ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 18

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 18

அப்போது கௌதமின் கண்கள் கயலுக்கு தான் அறைந்ததால் ஏற்பட்ட தடத்தில் தாங்கி நின்றது.

மீரா கௌதமிடம் திரும்பி, "கயல் உன் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கா ஏன் கெளதம் நீ இப்படி பண்ணுற?" என்று கேட்க அவனுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.ஒரு விரக்தியான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தான். கயல்விழி மனதுக்குள், 'இப்போவாச்சும் வாய திறக்கிறானா பாரு? கல்லுளி மங்கன் கணக்காக நிற்கிறான்' என்று யோசித்தாள். சிறிது நேரம் கழித்து பெரு மூச்செடுத்தவன் தன் பதிலுக்காக காத்திருக்கும் கயலை கடைக்கண்ணால் பார்த்த படி, "ரெண்டு பேருக்கும் செட் ஆகாது மீரா...டோன்ட் பாதர் இட்" என்றான் நறுக்கென்று. 'செட்டாகாதா?' என்று மனதுக்குள் யோசித்த கயல்விழி அவனை உறுத்து விழித்தாள்.

அவன் பதிலில் முதலில் அதிர்ந்தாலும் உடனே சுதாரித்த மீரா, "முதல் தடவை ரெண்டு பேரும் வந்திருக்கீங்க காபி கொண்டு வரேன்" என்று உள் நுழைந்தவளின் குணத்தில் கயல்விழி சொக்கி போனாள்.

"இவ்வளவு நல்ல பொண்ணை... தப்பா நினைச்சிட்டேனே... எல்லாம் இவனால் தான்" என்று கெளதம் மேல் எழுந்த கொலை வெறியால் அவன் மேல் உள்ள மரியாதை காற்றில் பறந்தது. அவனுக்கும் அதே எண்ணம் தான், 'ஒரு நல்ல பொண்ண என்னோட சுயநலத்துக்காக கஷ்டப்படுத்திட்டேனே' என்று யோசித்தவன் தன் பக்கத்தில் வெறுமையாக இருந்த சோபாவில் அமர்ந்து கைகளை இரு முழம் கால்களிலும் குற்றி முன்னோக்கி உடலை சரித்து கயல்விழியையே உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பார்க்கிறத பாரு..." என்று அவனுக்கு கேட்கும் படி முணு முணுத்தவள் வீட்டை சுற்றி தனது கண்களை சுழட்டினாள் அவன் பார்வையை தவிர்ப்பதற்காக.

சிறிது நேரத்துல காபி வர அதை அமைதியாக குடித்து முடித்தவர்கள் எழுந்து விடைபெற்று வெளியேற ஆயத்தமாகும் போது, "ரெண்டு பெரும் சேர்ந்து வாழ யோசிங்க" என்றாள் மீரா பொதுவாக. அதை கேட்டு வலுக்கட்டாயமாக சிரித்த கயல் அவளை அணைத்து விடைபெற கெளதம் ஒரு தலையசைவுடன் விடை பெற்றான்.

அருகருகே நடந்தாலும் கௌதமின் நாடகத்தால் கயலின் மனம் உலையாக கொதிக்க கௌதமின் மனமோ குற்ற உணர்ச்சியில் தவித்தது.

அவளை இதுக்கு மேலும் வதைக்க விரும்பாதவன் காரை நெருங்கியதும், "கயல்" என்றபடி அவளின் கையை பிடிக்க போக அவனை விட்டு விலகியவள் அவனை உறுத்து விழித்து, "நமக்கு செட் ஆகாது. உங்க இஷ்டப்படி நான் இனி உங்க பக்கத்தில வர மாட்டேன். பட் ப்ளீஸ் உங்க பெயரை கெடுக்கிற போல இனி இப்படி சீப்பா பிளான் பண்ண வேணாம்" என்று சொல்லி விட்டு அவனை திரும்பி பார்க்காமல் காரில் ஏற மனதில் வலியுடன் அவளை சிறிது நேரம் வெறித்து பார்த்தவன் அவளை தனது ஜீப்பில் பின் தொடர்ந்தான்.

