அத்தியாயம் 11
வீட்டுக்கு வந்த தேன்மொழிக்கோ இன்னும் பதட்டம் அடங்கவில்லை...முதல் முறை தாயை மீறி ஒரு வேலை செய்ய போகின்றாள்...
சற்று பயமாக இருந்தது...
நாளைக்கே கல்யாணம்...
அவள் நினைத்து கூட பார்க்கவில்லை...
கண்ணாடி முன்னே நின்று ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள்.
அன்று அவளுக்கு தூக்கம் தொலைந்து விடும் என்று நன்றாகவே புரிந்தது...
இதனிடையே அடுத்த நாள் மகாலக்ஷ்மி வெளியே செல்லும் நேரத்தை அறிந்து, தேன்மொழி வம்சி கிருஷ்ணாவிடம் சொல்ல வேண்டும்...
அன்றிரவு கேட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டே, மகாலக்ஷ்மிக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
மகாலக்ஷ்மியும் வந்து குளித்து உடை மாற்றி அவள் சமைத்த உணவை அவளுடன் அமர்ந்து சாப்பிட தொடங்கினார்...
தேன்மொழிக்கு கண்கள் கரித்துக் கொண்டே வந்தன.
தன்னை இத்தனை வருடங்கள் தந்தை இல்லாமல் தனியாக கஷ்டப்பட்டு வளர்த்தவர் அவர்...
அவருக்கு துரோகம் செய்ய போகின்றோமோ என்று ஒரு குற்ற உணர்வு...
இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துப் போனாள்.
தட்டு தடுமாறி அருகே இருந்த கரண்டியால் தட்டில் தட்டினாள்... சட்டென மகாலக்ஷ்மி ஏறிட்டுப் பார்த்தார்...
"நாளைக்கு காரட் கொடுக்க போறீங்களா?" என்று கார்டை காட்டி சைகையால் கேட்டாள்...
அவரோ, "ம்ம் போகணும்மா, இன்னைக்கே நிறைய வீட்டுக்கு நான் போகல... இன்னும் வசந்திக்கும் கார்ட் கொடுக்கல... அங்க போனா வேதவல்லி அம்மா ஏதாவது பேசுவாங்கன்னு தயக்கமா இருக்கு, ஆனா எப்படியும் போக தானே வேணும்... காலைல எட்டு மணிக்கே கிளம்பிடலாம்னு நினைக்கிறன்... எப்படியும் பன்னிரெண்டு மணிக்கு முதல் கார்ட் கொடுத்து முடிச்சிடணும்... இனி நேரமும் இல்ல" என்று அவர் சொல்ல, அவளும் சரியென்ற ரீதியில் தலையாட்டினாள்...
அதனை தொடர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவளோ வம்சி கிருஷ்ணாவுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
அவளது தகவலை பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "உன்னை பிக் அப் பண்ண சரியா 8.30 க்கு வரேன்... இன்னும் கோவில் எதுன்னு நான் முடிவு பண்ணல, நாளைக்கு கோவில் ல தாலி கட்டிப்போம்... ரெஜிஸ்டர் பண்ண நிறைய ஃபார்மாலிடீஸ் இருக்கு... அதுக்கு நாளைக்கு நேரம் இல்ல... அது அப்புறம் பண்ணிக்கலாம், உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சு ரெடியா இரு..." என்று அனுப்பினான்...
அவளும், "ஓகே" என்று பதில் அனுப்ப, "என் மேல நம்பிக்கை இருக்கு தானே" என்று அடுத்த கேள்வி அவனிடம் இருந்து வந்தது...
"எஸ்" என்று பதில் அனுப்பியவளுக்கு முழுதாக சந்தோஷப்படவும் முடியவில்லை...
அவள் தான் பதறினாள்... வம்சி கிருஷ்ணா எதனை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருந்தான்...
தென்றலின் நினைவுகள் அவன் இதயத்தை அழுத்திக் கொண்டு இருந்தாலும், யாதவ் கிருஷ்ணாவுக்காக இதனை செய்ய துணிந்து விட்டான்...
முடிவெடுத்த பின்னர் அதனை பற்றி யோசிப்பது அவனுக்கு பழக்கம் இல்லை...
தேன்மொழியை திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டான்...
இப்போது அதில் உறுதியாக இருக்கின்றான்...
'யாரை துணைக்கு அழைத்தது செல்லலலாம்' என்று நினைத்துக் கொண்டே, சோஃபாவில் அமர்ந்து இருந்தவன் அருகே, "ஹாய் டா" என்று சொன்னபடி வந்து அமர்ந்தான் கெளதம் கிருஷ்ணா...
