ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 27

அத்தியாயம் 27

காலையில் எழுந்த வம்சி கிருஷ்ணாவின் கண்கள் படிந்தது என்னவோ கண்ணாடி முன்னே நின்று தலையை பின்னிக் கொண்டு இருந்த தேன்மொழி மீது தான்...

கைகளை தலைக்கு பின்னே வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தவன், "குட் மார்னிங் கண்ணம்மா" என்றான்...

புதிதாக இருந்தது அவன் அழைப்பு... சட்டென திரும்பி அவனை வியப்பாக பார்த்தாள்.

அவனோ, இதழ்களுக்குள் புன்னகைத்தபடி, "தேன்மொழி எல்லாருமே கூப்பிடுற பேர்ல, எனக்கு நீ ஸ்பெஷலா இருக்கணும், கண்ணம்மான்னு கூப்பிடும் போது நீ மனசுக்கு ரொம்ப நெருக்கமாயிடுற... தனியா இருக்கும் போது அப்படி தான் கூப்பிடுவேன்" என்று கண் சிமிட்டி சொல்ல, அவளுக்கும் அது பிடித்து இருந்தது...

அவளும் வெட்கத்துடன் தலையாட்டி விட்டு, பின்னிய முடியை பின்னால் போட்டாள்.

அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவோ, "இன்னைக்கே ஸ்கூல் போகணுமா? டயர்ட் ஆஹ் இல்லையா?" என்று கேட்க, அவளுக்கு சட்டென கன்னங்கள் சிவந்து போயின...

நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டே அவனை திரும்பி பார்த்தவள், "இன்னைக்கு எக்ஸாம் வைக்கணும்... அதனால போய் தான் ஆகணும்" என்றாள் சைகையில்...

அவனோ, பெருமூச்சுடன் கட்டிலில் எழுந்து அமர்ந்தவன், "போறதுக்கு முதல்" என்று சொல்லி ஒற்றை விரலால் தனது இதழ்களை காட்ட, அவளோ சிரித்தபடி கைப்பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டே, அவனை நோக்கி வந்தாள்.

அவனும் இதழ்களை ஈரமாக்கிக் கொண்டே ஆயத்தமாக இருக்க, அவனை நோக்கி குனிந்து, ஒற்றைக் கையால் அவன் தாடையை பற்றி பக்கவாட்டாக திருப்பியவள் அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவனோ, "நான் எங்க கேட்டேன், நீ எங்க கொடுக்கிற? நானே கொடுக்கிறேன் கண்ணம்மா" என்று கரகரத்த குரலில் சொன்னவன், அவளை தாடையைப் பற்றி இருந்தான்... அவள் விழிகளோ அதிர்ச்சியும் வெட்கமுமாக விரிந்து பின் மூடிக் கொண்டன...

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தேன்மொழியோ, 'ஐயோ புடவை இப்படி கசங்கி போச்சே' என்று நினைத்துக் கொண்டே புடவையை சரி செய்தவள், இதழ்களையும் புறங்கையால் துடைத்துக் கொண்டே படியிறங்கி கீழே சென்றாள்.

வம்சி கிருஷ்ணாவோ, தலையை கோதிக் கொண்டே சிரித்தபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்...

பெண்களை ஆட்கொண்ட ஆண்களின் வெட்கம் கூட அழகு தான்...

படியிறங்கி வந்த தேன்மொழியை வேதவல்லி கடுப்புடன் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருக்க, அவள் அவரை கண்டு கொள்ளாமல் சாப்பிட அமர்ந்து விட்டாள்.

அங்கே வந்த வசந்தியோ, "குட் மார்னிங் தேன்மொழி, ரெண்டு பேரும் நேத்து நைட் சாப்பிடலையே" என்றார்...

அவளுக்கோ சங்கடமாகி விட்டது...

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை...

கையசைத்து, "டயட் ல இருக்கோம்" என்றாள்.

அவரோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "ரெண்டு பேரும் டயட்ல இருக்கிற போலவா இருக்கீங்க? அவனுக்கு தொப்பையே இல்லை... உனக்கு உடம்புல எலும்பு மட்டும் தான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, அவள் தட்டில் மூன்று தோசையை எடுத்து வைத்தார்...

