ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 17

அவன் இப்போது அழைத்து வந்தது என்னவோ பெண்கள் உடைகள் இருக்கும் தளத்துக்கு தான்...

"இங்க என்ன வாங்க போறார்??" என்று அவள் நினைக்க, குழந்தையை தூக்கிக் கொண்டே நடந்தவனோ நேரே நவநாகரீக உடைகள் இருக்கும் பகுதிக்கு சென்றான்.

அவளும் யோசித்துக் கொண்டே சின்ன சின்ன ஆடைகளை விழி விரித்து பார்க்க, "என் கூட வெளியே வரும் போது ஜீன்ஸ் டி ஷேர்ட் போட்டு கொஞ்சம் மாடர்ன் ஆஹ் வரணும்... இந்த சுடிதார் போட்டு பட்டி காடு போல வர்றது எனக்கு பிடிக்கல" என்றான்.

அவளுக்கு கோபம் வந்தது அடக்கிக் கொண்டே, "எனக்கு இதெல்லாம் போட்டு பழக்கம் இல்ல சார்" என்றாள்...

"பழகிக்கோ" என்று சொல்லிக் கொண்டே ஒரு டெனிம் ஜீன்ஸை ஒரு கையால் எடுத்து அவளிடம் நீட்டியவன், "ஃபிட் ஆன் பண்ணி பாரு" என்றான்.

"சார் நான் ஒரு குழந்தைக்கு அம்மா" என்றாள் கடுப்பாக...

"நானும் தான் ஒரு குழந்தைக்கு அப்பா... அதுக்காக நான் வேஷ்டி கட்டிட்டா இருக்கேன்" என்று கேட்டான்.

"என்ன இழவுடா இது" என்று தான் அவளுக்கு தோன்றியது...

அவனுடன் பேசி ஜெயிக்க முடியாது என்று அவளுக்கு நன்கு தெரியும்...

முயலுக்கு மூன்று கால் என்று அவன் சொன்னால் அதனை அடுத்தவர் ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நிரூபிக்கும் திறமை உடையவன்...

அவனுடன் பேசி பயன் இல்லை என்று நினைத்துக் கொண்டே அவன் நீட்டிய ஜீன்ஸை வாங்கியவளோ அதன் முட்டியில் இருந்த டிசைனை பார்த்துக் கொண்டே, "இது கிழிஞ்சு இருக்கு... வேற எடுத்துகிறேன்" என்றான்.

அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது...

"ஹேய் உனக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சமும் இல்லையா? இது டிசைன்... பொண்ணுங்க போட்டு பார்த்தது இல்லையா??" என்று எகிறினான்.

அவன் கோபம் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல...

ஆழ்ந்த மூச்சை விட்டபடி அவனை ஏறிட்டு பார்த்தவள், "அப்போ இத தான் போட்டாகணுமா?" என்று கேட்டாள்... அவனோ கோபத்தை எப்படி அடக்குவது என்று தெரியாமல் கையில் இருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் பதித்தவன், "உன் அம்மாவை போல ஒரு பட்டிக்காட்டை நான் வாழ்க்கைல கண்டதே இல்ல" என்று சொல்ல, மீண்டும் அவன் வார்த்தைகள் அவளுக்கு.தைத்தன...

அதற்கு மேல் அவனுடன் பேசவும் அவள் விரும்பவில்லை... விறு விறுவென அங்கே இருந்த ஒரு டீஷேர்ட்டையும் எடுத்துக் கொண்டே உடைமாற்றும் அறைக்குள் நுழைய போக, "ஃபிட் ஆன் பண்ணிட்டு வெளிய வந்து காட்டணும்" என்றான் அவன் அதிகாரமாக...

அவளோ கடையை சுற்றி நோட்டமிட்டு விட்டு அவனை பார்த்தவள், "இதுவும் உங்க கடையா??" என்று கேட்க, அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவனோ, "இந்த மாலே என்னோடது தான்" என்றான்.

அவளுக்கு நெஞ்சு வலி வராத குறை தான்...

அதிர்ச்சியில் இருமல் தான் வந்தது... தலையில் தட்டிக் கொண்டே உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தபடி, "எங்கெங்கே சொத்து இருக்குன்னு லிஸ்ட் எடுக்கணும் போல" என்று முணுமுணுத்துக் கொண்டாள்...

உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் கொடுத்த ஜீன்ஸை அணியவே மனம் இடம் கொடுக்கவில்லை...

ஆனாலும் மறுத்தாலும் விட மாட்டான் என்று அவளுக்கு நன்கு தெரியும்...

இதுவரைக்கும் இப்படியான உடைகள் அவள் அணிந்ததும் இல்லை...

கரிகாலன் உடன் இருந்த போதும் கூட, புடவை சுடிதார் தான் அணிவாள் அவள்...