'ஆடு சிக்கிடுச்சு' என்று நினைத்தபடி, "நாளைக்கு நீ பிசியா?" என்று கேட்டான்...
"இல்லடா, நமக்கு ரெக்கார்டிங் இனி அடுத்த வாரம் தானே" என்று அவன் பதிலளிக்க, "அப்போ ஓகே... எந்த கோவில்ல நாளைக்கு கூட்டம் குறைவா இருக்கும்?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...
"என்னடா கோவிலுக்கு போக போறியா? அதிசயமா இருக்கு" என்று சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ சிறிது யோசித்து விட்டு, "ஆஹ் நான் சிட்டி ல இல்லாம கொஞ்சம் தள்ளி இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போவேன்... அங்கே பெருசா யாரும் இருக்க மாட்டாங்க" என்றான்...
"குட், அங்க கல்யாணம் பண்ணலாமா?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...
"என்னது?" என்று கெளதம் கிருஷ்ணா அதிர, "இல்ல என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கல்யாணம் பண்ண யோசிச்சு இருக்கான்... நாம தான் பண்ணி வைக்க போறோம்" என்றான்...
"என்னது நாமளா? எனக்கு தெரியாத உன் ஃப்ரெண்ட் யாரு? பண்ணுறதுன்னு நீ பண்ணி வை... வை மீ?" என்று கேட்க, அவன் தோளில் கையை போட்ட வம்சி கிருஷ்ணாவோ, "இப்படி சொல்லிட்டே இருந்தா அப்புறம் உனக்கும் கல்யாணம் நடக்காது... பார்த்து" என்றான்...
அவனை முறைத்த கெளதம் கிருஷ்ணாவோ, "எப்படி எல்லாம் என்னை மிரட்டுற... ஓகே ஃபைன்... திருட்டு கல்யாணம் தானே... பண்ணி வச்சுடலாம்... ஆனா ஒன்னு வம்சி, வர வர நீ ரொம்ப வித்தியாசமா இருக்க, மாஸ்டருக்கு அறையுற, இப்போ திருட்டு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொல்ற... ஒரே அட்வென்ச்சர் மோட் ல சுத்திட்டு இருக்க" என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொள்ள, வம்சி கிருஷ்ணா சத்தமாக சிரித்துக் கொண்டான்...
அன்றைய இரவு தேன்மொழிக்கு மட்டும் தான் தூங்கா இரவாகி போனது...
காலையில் மகாலக்ஷ்மி கார்ட் எல்லாம் எடுத்துக் கொண்டே புறப்பட ஆயத்தமானார்...
தேன்மொழிக்கு மனம் கேட்கவில்லை...
கையில் இருந்த வளையலை சுவரில் தட்டி சத்தம் எழுப்பினாள்...
அவரும் திரும்பி பார்த்தார்...
அவரை நோக்கி சென்றவளோ, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவரோ, "என்னாச்சும்மா திடீர்னு கால் ல விழுற?" என்று கேட்டவர், அவள் நெற்றியில் முத்தம் பதித்து விலக, அவளால் பதில் சொல்ல முடியவில்லை... கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...
"புகுந்த வீட்டுக்கு போறத நினச்சு அழுறியா?" என்று கேட்க, அவளோ குனிந்தபடி ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...
மகாலக்ஷ்மியோ, "இதுக்கெல்லாம் அழலாமா? ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்" என்று சொல்லி அவள் தலையை வருடி விட்டு வெளியேற, அவளுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை...
நேரத்தைப் பார்த்தாள், எட்டு மணி...
இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவான்...
காலையிலேயே உடைகளை மகாலக்ஷ்மிக்கு தெரியாமல் அடுக்கி வைத்து இருந்தாள். அதனால் இப்போது ஆயத்தமாகும் வேலை மட்டும் தான்... அவசரமாக புடவை, நகை எல்லாம் அணிந்தாள்...
கல்யாண பெண் அளவுக்கு இல்லை என்றாலும் மோசமாக இல்லை...
நன்றாகவே ஆயத்தமானாள்...
எல்லாம் முடிய நேரத்தைப் பார்த்தாள்... நேரம் எட்டரையை நெருங்கிக் கொண்டு இருந்தது...
இதே சமயம் கெளதம் கிருஷ்ணாவுடன் வெளியே வந்தான் வம்சி கிருஷ்ணா...
