ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 17

அடுத்த நாள் அவள் எழுந்த நேரம் அவன் வீட்டில் இல்லை. காலையிலேயே திருமண வேலைகளை பார்க்க கிளம்பி இருந்தான்...

அவள் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு சென்று இருந்தாள்.

அவன் பாடம் எடுக்க வந்தான் தான்...

அவனை பார்த்ததுமே கூச்சமாக இருந்தது...

முடிந்தவரை அவன் விழிகளை பார்ப்பதை அவள் தவிர்த்து இருக்க, அவன் அவளை கல்லூரியில் வைத்து எல்லாம் தொந்தரவு செய்யவே இல்லை...

அவள் வீட்டுக்கு வந்த நேரமும் அவன் இல்லை... புடவையின் ஜாக்கெட் அறைக்குள் இருந்தது...

எடுத்து வைத்து விட்டு சென்று இருக்கின்றான் என்று புரிய, அணிந்து பார்த்தாள்.

கட்சிதமாக தான் இருந்தது...

'அளவா தானே இருக்கு, இதுக்கு எவ்வளவு கதைச்சிட்டாங்க' என்று நினைத்துக் கொண்டாள்.

இப்படியே இரு நாட்கள் நகர்ந்து இருக்க, நாளைக்கு திருமணம் என்னும் நிலையில், ரித்விகாவிடம், "நாளைக்கு வர மாட்டன் டி" என்றாள்.

"ஏன் எங்க போக போற?" என்று அவள் கேட்க, "ஒரு வேலை இருக்கு, கள்ள சைன் அடிக்கிறியா?" என்று கேட்டாள்.

"விளையாடுறியா நீ? ஜனார்த்தனன் சேர்ட்ட மாட்டுனது நினைவு இருக்கா? நாளைக்கு அவர்ட பாடம் வேற இருக்கு" என்றாள்.

'அவரே வர மாட்டார்' என்று நினைத்தவளோ, "அவர்ட பாடத்துக்கு விட்டுட்டு மத்த பாடத்துக்கு அடிச்சு விடு டி, ப்ளீஸ்" என்று கெஞ்ச, "என்னை சரியா அரியண்டப்படுத்திட்டு இருக்கா, சரி அடிச்சு தொலைக்கிறேன்" என்று சொல்ல, அவளும் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.

அன்று இரவும் ஜனார்த்தனனை பார்க்க கிடைக்கவில்லை...

அவள் விழிகள் அவனை தேடி களைத்து இருக்க, உறவினர்கள் வீட்டுக்கு வந்து போனார்கள்...

எல்லோரும் கோதாவரியின் பக்கத்து ஆட்கள் தான்...

கனகசிங்கம் பக்கம் பெரிதாக உறவினர்களுக்கு சொல்லவில்லை...

புருஷோத்தமனின் லீலையால் சொல்லி செய்யவும் தயக்கம் தானே...

ஜனார்த்தனன், பவித்ரன் மற்றும் இளஞ்செழியன் திருமண வேலையில் ஓடி திரிய, அங்கே வந்த உறவுக் காரப் பெண்ணோ, "நாளைக்கு கல்யாணத்த வச்சுட்டு, கைல மெஹந்தி வைக்காம இருக்கீங்க? ஜனா அண்ணா உங்களுக்கு வச்சு விட சொன்னவர், அதுக்கு தான் வந்தனான், சரி வாங்க, வச்சு விடுறேன்" என்று நாராயணியிடம் சொல்லி, அவள் எடுத்து வந்து இருந்த மருதாணியை வைக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளுக்கு பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை என்றாலும், தேடி வந்த பெண்ணை அனுப்ப முடியாதே என்று மருதாணி வைத்துக் கொண்டவளுக்கு, ஜனார்த்தனனை பார்க்க தான் மனம் அலைபாய்ந்து கொண்டு இருந்தது...

அவன் அருகே இருந்தாலும் தொந்தரவு, இல்லை என்றாலும் ஏக்கம்...

என்ன மாதிரியான உணர்வுகள் இது? என்று தான் தோன்றியது...

மருதாணியை பார்த்துக் கொண்டு இருந்தவளது கவனம் சிதறியது அவன் குரல் கேட்டு...

அலைபேசியில் யாருக்கோ திட்டிக் கொண்டு தான் வந்தான்.

"நாளைக்கு நேரத்துக்கு சொன்ன வேலை நடக்கல என்டா மூஞ்சை பேத்திருவன்" என்று கர்ஜித்துக் கொண்டே வர, எல்லாரும் சட்டென திரும்பி பார்த்தார்கள்.

'எதுக்கு இப்பிடி ஏசுரார்' என்று தான் நாராயணி நினைத்துக் கொண்டாள்.

அதுவும் அவ்வளவு பேர் முன்னே அவன் இப்படி பேசிக் கொண்டு இருப்பது நெருடலாக இருந்தது...

