ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 2

pommu

Administrator
Staff member

வேல்விழி 2

இப்படி பல சம்பிரதாயங்களை தாண்டி அவர்கள் இருவரும் ஏறிய வண்டி அவர்களது ஹனிமூன் சூட்டுக்கு புறப்பட, அவளுக்கோ பயத்தில் வியர்க்க தொடங்கியது. அத்தனை பேர் முன்னிலையில் முத்தமிட்டவன், தனியாக விட்டு வைப்பானா என்கின்ற தடுமாற்றம் அவளுக்கு இருக்க,

அவனோ போன் பேசிக் கொண்டே வந்தவன் அவளை திரும்பிக் கூட பார்க்கவே இல்லை. அவர்களது ஹனிமூன் சூட்டை அடைந்ததும் அவன் இன்ஸ்டாவில் லைவ் வேறு போட்டான். அவளுக்கோ, "விட்டா எல்லாத்தையுமே போடுவான் போல இருக்கு" என்று நினைத்தபடி வரும் போது அவள் அண்ணா விஷ்வா திரும்ப கொடுத்த போனை எடுத்து சமூக வலைத்தளத்தை திறந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அது முழுக்க இருவரும் முத்தமிட்ட படமே வெளியாகியிருக்க, அதனை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டே இருக்க, போனை அணைத்து வைத்தவளோ அவனுடன் கூடவே அவர்கள் அறையை நோக்கி நடந்தாள். அவர்கள் அறையினை அடைந்ததுமே உள்ளே சென்று கதவை தாள் போட்டவனோ, "உன் கூட பேசணும்" என்றான். அவளோ அவனை ஏறிட்டுப் பார்க்க, "இங்க பாரு, உன் அப்பா படத்துல நடிக்கணும்னு தான் இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டேன், கிஸ் பண்ணுனதை வச்சு உன் கூட குடும்பம் நடத்துவேன்னு மட்டும் நினைக்காதே,

உன் பக்கத்துலயே வர மாட்டேன் புரியுதா? எனக்கு உன்னை பார்த்தாலே ஏனோ பிடிக்கல... அதுக்கு உன்னோட அப்பா கூட காரணமா இருக்கலாம், கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு ஜாலியா இருக்க நினைச்ச என் தலையில உன்னை கட்டி வச்சு டாச்சர் பண்ணுறார், இல்லன்னா என் கேரியரை காலி பண்ணிடுவாரம்னு மிரட்டல் வேற… இப்படி என்னை படுத்தி எடுத்த உன் அப்பாவுக்கு திரும்ப கொடுக்க வேணாமா? உன் அப்பா வில்லன்னா நான் வில்லாதி வில்லன்" என்று சொல்ல, அவளுக்கோ இப்போது தான் நெஞ்சில் பால் வார்த்தை உணர்வு.

ஆனால் நிதர்சனமோ பெண்கள் என்றாலே அவனுக்கு அருவருப்பு தான். போதாதற்கு இன்று முத்தமிட்டது வேறு குதிரை ஓடும் உணர்வை கொடுத்து இருக்க, அவனுக்கும் எங்ஙனம் அவளுடன் நெருங்கி பழக ஆசை வரும்? நந்திதாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும், இரண்டு பேருக்குமே பிடிக்காமல் இந்த கல்யாணம் அவசியமா என்கின்ற கேள்வி மனதில் இருக்கத் தான் செய்தது. இவ்வளவு நேரமும் இருந்த பயம் மறைய, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "உங்க இஷ்டம்" என்றாள் மென்மையாக.

அவனோ, "நிஜமாவே பூபாலசிங்கம் மக தானா நீ? என் இஷ்டம்னு சாதாரணமா சொல்ற?" என்று அதிர்ச்சியாக கேட்டாலும் அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை என்று நிம்மதியாக தான் இருந்தது. அவளோ அவனது கேள்விக்கும் மௌனமாக நின்று இருக்க, அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு சென்று அங்கே அலங்கரிக்கப்பட்டு இருந்த கட்டிலில் படுத்தவன், "அங்க இருக்கிற சோபாவில படுத்துக்கோ" என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டான்.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவளுக்கு இதழ்கள் மெலிதாக இப்போது தான் விரிந்து கொண்டன. அவள் மனமோ அவளையும் மீறி ராமை பற்றி நினைக்க ஆரம்பித்த போதெல்லாம் கட்டிய தாலிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று அந்த நினைவுகளை வலுக்கட்டாயமாக ஒதுக்க ஆரம்பித்து இருந்தாள். அனைத்தையும் இரு வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்தவளோ குழந்தையின் கரத்தை மெதுவாக வருடிக் கொண்டாள்.

