ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 2

அத்தியாயம் 2

அதனை தொடர்ந்து, அவன் கல்லூரிக்கு கிளம்பி விட்டான்...

இதே சமயம் வீட்டுக்குள் நுழைந்தாள் நாராயணி.

"கேம்பஸுக்கு லேட் ஆகுது எல்லா, நீ இவனை கொஞ்சிட்டு இருக்கிறா" என்று கருணா கேட்க, "வடிவா இருக்கான் அம்மா, விட்டு போகவே மனசு இல்லாம இருக்கு" என்று சொன்னவள், குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தாள்.

கருணா அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டே, "உன்னை ஒருத்தன்ட கைல பிடிச்சு கொடுத்தேன் எண்டா நிம்மதியா செத்து போயிடுவேன்" என்று சொல்ல, அவரை ஏறிட்டு முறைத்தவள், "இப்படியே கதைச்சிட்டு இருந்தீங்க என்டா நான் சாப்பிடாம வெளிக்கிட்டுடுவேன்" என்றாள்.

"சரி புள்ள, நான் கதைக்கல" என்றவருக்கு அப்படி ஒரு மனவலி...

அவர் வாழ்க்கையை அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்து விட்டார்...

மகளுக்கு சரியான வாழ்க்கை அமைந்து விட வேண்டும் என்று பரிதவிப்பு...

அவளும், சாப்பிட்டுக் கொண்டே, "இந்த தண்ணி சோறும், கருவாட்டு கறியும் செம்ம டெஸ்ட்" என்று சொல்லிக் கொண்டே, கண்களை மூடிக் கொண்டே ரசித்து சாப்பிட்டவளோ, புத்தக பையை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.

பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக காத்துக் கொண்டு இருந்தவளுக்குள் ஆயிரம் வலிகள் இருந்தாலும் காட்டிக் கொள்வது இல்லை...

தனது வலி தாயை தாக்கியே விட கூடாது என்று எண்ணிக் கொள்வாள்...

'அப்பா' என்றால் சின்ன வயதில் அப்படி ஒரு உயிர்...

அப்போது அவளுக்கு பருவம் தெரியாது...

ஒன்பது வயது பத்து வயதில் தான் பருவம் தெரிந்தது...

அதுவும் அவள் தாய் கருணாவும் வீட்டுக்கு வந்த புருஷோத்தமனும் சண்டை பிடித்த தருணம் அது...

"என்ட வாழ்க்கையை கெடுத்தது நீங்க தானே... கல்யாணம் கட்டுனதை மறைச்சு இந்த புள்ளையை சுமக்க வச்சு, இப்போ அதுக்கு ஒரு சரியான அங்கீகாரம் இல்லாம இருக்கு... இது தான் என்ட பொண்டாட்டி எண்டு உங்களால என்னை கை காட்ட முடியுமா? ஊர்ல எனக்கு மானம் மரியாதையே இல்ல, உங்கட முதல் பொஞ்சாதிட அண்ணன் வந்து என்னை மிரட்டிட்டு போனார், என்ட பிள்ளையை சாக வைப்பன் எண்டு சொல்றார்" என்று அழுது வடிந்தார்...

ஆம் கனகசிங்கம் விஷயம் கேள்விப்பட்டு வந்து அவரை மிரட்டி விட்டு செல்ல, அது பூதகரமாகியது...

அப்போது நாராயணி வீட்டில் இருக்கவில்லை...

கருணா நன்றாக பயந்தும் விட்டார்...

இதனை அவர் புருஷோத்தமனிடம் சொல்லி நியாயம் கேட்க, "பிள்ளைக்கு முன்னால என்ன கதைச்சிட்டு இருக்கா?" என்று திட்டினார் அவர்...

"வளர்ந்தா அவளுக்கு தெரியாமலா இருக்கும்? உங்கட முதல் பொஞ்சாதி யாரு, உங்கட பிள்ளைகள் யாரு எண்டு தெரிய தானே போகுது" என்று சொல்லி அழுதார்...

அப்போது தான் தந்தையை பற்றி அறிந்து கொண்டாள்.

அன்றில் இருந்தே ஒரு விலகல்.

"அப்பா, அப்பா" என்று அணைத்து கொள்வது இல்லை...

கேள்வி கேட்டால் மட்டும் பதில்...

அவரும் எப்போதாவது தான் வீட்டுக்கு வருவார்...

விஷயம் நிர்மலாவுக்கு தெரிந்த பிறகு, இரவில் தங்குவதும் இல்லை...

வீட்டினருக்கு பயந்து கொண்டே மனதளவில் தொலைவாகி போனார்...