அவன் குரலை கேட்டதுமே கல கலவென இருந்த இடமே அமைதியாகி விட்டது...

அவனுக்கு தான் கோபம் வந்தால் உச்சத்தில் வருமே...

கனகசிங்கமோ, "என்னப்பா பிரச்சனை?" என்று கேட்க, "அந்த வீடியோ காரன் தான்... கடை நடத்துனா ஒழுங்கா ஸ்கெடியூல் போடோணும்... இப்ப க்லாஷ் ஆகுது எண்டா நான் என்ன செய்யுறது? கை நீட்டி காசு வாங்குனான் எல்லா" என்று சொல்லி விட்டு பவித்ரனை பார்த்தவன், "கொஞ்ச நேரத்துல எடுத்து நீயே கதை... நான் என்ட கண்ட மாதிரி ஏசிருவேன், அவன் மட்டும் நாளைக்கு சொதப்புனா இனி அவன் இந்த பிசினஸ ஜென்மத்துக்கும் நினச்சு பார்க்க ஏலாது எண்டு சொல்லி வை" என்றான் மிரட்டலாக...

நாராயணிக்கு ஜனார்த்தனனின் பேச்சுக்கள் அதிகப்படியாக தோன்றின.

"நாளைக்கு கல்யாணத்த வச்சுட்டு கோபப்படாம டீயை குடி" என்று கோதாவரி டீயை கொடுக்க, பவித்ரனோ, "எதுக்குடா இப்படி எகிறி பாஞ்சுட்டு இருக்கா? நான் அவன்ட்ட கதைக்கிறேன்" என்றபடி அவனுடன் பேச சென்று விட்டான்...

ஜனார்த்தனன் டீயை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து நின்று தான் குடித்தான்...

நாராயணி மெதுவாக எழுந்து அவன் அருகே வந்தாள்.

கைகள் இரண்டிலும் மருதாணி...

"ஏன் இவ்வளவு கோபம்?" என்று கேட்டாள்.

"அவன் செஞ்ச வேலைக்கு கொஞ்ச சொல்றியா?" என்று கேட்டான்.

"ஏதோ தெரியாம நடந்துட்டு" என்று அவள் சொல்ல, "அது என்ட பிரச்சனை இல்லை, அவன் காசு வாங்க முதல் எல்லாம் சரியா பார்த்துக் கொள்ளனும், அவன் சொல்ற நேரத்துக்கு நான் தாலி காட்டோணுமா?" என்று சீறினான்.

"சரி விடுங்களேன்" என்று அவள் கேட்க, "விட முடியாது டி, நான் இப்பிடி தான், நீ கொஞ்சம் பொத்திட்டு இரு" என்றான்.

கோபத்தில் அவளுக்கும் திட்டு விழுந்தது...

அவளும் அவனை வெறித்து பார்த்து விட்டு நகர, "பச்" என்றபடி நெற்றியை நீவியவன், "நாராயணி" என்றான்.

அவள் விறு விறுவென கண்கள் கலங்க செல்ல, சட்டென எட்டி அவளை மறித்தபடி நின்றவள், "கூப்பிட்டுட்டு இருக்கேன் எல்லா" என்றான்.

"நீங்க கூப்பிட்டா நான் நிக்கோனுமா? நான் சொன்னா நீங்க என் மேலயும் ஏறி பாய்வீங்க, நீங்க சொன்னா நான் செய்யோணுமா?" என்றான்.

"உனக்காக என்ட குணத்தை மாத்த எல்லாம் ஏலாது, இது தான் நான், அத விடு, மருதாணி போட்டுட்டியா" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை பார்க்க, சட்டென கையை பின்னால் எடுத்தவள், "காட்ட மாட்டேன்" என்றாள்.

அவனோ டீ கப்பை அங்கே இருந்த படியில் வைத்து விட்டு, அவள் அருகே வர, அவளுக்கு அதுவரை தேங்கி நின்ற கண்ணீர் சட்டென வழிந்தது...

கையில் மருதாணி துடைக்கவும் முடியவில்லை...

தோள்வளைவில் துடைக்க முயன்றாள்.

"இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்கா?" என்று கேட்டுக் கொண்டே, கையினை நீட்டி அவள் கண்ணீரை துடைத்து விட்டான்...

அவனை முறைத்துப் பார்த்தாள்.

"இப்ப என்ன?" என்றான்.

"நான் உள்ளே போகணும், தள்ளுங்க" என்றாள்.

"சரி போ" என்று சொல்ல, அவளும் அவனை தாண்டி உள்ளே சென்று இருக்க, அவள் முதுகை பார்த்து விட்டு பெருமூச்சுடன், அவ்விடம் வந்த பவித்ரனை பார்த்தான்.

