ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மா 1

பிரம்மா 1

சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட் உயர் அதிகாரி பிரசாத்தின் அறைக்கு முன்னே அமர்ந்து இருந்தாள் காயத்ரி. ஐந்தரை அடிப் பெண்ணவளது முகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்பதற்கான கல்யாணக் களை கொஞ்சமும் இல்லை. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று அவளது நண்பர்கள் மூவர் தொலைந்து போய் இருந்த அதே சமயம், அவளுக்கு இஷ்டமே இல்லாத இந்த திருமணம் வேறு நடக்க இருந்தது. இதற்கு அவள் திருமணம் செய்ய போவது அந்த டிபார்ட்மென்ட்டே பார்த்து நடுங்கும் "அஜய் தேவ்" என்னும் அதிகாரியைத் தான். போலீஸ் டிபார்ட்மெண்டின் முதுகெலும்பு என்று தான் அவனைக் கூற வேண்டும்.

அவனிடம் அகப்படும் கேஸ் எதையுமே அவன் இதுவரை பெண்டிங்கில் வைத்ததாக சரித்திரம் இல்லை. அவன் துப்பாக்கி உட்கொண்ட உயிர்கள் ஏராளம். ஆறடி உயர கட்டழகு பொருந்திய ஆண்மகனின் வீரத்தைப் பார்த்தே, காயத்ரியின் தந்தையும் போலீஸ் டிபார்ட்மென்டின் உயர் அதிகாரியுமான ராகவன் அவனை மருமகனாக்க முடிவு செய்து இருந்தார். அனைவரையும் கட்டி ஆள்பவனை தனது மகள் கட்டி ஆழ போகின்றாள் என்கிற பெருமை அவருக்கு.

ஆனால் காயத்ரியோ இந்த வீரம், ஆண்மை என்று எதிலும் ஈர்க்கப்படவில்லை. அந்த மென்மையான காதல் உணர்வு ஏனோ அவளுக்கு அவன் மீது வரவே இல்லை. கல்யாணத்துக்கு சம்மதம் இல்லை என்று சொன்னால் "யாரையும் காதலிக்கிறாயா?" என்று அவள் தந்தை கேட்பார். ஆனால் அவளோ யார் மீதும் காதல் வயப்படாத நிலையில் யாரைத் தான் அவளால் கை காட்ட முடியும்? அதனாலேயே தந்தையின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்தவள் எவ்வளவு முயன்றும் அவனைக் காதலிக்க முடியாமல் தவித்தாள். “அவனிடம் என்ன குறை?” என்று கேட்டால் அவளுக்கும் தெரியவே இல்லை. ஆண்மை பொருந்திய கட்டழகு மேனி கொண்ட ஆண்மகன் அவன். அனைவரிடமும் எரிந்து விழுந்தாலும் அவளுடன் மென்மையாகவே பேசுவான். பிறந்த நாள் என்றால் ரோஜா பூக்கள் மத்தியில் அவளுக்கு பரிசுகள் அளித்து சந்தோஷப்படுத்தும் ரொமான்டிக் பெர்சன் என்றும் கூட சொல்லலாம். அவனுக்கோ அனைத்து தகுதிகளும் அளவுக்கு மீறி இருந்த போதிலும் அவளால் ஏனோ அவனை காதலிக்க தான் முடியவே இல்லை. இத்தனைக்கும் அவன் பெண்கள் பழக்கம் இல்லாத பிரம்மச்சாரியும் கூட, "முத்தம் என்றால் கூட திருமணத்துக்கு பிறகு தான்" என்று அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவளிடம் அத்து மீறாமல் தள்ளி தான் நிற்கின்றான்.

