ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

திட்டும் பார்வை ... ஒட்டும் இதயம் ❤❤ - கதைத்திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
திட்டும் இதயம் .. ஒட்டும் பார்வை ❤❤- கதைத்திரி
 
Last edited:
அனைவரும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏


தேர்வு அறைக்குள் நிலவும் ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி, திடீரென மணியடித்ததும் உடைகிறது.... மாணவர்கள் மூச்சினை வெளியே விட்டுக்கொண்டு தாங்கள் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதிய பேப்பர்களை பேராசிரியர்களிடம் ஒவ்வொருவராய் ஒப்படைத்தார்கள்....

ஹாலை விட்டு வெளியே வந்ததும், சிலர் கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க.. சிலர் ஒருவருக்கொருவர் விடைகளை விவாதித்து விவாதம் செய்கின்றனர்...


ஒரு மூலையில் சிலர் அமைதியாக "மார்க் வருமா?" என்று கவலையோடு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...




"இனிமே தான் நிம்மதி" என்கிற உற்சாகம் எல்லா முகங்களிலும் தெரிகிறது....



முதுகலை மூன்றாம் செமஸ்டரின் இறுதிப் பரீட்சை அன்று தான் முடிந்து விட்டிருந்தது ...உற்சாகமாக வெளியே வந்தாள் நம் கதையின் நாயகி நறுமுகை...


அவளுடன் பயில்பவளோ,


" என்ன முகை நல்லா எக்ஸாம் பண்ணிருக்க போல ..?"


"ஆமா ..எப்படியோ இந்த எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு ..அது வரைக்கும் சந்தோஷம் ....விட்டது சனி.." என்றவளை வெளியே சிரிப்புடன் பார்த்தாலும் உள்ளுக்குள் பொறாமையுடன் கண்ட கௌசல்யா ,


"ம்ம்ம்ம்...உனக்கு என்னமா நீயெல்லாம் மார்க் எடுத்துடுவ...நாங்க தான் மார்க் எடுக்க கஷ்டப்படனும்..." என சோகம் போல கூறினாலும் அவ்வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் எள்ளலை நன்றாகவே அறிவாள் நறுமுகை...

பதிலேதும் கூறாது இதழை வளைத்து சிரித்தவளிடம்,



"ப்ராஜெக்ட் எப்போ ஆரம்பிக்க போறாங்க உனக்கு ..?" என கேட்டிட,


"இரண்டு நாள் கழிச்சு வர சொன்னாங்க...நானும் கவிதாவும் லேப்ல போய் கேட்டுட்டு போகணும்.. இன்னிக்கு தான் யார் கைட்னு சொல்வேன்னு சொன்னாரு நாகராஜன் சார்.. கவிதா எங்க..?" என அவள் கேட்கும் போதே வகுப்பறையில் இருந்து வெளி வந்தாள் கவிதா ..


நறுமுகையை பார்த்ததும் அவளிடம் பேசலாம் என வந்தவள் முன்பு வந்து நின்ற கெளசல்யா,


"எப்படி பண்ணடீ எக்ஸாம்...?" என வேண்டும் என்றே நறுமுகையிடம் பேச விடாது அவளிடம் கேட்டவாறு திசை திருப்பினாள்..


ஆனால் கவிதாவிற்கு நறுமுகையிடம் பேச வேண்டும் என்பதால் அவளை நோக்கி அடி எடுத்தவாறே,


"நல்லா பண்ணி இருக்கேன்டீ...டீடைல் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு...பண்ணி இருக்கேன்...பார்ப்போம்..."


"செகேண்ட் கொஸ்டீன்க்கு என்னடீ அன்சர் எழுதுன..?? எப்படி கேட்டு வெச்சிருக்காங்க பாரேன்.." என கெளசல்யா அவளிடம் பேச்சினை வளர்த்திட..அதை புரிந்தாற்போல நறுமுகை கவிதாவின் முன் வந்து நின்று,


"லேபுக்கு போய் கேட்கலாமா..?"


" ஹான்...சரிடீ...லேபுக்கு போய் சார்கிட்ட கேட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போகலாம்டி .." என்றதும் நறுமுகையும் கவிதாவும் நான்காம் தளத்தில் இருக்கும் பேராசிரியர் நாகராஜனின் அறைக்கு சென்று கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்திட.. அவர்களைக் கண்டதும் தலையசைத்து வரவேற்றவர்,


" எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணிங்கலாம்மா ..?" என குரலில் அக்கறை நிறைந்து கேட்டார்...


"நல்லா பண்ணியிருக்கோம் சார் .." என இருவரும் கோரசாய் பதிலளித்ததும்,


"சரிம்மா ...வீட்டுக்கு போங்க.. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் காலேஜ் வந்துருங்க..

ஏன்னா நம்ம இப்பல இருந்து ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணா தான் கொஞ்சம் ஃப்ரீயா பண்ண முடியும்.. லீவ் இருக்கு டைம் இருக்குன்னு நாம நினைச்சுட்டு பொறுமையா ஆரம்பிச்சா கடைசியில் ஏதாவது நெருக்கடி ஆயிடும்...

ஏன்னா நம்ம நிறைய டெஸ்ட் எல்லாம் பண்ணுவோம் ..அதுல ஏதாவது கொஞ்சம் டெஸ்ட் ரிசல்ட் மிஸ் ஆகி வரலாம், அப்போ நம்ம திரும்ப பண்ணுற மாதிரி வரும்.. அதுக்கு இன்னும் டைம் எடுக்கும்..

அதனால் நம்ம இப்பவே பண்ண ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும் ..சரிங்களா..?" என பொறாமையாய் பெண்கள் இருவருக்கும் எடுத்துரைத்திட...அவர் கூறிய கூற்றில் இருக்கும் உண்மையில் இருவரும் ஒருசேர தலையாட்டி வைத்தனர்..


கவிதா தான் ,


"சார் எங்களை யார் கைட் பண்ணுவாங்கனு நீங்க சொல்லவே இல்லையே.." என்றதும் நினைவு வந்தவராய்,


"ஹான்.. ஆமாம்மா சொல்லவே மறந்துட்டேன் பாரேன்.." என்றவர் கோப்பையில் இருக்கும் அச்சிடப்பட்ட காகிதத்தை பார்த்தவராய்,


"கவிதா உங்களுக்கு சாமுவேல் கைட் பண்ணுவாரு.. நறுமுகை உங்களுக்கு விக்ரம் கைட் பண்ணுவாரு.." என்றதும் இருவரும் அவரிடம் நன்றி தெரிவித்து விட்டு அறையில் இருந்து வெளிவந்தனர்..

