அத்தியாயம் 14
அன்று மதியம் வீட்டில் நின்ற வம்சி கிருஷ்ணாவே தேன்மொழியை சாப்பிட அழைத்து சென்றான்... யாதவ் கிருஷ்ணாவும் கூட சென்றான்...மூவரையும் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து இருந்தபடியே அழுத்தமாக பார்த்துக் கொண்டே இருந்தார் வேதவல்லி...
தேன்மொழிக்கோ அவரை பார்க்க பயம்...
குனிந்த தலை நிமிராமலே அவரை தாண்டி சென்றாள்.
மூவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்த சமயம், அங்கே வந்து அமர்ந்த கெளதம் கிருஷ்ணாவோ, "நிறைய நாளைக்கு அப்புறம் சேர்ந்து சாப்பிடுறோம்ல" என்றான்...
தேன்மொழிக்கோ அமர்ந்து இருக்கவே சங்கடமாக இருந்தது...
ஆனால் வம்சி கிருஷ்ணா, "உட்காரு தேன்மொழி" என்று அவளை வலுக்கட்டாயமாக அமர வைத்தான்...
அவர்கள் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு சமயலறைக்குள் சென்ற வசந்தியோ, "பாக்கியா எல்லா சாப்பாட்டையும் கொண்டு மேசைல வை" என்று சொன்னார்...
பாக்கியாவும் அனைத்து உணவுகளையும் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு செல்ல, வசந்தி அங்கே வந்தார்...
சட்டென தேன்மொழி பதறி எழுந்து கொள்ள, "இப்போ எதுக்கு பதறி பதறி எந்திரிக்கிற?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா... என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அப்படியே கையை பிசைந்து கொண்டு இருக்க, வசந்தி அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, யாதவ் கிருஷ்ணாவுக்கு மட்டும் உணவை தட்டில் எடுத்து வைத்தவர், அங்கே நிற்காமல் விறு விறுவென அறைக்குள் நுழைந்து விட்டார்...
வழக்கமாக கணவனும் மகன்மாரும் சாப்பிட வந்தாலே, அருகே நின்று பரிமாறுபவர் அவர்...
அதில் ஒரு சந்தோஷம் அவருக்கு... ஆனால் இன்று அவருக்கு யாரையும் பார்க்க பிடிக்கவே இல்லை...
ஏமாற்றம்...
அதுவும் தேன்மொழி மீது வைத்த நம்பிக்கையும் மரியாதையும் மொத்தமாக பொய்த்து போன உணர்வு...
அவர் முகத்தை திருப்பிக் கொண்டே செல்வதை தேன்மொழி ஏக்கமாக பார்க்க, "உட்காருங்க தேன்மொழி" என்று சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ ஒரு கணம் நிறுத்தி, "இனி அண்ணின்னு கூப்பிடணும்ல, உட்காருங்க அண்ணி" என்றான்...
அவளோ தன்னை சுற்றி அமர்ந்து இருந்த மூவரையும் சங்கடமாக பார்க்க, அவளை ஆழ்ந்து பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "இப்போ உட்கார போறியா? இல்லையா?" என்று சற்று அதட்டலாகவே கேட்டான்.
அவள் மௌனமாக அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவன் உணவை தனக்கு எடுத்து வைத்துக் கொண்டே, அவளை பார்த்தவன், "எடுத்து வச்சு சாப்பிடு" என்றான்...
அவளும் மௌனமாக உணவை எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினாள்...
உணவு அவள் தொண்டைக்குழிக்குள் இறங்கவே இல்லை...
சிக்கிக் கொண்டது...
என்ன தான் அவளுக்கு பிடித்தவனை அவள் திருமணம் செய்தாலும், வீட்டில் இருப்பவர்களின் பாராமுகத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...
அவ்விடத்தில் இருந்து சாப்பிடாமல் எழவும் முடியாது... கஷ்டப்பட்டு சாப்பிட்டாள்.
அனைத்தையும் வேதவல்லியின் கண்கள் வன்மத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க, சாப்பிட்டு விட்டு கையை கழுவியவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்...
