அத்தியாயம் 16
வழக்கம் போல மூச்சு விட முடியாதளவு வேலை...அப்போது தான் நெடுஞ்செழியன் அறைக்குள் நுழைந்தான்...
கீர்த்தனாவுக்கோ அவன் வந்ததுமே, "ஐயோடா" என்று இருந்தது...
அவனை பார்க்காமலே, அங்கிருந்த கம்பியூட்டரில் அமர்ந்து இருக்க, அவனோ அவளை பார்த்து விட்டு தான் வீரராகவன் முன்னே அமர்ந்தான்...
"என்னடா இந்த பக்கம்?" என்று வீரராகவன் கேட்க, "அடுத்த வாரம் சிங்கப்பூர் போறேன்டா, அங்கே புது ப்ராஜெக்ட் ஒன்னு வருது" என்று சொன்னான் நெடுஞ்செழியன்...
வீரராகவனோ, "ம்ம் நான் இன்னும் ரெண்டு மாசத்துல அங்கே வரணும்... அப்போ தான் வேலை எல்லாம் கவர் பண்ண முடியும்" என்று சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டே டைப் பண்ணிய அக்ஷயாவோ, "அப்போ இன்னும் ரெண்டு மாசத்துல சிங்கப்பூர் போகணுமா? அப்போ கீர்த்தனா எல்லாம் பார்க்க முடியாதா? அங்க தனியா போய் என்ன பண்ணுவேன்?" என்று யோசித்துக் கொண்டே, வேலையை பார்த்தாள்.
கீர்த்தனாவுக்கும் அதே எண்ணம் தான்...
"அப்போ ரெண்டு மாசத்துல அங்கே போய்டுவாளா? தனிஷாவும் போய்டுவாளா?" என்று ஒரு தளம்பல் மனநிலையுடன் இருக்க, நெடுஞ்செழியனுடன் பேசிக் கொண்டே, "அக்ஷயா லெட்டர் ரெடியா?" என்று கேட்டான் வீரராகவன்,
"எஸ் சார்" என்று சொல்லிக் கொண்டே அதனை பிரிண்ட் எடுத்தவளோ மீண்டும் வாசிக்காமலே அதனை அவனிடம் நீட்டி இருக்க, அதனை வாசித்தவனுக்கு சுர்ரென்று எகிறியது...
"என்ன எழுதி வச்சு இருக்க?" என்று ஆக்ரோஷமாக கேட்டுக் கொண்டே, கடிதத்தை அவளை நோக்கி விசிறி எறிய, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
"ஐயையோ, என்ன எழுதி வச்சு இருக்கேன்னு தெரிலயே" என்று நினைத்துக் கொண்டே, கீழே கிடந்த காகிதத்தை எடுத்து படித்தவள், மயங்கி விழாத குறை தான்...
இடையில் சம்பந்தமே இல்லாமல் சிங்கப்பூர் என்று ஒரு சொல் இருந்தது...
"என்னடா எழுதி இருக்கா?" என்று நெடுஞ்செழியன் கேட்க, "சிங்கப்பூராம்" என்று எரிச்சலாக சொன்னான் வீரராகவன்...
அக்ஷயாவோ, "சாரி சார் இப்போ மாத்திடுறேன்" என்று சொல்ல, "இங்க ஒட்டு கேட்டுட்டு அங்கே அடிச்சா அப்படி தான்" என்று திட்ட, அவளுக்கு கண்களும் கலங்கி விட்டன...
நெடுஞ்செழியனோ, "விடுடா, இப்போவே சிங்கப்பூர் போக ஆசை வந்து இருக்கும் போல" என்று சொல்ல, வீரராகவன் திட்டியது கூட வலிக்கவில்லை, ஆனால் நெடுஞ்செழியனின் இந்த பேச்சு அவளுக்கு வலித்தது...