நறுமுகை தான் ,


"சாமுவேல் அண்ணாடீ உனக்கு...ம்ம்ம் அவர் வந்தா சூப்பர்ல..."என்றதும் கவிதாவும்,


"ம்ம்ம்... தெரிஞ்ச அண்ணாவா இருந்தா பரவால்ல...ஆமா விக்ரம் யாருடி.. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல.." என கேட்டதும் நறுமுகையும் யோசனையாக,


" எனக்கும் தெரியலடீ... ஒருவேளை நாம் பார்த்திருக்க மாட்டோமோ என்னவோ...கிளாஸ் பசங்க கிட்ட கேட்டு பார்க்கலாம்..!" என பெண்கள் இருவரும் பேசியவாறு லிப்டில் செல்வதற்கான பட்டனை அழுத்திவிட்டு நிற்க சில நொடிகளில் லிப்ட் நின்று திறந்தது..


அதில் நெடுநெடுவென உயரமாக வளர்ந்து இருந்த ஒருவன் வெளியே நின்றிருந்த இருவரையும் அழுத்தமாய் பார்த்துவிட்டு அவர்களை கடந்து சென்றுவிட... ஒரு கணம் நறுமுகையின் பார்வை அவன் மேல் படிந்து மீண்டது...


மனதிற்குள் அவளது உள் உணர்வு எடுத்துரைத்தது,

'ஒருவேளை இது தான் விக்ரமோ...?..ம்ம்ம்...அழகா வேற இருக்கான்..' என எண்ணியவாறு லிப்டிற்குள் நுழைந்த பின்னரும் செல்பவனது முதுகை வெறித்தாள் நறுமுகை...


அவளை பக்கவாட்டாய் பார்த்த கவிதா பெருமூச்சுடன் தலையை திருப்பி கொண்டாள்...


கீழ் தளத்திற்கு இறங்கி வந்ததும் கவிதா கெளசல்யா உடன் இணைந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்...நறுமுகைஅவர்களை ஒரு பார்வை பார்த்தவள் பின் அங்கு வந்த அவளது வகுப்பு தோழன் ஜானிடம் சென்று,


"ஜான்...உனக்கு விக்ரம்னு யாரையாவது தெரியுமா...?"


"ஏன் மச்சா??" என இயல்பாக கேட்டான்...இதற்கு முன்னர் பள்ளியில் இருந்து இளங்கலை வரை படித்தது எல்லாம் ஆண்கள் படிக்கும் பற்றி மற்றும் கல்லூரியில் தான்...அதனாலேயே தன்னிடம் பழகும் பெண்களை கூட பேச்சு வாக்கில் 'மச்சா' என்றே அழைத்து விடுவான் ஜான்...

கல்லூரி சேர்ந்த புதிதில் இவன் வகுப்பு பெண்களுக்கு அவ்வழைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவனது இயல்பே அப்படி தான் எனும் போது அவர்களும் ஏற்றுக்கொண்டனர்...

"இல்லடா நாகராஜன் சார் விக்ரம்னு ஒருத்தரை தான் எனக்கு கைடா போட்டு இருக்காரு...யார்னு எனக்கு தெரியலை...உனக்கு தெரியுமானு கேட்குறேன்..."


"ஏய்..விக்ரம் அண்ணாவா...செம போ...அவர் ஜாலி டைப் மச்சா...நல்ல கைட் உனக்கு...யூஸ் பண்ணிக்கோ மச்சா...சூப்பரா சொல்லி தருவாரு...லைப்ரரில புக்ஸ்லாம் அவர்கிட்ட தான் ரெஃப்ரன்ஸ்க்கு கேட்டு எடுத்து படிப்பேன்..செம டேலன்டட்..." என ஜான் விக்ரமின் திறமையை பற்றி புகழாரம் வாசித்திட, கேட்ட நறுமுகைக்கு வயிற்றில் புளியை கரைத்தது...

முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது காது வரை இளித்து தானும் சந்தோஷப்படுவது போல காட்டிக் கொண்டாள் நறுமுகை...


மனதில் ,


'இந்த ப்ராஜெக்ட்டை செய்தே ஆக வேண்டுமா?' என்று தான் தோன்றியது அவளுக்கு...


இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கவிதாவும் கெளசல்யாவும் பேசியவாறு நடந்து சென்று விட்டனர்..அவர்களுடன் மற்றொரு தோழியான அஸ்வினியும்..


வேகவேகமாக தானும் நடந்து சென்ற நறுமுகை, அவளை விட்டு இருபது அடி தூரத்தில் நடந்து செல்பவர்களை கண்டதும் தன் நடையின் வேகத்தை குறைத்தவளாய் சற்று மெதுவாக நடக்க துவங்கினாள்...


செல்லும் அவர்களை கண்டவளுக்கு மனதில் ஒரு வலி வந்து விட்டு சென்றது...
பலவீனமடையாதே மனமே என வழக்கம் போல தனக்கு தானே சொல்லி கொண்டவள் பெருமூச்சை விட்டு மெதுவாக நடந்தாள்...


இவர்கள் படிக்கும் கல்லூரி வளாகத்தில் இருந்து கேட்டை அடைவதற்கே கிட்டத்தட்ட குறைந்தது அரை மணி நேரமாவதே ஆகும்..


வேகமாக நடந்தால் இருபது நிமிடங்களில் வந்து சேரலாம் ..


ஏன் அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கே பத்து நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும் ...கெளசல்யா கல்லூரியின் வலப்புறத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நறுமுகை ,கவிதா மற்றும் அஸ்வினி மூவரும் இடப்புறத்தில் பெரிய சாலையை கடந்து எதிரே இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்...

அஸ்வினி இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கி வேறு ஒரு பேருந்தை பிடிக்க வேண்டும்...
நறுமுகை மற்றும் கவிதா இருவரும் ஒரே ஊர்தான்... என்ன அடுத்தடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வார்கள் ...



இத்தனைக்கும் இவர்கள் நால்வரும் இளங்கலை புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் தான் படித்தனர்...நால்வரும் ஒரே வகுப்பு...நெருங்கிய நண்பர்களும் கூட...


முதுகலை சேர்ந்து முழுதாய் ஒரு வருடம் கூட முடிக்கவில்லை ,அதற்குள் நால்வர் கூட்டணி மூவர் கூட்டணியாகி நறுமுகையை மட்டும் தனியே கழட்டி விட்டு விட்டனர்..

கவிதாவின் உயிர்த்தோழி நறுமுகை...அவளுக்காக கவிதா என்னவும் செய்திடுவாள்...அதே தான் நறுமுகையும்...கவிதா என்றால் எப்போதும் அவளுக்கு. ஸ்பெஷல் தான்....


எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள்...எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள்...



அப்படி இருந்தவர்கள் தான் தற்போது ஒரே வழியில் தனிதனியாக பயணம் செய்கின்றனர்...இவர்களை பிரித்தது விதியா அல்லது வேறொருவரின் சதியா?...பார்ப்போம்...


நாகராஜனின் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான் அவன்...நறுமுகை லிஃப்ட்டில் பார்த்து இவன் தான் விக்ரமா இருக்குமோ என எண்ணினாளே? அவனே தான் வந்து இருந்தான்...