இதுவரை தேன்மொழி வேதவல்லியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை...
அவளுக்கு பயமாக இருந்தது...
தலையை குனிந்தபடியே அவரை தாண்டி சென்றாள்.
ஆனால் வம்சி கிருஷ்ணா இப்போது அவரை பார்த்தான்...
அவர் முடி வெட்டப்பட்டு இருப்பதை யோசனையுடன் பார்த்தவன், "முடிக்கு என்னாச்சு?" என்று கேட்டான்...
அவன் குரல் கேட்டு தான் சட்டென தேன்மொழி திரும்பி அவரை பார்த்தாள்.
அவரோ தேன்மொழியை பார்த்துக் கொண்டே, "வேண்டுதல்" என்று பல்லை கடித்துக் கொண்டே சொல்ல, அவர் பார்வையே அவளுக்கு உதறலைக் கொடுத்தது...
சட்டென்று தலையை குனிந்து கொண்டே மாடியேறியவளுக்கு அவர் முடி வெட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சி தான்...
வம்சி கிருஷ்ணாவோ, "என்னவோ சரி இல்ல" என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்...
அவன் அதற்கு பின்னர் ஸ்டூடியோவினுள் நுழைந்து கொள்ள, தேன்மொழி யாதவ் கிருஷ்ணாவுடன் நேரம் செலவிட ஆரம்பித்து விட்டாள்.
நேரமும் நகர ஆரம்பிக்க, வசந்திக்கு மனம் கேட்கவில்லை... ரதிதேவிக்கு அலைபேசியில் அழைத்து கல்யாணியை பற்றி விசாரித்து இருந்தார்...
சாப்பிடாமல் அழுது கொண்டே இருப்பதாக தான் ரதிதேவி கூறினார்...
"இப்போவும் அழுதுட்டு இருக்காளான்னு தெரியலையே" என்று நினைத்துக் கொண்டே, அவள் வீட்டுக்கு சென்றார்...
கணேஷன் நேரத்துக்கே வந்து இருந்தார்...
வீட்டுக்குள் நுழைந்த வசந்தியை பார்த்தவர், "உன் மகன் நல்லா பண்ணிட்டான்" என்று சொல்ல, அவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
"மன்னிச்சிடுங்க அண்ணா" என்றார் அவர்...
"நீ மன்னிப்பு கேட்டு என்னம்மா பண்ணுறது? அவள எப்படி தான் இதுல இருந்து மீட்டெடுக்க போறேன்னு தெரியல" என்று பெருமூச்சுடன் சொன்னவர், "ரூமுக்குள்ள தான் இருக்கா, போய் பாரு" என்று சொன்னார்...
வசந்தியும் கல்யாணியின் அறையை திறந்து கொண்டே உள்ளே நுழைந்தார்...
கல்யாணி கட்டிலில் படுத்து அழுது கொண்டு இருக்க, அவள் அருகே ரதிதேவியும் மிருதுளாவும் அமர்ந்து இருந்தார்கள்...
அவர்கள் எவ்வளவு சொல்லியும் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவே இல்லை...
வசந்தியை கண்ட ரதிதேவியோ, "வாங்க அண்ணி" என்று சொல்ல, வசந்தியும் கட்டிலில் அமர்ந்து படுத்து அழுது கொண்டே இருந்த கல்யாணியின் தோளில் கையை வைத்தார்...
தோள்களை உலுக்கி அவர் கையை உதறிக் கொண்டே எழுந்து அமர்ந்தவள், "நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஆறாது அத்தை... எனக்கு வம்சி மாமா தான் வேணும்" என்றாள்.
உடனே வசந்தி, "கல்யாணம் தான் முடிஞ்சு போச்சே, இனி என்ன பண்ணுறதும்மா? உனக்குன்னு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்" என்றார்.
"கல்யாணம் முடிஞ்சிட்டா உடனே நான் விட்டு கொடுக்கணுமா? அதுக்கு வாய்ப்பே இல்லை... அந்த ஊமைச்சியை துரத்திட்டு நான் உங்க வீட்டுக்கு மூத்த மருமகளா வருவேன்... வேணும்னா இருந்து பாருங்க" என்று சொல்ல, வசந்திக்கு தூக்கி வாரிப் போட்டது...