அவளோ, "ரெண்டு போதும்" என்று சைகையில் சொல்ல, "என்ன ரெண்டு போதும்? மூணு சாப்பிடு... அப்போ தானே குழந்தை எல்லாம் பெத்துக்கும் போது தெம்பா இருக்கலாம்" என்று சொன்னதுமே அவள் மேனி சிலிர்த்து விட்டது...

வம்சி கிருஷ்ணாவின் குழந்தையை சுமக்க வேண்டும் என நினைக்க நினைக்க மேனியில் ஒரு வித குறு குறுப்பு...

வசந்திக்கு தெரியாமல் கையை கீழே இறக்கி வெட்கத்துடன் வயிற்றை வருடிக் கொண்டவள், மௌனமாக சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

அவளும் சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள்.

இப்போதும் அவள் நடந்து தான் சென்றாள்.

வசந்தி எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை...

"நடப்பது உடம்புக்கு நல்லது தானே" என்று கையசைத்து சொல்லி விட்டு புறப்பட்டு விட்டாள்.

பாடசாலைக்கு நடந்து சென்றவளுக்கு இன்னுமே வம்சி கிருஷ்ணாவின் நினைவு தான்...

விடுமுறை எடுத்து விட்டு அவனுடன் சென்று நேரம் செலவிடுவோமா? என்று அவள் நினைக்கும் அளவுக்கு அவன் நினைவுகள் இம்சித்தன...

ஆனால் கடமை அழைத்தது...

தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டே நடக்க தொடங்கி விட்டாள்.

இதே சமயம் ரதிதேவி மனம் கேட்காமல் அன்றே வசந்தியை தேடி வந்து இருந்தார்...

குருமூர்த்தி அலுவலகத்துக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டே சாப்பிட அமர்ந்த தருணம் அது...

ரதிதேவியைக் கண்டதுமே ஹாலில் இருந்த வேதவல்லியோ, "வா ரதி" என்று சொல்ல, அவரை திரும்பிக் கூட பார்க்காமல் குருமூர்த்தி அருகே வந்து அமர்ந்தார் ரதிதேவி...

வேதவல்லிக்கு சப்பென்று ஆகி விட்டது...

ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டே, அவர்கள் பேசுவதை கவனிக்க தொடங்கி இருந்தார்...

"ரெண்டு நாள் கழிச்சு தான் வர இருந்தேன் அண்ணா, ஆனா மனசு கேட்கல, கல்யாணி பண்ணுனது தப்பு தான்... அவளை மன்னிச்சுடுங்க, அவ இப்போ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா..." என்று சொல்ல, குருமூர்த்தியோ, "விடும்மா, நம்ம வீட்டு பொண்ணு தானே... வசந்தி கை வச்சுட்டா... அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... வசந்தியை மன்னிப்பு கேட்க சொல்ல முடியாது... அவ பண்ணுனது எனக்கு சரியா தான் தோணிச்சு" என்றார் மென்மையாக...

"ஐயோ அண்ணா, அண்ணி பண்ணுனது ஒன்னும் தப்பே இல்லை... அவங்க ஒரு அடியோட விட்டுட்டாங்க, நானா இருந்தா இன்னும் ரெண்டு போட்டு இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வசந்தியும் அங்கே வந்து சேர்ந்தவர், "வா ரதி" என்று புன்னகையுடன் வரவேற்றார்...

அவரை மென் புன்னகையுடன் பார்த்த ரதிதேவியோ, "கல்யாணி பண்ணுனதுக்கு மன்னிச்சுக்கோங்க அண்ணி, அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா... இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று சொல்ல, அதுவரை அமைதியாக இருந்த வேதவல்லிக்கு மருமகளிடம் தனது மகள் மன்னிப்பு கேட்பது பிடிக்கவில்லை...

"அவ கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்கிற ரதி" என்று சத்தமாகவே கேட்டார்...