வெண்ணிடை காட்டன் குர்தா அணிந்து இருந்தான்...
வேஷ்டி அணிந்தால் கேள்வி வரும் என்று அவனுக்கு தெரியும்...
வெண்ணிற காட்டன் குர்தா அடிக்கடி அணிவான்... அதனால் யாரும் சந்தேகப்படவில்லை...
வாசலுக்கு வந்ததுமே, "நீ கோவிலுக்கு போய் ரெண்டு மாலையும் தாலியும் வாங்கி வச்சிட்டு, ஐயர் கிட்ட கேட்டு வேற ஏதும் பண்ணணும்னாலும் பண்ணிடு... நான் மாப்பிள்ளை பொண்ணோட வரேன்" என்றான்...
அவனை மேலிருந்து கீழ் பார்த்த கெளதம் கிருஷ்ணாவோ, "உன் க்ரைம் ல எல்லாம் என்னை பார்ட்னர் ஆக்குறடா" என்று சொல்லிக் கொண்டே, தனது காரை எடுத்துக் கொண்டே செல்ல, வம்சி கிருஷ்ணாவோ தனது காரில் தேன்மொழியின் வீட்டிற்கு புறப்பட்டு விட்டான்...
போகும் வழியிலேயே, "ஐ ஆம் ஆன் தெ வே" என்று தேன்மொழிக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்...
அவளும் பெட்டியுடன் முன்னறையில் அவனை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருக்க, அவன் காரும் அவளது வாசலில் வந்து நின்றது...
அவளோ அவசரமாக எழுந்து வாசலுக்கு பெட்டியை தூக்கிக் கொண்டே வர, காரில் இருந்து இறங்கி அவளை நோக்கி வந்தவனோ பெட்டியை வாங்கிக் கொண்டே, "உள்ளே ஏறு" என்று சொல்லிக் கொண்டே சுற்றி பார்த்தான்... அவர்களின் நல்ல நேரத்துக்கு அவர்களது தெரு வெறிச்சோடி போய் இருந்தது...
அவளும் காரினுள் ஏறிக் கொள்ள, அவனும் அவளது உடைப் பெட்டியை காரின் டிக்கியில் வைத்து விட்டு, வேகமாக வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவன் காரை கிளப்பினான்...
தேன்மொழிக்கு பதட்டமாக இருந்தது...
ஆனால் வம்சி கிருஷ்ணா இயல்பாகவே வண்டி ஓட்டினான்...
அவளோ புடவை முந்தானையை திருகிக் கொண்டே, வெளியே பார்த்தபடி அமர்ந்து இருக்க, சற்று நேரத்தில் கோவிலும் வந்து விட்டது...
வம்சி கிருஷ்ணாவோ அருகே இருந்த மாஸ்க்கை எடுத்து போட்டுக் கொண்டவன், "யாரும் பார்த்தா கல்யாணம் நடக்க முதல் விஷயம் வீட்டுக்கு போய்டும்" என்று சொல்லிக் கொண்டே, அவளிடம் ஒன்றை நீட்ட அவளும் அதனை போட்டுக் கொண்டாள்.
இருவரும் ஒன்றாக இறங்கி கோவிலுக்குள் நுழைந்தார்கள்...
பெரிதாக பேசிக் கொள்ளவில்லை...
தேன்மொழிக்கோ பதட்டம்...
அங்கே சாமி சன்னிதானத்தில் கையில் மாலை மற்றும் தாலியுடன் நின்று இருந்த கெளதம் கிருஷ்ணாவோ நடந்து வந்த வம்சி கிருஷ்ணாவையும் தேன்மொழியையும் உற்றுப் பார்த்து விட்டு, அவர்களுக்கு பின்னால் யாரும் வருகிறார்களா? என்று தேடினான்...
யாரும் வரவில்லை...
அருகே வந்த வம்சி கிருஷ்ணாவிடம், "எங்கடா மாப்பிள்ளை? இவங்க தான் பொண்ணா? இவங்கள பார்த்தா தேன்மொழி போல இருக்கே" என்று சொல்லிக் கொண்டே இருக்க, வம்சி கிருஷ்ணாவோ மாஸ்க்கை கழட்டி குர்தாவின் பாக்கெட்டில் வைத்தவன், தேன்மொழியை பார்க்க அவளும் மாஸ்க்கை கழட்டினாள்...
கெளதம் கிருஷ்ணாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...
"இதுவா பொண்ணு? மூணு நாள் ல கல்யாணம் ல" என்று சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ, "சரி, மாப்பிள்ளை யாரு?" என்று கேட்டான்...
