அத்தியாயம் 16
இப்படியே நாட்கள் நகர்ந்தன...
வெளியில் சாதாரணமாக இருந்தாலும் பிரியந்த மற்றும் ராதிகாவின் கணவன் மனைவி உறவு உள்ளே தொடர்ந்து கொண்டு தான் இருந்தது...
இன்னும் இன்னும் ஆழமாக காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்...
இப்படியான ஒரு நாள், ராதிகாவை தேடி, டிவிஷனல் எஞ்சினியர் குமார வந்து இருந்தான்...
வருஷம் முடியும் நேரம் அது...
அவளிடம் ஒரு கடித உறையை நீட்டினான்...
அவளும் வாங்கி திறக்க, அதற்குள் பணம் கட்டு கட்டாக இருந்தது...
"இதுஎன்ன?" என்று சிங்களத்தில் கேட்டான்.
"வழக்கமா கொடுப்பது தான்" என்று பதில் சொல்லி விட்டு சென்று விட்டான்...
அவளுக்கு எதுவும் புரியவில்லை...
அன்று மாலை நேரம், பிரியந்த தான் அவளை வீட்டில் விட ஏற்றி சென்றான்.
வண்டியில் ஏறியதுமே, "இண்டைக்கு இத கொடுத்துட்டு போனாங்க" என்று கையில் இருந்த என்வலப்பை நீட்டினாள்.
தனக்கு அருகே அமர்ந்து இருந்தவளை உறுத்து விழித்தவன், "யார் என்ன குடுத்தாலும் வாங்கிடுவியா??" என்று சீறினான்.
"குமார அய்யே தான் என்வலப் ல போட்டு கொடுத்தார் , வருஷா வருஷம் கொடுப்பாங்க எண்டு சொன்னார்." என்றாள். அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "அது லஞ்சம்" என்றான்.
வாயில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே, "ஐயோ லஞ்சமா??" என்றாள்.
"ம்ம்" என்றான்.
"ஏன் இப்பிடி செய்யுறாங்க??" என்று அவள் கேட்க, "வருஷா வருஷம் மினிஸ்ட்ரிக்கு ஒதுக்கிய காசுல வேலை செய்யுறோம் எண்டு பாதில தான் வேலை நடக்கும்... மிச்சம் எல்லாம் கீழ இருந்து மேல வரைக்கும் பங்கு போடுவாங்க... அது தான் இது" என்றான்.
"உங்களுக்கு தரலையா??" என்று அவள் கேட்க, "செவ்வில்லயே விடுவன் எண்டு தெரியும்.. வர மாட்டானுங்க" என்றான்.
"தெரிஞ்சும் நீங்க ஏன் ஒண்டும் செய்யாம இருக்கீங்க??" என்று கேட்டாள்.
"நான் என்ன செய்ய ஏலும் ?? கண்டுக்க கூடாது எண்டு தான் பணத்தை பிரிச்சு கொடுக்கிறானுங்க... நான் எந்த ஆக்ஷனும் எடுக்க ஏலாது... யூஸ் இல்ல" என்றான் சலிப்பாக...
"உங்கட அப்பா மினிஸ்டர் தானே" என்றாள்.
"க்கும்" என்றான்.
"அவருக்கும் பங்கு போகுமா??" என்று கேட்டாள்.
"போகாம இருக்குமா?? ட்ரான்ஸ்போர்டேஷன் மினிஸ்ட்ரில இருந்து போகும்" என்றான் அவன்...
"அப்ப அந்த காசுல நீங்க வாழுறீங்க தானே" என்று அவள் கேட்க, சத்தமாக சிரித்தவன், "நியாயமான கேள்வி தான்... வேகம் மட்டும் இருந்தா போதாது ராது, விவேகமும் வேணும்... இப்ப நான் அப்பாவை பகைச்சு வீர வசனம் பேசலாம் தான்... ஆனா எதுவும் எடுபடாது, ஒரு பொசிஷனுக்கு வாற வரைக்கும் நம்ம அமைதியா இருக்கனும்... அதுக்கு பேர் தான் அரசியல் தந்திரம்" என்று சொன்னான்...