குருமூர்த்தியோ ஒரு பெருமூச்சுடன் சாப்பிட ஆரம்பிக்க, வசந்தியோ, "காஃபி சாப்பிடுறியா ரதி?" என்று வேதவல்லியை பொறுப்படுத்தாமல் கேட்க, ரதிதேவியும், "வேணாம் அண்ணி, இத பேச தான் வந்தேன்... அப்போ நான் கிளம்புறேன்... கல்யாணிக்கு வரன் அமைஞ்சதும் சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவர் வேதவல்லியை திரும்பியும் பார்க்கவில்லை, அவர் கேட்ட கேள்விக்கு பதிலும் சொல்லவில்லை...

இவர்களின் நிராகரிப்பு வேதவல்லிக்கு ஆத்திரத்தை கொடுக்க, "ரதி உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்... கல்யாணிக்கு வேற வரன் பார்க்க போறியா? என் கிட்ட சொல்லணும்னு தோணிச்சா? அவங்க கிட்ட மட்டும் சொல்ற... கல்யாணிக்கு நல்லது நினைக்கிறது இந்த வீட்ல நான் மட்டும் தானே... " என்று முடிக்கவில்லை ரதிதேவிக்கு பொறுமை போய் விட்டது...

"நிறுத்துங்க" என்று ஆத்திரத்தில் அவர் வேதவல்லியை பார்த்து கத்திய கத்தில் வேதவல்லி வாயடைத்துப் போய் விட்டார்...

"நல்லதா? எது நல்லது? கல்யாணம் பண்ணுனவனுக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி கொடுக்க நினைக்கிறது தான் நீங்க நினச்ச நல்லதா? அவ சின்ன பொண்ணு... அவ கிட்ட விஷத்தை ஊட்டி இருக்கீங்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?" என்று எகிறினார்...

வேதவல்லியோ அதிர்ந்து விழிக்க, குருமூர்த்தியோ, "ரதி" என்றார் அழுத்தமாக...

"இல்லண்ணா நான் பேசணும்" என்று சொன்ன ரதிதேவியோ, "அவ உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனா? சின்ன வயசில இருந்தே வம்சி தான் மாப்பிள்ளைன்னு ஆசை காட்டி அவ மனச கெடுத்தீங்க... வம்சிக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இத பண்ணுனீங்க... நான் கூட உங்க வார்த்தையை நம்பிட்டேன்... அவளுக்கு ஏமாற்றம் வந்தப்போ அவளை மீண்டு வர வச்சு வேற கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு நாங்க நினச்சு இருக்க, அவ சும்மா இருந்தாலும் இங்க அழைச்சு அவ மனசுல நஞ்சை விதைச்சு இருக்கீங்க... நீங்க மட்டும் இப்படி பண்ணலன்னா ரெண்டு நாள் அவ அழுதுட்டு அப்புறம் மாறி இருப்பா... நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா அவளை இந்த பக்கம் அனுப்பி இருக்கவே மாட்டேன்... மனசு கஷ்டப்பட்ட பொண்ணாச்சேன்னு நாங்க விட்டு பிடிக்க யோசிச்சா, அவ மனசை நீங்க இப்படி கலைச்சு வச்சு இருக்கீங்க... அன்னைக்கு அண்ணி அறைஞ்ச ஒரே அறைல அவ மாறிட்டா... அப்படி பட்டவ கண்டிப்பா வம்சி தான் வேணாம்னு உறுதியா இருந்து இருக்க மாட்டா, ஆனா நீங்க எவ்ளோ அசிங்கமா அவளை நடக்க வச்சு இருக்கீங்க... ஒரு அம்மாவா எனக்கு பதறுது... அது மட்டும் இல்லாம, தேன்மொழி வாய் பேசாத பொண்ணு, அவ உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனா? கொஞ்சம் கூட உங்களுக்கு இரக்கமோ குற்ற உணர்வோ இல்லையா? உங்க பொண்ணுன்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு... உங்கள அம்மான்னு கூப்பிட அருவருப்பா இருக்கு..." என்று சொல்ல வசந்தியோ, "ரதி" என்று பதறி விட்டார்...