"எனக்கு ஒன்னும் ஆசை இல்லை" என்று சட்டென நெடுஞ்செழியனை திரும்பி பார்த்துக் கொண்டே சொல்ல, நெடுஞ்செழியன் அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து விட்டு வீரராகவனை பார்க்க, அவனோ அக்ஷயாவை உறுத்து விழித்தவன், "ஹெலோ, எனக்கு முன்னாலேயே அவனை எதிர்த்து பேசுறியா?" என்று கேட்டான்...
அக்ஷயாவுக்கு திக் என்று இருந்தது...
அவனை மறந்து தான் நெடுஞ்செழியனிடம் பேசி விட்டாள்.
நெடுஞ்செழியன் அவள் நண்பன் தானே... அந்த உரிமையுணர்வில் பேசி விட்டாள்.
ஆனால் வீரராகவன் முன்னே பேசியதை நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டவள், "இல்ல சார், எனக்கு ஆசை எல்லாம் இல்ல" என்றாள் மீண்டும் தழுதழுத்த குரலில்...
இப்போது அவளை அழுத்தமாக பார்த்த வீரராகவனோ, "ஆசை இல்லேன்னாலும் வந்து தான் ஆகணும்... அங்கே மல்லிகாவையும் குழந்தையை பார்த்துக்க அழைச்சு போவேன்... நீ தான் என்னோட பி ஏ" என்றான்...
அவளுக்கு மயக்கம் வராத குறை தான்...
அங்கேயும் தனக்கு நிம்மதி இல்லையா? என்று தான் அவளுக்கு தோன்றியது...
"ம்ம்" என்று நான்கு பக்கமும் தலையாட்டிக் கொண்டே சொல்ல, "சீக்கிரம் லெட்டரை கரெக்ட் பண்ணி கொண்டு வா" என்று சொல்ல, அவளும் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கடிதத்தை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.
இதனை எல்லாம் பார்த்துக் கொண்டே கம்பியூட்டரில் அமர்ந்து இருந்த கீர்த்தனாவோ, "நாரதர் போல வந்த வேலையை பார்த்துட்டான்" என்று நினைத்துக் கொண்டே இருக்க, நெடுஞ்செழியனும் கிளம்பி விட்டான்...
முதல் நாள் போல அவர்களை ஒன்பது மணி வரை வைத்துக் கொள்ளவில்லை வீரராகவன்...
ஐந்து மணிக்கே போக சொல்லி விட்டான்...
கீர்த்தனாவும் அக்ஷயாவும் வீட்டுக்கு வந்து விட, வீரராகவன் வேலையை முடித்து விட்டு கிளம்பியது என்னவோ ஒன்பது மணி தாண்டி தான்...
வீட்டுக்கு வந்ததுமே, மல்லிகாவிடம், "எங்க தனிஷா?" என்று கேட்க, "ரூம்ல ஐயா" என்றாள் அவள்...
அவனும், தனது அறைக்குள் செல்ல முதல், எதனையும் யோசிக்காமல் அக்ஷயாவின் கதவை திறந்து இருந்தான்...
அவளோ கட்டிலில் அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
அவன் திறந்ததும், அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
பால் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது பதறவும் முடியாது... திரும்பவும் முடியாது...
அப்படியே அவன் அதிர்ந்து விழி விரிந்து பார்க்க, அவனோ, "சாரி" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று கதவை மூடியவன், "கதவை லாக் பண்ண மாட்டியா?" என்று அவளுக்கு திட்டி விட்டு தனது அறைக்குள் நகர்ந்து இருந்தான்...
அக்ஷயா தடுமாறி போய் விட்டாள். தூங்கிக் கொண்டே பால் குடித்த குழந்தையை தூங்க வைத்து விட்டு உடையை சரி செய்தவளோ, "ஐயோ" என்று சொல்லிக் கொண்டே, தலையை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.
"நாளை அவன் முகத்தில் எப்படி விழிப்பது?" என்று தடுமாற்றம் அவளிடம்...
"கதவை தட்டிட்டு வர வேண்டியது தானே" என்று அவனுக்கு வாய்க்குள் திட்டிக் கொண்டே படுத்தவளுக்கு தூக்கம் வர நேரம் எடுத்தது...