ஒரு போலீஸ்காரியாக அவனை ரசிக்கிறாள் தான். ஆனால் அவனை காதலனாக அவளால் உள்வாங்க முடியவில்லை. அவள் மீது அங்கு இருக்கும் பெண்களின் பொறாமை பார்வை படுவதை கூட அவதானித்து இருக்கிறாள். அந்தளவு தகுதி உள்ளவன் அவன். தன்னை தானே உணர முடியாத சுழியில் சிக்கிக் கொண்டவளுக்கு சும்மா இருக்கும் போதெல்லாம் "ஏன் எனக்கு அஜய் மேல லவ் வரவே மாட்டேங்குது " என்னும் நினைப்பு தான் மனம் முழுதும் இருந்தது. அந்த அழுத்தம் ஒரு பக்கம் இருந்த போதிலும் ஐந்து பேர் கொண்ட அவர்களின் குழுவில் இருந்து மூன்று பேர் சமீபகாலத்தில் காணாமல் வேறு போய் இருந்தார்கள். அவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தெரிந்தது ஒன்று அவளுக்கு மற்றையது அவளது குழுவின் தலைமை அதிகாரி பிரசாத்துக்கு. நெருங்கிய நண்பர்களை தொலைத்து விட்டு அவளுக்கு இந்த திருமணத்தினை நடத்தவும் விருப்பம் இல்லை. அந்தளவுக்கு மனிதாபிமானம் இல்லாதவள் அல்ல அவள். அதனாலேயே அடுத்து நண்பர்கள் மேற்கொண்ட மிஷனை தனி ஒரு பெண்ணாக மேற்கொள்ள அனுமதி பெரும் பொருட்டு பிரசாத்தை தேடி வந்து இருந்தாள்.

அனைவரும் தயங்கும் அந்த மிஷனுக்கு ஒரு பெண்ணாக இருந்தும் கூட அவள் முன்வந்தது பிரசாத்துக்கு ஆச்சரியம் தான். அவளிடம் பேச வேண்டும் என்று அவர் அழைத்து இருக்க, இப்போது அவள் வெளியே காத்துக் கொண்டு நின்று இருந்தாள். உள்ளே இருந்த ஒரு அதிகாரி வெளியே வந்ததுமே "எக்ஸ்கியூஸ்மீ சார்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தவளை "வாங்க மிஸ் காயத்ரி.. உட்காருங்க" என்று அழைத்தார் பிரசாத். அவளும் அவருக்கு சாலியூட் அடித்து விட்டு முன்னே இருந்த நாற்காலியில் அமர, அவரோ "இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் இருக்கு தானே" என்று கேட்டார். அவளோ "ம்ம்" என்று சொன்னவள் மேலும் "ஆனா இந்த மிஷன் நான் கண்டிப்பா போகணும் சார்" என்று சொன்னாள் ஆணித்தரமாக.

அவரோ "ஓகே காயத்ரி, ஒரு பக்கம் பார்த்தா நீங்க இப்படி தைரியமா வர்றது சந்தோஷமா தான் இருக்கு. ஆனா இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த மிஷனை எடுத்துக்கிறது எனக்கு சரியா படல, நீங்க போக போற இடம் ஒண்ணும் சாதாரண இடம் இல்ல, நீங்க புலனாய்வு செய்ய போறவனும் சாதாரணமானவன் இல்லன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அவன் கோட்டைக்குள்ள போன நம்ம டீம் மூணு பேரும் பத்தியும் எந்த தகவலும் கிடைக்கல. உனக்கே தெரியும் இந்த மிஷன் நாம பெர்மிஷன் எடுக்காம இல்லீகல் ஆஹ் தான் பண்ணுறோம்னு. இதுக்கு பர்மிஷன் யாருமே தர மாட்டாங்க. எல்லாருக்கும் தங்களோட பதவி முக்கியம்.. ஆனா அநியாயத்தை கண்டு சும்மா இருக்க முடியாம நாம மட்டும் ரிஸ்க் எடுத்து பண்ணுற மிஷன் தான் இது. அதனாலேயே யாரும் உள்ளே போய் மாட்டிக்கிட்டா கூட என்னால லீகல் ஆக்ஷன் எடுக்க முடியாது.. இப்போவே மூணு பேரை தொலைச்சிட்டு என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கேன்.. உனக்கே எல்லாம் தெரிஞ்சும் நீயும் அங்க போய் சிக்கிக்க போறியா? " என்று கேட்டார்.

அவளோ அனைத்தும் அறிந்தாலும் நண்பர்கள் பற்றிய எண்ணம் அவளை நிம்மதியாக இருக்க விடாமல் இருக்க "ஐ திங்க் ஐ கேன் டூ இட் சார், உயிருக்கு பயந்து நான் இந்த டிபார்ட்மெண்ட்ல சேரல. என் அப்பா பெரிய அதிகாரியா இருந்தா கூட அவர் நிழலில் இருக்க விருப்பம் இல்லாம தான் நான் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ணாம இங்க சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன்ல ஜாயின் பண்ணினேன். நம்ம கூட வேலை பார்த்தவங்க மூணு பேரை காணோம் சார், எனக்கு தூக்கம் கூட வரமாட்டேங்குது. இதுல நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்க முடியும்? இதுக்கு ஹெல்ப் கூட கேட்க முடியாத நிலையில நாம இருக்கோம். இந்த பிரச்சனையை பற்றி தெரிஞ்ச ரெண்டு பேர் நாம மட்டும் தான். நீங்க போக முடியாது. அதனால நான் கண்டிப்பா போய் ஆகணும் சார்" என்று தன் பக்க நியாயத்தை ஆணித்தரமாக கூறினாள்.