பாடசாலையில் மறைமுகமாக அவள் பிறப்பை பற்றி பேசி இருந்தாலும் நேரடியாக யாரும் பேசாத வரை அவளுக்கு சந்தோசம் தான்...

புருஷோத்தமன் தான் இவர்களுக்கு பணம் கொடுப்பார்...

அவளுக்கு கொஞ்சமும் பணம் வாங்க இஷ்டம் இல்லை, ஆனாலும் வேறு வழி இல்லையே...

எப்படியாவது வேலைக்கு சென்று விட வேண்டும் என்று உயர் தர பரீட்சையில் வணிக பிரிவில் கல்வி கற்று, கல்லூரிக்கும் தெரிவாகி விட்டாள்.

அதன் பிறகு அவளுக்கு வசதி என்று தான் இந்த புது வீட்டுக்கு வாடகைக்கு வந்து இருந்தார்கள்...

உரிமையாக, 'இவர் தான் அப்பா' என்று சொல்லவே அவளுக்கு கூச்சமாக இருக்கும்...

தந்தையின் பெயர் புருஷோத்தமன் என்று சொல்வாள்,அதற்கு மேல் அவள் எதுவும் சொல்வது இல்லை...

தந்தையை பற்றி விசாரித்தால், சிரித்து மழுப்பி அங்கிருந்து நகர்ந்து விடுவாள்...

தனது பிறப்பை பற்றி ஏற்கனவே வலி தான் அவளுக்கு...

ஆனாலும் சந்தோஷமாக இருக்க முனைந்து கொண்டு இருக்கின்றாள்.

இதற்கெல்லாம் சேர்த்து அழுது வடிவதில் இஷ்டம் இல்லை...

நண்பிகளுடன் கல்லூரியில் பேசி, சிரித்து இருப்பவளுக்கு காதல் என்றால் மட்டும் வேப்பங்காயாக கசந்தது...

அழகி அவளுக்கு காதல் கடிதங்களுக்கு குறைவே இல்லை...

ஆனால் எப்படியாவது வேலை எடுத்து, உழைக்க வேண்டும் என்கின்ற முனைப்பு...

புருஷோத்தமனிடம் பணத்தை பெறவே கூடாது என்கின்ற வெறி...

அதனால் இதனை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, படிப்பு மட்டுமே அவள் வாழ்க்கை... அவளுக்குள் பிடிவாதமும் அழுத்தமும் அதிகமாகவே இருந்தது.

இதனை எல்லாம் நினைத்துக் கொண்டு இருந்த நேரம், அவள் செல்லும் பஸ் வந்தது...

ஏறியவளுக்கு இருக்க இடம் இல்லை...

நின்று கொண்டாள்.

பக்கத்தில் தான் கல்லூரி...

சற்று நெரிசலுக்குள் அடைபட்டு ஒரு வழியாக கல்லூரியை அடைந்தும் விட்டாள்.

சாப்பிட்டு விட்டு வந்தாலும், கேன்டீனுக்குள் நுழைந்தாள்.

அங்கே அவள் நண்பிகள் பேசி சிரித்துக் கொண்டே இருக்க, அவர்களுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.

அவள் நண்பி ரித்விகாவோ, "இண்டைக்கு நமக்கு பிசினஸ் மேனேஜ்மேண்ட் புது சேராம் டி" என்று சொல்ல, "யாரு டி அது?" என்று கேட்டபடி நண்பியின் சாப்பாட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டாள் நாராயணி...

"புதுசா வந்து இருக்கிற ஜனார்த்தனன் சேர், பார்க்கவே சினிமா ஹீரோ கணக்காட்டம் இருக்கிறார்... எத்தனை நாள் தான் இந்த ஓல்ட் பீஸை பார்க்கிறது, இப்போ தான் ஃப்ரெஷ் ஆஹ் ஒண்டு சிக்கி இருக்கு" என்று சொல்ல, சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளுக்கு உணவு இறங்க மறுத்தது...

ஜனார்த்தனன் என்ற பெயரை கேட்டதுமே ஒரு வித அழுத்தம்...

புருஷோத்தமன் சமீபத்தில் வீட்டுக்கு வந்த நேரம், "கனகசிங்கத்துட மகன், அங்கே தான் லெக்சர் பண்ணுறான், தெரியுமா? பேர் ஜனார்த்தனன்" என்று விசாரித்தார்...

அவளுக்கு அப்போது தெரியவில்லை...

கனகசிங்கம் என்று சொன்னதுமே கொஞ்சம் முகம் சுருங்கியது...