வீட்டுக்கு வந்தும் கௌதமை பார்க்காமல் அவள் தன் அறைக்கு செல்ல கௌதமோ, 'ஓவராக தான் பண்ற சரி தான் போடி' என்று மனதுக்குள் நினைத்தபடி சாணக்கியன் அறைக்குள் புகுந்துக் கொண்டான். "என்னடா இந்த நேரத்தில் டேட்டிங்கா ?" என்று சாணக்கியன் கேட்க அவனை முறைத்தவன், "ஆமா தனி தனி வாகனத்தில டேட்டிங் போனோம். சும்மா போடா" என்றபடி குளிக்கச் சென்றான்.

அடுத்த இரு நாட்களும் விஷ்வா கயல் இருவரும் கல்யாண வேலைக்காக வீட்டில் இருக்க சாணக்கியனும் வீட்டிலிருந்தான்.

மகாலிங்கம் சாணக்கியனை தவிர்க்கும் பொருட்டு தனது அறையில் இருந்து வெளியில் வராமலே இருந்தார். அன்றிரவு மெஹந்தி பங்க்ஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க தடல் புடலாக வேலைகள் நடந்தன.

அவர்கள் வீட்டில் வேலைக்கு நிறைய பேர் இருந்ததால் யாருக்கும் வேலை இருக்கவில்லை. விஷ்வாவும் கயலும் தொலைகாட்சி பார்க்க சாணக்கியன் பத்திரிக்கையுடன் அவர்கள் முன்னால் இருந்தான். விஷ்வாவுக்கோ அலுப்பாக இருக்க தன் குறும்பை தொடங்கினான்.

"கயல் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறது உன் புருஷனா இல்ல அண்ணன் புருஷனா ?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க பத்திரிக்கையை கீழே சரித்தபடி அதிர்ச்சியுடன் சாணக்கியன் அவனை பார்க்க கயலும் அவனை திரும்பி பார்த்தாள்.

"என்ன ஆளாளுக்கு அதிர்ச்சியா பார்க்கிறீங்க? அண்ணா ரூம்ல கெளதம் இருந்தா அப்படி தானே நான் கேட்பேன்" என்று கண்ணடித்தபடி கேட்க இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர். அப்போது விஷ்வாவை முறைத்தபடி கெளதம் வர சாணக்கியனை தவிர மற்றைய இருவரும் அமைதியாகினர். சாணக்கியன் பக்கத்தில் விஷ்வாவையும் கயலையும் முறைத்தபடி கால் மேல் கால் போட்டு இருந்தவன் டிவி ரிமோட்டை எடுத்து சேனலை வேணுமென்று மாற்றினான். அவன் செயல் படம் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் கடுப்பாக்கினாலும் அதை மறைத்தபடி, "போர் அடிக்குது அண்ணா என்ன பண்ணலாம்?" என்று கயல் விஷ்வாவிடம் கேட்க அவனோ, "என்னடி பண்றது நீயே சொல்லு" என்று சொன்னான்.

உடனே கயலுக்கு ஐடியா வர, "மித்ராவை வச்சு செய்வோமா ?" என்று கேட்க கௌதமோ மனதுக்குள், 'பூனை போல இருந்திட்டு போடுற ஐடியாவை பாரு. கொஞ்சமாவது அவ கல்யாண பொண்ணு என்று யோசிக்கிறாளா? ராட்சசி' என்று அவள் புறக்கணிப்பால் வந்த கோபத்தையும் சேர்த்து அவளுக்கு திட்டினான். விஷ்வாவோ, "வேணாம்டி பாவம் கஷ்டப்பட்டு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்கேன், கெடுத்துறாதே ப்ளீஸ்" என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினான்.

