ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

Sugumari

New member
அத்தியாயம் 17

இதனை எல்லாம் அறியாத பிரியந்தவோ அவளுக்கு அழைத்தான்...

கிரிதரன் அவள் அலைபேசியை அணைத்து வைத்து இருந்தான்...

அழைப்பு செல்லவே இல்லை.

களைப்பில் தூங்குகின்றாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

இதே சமயம் அறைக்குள் அழுதபடியே படுத்து இருந்தாள் ராதிகா...

கன்னம் விண் விண்ணென்று வலித்தது...

காதல் என்பதற்கே இப்படி ஒரு எதிர்வினை...

திருமணம் முடிந்து விட்டது என்று எப்படி கூறுவது...

பயமாக இருந்தது...

இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது.

அழுதழுதே தூங்கிப் போனாள்.

அவள் எழுந்த நேரம் மதியத்தை நெருங்கி இருந்தது...

பிரியந்தவனின் அலைபேசி எண் அவளுக்கு மனப்பாடம் தான்...

ஆனால் எப்படி தொடர்பு கொள்வது? லேண்ட் லைன் ஹாலில் இருந்தது...

பேசவும் முடியாது...

முகத்தை அடித்து கழுவியவளுக்கு அழுகை நிற்கவே இல்லை.

கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...

துடைத்துக் கொண்டாள்.

வீட்டில் சொல்வதற்கு முதல் இப்படி தெரிந்து பிரச்சனையாகும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

பயந்த சுபாவம் அவளுக்கு... அதுவும் கிரிதரன் என்றால் கால்கள் நடுங்கும்...

பிரியந்தவை திருட்டுத்தனமாக திருமணம் செய்ததே உலக அதிசயம் தான்...

அதனை தொடர்ந்து வெளியே வந்தவளிடம்,"மத்தியானத்துக்கு சோறும் கோழிக் கறியும் சமைச்சு வச்சு இருக்கிறன், சாப்பிடு" என்றார் கீதாஞ்சலி...

மகாதேவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார்...

அவளுக்கு தான் யாரையும் பார்க்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை...

மௌனமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

உணவு இறங்க மறுத்தது...

அழுகை தான் வந்தது...

கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கிக் கொண்டவளோ, சாப்பிட்டு முடிந்ததுமே, மகாதேவன் முன்னே வந்து நின்று விட்டாள்.

தட்டு தடுமாறி, "அப்பா" என்றாள்.

அவளை ஏறிட்டுப் பார்த்தவரோ, "நான் செத்த பிறகு அவனை கல்யாணம் பண்ணிக்கோ" என்று சொன்னார்...

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...

சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவளுக்கு, சட்டென கண்ணீர் கண்களில் நிரம்பி விட, அவரோ, "நேத்து கிரி உன்னை அடிச்சதால நான் எதுவும் பேசாம இருக்கேன், அதுக்காக நீ பண்ணுனது எல்லாம் சரி எண்டு ஆயிடாது" என்றார்.

என்ன சொல்வாள் அவள்?

ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்தபடியே அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

சிறைக்குள் இருக்கும் உணர்வு தான்...

கத்தி அழ வேண்டும் போல இருந்தது...

வாய்க்குள் அடக்கிக் கொண்டாள்.

இதே சமயம் பிரியந்த காலையில் இருந்தே அவளுக்கு அழைத்து களைத்து விட்டான்...

இன்னும் அலைபேசி அணைக்கப்பட்டு இருந்தது...

அவனுக்கோ யோசனை...

சாப்பாடு கூட இறங்கவில்லை...

அவள் நினைவு தானே...

என்ன நடந்தது என்று தெரிந்தாக வேண்டும்? எங்கே கேட்பது?

இரு நாட்கள் காத்திருந்தான். அதற்கு மேல் பொறுமை இல்லை.

அவனுக்கு உடனே நினைவுக்கு வந்தது என்னவோ அவனுடைய கல்லூரி நண்பன் பிரஹான் தான்...

அவன் எண்ணை தேடி அழைத்தான்...

அவனும் அலைபேசியை காதில் வைத்தவன், "பிரியந்த, என்ன திடீரெண்டு?" என்று கேட்க, அவனுக்கு எப்படி கேட்பது என்றும் தெரியாது...

