ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மூங்கிலின் ரகசிய ராகம்- கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே

மூங்கிலின் ரகசிய ராகம், AP Verses இல் Free யாக ongoing ல போய்க்கொண்டு இருக்கும் நாவல்...
சைட்டிலும் வாரம் இரண்டு யூடிக்கள் மட்டும் வரும்...
செவ்வாய் மற்றும் வியாழன்...

தினமும் யூடிக்கள் படிக்க
AP Verses download application செய்யுங்கள்...

android link

AP Verses- android

ios link

AP Verses- IOS
 

அத்தியாயம் 1

நீல நிற பட்டுப் புடவையில் கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் தர்ஷனா...

சத்தமாக கத்தி அழ வேண்டும் போன்ற ஒரு உணர்வு...

இன்று பெண் பார்க்க வருகின்றார்களாம்...

திருமணமே வேண்டாம் என்று இருந்தாள்... வீட்டில் விட்டு வைப்பார்களா என்ன?

பேசி பேசியே பெண் பார்க்கும் படலம் வரை கொண்டு வந்து விட்டார்கள்...

நினைக்க நினைக்க கோபமாக வந்தது...

அவளது மொத்த கோபமும் அவளது ஒரே அக்கா ஆராதனா மீது தான்...

அவள் மட்டும் இல்லை என்றால் அவள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக கடந்து இருக்கும்...

இத்தனை வருடங்கள் அவள் வலியை அனுபவித்து இருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

அவள் மீது தீராத வெறுப்பு...

அவளுடன் பேசியே வருடங்கள் கடந்து விட்டன...

முகத்தை கூட பார்க்க மாட்டாள்...

அவள் இருக்கும் இடத்தில் இருக்கவும் பெண்ணவளுக்கு இஷ்டம் இல்லை...

இதெல்லாம் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் என்று மூளை சொன்னது...

ஆனால் மனம் இன்னுமே அவனை தானே சுற்றி வருகின்றது...

அலைபேசியை எடுத்து, புகைப்படங்களை பார்த்தாள்...

நிச்சயதார்த்த புகைப்படம்...

சில வருடங்களுக்கு முன்னே எடுக்கப்பட்டது...

அவள் கையை பற்றி அவன் மோதிரம் போட்டுக் கொண்டு இருந்தான்... அவன் தான் யுகேந்திரன்...

இன்று வரை அவளுக்குள் ஊடுருவி இருப்பவன்...

திருமணம் நின்ற கணம், இந்த உலகமே இருண்டு விட்ட உணர்வு தான் அவளுக்கு...

"மாமா மாமா" என்று அவன் மீது கொள்ளைப் பிரியம்...

எல்லாமே கனவாகி விட்டதே...

எல்லாவற்றுக்கும் யார் காரணம் என்று நினைத்தால், ஆராதனா தான் காரணம்...

நினைக்கும் போதே மேனி பற்றி எரிந்தது... அலைபேசியை தூக்கி தூரம் போட்டாள்.

அழுகை வந்தது...

அடக்கிக் கொண்டே, கண்ணீர் கீழே விழுந்து விடாமல் துடைத்துக் கொண்டாள்...

பெண் பார்க்கும் படலம் என்றால், அவள் அக்கா ஆராதனாவும் வந்திருக்க தானே வேண்டும்...

ஆம் வந்திருந்தாள்...

அழையா விருந்தாளியாக வந்திருந்தாள்...

பிறந்த வீட்டில் மூன்றாம் மனிதர் போல ஓரமாக அமர்ந்து இருந்தாள்...

சிவப்பு நிற புடவை அணிந்து இருந்தவள் வாயை திறந்து பேசியே வருடங்கள் கடந்து விட்டன...

எங்கே சென்றாலும் இப்போதெல்லாம் ஒரு அமைதி மட்டும் தான்...

துறு துறுவென பேசிக் கொண்டு இருக்கும் பெண்ணவள்...

யாருக்கும் பயம் இல்லை...

அளவு கடந்த தைரியம்...

அந்த ஆராதனாவா என்று நம்ப முடியாத மாற்றம் அவளிடம்...

விழிகளில் தேங்கி நிற்கும், சோகம், குற்ற உணர்வு என்று என்னென்னவோ உணர்வுகளின் நடுவே தவித்துக் கொண்டு இருந்தாள்...

முதல் எல்லாம், அவளை எதிர்த்து ஒரு வார்த்தை யாரும் பேச முடியாது...

வக்கீலுக்கு படித்து இருக்கின்றாள்...

நிஜ வாழ்க்கையிலும் வக்கீல் தான்...

பேசியே மடக்கி விடுவாள்...

அவளிடம் பேசவே எல்லோருக்கும் பயமாக இருக்கும்...

ஆனால் இப்போது நிலத்தில் கிடக்கும் குப்பை போல யார் மிதித்து விட்டு சென்றாலும் மௌனம் மட்டுமே அவளிடம்...

பேசும் தகுதியை இழந்து விட்ட உணர்வு அவளுக்கு...

ஆம் இழந்து விட்டாள் தான்...

அவள் பிறந்த வீடு, அவள் தங்கையின் பெண் பார்க்கும் படலம்... ஓடி ஆடி வேலை செய்ய வேண்டியவள், ஆனால் ஓரமாக அமர்ந்து, கையை பிசைந்து கொண்டு இருந்தாள்...

வழக்கமாக இப்படியான பொது நிகழ்வுகள் அவளுக்கு சங்கடத்தை கொடுக்கும்...

எப்போதுமே தவிர்த்து விடுவாள்...

ஆனால் தங்கையின் விசேஷத்துக்கு எப்படி வர முடியாது என்று சொல்ல முடியும்?

இஷ்டமே இல்லாமல் வந்து விட்டாள்...

அங்கே தான் அவள் தந்தை வடிவேல் அமர்ந்து தர்ஷனாவை பெண் பார்க்க வந்த கார்த்திகேயனின் தாய் தந்தையுடன் பேசிக் கொண்டு இருந்தார்...

வடிவேலின் விழிகள் அவளில் கொஞ்சமும் படியவில்லை...

அப்படி ஒரு வெறுப்பு அவருக்கு...

அவருக்கு மட்டும் அல்ல, அவள் தாய் தேவி கூட அவளை ஏன் என்றும் மதிக்கவில்லை...

பிறந்த வீட்டில் தான் இந்த வெறுப்பு என்றால் புகுந்த வீட்டை கேட்கவே தேவையில்லை...

இதற்கு புகுந்த வீடு அவளது சொந்த மாமனாரின் வீடு தான்...

அவள் தாய் தேவியின் அண்ணன் வைத்தியநாதனின் மகனான யுகேந்திரனை தான் திருமணம் செய்து இருக்கின்றாள்...

வைத்தியநாதன் இறந்து விட்டார்...

அவர் மனைவி அன்பரசி...

அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள்...

மூத்தவன் யுகேந்திரன்...

இளைய மகள் சிவாங்கி...

இன்று அவள் திருமணம் செய்து இருக்கும் யுகேந்திரன் ஒரு காலத்தில் ஆராதனாவின் தங்கை தர்ஷனாவை திருமணம் செய்ய இருந்தவன்...

இடையில் என்னென்னவோ நடந்து, இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது...

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே, தலையை தாழ்த்தி அமர்ந்து இருந்த ஆராதனாவுக்கு அவள் குழந்தை இனியாவின் குரல் கேட்டது...

மெதுவாக ஏறிட்டு குழந்தையை பார்த்தாள்...

யுகேந்திரன் மடியில் அமர்ந்து அவனை தான் கட்டிக் கொண்டு இருந்தாள்...

"அப்பா, அப்பா" என்று அவன் மீது கொள்ளைப் பாசம்...