அன்றில் இருந்து இன்று வரை எத்தனை மாற்றங்கள். இப்போது அவள் கரத்தில் அவளது கருவில் உருவான குழந்தை தவழ்ந்து கொண்டு இருந்தது… குழந்தையினை உச்சி முகர்ந்து விட்டு கட்டிலில் இருந்து எழுந்தவளது போன் அலறியது. அதனை எடுத்தபடி அதில் விழுந்த தனது அண்ணியின் எண்ணை யோசனையாகப் பார்த்தவள், "ஹலோ" என்று சொன்னதும் தான் தாமதம்...

மறுமுனையில் இருந்து எண்ணெய் சட்டியில் போட்ட வெங்காயம் போல பொரிய ஆரம்பித்து இருந்தாள் ரேகா. "எங்க பேமிலி எப்படி பட்ட பேமிலி தெரியுமா?" என்று கேட்க, நந்திதாவோ சலிப்பாக, "இவங்களுக்கு என்னாச்சு?? கால் பண்ணி அவங்க பேமிலி பத்தி பேசுறாங்க" என்று நினைத்தபடி, "என்னாச்சு அண்ணி" என்றாள்.

அவளோ மறுமுனையில் இருந்து, "உன் புருஷனுக்கு நீ ட்ரெஸ் வாங்கிக் கொடுக்க மாட்டியா?" என்று கேட்க, அவளோ "அவர் கிட்ட நிறைய ட்ரெஸ் இருக்கு அண்ணி" என்றாள். ரேகாவோ கடுப்பான குரலில், "அப்போ எதுக்குடி இத்துன்னுன்னு துண்டு கட்டி போட்டோ போடுறான், அசிங்கமா இருக்கு" என்று சொல்ல, அவளோ, "எய்ட் பேக்ஸ் எல்லாம் வச்சு இருக்காரே, அவ்ளோ அசிங்கமாவா இருக்கு?" என்று கேட்க, ரேகாவோ, "அடிங் குடும்ப மானமே போகுது, நீயே அந்த கருமத்தை பாரு" என்றாள்.

அவளும், "எனக்கு தெரியல... நான் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு சட்டென போனை வைத்தவள் சமூகவலைத் தளத்துக்குள் நுழைந்தாள். புகைப்படத்தை பார்த்த அவளுக்கே கண்கள் அவிந்து விடும் போல இருக்க, கடுப்பாக போனை தூக்கிப் போட்டவள், "இதுவும் இல்லாம போஸ் கொடுக்க வேண்டியது தானே? நமக்குன்னு வந்து வாய்ச்சு இருக்கு, ச்சை" என்று வாய் விட்டு திட்டினாலும், அவன் முன்னிலையில் அவள் அமைதிப்படை தான்.

அவள் யோசனையுடன் அப்படியே அமர்ந்து இருக்க அவன் வரும் சத்தம் கேட்டது, தனியாக வர மாட்டான். நண்பர்கள் நண்பிகள் புடைசூழ தான் வருவான். உள்ளே வந்தவனோ, "அந்த போட்டோக்கு எனக்கு 3 கோடி கொடுத்தானுங்க, சில்லி கைஸ்" என்று சொல்லிக் கொண்டே வர, அவளோ, "இப்போ வெளிய போகலேன்னா என் பிரெண்ட்ஸுக்கு மதிப்பில்லையான்னு கேக்கும் இந்த ஜந்து" என்று திட்டியபடி வெளியே வந்தவள் அங்கே பேசியபடி அமர்ந்த பெண்கள் அருகே, "ஹாய்" என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தாள்.

அவனது நெருங்கிய நண்பியான சுருதியோ, "ஹேய்… இன்னைக்கு உன் ஹபியோட போட்டோ பார்த்தியா? சோ ஹாட்… என் கிட்ட இன்னும் நிறைய போட்டோ இருக்கு" என்று சொல்லிக் கொண்டே போனில் இருந்த போட்டோவை தூக்கி காட்ட, வேண்டா வெறுப்பாக அதனை பார்த்தவளோ அருவருப்பான உணர்வுகளை காட்டாமல் இருக்க படாத பாடு பட்டு போக, அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு நண்பர்களிடம் பேச ஆரம்பித்து விட்டான் அவளவன்.

