vallimotcham
Member
Nice
Super sisஅத்தியாயம் 2
சிம்மன் அந்த இத்து போன ஜீப்பில் தான் அமர்ந்து இருந்தான்...
முருகன் ஜீப்பை ஓட்டுவதற்கு ஆயத்தமாக வைத்துக் கொண்டு இருக்க, தினேஷ் மற்றும் ராகினி தான் பெட்ரோல் திருட சென்றார்கள்...
அங்கே வரிசையாக வைக்கப்பட்டு இருந்த பைக்குகளை பார்த்துக் கொண்டே, அவ்விடம் டியூப்புடன் சென்றவர்கள், சுற்றும் முற்றும் பார்த்தபடி பெட்ரோலை திருட ஆரம்பித்து விட்டார்கள்...
"என்ன மானம் கெட்ட புழப்பு இது?" என்று சிம்மன் கேட்க, "எங்க தொழிலை தப்பா பேசாதே, நீயும் இப்போ பார்ட்னர்" என்றான் முருகன்...
"நாசமா போச்சு, நானும் பார்ட்னர் ஆஹ்?" என்று சிம்மன் கேட்டுக் கொண்டே நடப்பதை பார்க்க, பெட்ரோலை பாட்டிலில் சேகரித்துக் கொண்டான் தினேஷ்.
"சீக்கிரம் டா" என்று ராகினி அவசரப்படுத்த, "உங்க அவசரத்துக்கு வருமா மேம்" என்று தினேஷ் கேட்க, "வக்கணையா பேசாம வேலையை பாருடா" என்று திட்டிய ராகினிக்கு, "ஏய்" என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பைக் ஓனர் தென்பட, "டேய் ஓனர் வர்றான் டா" என்று சொல்லிக் கொண்டே, ஓட தினேஷுடன், "ஐயோ வர்றானே" என்று கத்திக் கொண்டே ஓடி வந்து ஜீப்பில் ஏற, முருகனும் ஜீப்பை வேகமாக கிளப்பி இருந்தான்...
ராகினியோ, "இங்கே பெருசா தேறல, வேற பார்க்கிங் போகலாம்" என்று சொல்லி விட்டு சிம்மனை திரும்பி பார்த்தவள், "தொழிலை கத்துக்கோ" என்று சொல்ல, அவனும், "கத்துகிறேன் தலைவி" என்றான்...
"தலைவியா?" என்று கேட்டவளுக்கு அந்த அழைப்பு பிடித்து இருக்க, "மேம் விட தலைவி மாஸ் ஆஹ் இருக்குல்ல?" என்று கேட்டான்.
"ம்ம், அப்படியே கூப்பிடு" என்று சிரித்தபடி சொன்னவளோ பூரிப்புடன் பெட்ரோல் திருடுவதில் மும்முரமாக இறங்கி விட்டாள்.
இப்படியே பெட்ரோல் திருடி, ரொட்டி திருடி, அவர்கள் வீட்டுக்கு வந்து சேர மாலை நேரம் ஆகி விட்டது...
இப்போது தான் வீட்டையே சுற்றிப் பார்த்தான் சிம்மன்...
ஒரு ஓரமாக அமைந்து இருந்தது வீடு...
அருகே சில வீடுகள் மட்டுமே...
பின் தங்கிய இடம் தான்...
வீடு கூட ஆங்காங்கே வெடித்து, உடைந்து இருந்தது...
ஒரு முன்னறை.
இரு அறைகள்...
ஒரு குளியலறை மற்றும் சமையலறை என்று இது தான் அவர்கள் வீடு.
ராகினி குளிக்க சென்று விட்டாள்.
ஷாருக்கான் தூங்கிக் கொண்டு இருந்தான்...
அவன் அருகே அவன் சாப்பிட்டு விட்டு வைத்த தட்டை ஈ மொய்த்துக் கொண்டு இருக்க, 'இத கூட கழுவி வைக்க தெரியாத வாழைப்பழ சோம்பேறி' என்று திட்டிக் கொண்டு அதனை சிம்மனே கழுவியும் வைத்தான்...
முருகனோ, "சைட் டிஷ் ஏதும் சிக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்" என்று கிளம்பி இருக்க, குளித்து விட்டு வந்த ராகினியோ, அங்கே நின்ற தினேஷிடம், "இவனுக்கு கொடுக்க உன் கிட்ட ட்ரெஸ் இருக்கா?" என்று கேட்டான்...