வேறு வழி இல்லாமல் அதனை அணிய முற்பட்டாள்.

இதே சமயம் கையில் இருந்த தனிஷாவுக்கு சுற்றி இருப்பவற்றை காட்டிக் கொண்டே இருந்த வீரராகவன், "சார்" என்ற குரல் கேட்டு திரும்பினான்...

அங்கே நின்று இருந்தது அவனது கான்ஸ்ட்ரக்ஷனில் கணக்காளராக வேலை செய்யும் பெண் நேத்ரா...

அவளை புருவம் சுருக்கி பார்த்தவன், "எஸ் சொல்லுங்க" என்றான்...

"சார் நான் உங்க கான்ஸ்டராக்ஷன்ல வேலை பார்க்கிறேன்" என்று அவள் ஆரம்பிக்க, "எஸ் நேத்ரா தானே... நல்லா தெரியும்..." என்றான்...

அவன் கீழ் ஆயிரக்கணக்கான ஆட்கள் வேலை செய்கின்றார்கள்...

உள்நாட்டில் மட்டும் அல்ல, வெளி நாடுகளிலும் வேலை செய்கின்றார்கள்...

அத்தனை பேர் மத்தியிலும் தன்னை பற்றி அவன் தெரிந்து வைத்து இருப்பது அவளுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான்...

அதுவும் பெயர் சொல்லி அவன் பேசும் போது அவளால் அதனை நம்பவே முடியல...

"என் பேர் தெரியுமா சார்?" என்று கேட்டாள்.

"எஸ், தெரியும்... தனியாவா இங்க வந்த?" என்று கேட்க, அவளுக்கு சற்று தள்ளி நின்று இருந்த அவளது தாயையும் தந்தையையும் பார்த்து கண்களால் அழைத்தாள்...

அவர்களும் அவன் முன்னே வந்து நின்று புன்னகைக்க, "என் அப்பா, அம்மா கூட வந்தேன் சார்... இப்போ இங்க தான் மூணு பேரும் இருக்கோம்" என்றாள்.

நேத்ராவின் தந்தை ஜெயானந்தானோ, "குட் மார்னிங் சார்" என்று கையை குலுக்க, அவனும் ஒற்றைக் கையில் தனிஷாவை வைத்துக் கொண்டே அடுத்த கையை குலுக்குவதற்காக நீட்டினான்...

நேத்ராவின் தாய் மகாலக்ஷ்மியோ, "உங்க குழந்தையா சார்... ரொம்ப அழகா இருக்கா" என்று தனிஷாவின் கன்னத்தை வருட, அவனோ சிறிது நேரம் என்ன யோசித்தானோ தெரியவில்லை, "தூக்கி பாக்க போறீங்களா?" என்று கேட்டான்...

அவரும், "கொடுங்க சார்" என்று சொல்லிக் கொண்டே அவன் கையில் இருந்த தனிஷாவை வாங்கியவர், "ரொம்ப அழகா இருக்கா பேர் என்ன?" என்று கேட்டார்...

"தனிஷா" என்றான் அவன்...

"குழந்தையோட அம்மா" என்றார் அவர் இழுவையாக...

"ட்ரெஸ் ஃபிட் ஆன் பண்ண போய் இருக்கா, வருவா" என்றாள்.

நேத்ராவுக்கும் இன்று தான் அவனுக்கு திருமணம் ஆன விடயமே தெரியும்... கொஞ்ச நாட்களாக தான் அங்கே வேலை செய்கின்றாள்...

புது இடம் என்பதால் அவளும் அவனை பற்றி தூண்டி துருவவில்லை...

சைட்டுக்கு வந்த நேரம் வேலை சம்பந்தமாக ஒரு தடவை பேசி இருக்கின்றாள் அவ்வளவு தான்...

ஒரு தடவை பேசியதற்கே இவ்வளவு தூரம் நினைவு வைத்து இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை...

அவர்களுடன் பேசிக் கொண்டே நேத்ராவின் கையில் இருந்த உடைகளை பார்த்தவன், அப்படியே திரும்பி அங்கே நின்று இருந்த பில் போடுபவனிடம் கண்களை காட்டினான்... விலை குறைத்து போட சொல்கின்றான் என்று பில் போடுபவனுக்கும் புரிந்தது...

சம்மதமாக தலையை ஆட்டிக் கொண்டான்...

ஜெயானந்தானோ, "எவ்ளோ பெரிய மேனேஜிங் டைரெக்ட்டர், ஆனா ரொம்ப சிம்பிள் ஆஹ் இருக்கீங்க" என்றார்...

மென்மையாக புன்னகைத்தவனோ, "உங்களுக்கு ஒரு பொண்ணு தானா?" என்று கேட்க, அவருக்கோ சட்டென்று முகம் இறுகி போனது...