அவனுடையதும் ராதிகாவுடையதும் திருமண விஷயம் யாருக்கும் தெரியாது அல்லவா?

சிறிய மௌனத்தின் பின்னர், "எனக்கு ஒரு ஹெல்ப்" என்றான்...

"வழக்கமா நீ தானே எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவா, நீயே என்னட்ட ஹெல்ப் கேக்கிறது அதிசயம் தான்" என்றான்..

குரலை செருமிக் கொண்டே, "ஊர்ல தானே" என்றான்...

"ம்ம் மட்டக்களப்புல தான்" என்றான் பிரஹான்..

"ராதிகா தெரியும் தானே" என்று கேட்டான் பிரியந்த...

"எந்த ராதிகா?" என்று அவன் கேட்க, "சிந்தூரிட ஃபிரென்ட்" என்றான் பிரியந்த...

சிந்தூரியின் பெயரைக் கேட்டதுமே பிரஹானிடம் ஒரு மௌனம், "ம்ம்" என்றான்.

"அங்க வந்ததுல இருந்து கோல் எடுத்தா எடுக்கிறாள் இல்லை, அவங்க வீட்ல என்ன நடந்தது எண்டு தெரியணும்" என்றான் பிரியந்த.

பிரஹானோ, "கூட வேலை செய்யுற பிள்ளை கோல் எடுக்கல எண்டு நீ ஃபீல் பண்ண மாட்டியே" என்றான்.

இதற்கு மேல் மறைத்து பயன் இல்லை என்று தோன்றியது...

பிரஹான் மீது பிரியந்தவுக்கு நம்பிக்கையும் இருக்க, குரலை செருமியவனோ, "கல்யாணம் கட்டிட்டேன்" என்றான்...

இப்போது அதிர்வது பிரஹானின் முறையாகிப் போன, "என்ன சொல்ற?" என்று கேட்டான்.

"ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டோம்" என்றான்...

பிரஹானுக்கு இப்போது புரிந்தது.

"ஆனா அவங்கட அப்பா" என்று ஆரம்பித்த பிரஹான் எப்படி மீதியை சொல்வது என்று தெரியவில்லை.

"சிங்களவனுகளை பிடிக்காது, அது தானே" என்று அவனே முடிக்க, "ம்ம்" என்றான் பிரஹான்.

ஒரு பெருமூச்சுடன், "இனி எதுவும் செய்ய ஏலாது, அவளுக்கு என்ன நடந்தது எண்டு தெரியணும்... ரெண்டு நாளா ஃபோன் ஓஃப்" என்று சொல்ல, பிரஹானோ, "நான் போக ஏலாது, சிந்தூரியும்" என்று ஆரம்பிக்க, "ம்ம் கேள்விப்பட்டேன், டிவோர்ஸ் ஆயிட்டா?" என்று கேட்டான்.

"ம்ம்" என்றான் பிரஹான்.

"எனக்கு என்ன சொல்றது எண்டு தெரியல" என்று பிரியந்த சொல்ல, "அத விடு, நான் விஜிட்ட சொல்றேன், அவள் பார்த்து சொல்லுவாள்" என்று சொல்ல, "ம்ம், ஆனா எங்கட விஷயம் இப்போதைக்கு ஒருத்தருக்கும் தெரிய வேணாம்" என்று பிரியந்தவும் வைத்து விட, பிரஹானோ அடுத்து அழைத்தது என்னவோ ராதிகாவின் கல்லூரி நண்பி விஜிக்கு தான்...

அவளும் அலைபேசியை காதில் வைத்தவள், "சொல்லுங்க அண்ணா" என்று கேட்டாள்.

"எனக்கு ஒரு ஹெல்ப்" என்றான்.

"ம்ம் சொல்லுங்க" என்று சொன்னவளிடம், "ஏன் எதுக்கு எண்டு கேட்காதே, ராதிகா வீட்ல போய் அங்க என்ன நடக்குது எண்டு பார்த்து சொல்றியா?" என்று கேட்க, விஜிக்கு காரணம் அறிய வேண்டும் என்று ஆவல் தான்...

