...

இப்படிக்கு

கிருஷ்ணா

சாணக்கியன் இதை வாசித்ததும், "பூந்தி லட்டா ?" என்றபடி முகத்தை சுளித்தவன், "என்னடா இதெல்லாம்?" என்று அவனை பார்த்து கேட்க அவன் கண்ணில் இருந்து பயத்தில் கண்ணீர் வழிந்தது. அதை பார்த்து பரிதாபப்பட்டவன், "செய்றதெல்லாம் செய்திட்டு இப்போ அழுறத பாரு...சரி சரி அழாதே..." என்று அவன் தோளில் தட்டினான்.

மலர் கோபத்தில் கண்கள் சிவக்க, "முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள காதலா?" என்றவள், "கயல் அந்த பிரம்பை எடு." என்றார்.

சற்று நேரம் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்த கயலிடம் வந்த கிருஷ்ணா "கயல்" என்றபடி கடிதத்தை வெட்கத்துடன் நீட்ட அவனை விசித்திரமாக பார்த்தவள் கடிதத்தை பிரித்து படித்து விட்டு கண நேரம் தாமதிக்காமல் "அம்மா" என்றபடி உள்ளே ஓட அதிர்ந்த கிருஷ்ணா பின்னால் உடம்பை தூக்க முடியாமல் தூக்கி ஓட அவளோ கண நேரத்தில் மலர் மற்றும் சித்ரா முன்னால் நின்று கடிதத்தை நீட்டினாள்.

அதை பிரித்து பார்த்த மலர் கண்களில் சிவப்பேற, "கிருஷ்ணா" என்று கத்த அவனும் பயந்து ஒடுங்கி அவர் முன் நின்றான். அந்த சத்தத்தில் வந்த விஷ்வாவும் கயல் மூலம் விபரமறிந்து அந்த வயசிலேயே பொறுப்புள்ள அண்ணனாக சினந்து நின்றான்.

பிரம்பை எடுத்து வர சொல்ல சாணக்கியனை பார்த்தவள் அவனின் அனல் பறக்கும் விழிகளை சட்டை செய்யாது பிரம்பை எடுக்க சந்தோஷமாக ஓடிச் சென்றாள். அதில் கோபமேறிய சாணக்கியன் குரலை உயர்த்தி, "இப்போ அவன் என்ன பண்ணிட்டான்னு ஆளாளுக்கு முறைக்கிறீங்க?" என்று நண்பனுக்காக வாதாடினான்.

அவன் கூற்றில் அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவனோ நெஞ்சை நிமிர்த்தி நண்பன் தோளில் கை போட்டு, "ஊருல இல்லாததையா பண்ணிட்டான். டீசென்ட் ஆஹ் காதலை சொல்லி இருக்கான். விடுங்க டீச்சர் அவன் பாவம்." என்றவன் பிரம்புடன் வந்த கயலை காட்டி, "இத விட நல்ல பொண்ணு உனக்கு கிடைக்கும்டா" என்றான்.

மகனின் சாமர்த்தியமான பேச்சில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியபடி சித்ரா இருந்தார். மலரோ, "இப்போ இவனுக்கு அடி கொடுக்காட்டி வளர்ந்தும் வேற பொண்ணுங்க கிட்ட லெட்டர் கொடுப்பான்." என்றார். கிருஷ்ணாவோ அழுதுக் கொண்டே, "இல்லம்மா நான் வளர்ந்தும் கயலை தான்மா கல்யாணம் பண்ணுவேன்... வேற பொண்ண கல்யாணம் பண்ண மாட்டேன்" என்றவனை பார்த்தவர் தனது மகனின் வெகுளித் தனத்தை எண்ணி எங்கயாச்சும் முட்டிக்கலாமா என்று யோசித்தார்.

சாணக்கியனை போல வீராப்பாக பேசினால் அடிக்கலாம் விம்மி விம்மி அழுபவனை அடிக்க அவருக்கும் மனசு கேட்கவில்லை.