"இல்ல அண்ணி நான் பேசி தான் ஆகணும், என்னை விடுங்க" என்று சொன்ன ரதி தேவியோ இப்போது வேதவல்லியைப் பார்த்து, "உங்க கூட பேசக் கூடாதுன்னு என் புருஷன் சொல்லி இருக்கார்... இப்படியே கண்டுக்காம போக தான் யோசிச்சேன்... ஆனா நீங்க பண்ணுனதை கேக்கணும்னு என் மனசு உறுத்திட்டே இருந்திச்சு... அடுத்தவங்க உங்க கிட்ட இவ்ளோ பேச மாட்டாங்க... அவங்கள நீங்க பேசவும் விட போறது இல்லை... அதான் மனசுல இருக்கிறதெல்லாம் இறக்கி வச்சுட்டேன்... என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு எங்களுக்கு தெரியும்... நீங்க நடுவுல வராதீங்க... இனி என் குடும்பத்துல யார் கூடவும் பேசக் கூடாது... என் பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க வரவும் கூடாது... உங்கள போல மனசுல அழுக்கை வச்சுட்டு இருக்கிறவங்களோட ஆசீர்வாதம் அவளுக்கு வேணாம்" என்று சொன்னவரோ விறு விறுவென வெளியேற, வேதவல்லி அதிர்ந்து போய் விட்டார்...

இன்னும் மகள் சொன்ன வார்த்தைகளில் இருந்து அவரால் வெளியே வர முடியவில்லை...

ரதிதேவி பேசியதை கிரகிக்க முடியவே இல்லை...

எப்படி எல்லாம் பேசி விட்டார்.

அவர் கண்கள் கலங்கி போக, அவர் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது...

வசந்திக்கே அவரை பார்க்க சற்று பாவமாகி விட்டது...

அவர் அருகே சென்று ஆறுதலாக பேச யோசித்தாலும் அவர் ஏற்றுக் கொள்வாரா? என்கின்ற தயக்கத்தில் தள்ளியே நின்றார்...

குருமூர்த்திக்கு ரதிதேவி பேசியது அதிகப்படியாக தோன்றினாலும் நியாயமாக தோன்றியது...

சாப்பிட்டு விட்டு கையை கழுவியவர் எழுந்து கொள்ள, இப்போது வேதவல்லிக்கு ரதிதேவி பேசிய கோபம் எல்லாம் வசந்தி மேல் திரும்பியது...

கண்களை துடைத்துக் கொண்டே, "இப்போ உனக்கு குளு குளுன்னு இருக்குமே... என்னையும் என் பொண்ணோட குடும்பத்தையும் பிரிச்சுட்ட தானே" என்று அவர் மேல் அபாண்டமாக பழி போட, அவரை திரும்பி அழுத்தமாக பார்த்த குருமூர்த்தியோ, "அம்மா பிரிக்கிற வேலை பார்க்கிறது நீங்க தான்... அவ இல்லை... இனி அவளை திட்டுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்" என்று சொல்லி விட்டு வெளியேற, வேதவல்லிக்கோ பற்களை பிடுங்கிய பாம்பின் நிலை தான்...

மகன் ஒரு வார்த்தை சொன்னதுமே சற்று அதிர்ந்து விட்டார்...

மகள் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்...

மகன் பட்டும் படாமல் ஒதுக்கி வைத்து இருக்கின்றார்...

இதனையே அவரால் இன்னும் ஜீரணிக்க முடியவே இல்லை... இப்போது குருமூர்த்தியை மீறி பேசவும் பயமாக இருந்தது...

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டே எழுந்தவர் தனது அறைக்குள் புகுந்து விட, அவரை பெருமூச்சுடன் பார்த்த வசந்தியோ, தனது வேலைகளை செய்ய சென்று விட்டார்...

இப்படியே அந்த நாள் நகர, அன்று மதியம் ஸ்கூல் விட்டு வந்த தேன்மொழியோ, குளித்து விட்டு வம்சி கிருஷ்ணாவை தேடினாள்...

அவனோ ஸ்டூடியோவினுள் இருந்தான்...

