ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அணுசரணின் "வேங்கை விழியாள் " - கதை திரி

Status
Not open for further replies.

Anucharan

Active member
Wonderland writer
ஹாய் நட்புக்களே!!

இதோ என் புது முயற்சியுடன்..... இந்த கதை ஒரு போட்டிக்காக ஆரம்பித்தது ஆனால் அந்த நேரத்துக்குள் முடிக்க முடியும் என தோணாததால் சாதாரண தொடர் கதையாகவே கொடுக்கலாம் என நினைத்தேன்....
எங்கே போட்டிக்காக அவசரமாக எழுதி கரு மாறிவிடக்கூடாததால் இந்த முடிவை எடுத்தேன்...
என் முதல் கதையும் தொடர்ந்து வரும் அதேபோல் இந்த முயற்சிக்கும் உங்கள் ஆதரவை அளியுங்கள் நட்புக்களே
நன்றி:):)
 

Anucharan

Active member
Wonderland writer
தலைப்பு : வேங்கை விழியாள்

நாயகன் : நிலவழகன்!!!!
நாயகி : நிலவழகி!!!!!!


கதையைப் பற்றி சொல்லணும்னா ...இது கொஞ்சம் வித்தியாசமான சென்சிட்டிவ் ஆன கதைக்களம் கொண்ட தொடர்கதை நட்புக்களே... சமூகத்தில் அன்றாடம் நாம் அலட்சியமாய் சிலரைக் கடந்து வந்திருப்போம்.... அவர்களைப் பற்றின கதை...

எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் இந்தமாதிரி ஒரு கதைக்கருவுடன் தொடர் எழுத மிகவும் ஆசை... அதற்கான சரியான தருணமாகவே இதைப் பார்க்கிறேன்....

வெற்றி தோல்விகளை தாண்டி நான் எடுத்துக் கொண்ட‌‌ கதை மாந்தர்களுக்கு நியாயம் செய்வதிலே உறுதியாய் உள்ளேன்.. சில மனதைப் பாதிக்கும் நிகழ்வுகள் இருந்தாலும் பெரிய மனது பண்ணி மன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே...

இறுதியாக ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள் நட்புக்களே... என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு உங்களின் குறைந்த பட்ச ஒரு வார்த்தையிலான (நிறை/குறைக்கான)கருத்துக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது எழுத்தாளர்களான எங்களுக்கு மட்டுமே புரியும்... எனவே சரியோ தவறோ உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

இதோ கதையின் முன்னோட்டம்

"பின்னங்கால் பிடறியில் படற இருள் கவ்விய அந்த ஆள் ஆரவமற்ற சாலையில் தன் உடம்பில் உள்ள காயங்களையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருந்த பதின் வயது பாலகனை சிறிதும் இரக்கமில்லா அந்த மனித மிருகங்கள் துரத்திக் கொண்டிருந்தது...

ஒரு தெருவைக் கடந்ததும் அவர்கள் பின் வருவதற்கான ‌எந்த அறிகுறியும் இல்லாமல் போக அந்த பிஞ்சோ ஓடிவந்ததனால் ஏற்பட்ட களைப்பில் அருகில் இருந்த குப்பைத் தொட்டியின் பின் மறைந்து கொள்ள,

துரத்தி வந்த அரக்கர்களை வெறுமையான தெருவே வரவேற்றது... அதில் மாமிசமலைபோல் இருந்த ஒருவன் மற்றவனிடம் 'அவனை விடக் கூடாது... இந்த தெருவத் தாண்டி அவன் எங்கையும் போயிருக்க முடியாது... நீங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் போங்க 'என அனுப்பிவிட்டு அவனும் நகர ....

அதுவரை தன் வாயை இருகையாலும் மூடி மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தவன் அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட அந்நேரம் அவன் தோள்களில் ஒரு கரம் விழ திரும்பி பார்க்க அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்.... பின் சில நொடிகளிலேயே அந்த கரங்களிலேயே மயங்கி விழுந்திருந்தான்"

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??

 

Anucharan

Active member
Wonderland writer
MEME-20210804-092220.jpg
விழி-1

கரு மேகங்கள் சூழ்ந்து நிலவு மகளை முகம் காட்டாமல் மறைத்துக் கொள்ள இதைப் பொறுக்காத வான் காதலன் தன் மின்னலெனும் ஆயுதம் கொண்டு மேகங்களைத் தாக்க அதுவோ வலி பொறுக்காது தன் கண்ணீரை பொழியவாரம்பித்தது...