ஆனால் கயலோ, "எனக்கு இந்த தடியன் வேணாம்" என்று சொல்ல சாணக்கியன், "என்னடி சொன்ன?" என்று உறுமினான். உடனே பயந்தவள் சித்ரா மடியில் ஓடி போய் அமர்ந்துக் கொண்டாள். பெருமூச்செடுத்த சித்ரா, "விடு மலர் இப்போவே இப்படி அழுறான். நான் சமாளிக்கிறேன்" என்றவர் கயலை தூக்கி சோபாவில் உட்கார வைத்து விட்டு கிருஷ்ணா அருகில் சென்று அவன் கண்ணீரை துடைத்தவர், "கிருஷ்ணா நீ நல்லா படிச்சு டாக்டர் ஆகணும். அதுக்கு பிறகு இந்த காதல் எல்லாம் பண்ணலாம். இப்போ இத பத்தி யோசிக்காம படிக்கணும். சரியா?" என்று கேட்க அவனோ, "கயல் வேற யாரையும் கல்யாணம் பண்ணினா நான் என்ன பண்றது?" என்று கேட்டான்.

அவனின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்கியவர், "அப்படி எல்லாம் பண்ண மாட்டா...நீ படிச்சு முடிக்கும் மட்டும் கயலோட பேச கூடாது சத்தியம் பண்ணு" என்றவரிடம், "சரி ஆன்ட்டி படிச்சு முடிக்கும் வரைக்கும் இனி பேசமாட்டேன்" என்று சத்தியம் பண்ணினான். சித்ரா ஒரு தாயாகவும் மலரின் நண்பியாகவும் அந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக தீர்வு சொன்னார்.

சாணக்கியனுக்கோ நண்பன் அடிவாங்காதது திருப்தியாக இருக்க அவனை அழைத்துக் கொண்டு விளையாட வெளியேச் சென்று விட்டான்.

இப்படியே நாட்கள் உருண்டோட ஒரு நாள் ஊரிலுள்ள மலை கோவிலுக்கு செல்லும் பொருட்டு சித்ரா குடும்பம் கிளம்ப வேண்டி இருந்தது. மகாலிங்கம் வேலை என்று நின்றுவிட கிருஷ்ணாவும் எட்டு மாத கர்ப்பிணியான மலரை விட்டுச் செல்ல முடியாமல் இருக்க இருவரும் தங்கள் வீட்டிலேயே தங்கி விட்டனர்.

ஒரு கிழமை செல்வதாக முடிவெடுத்து இருந்ததால் சாணக்கியனும் கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் தவித்தனர்.

"டேய் ஒரு கிழமை தான் டா... ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா போறீங்க" என்று விளையாட்டாக திட்டிய சித்ரா தனது பிள்ளைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு ஜீப்பில் ஏறினார்.

அப்போது அவருக்கு தெரியவில்லை அது மலருடனான அவர்களின் கடைசி சந்திப்பு என்று.

மகாலிங்கத்தின் கண்களோ அவர்களை வழியனுப்ப வந்த மலரில் கர்ப்பிணி என்ற உணர்வு கூட இல்லாமல் நன்றாக மேய்ந்தது.

அவர்கள் சென்றதும் மலரும் மகாலிங்கத்திடம் சொல்லி விட்டு கிளம்ப அன்று முழுதும் மலரின் நினைவால் தூக்கமில்லாமல் தவித்தார். அந்த காம கொடூரனுக்கு கர்ப்பிணி என்று எண்ணம் கொஞ்சம் கூட வரவில்லை.

இரவு பத்து மணி ஆனதும் தனது இரு அடியாட்களை அழைத்துக் கொண்டு மலர் வீட்டுக்குச் சென்றவர் அடியாட்களை வெளியில் இருத்தி விட்டு கதவை தட்டினார்.