என்ன தான் மகன் மீது கோபம் இருந்தாலும் மகன் வாழ்க்கையை அழிப்பதாக அவள் கூறும் போது அவரால் ரசிக்க முடியுமா என்ன?
இந்த நேரத்தில் என்ன பேசினாலும் அவளுக்கு புரியாது என்று வசந்திக்கு தெரியும்...
"முதல் சாப்பிடும்மா, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்ல, "எனக்கு வேணாம்" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் கட்டிலில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.
வசந்தியோ ரதிதேவியை பார்க்க, "நாளைக்கு சரி ஆயிடுவான்னு நம்புறேன் அண்ணி" என்றார் அவர்...
"தனியா விட்டு போய்டாதீங்க" என்று வசந்தி சொல்ல, "நான் ஒன்னும் தற்கொலை பண்ணிக்க மாட்டேன்... அந்த ஊமைச்சியை தான் போட்டு தள்ளுவேன்" என்று விம்மியபடி சொன்னாள்.
அவளை எப்படி சமாளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை...
வசந்தியும் சற்று நேரம் அவளுக்கு ஆறுதலாக பேசி விட்டு கிளம்பி விட்டார்...
அடுத்து வீட்டுக்கு வந்த குருமூர்த்தியோ நேரே வந்து அமர்ந்தது என்னவோ வேதவல்லி அருகே தான்...
"கல்யாணி முடியை வெட்ட வந்த நேரம், நீங்க ஏன் ரதி கிட்ட தடுக்க வேணாம்னு சொன்னீங்க?" என்று கேட்டார்...
அனைத்தும் ரதிதேவி மூலம் அவருக்கு தெரிந்து இருந்தது...
இப்போது இருக்கும் நிலையில் இதற்காக கல்யாணியை கடியவும் முடியாது...
அவரை திரும்பி பார்த்த வேதவல்லியோ, "நான் எதுக்குடா தடுக்கணும்... உன் பையன் வேற பொண்ணு கழுத்துல தாலி கட்டுனா முடியை வெட்டி எறியுறேன்னு சொன்னேன்... அதனால தான் நான் முடியை வெட்ட சம்மதிச்சேன்" என்றார்.
அவர் குரலில் இருக்கும் வன்மம் அவருக்கு புரியாமல் இல்லை...
போக போக சரியாகி விடும் என்று நம்பினார்...
உடனே அனைத்துக்கும் தீர்வை எதிர்பார்க்க முடியாது அல்லவா? காலம் தான் தீர்வு சொல்லும்...
வசந்தியோ ஓரமாக நின்று இருவரையும் பார்த்துக் கொண்டு இருக்க, "வம்சியை கூப்பிடு வசந்தி, நான் அவன் கூட பேசணும், கார்டன்னுக்கு வர சொல்லிடு" என்று சொல்லி விட்டு அவர் அறைக்குள் சென்று விட்டார்...
வசந்தியும் மாடி ஏறி வம்சி கிருஷ்ணாவின் அறையை தட்டினார்...
தேன்மொழி தான் திறந்தாள்.
"வம்சி எங்க?" என்றார். அவளோ ஸ்டூடியோ இருக்கும் திசையில் பார்வையை திருப்பினாள்...
அவருக்கு புரிந்து விட்டது...
ஸ்டூடியோ அறையை நோக்கி நடந்தவர் கதவை தட்டினார்...
அவன் அனுமதி இன்றி யாரும் உள்ளே செல்ல கூடாது...
அதனால் கதவை தட்டினார்...
கதவை திறந்தவனோ, அவரை புருவம் சுருக்கி பார்க்க, "அப்பா உன் கூட பேசணுமாம், கீழ வா" என்று சொல்லி விட்டு அவர் விறு விறுவென செல்ல, அவனும் தனது ஷேர்ட்டின் கையை உயர்த்தி விட்டபடி அவரை பின் தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டான்...