"என்ன மேம் இது? என் கிட்ட இருக்கிறதே நாலு ட்ரெஸ் தான்" என்று சிணுங்க, "சரி சரி, பக்கத்து வீட்ல அலமேலு அக்கா உடுப்பு காயப்போட்டு இருக்காங்க, இன்னும் எடுத்த பாடு இல்லை... அதுல ஒரு லுங்கியை சுட்டுட்டு வா" என்று சொல்ல, சிம்மனுக்கு மயக்கம் வராத குறை தான்...
அவர்களையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க, "அங்கே என்ன பார்வை? இடத்தை செட் பண்ணு, இன்னைக்கு நம்ம பார்ட்டி" என்றாள் ராகினி...
தலையை உலுக்கிய சிம்மனும் இடத்தை சரி செய்து கொண்டு இருக்க, அவன் அருகே வந்து அவன் தோளில் கையை வைத்தான்...
அவனும் அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, 'இவ பார்வையே சரி இல்லையே, என் கிட்ட வேற ஏதும் எதிர் பார்க்கிறா போல' என்று நினைக்க, அவளோ, கையை நீட்டி, அவன் மூக்கை தொட்டு பார்த்தவள், "ஓங்கி குத்திட்டேனோ, இப்படி சிவந்து போய் இருக்கு" என்று கேட்டாள்.
'பாக்சிங் பேக் ல அடிக்கிற போல அடிச்சிட்டு பேச்சை பாரு' என்று நினைத்தவனோ, "இல்ல தலைவி பரவாயில்லை" என்றான்.
"நாளைக்கு வலிச்சா சொல்லு, ஆயில்மெண்ட் திருடி தர்றேன்" என்றாள்.
'க்கும் அதுவும் திருட்டு தானா? இது சரியான டுபாக்கூர் கம்பெனி' என்று நினைத்தவனும், "ம்ம்" என்றான்.
சற்று நேரத்தில் அங்கே வந்த தினேஷோ வெளிச்சத்தில் கையில் இருந்த துணியை பார்த்து அதிர, "என்னடா, லுங்கியை ஏன் இப்படி பாக்கிற?" என்று கேட்டுக் கொண்டே அவன் அருகே வந்தாள் ராகினி...
அவனும் கையில் இருந்த துணியை நீட்ட, அது லுங்கி அல்ல, பூ போட்ட பாவாடை...
தினேஷ் கொடுத்த பாவாடையை பார்த்து விட்டு அவனை முறைத்தாள் ராகினி. அவன் தலையை குனிந்து கொண்டே, "இருட்டுல கண் தெரியல மேம்" என்றான்.
"குருட்டு கபோதி. பக்கத்து வீட்டு அலமேலு அக்கா புருஷனோட லுங்கிய ஆட்டைய போட சொன்னா அக்காவோட பாவாடையை ஆட்டைய போட்டு இருக்கியே" என்று திட்டியவளோ பாவாடையை சிம்மனிடம் நீட்டினாள்.
"தலைவி, இதையா நான் கட்டிக்கணும்??" என்று அவன் கேட்க, "இன்னைக்கு மட்டும் கட்டிக்கோ , நாளைக்கு நல்ல டிசைன் ல ஒரு லுங்கிய ஆட்டைய போட்டுடலாம்" என்றாள்.
'இதுங்க அகராதில வாங்குறதுன்னு ஒண்ணே இருக்காது போல... இந்த பிச்சைக்கார கும்பல் கிட்ட தெரியாம வந்து சிக்கிட்டேன்' என்று நினைத்தவனோ, "இல்ல மேம் நான் இப்படியே இருக்கேன்" என்றான்.
"கூச்சப்படாம வாங்கிக்கோ... இங்க சுத்த பத்தமா இருக்கனும்" என்றாள்.
அந்த இடத்தை ஒரு கணம் சுற்றி பார்த்தான்.
தூசு இல்லாத ஒரு சின்ன கரண்டி கூட இல்லை.
'சரி தான்' என்றபடி அவனும் பாவாடையை வாங்கிக் கொள்ள, "நடாவை இறுக்க கட்டிக்கோ இல்லன்னா காலைல வர்ற நாய் கண்ட இடத்துல கடிச்சு வச்சிடும்" என்றாள்.