அவள் இதழ்கள் மெலிதாக புன்னகை, "அரசியல் சாணக்கியம் எண்டு சொல்றது உங்களுக்கு தான் சரி வரும் போல" என்றாள்.
அவனும் சிரித்துக் கொண்டான்.
"இந்த காசை திரும்ப கொடுத்துட்டு வருவம்" என்றாள்.
"ம்ம்" என்றபடி வண்டியை கிளப்பினான்.
"இத எப்படி தடுக்கிறது??" என்று கேட்டாள்.
"ஒழுங்கான ப்ரெசிடெண்ட் வந்தா தடுக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே வண்டியை செலுத்த, "உங்களுக்கு ப்ரெசிடெண்ட் ஆக ஆசை இல்லையா??" என்று கேட்டாள்.
அவனோ பெருமூச்சுடன், "முதல் இருந்திச்சு ராது... இந்த நாட்டை திருத்தணும்.. லஞ்சத்தை ஒழிக்கணும்... இந்த இனத்தை வச்சு பண்ணுற அரசியலை முழுமையா நிறுத்தணும்... முக்கியமா அடி மட்டத்துல இருக்கிறவங்கள மேல கொண்டு வரணும்... எல்லாத்துக்கும் மேல படிச்சவன் தான் அரசியல் செய்யோணும்..எல்லாருக்கும் சம உரிமை வாங்கி கொடுக்கணும் எண்டு நிறைய கனவு இருந்திச்சு.. இப்போ இல்லை... இப்ப உன்னோட சந்தோஷமா வாழனும் எண்டு மட்டும் நினைக்கிறேன்... என்னோட சேர்ந்து நீ கஷ்டப்பட கூடாது எண்டு நினைக்கிறேன்... இப்ப எம் பி ஆகவே யோசனையா இருக்கு, கொஞ்சம் மனசு தளம்பலா தான் இருக்கு" என்று சொல்ல, அவள் இதயத்தினுள் சட்டென ஒரு வலி...
அவன் கனவையே அவளுக்காக தூக்கிப் போட துணிந்து விட்டானே அவன்...
ஒரு பெருமூச்சுடன் வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
சற்று நேரத்தில் குமாராவின் அலுவலகம் வந்து இருக்க, அவள் இறங்கிக் கொண்டாள். குமாராவின் அறைக்குள் சென்றவளோ, அவன் முன்னே கடித உறையை வைத்தவள், "மட்ட ஒன நே ஐயே" (எனக்கு வேணாம் அண்ணா) என்றாள். குமாரவும் ஜன்னலினூடு தெரிந்த பிரியந்தவின் ஜீப்பை பார்த்து விட்டு, "விளங்கிட்டு" என்று சொல்ல, அவளும் வலுக்கட்டயமாக சிரித்து விட்டு வந்து பிரியந்தவனின் ஜீப்பில் ஏறிக் கொண்டாள்.
உள்ளே ஏறியதும், "ட்ரான்ஸ்ஃபெர் ஓடர் ரிலீஸ் ஆகிட்டு போல" என்றான் பிரியந்த...
"உண்மையாவா?" என்று அவள் அதிர, அவனும், "ம்ம்" என்று சொன்னவனோ மேலும், "ஜொயின் பண்ணக்குள்ள மட்டக்களப்புக்கு ட்ரான்ஸ்ஃபெர் கேட்டு இருக்கா போல, உனக்கு வந்து இருக்கு" என்றான் அலைபேசியை பார்த்துக் கொண்டே...
அவள் முகம் சோர்ந்து விட, "இப்ப என்ன செய்யுறது?" என்று கேட்டாள்.
"ஒண்டும் பிரச்சனை இல்லை, கான்சல் பண்ணிடலாம், நான் பார்த்துக் கொள்ளுறன்" என்று சொல்ல, அவளும் பெருமூச்சுடன் புன்னகைத்துக் கொண்டாள்.