"என்னை பார்த்தா உனக்கு மாப்பிள்ளையா தெரியலையா?" என்று கேட்ட வம்சி கிருஷ்ணாவோ அங்கே இருந்த ஐயரிடம், "கல்யாண சம்பிரதாயங்களை தொடங்கலாம் ஐயா" என்று சொல்ல, அவரும் சம்மதமாக தலையை ஆட்டியபடி கெளதம் கிருஷ்ணாவின் கையில் இருந்த தாலி மற்றும் மாலையை வாங்கி தட்டி வைத்துக் கொண்டே, மந்திரம் சொல்ல, கருவறைக்குள் சென்று விட்டார்...
இன்னும் கெளதம் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சி அகலவே இல்லை...
"என்னடா சொல்ற?" என்றான்...
"என்ன சொல்லணும்?" என்று வம்சி கிருஷ்ணா கேட்க, "உன் கிட்ட பேசணும், நீ கொஞ்சம் வா வம்சி" என்று அவன் கையை பிடித்து சற்று தள்ளி அழைத்து சென்றவன், "இதனால வீட்ல எவ்ளோ பிரச்சனை நடக்கும் தெரியுமா?" என்று கேட்டான்...
வம்சி கிருஷ்ணாவோ, "யாதவ்வுக்காக எந்த பிரச்சனையையும் நான் ஃபேஸ் பண்ண தயார்" என்றான்...
"அதுக்குன்னு உன் வாழ்க்கையை அடமானம் வைப்பியா? அந்த பொண்ணுக்கு பேச முடியாது டா" என்றான்... "சோ வாட்?" என்றான் வம்சி கிருஷ்ணா...
"ஓகே ஃபைன் அத விடு... உன் தென்றல் அப்போ அவ்வளவு தானா?" என்று கேட்டான்...
அவனுக்கு எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்கின்ற முனைப்பு...
"அவ எப்போவுமே என் மனசுல இருப்பா... எப்படியும் நான் அதுல இருந்து வெளியே வரணும்... அதுக்கப்புறம் தான் இவ கூட என் வாழ்க்கை ஆரம்பிக்கும்" என்று சொன்னபடி சாமி கும்பிட்டுக் கொண்டு நின்ற தேன்மொழியை பார்த்து விட்டு கெளதம் கிருஷ்ணாவை பார்த்தான்...
"அந்த பொண்ணு சட்டுன்னு ஓகே சொன்னது உனக்கு தப்பா படலையா? எனக்கு அவ மேல இருந்த மரியாதை குறைஞ்சிடுச்சு" என்றான்...
உடனே வம்சி கிருஷ்ணா, "நானும் என் சுயநலத்துக்காக தான் கல்யாணம் பண்ணுறேன்... காதல் எல்லாம் இல்ல, அவளும் அப்படி ஏதும் சுயநலத்துக்காக கல்யாணம் பண்ண சம்மதிச்சு இருக்கலாம்...பட் ஐ டோன்ட் கெயார், அவ ஹார்ம் இல்ல... யாதவ்க்கு ரொம்ப சப்போர்ட் ஆஹ் இருப்பா... எனக்கு அது போதும்... கொஞ்ச நாள் கழிச்சு அவ மேல லவ் வரலாம், வராம போகலாம், வாட் எவர், வாழ ஆரம்பிச்சுடுவேன்" என்றான்...
"என்னடா இவ்ளோ சிம்பிள் ஆஹ் பேசுற? உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பேர் லைன்ல இருக்காங்க... ஆனா நீ வாய் பேச முடியாத பொண்ண தேடி பிடிச்சு இருக்க... ஐ காண்ட் அக்செப்ட் டா" என்றான்...
அவனை முறைத்துப் பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "இதையே வேறு யாரும் யாதவ்வுக்கு சொன்னா உன்னால தாங்கிக்கவே முடியாதுல... இந்த பொண்ணுக்கு மட்டும் ஏன்டா திரும்ப திரும்ப சொல்ற? அவளுக்கு வாய் பேச முடியாது தான்... அதுக்காக வாழவே கூடாதுன்னு சட்டம் இல்லையே... " என்று ஆதங்கமாக கேட்டான்...
ஒரே கேள்வி தான் வாயடைத்து போய் விட்டான் கெளதம் கிருஷ்ணா...
"அப்போ இது தான் முடிவா?" என்று கேட்டான்...