அவள் பேசுவதன் நியாயம் பிரசாத் உணர்ந்த போதிலும் அவருக்கு மனம் கேட்காமல் இருக்க "காயத்ரி, இந்த இல்லீகல் மிஷனால நமக்கு எதிரா எப்போ வேணும்னாலும் ஆக்ஷன் எடுக்கலாம் கொஞ்சம் யோசிச்சு பாரு, உனக்கு ஏதும் ஆச்சுன்னா நான் உன் அப்பாவுக்கோ அஜய்க்கோ என்ன பதில் சொல்லுவேன்? திரும்ப திரும்ப அதே தப்பை பண்ண சொல்றியா?" என்று மனிதாபிமானத்துடன் பேசினாலும் அவர் மனதில் தொலைந்த மூவரை கண்டுபிடிப்பது மட்டும் அல்லாமல் நடக்கும் அநியாயத்தை வெளியே கொண்டு வர வேண்டிய வைராக்கியம் இருந்து என்னவோ உண்மை தான்.

அவளோ அதற்கு ஏற்ற போல "பரவாயில்லை சார், நான் போறேன்.. எனக்கும் வேற வழி தெரியல சார், எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. சோ ப்ளீஸ் எனக்கு அப்ரூவல் கொடுங்க" என்று கெஞ்சுதலாகக் கேட்டாள். பிரசாத்துக்கும் அவள் மீது இருந்த அளவு கடந்த நம்பிக்கையினால் அடி மனதில் அவளை அனுப்ப ஆசை இருந்தாலும் அவளது தந்தை ராகவனை நினைத்தும் அஜய்யை நினைத்தும் சிறிய பயம் இருக்க தான் செய்தது.

பெருமூச்சுடன் "நீ தேடி போறவன் பத்தி உனக்கு முழுசா தெரியுமா? அவனோட பவர் தெரியுமா?" என்று கேட்க அவளோ "தெரியும் சார், சித்தார்த் நாராயணன்" என்று சொல்லும் போதே அவள் இதழ்கள் நடுங்கின.

அவன் வேறு யாருமல்ல "டாக்டர்.சித்தார்த்" என்று அழைக்கப்படும் பி.எச்.டி முடித்த தலை சிறந்த ஜெனெடிக் எஞ்சினியர் தான். மனிதனை படைத்த பிரம்மாவின் படைப்பையே மாற்றும் திறமை மிக்கவன் அவன். சுருங்க சொல்லப் போனால் மனித உருவில் இருக்கும் பிரம்மன். எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்து இருக்கிறான். எத்தனையோ ஈரக் குலையை நடுங்க வைக்கும் கண்டு பிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறான்.

அவனோ போலீஸ்கார்களே நெருங்க பயப்படும் அளவுக்கு ஆள் பலமும், அதிகார பலமும், பண பலமும் கொண்ட சர்வதேச பிரமுகர். உலகுக்கு கண்டுபிடிப்புகளை கொண்டு சேர்க்கும் அவன் யாருக்கும் தெரியாத ஆராய்ச்சி ஒன்றில் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டும் இருந்தான்.