மேலும் தொடர்ந்தவளோ, "பொங்கலுக்கு நான் ஊருக்கு போகணும் பிரியூ" என்றாள்.
"ம்ம், பெரிய லீவா போட்டு போயிட்டு வா, வீட்டுக்கு போய் நிறைய நாள் எல்லா" என்று கேட்க, அவளும் மெலிதாக சிரித்துக் கொண்டே, "ம்ம்" என்று சொன்னாள்.
அதனை தொடர்ந்து அவளை வீட்டில் கொண்டு விட்டான்...
ஒன்றாக புது வருடத்தை கொண்டாடினார்கள்...
பிரியந்த வீட்டில் தான் அன்று நின்று இருந்தாள்.
அவன் கைவளைவுக்குள் பெல்கனியில் நின்று வானத்தில் வெடித்த வான வேடிக்கைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள் ராதிகா...
அவனும், "வீட்ல எப்போ சொல்ல போற?" என்று கேட்க, "எனக்கு பயமா இருக்கே" என்றாள்.
"சொல்லு ராது, பிறகு என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லி, அவள் கழுத்தை பற்றி, இதழில் இதழ் பதித்து விலகியவன், "ஹாப்பி நியூ இயர்" என்றான்.
அவளும், "ஹாப்பி நியூ இயர்" என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
இருவருக்குமே அந்த புது வருடம் சோதனைகளை கொட்டி கொடுக்க இருக்கின்றது என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை...
அவள் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் லீவு போட்டு இருந்தாள்.
அவளை பஸ்ஸில் ஏற்றி விடுவதற்காக ஜீப்பில் அழைத்து வந்து இருந்தான் பிரியந்த...
"ஒரு கிழமை எப்படி உங்கள பார்க்காம இருக்க போறன் எண்டு தெரியல" என்றாள்.
அவனோ, "ஃபோன் பண்ணு, வீட்ல சொல்ல ஏலும் எண்டா சொல்லு, இல்ல எண்டா விடு, பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றான்..
அதனை தொடர்ந்து, இருவரும் ஆசை தீர இதழ்களை கலந்து கொண்டார்கள்...
அதன் பிறகு அவளும் மட்டக்களப்பு பஸ்ஸில் ஏறி விட்டாள்.
பஸ்ஸில் இருந்தவாறே, மகாதேவனுக்கு அழைத்தவள், "அப்பா பஸ் ஏறிட்டேன்" என்று சொல்ல, "சரி, வந்து சேருற நேரம் சொல்லு, அண்ணா வந்து ஏத்திட்டு கொண்டு வந்து விடுவான்" என்றார்.
"சரிப்பா" என்று சொன்னவள் அலைபேசியை வைத்து இருக்க, மகாலிங்கம் பெருமூச்சுடன் அருகே நின்ற மனைவி கீதாஞ்சலியை பார்த்தார்...
அவரோ, "அவள் வந்ததும் கையை நீட்டாதீங்க, கதைச்சு பார்க்கலாம்" என்று சொல்ல, "நான் ஒண்டும் செய்ய போறது இல்லை, உன்ட மகன் ட சொல்லு" என்று சொன்னார்...
கீதாஞ்சலியும் கிரிதரனுக்கு அழைத்தவர், "அவள் பஸ் ஏறிட்டாள்" என்று சொல்ல, "வரட்டும் இருக்கு" என்றான் அவன் பற்களை கடித்துக் கொண்டே.
"சும்மா இரு தம்பி, கதைச்சு முடிப்பம்" என்று சொல்ல, "என்னத்த கதைச்சு முடிக்கிறது, அவள் அங்க சிங்களவனோட ஆடி திரியுறாள். அதுவும் அந்த மினிஸ்டர்ட மகன்... ட்ரான்ஸ்ஃபேரை அவளே வேணாம் எண்டு சொன்னதா மினிஸ்ட்ரில வேலை செய்யுற என்ட ஃபிரென்ட் சொன்னான்... அந்த பொடியனோட அடிக்கடி வெளிய சுத்துறாள் எண்டும் சொன்னான். எனக்கு வாற ஆத்திரத்துக்கு அவள்ட மூஞ்சை பேக்கணும்" என்றான்...