தூங்கிக் கொண்டிருந்த மலர் கதவை திறக்க அங்கு மகாலிங்கம் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், "என்ன சார் இந்த நேரத்துல?" என்று கேட்க, "கொஞ்சம் பேசணும்" என்றபடி அவரை தாண்டி உள்ளே நுழைந்து விட்டார்.

இரவு நேரத்தில் ஒரு ஆடவன் வீட்டுக்குள் வந்தது நெருடலாக இருக்க என்ன சொல்வது என்று தெரியாமல் சங்கடத்துடன் நின்றார். மகாலிங்கமோ மலரை காம கண்களுடன் நோக்கி, "கிருஷ்ணா தூக்கமா?" என்று கேட்க அவரும் ஆம் என்று தலை ஆட்டினார்.

பெருமூச்செடுத்தவர், "எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. நீயும் புருஷன் இல்லாம தனியா இருக்க... உனக்கும் பல ஆசைகள் கனவுகள் இருக்கும். மூணு புள்ள பெத்த பிறகு சித்ராவோட அழகே குறைஞ்சிடுச்சு. ஆனால் நீ இன்னும் அழகா தான் இருக்க... நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்னு நினைக்கிறன்" என்று நாராசமாக பேசியவரை பார்த்து அதிர்ந்த மலர்,அனல் பறக்க அவரை பார்த்து, "சீ தூ... வெளிய போடா நாயே..." என்று திட்ட கோபத்தில் அகங்காரமாக எழுந்த மகாலிங்கம் மலரை நெருங்கி, "நானா டி நாய்?" என்றபடி அவரை அணைக்க போக தன் பலம் கொண்ட மட்டும் தள்ளியவர் மகாலிங்கத்தை அறைந்திருந்தார்.

அதுக்கும் சளைக்காத மகாலிங்கம் கர்ப்பிணி ஆன அவரை இழுத்து கீழே தள்ள அவர் வயிற்றின் இடை பாகம் அடிபட்டு துடி துடித்து போனார். வலியால் கத்தியவரையும் பொருட்படுத்தாது மலர் மேல் விழுந்து பலாத்காரம் பண்ண முயற்சி செய்த நேரம் சத்தத்தில் எழுந்த கிருஷ்ணா ஹாலுக்குள் ஓடி வந்தான்.

தாயின் நிலை கண்டு துடித்தவன், "அம்மாவை விடு" என்று கதறி மகாலிங்கத்தை பின்னால் இருந்து இழுக்க அது அவனால் முடியாமல் போனது உடனே பக்கத்தில் இருந்த பூவாசை எடுத்து மகாலிங்கத்தின் தலையில் ஒரே போடு போட்டான்.

அவன் அடித்ததில் வலியில் துடித்தவர், "டேய்" என்றபடி அவனை துரத்திச் செல்ல அவனும் வெளியில் ஓடினான். அங்கிருந்த அடியாட்களிடம், "அவனை புடிங்கடா" என்றபடி உள்ளே வந்தவர் அரை உயிரில் இருந்த மலர் மேல் படர அந்த கர்ப்பிணி பெண் அடிபட்டதால் உருவான ரத்த போக்கினாலும் மகாலிங்கத்தின் மிருக தனமான செயலாலும் அவ்விடத்திலேயே உயிர் விட்டிருந்தாள்.

அப்போது அவள் வயிற்றிலிருந்த எட்டு மாத கரு இந்த உலகத்தை பார்க்காமலே கருவிலேயே அஸ்தமித்து விட்டிருந்தது.

மலர் இறந்ததால் தனது ஆசையும் முழுதாக நிறைவேறாமல் போன கவலையுடன் வெளியே வந்தவர் அடியாட்களிடம் இல்லை என்று தலை ஆட்டினார்.