உடனே கயல், "அண்ணா ப்ளீஸ் அண்ணா... ஜாலி தானே" என்று கெஞ்சியே விஷ்வாவை சம்மதிக்க வைத்தவள் மகாலிங்கத்தின் பி.ஏ வை கூப்பிட்டு அப்பா வர சொல்வது போல மித்ராவுக்கு சொல்லுங்க என்று சொல்ல அவரோ தயங்கியபடி சாணக்கியனை பார்த்தார். அவனோ அவரை பார்க்காமலே, "கயல் சொல்றத செய்ங்க" என்று சொல்ல அவரால், 'என்ன குடும்பம்டா இது?' என்று மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

கௌதமோ அதிர்ச்சியுடன், "நீயுமாடா" என்ற தோரணையில் சாணக்கியனை பார்க்க கெளதம் பார்ப்பதை உணர்ந்தவன் நிமிர்ந்து அவனை நோக்கி கண்ணடித்து விட்டு பத்திரிக்கையை புரட்டினான். கெளதம் சாணக்கியனின் நெருக்கம் வீட்டிலுள்ள அனைவர்க்கும் சந்தேகமாக இருந்தாலும் கேட்டால் பதில் வராது என்று அறிந்தவர்கள் மௌனமாக அவர்களை வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.

இரவு நிகழ்ச்சிக்காக வீட்டில் உடை எல்லாம் ரெடி பண்ணி முடித்த மித்ரா கட்டிலில் படுத்து இளைப்பாறிய சமயம் அவள் தொலைபேசி அலறியது.

அவள் தொலைபேசிக்கு அழைத்த மகாலிங்கத்தின் பி.எ அவளிடம் அவசரமாக பாதுகாப்பு கடமைக்காக மகாலிங்கம் வர கூறியதாக கூறவும் அதிர்ந்தவள், "எப்படி லீவுல இருக்கும் போது மாமா கூப்பிடுவார்?" என்று கேட்க அவரோ, "கொஞ்சம் அவசரமாம்" என்றார்.

அவர் மேல் எல்லையற்ற நம்பிக்கை இருப்பதால் மித்ராவும் மறு பேச்சு பேசாமல் ஒரு கடமை வீராங்கனை ஆக காக்கி சட்டையை அணிந்து தொப்பியையும் அணிந்தவள் ஆபிசுக்கு அழைத்து ஜீப்பை வர சொல்லி புறப்பட்டாள். அவள் எங்கு செல்கிறாள் என்று தெரியாமல் தடுக்க வந்த தாயிடமும் வசுந்தராவிடமும், "எனக்கு கடமை தான் முக்கியம்" என்று வீர வசனம் பேசியவள் சிறிது நேரத்தில் மகாலிங்கம் வீட்டை அடைந்தாள்.

மகாலிங்கம் அறைக்குள்ளேயே அடைந்து கிடைக்க அவள் வருவதை பார்த்த பி.ஏ தலை மறைவானார். உள்ளே கம்பீர நடையுடன் வந்தவள் அங்கிருந்த நால்வரையும் ஆச்சரியமாக பார்க்க சாணக்கியனோ அவளை கலாய்ப்பதற்கு பிள்ளையார் சுழியை போட்டான்.

"இப்படியே பார்த்திட்டு நின்றால் எப்படி? உங்க டிபார்ட்மென்ட்ல சலியூட் அடிக்க சொல்லி தரலையா?" என்று சாணக்கியன் அவளிடம் கேட்க அவளும் சலித்தபடி அவனுக்கு சலியூட் அடித்தாள்.

அந்நேரம் பார்த்து டி வி பார்த்துக் கொண்டிருந்த கெளதம் அவளை பார்க்க, 'இவரும் சலியூட் எதிர்பார்க்கிறார் போல... அவராக கேட்க முதல் நம்மளாகவே அடிப்போம்…. இந்த வீட்ல மாறி மாறி சலியூட் அடிச்சே நம்ம காலம் போயிரும் போல' என்று சலித்தபடி நினைத்தவள் அவன் பெரிய அதிகாரி என்ற மதிப்பினால் அவனையும் நோக்கி சலியூட் அடித்தாள்.