அந்த ஏகாந்த இரவில் விடாது பெய்யும் மழையையும் பொருட்படுத்தாது 'திருச்சி டூ சென்னை' என எழுதப்பட்ட அந்த பேருந்து தங்குதடையின்றி தன் வேகத்தை அதிகப்படுத்தி முன்னேறிக் கொண்டிருந்தது...

அதில் பின்னிருக்கையில் ஜன்னலோரம் தன் பொதிகள் அடங்கியப் பையை மார்போடு அணைத்துக் கொண்டு மழையை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் நிலவழகன்...

பெயரிற்கு ஏற்ற போலவே அழகன் தான்.சந்தன நிறத்தில்.. மாசுமருவற்ற முகமும்... சிறிதாய் அரும்பத் துவங்கியிருந்த மீசையும் என பார்க்க லட்சணமாய் இருந்தான்.... ஏனோ இந்த ஒரு மாதம் அவன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களாக மாறிப் போயின...

திருச்சிக்கு பத்து மைல் தாண்டி உள்ளது நிலவழகனின் கிராமம்.... அவனுடைய தந்தை வீரபாண்டியன், அவனின் சித்தி பரிமளம்... அவனைவிட ஆறு வயது சிறியவன் நிலவரசன்... தங்கை மதிவதனி....

வீரபாண்டியன் குடும்பம் அந்த கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் பெரிய குடும்பம்... அந்த கிராமத்தின் முக்கால்வாசி நிலம் அவர்களுடையதே...
அதுமட்டுமின்றி அந்த ஊரில் அவர்கள் வைப்பதே சட்டம்....

நிலவழகனின் தாய் அவனைப் பிரசவித்த ஆறு மாதங்களில் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக அடிக்கடி சுகவீனமாக இருந்தவர் சிலநாட்களிலேயே இறைவனடியை அடைந்தார்.

கைக்குழந்தையுடன் தவித்துக் கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு அவரின் குடும்பமே சேர்ந்து அவர் மனைவியின் தங்கை பரிமளத்தை மணமுடித்து வைத்தனர். ...

முதலில் பரிமளமும் தன் அக்காவின் மகன் தன் மகனென்ற எண்ணி அவனை நன்றாகவே வளர்த்தார் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து அவர் கற்பமடையும் வரை....

பின் அவரின் நடவடிக்கையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது... எங்கே தன் இரத்தத்தில் உருவாகும் பிள்ளைக்கு இந்த ஊரில் முதல் உரிமை கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சியவர் கொஞ்சம் கொஞ்சமாக நிலவழகனிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார்...
அதோடு காரணமே இன்றி அவன் மீது சிறிது சிறிதாக வெறுப்பையும் வளர்த்துக் கொண்டார்...

முதல் முதலில் அம்மா என்றே அறிமுகமானவர் தன்னை இதுவரை அன்புமழையில் நனைத்தவர் தீடிரென விலகுவது புரியாத அந்த ஐந்து வயது நிலவழகனும் 'மா...மா...' என தன் மழலை மொழியில் முந்தானையைப் பிடித்துக் கொண்டே திரிய ஒரு கட்டத்திற்கு மேல் பரிமளத்திற்கு எரிச்சலையே உண்டாக்கியது....

இதனை கவனித்த வீரபாண்டியன் " அழகா ஏன் அம்மாவை தொந்தரவு பண்ற ....நீ தம்பிப் பாப்பா வேணும்னு கேட்டல்ல அப்போ அம்மாவ தொல்லைப் பண்ண கூடாது சரியா "... என எடுத்துக் கூற அவனும் சரியென தலையாட்டினான் பொறுப்பு மிக்க தமையனாக அப்போதிருந்தே மாறினான்...

அதன் பின் நிலவழகனும் பரிமளத்தை எதற்கும் எதிர் பார்ப்பதில்லை...

பரிமளத்திற்கு மகன் பிறக்கவும் அவரின் முழு கவனமும் அவனின் மீதே திரும்பியது முன்பு போல் நிலவழகனை பார்த்துக் கொள்வதில்லை... நிலவழகனுக்கும் அது வருத்தம் அளித்தாலும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தன் தமையன் மீதே கவனத்தை செலுத்தினான்...