உடனே அதிர்ந்த கிருஷ்ணா அடியாட்களை தள்ளி விட்டு உள்ளே ஓடிச் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த மலரிடம், "அம்மா எழுந்திருங்கம்மா எழுந்திருங்க" என்று தனக்கென இருக்கும் ஒரே சொந்தத்துக்காக சத்தமாக அழ அந்த நெஞ்சை உருக்கும் காட்சி வருண பகவானுக்கும் கண்ணீரை வரவழைத்து இருந்தது. கிருஷ்ணா உயிரோடு இருந்தால் தான் மாட்டிக் கொண்டு விடுவோம் என்று பயந்த மகாலிங்கம் அவன் பின்னால் சத்தமில்லாமல் வந்து அழுதுக் கொண்டிருந்தவன் தலையில் பலமாக பூவாசால் அடிக்க அவனோ சுயநினைவில்லாமல் சரிந்தான்.

அடியாட்களிடம் இருவரையும் புதைத்து விடுமாறு கூறியவர் அங்கு எந்த சான்றும் இல்லாமல் வீட்டை சுத்தப்படுத்துமாறும் கூறி விட்டு தனது இல்லத்துக்கு போய் விட்டார்.

வீட்டை சுத்தப் படுத்தியவர்கள் கிருஷ்ணா இறந்து விட்டதாக நினைத்து அவனை மேலும் தாக்காமல் இரு உடல்களையும் எடுத்துக் கொண்டு மிக தொலைவில் இருக்கும் மகாலிங்கத்துக்குரிய கெஸ்ட் ஹவுஸ் நோக்கிச் சென்று அங்கு அவர்களை புதைப்பதற்காக புறப்பட்டனர்.

அங்குச் சென்றவர்கள் வாசலில் ஜீப்பை பார்க் பண்ணி விட்டு உள்ளேச் சென்று குழியை வெட்ட தொடங்க மயக்கத்தில் இருந்த கிருஷ்ணா ஜீப்பின் பாதி திறந்த கண்ணாடியால் தெறித்த மழை துளி பட்டு எழுந்தவன், உடைத்துக் கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு பக்கத்தில் கிடந்த இறந்த தனது தாயின் நெற்றியில் முத்தமிட்டு, "உங்க மேல சத்தியமா அவனுக்கு என் கையால் தான் சாவு." என்று அவர் தலையில் கை வைத்து விட்டு எழுந்தவன் பதுங்கியபடி உள்ளிருந்து பார்த்தான்.

அடியாட்கள் குழி வெட்டுவதில் மும்முரமாய் இருக்க சத்தம் இல்லாமல் இறங்கியவன் எந்த இடம் என்று தெரியாமல் மழைக்குள் கால் போன போக்கில் ஓட தொடங்கினான். மழை சத்தத்தில் அடியாட்களுக்கும் அவன் அசைவுகள் விளங்கவில்லை.

நீண்ட நேரம் ஓடியவன் களைப்பினால் ஒரு இடத்தில மயங்கி சரிய அவனின் அதிஷ்டமோ இல்லை மகாலிங்கத்தின் துரதிஷ்டமோ அவ்வழியால் வந்த அந்த சர்ச் பாதிரியாரின் கண்களில் அவன் பட்டான்.

அனாதை சிறுவர்களை வைத்து ஆசிரமம் நடத்தும் அவர் விழுந்து கிடந்தவனை பார்த்து தனது உதவியாளர்கள் உதவியுடன் காரில் ஏற்றியவர் தனது இருப்பிடத்தை அடைந்தார்.

குழி வெட்டிய அடியாட்கள் அங்கு மலரின் உடல் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கிருஷ்ணாவை உள்ள இடமெல்லாம் தேட தொடங்கினர்.

சில மணி நேரம் தேடி களைத்தவர்கள் மலரை மட்டும் புதைத்து விட்டு, "எங்கடா போய் தொலைஞ்சான்?" என்று சலிக்க அந்நேரம் மகாலிங்கம் அவர்களுக்கு போனில் அழைத்திருந்தார்.