ஆனால் கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

"சரி, அண்ணா, இண்டைக்கு சைட் ல நிக்கிறேன், நாளைக்கு காலைல ஃப்ரீ தான், அப்போ போய் பார்த்துட்டு வாறன். " என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

அன்று மாலை வேலை முடிந்ததும், வண்டியை எடுத்துக் கொண்டே, அவள் வந்தது என்னவோ ராதிகா வீட்டில் தான்...

இரு நாட்கள் சோர்வாக இருந்த ராதிகாவுக்கு இன்று புது பதட்டம் தொற்றிக் கொண்டது...

மாதவிடாய் வரவில்லை...

பாதுகாப்பாக அவர்கள் கலவி நடைபெற்றாலும் ஓரிரெண்டு தடவைகள் உணர்வுகளில் மத்தியில் இதனை எல்லாம் யோசிக்காமல் விட்ட நினைவு வந்து போக, தலையில் கையை வைத்துக் கொண்டு தான் அமர்ந்து இருந்தாள்.

கர்ப்பமாக இருப்பதாக உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது...

ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் நடுவே, இது புது பிரச்சனையாக உருவெடுத்து இருந்தது...

ஹாலில் மகாதேவனும் கீதாஞ்சலியும் பேசிக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது...

"கிரி எடுத்தான் கீதா, சதீஷ்ட வீட்டாக்கள் இண்டைக்கு பின்னேரம் வந்து ராதிகாவை பார்த்துட்டு போறதா சொல்லி இருக்காங்க, பொங்கலுக்கு முதல் அத கொஞ்சம் முடிச்சு விட்டா நிம்மதி" என்றார்...

அவளுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க இருக்கின்றார்கள் என்று அவளுக்கும் புரிந்தது.

பிரியந்தவிடம் சொல்லியாக வேண்டும்...

ஆனால் எப்படி என்று தானே தெரியவில்லை...

திருமணம் செய்து வைத்து விட்டால் என்ன செய்வது?

இதயம் இன்னும் படபடப்பாக, கீதாஞ்சலியோ, "வா, விஜி, என்ன இந்தப் பக்கம்?" என்று கேட்டாள்.

"ராதிகா வந்துட்டாளா?" என்று கேட்டாள் விஜி...

ராதிகாவுக்கு புருவம் சுருங்கியது...

அவள் வரப் போவதை யாரிடமும் அவள் சொல்லவில்லை...

விஜிக்கு எப்படி தெரியும் என்று யோசனை தான்...

மெதுவாக எழுந்து வெளியே வந்தாள்.

விஜியின் விழிகள் அவளில் தான் படிந்தது...

அழுதழுது முகம் வீங்கி போய் இருந்தது...

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, ஆனால் ஏதோ சரி இல்லை என்று மட்டும் தோன்றிக் கொண்டு இருந்தது.

ராதிகா அவளை பார்த்து வலுக்கட்டயமாக புன்னகைத்தபடி, "எப்படி இருக்க விஜி? கல்யாணம் எப்ப?" என்று கேட்டாள்.

"நாள் குறிச்சிட்டு இருக்காங்க, கெதியா நடக்கும் போல" என்று புன்னகையுடன் சொல்ல, ராதிகாவும் விஜி அருகே அமர்ந்தாள்.

அங்கே தான் மகாதேவன் இருக்க, வெளிப்படையாக பேசவும் முடியாத நிலை...

கீதாஞ்சலி விஜிக்கு பலகாரங்களை கொண்டு வந்து வைக்க, அவளோ, "பொங்கலுக்கு செஞ்சிங்களா அன்டி" என்று கேட்டாள்.

"பொங்கலுக்கும் தான், இண்டைக்கு நம்மட ராதிகாவை பொம்பிளை பார்க்க வாறாங்க, அதுக்கு செஞ்சம்" என்றார்.

"உண்மையாவா? மாப்பிள்ளை யாரு? சொல்லவே இல்லை" என்று விஜி ஆச்சரியமாக கேட்க, "கிரிட ஃபிரென்ட் தான்... ஜாதகம் பொருந்தி போச்சு... இண்டைக்கு பார்த்துட்டு போனா, அதிகமா கெதியா கல்யாணத்த முடிச்சு வச்சிட்டா, நமக்கு நிம்மதி" என்று பெருமூச்சுடன் சொல்ல, ராதிகாவுக்கு பெருமூச்சு...