பரிமளம் நிலவழகனுக்கு கொடுமை எதும் செய்துவிடவில்லை அதற்கு அவரின் மனமும் இடம் கொடுக்காது ஏனெனில் தனக்கு முதன் முதலில் தாய்மை உணர்வை அறிமுகப்படுத்தியவன் என்பதால் அந்த பாசமும் சிறிது இருந்தது அதோடு தன் மகனான நிலவரசனுடனும் நன்றாகவே பழகவிட்டார்....

ராமனின் தமையன் லட்சுமணன் போல பாசமிக்க இருந்தனர் பரிமளமும் பிற்காலத்தில் கைகேயி போல் வரம் பெற உதவுமென விட்டு விட்டார்..

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளில் மதிவதனி... நிலவழகனுக்கு குடும்பம் தான் எல்லாமே... தம்பி தஙகைகளுக்காக உயிரைக் கூட தருவான்... அவர்களுக்கும் நிலவழகன் என்றால் உயிர்...

வீரபாண்டியனுக்கு உருவத்தில் தன் முதல் மனைவியைக் கொண்டு இருக்கும் நிலவழகன் மீது மிகுந்த பாசம்... அதில் பரிமளத்திற்கு அதிருப்தியே‌... நிலவரசன் வீரபாண்டியன் போல் சற்று மிடுக்குடன் இருப்பான்... இருந்தும் அவர் அழகன் மீதே கவனம் செலுத்துவதில் வருத்தமும் கோபமும் அதிகமாக மனதில் வைத்திருந்தார் அது வெடித்து சிதறும் காலமும் வந்தது...

வீரபாண்டியன் பஞ்சாயத்து,சந்தை , தோப்பு என எங்கு சென்றாலும் விடுமுறை நாட்களில் நிலவழகனை உடன் அழைத்து சென்று விடுவார்... தனக்கு பின் அவனே என்பதுபோல அதற்கான அனைத்தையும் சிறுவயது முதலே அழகனுக்கு கற்றுத்தர துவங்கியிருந்தார்....

எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் தான் அந்த எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்திருக்க..
தன் மீது திருட்டு பழி விழுந்தது கூட தெரியாமல் நிலவழகனின் தற்போது இலக்கில்லா பயணம் இனிதே துவங்கியிருந்தது...
--------------------------------
மெல்ல மெல்ல கருமேகங்கள் அகல பிரகாசமாக தன் கதிர்களை பூமியில் பரப்ப துவங்கியிருந்தாள் நிலவுமகள்....

அவளின் ஒளியில் மரங்களுடன் உறவாடிக் கொண்டிருந்த மழைத் துளிகளும் வைரத்தைப் போல ஜொலி ஜொலிக்க அவ்வழிவந்த தென்றலும் இலையுடனான உறவைப் பிரித்து தரையில் விழ்த்தியிருக்க ....வருத்தமாய் இலையும் தென்றலை முறைத்தது....

வெண்ணிற திரைச்சீலைகளைக் கடந்து சென்ற தென்றலும் நிலவுமகளுக்கு போட்டியாய் உறங்கிக் கொண்டிருந்த நிலவழகியை பார்த்ததும் அதுவும் தன் வேகம் குறைத்து மெதுவாய் அவளைத் தீண்டி காற்றில் கரைந்து போனது.. நிலவழகி பெயருக்கேற்ற போல அழகிதான்......

ஐந்தரை அடிக்கு சற்று அதிக உயரமும் பால் வண்ண நிறமும் என பார்க்க அழகாய் இருப்பாள்...

அவள் நன்றாக உறங்குவது போல் வெளியில் தெரிந்தாலும் அந்த ஏசி அறையிலும் சிறிது நேரத்திலேயே உடல் முழுதும் வியர்வையில் குளித்து நடுங்க ஆரம்பித்தது.. கண் திறக்காமலேயே மூச்சுவிட சிரமப்படுபவள் போல் பெரிய பெரிய மூச்சுகளை விட்டவள் சில நொடிகளிலேயே 'ஆ......' என கத்தியபடி படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தாள்...

தன் கையினை நெஞ்சில் வைத்து தடவிக் கொண்டே மற்றொரு கையால் விளக்கைப் போட்டவள் தண்ணீர் பாட்டிலையும் அருகில் இருந்த மாத்திரையும் எடுத்து வேக வேகமாக வாயில் போட்டவள்... நிலை கொள்ளவே சில நொடிகள் ஆனாது‌...

தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் மணியைப் பார்க்க அதுவோ நள்ளிரவு இரண்டைக் காட்டியது... சற்று கோபத்துடன் முகம் சிவக்க தன் தொலைப்பேசியை கைவிட்டு துளாவியவள் அதில் கீர்த்தி என பதிவிட்டிருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்...

முழு ரிங் ஆகி கட் ஆகும் சமயத்தில் அழைப்பு ஏற்கப்பட எதிர் முனையில் பேச வாய் திறக்கும் முன்னே நிலா பொரியவாரம்பித்திருந்தாள்...

"நான்தான் அவ்வளவு தூரம் சொன்னேன்ல டி ...கேட்டியா....இந்த நினைப்பே வராமால் வேலையில என்னை முழு நேரம் ஈடுபடுத்தி அசதியினால ஏற்படுற ‌உடல்வலில கூட நல்லா தூங்கிட்டு இருந்தேன்...நீ சும்மா இல்லாம கொஞ்சம் ரெஸ்ட் எடுடி அப்பிடின்னு பன்னிரண்டு வருசமா தமிழ்நாடு பக்கமே வராத என்னை கொடைக்கானல்ல இருக்க உன் மாமனாரு கெஸ்ட் ஹவுசுல கொண்டு வந்து தங்கவச்சு என் நிம்மதியையே கெடுத்துட்டு நீ நல்லா தூங்கிட்டு இருக்கயாடி எரும... உன் சைக்காலஜில தீய வைக்க... நீ போலி டாக்டர்னு தெரியாம உன்ன நம்பி வந்தேன்ல என்ன செல்லணும்டி..."

இன்னும் பல நல்ல வார்த்தைகள் கொண்டு திட்டிக் கொண்டிருக்க எதிர் முனையில் கீர்த்தியோ அவள் பேச ஆரம்பிக்கும் முன்பே அலைப்பேசியே அருகில் இருந்த சோபாவில் தூக்கி வீசியவள் நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தாள்...

அழைப்பை ஏற்காமல் விட்டிருந்தால் திரும்ப திரும்ப விடாது அழைத்து முழுத் தூக்கத்தையும் கெடுத்திருப்பாள் என்று தன் நண்பியைப் பற்றி நன்றாய் உணர்ந்த கீர்த்தி எப்போதும் போல் இன்றும் செய்தாள்....

இங்கு நிலாவோ நன்றாய் நல்ல வார்த்தைகளால் கீர்த்தியை அர்ச்சித்து விட்டு மூச்சு வாங்கிய பின்பே எதிர்முனையில் சத்தம் வராமல் போனதை உணர்ந்தவள் தன் ஆருயிர் தோழி தற்போது என்ன செய்திருப்பாள் என அறிந்து ...

"காலையில உனக்கு இருக்குடி " என மனதில் பொருமிக் கொண்டே அலைப்பேசியை வைத்தாள்...

பின் போர்வையினால் தன் உடலை மூடிக் கொண்டு அந்த கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்...

மழை நின்றிருந்தாலும் அதன் ஈரம் தென்றல் வழி கம்பளியையும் தாண்டி உடலை வருட அதைக்கூட உணராமல் இருளைக் கிழித்து வரும் நிலவின் ஒளியை பார்த்துக் கொண்டே இருந்தவள் எடுத்துக் கொண்ட மருந்து செயல் பட ஆரம்பித்து இருக்க எப்போது உறங்கினாள் என்றே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்....

❤️❤️❤️
கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??
Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/
என்றும்
அன்புடன்
Anucharan ?
 

Anucharan

Active member
Wonderland writer
விழி-2

"பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல"

பேருந்தில் ஹைடெசிபெல்லில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...

எதையுமே உணராத நிலவழகன் ஜன்னலின் வழியே வெகுநேரமாக கொட்டும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தான்...

அடுத்து என்ன என்பதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்தது...

வெறும் பதினான்கு வயதே ஆகியிருப்பினும் அவனுக்கும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும், அவனின் தந்தையுடன் வெளியில் சென்ற அனுபவமும் இருக்க தனியாக தன் வாழ்க்கையை வாழ புது இடம் தேடி கிளம்பியிருந்தான்...

