அத்தியாயம் 1
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல மழைக்கும் விசேஷம். ஒவ்வொரு வருடமும் அம்மனின் மனம் குளிர்ந்து சென்னை மாநகரம் அருவியில் நனைந்து கொண்டிருக்கும். இன்றும் மாலை ஐந்து மணியை நெருங்குவதற்கு முன் வீட்டிற்கு சென்று விடலாம் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தவளை ஆக்கிரமித்தது அனுமதி இல்லாமல்.
மழைத்துளி தன் மீது பட்டதும் இருசக்கர வாகனத்தை அப்படியே நிறுத்தியவள் தலை உயர்த்தி பார்த்தாள். சினேகமாக சிரித்தது பார்த்திகாவை கண்டு. தானும் புன்னகைத்து தன்னை நோக்கி வந்த விருந்தாளியை மகிழ்வித்தவள் வாகனத்தை இயக்கப் போகும் நேரம் தந்தை அழைத்தார்.
எதற்கு அழைக்கிறார் என்று தெரிந்தும் எடுத்தவள், "சாரி அப்பா, நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னால முடியாது. வரவேண்டாம்னு சொல்லிடுங்க." என்றாள்.
"அவங்க எல்லாரும் வந்துட்டாங்க பாரு"
"வாட்!"
"நீ சீக்கிரமா வா"
"எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்."
"அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல வீட்டுக்கு வா."
"அவங்க முன்னாடியே வந்து சொல்லுவேன் பரவாலயா?."
மகளை சமாளிக்க வழி தெரியாது சந்திரசேகர் திணறிக் கொண்டிருக்க, "வந்தவங்க முன்னாடி அப்பாவ அசிங்கப்படுத்தாத பாரு. உன் போட்டோவ கூட பார்க்காம அப்பா மேல இருக்கிற மரியாதைல வந்திருக்காங்க. வந்தவங்களை நல்லபடியா அனுப்பி வச்சிட்டு அதுக்கப்புறம் என்ன வேணா பேசு." என பார்த்திகா அன்னை அமுதா பேசினார்.
"வர வேண்டாம்னு சொல்லியும் வர வச்சது உங்களோட தப்பு. அப்பாகாக அம்மாகாகலாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் வீடு வந்து சேர்றதுக்குள்ள அங்க இருக்க எல்லாரையும் அனுப்பிடுங்க."
பெற்றோர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அழைப்பை துண்டித்தவள் வானத்தை பார்த்தாள். அதில் அழகாக தெரிந்தான் அவள் மனம் கவர்ந்தவன். ஏழு வருடங்களுக்கு முன் பார்த்த அந்த முகம் இன்னும் மறையவில்லை நெஞ்சை விட்டு. இது போன்ற ஒரு மழை நேரத்தில் அவனை பார்த்த நியாபகங்கள் மழைத்துளியாய் நெஞ்சில் தேங்கி விட்டது. எங்கிருக்கிறானோ...! அவனுக்காக காத்திருக்கிறாள்.
பிடிவாதக்காரி மகளை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்ற பார்த்திகாவின் பெற்றோர்கள் கையை பிசைந்து கொண்டிருந்தார்கள் தீர்வு கிடைக்காமல். அந்நேரம் சந்திரசேகரின் அன்னை ஒரு திட்டத்தைக் கூற, அனைத்தும் அழகாக நடந்தது.
வாழ்வில் நடந்த திருப்புமுனையை அறியாது சாவகாசமாக வாசலில் நின்றவள் முன்பு நின்றான் அவன். மழை நீரில் நனைந்து உடலில் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அனைத்தும் ஆவியானது வெப்பத்தில். அகல பாதாளத்திற்கு அந்த சூடு அவளை இழுத்துச் சென்றது. கண் முன்னால் நிற்பவனின் தோற்றம் விழியில் பதிந்தாலும் நினைவில் பதியவில்லை.
நிச்சயமாக இது நிஜமில்லை என்ற எண்ணம் அவளுக்குள். கனவில் தினம்தோறும் வருபவன் அவளுக்கு முன்பு. அவளோடு கதை அளந்து, அவளை ரசித்து, கைகோர்த்து காதல் வளர்த்தவனின் வரவை சற்றும் எதிர்பார்க்காதவள் அசையாது அப்படியே நின்றிருந்தாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ!" என்ற தினேஷின் குரல் கூட செவில் விழவில்லை.