அவள் அடித்ததை கெளதம் உட்பட அனைவரும் ஆச்சரியமாக பார்க்க கயலோ, "இங்க பாரு விச்சு நம்ம சாணக்கியன் அண்ணா கேட்டு தான் சலியூட் அடிக்கிறாங்க... சிலருக்கு கேக்காமலேயே கிடைக்குதுப்பா" என்று சொல்ல அதிர்ந்த மித்ரா, 'சும்மாவே அண்ணா என்றால் விஷ்வா பொங்குவான்... இவ வேற ஏத்தி விடுறாளே' என்று பயந்தபடி அவனை பார்க்க அவனோ எதையும் சட்டை செய்யாது சிரித்தபடியே அவளை உச்சி முதல் பாதம் வரை ரசித்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் இரு கன்னங்களும் வெட்கத்தை பூசினாலும் உடுத்தி இருக்கும் யூனிபோர்முக்கு மரியாதையை அளித்து உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டாள்.

அந்நேரம் பார்த்து வந்த சித்ராவோ, "என்னம்மா லீவு டைம்ல இப்படி வந்து நிக்கிற ?" என்று கேட்க, "மாமா தான் எங்கேயோ போக வர சொன்னார்." என்று சொன்னாள். "இல்லையே இருக்காதே... உனக்கு யார் சொன்னது?" என்று கேட்க அவரோட பி.ஏ என்றாள்.

சித்ரா அவரை அழைக்க பதுங்கி வந்தவர் திரு திருவென முழித்தார். "என்ன இதெல்லாம்?" என்று சித்ரா அழுத்தமாக கேட்க அவரின் சங்கடத்தில் பரிதாபப்பட்ட சாணக்கியன், "கயல் தான் மித்ராவை பார்க்க ஆசைப்பட்டா... நான் தான்மா அவர்கிட்ட சொல்ல சொன்னேன்." என்று சொல்ல மித்ராவோ சாணக்கியனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

சித்ரா உடனே கயல் முதுகில் ரெண்டு அடி போட்டவர், "என்னடி விளையாட்டு இதெல்லாம் ?" என்று கேட்டபடி, "நீ வாம்மா " என்று மித்ராவை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

உள்ளே அழைத்துச் சென்றவர் அவர் செய்திருந்த முறுக்கை சாப்பிட கொடுத்தார். பின்னால் கயலும் செல்ல மந்திரித்து விட்ட கோழி போல விஷ்வாவும் பின்னால் சென்றான். "என்னம்மா மாமியாரும் மருமகளும் நடத்துறீங்க" என்றபடி உள்ளே வந்தவளிடம், "இருடி உனக்கு இருக்கு" என்றபடி முறுக்கை சாப்பிட தொடங்கினாள் மித்ரா.

பின்னால் வந்த விஷ்வாவோ மித்ராவை நெருங்கி அவள் கையில் மிச்சமிருந்த முறுக்கை கடித்து சாப்பிட, "டேய் நாங்களும் இருக்கோம்டா" என்று கயலும் சித்ராவும் ஒரு சேர சொன்னார்கள். மித்ராவுக்கோ சங்கடமாக போக விஷ்வாவை முறைத்து பார்த்தாள்.

அவள் பார்வையை சட்டை செய்யாதவன் அவளை விழுங்குவது போல பார்க்க, 'இவன் வேற குடும்ப மானத்தை வாங்குறானே' என்று நினைத்த கயல், "இந்தாடா தொடச்சுக்கோ" என்று டிஷ்யூவை கொடுத்தாள். "ஏய்" என்றபடி விஷ்வா அவளை துரத்த தொடங்க அங்கிருந்து பின்னால் பார்த்தபடியே விரைவாக ஓடியவள் ஹாலில் பாதி குடித்த ஜூஸ் கிளாசை வைக்க வந்த சாணக்கியனுடன் மோதினாள்.

அதில் ஜூஸ் இருவர் மீதும் கொட்டுப்பட கோபத்தில் உறுத்து விழித்தவன் மேல் விளையாட்டுக்காக மிச்ச ஜூஸையும் அவன் கையில் இருந்து பறித்து அவன் சட்டையில் ஊற்றினாள். உடனே அவன், "ஏய்" என்று அவளை பிடிக்க வரும் முன் விரைவாக ஓடியவள், அந்நேரம் பார்த்து கோலமாவு தட்டுடன் வந்த வேலையாள் மீதும் மோதி கீழே விழ கோலமாவு அவள் மேல் முகம் கூட தெரியாதளவு முழுதாக கொட்டுப்பட்டிருந்தது. அதை பார்த்து கெளதம் உட்பட அனைவரும் கல கலவென சிரிக்க தொடங்கினர்.