இன்னும் சென்னையை அடைய ஒரு மணி நேரம் இருக்க அன்று மருத்துவரிடம் வாங்கிய முகவரியை இன்னொரு தடவை எடுத்து சரிபார்த்தவன் அத்தோடு தன் படிப்பு சான்றிதழ்களும் ஐந்து லட்சம் பணத்தையும் ஒருமுறை பார்த்துக் கொண்டு மீண்டும் அதனை தன் நெஞ்சோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டான்...

மழை குறைந்து
கிழக்கு வானத்தில் சூரியன் மெல்ல தன் இளஞ்சிவப்பு நிறக் கதிரால் இந்த பூமியை பார்க்க துவங்கியிருந்த வேளையில் நிலவழகன் சென்னையை அடைந்திருந்தான்...

பேருந்தை விட்டு இறங்கியவன் அந்த இளங்காலை வேளையிலேயே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த அந்த பேருந்து நிலையத்தைப் பார்க்க மிரண்டே போனான்...

அதோடு மட்டுமல்லாது முந்தின நாள் காலையில் உண்ட உணவு அதன்பின் அவன் சாப்பிடவே இல்லை அதனால் அவன் வயிறு வேறு தன் இருப்பை உணர்த்த
மெதுவாக தன் பார்வையை சுழலவிட்டவனுக்கு அருகில் தேநீர் கடை தெரிய அங்கு சென்றான்...

"அண்ணா ஒரு பால் இரண்டு பன்" என்றான்... அந்த கடைக்காரரோ அவனை மேலிருந்து கீழ் வரை அலட்சியமாய் பார்த்தவர் சிறு முக சுழிப்புடன்

"காலைலேயே வந்துர வேண்டியது...கடையே இப்போதான் திறந்தேன்... அதுக்குள்ள இதுங்களுக்கு படியளக்கணுமா " என வாயிற்குள்ளேயே முணுமுணுத்து விட்டு
"காசு இருக்கா "என சற்று அதட்டலுடனே கேட்டார்...

அவரின் முணுமுணுப்பு நிலவழகனின் காதில் விழ அவனின் முகமோ இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது...

இருந்தும் இந்த காலை வேளையில் வேறு எங்கும் அலைய இயலாது என்பதை உணர்ந்தவன் வேறுவழியின்றி ஆம் என்பது போல் தலையசைக்க அவரும் வேண்டா வெறுப்பாக பாலைக் காய்ச்சியவர் அவன் கையில் கொடுக்காமல் அருகில் இருந்த பெஞ்சில்

'டொம் ... ' என்ற சத்தத்துடன் வைத்தவர் அருகிலேயே பன்னையும் வைக்க அதற்குள் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து உணவிற்கான சில்லறை எடுத்தவன் அவர் கைகளில் கொடுக்க அந்த டீக்கடைக்காரரோ
"போ அந்த பக்கம் போய் குடி " என உதாசினமாக கூறிவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்... அவரின் அலட்சியப் போக்கை கண்ட நிலவழகனுக்கு சுருக்கென்று ஒருவித வலி உருவாக உணவுகூட தொண்டையில் இறங்க மறுத்தது..

அவன் நின்றிருந்த இடத்தின் அருகில் குப்பைத் தொட்டியில் எலும்பும் தோலுமாக இரண்டு நாய்க்குட்டிகள் படுத்திருக்க அதன் அருகில் சென்றவன் தன் கைகளில் இருந்த பன்னை அதன் அருகில் வைத்துவிட்டு பாலை மட்டும் குடித்துக் கொண்டான்..

------------------------------------------

பெரியமுள் பன்னிரண்டைத் தொட்டிருக்க சின்னமுள்ளோ சோம்பலாக பத்தைத் தொட்ட நொடி கூண்டில் அடைபட்ட குயிலோ வேகமாக வெளிவந்து தன் இன்னிசைக் குரலில் பத்து முறை கூவியது.....

அப்போது தான் சூரியன் மெல்ல மெல்ல வெளிவந்து தன் உஷ்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது....

முகத்தில் பட்ட கதிரவனின் ஒளியில் தன் நீலநிற கருமணிகள் மூடிய இமைகளினுள் அங்கும் இங்கும் அசைய பிரிக்க இயலாது இருந்த இமைகளை மெல்ல திறக்க அந்த செங்கதிரோனின் மிதமான ஒளியில் அவளின் நீலநயனங்கள் சோர்வை மீறியும் பிரகாசித்தது....