காலையில் எழுந்தவளோ, அவனை விழிகளுக்கு நேரே சந்திக்க கூடாது என்று நினைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு வேலையையும் செய்தாள்...
அவன் முகத்தை பார்க்கவே இல்லை... அலுவலகத்திலும் குனிந்தபடியே தான் நின்று இருந்தாள்.
ஆனால் அவன் இயல்பாகி விட்டான்...
அவளுக்கு இயல்பாக கொஞ்ச நாட்கள் தேவைப்பட்டன...
இவர்கள் நாட்கள் இப்படியே நகர, அன்று விடுமுறை...
வீட்டில் இருந்த கீர்த்தனாவின் அறைக் கதவு தட்டப்பட்டது...
அவளும், "இன்னைக்கு யாருடா நம்மள டிஸ்டர்ப் பண்ணுறது?" என்று நினைத்துக் கொண்டே கதவை திறக்க, வாசலில் நின்றது என்னவோ நெடுஞ்செழியன் தான்...
அவனை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே, "என்ன விஷயம்?" என்று கேட்டாள்...
"நாளைக்கு சிங்கப்பூர் போறேன்" என்றான் அவன்...
"ஓகே" என்றாள் அவள் சாதாரணமாக...
"அப்போ உன்னோட முடிவு" என்றான் அவன்...
அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "கல்யாணம் பண்ணுற ஐடியா இப்போதைக்கு இல்லை... அப்படி பண்ணுறதுன்னா கூட அம்மா அப்பா சொல்ற பையன தான் கட்டிப்பேன்" என்றாள். அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "ரொம்ப தான்" என்று கடுப்பாக திட்டி விட்டு கீழிறங்க, அவன் முதுகை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே கதவை தாழிட்டாள் கீர்த்தனா...
இதே சமயம், அக்ஷயாவுக்கோ மனதில் நிம்மதி... விடுமுறை நாள் என்றால் குழந்தையுடன் நீண்ட நேரம் செலவு செய்யலாம் அல்லவா?
காலையில் எழுந்து ஆறுதலாக ஆயத்தமாகி குழந்தைக்கு அவளே சாப்பாடு கொடுத்து, விளையாடிக் கொண்டு இருக்கும் போது, ஜிம்முக்கு போய் விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் வீரராகவன்...
ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்த அக்ஷயாவையும் தனிஷாவையும் பார்த்துக் கொண்டே, அறைக்குள் நுழைய முற்பட்டவன், ஒரு கணம் நின்று, "வெளிய போகலாம் ரெடியா இரு" என்று சொல்லி விட்டு சென்று விட்டான்...
அக்ஷயாவுக்கு மயக்கமே வராத குறை தான்...
ஆபீஸிலும் அவனுடன் தான்... வீட்டிலும் அவனுடன் தான்... விடுமுறை நாளில் நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் ஆப்பு வைத்துக் கொண்டு இருக்கின்றான் அல்லவா? கடுப்பாக தான் இருந்தது அவளுக்கு...
"முடியாது" என்று சொல்லவும் முடியாது... சொன்னாலும் கேட்க மாட்டான் அவன்...
சலிப்பாக குழந்தையை தூக்கிக் கொண்டே அறைக்குள் நுழைந்தவள் மிக மிக மெதுவாக தான் ஆயத்தமானாள்...
"உன் அப்பா என்ன எப்படி படுத்துறார் பாரு குட்டி" என்று மகளுக்கு சொல்லிக் கொண்டே தூக்கியவளுக்கு சட்டென அதிர்ச்சி தான்...
இயல்பாக அவனை அப்பா என்று அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டு இருக்கின்றாள் அல்லவா?
சட்டென தலையை உலுக்கிக் கொண்டவள் மனமோ, "என்ன இருந்தாலும் அப்பா தானே" என்று தன்னை தானே தேற்றிக் கொண்டது...
அவளோ சுடிதார் தான் அணிந்து குழந்தையுடன் வெளியே வந்தாள்.