அவனும் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, "என்னடா கண்ணா வேணும்?" என்று கேட்க, "எனக்கு பலூன் வேணும்பா" என்றாள் மழலை மாறாத குரலில்...

"போகும் போது வாங்கி கொடுக்கிறேன்" என்று மென் சிரிப்புடன் அவன் சொல்ல, அவனது ஒற்றைக் கன்னத்தில் விழுந்த குழியில் குழந்தை முத்தம் பதித்தாள்...

குழந்தையுடன் அவன் பேசுவான், கொஞ்சுவான்... ஆனால் ஆராதனாவுடன் அவனும் தேவையை கடந்து பேசுவது இல்லை...

மொத்தத்தில் எல்லாருமே அவளை ஒதுக்கி வைத்து இருந்தார்கள்...

அவளுக்கும் தன்னுடன் பேச சொல்லி யாரிடமும் கேட்க இஷ்டம் இல்லை...

அவள் மாமியார் அன்பரசி பேசுவார், குத்தி காட்டி மட்டும் பேசுவார்...

மொத்தத்தில் நிம்மதி என்பது அவளுக்கு இல்லை தான்...

இங்கு இருந்து எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு செல்லலாமா? என்று தோன்றும்...

ஆனால் இனியாவுக்காக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பாள்...

குழந்தையை பார்த்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் தலையை தாழ்த்திக் கொண்டாள்...

அன்பரசியோ, "ஆராதனா, இது உன் வீடு தானே, விருந்தாளி போல உட்கார்ந்து இருக்க?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டார்...

என்ன சொல்வாள் அவள்?

அவள் வாயை திறக்க முதலே, "ஆஹ் மகாராணின்னு நினைப்பும்மா" என்று சிவாங்கி சொல்லிக் கொண்டே எழுந்து தர்ஷனாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்...

ஆராதனாவுக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை...

அங்கே அமர விடாமல் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்று புரிந்தது...

மௌனமாக எழுந்தவளுக்கு தர்ஷனாவை பார்க்க செல்லவே சங்கடம்...

அன்பரசியோ, "ஓடியாடி வேலையாவது பாரு" என்று சொல்ல, ஆராதனா எதுவும் சொல்லாமல் தர்ஷனாவின் அறையை நோக்கி நடந்தாள்...

இதே சமயம், அறைக்குள் வந்த சிவாங்கியோ தர்ஷனாவின் பின்னே வந்து நின்று கொண்டே, "என்னடி? கொஞ்சமாவது சிரி" என்று சொல்ல, "எப்படி டி சிரிக்கிறது?" என்று கேட்கும் போதே அடக்கி வைத்து இருந்த கண்ணீர் வழிய, "அழாதே தர்ஷி, கார்த்திகேயன் அண்ணாவை தானே கல்யாணம் பண்ணிக்க போற, ரொம்ப நல்லா உன்னை பார்த்துப்பார்" என்று சொன்னதுமே அவளை ஏறிட்டு பார்த்த தர்ஷனா, "நான் அவரை குத்தம் சொல்லவே இல்லை, ஆனா எனக்குன்னு மனசு இல்லையா?" என்று கேட்டாள்.

அவள் மனதின் தடுமாற்றம் சிவாங்கிக்கும் புரிந்தது...

அவளை மெதுவாக அணைத்துக் கொண்டாள்...

யுகேந்திரன், கார்த்திகேயன், தனஞ்சயன் என்று மூன்று நண்பர்களும் சேர்ந்து தான், பல பிசினஸ்களை செய்து கொண்டு இருந்தார்கள்...

சின்ன வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக வளர்ந்தவர்கள்...

ஒளிவு மறைவு என்பது இல்லை...

யுகேந்திரன் கேட்டுக் கொண்டதற்காக தர்ஷனாவை திருமணம் செய்ய சம்மதித்து இருந்தான் கார்த்திகேயன்...

பெரிதாக அவனுக்கும் ஆர்வம் என்பது இல்லை...

அதே சமயம் வெறுப்பும் இல்லை...

நடுநிலையான உணர்வு...

அவளை மறுக்கவும் காரணம் இல்லை...

அழகான, பொறுப்பான, அன்பான பெண் அவள்...

சரியென்று சொல்லி, இப்போது பெண் பார்க்கவும் வந்து விட்டார்கள்...

கார்த்திகேயன் ஒரு வழியாக மனதை அவள் பக்கம் கொண்டு செல்ல தயாராக இருந்தாலும் தர்ஷனாவுக்கு அவ்வளவு சீக்கிரம் தனது வலியில் இருந்து மீள முடியவே இல்லை...

தோல்வி என்பதை கடந்து, இந்த துரோகம் அவளுக்கு வலித்தது...

திருமணத்துக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், ஆராதனாவுடன் மாலையும் கழுத்துமாக அல்லவா வந்து நின்றான் யுகேந்திரன்...

அந்த கணம் இன்னுமே அவள் மனதில் அழுத்தமாக பதிந்து இருந்தது...

எந்த பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியும்...

நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்துக்கு எவ்வளவு ஆசையாக காத்து இருந்து இருப்பாள்.

கூடப் பிறந்த அக்காவே அவள் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டு இருந்தாள் அல்லவா...

ஜீரணிக்க முடியாத அந்த உணர்வு இன்று வரை இத்தனை வருடங்கள் கழித்தும் தேங்கி நின்றது...

சிவாங்கியை அணைத்து விடுவித்த கணம், கதவை திறந்து கொண்டே தயக்கத்துடன் உள்ளே வந்தாள் ஆராதனா...

அவளை வெறுப்புடன் பார்த்த தர்ஷனாவோ, "பச்" என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டே, "அவளை போக சொல்லுடி" என்றாள் சிவங்கியிடம்...

சுருக்கென்று இருந்தது ஆராதனாவுக்கு...

எதிர்பார்த்தது தான்...

ஆனாலும் ஒரு வலி...

திருத்த முடியாத தவறு...

மன்னிப்பு என்பதை தாண்டி அவளுக்கு எதுவும் ஏனையவர்களிடம் இருந்து கிடைத்து விட போவது இல்லை...

யுகேந்திரனின் மனைவி என்கின்ற ஒரே காரணத்துக்காக அடிப்படை மரியாதை கிடைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வளவு தான்...

அவளது திமிர், ஆணவம், கோபம், என்று எதுவுமே இப்போது அவளிடம் இல்லை... தன்மானம் கூட இல்லை...

எல்லாவற்றையும் துறந்து வருந்தி, கூனி குறுகி நிற்கின்றாள்...

யாரிடம் என்ன பேசுவது, எப்படி இதனை சரி செய்வது என்று தெரியாமல் இத்தனை வருடங்களை கடந்தும் விட்டாள்...

ஆனாலும் மனதில் ஒரு ஏக்கம்...

அன்புக்கான ஏக்கம்...

தந்தை மடியில் தலை வைத்து படுக்க முடியாதா? என்கின்ற ஏக்கம்...

தாயை கட்டிக் கொண்டு இருக்க முடியாதா? என்கின்ற ஏக்கம்...

தங்கையுடன் ஏட்டிக்கு போட்டி பேசி சிரிக்க முடியாதா? என்கின்ற ஏக்கம்...

என்னென்னவோ ஏக்கங்கள்...

அவள் தான் காரணம்...

மொத்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைக்க அவள் மட்டும் தான் காரணம்...

குற்ற உணர்வில் அவள் இயல்பையும் தன் மானத்தையும் இழந்து தலை குனிந்து நிற்கின்றாள்...

இதுவே பழைய ஆராதனாவாக இருந்தால், "நான் ஏன் டி போகணும்? இது என்னோட வீடு, இங்க தான் இருப்பேன், வேணும்னா நீ போடி" என்று கிண்டலாக திட்டிக் கொண்டே கட்டிலில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்து இருப்பாள்...