இரவு இருந்த இறுக்கம் நடுக்கம் எல்லாம் வெயில் கண்ட பனியாய் விலகி இருக்க புத்துணர்ச்சியுடன் தெரிந்தாள்.... தன் உடலில் சுற்றியிருந்த போர்வையை விலக்கியவள் தன் கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அந்த பால்கனி வழியே தெரிந்த பசுமையையும், பறவைகள் மீட்டும் இன்னிசையையும் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தாள் நிலவழகி ....

இருப்பத்தியாரு வயதுள்ள யுவதி..... என்னதான் அவளுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் அதை முடிந்தமட்டும் சமாளிக்கும் திறமையும் கூடவே இருந்தது...

புதிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் அவளுக்கு உண்டு...

மும்பையில் அவள் நடத்தும் இருவேறு நிறுவனமும் அந்த அந்த துறையில் நம்பர் ஒன் தகுதியில் இருக்கிறது ..

ஒன்று மென்பொருள் நிறுவனம் மற்றொன்று வணிகம் சம்பந்தமான நிறுவனம்...

இந்த இளம்வயதிலேயே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துகிறாள் என்பதிலேயே அவளின் உழைப்பும் முயற்சியும் அபரிவிதமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை... அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் தொழில் மற்றும் அவள் நடத்தும் தொண்டு நிறுவனம் அவை மட்டுமே உலகமே....

எந்த சமூகம் அவளை புறக்கணித்து வீதியில் எறிந்ததோ தற்போது அதே சமூகத்தின் முன் நூறு பேரிற்கு வேலை தரும் முதலாளி என்ற நிலையில் இருக்கிறாள்....

இதுவே அவளின் முழு வெற்றி இருந்தும் கடந்த காலத்தில் நடந்த கசப்பான நினைவுகளில் இருந்து தப்பிக்கவே தன்னை முழுநேரமும் தொழிலிலேயே புகுந்தி கொள்கிறாள்....

இதையெல்லாம் கவனித்த அவளின் ஆருயிர் தோழி மற்றும் தோழனான கீர்த்தனா, வாசன் இருவரின் திட்டமே இந்த ஒருமாதகால ஓய்வு ...

கீர்த்தி,வாசன் , மணி மற்றும் நிலவழகி மூவரும் ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மிக நெருங்கிய நண்பர்கள்...

எப்போதும் தனியாகவே இருக்கும் நிலவழகிக்கு ஒருநாள் வகுப்பு மாணவர்களாலே பிரச்சனை ஏற்பட இந்த மூவரும் தான் அவர்களிடம் இருந்து அழகியை காத்தனர்...

அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களை பார்த்தால் சிறு புன்னகையுடன் கடக்கும் நிலவழகியை பேசிப்பேசியே தங்கள் மூவர் கூட்டணியில் இணைத்திருந்தனர்...

கீர்த்தி மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க மற்றவர்கள் தொழில் துறையில் கால்பதிக்க அதற்கான துறையைத் தேர்ந்தெடுத்தனர்...

வாசன் மற்றும் மணி இருவருமே நிலவழகிக்கு பாதுகாவலன் போன்றவர்கள்...

கல்லூரி காலங்களில் கல்லூரி விடுதி அவளுக்கு கிடைக்காமல் போக மற்ற இருவரும் அவளுக்கு தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்தனர்...

அதிலும் அவளுக்கு பிரச்சினைகள் வர இருவரும் அவளுடனே தங்கிக் கொண்டனர்...
இதை அறிந்த பலரும் வாசனையும் மணியையும் தவறாக பேச அதைப்பற்றி அவர்கள் எப்போதுமே கண்டு கொண்டதில்லை.. நிலவழகி எவ்வளவோ சொல்லியும் கேட்காது இருவரும் அவளுடனே தங்கிக் கொண்டு தன் தோழிக்கு உற்ற நண்பர்களாக இருந்து வந்தனர்...

படிப்பு முடிந்ததும் வேலை தேடும் வேட்டையை துவங்க நிலவழகியைத் தவிர மற்ற இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது ஆனால் நிலவழகிக்கு திறமை இருந்தும் வேலை மறுக்கப்பட்டது....

அதனால் பல வருடம் முன் தன் பெயரில் டெப்பாசிட் செய்யப்பட்டு தற்போது அந்த பணம் பல்கி பெருகி இருக்க அதை வைத்து முதலில் வணிக நிறுவனத்தை நிறுவினாள்...