அவர் தானே அவள் தாயை மிரட்டி விட்டு சென்றவர்... அதுவும் அவளை கொலை செய்வதாக மிரட்டி விட்டு சென்றவர் ஆயிற்றே... மறக்க முடியுமா என்ன?

அதன் பின்னர் நிர்மலா குடும்பத்திடம் இருந்து பெரிதாக அழுத்தம் வரவில்லை...

புருஷோத்தமன் வர விடவில்லை...

அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி, இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்...

ஆனாலும் கனகசிங்கம் மேல் ஒரு அதிருப்தி நாராயணிக்கு இருக்க, அடுத்த நாளே, ஜனார்த்தனன் யார் என்று தேடி பார்த்தாள்.

ஒட்டி நின்று தான் பார்த்தாள்...

பார்க்க ஈர்த்து விடும் தோற்றம் தான்...

ஆனால் அவளால் ரசிக்க கொஞ்சமும் முடியவில்லை...

அவன் தந்தை மேல் இருக்கும் கோபம் ரசிக்கவும் விடவில்லை...

அவள் அடிக்கடி அவன் காரை அவளது வீதியில் கண்டு இருக்கின்றாள் தான்...

இலைக்கஞ்சி குடிக்க வருகின்றான் என்று அவளுக்கும் தெரியும்...

பார்த்தும் பார்க்காமல் கடந்து விடுவாள்...

இன்று அவன் வகுப்பு எடுக்க வருகின்றான் என்று சொன்னதுமே ஒரு அழுத்தம்...

தான் யார் என்று தெரிந்து விடவே கூடாது என்கின்ற வேண்டுதல் அவளிடம்...

அன்று வகுப்புக்கு சென்றாலும், பிசினஸ் மேனேஜ்மேண்ட் பாடம் நெருங்க நெருங்க இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது...

இதே சமயம் ஜனார்த்தனனும் தனது டைம் டேபிளை பார்த்தான்...

இன்று தான் அவனுக்கு மூன்றாம் வருட மாணவர்களுக்கு முதல் வகுப்புக்கு உரிய நேரம் போடப்பட்டு இருந்தது...

இந்நாள் வரை அந்த பிரிவினருக்கு வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த விரிவுரையாளர் வெளிநாட்டுக்கு சென்று இருக்க, அந்த வகுப்பை பாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஜனார்த்தனன் தள்ளப்பட்டு இருந்தான்.

அதற்கான நோட்ஸை எடுத்துக் கொண்டே, அவனும் கிளம்பி விட்டான்...

அவன் வகுப்பில் நுழைந்ததுமே, பேசிக் கொண்டு இருந்த மாணவர்கள் மௌனமாகி விட, ஐந்தாம் வரியில் அமர்ந்து இருந்த நாராயணி அவனை மிரட்சியுடன் தான் பார்த்தாள்.

அவனோ, "ஹாய் கைஸ், ஐ ஆம் ஜனார்த்தனன் கனகசிங்கம், உங்களுக்கு இண்டைல இருந்து நான் தான் பிசினஸ் மேனேஜ்மேண்ட் க்ளாஸ் எடுக்க போறேன்" என்று ஆரம்பித்தவன் விழிகள் எல்லாரையும் சுற்றி வந்து, நாராயணியில் ஒரு கணம் நிலைத்தது...

அவளும் அவனை தான் பார்த்து இருக்க, அவனுக்குள் ஒரு அதிர்வு...

அவன் ரசித்த பெண் அவன் வகுப்பு மாணவியா?

ஒரு மாதிரி ஆகி விட்டது...

மாணவிகளுடன் ஒரு கண்ணியத்தை பேண வேண்டும் என்று நினைப்பவன் அவன்...

அதனாலேயே இந்த விஷயம் அவனுக்குள் குற்ற உணர்வை தோற்றுவிக்க, சட்டென தன்னை நிதானப்படுத்திக் கொண்டே, அவர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டான்.

கவனம் சிதறாமல் தன்னை அவன் பார்த்துக் கொண்டாலும், அவன் கவனம் அவனையும் மீறி நாராயணியில் அடிக்கடி படிந்தது...

அவனுக்கே தன்னை நினைத்து கோபம் தான்.

'அவ பக்கம் திரும்பாதடா இடியட்' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டான்...

அவள் பெயர் நாராயணி என்னும் வரையில் அவனுக்கு நன்கு தெரியும்...

அந்தளவு கவனித்து இருக்கின்றான் தானே...

ஒரு வழியாக வகுப்பை முடித்து விட்டு அறைக்குள் வந்தவனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...