அவன் பாடுவது வெளியே இருக்கும் போதே கேட்டது...

கதவை தட்டி விட்டு அவன் வர சொன்னது அவளுக்கு நினைவு வந்தது...

கதவை தட்டினாள்...

அவனோ பாடுவதை நிறுத்தி விட்டு, "யாரு?" என்று கேட்டான்...

வளையல்களால் கதவுக்கு அந்த பக்கம் நின்று சத்தம் போட்டாள்.

"கண்ணம்மா வந்துட்டியா" என்றான்...

அவளோ மென் புன்னகையுடன் கதவை திறக்க, அவளை கண்களால் அழைத்தான்...

அவளும் கதவை தாளிட்டு விட்டு உள்ளே வந்தவளிடம், "உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்" என்றான்...

அவளும் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, அவனோ, "நம்ம இன்னும் கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிக்கல, ஒரு ஃபங்க்ஷன் ஆஹ் வச்சு பண்ணிக்கலாம்னு அம்மா மார்னிங் சொன்னாங்க" என்றான்...

அவள் முகம் சட்டென இறுகி விட்டது...

அவன் முகமாற்றத்தை பார்த்தவன், "என்னாச்சு?" என்று கேட்டான்...

"எனக்கு கண்டிப்பா ஃபங்க்ஷன் எல்லாம் அசௌகரிகமா இருக்கும்... பரிதாப பார்வையும் கேலிப் பார்வையும் என்னால தாங்கிக்க முடியாது... என்னோட உறுதியையே குலைச்சிடும்" என்றாள் சைகை மொழியில்...

அவளை அழுந்த பார்த்தவன், "வாழ்க்கை முழுக்க இப்படி சமூகத்து கிட்ட இருந்து ஒளிஞ்சுக்க போறியா? இது என்னோட கண்ணம்மா இல்லையே" என்று கேட்க, அவளோ, "கண்டிப்பா மாட்டேன்... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, என்னை சுற்றி இருக்கிற அந்த இறுக்கத்தை உடைச்சிட்டு வெளிய வந்திடுவேன்..." என்று சைகை மொழியில் சொல்ல, "கண்டிப்பா வெளிய வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... ம்ம் உன் ஆசைப்படி ரெஜிஸ்டரை வீட்லயே அடுத்த வாரம் சிம்பிள் ஆஹ் பண்ணிடலாம்" என்றான்...

அவளோ சந்தோஷமாக இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்...

பாடுவதற்கு உரிய மைக், வாலியூம் கன்ட்ரோல், காரோக்கி செட் என பல உபகரணங்கள் ஒரு பக்கம் இருக்க, மற்றைய பக்கம், கிட்டார், பியானோ, வயலின், மிருதங்கம், ட்ரம்ப், புல்லாங்குழல் என்று சில வாத்திய கருவிகள் இருந்தன...

அனைத்தையும் பிரமிப்பாக பார்த்துக் கொண்டே அவற்றை வருடியவளோ, பியானோவுக்கு முன்னே அமர்ந்து இருந்தவனை திரும்பிப் பார்த்து, "எல்லாமே வாசிப்பீங்களா?" என்று சைகையில் கேட்டாள்.

"ம்ம் ஓரளவு நான் வாசிப்பேன்... கெளதம் சூப்பரா வாசிப்பான்" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்தபடி அவன் அருகே வந்தவள், பியானோவுக்கு முன்னே இருந்த ஸ்டூலில்அமர்ந்து இருந்தவனை பார்த்து விட்டு, கையை நீட்டி பியானோவின் கீ போர்டை மெதுவாக விரல்களால் அழுத்தினாள்... அவனோ, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே எழுந்தவன், "உட்காரு" என்றான்...

அவளோ, "எனக்கு வாசிக்க தெரியாது" என்றாள் சைகையில்...

"மியூசிக் தெரியும் தானே... அது போதும்" என்று சொல்லிக் கொண்டே, அவள் கரம் பற்றி அமர வைத்தான்...