மற்ற இருவருமே அவளுக்கு உதவியாக வந்துவிட மணி வணிக நிறுவனமும் , வாசன் மென்பொருள் நிறுவனத்திலும் முப்பது சதவீத பங்குதாரராக இன்று வரை அவளுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்...

அந்த வீட்டின் அலைப்பு மணி சத்தத்தில் சுயம் தெளிந்தவள் சென்று கதவை திறக்க அங்கே கீர்த்தியின் மாமனாரும், வாசனின் தந்தையுமான கோபிநாதன் புன்னகையுடன் நின்றிருந்தார்...
ஆம் கீர்த்தியும் வாசனும் ஒருவரையொருவர் காதலிக்க இருவீட்டார் சம்மதத்துடன் இந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டனர்... அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் நிலவழகி ..

"என்னம்மா நல்லா தூங்கினாயா!!! எதுவும் அசவுகரியம் இருந்தால் உடனே எனக்கு கூப்பிடுமா "என்று வாஞ்சையுடன் கூறினார்... அவளிடம் என்ன பிரச்சினை இருந்தாலும் என்ன குறைகள் இருந்தாலும் தன் மகளாகவே நிலாவைப் பார்ப்பார்....

"அப்படியெல்லாம் இல்லை அங்கிள்.. இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. இங்க இருந்து பார்க்க வீயூ ரொம்ப அழகா இருக்கு அங்கிள்... இத்தனை வருஷம் இதையெல்லாம் எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல ..." என புத்துணர்ச்சியுடன் கூற...

"நான் உங்களை எல்லாம் எத்தனை முறை இங்க வர சொல்லிக் கூப்பிட்டு இருப்பேன் நீங்கதான் அந்த மும்பையை கட்டிக்கிட்டே அழதீங்க.. அந்த வாசு பையனாச்சும் கூட்டிட்டு வருவான்னு பாத்தா படிக்க அவன் சித்தப்பா வீட்டுக்கு போனவன் இன்னும் இங்க வரவேயில்லை கல்யாணத்தை கூட அங்கையே வச்சுட்டான்.. என்ன பண்றது எங்க நம்ம சொல்லறத கேக்குறான்... கீர்த்தி சொன்னா நீ இங்க ஒரு மாசம் இருக்க போறன்னு எதுனாலும் என்னக் கூப்பிடுமா.... உனக்கு என்ன வசதி வேணுமோ தயங்காம கேக்கணும் சரியா" என அன்புக் கட்டளையிட்டவர் மகிழ்ச்சியாக வெளியேறினார்...

அவர் பேசிவிட்டு செல்வதை புன்னகையுடன் பார்த்தவளுக்கு தன் தந்தையை எண்ணி கண்கள் கலங்க துவங்கியது...

அலைப்பேசி விடாமல் ஒலிக்கும் சத்தத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அலைப்பை ஏற்று காதில் வைக்க அந்தப்பக்கம் மணி நிலாவை பேசவே விடாது பொறிந்து தள்ளினான்...

" நாங்கதான் பழசை நினைக்க கூடாதுனு சொல்லிருக்கோம்லடி அப்புறம் என்ன லீவுக்கு போனா ஜாலியா இருந்துட்டு வர வேண்டியது தான் அதனென்ன மறக்க முடியலன்னு பொலம்புனையாமா.... அப்போ இத்தனை வருஷம் நாங்கள் உன்ன பார்த்துக்கிட்டு எல்லாம் பொய்யா.... அந்த கீர்த்திக்கு தமிழ்நாட்டை தவிர வேற இடமே கிடைக்கலையா நான் பிஸ்னஸ் விசயமா டெல்லி போய்ட்டு வர்றதுக்குள்ள புருஷனும் பொண்டாட்டியும் இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சுருக்காங்க....." என மூச்சு வாங்க பேசிக் கொண்டிருக்க

"நாங்க என்னடா பண்ணுனோம் "என்று கோரசாக கேட்ட குரலில் தான் மணி நிதானத்திற்கு வந்தான்....

மணி பேச ஆரம்பித்ததுமே நிலா கீர்த்திக்கு அழைப்பு விடுத்துவிட்டு குளிக்க சென்றிருந்தாள்..