மகாலக்ஷ்மிக்கு கண்கள் சட்டென்று கலங்கி போக, "இல்ல மூத்த பொண்ணு" என்று அவர் ஆரம்பிக்க, "இறந்துட்டா" என்று ஜெயானந்தன் முடித்து வைத்தார்...

மகாலக்ஷ்மியின் கண்களோ அவர் வார்த்தைகளை கேட்டு கரித்துக் கொண்டு வந்தன...

அடக்கிக் கொண்டார்... நேத்ராவுக்கும் முகம் இறுகி போனது...

வீரராகவனோ அவரை ஆராய்ச்சியாக பார்த்து விட்டு, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, உடையை மாற்றி விட்டு தன்னை அருவருப்புடன் கண்ணாடியில் பார்த்த அக்ஷயாவோ, "இது என்ன இப்படி இருக்கு?" என்று யோசித்துக் கொண்டே கதவை திறந்து கொண்டே வெளியே வந்தாள்.

சுற்றி சுற்றி பார்த்தாள், வீரராகவனின் ஷேர்ட் சற்று தள்ளி தெரிந்தது...

அவளுக்கு இருந்த அசௌகரிகத்தில் எல்லாரையும் சுற்றி சுற்றி பார்த்தாள் தவிர, வீரராகவன் பேசிக் கொண்டு இருந்தவர்களை அவள் பார்க்கவே இல்லை...

தலையை குனிந்தபடி வேகமாக அந்த இடத்தை நோக்கி சென்றவளோ, "இது எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று அவன் பின்னே நின்று சொல்ல, சட்டென வீரராகவன் அவளை திரும்பி பார்த்தான்...

அவள் குரல் கேட்டு நேத்ரா, மகாலக்ஷ்மி மற்றும் ஜெயானந்தன் என மூவரும் அவளை அதிர்ந்து பார்த்தார்கள்...

பலவருடங்கள் கழித்த சந்திப்பு...

அவர்களது மூத்த பெண் அவள்...

கரிகாலனுடன் ஓடி வந்ததில் இருந்தே தலை முழுகியவர்கள் அவளை பற்றி விசாரித்ததும் இல்லை...

இன்று வீரராகவனுடன் பார்க்கின்றார்கள்...

நிதானத்துக்கு வர முடியவில்லை...

அவள் வாழ்வில் என்ன நடந்தது என்றும் அவர்களுக்கு தெரியவும் இல்லை...

தடம் மாறி போன இலக்கணமாக அவர்கள் முன்னே அவள்..

மூவரும் அவளை அதிர்ந்து பார்க்க, வீரராகவனை பார்த்து விட்டு, அவர்களை பார்த்தவளுக்கு உலகம் தலைகீழாக சுழலும் உணர்வு...

இதழ்களோ மகாலக்ஷ்மியை பார்த்து, "அம்மா" என்று முணுமுணுக்க, அவளது ஒற்றைக் கண்ணில் இருந்து கண்ணீர் சட்டென்று வழிந்தது...

வீரராகவனோ, அவளை பார்த்து விட்டு அதிர்ந்து நின்ற ஜெயானந்தனை பார்த்தவன், "குழந்தையோட அம்மா யாருன்னு கேட்டீங்க தானே... இவ தான்.. பேர் அக்ஷயா" என்றான்...

அவன் சற்று முன்னர் பார்த்த ஆராய்ச்சி பார்வையின் அர்த்தம் அவருக்கு இப்போது புரிந்தது...

"குழந்தையை கொடுத்துட்டு வா மகா" என்று மனைவியிடம் சொன்னவரோ, "அப்போ நாங்க கிளம்புறோம் சார்" என்றார் வீரராகவனிடம்...

மகாலக்ஷ்மியிடம் குழந்தையை வாங்கிய வீரராகவனோ, "ஓகே" என்று சொல்ல, நேத்ராவோ, "அப்போ நான் வரேன் சார்" என்று சொல்லி விட்டு, கண்ணீருடன் நின்ற அக்ஷயாவை நோக்கி புரியாத பார்வை பார்த்து விட்டு விறு விறுவென பில் போட சென்று விட்டாள்.

வீரராகவன் இப்போது அக்ஷயாவை பார்க்க, அவளோ விறு விறுவென ஃபிட் ஆன் அறைக்குள் மீண்டும் நுழைந்து கொண்டாள்.

கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை...

பல வருடங்கள் முன்னே கரிகாலனுடன் பார்த்தவர்கள் இன்று குழந்தையுடன் வீரராகவனுடன் பார்க்கின்றார்கள்...

அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் என்று அவளால் கணிக்க முடியும்...

அதனை நினைத்து அழுதாள்...

அவர்கள் மனதை கஷ்டப்படுத்தி தேடிய வாழ்க்கையில் தோற்று விட்டதை நினைத்து அழுதாள்...