அது தான் "ஜீனோம் எடிட்டிங்". அதாவது நம்மை படைத்த பிரம்மாவின் படைப்பையே மாற்றி அமைக்க கூடிய உலக நாடுகள் அனைத்தும் கண்டு பயப்படும் ஆராய்ச்சி அது. பல நாடுகள் தடை போட்டு இருக்கும் அந்த ஆராய்ச்சியை அவன் நடத்தும் ஆய்வுகூடத்தில் நடத்திக் கொண்டு இருந்தாலும் வெளியே யாரும் கண்டு பிடிக்காத அளவு ரகசியமாக மேற்கொண்டான். அது அரசல் புரசலாக வெளியே தெரிந்தால் கூட ரெயிட் என்று வந்தால் கையில் ஒன்றும் இல்லாமல் தான் அவர்கள் திரும்ப வேண்டிய நிலை இருந்தது. அது மட்டும் அல்ல, அதன் பிறகு ரெய்டுக்கு போனவர்கள், ரெய்டுக்கு அப்ரூவல் கொடுத்தவர்கள் என அனைவரும் இனி போலீஸ் டிபார்மென்டிலேயே வேலை பார்க்க முடியாதளவு பண்ணி இருந்தான். அந்தளவுக்கு ரகசியமாகவும் சாமர்த்தியமாகவும் தனது ஆராய்ச்சியை மேற்கொள்பவன் அவன்.

அவன் நினைத்தால் ஒசாமாவை ஒபாமாகவும் மாற்ற முடியும்..ஒபாமாவை ஒசாமாகவும் மாற்ற முடியும். ஒருவரின் நடத்தை தொடக்கம் அனைத்தும் அவரவர் டி.என்.ஏ யில் தங்கி இருக்க, அதையே மாற்றி விட்டால் இந்த உலகம் தலைகீழாக மாறி விடும் அல்லவா? அதனாலேயே அந்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் தடை விதித்து இருக்க, ஜெனட்டிக் எஞ்சினியரிங்கில் பி.எச்.டி முடித்த அவனோ அதனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்தான்.

இந்த விஷயம் போலீஸ் உயரதிகாரி பிரசாத் காதை வந்தடைந்த போதிலும் நேரடியாக அவன் பிரச்னையில் தலையிட்டு வேலையை இழந்த போலீஸ்காரர்களை பற்றி அறிந்தவர், ரகசியமாக விஞ்ஞானிகளுடன் விஞ்ஞானிகளாக தன்னுடைய டிபார்ட்மென்ட் ஆட்களை எந்த வித அனுமதியும் பெறாமல் அனுப்பி இருந்தார். அதன் விளைவு இப்போது ராஜ், அமல், வாசு என்கின்ற மூன்று போலீஸ்காரர்களும் மிஸ்ஸிங் கேசில் வந்து சேர்ந்து இருந்தார்கள். போனவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்காத பட்சத்தில் இது பிரசாத்துக்கு தோல்வியாக தான் முடிந்தது. சட்ட ரீதியாக கூட அணுக முடியாத கையாளாகா நிலைக்கு அவர் தள்ளப்பட்டு இருக்க, மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தவரை தேடி தான் இன்று காயத்ரி வந்து இருந்தாள். பிரசாத், ராஜ், அமல், வாசு , காயத்ரி ஆகிய ஐவரும் தான் இந்த சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் டீமில் இருப்பவர்கள். இப்படி மூவர் தொலைந்த நிலையில் அவர்களின் நண்பியான காயத்ரியால் எப்படி நிதானமாக இருக்க முடியும்? அதன் விளைவாக அவளும் அந்த மிஷனை மேற்கொள்ள அனுமதி வேண்டியவள், கெஞ்சி கூத்தாடி அனுமதியையும் பெற்று இருந்தாள்.

அதே சமயம், தலை சிறந்த ஆய்வுகூடமதில் ஆறடிக்கும் உயரமான ஆண்மகன் சித்தார்த், தனது அறையில் இருந்து வெளியேறி வெள்ளைக் கோர்ட்டை அணிந்து கொண்டே ஆராய்ச்சி கூடத்தை நோக்கி நடந்தான். அவனின் தோற்றமோ திடகாத்திரமாக இருக்க, இறுக்கமான தாடைகளும் கூரிய விழிகளும் கொண்டவனது நடையில் திமிரும் ஆளுமையும் ஒருங்கே தான் இருந்தது. அவனது பிரமாண்ட ஆய்வுகூடத்தில் அவனுக்கு கீழ் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் இருக்க , அவன் மூளை பலமோ யாருக்கும் சவால் விடக் கூடிய வீரியம் மிக்கதாக தான் இருந்தது.

சித்தார்த்தனைக் கண்டாலே அவன் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஒரு சின்ன நடுக்கம். அவனை ரகசியமாக ஹிட்லர் என்றும் கூட தங்களுக்குள் அழைத்துக் கொள்வார்கள். அவன் ஒன்றும் ஊரை வென்ற ரவுடியோ தொழிலதிபனோ இல்லை என்றாலும் அந்த தொழிலதிபர்கள் கூட வலை வீசி பிடிக்க காத்திருக்கும் யாருக்கும் சிக்காத மீன் அவன்.

