அத்தியாயம் 15
அடுத்த நாள் காலையில் வேலைகளை முடித்து விட்டு பவித்ரனுக்கு அழைத்தவன், "எத்தனை மணிக்கு உன்ட அப்பா வெளிய போவார் எண்டு பார்த்து சொல்லு, மாமிய பார்க்க வரணும்" என்றான்.பவித்ரனும், "அவருக்கு ஒரு மணிக்கு பேங்க் வேலை இருக்கு எண்டு சொன்னார், என்னட்ட தான் வருவார், நீ அந்த நேரம் போய் பாரு" என்று சொல்ல, "தேங்க்ஸ் டா" என்று வைத்து விட்டான்...
பவித்ரன் சொன்ன போலவே ஒரு மணிக்கு நிர்மலாவை தேடி சென்றான் ஜனார்த்தனன்...
திவ்யா ஸ்கூலுக்கு போயிருக்க, நிர்மலா தனியாக தான் டி வி பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்.
வாசலில் நின்ற நாயை வருடி விட்டு, உள்ளே வந்த ஜனார்த்தனனோ, "மாமி எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே அமர, "நான் நல்லா தான் இருக்கேன், கல்யாணமாமே, ஒரு வார்த்தை சொன்னியா நீ?" என்று கேட்டார்.
"பொண்ணு வேற யாரும் என்டா உங்கள்ட்ட முதல் ஆளா சொல்லி இருப்பேன்" என்றான்...
நிர்மலாவுக்கு பிடித்ததே அவனுடைய இந்த வெளிப்படையான பேச்சு தான்...
"உன்ட பொஞ்சாதியை நான் என்னடா சொல்லிட போறன்?" என்று கேட்டார்...
அவருடைய வார்த்தைகள், நாராயணி மேல் கோபம் இல்லை என்று அப்படமாக எடுத்து உரைக்க, மெலிதாக சிரித்தவனோ, "கல்யாணத்துக்கு வருவீங்களா?" என்று கேட்டான்.
"உனக்காக வாறன்" என்றவர் ஒரு கணம் நிறுத்தி, "உனக்காக மட்டும்" என்றார் அழுத்தி.
"அது எனக்கு போதும்" என்று சொல்ல, "சரி ஏதும் குடிக்கிறியா?" என்று கேட்க, "சாப்பாடே போடுங்க, நேரே கேம்பஸ் ல இருந்து இங்க தான் வாறன், சரியா பசிக்குது" என்று சொல்ல, அவரும் உணவை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார்...
அதனை வாங்கிக் கொண்டே, பெருமூச்சுடன், "எனக்கு யார் எண்டு தெரிய முதலே அந்த பிள்ளையை பிடிச்சுட்டு, இன்னார் தான் எண்டு தெரிஞ்சு இருந்தா, பிடிக்காம இருந்து இருக்குமோ என்னவோ" என்று சொன்னான்...
அவன் மனதில் சின்ன ஒளிவு மறைவு கூட இல்லாமல் சொன்னான்...
"அம்மா இல்லாத பிள்ளை, வடிவா பார்த்துக் கொள்ளு" என்று சொன்னவர் ஒரு கணம் நிறுத்தி, "நீ பார்த்துக் கொள்ளுவா எண்டு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றார்.
சட்டென ஏறிட்டு அவரை ஆச்சரியமாக பார்த்தான்...
அவனுக்கு எப்போதும் நிர்மலாவை ரொம்பவே பிடிக்கும்...
கிட்டத்தட்ட அவனை போல தான்...
பிடித்தம் என்றால் உயிரையும் கொடுப்பார்...
மனதில் இருப்பதையும் பட்டென்று சொல்லி விடுவார்...
ஒளித்து மறைத்து பேச தெரியாது...
அக்கறையும் கோபமும் சேர்ந்தே இருக்கும்...
"என்னோட கோபம் இல்லையே" என்று கேட்டான்...
இல்லை என்று தலையாட்டியவர், ஒற்றை விரலை நீட்டி, "கல்யாணம் கட்ட போற பிள்ளைக்கு எப்போவுமே உண்மையா இரு, அது போதும்" என்றார்.
சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கி விட்டன...
அவருக்கு நடந்த துரோகம் இன்று வரை அவரை மீள முடியாமல் உருக்குலைத்துக் கொண்டல்லவா இருக்கிறது?