பார்த்திகாவின் பாட்டி அவளை இழுத்து ஓரம் நிற்க வைக்க, நின்றிருந்தவன் அவளைப் பார்க்காது வீட்டை விட்டு வெளியேறினான். செல்பவனை பிடிக்க சென்றவளை இழுத்து உள்ளே விட்ட அவளின் பாட்டி,
"என் மகன் உன்னை பாசமா வளர்த்ததுக்கு ரொம்ப பெரிய மரியாதையா குடுத்துட்ட. யாருன்னே தெரியாதவங்க உங்க அப்பா பத்தி கேள்விப்பட்டு புரோக்கர் சொன்ன ஒரே காரணத்துக்காக உன் போட்டோவ கூட பார்க்காம வந்தாங்க. அவங்க முன்னாடி இப்படி தலை குனிய வச்சுட்டியே. அப்படி என்ன உனக்கு இந்த வயசுல இவ்ளோ இறுமாப்பு." என திட்டிக் கொண்டிருந்தார்.
அவர் கையைத் தட்டி விட்டவள் அவசரமாக வாசலில் சென்று நிற்க, காரில் ஏறி அமர்ந்தவன் அப்போதுதான் அவள் முகம் பார்த்தான். உடனே பற்கள் சலசலத்தது இதழ்கள் விரிந்ததில். உள்ளத்தில் இருந்த காதலை சிரிப்பில் காட்டி கேட்டின் அருகே ஓடி வருவதற்குள் அவன் ஓடி விட்டான்.
'இவரு...' என உள்ளுக்குள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தவள், 'என்னை பொண்ணு பார்க்க வந்தது இவரா!' என பேரானந்தத்தில் மிதக்க, அதை கலைத்தார்,
"எதுக்குடி அவங்களை தூரத்த வர? அவங்க உன்ன ஒன்னும் பார்த்துட்டு போல. உன் தங்கச்சியை பார்த்துட்டு போயிருக்காங்க." பாட்டி.
"பாட்டி!"
"இனி உனக்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கல்யாணம் நடக்கிற வரைக்கும் அவங்க முன்னாடி நிக்காத. ரொம்ப நல்ல குடும்பம் போல. உன் அப்பாவோட சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு உன் தங்கச்சிய மருமகளா ஏத்துக்கிட்டாங்க."
"ஆனந்தியா"
"ஆமான்டி அவதான் உன் அப்பா மானத்தை இன்னைக்கு காப்பாத்துனா. சொன்னது நியாகம் இருக்கட்டும் அவங்க முன்னாடி நிக்காத."
பௌர்ணமி அன்று கடலில் உண்டான பெரும் அலைகள் போல் உள்ளம் வீசி அடித்தது. அவனைப் பார்த்ததிலிருந்து காதில் விழுந்தது வரை எல்லாம் அவளுக்கு எதிராக இருக்க, ஓடினாள் தங்கையிடம். அவள் அறையில் இருந்த பெற்றோர்கள் இவளை பார்த்ததும் கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட,
"ஆனந்தி...அவரு..." என பேச சென்றவள் அப்படியே திடுக்கிட்டு நின்றாள்.
அவள் முகத்தில் அப்படி ஒரு வெட்கம். அந்த வெட்கம் நடந்ததை கூறிவிட, உதடுகள் ஊமையானது. பரிதவிக்கும் உள்ளத்திற்கு வழி கிடைக்காது அப்படியே தங்கை காலடியில் அமர்ந்தவள், "அவரும் உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரா?" மெல்ல மனம் வதங்கி கேட்க, ஆனந்தியின் வெட்கம் இரண்டு மடங்கானது.
"தேங்க்யூ சோ மச் அக்கா! எல்லாம் உன்னால தான். சத்தியமா அப்பா சொல்லும்போது துளி கூட எனக்கு விருப்பம் இல்லை. உன்ன மாதிரி நானும் வேணாம்னு சொல்லிடலாம்னு தான் இருந்தேன். ஆனா, அவர பார்த்ததும் எல்லாம் மாறிடுச்சு. அதுவும் பேசுனதுக்கு அப்புறம்..." என மீதி வார்த்தையை வெட்கத்தில் முடித்தாள்.