மணி " ஏண்டி முட்டை போண்டா நீயும் உன் புருசனும் அறிவை அடகு கடைல வச்சுட்டீங்களா... வெக்கேஷனுக்கு அனுப்ப வேற ஊரே கிடைக்கலயா... இதுக்கு எப்படி நிலா நீ ஓத்துக்கிட்ட " என்க ...

கீர்த்தியோ "அவ அப்பவே குளிக்க போயிருப்பா" என கூறிவிட்டு அவளுடைய லையனை கட் செய்தவள் " கோபப்படாத மணி அவ எவ்வளவுதான் சந்தோசமா இருக்க மாதிரி தெரிந்தாலும் அவ உள்ளுக்குள்ள ரொம்ப மன அழுத்தத்துல இருக்கா ஓய்வே இல்லாம எந்த நேரமும் தொழில் தொழில்னு ஓடிட்டே இருக்கா ... அதுமட்டுமில்ல தனியாகவே வாழ பழகிட்டு இருந்தவள நம்ம பிரண்ட்ஸ் சர்கிள்ல சேர்ந்தததுக்கு அப்புறம் அதிகமா இல்லைனாலும் நம்ம சார்ந்து இருக்க ஆரம்பிச்சுட்டா...‌ உதாரணமாக எங்களுக்கு கல்யாணம் ஆகி தனி வீடு வந்ததுக்கு அப்புறம் அவ ரொம்ப தனிமை உணருறா அதில இருந்து தன்னை மீட்டுக்க தான் தொழில்ல ஒரு வருடத்தில காட்ட வேண்டிய வளர்ச்சிய இந்த மூணு மாசத்துல காட்டிருக்கா... இந்த நில தொடர்ந்தா அவளோட உடல்நிலை ரொம்ப பாதிக்கப்படும்.... மணி அவளுக்கான வாழ்க்கையை அவ வாழணும் ... அதுக்கு நாம கொஞ்சம் ஸ்பேஸ் குடுக்கணும்.... நிலா அவளோட நிஜத்தை எங்க தொலைச்சாளோ அங்க தான் அவளை மீட்டு எடுக்கணும்...மணி உங்களுக்கு நியாபகம் இருக்கா முதல் முதல்ல நீங்க அவகூட அவ வீட்டுல தங்குன போது என்ன நடந்துதுனு."

மணி " மறக்க முடியுமா கீர்த்தி எனக்கும் வாசுவுக்கும் நிலாவோட நிலைமைய பார்த்து உயிரே போயிருச்சு ... அதுக்கு அப்புறம் தானே அவளோட கடந்த கால வாழ்க்கையே முழுசா நமக்கு தெரிய வந்தது அதுவும் அவளா சொல்லாம டாக்டர் டீரிட்மென்ட் மூலமாதான உண்மை வெளிய வந்தது.. கீர்த்தி காலைல அவ கால் பண்ணி பேசுனத சொன்னதும் ஒருநிமிடம் எனக்கு அன்னைக்கு அவ இருந்த நிலைமை தான் கண்ணு முன்னாடி வந்தது அதான் அவள கூப்டேன்... முன்னாடினா அவகூட நாம் இருந்தோம் இப்போ அவ எப்படி அதெல்லாம் சமாளிக்க போறானு தெரியலையே..." என்க.

"நீ பயப்படாதடா அப்பா கூட இருக்காரு நாளைல இருந்து கூட ஒரு வேலைக்கார பெண்ணை துணைக்கு வைக்கிறதா சொல்லியிருக்கார்.

" ஆமா மணி மாமா பாத்துக்குவாரு நீ பயப்படாத ...கடைசி ஒரு வாரம் நாமும் அங்க தங்கிட்டு வருவோம் ....எனக்கு என்னமோ இந்தமுறை திரும்ப அவ மும்பை வரும்போது புதிய நிலாவ வருவானு தோணுது..." இப்படியே நிலாவை பற்றி பேசிக் கொண்டிருக்க

நம் நாயகியோ புதுப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே குளிருக்கு இதமான நல்ல வெதுவெதுப்பான நீரில் குளித்துக் கொண்டிருந்தாள்....

❤️❤️❤️

இந்த எபில நிறையா க்ளூ குடுத்துருக்கேன்??... கண்டுபிடித்தால் கமெண்ட்ல சொல்லிட்டு போங்க மக்காஸ்??


Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/
 
Status
Not open for further replies.
Top