அந்த பிரச்சனைக்கு பிறகு தன்னையே அதிகமாக தனிமை படுத்திக் கொண்டார்...
யாரிடனும் பேச பிடிக்கவில்லை...
கனகசிங்கம் வீட்டுக்கு கூட பெரிதாக செல்ல மாட்டார்...
கோதாவரியுடன் மட்டும் அலைபேசியில் பேசிக் கொள்வார்.
அவர் மாற்றம் தான் ஜனார்த்தனனுக்கு இன்று வரை புருஷோத்தமன் மீது கோபத்தை இறைத்துக் கொண்டு இருந்தது...
எப்படி இருந்த நிர்மலா, மொத்த நிம்மதியையும் இழந்து தனக்குள் இத்தனை வருடங்கள் புழுங்கி உருக்குலைந்து போக அவர் தானே காரணம்...
அவரை ஆழ்ந்து பார்த்தவன், "நான் அப்பிடி இருப்பேன் எண்டு நினைக்கிறீங்களா மாமி?" என்று கேட்டான்...
"சொல்ல முடியாது டா, யாரையும் நம்பவும் முடியாது... நீ தான் என்ட உலகம் எண்டு சொல்லிட்டு இருந்த எல்லாரும் எப்படி மாறுனாங்க எண்டு பார்த்தனி தானே... சந்தர்ப்பம் கிடைச்சா ஆம்பிளைங்க தப்பு செய்ய தயங்க மாட்டாங்க எண்டு எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிய வந்தது... நீ எவ்வளவு சண்டை எண்டாலும் போடு, ஆனா கட்டினவளுக்கு துரோகம் மட்டும் பண்ணாதே, என் ட மகன்ட்டயும் நான் இத தான் சொல்லுவன், உன்னட்டையும் இத தான் சொல்லுவன், செழியன்ட்டயும் இத தான் சொல்லுவன், இந்த சீரழிஞ்ச வாழ்க்கை என்னோட போகட்டும், அடுத்த வம்சத்துல யாருக்கும் வர வேணாம்" என்றார்.
எவ்வளவு பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி பேசுவார் என்று அவனுக்கு புரிந்தது...
புருஷோத்தமன் மீது அவரது அன்பும் அக்கறையும் அளப்பெரியது...
அவன் சின்ன வயதாக இருக்கும் போது கண் கூடாக பார்த்து இருக்கின்றான் தானே...
கணவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு கனகசிங்கத்திடம் எல்லாம் சண்டை போட்ட வரலாறுகள் கூட உண்டு...
அப்படி ஒரு காதல் அவர் மீது...
எல்லாமே இப்போது நீர்த்துப் போய் அவரிடம் வலி மட்டுமே எஞ்சி இருக்க, "சத்தியமா நான் கட்டிக்க போறவளுக்கு துரோகம் பண்ண மாட்டேன் மாமி" என்றான்.
குரலில் உறுதி இருந்தது...
"சரி சாப்பிடு, ஆற போகுது" என்று சொல்லிக் கொண்டே டி வி பார்க்க அமர்ந்து விட்டார்...
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டே, "என்ட கல்யாணம் முடிய, திவ்யாட கல்யாணத்தை லேட் ஆக்காம முடிச்சிடலாம்" என்றான்.
"ஓம், அவளுக்கும் வயசாகுது, உன்ட கல்யாணம் முடியட்டும், அண்ணாட்ட கதைக்கிறேன்" என்று சொன்னவரோ, மேலும், "ஆஹ் சொல்ல மறந்துட்டேன், பவித்ரனுக்கு ஒரு சாதகம் பொருந்தி இருக்கு, பிள்ளை உன்ட காம்பஸ் ல தான் படிக்கிறாள்... பிள்ளைக்கு ஒண்டரை வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிக்கோணும் எண்டு சாதகத்துல இருக்காம்... அதான் இப்பவே மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்காங்க, சும்மா தான் நானும் பொருத்தம் பார்க்க சாஸ்திரிட்ட கொடுத்தன், நல்லா பொருந்தி இருக்கு, அந்த பிள்ளையை பத்தி சொல்றியா?" என்று கேட்டான்.
"சரி யார் எண்டு சொல்லுங்க, பார்ப்பம்" என்றான்.