"200%" என்று வம்சி கிருஷ்ணாவிடம் இருந்து பதில் வந்தது...
"ஓகே கோ எஹெட்" என்று பெருமூச்சுடன் சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ அர்ச்சதையை கையில் எடுத்துக் கொண்டே நின்று இருக்க, ஐயரோ மாலையை இருவரிடமும் கொடுத்து மாற்ற சொன்னார்...
மாலை மாற்றிக் கொண்டார்கள்...
தான் ஆசைப்பட்டவனே கணவனாக கிடைக்கும் சந்தோஷத்தை தேன்மொழியால் அந்த கணத்தில் அனுபவிக்க முடியவே இல்லை...
இதுக்கு பிறகு நடக்க இருப்பவற்றை நினைத்து பயமாக இருந்தது...
முகத்தில் கலவரம்... கண்கள் கலங்கி இருந்தன...
இதே சமயம் வம்சி கிருஷ்ணாவோ மாலை மாற்றும் வரை திடமாக தான் இருந்தான்...
ஐயரோ, “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே தாலியை நீட்ட, அதனை வாங்கிய வம்சி கிருஷ்ணாவின் கரத்தில் ஒரு நடுக்கம்...
தென்றலை நினைத்து நடுக்கம்...
அவள் எழுத்துக்கள் அவன் கண் முன்னாடி வந்தன...
மனதில் ஒருத்தியை வைத்துக் கொண்டே இன்னொரு பெண்ணுக்கு தாலி கட்ட போகின்ற தவிப்பு...
தான் செய்ய போவது தவறு என்று தெரிந்தாலும் முடிவெடுத்த பின்னர் அவனால் அதனை மீள் பரிசீலனை செய்யும் மனநிலை இல்லை...
தேன்மொழி இவ்வளவு தூரம் தன்னை நம்பி வந்த பின்னர் இப்போது இதனை பற்றி யோசித்த தன் மீதே கோபம்...
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே உணர்வுகளை அடக்கியவன், மங்கள நாணை தேன்மொழியின் கழுத்தருகே கொண்டு வந்து மூன்று முடிச்சு இட்டான்...
அவளுக்கோ கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது...
அந்த கண்ணீர் சொல்லும் கதைகள் ஏராளம்...
அவன் மூன்று முடிச்சு இட்ட பின்னர் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்து விட்டு, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்...
அவன் முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு இருந்தன...
அவன் காதல் தோல்வி என்று சொன்னது நினைவில் வந்து போனது... அதனால் தான் முகம் இறுக்கமாக இருக்கின்றது என்று யூகித்துக் கொண்டாள்.
மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது...
அவனோ ஒரு பெருமூச்சுடன் அவளை குனிந்து பார்த்துக் கொண்டே, தலையை மெதுவாக ஆட்டி விட்டு கெளதம் கிருஷ்ணாவை பார்த்தான்... அவன் அவர்களுக்கு அர்ச்சதை தூவி விட்டு, "அடுத்து என்ன? போருக்கு தானே போறோம்" என்று கேட்டான்...
அவன் கேட்ட தோரணையில் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்த வம்சி கிருஷ்ணாவோ, "தளபதி நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம்?" என்று கேட்டான்...
"க்கும் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை... இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல... இப்போவே சொல்லிட்டேன்..." என்று சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தான் கெளதம் கிருஷ்ணா...
ஐயருக்கு தட்சணையை வைத்து விட்டு, தனக்கு அருகே நின்ற தேன்மொழியை பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "கிளம்பலாமா?" என்று கேட்க, அவளோ, சம்மதமாக தலையை ஆட்டியபடி அவனுடன் நடந்து சென்றாள்...
தன் கூட வருவது தனது தென்றல் என்று அறியாமல் அழுத்தமான மனதுடன் நடந்து செல்லும் கிறுக்கன் அவன்...
அவளை தேடி பிடிப்பதில் அவன் தோற்று விட்டாலும், அவர்களை சேர்த்து வைப்பதில் விதி வென்று விட்டது...
அவன் தன்னை தான் காதலிக்கிறான் என்று அவளும் அறியவில்லை...
அவள் தன்னை தான் காதலிக்கிறான் என்று அவனும் அறியவில்லை...
அறிந்த திருமணத்தின் நடுவே அவர்களின் அறியாத காதல் விதை போல புதைந்து இருக்க, அந்த விதை விருட்சமாகுமா? இல்லை புதைந்தே இருக்குமா? என்ற கேள்வியுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து விட்டார்கள் இருவரும்...