சுருங்க சொல்ல போனால் உலகத்தின் பொக்கிஷம் என்று கூட அவன் மூளையை சொல்லலாம். தனது பெறுமதி தெரிந்தவன் தன்னை சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டு இருந்தான். ஆம் அவன் ஆய்வுகூடத்தில் அவ்வளவு பாதுகாப்பு அமைந்து இருந்தது. அவ்வளவு சீக்கிரம் உள்ளே யாரும் வர முடியாதளவு பாதுகாப்பு வலயம் அது. அப்படி இருக்கும் பாதுகாப்பு வலயத்தில் அந்த மூன்று போலீஸ்காரர்களும் அவன் அனுமதி அளித்ததால் தான் வர முடிந்தது. ஆம் அவனிடம் வேலை பார்க்கும் விஞ்ஞானிகளை வேலைக்கு சேர்க்கும் மதனோ பிரசாத்துக்கு விசுவாசமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவன் விசுவாசமாக இருந்தது என்னவோ சித்தார்த்துக்கு தான். அவனுக்கு தெரிந்தே உள்ளே நுழைந்தவர்கள் அவனிடம் கைதியாக இப்போது சிக்கி இருக்கிறார்கள். தன்னை மீறி சுட்டு விரல் அசைப்பவனை விட்டு வைக்காதவன் இவர்களை விட்டு வைப்பானா என்ன?

ஒரு படி மேலே சென்று அவர்களை ஆராய்ச்சி எலியாக கூட பயன் படுத்த முடிவு செய்து இருந்தவன் இப்போது அந்த ஆய்வுகூடத்துக்குள் நுழைந்து இருந்தான். உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்த பெண் அவனுக்கு கிளவுஸை எடுத்துக் கொடுக்க, அதனை போட்டுக் கொண்டே அங்கிருந்த கண்ணாடிப் பெட்டியில் இருந்த எலியை தூக்கி பார்த்தான்.

அதனை சுற்றும் முற்றும் திருப்பி பார்த்தவன் அருகே இருந்த விஞ்ஞானியிடம் "எந்த சைட் எபெக்ட்ஸும் இல்ல போல" என்று சொல்ல, அவனோ "எஸ் டாக்டர், சக்சஸ் ஆய்டும்னு தான் நினைக்கிறேன்" என்று சொல்ல, அவனோ "இடியட்,ஒரு டோஸ் போட்டு சக்சஸ்ன்னு சொல்ற, டோன்ட் யூ ஹாவ் சென்ஸ்? இது என்ன குழந்தைங்க விளையாட்டுன்னு நினைச்சியா? அடுத்த டோஸ் போடு மேன், இட் ஷுட் பீ சேப் இனாப். ஒரு வாக்சின் எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்கோ" என்று சீறிக் கொண்டே கையில் இருந்த கிளவுஸை கழட்டி அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்ட கணத்தில் அவனது போன் அலறியது. அடுத்த கணமே அதை எடுத்தவன் "எஸ் சொல்லுங்க மிஸ்டர் மதன்" என்று சொல்ல மறுமுனையில் இருந்தவனோ "சார், ஸ்டில் அந்த பிரசாத் நம்ம விஷயத்தில இருந்து பின் வாங்கலன்னு தெரியுது. மூணு பேரை அனுப்பினவன் இப்போ ஒரு பொண்ண அனுப்ப போறானாம். பெயர் காயத்ரியாம். இங்க அனுப்ப பெர்மிஷன் கேட்டு இருக்கிறான்" என்று சொல்ல, அவனோ "வாட் பொண்ணா? அந்த மூணு பசங்களாலேயே ஒண்ணும் கிழிக்க முடியல, அவளால என்ன பண்ணிட முடியும்?" என்று சீறியவன் அப்போது அறியவில்லை, அவன் மூளைக்கு அவளால் சவால் விட முடியாவிட்டாலும் அவனது இரும்பு இதயத்தில் பூ பூக்க வைக்க போகின்றவள் அவள் தான் என்று. இந்த ரகசியம் தெரிந்து இருந்தால் அவன் அவளை அனுமதித்து இருக்க மாட்டானோ என்னவோ.