ஆனால் இன்று அவள் கால்கள் அந்த அறையை விட்டு வெளியே நோக்கி தான் நடந்தன...

இதற்கு தான் ஓரமாக யாருடனும் பேசாமல் அமர்ந்து இருந்தாள்...

ஆளாளுக்கு ஒன்று பேசி அவளை பந்து போல அங்கும் இங்கும் உதைத்துக் கொண்டல்லவா இருக்கின்றாள்...

ஒதுங்கியும் இருக்க முடியவில்லை, சேர்த்துக் கொள்ளவும் மாட்டேன் என்கின்றார்கள்...

என்ன தான் செய்வாள் பெண்ணவள்...

அதனை தொடர்ந்து, சமையலறைக்குள் செல்ல நினைத்தாள்.

அங்கே அவள் தாய் தேவி இருப்பார்...

எப்படியும் பேச மாட்டார் என்று தெரியும்...

அவள் பேசவும் எத்தனித்தது இல்லை...

சரி இன்றாவது பேசலாம் என்று நினைத்துக் கொண்டே உள்ளே செல்ல, அங்கே தேவியும் வேலை செய்யும் பெண் வள்ளியும் பலகாரங்களை தட்டில் வைத்துக் கொண்டு இருந்தார்கள்...

சமையலறைக்குள் வந்த ஆராதனாவை ஒரு கணம் பார்த்து விட்டு, வேலையை தொடர்ந்தார் தேவி...

வள்ளியோ, "வாங்கம்மா, ஏதும் சாப்பிடுறீங்களா?" என்று கேட்டபடி அங்கே இருந்த முறுக்கை எடுத்து நீட்ட, அதனை வெடுக்கென பிடுங்கி தட்டில் வைத்த தேவியோ, "நான் சொன்ன வேலையை மட்டும் பார்த்தா போதும்" என்றார்...

நொறுங்கியே விட்டாள் ஆராதனா...

இதனை விட அவளை வலிக்க வைக்க முடியுமா என்ன?

"சாப்பிட்டு போம்மா, பசிக்க பசிக்க இருப்பியா என்ன?" என்று அவள் பின்னால் திரிந்து ஊட்டிய அன்னை, ஒரு முறுக்கை கூட கொடுக்க மாட்டேன் என்கின்றாரே...

அப்படி என்றால் அந்த வெறுப்பு எந்த உச்சத்தில் இருக்க வேண்டும்...

கண்களும் கலங்கி விட்டன...

வள்ளிக்கு ஒரு மாதிரியாகி விட்டது...

ஆராதனாவின் ஏக்கம் கலந்த நீர் நிரம்பிய விழிகளை பார்க்கவே பாவமாக இருந்தது...

"பாவம் புள்ளம்மா" என்று அவளுக்காக அக்கணம் பரிந்து பேசிய ஒரே ஜீவன் வள்ளி...

"அவளா பாவம்? பச்சை துரோகி" என்று வெறுப்பாக வந்தது தேவியின் வார்த்தைகள்...

"கண்ட கண்ட ஆட்களுக்கு பாவம் பார்க்காம, வந்தவங்களுக்கு இத கொடு" என்று வள்ளியை அதட்டி தட்டை நீட்ட, அவரும் எதுவும் பேசாமல் தட்டை தூக்கிக் கொண்டே வெளியே சென்றார்...

ஆராதனா கண்ணில் தேங்கிய நீர் வழிந்து விடாமல் புடவை முந்தானையால் துடைத்து விட்டு, மீண்டும் முன்னறைக்கு வந்தவளுக்கு என்ன செய்வது எங்கே செல்வது? யாருடன் பேசுவது என்று தெரியவில்லை...

எங்கே சென்றாலும் வெறுப்பு மட்டுமே எஞ்சி இருக்கும் போது என்ன தான் செய்வாள்? மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவள் குழந்தையாவது அவளுடன் அமர்ந்து இருந்தால் நிம்மதியாக இருக்கும்...

அவள் கூட 'அப்பா, அப்பா' என்று யுகேந்திரனை தானே கட்டிக் கொள்கின்றாள்...

அத்தனை உறவுகள் சுற்றி இருந்தும் அனாதையாகி விட்ட உணர்வு...

அங்கே அமர்ந்து இருந்த யுகேந்திரன் எல்லாமே அவதானித்தான்...

அவனுக்கு புத்தி கூர்மை நிறையவே உண்டு...

ஆனாலும் அவனுக்கும் அவளை இழுத்து பிடிக்க இஷ்டம் இல்லை...

குழந்தை சம்பந்தமாக மட்டும் அவளுடன் பேசிக் கொள்வான் அவ்வளவு தான்...

அவள் மீது வெறுப்பை கொட்டியதும் இல்லை, அன்பை அள்ளி இறைத்ததும் இல்லை...

அவள் மீது இருக்கும் வெறுப்புகளை அவளே கையாளட்டும் என்று விட்டு விட்டான்...

அதற்குள் தலை போட இஷ்டம் இல்லை...

ஏற்கனவே தர்ஷனா விஷயத்தில் அவன் மீதும் சில மனக்கசப்புகள் ஆராதனாவின் குடும்பத்தினருக்கு இருந்தன...

அதனை இன்னும் அதிகமாக்க அவன் விரும்பவில்லை...

அவர்கள் மன வலிக்கு அவனும் ஒரு காரணம்.

அதனாலேயே ஒதுங்கிக் கொண்டான்...

மனைவிக்காக பேச வேண்டும் என்று எல்லாம் நினைக்கவில்லை...

அவளே பார்த்துக் கொள்ளட்டும் என்கின்ற மனநிலை தான்...

சற்று தள்ளி தலையை தாழ்த்தியபடி அமர்ந்து இருந்த ஆராதனாவை ஒரு கணம் தீர்க்கமாக பார்த்து விட்டு தனது நண்பர்களான தனஞ்செயன் மற்றும் கார்த்திகேயனுடன் பேச ஆரம்பித்து விட்டான்...

"கார்த்தி செட் ஆயிட்டான், நீ எப்போடா குடும்பஸ்தன் ஆக போற?" என்று தனஞ்செயனிடம் கேட்க, அவனோ, "முட்டாளுங்க தான் கல்யாணம் பண்ணுவாங்க, நான் புத்திசாலி டா" என்றான்...

"டேய் எங்களை பார்த்தா முட்டாள் போலவா தெரியுது?" என்று கார்த்திகேயன் சிரித்தபடி கேட்க, "அத என் வாயால வேற சொல்லனுமா?" என்று அவனும் கிண்டல் செய்து கொண்டு இருந்தான்...

இவர்கள் இதனை பேசிக் கொண்டு இருக்கும் போது அவ்வழியால் வந்த சிவாங்கியோ, 'க்கும், முட்டாளாம் முட்டாள்' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே கடந்து சென்று அமர்ந்து கொண்டவளுக்கு தனஞ்செயன் மீது கடுப்பின் உச்சம் தான்...

வேறு என்ன காரணம் இருக்க போகின்றது?

அவள் காதலை அவன் நிராகரித்துக் கொண்டே இருக்கும் எரிச்சல் தான்...

அலைபேசியை எடுத்து வாட்ஸ் அப்பை திறந்து, அவன் பெயரை பார்த்தாள்.

இன்னும் அவன் அவளை பிளாக் செய்து தான் இருந்தான்.

எத்தனை குறுஞ்செய்திகள் அனுப்பி இருப்பாள்...

நிலத்தில் போட்ட கல் போல எந்த முன்னேற்றமும் இல்லை...

கடுப்புடன் அலைபேசியை தள்ளி வைத்து விட்டு, ஏறிட்டு அவனை பார்க்க, அவள் பக்கம் திரும்பவே கூடாது என்று சத்தியம் செய்த போல, அவளை தவிர எல்லா இடமும் பார்த்துக் கொண்டு இருந்தான் தனஞ்செயன்...