அவனை கண்ட நாகராஜன்,


"வா விக்ரம்... உட்கார்" என்றதும் மறுக்காது இருக்கையில் அமர்ந்தான் விக்ரம்..

"எம்எஸ்சி படிக்கிற ஸ்டூடண்ட்க்கு நீ கையிட் பண்ணனும்னு சொல்லி இருந்தேன்லப்பா..?"

"ஆமா சார்..நேம் லிஸ்ட் வந்துச்சா..?"


"ஹான் வந்துச்சுப்பா...நறுமுகைக்கு தான் நீங்க கைட் பண்ண போறீங்க...நீங்க பார்த்து இருப்பீங்கனு நினைக்குறேன்..இப்ப தான் வெளிய போனாங்க...?" என கேட்டவரிடம்,


"ரெண்டு பேர் போனாங்க பார்த்தேன் சார்...பட் சரியா கவனிக்கலை.." என மறைக்காது பேசியவனிடம்,


"அப்படியா சரிப்பா...ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்கேன்...நீங்க பார்த்துக்கோங்க..."


"ஓகே சார்..நான் பார்த்துக்கிறேன்.."என்றவன் மனதிற்குள் நறுமுகையின் பெயரை ஒன்றுக்கு இரண்டு முறை கூறிப்பார்த்துக் கொண்டான்...



அவளது வகுப்பில் மொத்தம் இருபது பேர் படிக்கின்றனர்...பத்து ஆண்கள்,பத்து பெண்கள் உள்ளனர்...அந்த பத்து ஆண்களும் விக்ரமிற்கு அத்துப்படி...

பெண்களிடம் அவ்வளவாய் பேசியதில்லை...அவர்களிடம் பேசும் அவசியமும் வந்தது இல்லை..


இப்போது நறுமுகையை பற்றி தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு...சற்று யோசித்தவன் பின் நூலகத்திற்கு சென்றிட..அங்கு கணினியின் முன்பு இருந்தான் ஜான்...அவனை கண்டதும் வழக்கம்போல ,


"என்னடா ப்ராஜெக்ட் கைட் யார்னு சொன்னாங்களா..?"என கேட்டவாறு ஜானுக்கு அருகே இருந்த மற்றொரு கணினியில் அமர்ந்து எதையோ தேடியவாறு கேட்டு வைத்தான் விக்ரம்...


"ஆமா அண்ணா சொல்லி இருக்காங்க...ப்ரதீப் அண்ணாவாமே..."


"ஓஓ...நல்லா தான் சொல்லி தருவான்..பட் கொஞ்சம் பிகு பண்ணுவான் பார்த்துக்கோ..."


"ஓகே அண்ணா...நீங்க என் கிளாஸ் பொண்ணு நறுமுகைக்கு கைட் பண்ணுறீங்களாமே..?" என ஜான் கேட்டதும் விக்ரமின் விழிகள் இரண்டும் சுருங்கின...


"உனக்கு யார்டா சொன்னது...?"


"அவ தான் வந்து உங்களை பத்தி கேட்டா...நானும் நல்லா சொல்லி தருவாருன்னு சொன்னேன்..." என்றதும் தனக்கு வேலை வைக்காது ஜானே பேச்சினை ஆரம்பித்திடவும்,


"ம்ம்ம்...அந்த பொண்ணு எப்படி படிக்கும்...?" என கணினி திரையில் பார்வை பதித்தவாறு அருகே இருப்பவனிடம் கேள்வியை கேட்டு வைத்தான் விக்ரம்..


"ஹான் ...நல்லா படிப்பா அண்ணா... ராதாகிருஷ்ணன் சார் சப்ஜெக்ட்ல அந்த பொண்ணு தான் மார்க் நல்லா ஸ்கோர் பண்ணுவாண்ணா..."என கூடுதல் தகவல் அளித்து விட்டிருந்தான் ஜான்...


கேட்ட விக்ரமிற்கு திருப்தியாக இருந்தது... ஏனெனில் ராதாகிருஷ்ணன் தான் இருக்கும் பேராசிரியர்களில் சற்று கெடுபிடியான ஆள்..அனைத்திலும் பர்பெக்ஷன் எதிர்பார்ப்பவர்...
அவரை போல தான் விக்ரமும்...

தற்போது நறுமுகையும் அவரது பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்..? அவள் நன்‌றாக படிக்கும் மாணவி என்பது அப்பட்டமாய் தெரிந்தது...இந்த தகவலே போதும் என கருதிய
விக்ரம் ,ஜானிடம் சொல்லிக் கொண்டு நூலகத்தில் இருந்து வெளியேறி விட்டான்....


விக்ரமின் எதிர்பார்ப்பு பொய்த்து போகுமா..? பார்ப்போம்...


படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏🙏 தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கவும் ☺️☺️☺️☺️
 
Last edited by a moderator:
அத்தியாயம் 2

வளவன் மற்றும் சுரதையின் ஒற்றை மகள் தான் நறுமுகை...
வளவன் கம்பெனி ஒன்றில் மேனேஜராக பணிபுரிகிறார்....சுரதை பொறுப்பான குடும்பத்தலைவி.


சுறுசுறுப்பான பெண் என்றால் அது நறுமுகை தான்...சுரதைக்கு உதவி செய்யும் நேரத்தில் மட்டும் அவள் அப்படி ஒரு சோம்பேறி...



ஒற்றை மகள் என செல்லம் கொஞ்சிட மாட்டார்கள்...
கண்டிப்பும் இருக்கும் அதேசமயம் பெண்பிள்ளை என்பதால் கட்டுப்பாடும் சற்று அதிகம் தான்...


பெண்பிள்ளை பெயருக்கென்று படித்தால் போதும் என்பது தான் வளவனின் கருத்து...


அதனால் பெரியதாய் அவளது படிப்பு விஷயத்தில் அக்கறை காட்டிட மாட்டார்...

அதே சமயம் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...அதை மட்டும் தான் பார்ப்பார் வளவன்...



சுரதையும் பெரியதாய் படித்தது இல்லை அத்தோடு மகளின் படிப்பு விஷயத்திலும் தலையிட மாட்டார்...


அதற்காக கண்டுக் கொள்ளாது இருந்திடவும் மாட்டார்...
பெண்ணிற்கு படிப்பு முக்கியம் என்று மட்டும் அடிக்கடி கூறிடுவார்...


உடன்பிறந்தவர்கள் என யாரும் இல்லை நறுமுகைக்கு...


வளவனின் அண்ணன் வீடு பக்கத்து தெருவில் தான் உள்ளது...
நறுமுகை பிறந்து ஐந்து வருடம் கழித்து தான் வளவனின் அண்ணன் பாரிக்கு குழந்தை பிறந்தது...

இரண்டு பெண் பிள்ளைகள்...
ரோகிணி ராகினி....
அவர்களுடன் தான் எப்போதும் சுற்றுவாள் நறுமுகை...