அங்கே த்ரீ குவாட்டரும் டீ ஷேர்ட்டுமாக ஆயத்தமாகி அமர்ந்து இருந்த வீரராகவனோ, இருவரையும் கண்டதுமே எழுந்து கொண்டவன் முன்னே செல்ல, அவளோ, மல்லிகாவையும் தனபாலனையும் பார்த்து தலையசைப்புடன் அங்கிருந்து புறப்பட்டு இருந்தாள்.
காரை வீரராகவன் தான் ஓட்டினான்...
அவளோ குழந்தையை அணைத்துக் கொண்டே அருகே அமர்ந்து இருக்க, அவன் எங்கே செல்கின்றான் என்று அவளுக்கும் தெரியவில்லை...
கேட்கவும் தைரியம் இருக்கவும் இல்லை...
மௌனமாக வந்தாள்...
அவன் கார் ஒரு பெரிய மால் முன்னே தான் நின்றது...
காரை வி ஐ பி பார்க்கிங்கில் விட்டவன், "இறங்கு" என்று சொல்லிக் கொண்டே இறங்க, அவளும் சேர்ந்து இறங்கினாள்...
"தனிஷாவுக்கு ட்ரெஸ் எல்லாம் வாங்கணும்..." என்று சொல்லிக் கொண்டே நடக்க, "இருக்கு தானே" என்று அவள் சட்டென்று சொல்லி விட்டாள்.
அவளை திரும்பி முறைத்தவன், "லோ குவாலிட்டில குறைஞ்ச விலைல வாங்கி வச்சு இருக்க" என்று காட்டமாக சொல்லிக் கொண்டே, அவளிடம் இருந்து குழந்தையை தூக்கிக் கொள்ள, அவளுக்கு சுருக்கென்று வலித்தது...
அவன் முன்னே குழந்தையுடன் நடக்க, அவளோ பின்னால் நடந்து வந்தாள்.
விரலுக்கு ஏற்ற போல தானே வீக்கம் இருக்கும்...
அவளது வருமானத்துக்கு அவள் வாங்கினாள் அவ்வளவு தான்...
அதையே அவன் குறையாக சொல்வதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை...
அதனை கேட்டு சண்டை போட தெம்பும் இல்லை...
தைரியமும் இல்லை...
அவனோ குழந்தையுடன் எஸ்கலேட்டரில் ஏற அவள் பின்னால் தான் ஏறி நின்றாள். தனிஷாவோ வீரராகவனின் தாடியை வருடி விளையாடிக் கொண்டு இருக்க, அவனும், "என்ன குத்துதா பாப்பாவுக்கு" என்று குழந்தைக்கு ஏற்ற குரலில் கேட்டுக் கொண்டே சிரித்தபடி வந்தான்...
இந்த வீரராகவன் அவளுக்கு புதிது தான்...
அவள் மீது எப்போதுமே அனலை கக்குபவன் அவன்...
அலுவலகத்திலும் சரி, வீட்டிலிலும் சரி அவளுடன் நிதானமாக பேசியது மிக மிக குறைவு... அலுவலகத்தில் அவன் கம்பீரம் என்ன? இங்கே குழந்தையுடன் விளையாடும் போது அவன் சுட்டித்தனம் என்ன?
அவளிடம் அவன் கோபம், இறுக்கம் என்ன? இப்போது குழந்தையுடன் வாயெல்லாம் புன்னகைப்பது என்ன? அவளால் நினைக்காமல், பிரமிக்காமல் இருக்கவே முடியவில்லை...
அவனை புரிந்து கொள்ளவும் முடியவில்லை...
அவன் முதலில் சென்றது என்னவோ குழந்தைகளுக்கான உடைகள் இருக்கும் இடத்துக்கு தான்...
அவனோ குழந்தையை தூக்கியபடி நின்று இருக்க, "அந்த பேக் ஐ எடு" என்றான் அக்ஷயாவிடம்...
அவளும் அதனை எடுத்தாள்...