"சும்மா இரு தம்பி, உன்ட ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் எண்டு சொன்னனீ தானே, அந்த வரன் சரி வருமா?" என்று கேட்க, அவனோ, "அவள் இனி அங்க போக தேவல, நான் ஆள் வச்சு கதைச்சு, இங்க ட்ரான்ஸ்ஃபெர் வாங்கி எடுக்கிறேன், என்ட ஃபிரென்ட் சதீஷோட ஜாதகம் பொருந்தி இருக்கு, இந்த கிழமையே பொண்ணு பார்க்க வர சொல்றன்" என்று சொன்னான்...
கீதாஞ்சலியோ, "எல்லாம் சரி, அவள்ட ஏறிப் பாயாத, வீட்டுக்கு வந்த உடனே பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்ல, அவனும், "ம்ம்" என்றபடி வைத்து விட்டான்.
இதனை எல்லாம் அறியாத ராதிகாவோ கண்களை மூடி தூங்கிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தாள்.
இரவு நேர பயணம் தான்...
காலை நான்கு மணி போல, மட்டக்களப்பை பஸ் அடைந்தது...
"நான் வந்து சேர்ந்துட்டன்" என்று பிரியந்தவுக்கு மெசேஜ்ஜை அனுப்பியவள், கிரிதரனுக்கு அழைக்க, "நான் பஸ் ஸ்டான்ட் ல தான் நிக்கிறேன்" என்றான் அவன் இறுகிய குரலில்...
அவளும் மென் புன்னகையுடன் பஸ் நிலையத்தில் இறங்கிக் கொள்ள, அங்கே பைக்கில் நின்று இருந்தான் கிரிதரன்...
திருமணம் முடிந்த பிறகு, பெரிதாக வீட்டில் பேசிப் பழகுவது இல்லை அவன்...
அவனுக்கு வாய்த்த மனைவி அப்படி...
அங்கேயே தங்கி விட்டான்.
இப்போது அவன் மனைவி கர்ப்பமாகி இருக்க, கொஞ்சம் வீட்டில் ஒட்டிக் கொண்டாலும், இன்று அவளை அதிகாலையில் ஏற்ற வந்தது ராதிகாவுக்கு ஆச்சரியம் தான்...
அங்கே நின்ற கிரிதரனை பார்த்து புன்னகைத்தபடி, "அண்ணி எப்படி இருக்காங்க?" என்று கேட்க, "ம்ம் இருக்கன்" என்று மட்டும் சொன்னவன், எதுவும் சொல்லாமல் அவளை வண்டியில் ஏற்றி இருந்தான்...
அவளும், நடக்க இருக்கும் விபரீதம் பற்றி அறியாமல், வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.
அவளை தொடர்ந்து, அவனும் உள்ளே நுழைந்தான்...
அங்கே ஹாலில் தான் கீதாஞ்சலி மற்றும் மகாதேவன் அமர்ந்து இருக்க, "அப்பா நித்திரை கொள்ளலையா?" என்று கேட்டு முடிக்க முதல், அவள் முன்னே வந்து நின்ற கிரிதரனோ, "ஃபோனை தா" என்றானே பார்க்கலாம்...
நெஞ்சே அடைத்து விட்டது அவளுக்கு...
"எதுக்கு?" என்றாள் தட்டு தடுமாறி...
இப்படி எல்லாம் அவள் அலைபேசியை யாரும் வாங்கி பார்ப்பது இல்லை.
அந்த தைரியத்தில் பிரியந்த சம்பந்தமான எல்லாமே அலைபேசியில் வைத்து இருந்தாள்.
அவனோ, "ஃபோனை கேட்டேன்" என்றான்...
இதயம் வேகமாக துடித்தது...