கீழே விழுந்தவளின் தலை மேல் கோலமாவு முழுவதும் இருக்க பின்னால் அவளை துரத்தியபடி ஓடி வந்த விஷ்வாவும், "ஐயோ பாவம்" என்று உச்சு கொட்டி சிரித்தான்.

கயல் உடனே சுதாரித்தவள் எழுந்து நின்று விஷ்வாவிடம் ஓடிச் சென்று, "ஐ லவ் யு அண்ணா" என்றபடி அவனை அணைக்க கோலமாவு அவனிலும் பட்டது."என்னடி பண்ற?" என்று அவளை தள்ளியவனை பார்த்து அவள் சிரித்து விட்டு கையை விரித்தபடி சாணக்கியனை நெருங்க சாணக்கியனோ பாய்ந்து தள்ளிச் சென்றான்.

அதை பார்த்த கெளதமுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர அவனும் முத்து பற்கள் தெரிய சத்தமாக கள்ளம் கபடமின்றி சிரித்தான்.

அப்போது அங்கு வந்த சித்ரா கெளதம் சிரிப்பை பார்த்து ஒரு கணம் அதிர்ந்து நின்றார். அவன் சிரிப்பை பார்த்து அவர் மனதில் ஏதோ உறுத்த அவர் கண்கள் தானாக கலங்கியது. கண்களை துடைத்துக் கொண்டு உள்ளேச் சென்றவருக்கு அவன் சிரித்த முகமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

சித்ரா, கெளதம் மீது ஆரம்பத்தில் கோபமாக இருந்தாலும் மகாலிங்கத்தை இரு தடவை காப்பாற்றியதில் இருந்து அவனுடன் இனம் புரியாத பாசம் அவருக்கு உருவாகி இருந்தது.

சமையலறைக்குள் சென்றவர் பூந்தி லட்டை ஒரு தட்டில் போட்டு எடுக்க, அந்நேரம் சமையலறைக்குள் நுழைந்த விஷ்வா அதில் கை வைக்க போக விஷ்வாவின் கையை தட்டி விட்டவர் விறு விறுவென ஹாலுக்கு சென்றார்.

'பெரிய அண்ணனுக்கு போல' என்று நினைத்த விஷ்வாவும் அதை பற்றி அலட்டாமல் மித்ராவுடன் தனது ரொமான்சை சமையலறையிலேயே தொடர்ந்தான்.

அதனிடையில் கெளதம் எழுந்து உள்ளேச் செல்ல போக அவனை நோக்கி ஓடி வந்த சாணக்கியன், "உன் பொண்டாட்டிய புடிடா" என்றபடி அவன் பின்னால் போய் நின்றான்.

துரத்தி வந்த கயலும், "அண்ணா இப்போ நீங்க வராட்டி சேதாரம் அதிகமாக இருக்கும்" என்றபடி அவனை எட்டி பிடிக்க போக கௌதமோ அவள் சென்ற திசையில் அசைந்து அவளுக்கு தடை போட்டான். அவனின் செயலில் சினம் எழ தனது இரு கைகளையும் இடுப்பில் குற்றி, "நீங்க இப்போ தள்ள போறீங்களா இல்லையா?" என்று கேட்டாள்.

இல்லை என்று தலை ஆட்டியவன், "கட்டி பிடிக்கணும் என்றால் என்ன கட்டி புடிச்சுக்க." என்று சொல்ல கயலும் அவனை முறைத்தபடி திரும்பி நடக்க தொடங்கினாள்.