 
Last edited:

அத்தியாயம் 2

சற்று நேரத்தில், "பொண்ண கூப்பிடலாமே" என்று கார்த்திகேயனின் தந்தை ராஜேந்திரன் சொல்ல, "இதோ கூப்பிடுறேன் சம்பந்தி" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்ற தேவியோ, கையுடன் தர்ஷனாவை அழைத்து வந்தார்...

அவளும் அங்கே வந்து தயக்கமாக நின்று இருக்க, அவள் கையில் காஃபி தட்டை நீட்டிய தேவியோ, "எல்லாருக்கும் கொடும்மா" என்று சொல்ல, தர்ஷனாவும் மௌனமாக எல்லாருக்கும் காஃபி கொடுத்தாள்...

முதலில் ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி லதாவுக்கு கொடுத்து விட்டு, அடுத்து கார்த்திகேயனிடம் நீட்டினாள்.

க்ரீம் நிற ஷேர்ட் அணிந்து இருந்தவனோ அவளை ஒரு கணம் பார்த்து விட்டு காஃபியை எடுக்க, அவள் விழிகள் அவனை தீண்ட கூட இல்லை...

பார்வையை அவனில் இருந்து தவிர்த்துக் கொண்டே தனஞ்செயனுக்கு காஃபியை கொடுத்தவளுக்கு அடுத்து அமர்ந்து இருப்பது யுகேந்திரன் என்று தெரியும்...

அவனிடம் காஃபி தட்டை நீட்டிய கணம், அவள் விழிகள் ஏறிட்டு இப்போது அவனை பார்த்தன...

அவனும் அவளை அந்த கணத்தில் பார்க்க, அவள் விழிகளே அவனை அதி உயர் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிக் கொண்டு இருந்தது...

தவறே செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டல்லவா இருக்கின்றாள் இந்த பெண்ணவள்...

சரியாகி விடுவாள் என்று கணித்து இருந்தான்.

இந்த திருமணத்துக்கு அவளை சம்மதிக்க வைக்க பட்ட பாடு அளப்பெரியது...

சட்டென அவளில் இருந்து பார்வையை அகற்றிக் கொண்டே, காஃபி கப்பை எடுக்க, "சித்தி எனக்கு" என்று கேட்டாள் இனியா...

குழந்தை என்பதால் என்னவோ இனியா மீது யாருமே வெறுப்பை கொட்டியது இல்லை.

அதே சமயம், அக்காவின் குழந்தை என்று தர்ஷனா அவளை தூக்கி கொஞ்சியதும் இல்லை.

ஏதோ ஒரு தடுமாற்றமும் நெருடலும்.

ஆனால் இனியா, "சித்தி" என்று வரும் போது தவிர்க்க முடியாமல், இனிமையாக பேசுவாள்...

அவள் இயல்பே அது தான்...

எல்லோரிடமும் அனுசரித்து சென்றே பழகி விட்டவள்...

யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைப்பவள்...

அதனாலேயே அதிகம் காயப்பட்டு நிற்கின்றாள்...

இப்போதும் மென் சிரிப்புடன் இனியாவை பார்த்து, "காஃபி நீ குடிக்க கூடாதும்மா, பாட்டியை ஜூஸ் கொடுக்க சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டு தலையை திருப்பி தேவியை பார்க்க, அவர் பெருமூச்சுடன் சமையலறைக்குள் சென்று ஜூஸை எடுத்து வந்து இனியாவிடம் நீட்டி இருந்தார்...

அதனை தொடர்ந்து, அங்கே அமர்ந்து இருந்த அன்பரசிக்கு காஃபியை தர்ஷனா நீட்டி இருக்க, 'நம்ம வீட்டுக்கு வர வேண்டிய மகராசி' என்று பெருமூச்சுடன் முணுமுணுத்தபடி அவரும் காஃபியை எடுக்க, அது தெளிவாக தர்ஷனா காதில் மட்டும் அல்ல, அங்கே ஓரமாக அமர்ந்து இருந்த ஆராதனா காதிலும் விழுந்தது...

நெஞ்சில் கல்லை தூக்கி வைத்த உணர்வு...

பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்...

அதனை தொடர்ந்து தர்ஷனா காஃபியை சிவாங்கிக்கு கொடுத்து விட்டு அவள் அருகே அமர்ந்து இருந்த ஆராதனா அருகே வர, அவளும் காஃபியை எடுக்க கையை நீட்ட, அவளுக்கு கொடுக்காமலே, விறு விறுவென அவளை கடந்து சென்று மீதி இருந்த காஃபியை அங்கே நின்ற வள்ளியிடம் நீட்டியவள், "அக்கா நீங்க எடுங்க" என்று சொல்லி விட்டு, தட்டை தேவியிடம் கொடுத்து இருந்தாள்.

சபை முன்னே இப்படி வெறுப்பை காறி உமிழ்வாள் என்று ஆராதனா எதிர்பார்க்க கூட இல்லை...

அசிங்கமாக இருந்தது...

ஆனால் இந்த தன்மானம் எல்லாம் கழற்றி வைத்து நாளாகி விட்டதே...

கையை மீண்டும் தன்னை நோக்கி இழுத்தபடி தலையை தாழ்த்திக் கொண்டாள்.

கண்களில் நீர் நிரம்பி எப்போது வழியும் என்கின்ற நிலை தான்...

அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

யுகேந்திரனின் விழிகள் ஒரு கணம் ஆராதனாவில் படிந்தது...

அவனுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது...

ஆனால், 'எதற்காக இப்படி செய்தாய்?' என்று கேள்வி எல்லாம் தர்ஷனாவை கேட்க முடியாது...

கேள்வி கேட்கும் இடத்தில் அவள் இல்லை...

கேள்வி கேட்கும் இடத்தில் நின்று இருப்பது என்னவோ அவனும் ஆராதனாவும் தான்...

ஒரு பெருமூச்சுடன் காஃபியை வாய்க்கருகே கொண்டு சென்றான்.

குடிக்க மனமே இல்லை...

ஆனாலும் திரும்ப வைக்கவும் முடியாது...

மனைவிக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டான் என்று சொல்லி விடுவார்கள்...

அவன் எங்கே சறுக்குவான் எங்கே பேசலாம் என்கின்ற நிலையில் தான் அவனை சுற்றி எல்லாருமே இருக்கின்றார்கள்...

அதற்கான சந்தர்ப்பத்தை அவன் கொடுக்க விரும்பவில்லை...

கஷ்டப்பட்டு காஃபியை விழுங்கியும் கொண்டான்...

ராஜேந்திரனோ, "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுறதுன்னா பேசட்டும்" என்று சொல்லிக் கொண்டே கார்த்திகேயனை பார்க்க, அவனோ பெருமூச்சுடன் எழுந்து கொள்ள, தேவியோ, "தர்ஷிம்மா, பேல்கனிக்கு மாப்பிள்ளையை அழைச்சிட்டு போம்மா" என்று சொன்னார்...

தர்ஷனாவும் எதுவும் சொல்லாமல் மாடியேற, அவளை தொடர்ந்து கார்த்திகேயனும் மாடி ஏறினான்...

இருவருக்குமே என்ன பேசுவது என்றே தெரியவில்லை...

பேல்கனியில் வந்து நின்றும் விட்டார்கள்...

குளிர் காற்று முகத்தில் பட நின்று இருந்தவர்களுக்கு எதில் ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை...

அவள் பேசப் போவது இல்லை என்று தெரியும்...

அவன் தான் பேசியாக வேண்டும்...

அவளுடன் பேசியதே இல்லை என்று சொல்ல முடியாது...

பேசி இருக்கின்றான்.

நண்பர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தள்ளி வைக்கும் அளவுக்கும் இல்லை...