அப்போது அவன் நண்பன் ஸ்ரீயோ அவளிடம், "போட்டோஸ் எப்படி இருக்கு? இதுக்கு மேலயும் உங்களுக்கு மட்டும் தானே தெரியும் மேடம்" என்று சொல்ல, அனைவரும் சிரிக்க, அவனும் சிரிக்க அவளுக்கு தான் சுர்ரென்று எகிறியது. "ச்சை என்ன பேச்சு பேசுறான், இத கேட்டு பல்லை காட்டுதுங்க பக்கிங்க" என்று நினைத்தவள் "எஸ் எஸ்" என்று சொன்னவள் மனமோ, "நம்மளயும் எப்படி பேச வைக்குதுங்களே" என்று புலம்பிக் கொண்டாள்.

பேசிக் கொண்டு இருக்கும் போதே அவள் போன் அலற" அப்பாடா இதுங்க கிட்ட இருந்து தப்பிச்சோம், வானர கூட்டங்க" என்று நினைத்துக் கொண்டே போனை எடுத்து காதில் வைக்க, "மேடம், நாங்க ****** கார்மண்ட்ஸ் ல இருந்து பேசுறோம்" என்று சொல்ல, அவளோ, "ம்ம் சொல்லுங்க" என்றாள்.

மறுமுனையில் இருந்தவனோ, "எங்க கிட்ட புடவை, ஷர்ட், இன்னார் வெயார் எல்லாம் இருக்கு" என்று சொல்ல, அவளும், "இதெல்லாம் இருந்தா தானே கார்மண்ட்ஸ்" என்று பதில் சொல்ல, அவனோ, "எஸ் மேடம், உங்க ஹஸ்பன்ட் கட்டுன துண்டு விக்கிற கார்மண்ட்ல நல்ல பிசினஸ்னு கேள்விப்பட்டோம்… அப்படியே எங்க இன்னர் வெயாரையும் போட்டு போஸ் கொடுக்க சிபாரிசு பண்ண முடியுமா?" என்று கேட்க,

அவள் இருந்த கோபத்துக்கு இன்னுமே கோபம் வந்து சேர்ந்தது. "லூசாயா நீ? அவர் தான் இப்படி பைத்தியக்கார தனமா நடந்தா நீயும் ஏண்டா உசிரே வாங்குற, அப்படி அரைகுறையா பார்க்கிறதில என்ன ஆசையோ? நீ பையன் தானே?" என்று கேட்கவே போன் கட் ஆகியது. அடுத்த நாள் தலைப்பு செய்தி, "பிரபலத்தின் மனைவி சர்ச்சை கருத்து" என்று இருக்க, அவளோ அவன் முன்னே தலையை குனிந்தபடி நின்று இருந்தவள், 'எடுபட்ட பய... இப்படி தான் சிக்க வைப்பானா? இவன் வாய துறந்தா இங்கிலிஷ் ல கூவமா ஓடுமே' என்று நினைத்துக் கொண்டவள் மெதுவாக அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அவனோ, கையில் இருந்த போனைத் தூக்கி காட்டியவன், "டோன்ட் யூ ஹாவ் சென்ஸ், யார் கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா? பட்டிக்காடு போல பேசி இருக்க, இடியட்" என்று திட்ட ஆரம்பித்து விட, அவளோ, “இவன் திட்டி முடிக்கும் வரைக்கும் வாய திறக்க கூடாது, இல்லன்னா அதுக்கும் சேர்த்து திட்டுவான்” என்று நினைத்தபடி மௌனமாக நின்று இருந்தாள்.

அவனோ, "இவ்ளோ திட்டுறேன், சிலை போல அப்படியே நிக்கிற? இங்க பாரு, இனி எவனாவது கால் பண்ணி என்னை பத்தி பேசுனா என் கிட்ட பேச சொல்லு, பெரிய பருப்பு மாதிரி பதில் சொல்லிட்டு இருக்காதே… அண்டர்ஸ்டாண்ட்" என்று கர்ஜனையாக கேட்க, அவளோ, "ம்ம்" என்று மௌனமாக தலையாட்டினாள். அவனோ, "இன்னைக்கு ஈவினிங் பார்ட்டி இருக்கு, ரெடி ஆகு, அம்மா கிட்ட பேபிய கொடுத்துட்டு கிளம்பணும்" என்றான்.