நீண்ட நேரம் அழுது விட்டே உடையை மாற்றி விட்டு வெளியே வர, குழந்தைக்கு சாவகாசமாக விளையாட்டு காட்டிக் கொண்டு நின்ற வீரராகவனோ, "அந்த ட்ரெஸையும் பில் போடுங்க" என்று அங்கே நின்றவனிடம் சொல்ல, அக்ஷயாவோ கண்ணீரை துடைத்துக் கொண்டே ஓரமாக, கையை கட்டிக் கொண்டே நின்று இருக்க, அவள் அருகே வந்த வீரராகவனோ, "கிளம்பலாம்" என்றான்...

அவளும் மௌனமாக அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

காரில் ஏற போனவனோ குழந்தையை அவளிடம் நீட்ட, குழந்தையை தூக்கிக் கொண்டே காரில் ஏறியவளால் கடமைக்கு கூட சிரிக்க முடியவில்லை...

காரில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை...

சுடிதாரின் ஷாலினால் கண்களை துடைத்துக் கொண்டே குழந்தையை அணைத்தபடி அமர்ந்து இருந்தாள்...

காரில் ஏறியவனோ அவளை அழுத்தமாக பார்த்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தபடி, "இப்போ எதுக்கு அழுற?" என்று கேட்டான்...

"அவங்க யாருன்னு தெரியுமா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் பெண்ணவள்...

"உன் அம்மா, அப்பா, தங்கச்சி தானே... நல்லாவே தெரியும்... நேத்ரா என் கன்ஸ்ட்ரக்ஷன்ல தான் வேலை பார்க்கிறா" என்று நிதானமாக சொன்னான்...

அவளுக்கு அடுத்த அதிர்ச்சி... எல்லாம் தெரிந்து இருக்கின்றது அவனுக்கு...

பக்கவாட்டாக திரும்பி அவனை விழி விரித்து நோக்கினாள்...

"என் வட்டத்துக்குள்ள ஒருத்தங்க வர்றங்கன்னா அவங்க ஜாதகமே என் கைல இருக்கும்" என்று சொன்னான்...

அவளோ அவனை அடிபட்ட பார்வை பார்த்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டாள்.

"உன்னை ரொம்ப ஸ்ட்ராங்க் பெர்சன்னு நினைச்சேன்" என்றான்.

"எல்லாருக்கும் ஒரு வீக் பாய்ண்ட் இருக்கும்ல" என்றாள் அவள்...

"இத்தனை வருஷம் கழிச்சு ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் என்ன??" என்றான் அவன்...

முதல் முறை அவளிடம் இருக்கும் திரையை விலக்கி தனிப்பட்ட முறையில் பேசுகின்றான்.

அவளுக்கோ இருக்கும் மனநிலையில் அவன் பேசுவது எல்லாம் கோபத்தை உண்டாக்கியது.

"அதெல்லாம் அன்பு பாசம் இருக்கிறவங்களுக்கு புரியும் சார்" என்றாள்...

"எனக்கு அன்பு பாசம் இல்லன்னு சொல்ல வர்றியா??" என்று நேரடியாக கேட்க, அவளும் தயங்கவில்லை , "இருக்கிற போல தோணல" என்றவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, "பொண்ணு கிட்ட மட்டும் அன்பா இருக்கீங்க" என்றாள்...

குரலை செருமிக் கொண்டே காரை எடுத்தவனோ, "எல்லாரையும் சீக்கிரம் ஜட்ஜ் பண்ணிடாதே... அப்புறம் நீ தான் வருத்தப்படுவ... சிரிக்கிற எல்லாரும் எப்போவும் சந்தோஷமா இருக்காங்கன்னு அர்த்தமும் இல்ல... கோபப்படுறவங்க எல்லாம் இறுக்கமானவங்கன்னு அர்த்தமும் இல்ல" என்றவன் ஒரு கணம் நிறுத்தி "மிருகங்களுக்கு கூட அன்பு பாசம் இருக்கும்... எனக்கு இருக்காதா அப்போ?" என்று கேட்டான்.

அவளோ சட்டென்று அதிர்ந்து அவனை பார்த்தாள்...

முதல் முறை எல்லை தாண்டி வந்து பேசுகின்றான்.

மென்மையாக பேசுகின்றான்...

புதிதாக இருந்தது அவளுக்கு...

அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது...

இந்த நேரத்தில் சிடு சிடுவென இருக்க அவனும் விரும்பவில்லை...

தன்னை சுற்றி கட்டி இருந்த சுவரை உடைத்து விட்டு வெளியே வந்து பேசினான்...

இதெல்லாம் தற்காலிகமானது தான்...

நாளைக்கே இந்த நிலைமை மாறலாம்...

அவன் தனது வட்டத்தில் இருந்து வெளியே வருவது அவ்வளவு இலகுவான விடயம் அல்லவே...
 
Top