யுகேந்திரனின் முறைப்பெண், திருமணம் செய்ய இருந்த பெண், என்கின்ற ரீதியில் ஒரு பழக்கம். அதுவும் அண்ணா, அண்ணா என்று பேசுவாள். அவன் தர்ஷனா என்று தான் அழைப்பான்...

அவ்வளவு தான் அவர்களுக்கு இடையான பந்தம்...

இன்று அதனை கடந்து என்ன பேசுவது என்றும் புரியவில்லை...

சில சமயம் யுகேந்திரன் அலைபேசியை எடுக்கவில்லை என்றால் கூட கார்த்திகேயனுக்கு அழைத்து, "அண்ணா, மாமா கிட்ட ஃபோனை கொடுக்கிறீங்களா?" என்று கேட்டு இருக்கின்றாள் தர்ஷனா...

ஒரு கோடு போட்டே பழகி விட்டவனுக்கு அதனை கடந்து செல்ல தயக்கம்...

ஆனால் தயங்கிக் கொண்டும் இருக்க முடியாது...

"இந்த கல்யாணத்துக்கு உனக்கு ஓகே தானே?" என்று அவனாக மௌனத்தை உடைத்தான்.

இப்போது தான் திரும்பி அவன் விழிகளை பார்த்தாள்...

அவள் விழிகளில் எப்போதும் இருக்கும் வலி இப்போதும் இருந்தது...

இல்லை என்று சொல்லவா முடியும்?

"ம்ம்" என்றாள்.

"ஓகே" என்றான்.

அதனை மீறி அவனால் என்ன சொல்லி விட முடியும்?

அவளும் மௌனமாக பெருமூச்சு ஒன்றை விட்டு இருக்க, "கீழ போகலாம்" என்று சொன்னவன் முதலில் நகர, அவனை தொடர்ந்து நகர்ந்து இருந்தாள் பெண்ணவள்...

திருமணம் இன்னும் இரு மாதங்களில் நடக்க இருப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருக்க, அனைவரும் பேசி விட்டு கிளம்பி விட்டார்கள்..

அப்போதும் கூட ஆராதனாவுடன் யாருமே பேசவில்லை...

அவளுக்கும் இதற்கு மேல் அவமானப்பட இஷ்டமும் இல்லை...

மௌனமாகவே வெளியேறி விட்டாள்...

யுகேந்திரன் தான் காரை ஓட்டினான்...

அருகே சிவாங்கி அமர்ந்து இருந்தாள்.

பின்னால் தான் மகளை வைத்துக் கொண்டு ஆராதனா அமர்ந்து இருக்க, அவள் அருகே அன்பரசி அமர்ந்து இருந்தார்...

கணவன் அருகே இருக்கின்றேன் என்று கேட்க கூட அவளுக்கு தகுதி இல்லை என்று அவளே நினைத்து ஒதுங்கிக் கொண்டவளுக்கு தானாக ஒதுங்கியே பழக்கமாகி விட்டது...

சிவாங்கி வேண்டும் என்றே முன்னால் வந்து அமர்ந்து கொள்வாள்...

இனியா அடம் பிடித்தால் மட்டும் மடியில் வைத்துக் கொள்வாள்...

அங்கும் ஆராதனாவை ஏன் என்று கேட்பது இல்லை...

இப்படி பல அவமானங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்த ஆராதனாவுக்கு மனதில் அப்படி ஒரு அழுத்தம்...

எத்தனை நாட்கள் தான் இந்த நரக வேதனையை அனுபவிப்பது?

அன்று குளித்து விட்டு வந்தவள் கண்ணில் பட்டது என்னவோ, யுகேந்திரனின் மார்பில் தூங்கிக் கொண்டு இருந்த இனியா தான்...

அவன் விழித்து தான் இருந்தான்.

எத்தனை நாட்கள் தான் பேசாமலே கடப்பது...

தவறு செய்தவள் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் நரக வேதனையை அனுபவிக்க முடியுமா என்ன?

"உங்க கிட்ட பேசலாமா மாமா?" என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

அதனை கேட்க கூட தயக்கம்.

அந்த நிலையில் தான் அவர்கள் உறவு இருந்தது...

மெதுவாக கண்களை விரித்தவனோ, "ஷ்" என்று சொல்லிக் கொண்டே, அவளை மெதுவாக பேசும்படி சைகை செய்து விட்டு, குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தவன், எழுந்து கொண்டே, கண்களால் பேல்கனியை காட்டினான்.

அவளும் மௌனமாக அங்கே செல்ல, அவனும் சென்றான்.

வானில் நிலவு பிரகாசித்துக் கொண்டு இருந்தது...

அவர்கள் வீட்டின் அருகே மூங்கில் தோட்டம் இருந்தது...

மெல்லிய காற்று வீசிக் கொண்டு இருந்தது...

அந்த காற்று ஸ்பரிசித்தால் உண்டான மூங்கில் தடிகள் முனகலில் மெல்லிய இசை அந்த இடத்தை நிரப்பிக் கொண்டு இருக்க, அவனிடம் மௌனம்...

மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டே நிலவை வெறித்து பார்த்தபடி நின்று இருந்தான்.

அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த பெண்ணவளோ, "நான் எங்கயாச்சும் போயிடட்டுமா?" என்று குரல் தழுதழுக்க கேட்டாள்.

அவன் அதிரவில்லை, அப்படியே நின்று இருந்தவனிடம் பெருமூச்சு...

சிறிய மௌனத்துக்கு பிறகு, "இங்க இருக்கிறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.

"என்ன பிரச்சனைன்னு இன்னைக்கு உங்களுக்கு தெரியவே இல்லையா?" என்று கேட்டாள்.

"தர்ஷி கல்யாணம் பண்ணுனா சரி ஆயிடும்" என்றாள்.

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல தான் அவன் பதில் இருந்தது...

எப்போதுமே அப்படி தான் பேசுவான்...

அவன் நெகிழ்வாக பேசி அவள் பார்த்ததே இல்லை...

இப்போதும் அதே இறுக்கம்...

"அப்போ நான் கல்யாணத்துக்கு வர மாட்டேன்" என்றாள்.

அவளை ஆழ்ந்து திரும்பி பார்த்தவன், "அவ உன் தங்கச்சி, வர்றதும் வராததும் உன் இஷ்டம்" என்றான்.

பொறுமை இழந்து விட்டாள்.

பிடி கொடுத்து பேசவே மாட்டேன் என்கின்றானே...

என்று பேசி இருக்கின்றான்? இன்று பேசுவதற்கு...

அவள் பலவீனமாக இருந்த நேரம் அவள் வாழ்க்கையை தனது கையில் எடுத்தவன் தான், இன்று வரை விரும்பியோ விரும்பாமலோ அவன் பிடியில் தான் இருக்கின்றாள்...

விட்டு விலகவும் முடியவில்லை, நெருங்கி செல்லவும் முடியவில்லை...

இந்த திருமணத்தை செய்யாமலே இருந்து இருக்கலாம் என்று இக்கணம் தோன்றியது...

"எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க? இப்படி என்னை கஷ்டப்படுத்துறதுக்காகவா?" என்று நேரடியாக கேட்டு விட்டாள்.

எத்தனை நாட்கள் தான் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டே இருப்பது...

இன்று கேட்டு விட வேண்டும் என்று தோன்றியது...

அவளை பார்த்து இருந்தவன் புருவம் மேலேறி கீழிறங்க, "நான் உன்னை கஷ்டப்படுத்துறேனா என்ன?" என்று கிண்டலாக கேட்டான்...

"சந்தோஷமாவும் வச்சுக்க உங்களுக்கு தோணலையே, இன்னைக்கு ஒரு வார்த்தை எனக்காக பேசலையே" என்று ஆதங்கமும் கண்ணீருமாக கேட்டாள்.