கல்லூரியின் 'ஹாப்பியான' பெண் என்றால் அது நறுமுகை தான்... . எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பாள்... கேண்டீன், கிரவுண்ட் என எல்லா இடத்திலும் அவளுக்கு நண்பர்கள் இருப்பார்கள்.... பேசும் கலையில் கில்லாடி (Excellent Communication Skills)...
எவரிடமும் தயக்கமின்றிப் பழகுவாள்...



இவளைப் பார்த்தால், "இவளுக்குத் தெரியாத விஷயமே இருக்காது" என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்...



அவள் ஒரு "ஃபோட்டோகிராஃபிக் மெமரி" (Photographic Memory) கொண்டவள். ஒரு பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே படம் பிடித்தது போல மனப்பாடம் செய்துவிடுவாள்...


செமஸ்டர் தேர்வுகளில் குறைந்தது எண்பது சதவீதம் மேல் மதிப்பெண் வாங்கிவிடுவாள்.



ஆசிரியர்களுக்கும் அவளைப் பிடிக்கும்..., ஏனெனில் அவள் பேப்பர் எப்போதும் 'நீட்' ஆக இருக்கும்...
ஆனால், ஒரு சின்ன ஃபார்முலாவை மாற்றிப் போட்டாலோ அல்லது பாடப்புத்தகத்தில் இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டாலோ அவள் அப்படியே ஸ்தம்பித்து விடுவாள்....



மனப்பாடம் செய்து‌ மட்டுமே எழுதுவதால் அவளுக்கு இது ஒரு பெரும் குறை...அதை தவிர்த்து வேறெதும் பெரியதாய் குறை என கூறிட முடியாது அவளிடத்தில்...




ப்ராஜெக்ட் எனும் சவால் (The Project Crisis)
வெறும் மனப்பாடம் செய்யும் படிப்பு அல்ல, அது ஆராய்ச்சியைச் சார்ந்தது... இப்போதுதான் அவளது நிஜமான சிக்கலே தொடங்குகிறது எனலாம்...



(Theory) மனப்பாடம் செய்து ஒப்புவிப்பாள், ஆனால் அதை எங்கே, எப்படி பயன்படுத்துவது (Application) என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது....

ப்ராஜெக்ட் என்பது சுயமாகச் செய்ய வேண்டியது... புத்தகத்தில் இல்லாத விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும் போது, இதுவரை அவளுக்குக் கைகொடுத்த "மனப்பாட சக்தி" இப்போதும் உதவுமா??....
பார்ப்போம்...




தன்னை எப்போதும் ஒரு "புத்திசாலி"யாகக் காட்டிக் கொள்ளவே விரும்புவாள் நறுமுகை... அதனால் தனக்கு அடிப்படை விஷயங்கள் தெரியாது என்பதை மறைக்க மிகவும் போராடிடுவாள். இது அவளுக்கு ஒரு விதமான மன அழுத்தத்தைத் தரும்...



அவளது நண்பர்கள் அவளிடம் வந்து சந்தேகம் கேட்பார்கள் அவள் அதிக மார்க் வாங்குவதால்... ஆனால், அவர்களுக்கே புரியும் வகையில் அவளால் எதையும் விளக்க முடியாது.அது அவளது பலவீனமும் கூட...




இரண்டு நாட்கள் விடுமுறையை தனது பெரியப்பா மகள்களுடன் சந்தோஷமாக கழித்தாள் நறுமுகை...இரண்டாவது நாள் இரவு கவிதாவிற்கு நாளை எத்தனை மணிக்கு வர வேண்டும் என அலைப்பேசியில் அழைத்து கேட்டவளிடம்,
"நாகராஜன் சாருக்கு கால் பண்ணி கேட்டேன்டீ..அவர் ஒன்பது மணிக்கு காலேஜ்ல இருக்க சொன்னாரு...நீயும் வந்துடு..."



"சரி கவிதா..என்ன பண்ற?"


"சும்மா படிக்கிறடீ... ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண போறோம் அந்த அண்ணா ஏதாவது கேள்வி கேட்டா பதில் சொல்லனும்ல.."
என்றதும் தான் தாமதம் பக்கென்று ஆனது நறுமுகைக்கு,



" என்னடி சொல்ற..??? கேள்வி எல்லாம் கேட்பாங்களா..?" என கேட்டதும்,



" பின்ன கேட்காம இருப்பாங்களா..? நம்மளுக்கு கைட் பண்ண போறாங்க நம்மளுக்கு என்ன தெரியும் அப்படின்னு அவங்களும் தெரிஞ்சுப்பாங்க.! சும்மா ஏதாவது ஒன்னை காட்டி இது என்ன..?? இது எதுக்கு யூஸ் பண்ணுவாங்கன்னு கேட்டா அந்த டைம்க்கு நம்ம திருத்திருன்னு முழிச்சுக்கிட்டா இருக்க முடியும்..?? சும்மாவாது படிச்சிருக்க வேண்டாமா? " என கவிதா பதிலளிக்கவும் தூக்கி வாரி போட்டது நறுமுகைக்கு...



அவள்தான் இரண்டு நாட்களாய் நன்றாக கோட்டம் அடித்து இருந்தாளே..

இப்போது படிக்க வேண்டும் என்றால் என்ன செய்துவிடுவாள்..
அதுவும் இதோ இன்னும் சிறிது நேரத்தில்
உறங்குவதற்கான நேரம் வந்து விடும் ..அதற்குப் பிறகு படிக்க வேண்டும் என கூறினால் நிச்சயம் தந்தை அவளை திட்டி விடுவார் ..


"சரி கவிதா நான் வைக்கிறேன்.." என அழைப்பை துண்டித்தவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது ..



காலையில் கல்லூரிக்கு செல்லும் வழக்கமான பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவள் அத்தனை பொறுப்பாக ஒவ்வொன்றையும் பார்த்தவாறு மனதிற்குள் அசை போட்டுக்கொண்டு வந்தாள்..



நறுமுகையோ மனதிற்குள்,
' அந்த விக்ரமே யாருன்னு தெரியலை அத்தனை பேர் முன்பு ஏதேனும் கேள்வி கேட்டு தனக்கு தெரியலைனா என்ன செய்வது மிகவும் அவமானமாகி விடாதா..?' என எண்ணி கொண்டிருக்க அவளது இன்னொரு மனமோ,
' அதெல்லாம் பார்த்துக்கலாம்.. நம்மளுக்கு சொல்லி தரத்துக்கு தானே அவங்க இருக்காங்க..' என முரண்டு பிடித்ததும்
'ப்ச் பாத்துக்கலாம்' என்கிற மனநிலைக்கு இறுதியில் வந்தவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க துவங்கினாள் ....




சரியான நேரத்திற்கு அடுத்தடுத்து வந்து இருந்தனர் கவிதாவும் நறுமுகையும் கல்லூரிக்கு..