"அவன் நல்லா பயந்துட்டான், நேரத்துக்கு வாறன் எண்டான்" என்று சொல்ல, "அதுக்கு தான் கிழிக்கிறது" என்று சொன்னான் ஜனார்த்தனன்.

அன்று இரவு வீடு கலகலவென இருக்க, நேரத்துக்கே நாராயணியை சென்று தூங்க சொல்லி விட்டார் கோதாவரி...

அறைக்குள் வந்தவள் தாயின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அழுகையாக வந்தது...

என்ன தான் கவனத்தை அங்கும் இங்கும் திருப்பினாலும் அவளால் மீள முடியாத இழப்பு அது...

'என்ட கல்யாணத்தை பார்க்க இல்லாம போய்ட்டிங்களே அம்மா' என்று கேட்டவளுக்கு விம்மலுடன் அழுகை வர, அப்படியே தூங்கியும் போனாள்.

காலையில் எழுந்தவள் வழக்கமாக அங்கே இருக்கும் கருணாவின் படத்தில் தான் கண் முழிப்பாள்.

இன்று புகைப்படத்தை காணவில்லை...

பதறி விட்டாள்.

இன்று திருமண நாள் வேறு...

தாயின் ஆசீர்வாதம் இல்லாமல் திருமணமா?

வேகமாக எழுந்து, "மாமி, அம்மாட ஃபோட்டோ" என்று சொன்னவள் கண்ணில், அங்கே ஹாலில் கருணாவின் புகைப்படத்தை மாட்டிக் கொண்டு இருந்த ஜனார்த்தனன் தான் தென்பட்டான்.

அவன் தான் எடுத்து சென்று இருக்கின்றான் என்று தெரிந்தது...

"இங்க எதுக்கு?" என்று கேட்க, அவளை திரும்பி பார்த்தவன், "கோவிலுக்கு போகக்குள்ள சேர்ந்து கும்பிட்டுட்டு போகலாம், இங்கேயே இருக்கட்டும்" என்று சொன்னவன் கையில், "அண்ணா பூ மாலை கட்டிட்டேன்" என்று அங்கு இருந்த பெண் அதனை கொடுக்க, அவனே அதனை புகைப்படத்துக்கு போட்டு விட்டான்...

அவளுக்கு அழுகை விம்மி வெடித்துக் கொண்டு வந்தது...

அவனை பற்றி கருணாவின் மனதில் இருக்கும் விம்பமே வேறு ஆயிற்றே...

அவன் தான் மருமகன், அவன் நல்லவன் என்று தெரியாமலே இந்த உலகத்தை விட்டு போய்விட்டாரே.

அவளுக்கு அழுத்தமாக இருக்க, சுவரில் சாய்ந்து, கண்ணீருடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அவள் அருகே வந்தவன், "நல்ல நாள் அதுவுமா அழுதுட்டு இருக்காம போய் குளி, மேக்கப் அக்கா வந்திடுவா" என்றான்.

"மேக்கப் எல்லாம் எதுக்கு?" என்றாள்.

"பச், அதெல்லாம் தேவை தான், கூட கதைக்காதடி, எனக்கெல்லாம் பொறுமை சரியான குறைவு... நீ இப்படி கதைச்சிட்டே இருந்தா நல்ல நாள் எண்டும் பார்க்காம ஏசி போட்ருவேன், போய் குளி" என்றான்.

"சொஃப்ட் ஆஹ் கதைக்கவே வராது எல்லா" என்றபடி அவள் திரும்பி நடக்க, "நீ சொல்லி தாவன்" என்றான்.

"ம்ம் இண்டைக்கு இருந்து சொல்லி தாறன்" என்று அவனை திரும்பி பார்த்து மென் புன்னகையுடன் சொல்லி விட்டு, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் குளித்து விட்டு வரவும், மேக்கப் செய்யும் பெண் வரவும் நேரம் சரியாக இருந்தது...

அழகாக அவளுக்கு புடவையை கட்டி விட்டாள்.

மெதுவாக மேக்கப்பும் போட்டு இருக்க, அங்கே வந்த கோதாவரியோ, "இந்த தங்கம் எல்லாம் போடு, இமிடேஷன் வேணாம்" என்று மேக்கப் செய்யும் பெண்ணிடம் சொல்ல, "ஐயோ மாமி, இது எல்லாம் வேணாம், உங்கடது எல்லா" என்றாள் நாராயணி...

"என்டதா? ஜனாவுக்கு தெரிஞ்சா எனக்கு ஏசுவான்... உனக்கு எண்டு அவன் புதுசா வாங்குனது... நேரத்துக்கே குடுத்தா நீ வேணாம் எண்டு சொல்லுவா எண்டு என்னட்ட தந்து வச்சு இருந்தான்" என்று சொல்ல, அவளுக்கு அதனை பார்த்ததும் அழுத்தம் இன்னும் கூடியது...