அவன் பேச்சுக்கும் கட்டளைக்கும் அவள் மறுத்து பேசுவதே இல்லையே… மனதுக்குள் தான் திட்டிக் கொள்வாள். ஆழ்ந்த மூச்செடுத்தபடி, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, "அப்போ நான் ரூம்குள்ள போகவா?" என்று கேட்க, அவனோ "ம்ம்" என்று இறுக்கமாக சொல்லி விட்டு எழுந்து தனது அறைக்குள் நுழைய, அவளும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அறைக்குள் வந்தவளோ, "இந்த பார்ட்டின்னாலே அலர்ஜி தான், ஆறுமாசமா குழந்தையை காட்டி எங்கயும் போகாம இருந்தேன்... இன்னைக்கு ஆரம்பிச்சாச்சு" என்று சலித்துக் கொண்டே குழந்தையின் அருகே படுத்துக் கொண்டவள், கண் விழித்தது என்னவோ ஹாலில் கேட்ட யுவராஜின் தாய் நீலாம்பரியின் குரலில் தான்.

எழுந்து அமர்ந்தவளோ, "அத்தை வந்துட்டாங்க போல" என்று நினைத்துக் கொண்டே வெளியே வர, அவளை ஆழ்ந்து பார்த்த நீலாம்பரி, "பழையபடி ஊர் சுத்த கிளம்பியாச்சா?" என்று கேட்க, அவளோ, "அவர் தான் அத்தை" என்றாள். அவரோ பெருமூச்சுடன், "நான் சொல்லி உன் புருஷன் கேட்பான் பாரு, இன்னமும் அவன் கல்யாணத்துல நடந்து கிட்டத பத்தி சொந்தக்காரங்க பேசிட்டே தான் இருக்காங்க, முத்தம் கொடுக்கிறதுன்னா தனியா கொடுக்கிறது தானே? ச்ச" என்று சலித்துக் கொண்டவருக்கு இருவருடங்கள் தாண்டியும் இன்னமும் அந்த சம்பவம் தாக்கமாக தான் இருந்தது.

மகன் நாயகிகளுடன் நெருக்கமாக நடிப்பது இல்லை என்று பெருமையாக சொல்லிக் கொண்டே இருப்பவருக்கு, மனைவியாக இருந்தாலும் சபையில் நடந்து கொண்டது என்னவோ போல தான் இருந்தது. யுவராஜ் ஒன்றும் பிறவிலேயே பணக்காரன் இல்லை, நடுத்தர வர்க்கத்தை உடையவன் தான். சொந்த முயற்சியில் முன்னேறியவன் என்று தான் சொல்ல வேண்டும்.

அவன் இந்த நாகரிக வாழக்கைக்கு பழகிக் கொண்டாலும் அவன் தாய்க்கு இந்த வாழ்க்கை ஒட்டவே இல்லை. அவன் தாயும், தந்தையும் அதே பிளாட்டில் மேல் தட்டில் தான் இருக்கின்றார்கள். அவன் ஒரு அக்காவோ திருமணம் செய்து கணவன் வீட்டுக்கு போய் விட்டாள். அவன் தந்தை வேதநாயகமோ அவனிடம் பேசுவது மிகவும் குறைவு. ஸ்கூல் ப்ரின்சிபிள் ஆக இருந்தவருக்கோ மகன் இப்படி சினிமாவில் புகுந்தது கொஞ்சமும் பிடித்தம் இல்லை.

ஆனாலும் நீலாம்பரிக்காக சகித்துக் கொண்டே அதே பிளாட்டில் இருக்கின்றார். அவருக்கு அவனை தான் பிடிக்காது, ஆனால் நந்திதாவை மிகவும் பிடிக்கும். ஆர்ப்பாட்டமில்லாத பெண் என்று வாய் நிறைய புகழ்பவர், அவளைக் காணும் போதெல்லாம், "மருமகளே" என்று வாய் நிறைய அழைப்பார்.