"அது உன் பிரச்சனை, நீ தான் பார்த்துக்கணும், அட்வொகேட் ஆராதனாவுக்கு பேச சொல்லி கொடுக்கணுமா என்ன?" என்று மீண்டும் அவன் குரலில் கிண்டல் தொனி தான்...

அவனை எப்படி கையாள்வது என்று அவளுக்கும் தெரியவில்லை...

தன்னை காக்க வந்த ரட்சகனா, இல்லை தன்னை வதைக்க வந்த ராட்சஷனா என்றும் புரியவில்லை...

நேரத்துக்கு ஒரு மாதிரி இருப்பான்...

பெரிதாக பேச மாட்டான்.

பேசும் வார்த்தைகள் கத்தி போல வந்து விழும்...

அவனிடம் பேசாமலே இருந்து இருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு பேச்சில் அலட்சியம் இருக்கும்...

தடுமாறி நின்றவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டான், அந்த ஒரு நன்றி உணர்வு அவளுக்கு எப்போதுமே இருந்தது...

சிறு வயதில் இருந்தே அவனுடன் சரியான உறவு அவளுக்கு இருக்கவே இல்லை...

சுருங்க சொல்ல போனால் அவனை பிடிக்கவே பிடிக்காது...

அவள் வாய்க்கு ஈடு கொடுத்து அதனை அடைக்க கூடியவன் அவன் ஒருவன் தான்...

தன்னை எதிர்த்து ஒருவன் நிற்கின்றான் என்று சிறு வயதில் தோன்றிய வெறுப்பு அது...

எதற்காக அவனை திருமணம் செய்தாள் என்று இன்று வரை தெரியவில்லை...

முடிவு எடுக்கும் மனநிலையில் அவள் அந்த கணம் இருக்கவில்லை...

முடிவை அவனே எடுத்துக் கொண்டான்...

அக்கணம் அவனது கைப்பாவையாகிக் கொண்டாள் அவள்...

அவள் வாழ்க்கையில் மொத்தமாக தோற்று விடாமல் கையை நீட்டி பிடித்துக் கொண்ட ஒரே காரணத்துக்காக எத்தனை வருடங்கள் இந்த வலியை அவள் சுமந்து கொண்டே வாழ்வது?

அதுவும் இன்றைய நாளுக்கு பிறகு, வெறுத்தே விட்டது...

மௌனமாக இருந்தால் குட்டிக் கொண்டே இருக்கின்றார்களே...

அவள் தனக்காக பேசியே ஆக வேண்டும் என்கின்ற விளிம்பில் கொண்டு நிறுத்தி விட்டார்கள்...

கண்ணீரை துடைத்து விட்டு, அவனை ஆழ்ந்து பார்த்தவள், "இனியாவுக்காக மட்டும் தான் நான் இங்க இருக்கிறேன்" என்றாள்.

"நீ இங்க இருந்து போகணும்னு ஆசைப்பட்டா தாராளமா கிளம்பலாம், இனியாவுக்காக நான் இருக்கேன், நீ இருக்கணும்னு அவசியம் இல்லை" என்றான். வழக்கம் போல ஏட்டிக்கு போட்டியாக வந்தது அவன் வார்த்தைகள்...

அவன் இதனை சொன்னதே, அவள் பதிலுக்காக தான்.

அவள் என்ன சொல்கின்றாள் என்று அவனுக்கு தெரிந்தாக வேண்டும்...

அவன் சொன்னதை கேட்டு கண நேரத்தில் அதிர்ந்த பெண்ணவள், ஏதோ சொல்ல வந்து, சட்டென வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள, அவளது ஒவ்வொரு அசைவையும் உணர்வுகளின் மாற்றத்தையும் நிலவின் வெளிச்சத்தில் ஆழ்ந்து நோக்கிக் கொண்டே இருந்தவன், "சொல்ல வந்ததை சொல்லி இருந்தின்னா, செவிப்பறையை கிழிச்சு இருப்பேன்" என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டலாக சொல்லி விட்டு அவன் உள்ளே செல்ல, அவன் முதுகை வெறித்து பார்த்துக் கொண்டே அதிர்ந்து நின்று இருந்தாள் பெண்ணவள்...

அவன் எதிர்பார்த்த வார்த்தை தான் அவள் வாயில் வர இருந்தது...

ஆனால் விழுங்கிக் கொண்டாள்.

இப்போது தலை விண் விண்ணென்று வலித்தது...

இத்தனை நாட்கள் யாரும் தன்னை சரியாக நடத்த மாட்டேன் என்கின்றார்கள் என்னும் அழுத்தம் இருந்தது...

ஆனால் இன்று அவனிடம் சிக்கிக் கொண்ட உணர்வு அவளுக்கு...

அவன் மனதில் என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை...

புரியாத புதிராக அவன்...

அந்த புதிரை விடுவிக்க முடியாமல், அதனை கடந்து செல்லவும் முடியாமல், தவித்துக் கொண்டு இருந்தாள் பாவையவள்...

அவன் கோபம் அவள் அறிந்தது தான், ஆனால் இனியா என்று வந்து விட்டால் உக்கிரமாகி விடுவான் என்று இக்கணம் புரிந்தது...

விலகி செல்ல வேண்டும் என்றால், இனியாவை விட்டு அவளால் செல்ல முடியாது, அதே சமயம் யுகேந்திரனை மீறி அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டும் செல்லவும் முடியாது...

வாழ்க்கை என்னும் சுழலில் அடிபட்ட பெண்ணவள் தான் அவள்...

இறுதியாக கரை சேர்ந்து விட்டோம் நினைத்து முடிக்க முதல், அது கரை அல்ல, இன்னொரு சுழல் என்று தெரிந்தது... யுகேந்திரன் என்னும் மீள முடியாத சுழல் இது...

பேல்கனியில் நின்று கொண்டே அறைக்குள் இருந்த கட்டிலை நோக்கினாள்.

அவன் வெற்று மார்பினுள் புகுந்து கொண்டே கோழிக் குஞ்சு போல படுத்து இருந்தாள் இனியா...

அவள் பிறந்த நேரம் கையில் ஏந்தியவன் தான், இன்று வரை, அவளை தனது உலகமாகவே நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்...

தாய் இல்லாமல் கூட இனியா இருந்து விடுவாள்...

அவன் இல்லை என்றால் வீட்டையே இரண்டாக்கி விடுவாள்...

இப்போது என்ன செய்வது என்கின்ற தடுமாற்றத்தின் நடுவே மீண்டும் வானத்தை நோக்கிய பெண்ணவளுக்கு சத்தமாக கத்தி அழ வேண்டும் என்கின்ற உணர்வு தான்...

ஆனால் முடியாது...

அழுது வலியை போக்க கூட அவளுக்கு இந்த வீட்டில் உரிமை இல்லை...

வாழ்க்கை முழுக்க வலித்துக் கொண்டே இருக்கின்றதே...

மனம் விட்டு சிரிக்க கூட முடியவில்லையே...

ஒரு சின்ன விடிவு கூட இருக்காதா? தன்னிதழ்களில் சின்ன புன்னகை தோன்றாதா? என்கின்ற ஏக்கம் அவளுக்கு... வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்கின்ற பயம் ஒரு பக்கம்...

கூண்டுக்குள் அடைபட்ட கிளியை போல ஒரு தவிப்பு...

அதுவும் சுற்றி இருக்கும் கிளிகள் கொத்திக் கொண்டே இருக்கும் போது, கூண்டுக்குள் இருக்கவும் முடியாமல், வெளியே பறக்கவும் முடியாமல், நரகத்தில் தத்தளித்துக் கொண்டல்லவா இருக்கின்றாள்?

 

அத்தியாயம் 3

ஆராதனாவுக்கு அன்று தூக்கமே வரவில்லை...