"சொல்லவே இல்லையே டி" என்று விஜி சிரித்துக் கொண்டே கேட்க, ராதிகாவுக்கு கண்களை கலங்கி விட்டன.

உணர்வுகளை அடக்கிக் கொண்டே, "சாப்பிடு" என்றாள்.

விஜிக்கு அந்த உணர்வுகளே என்னவோ எல்லாம் எடுத்து உரைக்க, கொஞ்ச நேரம் பேசி விட்டு, கிளம்பியவள், அழைத்தது என்னவோ பிரஹானுக்கு தான்...

அவனும், "ஹெலோ" என்று அலைபேசியை காதில் வைத்துக் கொண்டே சொல்ல, "இண்டைக்கு ராதிகாவை பொம்பிளை பார்க்க, அவள்ட அண்ணாட ஃபிரென்ட் வாறாராம், அவளுக்கு முகம் சரி இல்லை. அழுத போல தான் இருக்கு" என்று சொல்ல, "தேங்க்ஸ் விஜி" என்று சொன்னவனுக்கு அவள் அழவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று தெரிந்தது...

பிரஹானோ அடுத்து அழைத்தது என்னவோ பிரியந்தவுக்கு தான்...

அவனும் பிரஹானுடைய அழைப்புக்கு காத்துக் கொண்டு இருந்து இருப்பான் போல, ஒரே அழைப்பில் எடுத்து விட்டான்...

"விஜி காலைல போய் ராதிகாவை பார்த்துட்டு வந்திருக்காள், இண்டைக்கு பின்னேரம் அவளை பொம்பிளை பார்க்க வாறாங்க போல, வீட்ல தெரிஞ்சு இருக்கும் எண்டு நினைக்கிறன், நிறைய அழுது முகம் வீங்கி கிடக்கு எண்டு விஜி சொன்னாள்" என்று சொன்னான் பிரஹான்.

"தேங்க்ஸ் பிரஹான்" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்த பிரியந்தவுக்கு சுர்ரென்று ஆத்திரம்...

அவன் உயிரை அழ வைத்து இருக்கின்றார்கள் என்று ஆத்திரம்...

இன்னொரு ஆடவனை மாப்பிள்ளையாக தேடுகின்றார்கள் என்று கோபம்...

ராதிகா விஷயத்தில் மட்டும், அவனுக்கும் பொறுமைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது...

அடுத்த கணமே, தனது நண்பன் ஒருவனுக்கு அழைத்தவன், "ரோஷித, நம்ம ஆட்களோட ரெடியா இரு, இப்போ மட்டக்களப்புக்கு போறோம்" என்றான்...

தன்னவளை தூக்கி வர அவன் முடிவெடுத்து விட்டான்...

அவனுக்கு இந்த பேச்சு, இறைஞ்சுதல் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்... அவள் வேண்டும் அவ்வளவு தான்...

எதையும் யோசிக்கவில்லை, சொன்ன அடுத்த அரை மணி நேரத்தில், அவர்களது வேன் மட்டக்களப்பை நோக்கி கிளம்பியது.

இதே சமயம், கிரிதரனோ ராதிகாவிடம் தான் மிரட்டலாக பேசிக் கொண்டு இருந்தான்.

"இங்க பாரு, சதீஷை பிடிச்சு இருக்கு எண்டு சொல்லணும், இல்ல எண்டா முகத்தை பேத்திருவேன், விளங்குதா?" என்று கேட்டான்.

அழுகை வந்தது...

இப்போது உண்மையை சொல்லவும் பயமாக இருந்தது..

கர்ப்பமாக இருக்கின்றாள் என்று அவளுக்கு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது...

கிரிதரனுக்கு கோபம் வந்து, கண்ட மேனிக்கு அவளுக்கு அடித்து, குழந்தைக்கு ஏதும் ஆகி விடுமோ என்றும் பயமாக இருந்தது.

"ம்ம்" என்றாள் கண்ணீரை உள்ளே இழுத்தபடி,

"அந்த ஜெயக்கொடிட மகன்ட நினைப்பு எல்லாம் தூக்கி போட்டுரனும் செரியா?" என்று கேட்டான்.