நேரே நான்காவது தளத்திற்கு சென்றிட அவ்வளவாய் கல்லூரியில் ஆட்களே இல்லை.. இருந்தும் ph.d செய்யும் மாணவர்கள் மட்டும் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர் ...



நேரே லேபிர்க்கு தான் வந்தனர் பெண்கள் இருவரும்.. அங்கு இருந்த சாமுவேலை கண்டதும் இருவரும்,
" குட் மார்னிங் அண்ணா.."என்கிற குரலில் தலை உயர்த்தி பார்த்த சாமுவேல் நல்ல கருநிற கண்ணனாய் வெண்ணிற சட்டையும் அதற்கு எடுப்பாய் க்ரே கலர் பேண்ட்டும் அணிந்து இருந்தவன் ,


" குட் மார்னிங்மா.. என்ன கரெக்ட் டைம்க்கு வந்துட்டீங்க போல..?" என்றதும் இருவரும் சின்னதாய் புன்னகைத்தனர்..



"சரி பேக் அங்க ஓரமா வச்சுட்டு.. ஒரு நோட் பேனா மட்டும் எடுத்துட்டு வாங்க.." என்றதும் இருவரும் ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வந்த நேரம் சரியாக அவ்வறைக்குள் நுழைந்து இருந்தான் அவன் விக்ரம்..


" நறுமுகை..!" என்கிற அழுத்தமான அழைப்பில் சட்டென்று ஒரு அதிர்வு வந்தது நறுமுகைக்கு...


சடாரென்ற தலை திருப்பி பார்த்தவளது விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன ..அன்று பார்த்த அதே நெடுநெடுவென வளர்ந்தவன் தான் அது ...



அவளை அழுத்தமாய் பார்த்தவாறு அருகே வந்த விக்ரம்,


" நீங்க தானே நறுமுகை...?" எனக் கேட்டதும் ஆமாம் என்று தலை அசைத்தவளின் உள்ளங்கையும் உள்ளங்காலும் சில்லிட்டுப் போனது பயத்தில்..



எச்சிலை விழுங்கி கொண்டு அவனைப் பார்த்திட ..


அவனும் சாமுவேலையை தலை திருப்பி பார்த்து,


" நான் பார்த்துக்கிறேன் சாமுவேல்.." என்றதும் சாமவேலும் தோள்களை குலுக்கி கொண்டு சரி என்று கூறியவன் கவிதாவிடம் பேசத் துவங்கினான்..



நறுமுகையோ விக்ரமின் பின்னால் சென்றிட ..அங்கு ஓரிடத்தில் அவளை நிற்க வைத்துவிட்டு கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவளை பார்த்த விக்ரம் தாங்கள் செய்யப் போகும் ப்ராஜெக்ட் பற்றிய எல்லாம் அவன் எடுத்ததும் பேசிடவில்லை,



" டைம் கீப் அப் பண்றது ரொம்பவே முக்கியம் ...ஏன்னா நம்ம ப்ராஜெக்ட்ல பண்ற ஒவ்வொரு டெஸ்ட்டும் அந்தந்த டைம் குள்ள முடிச்சாகணும்.. அப்பதான் நம்மளுக்கு ரிசல்ட் நல்லா வரும்.. இதெல்லாம் பேசிக்ஸ் தான்.. ஏற்கனவே பிஎஸ்சி எம்எஸ்சி பிராக்டிகல் பண்ணும் போது இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருப்ப.. அதுக்கப்புறம் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் எல்லாம் யூஸ் பண்றது ரொம்ப ரொம்ப கவனமா யூஸ் பண்ணனும்..
நீ இந்த லேப்குள்ள நுழைஞ்சதுமே முதல் வேலையா உன் கையில நீ கிளவுஸ் போட்டுக்கணும்.. புரிஞ்சுதா..?
அண்ட் மோர் ஓவர் ...மாஸ்க் கம்பல்ஸரி லேப் கோர்ட்ல இருக்கணும்.. சின்னதா ஒரு நோட்டும் பேனாவும் எப்பவும் இருக்கணும்..
கவனமாவும் இருக்கணும்.. நான் ஒன்னு சொன்னா அதை சொன்ன நேரத்துல முடிக்கணும்.. புரியுதா ..?
சப்போஸ் ஏதாச்சும் தெரியலனா தயங்காம என்கிட்ட கேளு .." என சில பல அறிவுரைகளை வழங்கிட ஆரம்பத்திலேயே கண்ணை கட்டியது நறுமுகைக்கு ..




அனைத்திற்கும் மண்டையை மண்டையை ஆட்டியவளது உடல் மொழியும் பார்வையையும் பார்த்து அவளிடம் ஏதோ சரியில்லை என கண்டு கொண்டான் விக்ரம்..



இருந்தும் முதல்நாள் என்கிற பயத்தினால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என எண்ணிக்கொண்டவன் அவள் செய்யப்போகும் ப்ராஜெக்ட்டின் பத்தி சற்று விளக்க கூறலானான்..



ஏதேனும் ஒரு மூலிகை தாவரத்திலிருந்து காயத்தை குணப்படுத்தும் களிம்பை உருவாக்க வேண்டும் இதுதான் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ப்ராஜெக்ட் ...



தலை திருப்பி அவளைப் பார்த்த விக்ரம்,



" சொல்லு ஹெட்டிங் கேட்டல.. இதுல இருந்து உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?" என்றதும் சிறிது யோசித்தவளுக்கு பயத்திலும் படபடப்பிலும் மூளையில் ஒன்றும் தோன்றவில்லை ...



"அது ..பிளான்ட்ஸ் வந்து.. நாமளே ஆயில்மெண்ட்.. தயாரிப்போமா..?? அதுவும் நானா..?" என அவள் மீது நம்பிக்கை இல்லாது விக்ரமிடம் கேட்டிடவும் விழிகள் சுருக்கி அவளை பார்த்த விக்ரம் பல்லை கடித்துக் கொண்டு ,



"நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்..?? முட்டாள்...
ப்ராஜெக்ட் பண்ண போறோம். அதற்கான ஹெட்டிங் என்னனு சொல்றேன்.. நானா பண்ண போறேன்னு கேக்குற..?? அப்ப நான் பண்ணனுமா ..?" என சற்று காட்டமாக கேட்டதும் பதறியவள்,



" அப்படி இல்லண்ணா... அது.." சட்டென அவள் முன்பு விரல் நீட்டி,



" லுக் இந்த அண்ணா கிண்ணா இதெல்லாம் வேண்டாம்.. கால் மீ சார் ..அண்டர் ஸ்டாண்ட்..?" என்றதும் நொடியில் முகம் வாட்டமாகிவிட்டது நறுமுகைக்கு..


" ஓகே சார் .." என உள்ளே‌ போன குரலில் கூறியவளிடம்,



"ம்ம்ம்...சொல்லு என்ன சொல்ல வந்த ..?"