அவரும், "இரு ஃபோன் ல தான் எல்லாம் இருக்கு" என்று சொல்லி அலைபேசியை எடுத்து வந்தவர், "பெட்டை ட பேர் ரித்விகா... அவங்கட அப்பா தனபாலன், பழைய ப்ரின்சிபிள்" என்று சொல்ல, அவனுக்கு ரித்விகா என்னும் பெயர் நாராயணி விஷயத்தில் பழக்கம் ஆயிற்றே...
"ஃபைனல் இயர் ஆஹ்?" என்று கேட்டான்.
"ஓம்" என்று சொன்னவரோ, "இது தான் பிள்ளை" என்று அலைபேசியை காட்ட, அதனை பார்த்தவன், "ம்ம் தெரியும்... நல்ல பிள்ளை தான்... நாராயணிட்ட கேட்டுட்டு சொல்றேன், அவள்ட ஃபிரென்ட் தான்" என்றான்...
அவரும், "சரி விசாரிச்சு சொல்லு, நல்ல பிள்ளை எண்டா மேல கதைக்கலாம்" என்றார்.
அவனும் சாப்பிட்டு விட்டு கையை கழுவியவன், "வெள்ளிக்கிழமை வீரகத்தி பிள்ளையார் கோவில் ல தான் காலைல ஒன்பது மணிக்கு கல்யாணம், அதுக்கு பிறகு வீட்ல சின்ன லன்ச், அப்பிடியே ரெஜிஸ்ட்ரேஷனும் வைக்க நினச்சு இருக்கிறம்" என்றான்.
"கோவிலுக்கு மட்டும் வாறன், சாப்பாட்டுக்கு எல்லாம் வரல, சொந்தக்கார ஆட்கள் வருவாங்க, பிறகு தேவை இல்லாம ஏதும் கதைச்சா எனக்கு தான் ஒரு மாதிரி இருக்கும்" என்றார்.
"எனக்கு விளங்குது, நீங்க கோவிலுக்கு வாறன் எண்டு சொன்னதே பெரிய சந்தோசம் தான்... பெருசா நான் யாருக்கும் சொல்லல்ல, அப்பாட பக்கம் இருந்து நீங்க மட்டும் தான்... அப்பிடியே அம்மாடா அக்கா தங்கச்சி எல்லாரும் வருவாங்க, அவ்வளவு தான், இப்ப தானே செத்த வீடும் முடிஞ்சு இருக்கு" என்றான்.
அவரும் பெருமூச்சுடன், "கல்யாணம் கட்டி சந்தோஷமா இரு, நீ ஒருத்திய செலெக்ட் பண்ணி இருக்கா என்டா அவள் உனக்கு சரியான பெட்டையா தான் இருப்பாள், அதுல நான் எப்போவும் கருத்து சொல்ல மாட்டேன்" என்றான்.
அவனும் மென் சிரிப்புடன், "ரொம்ப நல்ல பிள்ளை மாமி, நேர்மையான பிள்ளை, உங்களுக்கு பழக விருப்பம் எண்டா பிறகு பழகி பாருங்க" என்று சொல்ல, அவரும், எதுவும் சொல்லாமல் மெலிதாக சிரித்துக் கொள்ள, அவனும் விடை பெற்று கிளம்பி விட்டான்.
நிர்மலாவுடன் பேசி விட்டு வந்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது...
அவன் கொஞ்சம் தடுமாறியது அவரை நினைத்து மட்டும் தானே..,
அன்று சொன்னதன் படி, நேரத்துக்கே நாராயணி வீட்டுக்கு வந்திருக்க, ஹாலில் அமர்ந்து இருந்த ஜனார்த்தனனோ, தலையை திருப்பி அவளை பார்த்தவன், "கெதியா வெளிக்கிட்டு வா, எல்லாரும் உனக்காக தான் வெயிட்டிங்" என்றான்.
கோதாவரியும், "எதுக்கு அவளை அவசரப்படுத்துற? இப்ப தானே வந்தவள்" என்று சொல்ல, நாராயணியோ, "அஞ்சு நிமிசத்துல வந்துருவேன் மாமி" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள்.
சொன்ன போலவே ஐந்து நிமிடங்களில் ஆயத்தமாகி வந்தாள்.
நீல நிற சுடிதார் தான் அணிந்து இருந்தாள்.