அவளுக்காக என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கின்றான்...

கருணா இருந்து இருந்தால் அவனுக்கு கோவிலே கட்டி இருப்பார்...

மகளை இப்படி தாங்கும் மாப்பிள்ளையையும் குடும்பத்தையும் யாருக்கு தான் பிடிக்காது?

அவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வர, "ஐயோ அழாதீங்க, மேக்கப் டிஸ்டர்ப் ஆயிடும்" என்று சொல்லி, அவள் கண்ணீர் கீழே வழியாமல் அழகாக துடைத்து விட்ட மேக்கப் செய்யும் பெண்ணோ, "இப்படி ஒரு புருஷன் கிடைக்க நீங்க குடுத்து வச்சு இருக்கனும்... முக்கியமா இப்படி ஒரு மாமியார் எல்லாம் கிடைக்கவே மாட்டாங்க" என்று சொல்ல, அவள் இதழ்கள் அழகாக சந்தோஷமாக விரிந்து கொண்டன...

நீல நிற முதல் கூறைப் புடவையில் தேவதையாக இருந்தாள் நாராயணி...

அவள் சும்மாவே பேரழகி...

இன்று பிரபஞ்ச அழகியாக தான் இருந்தாள்.

அவள் ஆயத்தமாகி வெளியே வரவும், அங்கே ஜனார்த்தனன் வரவும் நேரம் சரியாக இருந்தது...

அவன் வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான்.

அவன் உயரத்துக்கு எடுப்பாக வேறு இருந்தது...

அவளுக்கே அவனை பார்க்க பார்க்க பிடித்து இருக்க, "வடிவா இருக்கா நாராயணி" என்றான் அவன் அத்தனை பேர் முன்னிலையில்...

கூச்சமாகி விட்டது...

இங்கே வைத்து தான் அவன் சொல்ல வேண்டுமா? என்று தான் தோன்றியது...

தலையை தாழ்த்திக் கொண்டே, வெட்கத்தை அடக்க கஷ்டப்பட்டாள்.

அவர்களை சுற்றி சுற்றி புகைப்பட காரர்கள் புகைப்படம் எடுக்க, ஒன்றாக கருணாவை வணங்கி விட்டு, கனகசிங்கம் மற்றும் கோதாவரியின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டார்கள்...

பவித்ரனுடன் ஆயத்தமாகி வந்திருந்தாள் திவ்யா...

இன்று தான் நாராயணியை பார்க்கின்றாள்...

அப்பழுக்கற்ற அழகு.

"வடிவான பிள்ளை எல்லா" என்றாள் இளஞ்செழியனிடம்.

"உன்னை விட குறைவு தான்" என்று அவன் சொல்ல, அவளுக்கு சிரிப்பும் வந்து விட்டது...

"போதும்" என்றாள் வெட்கத்துடன்...

அடுத்து எல்லாரும் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள்...

இதே சமயம், நிர்மலாவுக்கு அழைத்த பவித்ரனோ, "அம்மா உங்கள் ஏத்தி போக வாறன், ரெடியா இருங்க" என்றான்.

அவரும், "நான் வெளிக்கிட்டுட்டேன்" என்று சொல்ல, "அப்பா வரலையா?" என்று கேட்டான்.

அங்கே லுங்கியுடன் டி வி பார்த்துக் கொண்டு இருந்த புருஷோத்தமனைப் பார்த்து விட்டு, "இல்ல போல" என்று சொன்னார்.

சற்று நேரத்தில் பவித்ரனின் காரும் வந்து சேர, நிர்மலா வெளியேற போனார்.

"நான் வேணாம் ஆனா இந்த கல்யாணத்துக்கு மட்டும் போறா என? ஜனார்த்தனன் என்ட உடனே கோபம் எல்லாம் போய்ட்டா?" என்று அடக்க முடியாமல் கேட்டு விட, "பிழை விட்டவங்க மேல தான் கோபம் இருக்கும்... பாதிக்கப்பட்டவங்க மேல இருக்காது" என்று அழுத்தமாக சொல்லி விட்டு அவரும் வெளியேறி இருக்க, புருஷோத்தமனின் முகம் தான் கருத்துப் போனது.

தன் மீது அவ்வளவு வெறுப்பை கொட்டும் மனைவி ஜனார்த்தனனின் திருமணம் என்று சொன்னதும் கிளம்பி சென்றதை அவரால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

நாராயணி மீதும் கடும் கோபம் தான் அவருக்கு...

அவளுக்காக அவனுடன் அவர் சண்டை போட போயிருக்கின்றார்.

இன்று அவனையே திருமணம் செய்ய போகின்றாள்.

அவன் முன்னே தன்னை அவள் விட்டுக் கொடுத்த ஆதங்கமும் வலியும் மனம் நிறைய இருந்தது.
 
Top