இப்படி தான் அவர்கள் நாட்கள் நகர, அன்று பார்ட்டிக்கு செல்லும் பொருட்டு குழந்தையை நீலாம்பரியிடம் கொடுத்து விட்டு, ஆயத்தமாக ஆரம்பித்தாள். உடையை மாற்றி விட்டு வெளியே வந்தவளை, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தபடி அனல் தெறிக்க பார்த்த யுவராஜ், "வாட் தெ ஹெல்??" என்று சீறினான்.

அவளோ புரியாமல் பார்க்க, "கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்லையா??" என்று கேட்டுக் கொண்டே எழ, அவளோ கடைக்கண்ணால் அங்கே இருந்த நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். தழைய தழைய புடவை கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து மங்களகரமாக தான் இருந்தாள்.

ஆனால் அவனுக்கு தான் தனது வீட்டு வேலைக்காரன் கூட தனது இஷ்டபடி தான் உடுத்த வேண்டும் அல்லவா? அவளை விட்டு வைப்பானா என்ன?? அவளை நோக்கி வந்தவன், "நாம என்ன கோவிலுக்கா போக போறோம், நைட் பார்ட்டி… டி ஜெ டான்ஸுன்னு இருக்கிற இடத்துல இப்படி வந்து என்ன பண்ண போற? நாளைக்கு ஹெட் லைன்ஸ்ல கண்ட மேனிக்கு ட்ரெஸ் பண்ணி வந்த பிரபலத்தின் மனைவின்னு வரும். இவ்ளோ நாள் ப்ரெக்னன்ட் என்கிறதால விட்டு வச்சேன். இனி என் இஷ்டப்படி தான் நடக்கணும் புரியுதா?" என்று கேட்க,

அவளோ, "அந்த துண்டு டீசென்ட், ஆனா புடவை கண்ட மேனியா? பிரபலம்னாலே பிராப்லம் தான் போல" என்று நினைத்தவள், "இப்போ நான் என்ன ட்ரெஸ் போடணும்??" என்று கேட்டாள். அடுத்த கணமே போனை எடுத்து அவன் பிரத்தியேக அலங்கார நிபுணருக்கு அழைக்க, அந்த பெண்ணோ அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்து நின்றாள்.

அவளோ, "மேடம் இது தான் சார் எடுத்து கொடுத்த ட்ரெஸ்" என்று ஒரு உடையை நீட்ட, அதனை பார்த்தவளோ, "இங்க பாருங்க, நான் ஒன்னும் நடிகை இல்ல இப்படி டிரஸ் பண்ணிட்டு வர்றதுக்கு, ஆறு மாச குழந்தையோட அம்மா… புரியுதா? பாத்ரூம்ல கட்டுரை டவல் போல இருக்கு, உங்க சார் துண்டு கட்டுறதுக்காக என்னால துண்டு கட்ட முடியாது" என்று கடுப்பில் சொல்லி விட,

அடுத்த கணமே அவன் முன்னே தலையை குனிந்து கொண்டு நிற்க வேண்டிய நிலை அவளுக்கு… அவளை நோக்கி சொடக்கிட்டவனோ, "அந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன குறைச்சல்" என்று கேட்க, அவளோ, "எல்லாமே குறைச்சல் தான்" என்று நினைத்துக் கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தாள். அவனோ, "சொல்லு" என்று உறுமலாக சொல்ல, "எனக்கு அந்த ட்ரெஸ் எல்லாம் போட்டு பழக்கம் இல்ல, சுடிதார் இல்லன்னா புடவை ஓகே" என்று சொன்னாள்.

இதுவரை அவனை எதிர்த்து பேசவே இல்லை, இன்று பேசி ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு. அவனோ கோபமாக சோபாவில் இருந்து எழுந்தவன், "என்னடி வாய் நீளுது? அப்போ இந்த ட்ரெஸ் நீ போட மாட்டியா?" என்று கேட்டான் அவளை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டே. அவன் பார்வை அவளுக்கு கிலியைக் கொடுத்தாலும், அதற்காக அந்த துண்டை கட்டிக் கொண்டு போக அவளும் ஆயத்தம் இல்லை.

கண்களை மூடித் திறந்து அவனை தைரியமாக பார்த்தவள், "மாட்டேன்" என்று சொன்ன அடுத்த கணமே, "அறைஞ்சேன்னா" என்று புறங்கையை ஓங்கி இருந்தான். ஆனாலும் அங்கே நின்ற சிகையலங்கார நிபுணர், மற்றும் வீட்டு வேலைக்காரர்களை கருத்தில் கொண்டு, "எதையாவது போட்டுட்டு வா" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே விறு விறுவென வெளியேற அவளும் அவனை தொடர்ந்து வெளியேறி இருந்தாள்.