"அது ..எந்த மாதிரி பிளான்ட்ஸ் வச்சு நாம இதெல்லாம் செய்ய போறோம்..?" என்றதும் அவனும் தோள்களை குலுக்கக் கொண்டு,



" நீ தான் சொல்லணும்.. படிச்சிருக்கல..?? என்ன மாதிரி பிளான்ட்ஸ் எல்லாம் வெச்சி நம்ம காயம் குணமாகும்னு.. ஜஸ்ட் பேசிக்கா யோசி.." என்றதும் திருத்திருவென விழித்த நறுமுகைக்கு ஒன்றும் மூலையில் உதயமாகவில்லை..
அவளைப் பார்த்து உஷ்ண பெருமூச்சு விட்ட விக்ரம் ,



"இப்ப ஏதாவது காயம் பட்டுச்சுன்னா வீட்ல என்ன பண்ணுவாங்க.?? வேப்பிலை அரைச்சு போடுவாங்களா..? மஞ்சள் கூட போடுவாங்களா..?" இதெல்லாம் என்னது..?? இன்பெக்ஷன் ஆகாம இருக்கணும் அப்படிங்கறதுக்கா போடுறது ..அதே மாதிரி தான் நம்ம பிளான்ட்ஸ்ல எவ்வளவோ இருக்கு... ஒன்னு ஒன்னுத்துக்கும் ஒரு ஒரு குணம் இருக்கு ..இப்ப நம்மளுக்கு விளம்பரத்துக்கு வர சோப்புகளிலேயே மஞ்சள் சேர்ந்துருக்கு ,கற்றாழை சேர்ந்திருக்கு, வேப்பிலை சேர்ந்திருக்கு, துளசி சேர்ந்திருக்கு...
ஒன்னொன்னா விளம்பரம் போடுறாங்க.. அது மாதிரி தான்...ம்ம்ம் ஓகே.. நான் இப்போ உனக்கு ஆப்ஷன் தரேன்.. முருங்கைக்கீரை, வேப்பிலை, துத்தி இதுல ஏதாவது ஒன்னை செலக்ட் பண்ணு ..அதிலிருந்து நம்ம ஆயின்மென்ட் தயாரிக்கலாம்..." என்றதும் முகம் மலர்ந்தவளாய்,




" முருங்கைக்கீரை பண்ணலாம் சார்...வேப்பிலை கூட பண்ணலாம்...எங்க வீட்ல இரண்டு மரமும் இருக்கு..." என ஆவலாய் கூறியதும் அவளை மேலிருந்து கீழாக பார்த்த விக்ரம்,



" இரண்டுமே கிடையாது.. துத்தி பண்ணலாம் .." என ஒரே போடாய் போட்டதும் அவனையே பாவமாக பார்த்து வைத்தாள் நறுமுகை...
 
Last edited:
அத்தியாயம் 3

Ph.D. இறுதி கட்டத்தில் இருக்கும் ஒரு ஆய்வாளன் தான் நம் நாயகன் விக்ரம் ...தனது பல வருட உழைப்பை ஒரு 'தீசிஸ்' (Thesis) வடிவில் சமர்ப்பிக்க இருப்பதால் தீவிரமான மனநிலையில் இருக்கிறான்..

அவனுக்கு அரைகுறை அறிவு என்றாலே அலர்ஜி....

அவன் ஒரு முன்கோபி அல்ல... மற்ற மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் மிகவும் பண்பாகவும், கனிவாகவும், சிரித்த முகத்துடனும் பேசும் குணம் கொண்டவன் தான் விக்ரம்...

கல்லூரியில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் மென்மையானவன் (Soft-spoken). ஜூனியர்களுக்கு உதவி செய்வதில் அவனுக்குப் பெரிய பெயர் இருக்கும்....

யாராவது வந்து சந்தேகம் கேட்டால் புன்னகையோடு விளக்கிடுவான்....
உதவி என்று கேட்டால் முகம் சுளிக்காமல் செய்பவன்... கல்லூரியில் அவர் ஒரு "Gentleman" என்று பெயரெடுத்தவன்...

தனது தீசிஸ் (Thesis) வேலைகளில் மிகத் தீவிரமாக இருப்பதால், ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்கிட்டுச் செலவழிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு...


யாரிடமும் அனாவசியமாகப் பேசிட மாட்டான் விக்ரம்.. ஆனால் பேசினால் அதில் ஒரு கண்ணியம் இருக்கும்..


அவருக்குப் பாதி தெரிந்த விஷயங்கள் என்றாலே பிடிக்காது. ‌...ஒரு விஷயம் தெரிந்தால் நுனி முதல் அடி வரை தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என நினைப்பவன்...

அவனது தந்தை தேசிங்கன் சொந்தமாக நகைக்கடை ஒன்றை வைத்திருக்கிறார்...அன்னை சுகன்யா நகைக்கடையின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொள்வார்...

வீட்டிற்கு ஒற்றை மகனான விக்ரம் மீது பெற்றவர்கள் இருவரும் அன்பையும் பாசத்தையும் கொட்டிக் கொட்டி வளர்த்திருக்கின்றனர்...

இருவரும் அத்தனை பண்போடும் ஒழுக்கத்தோடும் அவனை வளர்த்திருப்பதால் பெண்கள் விடயம் மட்டுமல்லாது எந்தவித கெட்ட பழக்கமும் அவனுக்கு கிடையாது..

நேர்மையானவன், பண்பானவனும் கூட ..



பிஎச்டி முடித்துவிட்டு தான் வேலையில் அமர்ந்த பின்னர் தான் திருமணம் என முடிவெடுத்து இருப்பதால் பெற்றவர்களுக்கு அந்த ஒரு விடயத்தில் மட்டும் அதிருப்தியே..

ஒற்றை மகன் அவனுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்து பேரன் பேத்தியை பார்க்க வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்..

இந்த வருடம் தீசிஸை
சமர்ப்பித்து விட்டு வைவாவையும் முடித்து விட்டால் இந்த பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராக பணியாற்றுவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டிருந்தான் விக்ரம்..

அதற்கு சில பல லட்சங்களும் செலவாகிட அனைத்தும் செய்துவிட்டாயிற்று ...


அவனை இத்தனை வருடங்களாய் வழிநடத்தி வந்துள்ள நாகராஜனின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவர் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே ஜூனியர் மாணவர்களுக்கு கைடாக பொறுப்பேற்று இருக்கிறான் ...


தானும் வேலையில் இருப்பதால் தான் வழிநடத்தும் மாணவரும் அறிவாளியாக இருந்தால் தனக்கு பாதி வேலை மிச்சம் என எண்ணித்தான் நறுமுகையே பற்றி விசாரித்து இருந்தான் விக்ரம் ..

மதிப்பெண்களை வைத்து அவளை அளவிட்டவனுக்கு உண்மையில் அவளிடம் பேசிய பின்னர் தான் அவளுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதையே புரிந்து விட்டிருந்தது....