"டேய் நானும் இருக்கேன்டா" என்று சாணக்கியன் சொல்ல அவன் புறம் திரும்பியவன், "உன்ன காப்பாத்த தான் டா" என்று சொல்லி கண்ணடித்து விட்டு அவனுடன் கையை அடித்துக் கொண்டான். சாணக்கியனும், "நம்பிட்டேன்" என்று சொல்லி சிரிக்க, அந்நேரம் கௌதமின் பின்னால் போய் நின்ற சித்ரா, "கிருஷ்ணா" என்று நெகிழ்ச்சியாக அழைத்தார். அவ்வழைப்பில் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற கெளதம் நேரே நின்ற சாணக்கியனை அதிர்ச்சியாக பார்க்க, சாணக்கியனும் அதிர்ந்து கெளதம் பின்னால் நின்ற சித்ராவை எட்டி பார்த்தான்.

தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியபடி திரும்பிய கௌதமிடம் பூந்தி லட்டை நீட்ட அவன் அதிர்ச்சியில் மயக்கம் வராத குறையாக அவரை பார்க்க, அவரே எடுத்து அவன் வாய்க்கு அருகில் கொண்டு சென்று, "சாப்பிடுப்பா" என்றார்.

அதில் அதிர்ந்து ரெண்டடி பின்னேச் சென்றவன் அதை கைகளில் வாங்கிக் கொண்டான்.

ஆனால் சித்ரா கண்ணிலிருந்து கண்ணீர் வழிய பதறிய கயல், "ஏன் ம்மா அழுகுறீங்க?" என்று கேட்டு அவர் அருகில் ஓடி வந்தாள்.

"இல்லம்மா நம்ம மலர் நினைவும் கிருஷ்ணா நினைவும் வந்திடுச்சு... இப்போ எங்க இருக்காங்களோ தெரியல... அவளுக்கு குழந்தை வேற பிறந்திருக்கும். நம்ம கிருஷ்ணாவுக்கு கூட பூந்தி லட்டு என்றால் ரொம்ப இஷ்டம்... கெளதம் தம்பி சிரிக்கும் போது நம்ம கிருஷ்ணாவை பார்க்கிற போலவே இருக்கு" என்றார்.

அவர் கூற்றில் அதிர்ந்தவன் கண்ணீரை கட்டுப்படுத்தியபடி நின்றுக் கொண்டிருந்தான். கயலோ, "அந்த குண்டன் தானே, எனக்கும் தராம பூந்தி லட்டு சாப்பிடுவான். இப்போ எப்படி இருப்பானோ தெரியல அம்மா??? வளர்ந்து என்னை வேற கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லிக்கிட்டே இருப்பான்... அவனை பேசாம கட்டி இருக்கலாம். கிருஷ்ணாவின் வெகுளித் தனம் எங்கே ? நீங்க இப்போ சொல்றவரின் முரட்டுத்தனம் எங்கே? ஏணி வச்சாலும் எட்டாதும்மா... கிருஷ்ணா செல்லம் கண் மூக்கு வாயே தெரியாதளவு சொக்கு பேபி அவன். நீங்க சொல்றவர் முகத்தில சதையை தேடி பிடிக்கணும் கிருஷ்ணா கன்னத்தை கடிச்சு பார்க்கணும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை" என்று கௌதமை எரிச்சல் படுத்தும் பொருட்டு அவனை ஒர கண்ணால் பார்த்தபடி பெரு மூச்சோடு சொன்னாள். அந்த கிருஷ்ணாவும் இந்த கௌதமும் ஒன்று என அறியாத அந்த பாவை.

கௌதமுக்கோ முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்தியபடி சாணக்கியன் அறைக்கு விறு விறுவென சென்று கதவை அடைத்துக் கொண்டான். சாணக்கியனை தவிர அனைவரும் கயல் கிருஷ்ணாவை பற்றி பேசியதில் கோபம் கொண்டே கெளதம் அறைக்குள் செல்கிறான் என்றே நினைத்தனர்.

ஆனால் உண்மை தெரிந்த சாணக்கியன் கண்களும் கலங்கி இருந்தன.


கட்டிலில் கண்ணீருடன் மல்லாக்க படுத்த கௌதமுக்கு பழைய நினைவுகள் சுழன்றது. அவனை தொந்தரவு செய்ய விரும்பாத சாணக்கியன் ஜீப்பை எடுத்துக் கொண்டு வெளியச் சென்றான். அவனும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
 
Top