அவனது காரின் பின் பக்கத்தில் அவன் ஏறி அமர, அவளும் பக்கத்தில் ஏறி அமர, அவளை எரித்து விடுவது போல பார்த்தவன், "அங்க மட்டும் யாரும் இல்லன்னா நடந்து இருக்கிறது வேற" என்று மிரட்டலாக சொல்லிக் கொண்டே, "காரை எடு" என்று டிரைவரிடம் சொன்னான்.

உண்மையை சொல்லப் போனால் அவனது இயலாமை தான் இன்று அவன் கோபமாக வெளி வந்து கொண்டு இருந்தது. அவள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று அவன் நினைக்க ஒரே காரணம் அவனது இயலாமை மட்டுமே தான்.

அவளோ பெருமூச்சுடன் மௌனமாக அமர்ந்து இருக்க, அவனோ வெளியே பார்த்துக் கொண்டு வந்தவனுக்கோ அவள் எதிர்த்து பேசியதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் வாயை திறந்து விட்டால் தனது மொத்த மானமும் கப்பல் ஏறி விடும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே அவளை முடிந்தளவு அடக்கி வைக்க நினைத்து இருந்தவன், முதல் முறை இன்று தான் தோற்று இருந்தான்.

இதுவரை அவனை மீறி ஒரு விரல் கூட அவள் அசைத்தது இல்லை, ஆனால் இன்று நடந்ததோ வேறு அல்லவா? அவனும் இப்படி அவளை உடை அணிய சொல்ல வேண்டும் என்று நினைத்தது இல்லை. ஒரு தடவை அவன் நண்பன், "என்னடா உன் பொண்டாட்டி மார்டன் ட்ரெஸ் போட விடாம கண்ட்ரோல் பண்ணுறியா?" என்று கேட்டு விட, அதற்கு இல்லை என்று பதில் அளிக்கும் முகமாகவே இன்று அந்த உடையை அணிய சொல்லி இருந்தான். ஆனால் அவள் தான் மறுத்தே விட்டாளே.

அவளுக்குமே இதுவரை அவன் செய்த விஷயங்கள் சற்று நெருடலாக இருந்தாலும் கஷ்டமாக இருக்கவே இல்லை. ஏன் என்றால் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கையை தொடங்கியவள் அவள். ஆனால் இன்று அந்த உடையை அணியும் அளவுக்கு அவள் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அதனால் தான் எதிர்த்து பேசி இருந்தாள்.

இப்படியே மௌனமாக ஆளுக்கொரு சிந்தனையுடன் பார்ட்டி நடக்கும் இடத்தை அடைந்தார்கள் அவர்கள். இறங்கியவனோ அவளை பொருட்டாக கூட மதிக்காமல் நண்பர்களுக்கு கையை குலுக்கி விட்டு உள்ளே செல்ல, அவனை சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

அவளும் அங்கே நின்று இருந்த அவன் நண்பி சுருதியுடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். போனதுமே ஆண்களும் சில பெண்களும் மதுபானத்தை அருந்த ஆரம்பித்து விட, நந்திதாவோ ஒரு ஜூஸை எடுத்துக் கொண்டே அமர்ந்து விட்டாள். அங்கே அமர்ந்து இருந்த யுவராஜ் அருகே வந்த ஒரு பெண்ணோ, "சார், அந்த போட்டோல செம ஹாட் ஆஹ் இருக்கீங்க… எனக்கு அத பார்த்து தூக்கமும் போச்சு" என்று போதையில் கண்கள் சொருக, கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டே இருக்க,

அவனோ அவளை மேலிருந்து கீழ் அருவருப்பாக பார்த்து விட்டு, பின்னே நின்ற சில காவல்காரனிடம், "க்ளியர் ஹேர்" என்று சொல்லி விட்டான். அவர்களும் அவளை அங்கிருந்து அகற்ற, "சார், ஒரு நாள் உங்க கூட கம்பெனி கொடுக்க ஆசைப்படுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவளும் நகர்ந்து விட, அதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த நந்திதாவோ சலிப்பாக இருபக்கமும் தலையாட்டிக் கொண்டாள்.
 
Top