இருந்தும் மனதில் ஓரம் முதல் நாள் அந்த பயத்தில் தான் அவள் அவ்வாறு எல்லாம் நடந்து கொள்கிறாளோ என்கிற எண்ணம் இருந்தது..

ஆனால் அவன் எதற்கும் இருக்கட்டும் என சில பல அடிப்படைக் கேள்விகளைக் கேட்டு வைத்திட , ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளிக்க தான் செய்தாள்.. அதுவும் அவளுக்கு என்ன புரிந்துள்ளது என்பதை விட புத்தகத்தில் என்ன இருந்ததோ அதை அப்படியே மனப்பாடமாய் ஒப்பித்தவளை கண்டு பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது விக்ரமால்...


அதுவும் இறுதியாய் ஒரே ஒரு கேள்வியை கேட்டான்... அதற்கு அவள் முழித்த முழிப் இருக்கிறதே இப்போது நினைத்தால் கூட தலையில் நறுக்கென்று கொட்டி விடலாமா என்று தான் தோன்றும் ...


"பிசிஆர்(PCR) ஓட ஃபுல் ஃபார்ம் என்ன..?" என கேட்டதும் திருதிருவென முழித்தாள் நறுமுகை..

"அது...பிசிஆர் ஹெல்ப்ஸ் இன் டிடெக்டிங் வைரஸஸ், பாக்டீரியா ஆர் ஃபங்கை அட் த வெரி இயர்லி ஸ்டேஜ்.பை எக்ஸ்ட்ராக்டிங் அண்ட் டெஸ்ட்டிங் த டிஎன்ஏ ஃப்ரம் அ ஸ்மால் லீஃப் ஆஃப் த ப்ளான்ட் , இட் கேன் பி கன்ஃபார்ம்டு வெதர் இனிவிஸிபல் மைக்ரோஆர்கானிஸம் ஆர் ப்ரசென்ட்.திஸ் ஹெல்ப்ஸ் ப்ரிவன்ட் த ஸ்ப்ரெட் ஆஃப் த டிசிஸ்..


PCR helps in detecting viruses, bacteria, or fungi at a very early stage.
By extracting and testing the DNA from a small leaf of the plant, it can be confirmed whether invisible microorganisms are present. This helps prevent the spread of the disease.
வைரஸ், பாக்டீரியா இல்ல பூஞ்சை (Fungi) காளான்களை மிக ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய PCR உதவுகிறது.
தாவரத்தின் ஒரு சிறிய இலையிலிருந்து DNA-வை எடுத்து சோதனை செய்வதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம். இது நோய் பரவுவதைத் தடுக்க உதவுகிறது

என புத்தகத்தில் இருப்பதை அவள் ஒப்புவித்திட.. சலிப்பாக அவளை பார்த்த விக்ரம்,


" நான் பி சி ஆர் எதுக்கு யூஸ் பண்ணுவாங்கன்னு கேட்கலை...வாட் இஸ் த ஃபுல் ஃபார்ம் ஆஃப் பிசிஆர் ..?புரியுதா நான் கேக்குறது..?" என கேட்டதும் மண்டையை ஆட்டி வைத்த நிரல்யா கைகளை பிசைந்தபடி அவனை பார்த்தவாறு இருந்தாளே ஒழிய வாய் திறந்து பதில் அளிக்கவில்லை..

கடுப்பான விக்ரம் நெற்றியை நீவியபடி ,


"பிசிஆர் ஓட ஃபுல் ஃபார்ம் பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன் (Polymerase chain reaction) ...பேசிக்... இதுகூட உனக்கு தெரியாதா..?" என கேட்டு விட அவமானம் ஆகிவிட்டது நறுமுகைக்கு...

தரையில் கால்களை அழுந்த ஊன்றிக் கொண்டு தலை குனிந்து நின்றவளுக்கு கண்கள் கலங்கி விட்டது...

' கவிதா படித்தது போல நானும் படித்திருந்தால் இவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலளித்து இருப்போமே.?' என நெஞ்சம் அடித்துக் கொண்டது அவளுக்கு ..

"இங்கப்பாரு...மார்க் முக்கியமல்ல, விஷயம் தான் முக்கியம்...படிக்கிறதை புரிஞ்சிகிட்டு படி..

இப்படி ஒரு பேசிக் கூடத் தெரியாத ஒரு பொண்ணு நாளைக்கு டீச்சராவோ இல்ல சயின்டிஸ்ட்டாகவோ போனா அது.. சமுதாயத்துக்கே கேடு" என முகத்தில் அடித்தது போல பேசிடவும் மொத்தமாய் கூனிக்குறுகி போய்விட்டாள் நறுமுகை...


அவன் அடிக்குரலில் சத்தம் இன்றி பேசியதால் தள்ளி நின்றிருந்த கவிதாவிற்கும் சாமுவேலிற்க்கும் எதுவும் கேட்டிடவில்லை என்றாலும் இருவரது உடல் மொழியையும் கண்டுவிட்டு அவன் நறுமுகையே திட்டுகிறான் என்பது மட்டும் புரிந்தது..

கவிதாவிற்கு நறுமுகையே காண கஷ்டமாக இருந்தது.. அதை பார்த்த சாமுவேல்,


" என்ன உன் ஃப்ரண்ட் வந்ததும் முதல் நாளே திட்டு வாங்குறா..?? அவன் வேற முரடு பிடித்தவன் ..எதுவும் தெரியாதுன்னு சொன்னா அதுக்கும் திட்டுவான் ..
பேசாம நாகராஜன் சார் கிட்ட பேசி கைடை மாத்த சொல்லிடு.." என இயல்பாக கூறி விட கவிதாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ,


"சரிண்ணா.. நான் சொல்றேன் அவகிட்ட.." என்று மட்டும் கூறிவிட்டு இருந்தாள்...


பின் துத்தி தாவரம் எப்படி இருக்கும் என தன் லேப் டாப்பில் புகைப்படத்தை காட்டியவன் ,அது எங்கவெல்லாம் கிடைக்கும், எப்படி இதனை கலெக்ட் செய்ய வேண்டும் என ஒவ்வொன்றையும் கூறி விட்டிருந்தான்...

நாளை வரும்போது இதனை கொண்டு வந்தே தீர வேண்டும் எனக் கூறி விட கேட்ட நறுமுகைக்கு கண்ணை கட்டினாலும் அனைத்திற்கும் மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள்...


அவளை கடுப்புடன் பார்த்து பெருமூச்சு விட்ட விக்ரம் சலிப்பாக தலையாட்டி விட்டு,


"இது ஒன்னுத்துக்கும் தேராது.." என முணுமுணுத்து விட்டு சென்று விட்டான்....அவன் கூறிய வார்த்தைகள் அச்சுபிசறாது நறுமுகையின் காதில் விழுந்து விட்டிருந்ததே...



ஒரு நாள் முடிவதற்கே ஒரு யுகம் போல் ஆகிவிட்டது நறுமுகைக்கு.. மதிய உணவு கூட நறுமுகை மெதுவாகவே உண்டிட, கவிதா தான் சற்று அவசர அவசரமாக உண்டு கொண்டிருந்தாள்..