ரத்தத்தில் இருந்து பிரிந்த கண்ணீர் கொட்ட உத்தரவு கேட்க, கட்டுப்படுத்தி அணை போட்டவள் நடந்ததை விசாரித்தாள். இந்த வரனை பார்த்து கொடுத்த தரகர் சந்திரசேகருக்கு பல வருட பழக்கம். ஒரு நாள் எதார்த்தமாக மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க வேண்டும் என பேசி வைக்க, இன்று வந்தவன் தந்தையும் மகனுக்கு வரன் பார்க்க தரகரை அணுகியிருந்தார்.
நல்ல இடமாக இருப்பதால் சந்திரசேகரை பற்றி கூறினார். பல வருடமாக திருமணத்திற்கு போக்கு காட்டும் மகனை எப்படியாவது அழைத்து சென்று திருமணத்தில் தள்ளிவிட வேண்டும் என அவர் புகைப்படத்தை கூட பார்க்கவில்லை.
இந்நிலையில் தன் உயிரில் கலந்து உயிராக வாழ்பவன் தான் தன்னை பார்க்க வந்திருக்கிறான் என அறியாது பார்த்திகா மறுத்து விட, சந்திரசேகரின் இரண்டாவது மகள் ஆனந்தி மணப்பெண்ணாக நிற்க வைக்கப்பட்டாள்.
அக்காவிற்காக வந்த வரனை தனதாக்கிக் கொள்ள ஆனந்திக்கு உடன்பாடு இல்லை. இருந்தும் பெற்றோர்களுக்காக சம்மதித்தாள். கையில் தேநீரை கொடுத்து வந்தவனுக்கு கொடுக்க சொல்ல, "ஃபார்மாலிட்டி எதுவும் வேண்டாம் அங்கிள். நான் உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசணும்." என்றான் அதிகாரமாக.
எங்கோ பார்த்தபடி நின்றிருந்த ஆனந்தி விழி உயர்த்தினாள். அவளுக்கு நேராக அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். விழிகள் உன்னிப்பானது அவன் தோற்றத்தில். கை இரண்டையும் கால் முட்டியில் வைத்துக் கொண்டு விரல்களை கோர்த்திருந்தவன் விழிகளில் அப்படி ஒரு கூர்மை. தன்னை எடை போடுகிறான் என்பதை கண்டு கொண்டவள் அப்பொழுதுதான் தன் அலங்கார நிலையை உணரத் துவங்கினாள்.
அவசரத்திற்கு தயாராகி வந்தவள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ள, அதை கவனித்தவன் புருவங்களில் ஒரு புருவம் உயர்ந்தது. அவன் தோற்றம் காவல்துறையில் இருக்கிறான் என்றாலும் இந்த சின்ன செய்கை அழகன் என சொல்ல வைத்தது. தன்னுடைய உணர்வுகளை விழி வழியே புரிந்துக் கொள்ளும் ஆனந்தியின் செயலில் சின்ன புன்னகையை இதழோரம் மறைத்து வைத்தான்.
"மச்சான்!"
"என்னடா"
"பேசலாம் வேணாம் டா. இந்த இடம் உனக்கு செட்டாகாது."
"என்னடா உளறிட்டு இருக்க. சும்மா இருந்தவனை உசுப்பேத்தி கூட்டிட்டு வந்துட்டு வேணாம்னு சொல்ற."
"எல்லாம் உங்க அம்மா அப்பா பண்ண வேலை. எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாதவங்க மாதிரி உட்கார்ந்துட்டு இருக்காங்க பாரு. முன்னாடியே அந்த பொண்ணு தான் இந்த பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா உன்ன கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன்."
"எந்த பொண்ணுடா?"
"அங்க பாருடா மச்சான்."
நண்பன் தினேஷ் கை காட்டிய இடத்திற்கு பார்வையை சுழற்றினான். அங்கிருந்த சுவற்றில் ஆனந்தியை அணைத்தபடி நின்றிருந்தாள் பார்த்திகா. பெரிதாக தன் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாதவள் என்றாலும் சட்டென்று நினைவு வரும் முகம் அது. தூரமாக நின்று தன்னை நோட்டம் விடும் அவள் பார்வை இன்றும் நினைவிருக்கிறது.
"எப்பவோ பார்த்துட்டேன்."