மூன்று மாதங்களாக அவன் ரசித்த பெண் இங்கே தான் படிக்கின்றாள் என்று தெரிந்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது...

ஆனாலும் அவளை பற்றி ஆராய ஒரு ஆர்வம்...

'இதெல்லாம் டூ மச் டா' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டவன் கைகள், தாமாக சென்று, ஸ்டுடென்ட்ஸ் டேட்டாபேசை திறந்தன...

அதில் அவள் பெயரை அடித்தான்...

வெவ்வேறு ஸ்பெல்லிங் போட்டு அடித்தான்...

அவள் பெயரும் விழுந்தது...

"நாராயணி புருஷோத்தமன்" என்று விழுந்தது...

பிறந்த தேதி தொடக்கம் எல்லாம் விழுந்தது...

நாராயணிக்கு பின்னால் இருந்த பெயர் அவனுக்கு உறுத்தியது...

ஏதோ ஒன்று உடையும் உணர்வு...

சட்டென அலைபேசியை எடுத்து, அவன் அழைத்தது என்னவோ பவித்ரனுக்கு தான்...

அவனோ வேலையில் இருக்க, அலைபேசியை கட் செய்து விட்டான்...

விடாமல் அடித்தான்...

ஜனார்த்தனன் இப்படியே இல்லை...

ஒரு தடவை எடுக்கவில்லை என்றால் விட்டு விடுவான்...

இப்போது விடாமல் அழைக்க, அவனும் எடுத்து காதில் வைத்து, "என்னடா? க்ளையண்ட்ஸ் இருக்காங்க டா" என்றான்...

"டேய் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்லிட்டு வை" என்றான்.

"சரி கேளு" என்று சொல்ல, "உன்ட அப்பாவோட, அடுத்த மகள்ட பேர் என்ன?" என்று கேட்டான்...

"ஏன் கேக்கிறா?" என்று அவன் கேட்க, "சொல்லுடா" என்றான் அதட்டலாக...

"நாராயணி" என்று சொன்னதும் தான் தாமதம்...

அலைபேசி கட் செய்யப்பட்டது...

சட்டென இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவனுக்கு மூச்செடுக்க முடியவில்லை...

என்ன மாதிரியான உணர்விது? ஏன் இந்த ஏமாற்றம்? ஏன் அவனுக்குள் இந்த வலி...

காரணமே இல்லாமல் வலித்தது...

அவள் இங்கு தான் பிறந்து தொலைக்க வேண்டுமா? என்று எல்லாம் கண்ட மேனிக்கு யோசனையும் கோபமும் வந்தது...

இத்தனை நாட்கள் அவள் அழகை அவன் ரசித்து இருக்கின்றான் என்று மட்டும் தான் நினைத்து இருந்தான்.

அது உண்மை இல்லை...

அவனுக்குள் அவள் ஊடுருவி இருக்கின்றாள்.

அதனால் தான் அவனால் ஜீவனியுடன் பேசவும் முடியவில்லை...

அவளுடன் சரியான உறவை பேணவும் முடியவில்லை...

அவள் பெயரை தெரிந்து கொள்ள பைத்தியக்காரன் போல திரும்ப திரும்ப பவித்ரனுக்கு அழைத்து அல்லவா இருக்கின்றான்...

இப்போது அவள் பிறப்பை பற்றி தெரிந்ததுமே ஏன் வலிக்கின்றது.

ஒரு மாதிரியான உணர்வு ஏன் வருகின்றது?

அவளை காதலிக்கின்றானா?

கூடவே கூடாதே...

அந்த வீட்டு பெண் மீது காதலா? அவனாலேயே அதனை ஏற்றுக் கொள்ள முடியாதே...

அவள் மீது காதலை கடந்து இப்போது கோபமும் வெறுப்பும் காரணமே இல்லாமல் சேர்ந்து கொண்டது...

அவள் சாதாரண நாராயணி புருஷோத்தமன் என்று இருந்தால் கூட பத்தோடு பதினொன்றாக கடந்து விட்டு இருப்பான்...

ஆனால் அவனுக்கு பிடித்த நாராயணி புருஷோத்தமன் ஆயிற்றே...

அவள் மாணவி என்று வந்த ஏமாற்றத்தை விட, இது பல மடங்காக இருந்தது...


அந்த ஏமாற்றமே அவனுக்கு கோபமாக மாற, அவளை எப்போது எங்கே கடித்து குதறலாம் என்கின்ற மனநிலைக்கு தான் தாவி இருந்தான்...
Super sis
 
Top