"என்னடா எல்லாம் ஓகே தானே? ஒரு பிரச்சனையும் இல்லையே?" என்று அவர் கேட்க உண்மையை சொன்னால் மகாலிங்கம் தங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார் என்ற பயத்தில், "எல்லாம் சரி ஐயா... ரெண்டு பேரையும் புதைச்சுட்டோம்" என்றனர். அவர்கள் வார்த்தையில் நிம்மதி அடைந்த மகாலிங்கம் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இன்றி தூங்க தொடங்கினார்.

மயக்கத்தில் இருந்து எழுந்த கிருஷ்ணா தன்னை காப்பாற்றிய பாதிரியாரை பார்த்து, "எங்கம்மா..." என்றவன் மேலும் எதுவும் சொல்ல முடியாமல் விம்ம அவனை அணைத்த பாதிரியார், "டோன்ட் ஒர்ரி மை சைல்ட்" என்றபடி அவனின் கதையை கேட்டார். பாதிரியார் அவருக்கே அவனின் கதையை கேட்டதும் மகாலிங்கம் மேல் நரம்புகள் புடைக்க கோபம் வந்தது.

ஆனால் மகாலிங்கத்துக்கு எதிராக ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று அறிந்தவர், "கிருஷ்ணா... உன் அடையாளத்தை முழுமையாக அழிச்சுடு... அவனை நீ நெருங்கணும்னா உன்னை நீ உயர்த்தி ஆகணும்.அதுக்கு நீ நல்லா படிக்கணும். நான் உன்னை படிக்க வைக்கிறேன் இன்னைல இருந்து உன் பெயர் தொடக்கம் எல்லாம் மாத்திக்கோ... நீ உயிரோட இருக்கிறது தெரிஞ்சா உன்னையும் அவன் உயிரோட விடமாட்டான்." என்று அவனை அழகாக செதுக்க தொடங்கினார்.

அதுவரை வெகுளியாக இருந்தவன் கண்களில் அப்போது வெறியைக் கண்டு கொண்ட பாதிரியாருக்கு திருப்தியாக இருந்தது.

அவர் ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் நெஞ்சில் உரமேற்ற, "பாதர், இனி என் பேர் கெளதம், அதாவது கெளதம் கிருஷ்ணா..." என்றான். அன்னை வைத்த பெயரை தன்னிலிருந்து அகற்ற விருப்பம் இல்லாமல். கெளதம் கிருஷ்ணா என்ற பெயரிலேயே தனது எல்லா கல்வி நடவடிக்கைகளையும் தொடர முற்பட்டவன், கெளதம் என்ற பெயரையே மற்றவர்கள் தன்னை அழைக்குமாறு பார்த்துக் கொண்டான். கிருஷ்ணா என்ற அழைப்பு அவனை பலவீனப் படுத்துவதை அவனே உணர்ந்தான்.

அதே சமயம் மலை கோவிலில் இருந்து ஒரு கிழமை கழித்து வந்தவர்கள் மலரையும் கிருஷ்ணாவையும் காணாமல் தவித்து போனார்கள். அவர்களிடத்தில் மலர் வேலையை ராஜினாமா பண்ணி விட்டு மகனையும் கூட்டிக் கொண்டு போகுமிடம் சொல்லாமல் போய் விட்டதாக கூறிய மகாலிங்கம் தனது பண பலத்தை வைத்து அதை உண்மை ஆக்கி இருந்தார்.

கணவனை முழுதாக நம்பும் சித்ராவால், "இந்த நிலமைல எங்க போயிருப்பா ?" என்று அழுது புலம்ப மட்டுமே முடிந்தது. சாணக்கியனுக்கோ கிருஷ்ணா மேல் ஆத்திரமாக வந்தது. "என்ன மறந்திட்டு எங்கடா போன?" என்று அழுதவன் சாப்பாடு தூக்கம் இல்லாமல் நாட்களை கடத்த அதில் மேலும் கவலை கொண்ட சித்ரா அவனை பழைய நிலைக்கு கொண்டு வர அவருக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.