அவன் கருப்பு நிற த்ரீ குவாட்டரும் நீல நிற ஸ்ரீலங்கன் கிரிக்கெட் ஜெர்சியும் அணிந்து இருக்க, "எனக்கு மேட்ச் ஆஹ் போடுறியா என்ன?" என்று கேட்டான்.
அவனை முறைத்தவள், "அப்பிடி எல்லாம் இல்ல" என்று சொல்ல, எல்லாரும் கிளம்பி விட்டார்கள்...
இளஞ்செழியனுக்கும் அன்று விடுமுறை.
முதல் நாள் இரவு வேலை இருந்ததால் பகல் விடுமுறை எடுத்து இருந்தான்.
அவனும் சேர்ந்து புறப்பட்டு விட்டான்...
ஜனார்த்தனன் காரை செலுத்த, அருகே கனகசிங்கம் அமர்ந்து இருக்க பின்னால் தான் கோதாவரி, நாராயணி மற்றும் இளஞ்செழியன் அமர்ந்து இருந்தார்கள்...
கடை பஸாருக்கு சென்ற ஜனார்த்தனனோ, காரை பார்க் செய்து விட்டு இறங்க, எல்லோரும் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள்...
நாராயணிக்கு எல்லாரையும் பிடித்தே விட்டது...
அன்பான அழகான குடும்பம்...
க்ரூப்பில் டூப்பு போல கடுகடுவென இருப்பது என்னவோ ஜனார்த்தனன் தான்...
இப்போதெல்லாம் அவனையும் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்து இருந்தது...
ஒரு வழியாக கடைக்குள் வந்து விட்டார்கள்...
கோதாவரியோ, "கூறை சாரி காட்டுங்க" என்று சொல்ல, அவர்களும் பட்டுப் புடவைகளை அடுக்கினார்கள்.
நாராயணிக்கு அதன் விலைகளை பார்த்ததுமே நெஞ்சு அடைத்து விட்டது...
"கொஞ்சம் விலை குறைவா காட்டுங்க" என்றாள்.
ஜனார்த்தனனோ, "இத விட கொஞ்சம் விலை கூட காட்டுங்க" என்றான்...
அவனை திரும்பி முறைத்தவள், "நான் அப்பிடி எல்லாம் கட்ட மாட்டேன்" என்றாள்.
"கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்கியா" என்றான்...
கொஞ்சம் புடவைகளை எடுத்து போட்டார்கள்...
எல்லாமே அழகாக இருந்தது...
"எது பிடிச்சு இருக்கு?" என்று கேட்டான்...
அவள் கையை நீட்டி விலையை பார்க்க முயல, சட்டென கையை புடவைக்கு மேலே வைத்தவன், "பிடிச்சது எது எண்டு மட்டும் சொல்லு" என்றான்.
"அநியாயம் பண்ணிட்டு இருக்கீங்க" என்றாள்.
கோதாவரியோ, "எது விருப்பம் எண்டு சொல்லு, காசை பத்தி கவலைப்படாதே, நிறைய சேர்த்து வச்சு இருக்கான்" என்றார்.
அவரை ஐயோடா என்று பார்த்தவளோ, "நீங்களுமா மாமி" என்று கேட்டு விட்டு, அதில் இருந்த மெரூன் புடவையை காட்டியவள், "இது நல்லா இருக்கு" என்றாள்.
அதன் பிறகு விலையை பார்க்க முயன்றாள்.
சட்டென புடவையையோ தூக்கி எடுத்த ஜனார்த்தனனோ கடைக்காரனிடம் புடவையை நீட்டி, "இதுக்கு பில் போடுங்க" என்று சொல்ல, அவனை முறைத்து விட்டு, நகர முயல, "ஹெலோ, இன்னொரு சாரி எடுக்கணும்" என்றான்.
கோதாவரியும், "ரெண்டு சாரி எடுக்கோணும்" என்று சொல்ல, அடுத்ததாக முதல் கூறை புடவை ஒன்றை நீல நிறத்தில் தெரிவு செய்து இருந்தாள்.
"அம்மாவோட போய் வேற ஏதும் தேவை எண்டா எடுத்துட்டு வா" என்று சொன்ன ஜனார்த்தனனோ, "நீ வாடா, நாம ஷேர்ட் பாப்பம்" என்று இளஞ்செழியனை அழைத்து சென்று விட்டான்.
ஜனார்த்தனனை வென்றவராக கோதாவரி இருந்தார்.