"எதுக்கு அண்ணா?" என்று கேட்டவளுக்கு கண்களும் கலங்கி இருக்க, "நீயா டிரான்ஸ்ஃபெர் வேணாம் எண்டு சொன்னியாமே" என்றான்.
அவள் இதழ்கள் பயத்தில் நடுங்கியது.
"இல்லையே" என்றாள் அவசரமாக...
ஏதோ தெரிந்து விட்டது என்று புரிந்தது...
"ஃபோனை தா" என்றான்...
அவசரத்துக்கு பொய்யும் வரவில்லை...
"சார்ஜ் இல்லை" என்றாள்.
"சரி நான் சார்ஜ் போடுறேன், ஃபோனை தா" என்றான்.
விட மாட்டான் என்கின்ற தோரணை தான்...
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொள்ள, "இல்ல அண்ணா" என்று அவள் முடிக்கவில்லை...
ஓங்கி அறைந்தே விட்டான்...
ஆம் அறைந்து விட்டான்...
கீதாஞ்சலியோ, "தம்பி" என்று பதற, "நீங்க இப்படி விட்டு தான், அவள் ஆடி திரிஞ்சிட்டு வாறாள், உனக்கு என்னடி மினிஸ்டர் ட மகனோட சகவாசம்?" என்று கேட்டவன் அவள் கைப்பையை பறித்து, அதற்குள் இருந்த அலைபேசியை எடுக்க, அவளுக்கோ அழுகை...
"அண்ணா, தாங்க" என்று அதனை பறிக்க முற்பட, "தள்ளி போ" என்று அவளை தள்ளி விட்டவன் கண்ணில், பிரியந்த கடைசியாக அனுப்பிய மெசேஜ் தான் நோட்டிஃபிகேஷனில் விழுந்தது.
"ஐ மிஸ் யூ ராது" என்று அனுப்பி இருந்தான்...
"ஓஹ், மிஸ் யூ வா? லவ் பண்ணுறியா அவனை?" என்று கேட்டான்.
அவளுக்கு இதயம் நின்று விட்ட உணர்வு...
அழுகை வேறு வந்தது...
"ம்ம்" என்று முடிக்க முதல், மீண்டும் ஒரு அறை.
கட்டுக்கடங்காத கோபம் கிரிதரனுக்கு...
மகாதேவனுக்கு நிலைமை கை மீறி போகும் உணர்வு வர, ஓடி வந்து கிரிதரனை பிடித்து தள்ளி நிறுத்தியவர், "அடிச்சு கொண்டு போட்றாதே" என்றார்.
"செத்து போகட்டுமே" என்றான் அவன் ஆக்ரோஷமாக...
"சும்மா இருடா" என்று அவனுக்கு திட்டிய மகாதேவனோ, அங்கே கன்னத்தை பொத்தியபடி அழுகையுடன் நின்ற ராதிகாவை உறுத்து விழித்தவர், "உன்னட்ட படிச்சு படிச்சு இந்த லவ் எல்லாம் வேணாம் எண்டு தானே சொன்னேன்... என்ன செஞ்சிட்டு வந்து இருக்கா? அவன் அப்பன் ஒரு துவேசம் பிடிச்சவன், அவனை போய் லவ் பண்ணி இருக்கா, இங்க பாரு, உனக்கு சதீஷை கல்யாணம் கட்டி வைக்க யோசிக்கிறோம்.. பெரிய வேலை இல்ல எண்டாலும், நம்ம சாதி சனம் அவன்... இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் தூக்கி போடு" என்று மிரட்டலாக சொல்ல, கிரிதரனோ, "இந்த ஃபோன் என்னட்ட இருக்கட்டும்" என்று சொல்லி விட்டு சென்று விட்டான்...
அலைபேசியை கேட்க கூட அவளுக்கு தைரியம் இல்லை.
காதலுக்கே இரு அறைகள் வாங்கி விட்டாள்.
கல்யாணம் முடித்த விஷயத்தை சொன்னால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று உணர்ந்தவளுக்கு இப்போது கண்ணீர் மட்டுமே துணையாகி போனது.