அவளை பார்த்த நறுமுகை,


" ஏன் இவ்வளவு அவசரமா சாப்பிடுற ? டைம் தான் இருக்கே..?"


" இல்லடி சாமுவேல் அண்ணா சாப்பிட்டுட்டு சீக்கிரம் வர சொல்லி இருக்காரு.." என்றதும் அவளை உதட்டை சுழித்துக் கொண்டு பார்த்த நறுமுகை,


" ஆமா உனக்கு என்ன கொடுத்திருக்காங்க.."


"அதுவா தாவர நோயியல் (Plant Pathology)டீ...
ப்ளான்ட்ஸை தாக்குற பூஞ்சை இல்ல வைரஸ் நோய்களுக்கு இயற்கை முறையில் சொல்யூஷன் கண்டுபிடிக்கனுமாம்....அதான் ரசாயன உரங்களுக்குப் பதிலா உயிரியல் பூச்சிக்கொல்லிகளை (Bio-pesticides) உருவாக்குறது...
இதுக்கு நான் ஃபீல்ட் ஒர்க்(களப்பணி) லாம் பண்ணனுமாம்...கடுப்பா வருது...

ஆமா நீ என்ன அந்த அண்ணா கிட்ட திட்டு வாங்கிட்டு இருந்த போல..?? எதுக்கு திட்டினாரு..?? முதல் நாளே இப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டா எப்படி? " என கவிதா அவளுக்கு சாதமாக பேசவும் அமைதியாக இருந்த நறுமுகை,


"அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டுடீ...ஆமா சாமுவேல் அண்ணா உன்னை எப்படி கூப்பிட சொல்றாரு சாருன்னா..?"


"ஆமா..சார் தான் கூப்பிடனுமாம்.. ஆனா அண்ணனே கூப்பிடும்மா ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாரு.."


உதட்டை சுழித்த நறுமுகை,


" பரவால்ல ஆனா என்னை இவர் என்னம்மா சொல்றாரு சார்னு தான் சொல்லணுமாம்.. அண்ணா கிண்ணானு சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரு.. எரிச்சலா வருது.. புண்ணுக்கு மருந்து தயாரிக்கணுமாம்.‌ வேற வேலை இல்ல பாரு ..கடுப்பா வருது.. பேசாம மெடிக்கல் ஷாப்ல இருந்து ஏதாவது ஒரு ஆயின்மென்ட் வாங்கிட்டு வந்து கொடுத்துட வேண்டியது தான்.." என்றவளை முறைத்துப் பார்த்த கவிதா,


" லூசு மாதிரி பேசாத.. ஒழுங்கா கொடுக்குற வேலையை ஒழுங்கா பண்ண பாரு.. அந்த அண்ணனை பார்த்தாலே தெரியுது ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காருன்னு..

அதுக்கு ஏத்த மாதிரி இருக்கு பழகு.. இன்னும் ஆறு மாசம் தான் ப்ராஜெக்ட் முடிச்சாமா.. வைவா பண்ணோமா ..இந்த எம்எஸ்சி-யை தலைக்கு மேல தூக்கி போட்டு போயிட்டே இருக்கணும் ..ஏதாவது ஒரு வேலைக்கு ஒரு வருஷம் போயிட்டு வீட்ல பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தான்.." என சாப்பிட்டவாறு பேசிய கவிதாவை சோர்வாக பார்த்த நறுமுகை,


" எனக்கு இப்பவே கண்ணை கட்டுது கவிதா.. இந்த அண்ணன் என்னென்னவோ சொல்றாரு நினைச்சாலே பயமா இருக்கு.." என உள்ளே போன குரலில் பேசியதும் அவளை பாவமாக பார்த்த கவிதா ,


"அதெல்லாம் ஒன்னும் இல்ல முகை... எல்லாம் நம்ம ஏற்கனவே லேப்ல பண்ணது தானே.. எதுக்கு கவலைப்படுற..?"


"ப்ச்.. ஆமா போடி.. நம்ம பிஎஸ்சி படிச்ச காலேஜ்ல ஏதாவது ஒரு பிராக்டிக்கலாவது உருப்படியா பண்ண வச்சிருக்காங்களா..?? மிஷினை காட்டி இந்த மிஷன் எதுக்கு யூஸ் ஆகும்னு வாயில தான் சொன்னாங்களே தவிர ஒன்னு ஒன்னும் செஞ்சு காட்டி இருந்தா நம்மளுக்கு எவ்வளவு ஈசியா இருந்து இருக்கும் ..

நீயே பார்க்குறல நம்மளை தவிர மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் அவங்க அவங்க காலேஜ்ல ph value எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்காங்க...

ஆனா நம்மளுக்கு இதுதான் பிஹெச் கண்டுபிடிக்கிற மிஷின்னு கண்ணால மட்டும் தான் காட்டியிருக்காங்க ..வேஸ்ட் டி நம்ம காலேஜ் .."


ஆம் அவர்கள் படித்த கல்லூரியில் ஒவ்வொரு இன்ஸ்ட்ருமென்ட்டையும் எதற்காக உபயோகப்படுத்துகிறார்கள் என வாய் வழியாகத்தான் சொல்லி தந்தார்களே ஒழிய அதை செய்து காட்டியது எல்லாம் இல்லை ..அத்தோடு மாணவர்களை ஒரு முறை கூட செய்ய வைத்ததும் இல்லை..

இப்போது முதுகலையில் மற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களே ஒவ்வொன்றையும் அழகாய் கையாள்வதை காணும் போது இவர்கள் நால்வருக்கும் அடிவயிற்றில் புளியை கரைக்கும் நமக்கு தெரியவில்லையே என்று ...அந்த ஆதங்கத்தில் தான் நறுமுகை பேசியது...


இப்போதும் ப்ராஜெக்ட்டினை கஷ்டமாக நினைக்க காரணம் அது மட்டுமே ஆகும்.. பின் கவிதா தான் நறுமுகையே சமாதானம் செய்துவிட்டு அவசர அவசரமாக உண்டு முடித்தவள் சாமுவேலிடம் ஓடியே விட்டாள்..

அவளை பெருமூச்சுடன் பார்த்த நறுமுகை தானும் உண்டு விட்டு எழுந்திடும் அந்நேரம் படியிலிருந்து ஏறி வந்த விக்ரம் அவளைத்தான் முறைத்துப் பார்த்துவிட்டு சென்று விட்டான்..

செல்பவனது முதுகையை கோ
பமாக பார்த்த நறுமுகை,


' ஆளையும் மூஞ்சியும் பாரு.. கை கால் உடைஞ்சு வீட்டிலேயே கிடந்து தொலைடா பாவி...!' என உள்ளுக்குள் சாபம் இட்டுக் கொண்டாள்...
 
Status
Not open for further replies.
Top