"இத எடு, இது நல்லா இருக்கு" என்று அவளுக்கு உடைகளை வாங்கி குவித்து இருக்க, அவளுக்கோ சங்கடமாக இருந்தது...
அவர்கள் மனதார செய்தாலும், கையேந்துவது போல உணர்வு அவளுக்கு...
கொஞ்சம் ஜனார்த்தனனுடன் மனதளவில் நெருங்கி விட்டால், இந்த உணர்வு வராதோ என்னவோ...
உடைகளை எடுத்து விட்டு, அங்கே அமர்ந்து இருந்த ஜனார்த்தனன் அருகே வந்து அமர்ந்த நாராயணியோ, "மாமி உங்கள் விட மோசமா இருக்காங்க... எவ்வளவு உடுப்பு தெரியுமா" என்று சலிக்க, "உனக்கு வாங்கி தராம யாருக்கு வாங்கி தர போறம்?" என்று கேட்டான்.
ஒரே கேள்வி...
நெஞ்சுக்குள் என்னவோ செய்தது...
எவ்வளவு உரிமையான வார்த்தைகள்...
அவளுக்கு தான் ஒன்ற முடியவே இல்லை...
அவன் இலகுவாக அவளை கையாள்கின்றான்.
சுற்றி யாரும் இல்லை, இருவரும் மட்டும் தான்...
அவள் மனதுக்குள் அரித்துக் கொண்டு இருந்த கேள்வியை கேட்க நினைத்தவளோ, "உண்மையாவே என்னை விரும்பி தான் கல்யாணம் கட்டுறீங்களா?" என்று கேட்டாள்.
"மாலா அக்கா வீட்டுக்கு முன்னால என்ட காரை பார்த்து இருக்கியா இல்லையா?" என்று கேட்டான்.
"ம்ம் பார்த்து இருக்கேன், இலைக்கஞ்சி குடிக்க வர்றனீங்க தானே" என்று கேட்டாள்.
"ம்ம் அதுக்கு மட்டும் இல்லை, உன்னையும் சைட் அடிக்க தான் வாறனான், அப்ப நீ யாரு எண்டு தெரியாது, என்ட ஸ்டுடென்ட் எண்டு கூட தெரியாது... அந்த குட்டி பொடியனோட விளையாடிட்டு இருப்பியே, ஆஹ் அவன்ட பேர் கூட" என்று நெற்றியை நீவியபடி யோசிக்க, அவனையே பார்த்து இருந்தவள், "ஜீவா" என்றாள் நெகிழ்ந்த குரலில்...
"ஓம் அவன் தான்... கார்ல இருந்துட்டு உன்னை நிறையவே சைட் அடிச்சு இருக்கேன், உன்னால தான் எனக்கு முதல் பேசுன பெட்டையை கூட வேணாம் எண்டனான்" என்றான்.
அவளோ, வாயில் கையை வைத்தவள், "உங்களுக்கு கல்யாணம் பேசி இருந்தவங்களா? நீங்க வேணாம் என்டீங்களா?" என்று கேள்விகளை அடுக்க, "ஓம், டொக்டர் பெட்டை ஒருத்தி... ரெண்டு நாள் கதைச்சு பார்த்தேன், ஒண்ட ஏலாம இருந்தது... ஒரு மாதிரி விலகலா ஃபீல் வந்தது... உன்னட்ட விடிய விடிய கதைக்கிற எண்டாலும் கதைப்பேன், அந்த பெட்டையோட ரெண்டு வார்த்தை கதைக்கவே கஷ்டமா இருந்தது, அவள் வேற அடிக்கடி கோல் எடுப்பாள், பிறகு கல்யாணம் கட்டி பிரச்சனை வரும் எண்டு நினச்சேன், கல்யாணமும் வேணாம் எண்டு சொல்லிட்டேன்" என்றான்.
"அவங்க கவலைப்படலயா?" என்று கேட்டாள்.
"கொஞ்சம் மோசமா தான் கதைச்சிட்டேன், கவலை பட்டு இருப்பாள் தான், அப்படி கதைச்சா தான் கோல் எடுக்காம இருக்கிறாள், பிறகு சரி ஆயிடுவாள்" என்றான்...
அவன் ஏற்கனவே சொன்ன நேரம் புரியவில்லை...