"என்ன நாய் வருமா?" என்று அவன் அதிர, "ம்ம் ரோட்டு நாய், சொறி நாய் எல்லாம் வரும்" என்றான் தினேஷ்.
"கதவை மூடி இருந்தா எப்படி வரும்??" என்று சிம்மன் கேட்க, "காத்தோட்டமா இருக்கணும்னு வீட்டிற்கு கதவு போடல. துணி போட்டு மறைச்சு இருக்கோம்" என்றான் தினேஷ்.
"நீங்க கதவு போடல.. இத நான் நம்பனும்" என்று சிம்மன் கேட்க, "அதிகம் பேசாம பாவாடையை கட்டிட்டு வா... பார்ட்டிக்கு லேட் ஆகுது... கம்பெனி ஸ்டாஃப்ஸ் எல்லாம் வெய்ட் பண்ணுறாங்க" என்றாள் ராகினி...
சுற்றி நின்றவர்களை பார்த்த சிம்மனோ, 'இதொரு கம்பெனி.. இதுக்கு நாலு ஸ்டாஃப்ஸ் வேற.. பிச்சைக்கார கும்பல்ன்னு பார்த்தா பைத்தியாகார கும்பலா இருக்கும் போலவே' என்று நினைத்தபடி உடை மாற்ற சென்றவன் பாவாடையுடன் தயங்கி தயங்கி வந்தான்.
அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "நைஸ் குட் லூக்கிங்" என்றாள்.
'நாசமா போச்சு' என்று அவன் முணுமுணுத்துக் கொண்டே மெலிதாக சிரிக்க, "ஷேர்ட்டை கழட்டு மேன், நாங்க தானே" என்றாள் ராகினி...
"இருக்கட்டும் தலைவி... எனக்கு கூச்ச சுபாவம்" என்று அவன் சொல்ல, "சரி கைஸ் பார்ட்டி ஆரம்பிக்கலாமா?" என்று கேட்க, தினேஷோ, "சைட் டிஷ் இன்னும் வரல மேம்" என்றான்.
அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "இதோ வந்துட்டேன்" என்று சொன்னபடி அங்கே வந்து சேர்ந்தான் முருகன்...
ராகினியோ, "சைட் டிஷ் என்னடா?" என்று கேட்க, அவனோ, "இன்னைக்கு எல்லாருக்கும் சர்ப்ரைஸ்... பேக்கரி பக்கம் போனேன், பண் மிஞ்சிடுச்சு போல, தூக்கி வெளியே போட்டு இருந்தாங்க, அப்படியே பேக் ல அள்ளி போட்டு வந்துட்டேன்" என்றான்...
ராகினியோ, "அப்படி எல்லாம் அவனுங்க வெளியே போட மாட்டானுங்களே, சாப்பிட்டு மிச்சம் வச்ச சாப்பாட்டையே அடுத்தவனுக்கு கொடுக்கிற பயலுங்க ஆச்சே" என்று சொல்ல, "இப்போ பாருங்க" என்று சொல்லிக் கொண்டே பையை கவிழ்த்து கொட்டினான்...
அங்கே கொட்டப்பட்டது என்னவோ வறட்டி தான்...
"டேய் என்னடா இது?" என்று சொல்லிக் கொண்டே தினேஷ் பாய்ந்து எழ, "பண்ணுக்கும் வறடிக்குமா வித்தியாசம் தெரியாது உனக்கு?" என்று கேட்டான் சிம்மன்...
"அடிங், என்னடா இதெல்லாம்?" என்று ராகினி எகிற, "எடுக்கும் போது பண் ஆஹ் தான் இருந்திச்சு, எப்படி வறட்டியா மாறிச்சுன்னு தெரியல" என்று முருகன் சொல்லி விட்டு திரு திருவென விழிக்க, அவனை ஆழ்ந்து பார்த்த ராகினியோ, "ஊது டா" என்றான்...
"மேம்" என்றான் அவன்...
"சரக்கை ஆட்டைய போட்டியா?" என்று கேட்டுக் கொண்டே, அவள் அங்கே வைத்து இருந்த சரக்கு பாட்டிலை எடுத்து பார்க்க, அதில் கொஞ்சம் காணாமல் போயிருந்தது...