சிறிது நேரம் யோசித்து விட்டு பெருமூச்சுடன் "ஓகே லெட் ஹேர் கம், அந்த பிரசாத்துக்கும் சேர்த்து வைக்கிறேன் செக்மேட்" என்று சொல்லி விட்டு வைத்து விட, மதனும் அவளை விஞ்ஞானியாக சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான்.

அதே சமயம், அங்கே இருந்த எலிகளுக்கு தீனி போட்டுக் கொண்டு இருந்த அந்த போலீஸ்காரங்களில் ஒருவனான வாசுவை நோக்கி சொடக்கிட்டான் சித்தார்த். அவனும் திரும்பி "சார்" என்று சொல்ல, "அந்த பிரசாத் அடுத்ததா யாரோ ஒரு பொண்ண பலி ஆடு ஆக்க போறானாம். அவ பெயர் கூட" என்று நெற்றியை நீவிக் கொண்டே யோசிக்க, அவனோ "காயத்ரியா சார்?" என்று கேட்டான். அவனும் "எஸ், அவளே தான்.." என்று சொல்ல, வாசுவோ "அந்த பொண்ணு பாவம் சார், நாங்க வேணும்னா இங்கேயே வாழ்க்கை முழுதும் இருந்திடுறோம். ஆனா அவளை விட்டுடுங்க" என்று சொல்ல, அவனோ இளக்காரமாக சிரித்தவன் "நான் ஒன்னும் அவளை கூப்பிடல, அவளே வர்றா, வரட்டும் பார்த்துக்கலாம்" என்று சொல்லி விட்டு கண்ணடித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். எப்படி பட்ட போலிஸ்காரன் வாசு? இன்று அவனுக்கு அடிமையாக எலிகளை பராமரித்துக் கொண்டு இருக்கும் நிலை அவனுக்கு. அவனை மீறி இங்கே ஒரு புல்லு கூட புடுங்க முடியாது என்று உணர்ந்தவன் வேறு வழி இல்லாமல் இப்போது அவனது அடிமையாகவே மாறி இருந்தான்.

அதே சமயம், தனது அலுவலகத்தில் இருந்து நேரே தந்தையின் அலுவலகத்துக்கு வந்து இருந்தாள் காயத்ரி. அவளைக் கண்டதுமே "வாம்மா, என்ன இந்த பக்கம்?" என்று கேட்க அவளோ "உங்க பொண்ணா கொஞ்சம் பேசணும் அப்பா" என்றவள் அவர் முன்னே அமர, அவரோ "ம்ம் சொல்லும்மா" என்று சொன்னார். அவளோ குரலை செருமிக் கொண்டே "அப்பா, என்னோட பிரெண்ட்ஸ் மூணு பேர் தொலைஞ்சுட்டாங்க தெரியும்ல" என்று சொல்ல, "எஸ் அந்த வாசு, அமல் அவங்க தானே" என்று கேட்டார். அதற்கு ஆம் என்று தலையாட்டியவள் "அவங்கள தேடி ஒரு சீக்ரெட் மிஷனுக்கு போக டிசைட் பண்ணி இருக்கேன்பா" என்று சொல்ல, அவரோ "வாட்?" என்று சீறி விட்டார். இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தினை வைத்துக் கொண்டு மிஷன் என்று சொன்னால் அவருக்கு அதிர்ச்சியாக இருக்காதா என்ன?

ஒரு தந்தையாக அவரால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஒரு போலீஸ் அதிகாரியாக தடுக்கவும் முடியவில்லை. அவளோ அவரை ஏறிட்டு பார்த்து "நான் முதல் ஒரு போலீஸ் அதிகாரியா தான் இருக்க விரும்புறேன் அப்பா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க" என்று கெஞ்சுதலாக கேட்க அவரோ "ம்ம் ஓகே, ஒரு போலீஸ் அதிகாரியாக போக வேணாம்னு சொல்ல எனக்கு உரிமை இல்ல, ஆனா ஒரு அப்பாவா சொல்றேன் அஜய் கிட்ட பேசு, அவன் ஓகே சொன்னதும் நீ கிளம்பலாம்" என்று சொல்ல, அவளுக்கு இப்படி சம்மதம் வாங்கி செல்வது பிடிக்காமல் இருந்தாலும் தந்தையின் பேச்சை மதித்து அஜய்யை சந்திக்க அவனது இடத்தை நோக்கி தனது ஜீப்பில் விரைந்தாள்.