அதற்கும், "ம்ம்" தான்.

வேறு என்ன அவளால் கூறி விட முடியும்?

அன்று மதியம் அவளுக்கு உணவே இறங்கவில்லை...

ஒரு விதமான தலை சுற்றும், வாந்தி உணர்வும் கூட ஏற்பட ஆரம்பித்து இருந்தது...

சாப்பிட்டு விட்டு, கட்டிலில் படுத்து விட்டத்தை பார்த்தபடி இருந்தவள் அருகே சிவப்பு நிற பட்டுப் புடவையை கொண்டு வந்து வைத்த கீதாஞ்சலியோ, "இந்த சாரியை கட்டிட்டு ரெடி ஆகு, கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டு ஆக்கள் வந்திடுவாங்க" என்று சொல்ல, அவளுக்கு மனமே இல்லை.

சலிப்பாக எழுந்து குளிக்க சென்றாள்.

குளியலறைக்குள்ளும் அழுகை தான்...

குளித்து விட்டு வந்தவள், புடவையை அணிந்து கொண்டே, கீதாஞ்சலி எடுத்து வைத்து இருந்த ஆபரணங்களை அணிய ஆயத்தமானாள்.

இனி கொழும்புக்கு வேலைக்கு செல்ல விடுவார்களா? என்றும் தெரியவில்லை...

பிரியந்தவிடம் எப்படி விஷயத்தை சொல்வது என்றும் புரியவில்லை...

ஒவ்வொரு நகைகளால அணிந்தாள்.

அணியும் போது விம்மி வெடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.

இதே சமயம், கிரிதரனின் மனைவி விமலா அறைக்குள் நுழைந்தாள்.

கொஞ்சம் கெடுபிடி ஆனவள் தான்...

முகத்தில் அடித்த போல தான் பேசுவாள்.

"ராதிகா, கிரி சொன்னார், உனக்கு எதுக்கு சிங்களவனோட சகவாசம்?" என்று கேட்டாள்.

என்ன சொல்வாள் அவள்? எதுவும் சொல்லவில்லை...

"நல்ல பணக்காரன் எண்டதும் சரி எண்டு சொல்லிட்டியா?" என்று அடுத்த கேள்வி...

சுர்ரென்று வலி...

கோபமும் வந்தது.

அடக்கிக் கொண்டே, "இல்ல மச்சாள்" என்றாள் தலையை குனிந்தபடி.

இதே சமயம் ஹாலுக்குள் சத்தம் கேட்டது...

சதீஷின் வீட்டினர் வந்து விட்டார்கள் என்று புரிந்தது...

"வாங்க வாங்க" என்று கிரிதரன் மற்றும் மகாதேவன் வரவேற்றார்கள்...

விமலாவும் ஹாலுக்குள் செல்ல, இப்போது தான் ராதிகாவுக்கு மூச்சே வந்தது...

ஹாலினுள் எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்...

மகாதேவனோ, "கல்யாணத்தை கெதியா முடிச்சுரோணும்" என்று சொல்ல, "அதெல்லாம் கெதியா பண்ணிடலாம்" என்று சொன்னார் சதீஷின் தந்தை...

சதீஷுக்கும் ராதிகா மேல் ஆசை தான்...

அவள் அழகில் எப்போதும் மயக்கம் தான்...

கிரிதரனுடன் ஆர்வமாக பேசிக் கொண்டு இருந்தான் அவன்...

இதே சமயம், சதீஷின் தாயோ, "ராதிகாவை கூப்பிடுங்களேன்" என்று சொல்ல, விமலாவோ அறைக்குள் சென்று, "வரட்டாம் ராதிகா" என்றாள்.

அவளும் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, எழுந்தவள், வெளியே வந்து நிற்க, "வடிவா இருக்க ராதிகா, இங்க வா" என்று சதீஷின் தாய் சொன்னதும் இரு அடிகள் தான் வைத்து இருப்பாள்.


அவர்கள் வீட்டு வாசலில் ஒரு வேன் அதிரடியாக வந்து நின்று இருந்தது.
Wow😍 super 👍
 
Top