அவனை இப்போது முறைத்தவள், "குடிகார பயலே" என்று சொல்லிக் கொண்டு, அவனை குனிய வைத்து முதுகில் ஒரு அடியை போட்டவள், "இப்போ சைட் டிஷ்ஷுக்கு என்ன பண்ணுறது?" என்று திட்டினாள்.
தினேஷோ, "போன வாரம் வாங்குன ஊறுகா மிச்சம் இருக்கு மேம்" என்று சொல்ல, "சரி எடுத்து வா, வேற வழி இல்ல" என்று சொல்லிக் கொண்டே நிலத்தில் அமர, அதுவரை படுத்து கிடந்த ஷாருக்கான் சட்டென எழுந்து அமர்ந்தான்...
'இதுக்கு மட்டும் இந்த ஆப்ஜெக்டுக்கு உயிர் வந்திடும் போல' என்று சிம்மன் நினைத்துக் கொள்ள, நான்கு டம்ளரில் சரக்கு ஊற்றப்பட்டது...
"உனக்கு இல்ல" என்று முருகனிடம் சொல்ல, "மேம்" என்று அவன் கெஞ்ச சிம்மனோ, "எனக்கு வேணாம் தலைவி, அவனுக்கு கொடுங்க" என்றான்...
"நீ குடிக்கிறது இல்லையா என்ன?" என்று கேட்க, அவனும் இல்லை என்று தலையாட்ட, அவன் பங்கு முருகனுக்கு போனது.
"சியர்ஸ்" சொல்லி அவர்கள் குடிக்க ஆரம்பித்து விட, நாடியில் கையை வைத்து அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான் சிம்மன்.
ராகினியை பார்த்தவன், 'என்ன இப்படி சரக்கு அடிக்கிறா?' என்று நினைத்தான்.
சற்று நேரத்தில் எல்லாருக்கும் போதை ஏறியது...
ராகினி உளற ஆரம்பித்து விட்டாள்.
உளறலுடன் அழுகை வேறு...
"நான் ஏன் இந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணுனேன் தெரியுமா?" என்று தேம்பி தேம்பி சிம்மனிடம் கேட்டாள்.
"யக்கா அழுவாத அக்கா" என்றான் தினேஷ்...
'மேம் அக்காவா மாறிடுச்சு, நான் தான் இதுங்க கிட்ட சிக்கிட்டேன் போல' என்று நினைத்துக் கொண்டே, "ஏன் தலைவி?" என்று கேட்டான்.
"என் கதை பெரிய கதை... எனக்குன்னு யாருமே இல்லை... ரோட் ல நாங்க நாலு பேரும் சின்ன வயசில இருந்து பிச்சை எடுத்துட்டு இருப்போம்... எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கும் போது ஒருவன் மேல கையை வச்சான்... அப்போ இவனுங்க மூணு பேரும் தான் அடிச்சு என்னை காப்பாத்துனாங்க... அப்போ நான் முடிவு பண்ணுனேன். சாதாரணமா இந்த உலகத்துல வாழ்ந்துட முடியாது... அதனால தான் ரவுடி ஆயிட்டன், இந்த வீட்டுக்கு ஓனர் யாருன்னே தெரியல, சும்மா இருக்கேன்னு வந்து குந்திக்கிட்டோம், என் கற்பு இப்போ வரைக்கும் என் கிட்ட இருக்குன்னா அதுக்கு இவனுங்க தான் காரணம்..." என்று சொல்லி அழ, சிம்மனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
அவளை பார்க்க கொஞ்சம் பாவமாகவும் இருந்தது...
"சரியான முடிவு தான் தலைவி" என்று சொன்னான்...
"எனக்கு அம்மா யார் தெரியுமா?" என்று கேட்டாள்.
"யாரு?" என்று சிம்மன் கேட்க, "இவன் தான்" என்று அங்கே இருந்த முருகனின் ஷேர்ட்டை இழுத்து காட்ட, 'இது என்ன கன்றாவியான காம்பினேஷனா இருக்கு' என்று நினைத்த சிம்மனோ, "இவனை எந்த அங்கில் ல பார்த்தாலும் அம்மா போல தெர்லயே" என்றான்...
"மீசையை எடுத்துட்டு பாருயா, அம்மா போல இருப்பான்" என்றாள் ராகினி...