" அஜய் தேவ்" பெயரைக் கேட்டாலே அந்த டிபார்மென்ட் கூட கதி கலங்கும் அளவுக்கு ஈவு இரக்கம் இன்றி குற்றவாளிகளை பந்தாடும் போலீஸ்காரன் அவன். அவனது அனல் கக்கும் விழிகள் மட்டும் போதும் அவன் எதிரிகளை பந்தாடுவதற்கு. அன்றும் ஜெயிலுக்குள் நுழைந்து ஒருவனை பந்தாடிக் கொண்டிருக்க அவனை தேடி வந்தாள் காயத்ரி. அவன் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணவள் மீது அவனுக்கோ அலாதிப் பிரியம். அளவுக்கதிகமான காதல் என்றும் சொல்லலாம். யாரைக் கண்டாலும் அனலாய் தகிப்பவன் அவளைக் கண்டதுமே புனலாய் குளிர்ந்து விடுவான்.

கையில் இருந்த ஐம்பொன் காப்பை கீழே இறக்கி விட்ட படி முன்னே இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவனின் இதழ்கள் அவனது அலறலில் மெதுவாக புன்னகைத்துக் கொண்டன.. காயத்ரி உள்ளே நுழைந்ததுமே அஜய்யின் கீழ் வேலை பார்க்கும் பெண் அதிகாரியிடம் "நான் வந்திருக்கேன்னு அஜய் கிட்ட சொல்லுங்க" என்று சொன்னாள். அந்த பெண் அதிகாரி ஷாந்தியோ "மிஸ் காயத்ரி, நீங்க அவரோட வருங்கால மனைவியா இருந்தா கூட இங்க அவர் உங்களோட சுப்பீரியர் ஆபீசர் தான்.. சோ கால் ஹிம் சார்" என்று சொல்ல அவளது முகம் இறுகி போனது. அதே சமயம் ஷாந்தியின் கெட்ட நேரத்துக்கு, அப்போது தான் ஷேர்ட்டை போட்டுக் கொண்டே வெளியே வந்த அஜய்யின் காதில் விழ, ஷாந்தியை நோக்கி வந்தவன் "வாட் இஸ் யோர் ப்ராப்ளேம்?? அவ என்ன எப்படி வேணும்னாலும் கூப்பிடுவா. .மைண்ட் யோர் ஓன் பிசினஸ்" என்றவன் காயத்ரியை திரும்பிப் பார்த்து "என்ன இந்த பக்கம்?" என்று கேட்டான். ஷாந்தி அந்த அலுவலகத்தில் அஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் திறமையான பெண். அனைவரின் முன்னே இந்த அவமானத்தை அவளுக்கு தாங்க முடியாமல் இருக்க, அங்கிருந்து அவள் நகர முற்பட அவளை நோக்கி சொடக்கிட்டவன் "காயத்ரிக்கு சூடா ஒரு காப்பி, அதுவும் உன் கையால்" என்று சொல்ல அவனை விழி விரித்து பார்த்த ஷாந்தி "சார் நான் இங்க ஒன்னும் ஆயா வேலை பார்க்கல” என்று சொன்னாள். அவனோ "ஆஹான்" என்று சொல்லிக் கொண்டே மேலிருந்து கீழ் பார்த்தவன் "மார்க் மை வேர்ட்ஸ்.. திஸ் இஸ் யோர் லாஸ்ட் டேய் இன் திஸ் ஸ்டேஷன்.." என்று சொன்னான். சொன்னதை செய்து விடும் திறமையும் அதிகாரமும் படைத்தவன் அவன்.


இதற்கு மேல் அவளால் என்ன பண்ண முடியும்?? தன்னிலை விட்டு இறங்கியவள் "இன்னும் பைவ் மினிட்ஸ் ல காபியோடு வரேன் சார்" என்று அவனைப் பார்க்காமலே உரைத்து விட்டு செல்ல அவன் முகத்தில் விஷம புன்னகை அரும்ப, காபி போடும் இடத்துக்கு வந்தவளது கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவளது கண்ணில் இருந்து விழுந்த அந்த ஒரு துளி கண்ணீர் அவமானத்தின் சின்னம் மட்டும் அல்ல, அவளது ஆழ் மனதில் புதைக்கப்பட்டு இருந்த அஜய் மீதான காதலின் அடையாளம் கூட.
Arambamey kalakkal sis
 
Top