அவளும் மென் புன்னகையுடன் விரல்களை பியானோவில் மெதுவாக அழுத்த, அவள் பின்னே நின்றவன், அவள் விரல்களின் மேல் விரல்களை வைத்து, அவள் செவி மடலில் இதழ்கள் உரச,

"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, நம்மை சேர்த்த இரவுக்கொரு நன்றி"

எனப் பாடிக் கொண்டே, அதற்கு ஏற்ப பியானோவை வாசிக்க, அவள் பியானோ கற்றுக் கொள்ளும் நிலமையிலா இருந்தாள்?

சற்று குனிந்தபடி உடலை வளைத்து நின்ற வம்சி கிருஷ்ணாவின் மார்பில் அப்படியே கண்களை மூடி சாய்ந்து விட்டாள்.

அவன் இசையையும் நெருக்கத்தையும் ரசித்தவளது இதழ்களிலோ மென் புன்னகை...

வம்சி கிருஷ்ணாவோ பாடுவதையும் பியானோ வாசிப்பதையும் நிறுத்தி விட்டு, அவளையே பார்த்துக் கொண்டே, அவள் காதினுள், "கண்ணம்மா" என்றான்...

சட்டென கண்களை விழித்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள்.

"கத்துக்கிற எண்ணம் இல்ல போல" என்றான் அவன்...

தேன்மொழியோ ஸ்டூலில் இருந்தபடியே அவனை நோக்கி மொத்தமாக தன்னுடலை திருப்பியவள், "உங்களுக்கும் கத்து கொடுக்கிற எண்ணமே இல்ல போல" என்றாள் சைகையில்...

அவனோ மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, "இந்த பாட்டு கேட்டு இருக்கிறியா?" என்று கேட்க, அவளோ ஆம் என்று தலையாட்டினாள்...

"இதுல ப்ளே பண்ணுற பியானோவோட மியூசிக் செமயா இருக்கும்... அப்படியே நம்மள மயக்கிடும்... செம்ம ரொமான்டிக் ஆஹ் இருக்கும்... ரொம்ப ஆசைப்பட்டு இத கத்துக்கிட்டேன்..." என்று சொல்லிக் கொண்டே, நின்றபடியே அவளது இரு பக்கமும் கையை அசைத்து அந்த இசையை விரல்களால் மீட்டினான்...

அவன் மீட்டிய இசையில் மயங்கினாளா? இல்லை அவனிலையே மயங்கி விட்டாளா? என்று தெரியவில்லை...

ஆனால் மொத்தமாக மயங்கி, அவனையே இமைக்காமல் பார்த்து இருந்தவளது இரு கரங்களும் அவன் ஷேர்ட்டை பற்றிக் கொள்ள, கண்களை மெதுவாக மூடியவள், அப்படியே அமர்ந்தபடி அவனை நோக்கி உடலை மட்டும் உயர்த்திக் கொண்டே எம்பினாள்...

அவன் விழிகளும் இப்போது மெதுவாக மூடிக் கொள்ள, வாசித்துக் கொண்டு இருந்தவனது கரங்களானது ஒரு கணம் நின்று மீண்டும் வாசிக்க ஆரம்பித்து விட்டன...

கண்களை மூடினாலும் அவன் விரல்களின் இசையும் தப்பவில்லை, அவன் இதழ்களின் இசையும் தப்பவில்லை...

"நான் என்ற சொல்

இனி வேண்டாம் நீ என்பதே

இனி நான் தான் இனிமேலும்

வரம் கேட்க தேவையில்லை

இதுபோல் வேறெங்கும்

சொர்க்கமில்லை உயிரே வா"


என்ற வரிகளுக்கான இசையை அவன் விரல்கள் வாசித்து மேலும் தொடந்தன... பாடுவதற்கு தான் அவன் கண்ணம்மா அந்த சந்தர்ப்பத்தில் அவன் இதழ்களுக்கு ஓய்வு வழங்கவில்லையே... ஆனாலும் இசைக்கேற்ப அவன் இதழ்கள் அசைந்து கொண்டு தான் இருந்தன... அவன் குரல் அவளுக்குள் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது...
Super sis 💞
 
Top