ஒற்றைக் கையில் தனிஷாவை வைத்துக் கொண்டே, அடுத்த கையால் குழந்தைகளின் உடைகளை பார்த்தவன் எடுத்தது எல்லாமே உயர்ரக உடைகளை தான்...
"அவ சீக்கிரம் வளர்ந்திடுவா... இதெல்லாம் அநியாயம்" என்று சொல்ல வந்த வார்த்தைகளை அவன் கூரிய வார்த்தைகளுக்கு பயந்து விழுங்கிக் கொண்டாள்.
நிறைய உடைகளை எடுத்தான்...
விலைகள் ஆயிரக்கணக்கை தாண்டி சென்று கொண்டு இருந்தன...
விட்டால் கடையையே வாங்கி விடுவான் போல என்று அவளால் யோசிக்காமல் இருக்கவே முடியவில்லை...
அக்ஷயாவுக்கு அந்த பை பாரமாகவும் இருந்தது...
கஷ்டப்பட்டு தான் தூக்கினாள்...
வீரராகவன் உள்ளே நுழைந்த சமயமே, பையை தூக்க அங்கே வேலை செய்பவர்கள் வந்தார்கள்... அவன் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டு அக்ஷயாவை தூக்க வைத்து இருந்தான்...
"இங்கே ஏன் இவ்ளோ விலையா இருக்கு?" என்று அவள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கேட்க, சட்டென திரும்பி அவளை உறுத்து விழித்தவன், "ப்ராண்டட்னா அப்படி தான்" என்றான்...
"ப்ராண்ட்ல என்ன இருக்கு? எல்லாமே ஒன்னு தான்" என்று வாயை விட்டு விட்டாள்.
"ப்ராண்ட் பத்தி உன் கிட்ட பேசுனது என் தப்பு தான்" என்று இளக்கார குரலில் சொல்லிக் கொண்டே நகர, அவளுக்கு மீண்டும் சுருக்கென்று தைத்தது...
எப்போது பார்த்தாலும் அவளை மட்டம் தட்டிக் கொண்டு அல்லவா இருக்கின்றான்...
"ப்ராண்ட் லாம் ஒன்னும் இல்லை... எல்லாமே ஏமாத்து வேலை... இந்த கடை முதலாளி சரியான பணபேயா இருப்பான்" என்று சொல்லி விட்டாள்.
ஒரு பார்வை மட்டுமே அவளை நோக்கி வீசி இருந்தான்... எதுவும் பேசவில்லை...
அப்படியே நடந்து சென்ற வீரராகவானோ அங்கே நின்ற ஒரு பையனை அழைத்தவன், "இதுக்கு பில் போட்டு கார் பார்க்ல இருக்கிற செக்கியூரிட்டி கிட்ட கொடு" என்றான்...
"சார் பில்லா?" என்று அவன் அதிர, "ம்ம், நான் தானே பர்ச்சஸ் பண்ணுனேன் அப்போ பில் போடணும் தானே" என்றான்...
"சார் கடையே உங்களோடது தானே" என்று அவன் சொல்ல, வீரராகவனோ, "இப்போ நான் கஸ்டமர் மட்டும் தான்" என்றான்...
அந்த பையனும் அதிர்ந்து நின்ற அக்ஷயாவிடம் பையை வாங்க, அவளோ, "ஐயோ இவரோட கடையா? இவரையா பண பேய்ன்னு சொன்னோம்? இப்போ வச்சு செய்வாரே" என்று நினைக்க, அவளை திரும்பி பார்த்தவன், "கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன?" என்று புருவம் உயர்த்தி கேட்டான்...
"ஐயோ தெரியாம சொல்லிட்டேன் சார்" என்று சொன்னவளுக்கு கைகள் உதற ஆரம்பிக்க, அவளை முறைத்து விட்டு, "அடுத்த கடைக்கு வா" என்று சொல்லிக் கொண்டே அடுத்த கடைக்குள் அழைத்து சென்றான்...
"வாயை திறக்காத அக்ஷயா... இது யாரோட கடையோ தெரியல" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டே அந்த கடைக்குள் அவனுடன் நுழைந்தாள் பெண்ணவள்...