"அடப்பாவி!"
"போலீஸ்காரன்டா"
"என்னவோ இருக்கட்டும் வேணாம் எந்திரி."
"எனக்கு பொண்ண பிடிச்சிருக்கு "
"வாட்!"
"நிஜமாடா"
"நீ பார்க்க வந்த பொண்ணு அந்த பொண்ணு. உன்ன வேணாம்னு சொல்லிடுச்சாம். அப்பாட்ட மெதுவா விஷயத்த சொல்லி இந்த பொண்ண நிக்க வச்சிருக்காங்க."
சில நொடி மௌனம் காத்து, "முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு தான் அந்த பொண்ணு வேணாம்னு சொல்லி இருக்கு. நீ எதுக்கு கிளறிகிட்டு இருக்க. எனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்கு பேசிட்டு வரேன்." என்றவன் ஆனந்தியோடு மொட்டை மாடிக்கு சென்றான்.
"நான் போலீஸ்காரன்னு பார்த்ததும் தெரிந்திருக்கும். என்னால குடும்ப வாழ்க்கைக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அந்த மாதிரி சூழ்நிலைல என் பார்வையை புரிஞ்சு நடந்துக்குற பொண்ணு வாழ்க்கை துணையா வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அந்த மாதிரியே நீங்க இருந்ததால எனக்கு உங்கள பிடிச்சிருக்கு. உங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தா சொல்லுங்க மேற்கொண்டு பேச சொல்றேன்." எனப் பட்டென்று போட்டு உடைத்தவன் பதிலுக்காக வெகு நேரம் காத்திருந்தான்.
அவன் துணிச்சல் சட்டென்று பேச வைத்து விட, ஆனந்திக்கு பேச்சு வரவில்லை. அவனைப் பார்ப்பதும் தலை குனிந்து கொள்வதுமாக இருக்க, "ரெண்டு நாள் டைம் எடுத்துக்கிறீங்களா?" கேட்டான்.
"ம்ம்!"
"கூல்!"
இதழ் பிரிக்காமல் மீசையில் சிரிப்பை மறைத்து அங்கிருந்து நகர, "உங்க பேரு..." இழுத்தாள்.
திரும்பியவன் இந்த முறை தாராளமாக சிரிப்பை கொடுத்து, "திருமேனி ஆவுடையப்பன்." என்றிட, "ம்ம்" தலை அசைத்தாள்.
"பிடிச்சிருக்கா?"
"பிடிச்சிருக்கு"
"நான் பேர கேட்டேன்"
"நான் பேர சொல்லல" என்றதும் வானம் வாய் பிளந்தது அவன் சிரிப்பு சத்தத்தில்.
உடலை விட்டுப் பிரிந்த உயிரை தங்கையிடம் காட்டாமல் தன் அறைக்கு வந்தவள், "திரு" என வாய் பொத்தி கதறினாள்.
***
ஒவ்வொரு நிமிடமும் நரகமானது பார்த்திகாவிற்கு. வீட்டிற்கு சென்ற திருமேனி ஆவுடையப்பன் பெற்றோர்கள் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு செய்தியும் காதில் விழ விழ உள்ளம் தோய்ந்து போனது அவளுக்கு. தன்னைப் பற்றி தெரிந்தும் ஒரு முறை கூட சிந்திக்காமல் தங்கைக்கு சம்மதம் சொல்லி இருக்கும் அவள் திருவை பார்க்க பயந்து எந்த நிகழ்விலும் தலையிடாமல் இருந்தாள்.
ஆனந்தி ஓயாமல் அவனோடு பேசியபடி இருக்க, வீட்டில் இருக்கும் நேரத்தையும் குறைத்துக் கொண்டாள். பெற்றோர்களும் அவள் மீது இருந்த கோபத்தில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருக்க, இருக்க பிடிக்காமல் வெளியூர் செல்வதாக பொய் சொல்லி கிளம்பி விட்டாள். வீடு திரும்பியவள் கண்ணில் முதலில் பட்டது ஆனந்தி கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் தான்.