இனியாவுக்கு அடுத்த பக்கம் வந்து படுத்தவள், விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருக்க, அதே போல விட்டத்தை பார்த்தபடி படுத்து இருந்தது வேறு யாருமல்ல தர்ஷனா தான்...

மனம் எல்லாம் ரணமாக இருந்தது...

யுகேந்திரன் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவனை வைத்து யோசித்து கூட பார்க்க முடியாது...

திருமணம் முடிக்கவில்லை என்றால் குடியா மூழ்கி விட போகின்றது என்கின்ற கேள்வி அவளிடம்...

தன்னை இப்படியே விட்டு விட்டால் கூட போதும் என்று தோன்றியது...

ஆனால் இந்த சமூகம் பெண்களை தனியாக இருக்க விடுவது இல்லை...

இஷ்டமோ இல்லையோ திருமணம் செய்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தை திணித்து விடுகின்றாள்...

தர்ஷனா மட்டும் விதி விலக்கா என்ன?

திருமணம் என்பதை கடந்து, மோகம், குழந்தை என்று என்னென்னவோ இருக்கிறது...

அதனை எல்லாம் எப்படி கையாள்வது என்று வேறு தடுமாற்றம்...

திருமணத்திற்கு இன்னும் இரு மாதங்கள் இருந்தன...

நிறுத்தி விடுவது அவ்வளவு சுலபம் இல்லை...

நிறுத்தி விட காரணமும் இல்லை...

அதே சமயம் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை...

எல்லா கோபமும் ஆராதனா மீது திரும்பியது...

அவளால் குடும்ப மானம் சந்தி சிரித்தது முதல், தர்ஷனா திருமணமும் கூட நின்று விட்டது அல்லவா?’

இத்தனை வருடங்கள் அவள் மீது வெறுப்பு கூடியதே தவிர குறைந்த பாடு இல்லை...

புரண்டு புரண்டு படுத்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை...

அடுத்த நாள் காலையில் எழுந்து வந்து ஹாலினுள் அமர்ந்து கொண்டாள் தர்ஷனா...

அவளிடம் காஃபியை நீட்டிய தேவியோ, "என்னடி முகத்தை தூக்கி வச்சுட்டே இருக்க?" என்று கேட்டபடி அருகே அமர, சட்டென அவர் மடியில் படுத்துக் கொண்டே, "இந்த கல்யாணம் கண்டிப்பா பண்ணிக்கணுமாம்மா?" என்று உடைந்த குரலில் கேட்டாள்.

அவளது தலையை வருடிய தேவியோ, "எத்தனை நாளைக்கு தனியா இருக்க போற?" என்று கேட்க, "பிடிக்கவே இல்லம்மா" என்றாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, போக போக வாழ்க்கை பழகிடும்... கார்த்தி தெரிஞ்ச பையன் வேற, கண்டிப்பா உன்னை நல்லா பார்த்துப்பான்" என்று சொல்ல, அவளிடம் பதிலே இல்லை...

மௌனம் மட்டுமே...

அவள் நிலை இப்படி என்றால் ஆராதனாவோ காலையில் யுகேந்திரன் அலுவலகம் கிளம்பியதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த இனியாவை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டே இருந்தாள்.

சற்று கோபமும் வந்தது...

ஆனால் குழந்தையிடம் காட்டி என்ன பயன்?

அவளும் அழுத்தத்தில் தானே இருக்கின்றாள்...

ஹாலில் இனியா அழுது கொண்டே இருக்க, "அப்பா ஈவினிங் வந்திடுவார் ல" என்று சொல்லிக் கொண்டு இருக்க, அங்கே தான் அமர்ந்து இருந்த அன்பரசியோ, "உனக்கு குழந்தையை எப்படி சமாதானப்படுத்தணும்னு தெரியாதா? அழுதுட்டே இருக்கா... என்ன அம்மா நீ?" என்று வழக்கம் போல வார்த்தைகள் வந்து விழுந்தன...

சிவாங்கி காஃபியுடன் வந்து அமர்ந்து கொண்டே, "அவ எங்க பிள்ளை வளர்க்கிறா? அண்ணா தானே வளர்க்கிறார்" என்று தனது பாட்டுக்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

எப்போதுமே இப்படி தான்...

ஆளாளுக்கு குறை சொல்லி விடுவார்கள்...

ஆனால் தீர்வு சொல்ல யாருமே தயார் இல்லை...

மனித இயல்பே அது தான், அதுவும் ஆராதனா மீது அவ்வளவு வெறுப்பு இருக்கும் போது கேட்கவும் வேண்டுமா?

அன்பரசியோ, "அவன் ஒரு முட்டாள்... மகாலக்ஷ்மி போல ஒருத்தியை விட்டுட்டு" என்று ஆரம்பிக்க, "இப்போ நான் உங்க பையனை விட்டு போகணுமா? சொல்லிடுங்க, கிளம்பிடுறேன்" என்றாள் ஆதங்கமாக ஆராதனா...

திருமணம் செய்து இத்தனை வருடங்கள் கழித்து வாயை திறந்து இருக்கின்றாள் ஆராதனா...

இதற்கு மேல் அவளால் மூச்சு முட்ட இருக்க முடியவே இல்லை...

எத்தனை வருடங்கள் இப்படியே அடங்கி போயிருப்பது...

அது அவளது இயல்பும் இல்லை...

செய்த தவறுக்காக வாயை மூடி இருந்தாள்.

ஆனால் எத்தனை அவமானங்கள், வலிகள், வேதனைகள்...

இதுவே தொடர்ந்து விடுமோ என்கின்ற பயம் இப்போது தொற்றிக் கொண்டது...

திருமணம் செய்த பிறகு அவள் வீட்டினுள் அடைந்து தான் கிடப்பாள்...

எந்த நல்லது கெட்டதுக்கும் சென்றது இல்லை...

நேற்று தான் முதல் முறையாக தர்ஷனாவின் பெண் பார்க்கும் படலத்துக்காக கிளம்பி வந்தாள்.

ஒரே தடவையில் மொத்தமாக நொறுங்கி விட்டாள்...

எவ்வளவு தான் அவமானப்படுத்துவார்கள்?

அவள் யுகேந்திரனுடனான இந்த வாழ்க்கை வேண்டும் என்று கேட்டாளா? இல்லையே...

அவளை இங்கே கொண்டு நிறுத்தியது யுகேந்திரன் தானே...

அழுத்தி அழுத்தி, இதற்கு மேல் முடியாது என்கின்ற நிலையில் வாயை முதல் முறை திறந்து பேசினாள்...

சிவாங்கியோ, "ப்பா, சொன்ன உடனே கிளம்பிடுவ பாரு" என்று கிண்டலாக சொல்ல, அவளை வெறித்து பார்த்தாள் ஆராதனா...

என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்று தோன்றியது...

இடையில் இனியா வேறு, "அப்பா" என்று காலை அடித்து கத்திக் கொண்டே இருக்க, இருந்த ஆத்திரத்துக்கு, "வாயை மூடு டி" என்று குழந்தைக்கு திட்டிக் கொண்டே, அவள் தொடையில் அடியை போட, அதுவரை கத்திக் கொண்டு இருந்த இனியா, சட்டென வாயை மூடிக் கொண்டே, ஆராதனாவை அதிர்ந்து பார்த்தாள்...

முதல் முறை அடி வாங்கி இருக்கின்றாள்...

சத்தம் சட்டென நின்றது...

அன்பரசி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் எல்லாமே பார்த்துக் கொண்டு இருந்தவர், அன்று இரவு யுகேந்திரன் வரும்வரை காத்துக் கொண்டு இருந்தார்...

சின்ன விஷயம் கிடைத்தாலே ஊதி பெரிதாக்கி விடுவார், லட்டு போல விஷயம் கிடைத்து இருக்கிறது, கேட்கவும் வேண்டுமா என்ன?