அதுவரை பூவாக இருந்த கிருஷ்ணா, கெளதம் என்கிற புயலாக மாறினான். டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை புதைத்தவன் மகாலிங்கத்தை பழி வாங்கவே போலீஸ் ஆக முடிவெடுத்து படிப்பிலும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த தொடங்கினான். செத்து பிழைத்தவனுக்கு பயம் என்பது மனதில் முற்றாக அகன்றிருந்தது. சிரிப்பை மறந்தவன் கோபத்தையும் கடினத்தையும் ஏந்திக் கொண்டான்.

தன்னை எதிர்த்தவர்களை துவம்சம் செய்து ஒரு வீரனாக வளர்ந்து நின்றான். சுண்டினால் ரத்தம் வரும் சிவந்த நிறத்துடனும் மொசு மொசு கன்னங்கள் உடன் இருந்தவன் கடினமான தாடைகள் தாடி மீசை என நிறம் சற்று மங்கி அடையாளம் கண்டு பிடிக்க முடியாதளவுக்கு கெளதம் கிருஷ்ணா என்ற பெயரில் வளர்ந்து நின்றான்.

அவனுக்கு சளைக்காத ஆளுமையுடன் சாணக்கியன் வளர்ந்தான்.

ஒரு நாள் ஒரு குழந்தையை பலாத்காரம் பண்ணிய கேஸில் ஒருவனை பிடித்து உள்ளே போட்டு அவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த சாணக்கியன் முயற்சி செய்ய, அந்த கொடூரனோ பண பலத்தாலும் செல்வ பலத்தாலும் வெளியே வந்தவன் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நாசமாக்கி இருந்தான். பொறுத்துக் கொள்ள முடியாத சாணக்கியன் அவனை தங்கள் ஆட்களிடம் சொல்லி கடத்தி வந்த நேரம் அவன் அடித்த அடியில் அந்த காம கொடூரன் உயிர் விட்டிருந்தான். முதல் கொலை என்பதால் பயந்தாலும் அதை தன் ஆட்கள் உதவியுடன் மறைத்தான்.

அப்போது அவன் இறந்த செய்தி கேட்டு பலர் சந்தோஷப்பட்டு "இவனை கொன்னவன் நல்லா இருக்கணும் சாமி" என்றெல்லாம் வேண்டுதல் வைத்தனர். அப்போது தான் ஒருத்தன் இறப்பில் சந்தோஷப்படும் மக்களின் மனதை உணர்ந்தவனாக தப்பு செய்பவனுக்கு தன் பாணியில் தண்டனை கொடுக்க தொடங்கி இருந்தான்.

கௌதமோ எப்படியாவது மகாலிங்கத்தை குடும்பத்துடன் நாசமாக்க தனது திட்டத்தை போட்டான். கயலை கர்ப்பமாக்கி நடு தெருவில் விட்டு விஷ்வாவையும் சாணக்கியனையும் கொலை பண்ணி அவரை உயிருடன் வதைத்து கொலை பண்ண வேண்டும் என்று குரூரமாக திட்டமிட்டவனுக்கு தெரியவில்லை தன் அன்பு கொண்ட மனதால் சாணக்கியன், விஷ்வா, கயல் மூவருக்கும் கொடுமை இழைக்க முடியாது என்ற உண்மை...

காத்தமுத்துவாக மகாலிங்கம் வீட்டுக்குள் நுழைந்த போது கயலின் அன்பில் அவளை நாசமாக்கும் முதல் திட்டத்தை கை விட்டவன் மனதில் சிறு வயதிலேயே புதைக்கப்பட்ட அவன் காதல் வெளி வந்திருந்தது.