"நாசமா போச்சு" என்று வாய் விட்டே சொன்ன சிம்மனோ, "அப்போ அப்பா யாரு?" என்று கேட்க, "இதோ இவன் தான்" என்று அங்கே இருந்த ஷாருக்கானை காட்ட, 'குடிச்சுட்டு உளற ஆரம்பிச்சுட்டா' என்று நினைத்தவன், "இது யாரு தம்பியா?" என்று தினேஷை காட்டி கேட்க, "எப்படி கண்டு பிடிச்ச தம்பியே தான்... நாங்க ஒரு ஃபேமிலி" என்று போதையில் கத்தினாள்.
"ஷ் ஷ்" என்றான் தினேஷ்ஷும்...
சிம்மன் எல்லாரையும் சுற்றி பார்த்துக் கொண்டே, 'இவனுங்க என்ன டிசைன்னு தெர்லயே' என்று நினைத்துக் கொண்டே, "அப்போ புருஷன் யாரு தலைவி" என்று கேட்டான் கிளுகிளுப்பான குரலில்...
அவளோ, "அப்படின்னு யாரும் இல்லையே" என்று சொல்ல, "நான் இருக்கேன்" என்று சொல்லி முடிக்க முதல், சிம்மனின் தலையை பற்றி உலுக்கியவள், "யாருக்கு யாருடா புருஷன்" என்று சீற, 'போதைலயும் இந்த விஷயத்துல மட்டும் அலெர்ட் ஆஹ் இருக்கா' என்று நினைத்துக் கொண்டே, "தெரியாம சொல்லிட்டேன் தலைவி" என்றபடி அவளிடம் இருந்து விடுபட, "எனக்குன்னு நிறைய கனவு இருக்கு சிம்மா" என்றாள் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே...
அவனும் விட்டத்தை பார்த்து விட்டு, "சொல்லுங்க" என்றான்...
ஏனையவர்கள் மட்டையாகி விட, அவளும் தனியாக சிம்மனிடம் தனது கனவுகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டாள்.
"ஒரு பெரிய வீட்ல, மில்லியனர் பொண்டாட்டியா வாழனும்... காலைல எந்திரிச்சு கோலம் போட்டு, காஃபி போட்டு அவரை எழுப்பணும்... குடும்ப குத்து விளக்கா இருக்கணும், இப்படி எல்லாம் ஆசை இருக்கு" என்றாள்.
"இது ஆசை இல்ல தலைவி, பேராசை, நமக்கு அதெல்லாம் செட் ஆகாது, கார்கோ பேன்ட் போட்டோமா? நாலு இடத்தில ஆட்டைய போட்டோமா? சரக்கு அடிச்சோமான்னு வாழுறத விட்டுட்டு இது என்ன ஆசை?" என்று கேட்டான்...
"எனக்கு செட் ஆகாதுன்னு எனக்கும் தெரியும் தான்... ஆனா படங்களில பார்த்து ஆசைப்பட்டு இருக்கேன்... அதுல என்ன கிக் இருக்குன்னு அனுபவிக்கனும்..." என்றாள்.
சிம்மன் அவளையே பார்த்துக் கொண்டவன், கீழ் அதரங்களை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே, "அனுபவிச்சு?" என்று கேட்க, "வாழ்க்கை முழுக்க இல்லை, ஒரு ஆறு மாசம், அடக்க ஒடுக்கமா வாழ்ந்து எக்ஸ்பீரியன்ஸ் பண்ணனும்" என்றாள்.
"ஆசைப்படுறது ஈஸி தலைவி, ஆனா அதெல்லாம் செய்யுறது ரொம்ப கஷ்டம்" என்றான்.
"நான் செய்வேன் டா, என்னை பத்தி என்ன நினச்சா, இப்படி ஒரு ப்ராஜக்ட் வந்து எனக்கு ஒரு பத்து கோடி கொடுத்து பாரு, எப்படி மாறுவேன்னு, வேலைன்னா நான் ஒரு வெள்ளைக்காரி" என்று சொல்லிக் கொண்டு அப்படியே மயங்கி சரிய, அவனோ, "ஆசை தானே நிறைவேத்திட்டா போச்சு" என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டே அனைவரையும் சுற்றிப் பார்த்து விட்டு. வெளியே வந்தவன், அலைபேசியை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்தான்.