அதைப் பார்க்கவே கூடாது என்ற முடிவில் வந்தவள் பார்வை அதில் விழுந்து விட, வாழ்வை வெறுத்து தன் அறையே கதி என்று வாழ்ந்தாள். வேலைக்கும் செல்வதில்லை. மகளின் நிலையை சிறிது பெற்றோர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். கேள்வி கேட்க ஆரம்பித்ததும் வேலைக்கு ஓட துவங்கினாள். பார்த்திகா ஆசிரியராக பணிபுரிகிறாள்.
அதுவும் மழலை செல்வங்களுக்கு ஆசிரியர். சிரித்த முகமாக மழலையோடு மழலையாக பாடம் சொல்லித் தருபவள் நிலை மாறிப்போனது. தன் வகுப்பிற்கு செல்லாமல் ஆசிரியர்கள் ஓய்வேடுக்கும் அறையில் சில நாட்கள் கழிக்க துவங்கினாள். தகவல் பறந்தது தலைமைக்கு. அவர்கள் அழைத்து விசாரிக்க,
"நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியலங்க மேம். என்னோட எண்ணம் கொஞ்சம் கூட இங்க இல்லை. என்னால இதுக்கு மேல இங்க வேலை பார்க்க முடியும்னு தோனல, நான் கிளம்புறேன்." அங்கிருந்தும் ஓட ஆரம்பித்தாள்.
அனைவரிடமிருந்தும் ஓட ஆரம்பித்தவள் ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்தே ஓடிவிட்டாள்.
தன்னை சுற்றி நடக்கும் எதையும் உணரும் நிலையில் இல்லை. இரவையும் பகலையும் ஒரே போல் பார்த்தாள். மனதில் அவள் திருவோடு வாழ, நடுவில் ஆனந்தி வந்து நின்று தொந்தரவு செய்தாள்.
இப்படியே கடும் போராட்டத்திற்கு நடுவில் அவர்கள் திருமண நாளும் வந்தது. இந்த முறை மொத்தமாக ஊரை காலி செய்ய முடிவெடுத்தாள். விஷயம் அறிந்த பெற்றோர்கள் முழு தடை போட, சூழ்நிலை கைதியாக திருமண மண்டபத்தில் நுழைந்தாள்.
வரவேற்பு நிகழ்வு படு ஜோராக நடந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த இவளுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை. ஓடி ஒளிந்து கொண்டாள் அறையில். வெளியில் நடக்கும் எதையும் விடியற்காலை வரை பார்க்கவில்லை பார்த்திகா. இவளை ஊரே அறியாமல் இருக்க ஒருவன் மட்டும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் பார்வையால்.
மண்டபத்தில் நுழைந்ததிலிருந்து யார் பார்வைக்கும் சிக்காமல் இருக்க ஆட்கள் இருக்கும் வரை நடந்து வந்தவள் அதன்பின் ஓட்டம் பிடித்து அறையில் ஒளிந்து கொண்டது வரை கவனித்துக் கொண்டிருந்தான் தினேஷ். கல்லூரியில் இருந்து தான் திருமேனி ஆவுடையப்பனுக்கு பழக்கம் இவன். இவனால்தான் பார்த்திகா என்பவள் நண்பன் வாழ்வில் உலாவிக் கொண்டிருந்தாள்.
கேலியாக ஆரம்பித்தது நண்பனுக்கு கேலியாக இருந்து விட, சம்பந்தப்பட்டவளுக்கு வாழ்க்கையாக மாறிவிட்டது. இதை அறிந்தவன் நண்பனிடம் பேசியும் இருக்கிறான். திருமேனி ஆவுடையப்பனுக்கு தன் குறிக்கோள் அனைத்தும் காவல்துறை என்பதால் காதலிக்க நேரமில்லை என்று விட்டான். கல்லூரியை விட்டு செல்லும்வரை அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் காலம் கடந்து நினைவில் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
'இவ இன்னும் திருவ மறக்கல. அப்புறம் எதுக்காக வேண்டாம்னு சொன்னா?' என்ற சிந்தனையோடு அவள் அறை முன்பு நின்றவன் பலத்த யோசனைகளுக்கு பின் கதவை தட்டினான். திறக்கும் நிலையில் இல்லாதவள், 'கடவுளே! எப்படியாது இந்த கல்யாணத்தை நிறுத்து.' பிராத்தித்து கொண்டிருந்தாள்.
தினேஷிற்கு மீண்டும் யோசனைகள். இந்த முறை, "பாரு!" என சத்தமாக அழைத்தான்.