தாலி கட்டிய மனைவியானாலும் தன் காதலை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான். அதுவரை காத்தமுத்துவை பற்றி விசாரிக்காத சாணக்கியன் அவன் பெல்டினால் அடி வாங்கி இருந்த சமயம் அவனை அணைத்துக் கொண்டு நடந்த போது அவனின் தோள் புஜத்தின் பலத்தை தொடுகை மூலம் அறிய அவனில் சந்தேகம் முதன் முதலாக சாணக்கியனுக்கு வேர் விட தொடங்கியது.

உடனே தனது ஆட்களை கொண்டு அவனை ஆராய்ந்ததில் அவன் சி ஐ டி பிரான்ச் S P என்று மட்டுமே அறிந்துக் கொண்டான். ஆனால் சாணக்கியனுக்கோ கெளதம் முகத்திலும் நடவடிக்கையிலும் ஏதோ பரீட்சையம் தோன்ற அவனுடன் நெருங்கி பழக தொடங்கினான்.

ஒரு நாள் அவன் சிரிப்பை பார்த்த சாணக்கியனுக்கு கிருஷ்ணா நினைவு கண நேரத்தில் வந்து போக அவனை நன்கு அவதானிக்க தொடங்கினான். மீசை தாடி வளர்ந்திருந்ததால் எதையும் அவதானிக்க முடியாமல் திணறியவனுக்கு அவன் கிருஷ்ணா தான் என்று உள் மனம் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

அவன் நினைத்திருந்தால் கௌதமை அப்போதே கண்டு பிடித்து கொலை பண்ணி இருக்கலாம். ஆனால் கெளதம் தான் கிருஷ்ணா என்ற எண்ணம் மனதில் வேரூன்ற அவனால் கௌதமை காக்க மட்டுமே அவனால் முடிந்தது அழிக்க அல்ல.

இவ்வாறே கெளதம் சாணக்கியனை கைது செய்துக் கொண்டு போகும் போது, கொஞ்ச தூரம் சென்றதும் தனது வாகனத்தில் சாணக்கியனை ஏற்றியவன் தானே டிரைவ் பண்ணி சென்று யாருமில்லாத ஒரு இடத்துக்கு அவனை கொலை பண்ணும் பொருட்டு கொண்டுச் சென்றான். அப்படித்தான் அவன் நினைத்தான் ஒழிய மனதால் சாணக்கியனை கொல்வது சாத்தியமில்லை என்று அறிந்தவன் மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டான்.

அவனை தன்னுடைய ரகசிய இடத்தில் விட்டவன் அலுவலகத்தில் தான் இருக்க வேண்டி இருப்பதால் மாலை வரை அலுவலகத்தில் இருந்து விட்டு கயல் கேட்டும் சாணக்கியனை விட மாட்டேன் என்று சொன்னவன் பென் டிரைவை எடுத்துக் கொண்டு தனது ரகசிய இடத்துக்கு புறப்பட்டான்.

அங்குச் சென்றதும் சாணக்கியன் முன்னால் லாப்டாப்பை வைத்தவன் அதில் மகாலிங்கத்தின் அந்தரங்க படங்கள் வீடியோவை காட்ட அதில் சாணக்கியன் முகம் சுளித்தாலும் தாடி மழித்து இருந்த கௌதமையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை தாடியின்றி பார்த்த ஒரே கணத்தில் அவன் தன் நண்பன் என்று அறிந்தவனுக்கு அவன் மேல் கோபம் துளியும் வரவில்லை.

வெகுளியாக இருந்தவனின் வீரத்தை பார்த்து பூரிப்பு தான் அடைந்தான். நண்பன் முகத்தில் என்ன உணர்ச்சி என்று அறிய முடியாமல் தவித்த கெளதம், "நான் உன்ன இங்க கூட்டி வந்ததே உன்ன கொல்ல தான். அத பார்த்து உன் அப்பா துடிக்கணும்" என்று உணர்ச்சியற்ற குரலில் கூறியவன் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கிக்கு சைலென்சர் பூட்டியவன் அதை அவன் நெற்றி பொட்டில் வைத்தான்.