ஆனால் இப்போது அவனுக்கு அவள் மீதான நேசத்தை அவளால் கொஞ்சம் கொஞ்சமாக உணர கூடியதாக இருந்தது...
சட்டென அவனில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்.
என்ன சொல்வது என்று தெரியவில்லை...
மௌனம் மட்டுமே அவளிடம்...
அவனும் பெரிதாக பேசவில்லை...
மௌனமாக அமர்ந்து அலைபேசியை பார்க்க தொடங்கி விட்டான்.
சிறிது நேரத்திலேயே எல்லாரும் கிளம்பி விட்டார்கள்...
போகும் போது, "சாரிக்கு பிளவுஸ் தைக்க குடுக்கணும் எல்லா" என்று ஆரம்பித்தார் கோதாவரி.
"ஓம் அம்மா, தையல் அக்காட்ட கதைச்சிட்டு வந்தனான், காரை வச்சுட்டு பைக் ல தான் நாராயணியை கூட்டிட்டு போகணும், அவட வீடு உள் ரோட் எல்லா" என்று சொன்னான் ஜனார்த்தனன்.
"ஓம் அவள்ட ரோடுக்குள்ள காரும் போகாது" என்று சொல்லிக் கொண்டார் கோதாவரி.
சற்று நேரத்தில் அவர்கள் வீடும் வந்து விட, ஜனார்த்தனன் பைக் கீயையும் ஹெல்மெட்டையும் எடுத்தவன், "பைக் ல போயிட்டு வரலாம் வா" என்றான்.
"பைக்லயா? ஒண்டாவா?" என்று கேட்டாள் அவள் தயக்கமாக.
"ஏன் டி? நாலு நாளுல பொண்டாட்டி தானே, இண்டைக்கு பைக் ல வாரதுல என்ன இருக்கு?" என்றான்.
மறுப்பது அதிகப்படியாக இருக்கும் என்று அவளுக்கும் தோன்ற, ஹெல்மெட்டை போட்டு அதனை மூடினாள்.
அவனோ பைக்கில் இருந்தபடி ஹெல்மெட்டை போட்டவன், அவளிடம், "ஹெல்மெட்டை டைட் பண்ணு" என்றான்.
"எப்பிடி" என்று அவள் தடுமாற, "கிட்ட வா" என்றான்.
அருகே சென்றாள்.
கையை நீட்டி, ஹெல்மெட்டின் பட்டியை இறுக வைத்தவன், "ஷோலை கட்டிக் கொள்ளு, பைக் டயர் உள்ளுக்குள்ள போயிரும்" என்று சொன்னவன், அத்துடன் நிறுத்தாமல் உரிமையாக அவள் ஷாலை இழுத்து முடிந்து இருக்க, அவளுக்கோ இந்த அக்கறையும் அன்பும் ஆச்சரியமாகவும் பிடித்தும் இருந்தது...
அவன் பேசிய பேச்சுக்கு வருஷ கணக்கில் அவனை பிடிக்காது என்று நினைத்து இருந்தாள்.
சட்டென்று இப்படி ஈர்த்து விட்டானே...
காட்டிக் கொள்ள தான் மனமில்லை...
"ரெண்டு பக்கமும் காலை போட்டு இருக்கவா? எனக்கு பயம்" என்றாள்.
சிரித்துக் கொண்டே, "உனக்கு வசதி படி இருக்கு, இறுக்கி பிடிச்சு கொள்ளு" என்று சொல்ல, அவளும் ஏறி அமர்ந்தவள், அவன் தோள்களில் தயங்கி தயங்கி கையை வைத்தாள்.
கையை நீட்டி, தனது தோள்களில் இருந்த அவள் கையில் அழுத்தத்தை கொடுத்தவன், "அழுத்தி வை, நான் ஒண்டும் சொல்ல மாட்டேன், பிறகு நீ விழுந்தா பிறகு நான் பொஞ்சாதிக்கு எங்க போறது?" என்று கேட்டான்...
அவளுக்கு சிரிப்பும் வந்து விட, அடக்கிக் கொண்டே, "அது தான் ஊரெல்லாம் குமர் பெட்டைகள் இருக்காங்களே" என்றாள்.
"எல்லாரும் நீ ஆக முடியுமா?" என்று கேட்டபடி அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, சிவந்தது என்னவோ அவள் விழிகளும் கன்னங்களும் தான்...