வசந்தியோ அவனை திரும்பி பார்த்தவர், "கார்டன்ல அப்பா நிக்குறார்" என்றார்... அவனும் அவரை தேடி சென்றான்.
வேதவல்லி முன்னே எதுவும் பேச முடியாது என்று தான் அவனை குருமூர்த்தி தனியாக அழைத்ததே...
பூங்காவில் நின்று பறவைகளை பார்த்துக் கொண்டே நின்று இருந்தார் குருமூர்த்தி...
அவர் அருகே வந்து பாக்கெட்டில் கையை விட்டபடி வந்து நின்ற வம்சி கிருஷ்ணாவை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவரோ, "மீடியாவுக்கு எப்படி நியூஸ் போச்சு?" என்று கேட்டார்...
"நான் தான் கொடுத்தேன்" என்றான்... அவரை பார்க்கவில்லை, பறவைகளை பார்த்துக் கொண்டே பதில் சொன்னான்...
"சினி ஃபீல்ட்ல இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் மற்றும் சொந்தக்காரங்க எல்லாரும் கால் பண்ணி விசாரிச்சாங்க" என்றார் குருமூர்த்தி...
இப்போது அவரை திரும்பி பார்த்தவனோ, "லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்லுங்க, இது என் வாழ்க்கை... அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு அவசியம் இல்லயே" என்றான்...
"ஆனா எனக்கு அவசியம் இருக்கு... இதுல என் ஸ்டேட்டஸும் இருக்கு... இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது தான்... ஆனா உன் மேல இருக்கிற வருத்தத்தை நான் சொல்லி தான் ஆகணும்... கல்யாணம் பண்ணிட்டியா? சந்தோஷமா இருன்னு சிரிச்சிட்டே கடந்து போற மனசு எனக்கு இல்லை... அதே நேரம், அந்த பொண்ண விட்டுட்டு வான்னு சொல்ற மோசமான மனசும் இல்லை" என்றார்...
அவனோ பெருமூச்சுடன் அவர் விழிகளை பார்த்தவன், "எனக்கு தெரியும்" என்றான்...
"உன் மேல எனக்கு என்ன ஆதங்கம் தெரியுமா?" என்று கேட்க, அவன், "சொல்லுங்க" என்றான் தலையை அசைத்து...
"லவ் பண்ணுனா, அத சொல்லி இருக்கலாம்... கல்யாணம் நிச்சயமான பொண்ண திடீர்னு கல்யாணம் பண்ணி அவங்க பக்கமும் நம்ம பக்கமும் அவமானம் தான் மிச்சம்" என்றார்...
அவனோ, "சொல்றது எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை, சொல்லி இருந்தா கல்யாணம் பண்ண நீங்க தான் விட்டு இருப்பீங்களா? இல்ல பாட்டி தான் விட்டு இருப்பாங்களா? ஸ்டேட்டஸ் இல்லை, அந்த பொண்ணுக்கு குறை இருக்கு, அது இதுன்னு ஆயிரம் காரணம் சொல்லி பிரிக்க தான் பார்ப்பீங்க, அது தான் சொல்லல" என்றான் அழுத்தமாக...
"சரி விடு வம்சி, உனக்கு உன்னோட நியாயம், எனக்கு என்னோட நியாயம்... ஏதோ நல்லா இருந்தா சரி தான்" என்று சொல்லிக் கொண்டே, அவர் நகர்ந்து விட, அவனோ, அவர் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு மீண்டும் பறவைகளை பார்க்க தொடங்கி விட்டான்...
அன்று இரவு தேன்மொழியை கட்டிலில் படுக்க சொல்லி விட்டு அவன் சோஃபாவில் படுத்துக் கொண்டான்...
அவளுக்கோ அவன் சோஃபாவில் கஷ்டப்பட்டு படுப்பது போல தோன்றியது...
கட்டிலில் அமர்ந்து கொண்டே வளையல்களால் சத்தம் போட்டாள்.
சோஃபாவில் கண்களை மூடி படுத்தவனோ இப்போது கண்களை திறந்து பார்த்தான்.
கையால் கட்டிலை காட்டினாள்.