நெற்றி பொட்டில் வைத்தவனுக்கு அதை சுடும் தைரியம் வரவில்லை கண்ணீர் மட்டும் தான் வந்தது.

கண்களில் கண்ணீர் வழிய நின்ற நண்பனின் கண்களை பார்த்த சாணக்கியன் தழுதழுத்த குரலில், "கிருஷ்ணா... உன்னால என்ன கொல்ல முடியுமாடா ?" என்று கேட்க துப்பாக்கியை தூக்கி ஒவ்வொரு மூலையிலும் சுட்டவன் "ஷீட்" என்றபடி அதை எறிந்து விட்டு தொய்ந்து அமர்ந்து, "நீ ஏன்டா அந்த பொறுக்கிக்கு மகனாக பிறந்த?" என்று கண்ணீர் வழிய கேட்டதும் சாணக்கியனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எழும்பி வந்து கௌதமை அணைத்தவன், "என்னடா ஆச்சு? எங்கடா போன? மலர் டீச்சர் எங்கடா ?" என்று இடைவிடாமல் கேட்க அவனை உதறி தள்ளியவன், "நான் ஒண்ணும் உங்கள விட்டு போகல. எல்லாத்துக்கும் உன் அப்பா தான் காரணம்" என்று கோபத்துடன் நடந்ததை சொல்ல தொடங்கியவன், "என் கண் முன்னாலேயே என் அம்மா..." என்றபடி விம்மி விம்மி அழ தொடங்கினான்.

சாணக்கியனுக்கு மகாலிங்கம் மேல் வெறி எழும்ப, "நீ ஏன்டா இத என் கிட்ட சொல்லல? உன் நண்பனை பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா ? அந்த பொறுக்கிய நானே கொல்றேன்டா... என் கையால கொல்றேன்." என்று கண்ணீருடன் சீறினான். அவனின் சீறலில் அதிர்ச்சி அடைந்த கெளதம், "அவன் உன் அப்பாடா" என்றான்.

"அப்படி சொல்லாத எனக்கு அருவருப்பா இருக்கு... அவன் என் கையால சாகணும்" என்றவனை ஓடிச் சென்று அணைத்த கெளதம், "இல்ல அவன் என் கையால சாகணும்." என்றான்.

"இல்லடா நான் தான் அந்த நாய கொல்லணும்" என்ற சாணக்கியனை நெகிழ்ச்சியுடன் பார்த்த கௌதம், "அதுக்கு நான் விடமாட்டேன் நான் தான் கொலை செய்வேன்" என்றான்.

கிண்டலாக சிரித்த சாணக்கியன், "ஓகே அப்போ நமக்கு ஒரு டீல்... நீ போலீஸ் தானே... அவனை நான் கொலை பண்ணுவேன் முடிஞ்சா தடுத்து பாரு..." என்றதும் கௌதமும் அவனை பார்த்து, "ஓகே டீல்" என்று சிரித்தபடி பெருவிரலை காட்டினான்.


காலை வரை பல கதைகள் பேசி இருந்தவர்கள் நட்பை புதுப்பித்துக் கொண்டனர். கயலை திருமணம் செய்தாலும் அவளால் அவள் தந்தையை கொலை செய்ய நினைப்பவனுடன் வாழ முடியாது என்று அறிந்த கௌதமுக்கு உண்மையை மறைத்து அவளுடன் பொய்யான வாழ்க்கை வாழவும் விருப்பமில்லாமல் இருந்தது. நெற்றி கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று நினைக்கும் சாணக்கியனின் குணம் கயலுக்கு இருக்காது, தந்தையை கொலை பண்ண போறது தெரிந்தால் தன்னுடன் வாழ மாட்டாள் என்று அவனாகவே யோசித்து கயலை விட்டு விலக நினைத்த கௌதமுக்கு அப்போது தெரியவில்லை கயலில் ஓடுவது சாணக்கியனின் அதே ரத்தம் தான் என்று.
 
Top