யுகேந்திரனும் இரவு ஏழு மணி போல வீட்டுக்கு வந்தான்...

அவன் வந்து ஹாலில் அமர்ந்ததும், "அப்பா" என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள் இனியா...

"என்னம்மா ஆச்சு?" என்று அவன் பதற, "என்ன ஆச்சா? பேய் வந்து அடிக்கிற போல புள்ளைக்கு அடிக்கிறா, பொம்பிளையா அவ" என்று போட்டு கொடுத்து விட்டார் அன்பரசி...

அறைக்குள் இருந்து அவர் சொல்வதை கேட்ட ஆராதனாவுக்கு தலை தான் வலித்தது மிச்சம்...

தொடையில் ஒரு அடி போட்டாள், ஏதோ கட்டி வைத்து அடித்த போல சொல்லிக் கொண்டு இருக்கின்றார்.

இதற்கு இனியாவை தூக்குவதும் இல்லை, கொஞ்சுவதும் இல்லை...

இப்போது ஆராதனாவை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அக்கறை என்கின்ற முகமூடியை போட்டுக் கொண்டு வந்து விட்டார்...

இனியா வேறு, பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால் நூறு ரூபாய்க்கு நடிப்பாள்.

"ஆமாப்பா, என்ன அடி தெரியுமா?" என்று விம்மி விம்மி அழ, யுகேந்திரனுக்கு சுர்ரென்று ஏறியது...

"இங்க இரும்மா வர்றேன்" என்று சொல்லிக் கொண்டே ஷேர்ட்டின் கையை மடித்து விட்டபடி அறைக்குள் அதிரடியாக நுழைந்து கதவை தாழிட்டான் யுகேந்திரன்...

கட்டிலில் அமர்ந்தபடி அவனை ஏறிட்டு பார்த்த ஆராதனா மெதுவாக எழுந்து நிற்க, "எதுக்குடி குழந்தை மேல கை வச்ச?" என்று சிவந்த விழிகளுடன் கேட்டான்.

அவனை பார்க்க கொஞ்சம் பயமாக தான் இருந்தது அவளுக்கு...

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "கத்திட்டே இருந்தா, சின்னதா அடி போட்டேன், உங்க அம்மா சொல்ற போல எல்லாம் அடிக்கல" என்று முடிக்க முதல், "வாயை மூடு, அவ மேல கை வச்சதே தப்பு, நியாயம் வேற பேசுறியா?" என்று எகிறிக் கொண்டே வந்தான்...

அவளுக்கு முடியவே இல்லை... பொறுமை எங்கேயோ போய் விட்டது...

நெற்றில் இருந்து இப்படி தான் இருக்கின்றாள்...

இத்தனை வருடங்கள் அடக்கி வைத்த எல்லாமே இப்போது எரிமலை போல பீறிட்டுக் கொண்டே வந்தது...

"நான் தான் சொல்றேன் ல, மெதுவா தான் அடிச்சேன்" என்று பொறுமை இழந்து அவளும் குரலை உயர்த்த, அவள் முன்னே ஒற்றை விரலை நீட்டியவன், "என் கிட்ட குரலை உயர்த்துற வேலை வச்சுக்காதே" என்றான்...

மிரட்டலாக இருந்தது...

அவளுக்கு பிடிக்கவே இல்லை...

நெற்றில் இருந்தே இங்கு இருந்து சென்று விடலாமா? என்று தோன்றிக் கொண்டே இருந்த எண்ணம் இப்போது மேலும் அதிகரித்தது தான் மிச்சம்...

"நான் என்ன உங்க அடிமையா? பேசக் கூடாதுன்னா என்ன அர்த்தம்? எத்தனை நாள் தான் அடங்கி அடங்கி போறது? ஒருத்தி வாயை மூடிட்டு இருந்தா ஏறி மிதிச்சிட்டே இருப்பீங்களா? எனக்கு இந்த வீட்ல இருக்கவே இஷ்டம் இல்லை" என்று சத்தமாக சொன்னாள்.

அவளை தீர்க்கமாக பார்த்தவன், "சரி தான் போடி" என்று சொல்லிக் கொண்டே, ஆத்திரத்துடன் அவளது அலுமாரிக்குள் இருந்த உடைகளை இழுத்து கட்டிலில் போட்டான்...

அவள் இயல்பிலேயே கோபக்காரி, இத்தனை வருடங்கள் செய்த தவறுக்காக வாயை மூடி இருந்தாள் அவ்வளவு தான்...

அவளை விட அவன் கோபக்காரன் ஆயிற்றே...

அவனது அதிரடியை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தவள் சட்டென சுதாரித்துக் கொண்டே, "இதுக்கு மேல இந்த வீட்ல நான் எதுக்கு இருக்கணும்? என் பொண்ண தூக்கிட்டு கிளம்புறேன்" என்று சொன்னபடி உடையில் கையை வைக்க, "நீ மட்டும் கிளம்பு, அவ இங்க தான் இருப்பா" என்றான்.

என்ன பேசிக் கொண்டு இருக்கின்றான்? என்று தான் தோன்றியது...

மொத்தமாக திரும்பி, அவனை நேரே நோக்கியவள், "அவ என் பொண்ணு" என்றாள்.

"அவ எனக்கும் தான் பொண்ணு" என்று அவன் சொல்ல, "உங்களுக்கா பிறந்தா?" என்று ஒரே கேள்வி கேட்டாள்.

அவன் விழிகளை பார்த்துக் கொண்டே பயம் இன்றி கேட்டாள்.

எந்த கேள்வி அவள் வாயில் வரவே கூடாது என்று அவன் நினைத்தானோ, இன்று கேட்டு விட்டாள்.

ஒரு வினாடி கூட தாமதிக்கவில்லை, ஓங்கி அறைந்து இருந்தான்.

முதன் முறை ஒரு பெண்ணை ஓங்கி அடித்து இருந்தான்.

அவள் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் அடித்து இருந்தான்...

அவன் இப்படி அடித்து விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை, தடுமாறி கட்டிலில் விழுந்து விட்டாள்.

கன்னத்தை பொத்தியபடி அவனை அதிர்ந்து பார்த்தாள்.

ருத்ர மூர்த்தியாக நின்று இருந்தான்.

அவன் கலைந்த தலை, அரை குறையாக திறந்து விடப்பட்ட ஷேர்ட், சிவந்த விழிகள், புடைத்து கிளம்பிய நரம்புகள் என்று பார்க்கவே உக்கிரமாக இருந்தான்...

பெண்ணவள் பயந்தே விட்டாள்...

அவன் அதிகம் பேசவில்லை, "இன்னொரு தடவை இந்த வார்த்தை உன் வாயில வந்துச்சுன்னா கொன்னுடுவேன் பார்த்துக்கோ, பேர்த் சேர்ட்டிஃபிக்கெட் ல அப்பா என்கிற இடத்துல என் பேர் தானே இருக்கு, அந்த நாயோட பேர் இல்ல தானே, அப்புறம் என்னடி? நீ எவன் கூடவாச்சும் போ, அந்த நாய தேடி பிடிச்சு போறதுன்னாலும் போய் தொலை, ஆனா குழந்தை என்னோடது, என்னை மிருகமா மாத்திடாதே ஆராதனா, எனக்கும் பொறுமை ஓரளவுக்கு தான் இருக்கும்..." என்று சொல்லி விட்டு விறு விறுவென சென்று விட, அவன் பேசியதில் அவள் இதயம் மொத்தமாக நொறுங்கி விட்டது...

என்ன பேசி விட்டு செல்கின்றான்...

ஆதங்கமாக இருந்தது...

கோபமாக இருந்தது...

என்ன தான் அவளுடன் அவன் வாழவில்லை என்றாலும், சட்ட ரீதியாக அவன் தானே கணவன், சம்பிரதாய ரீதியாக அவன் தாலி கட்டி இருக்கின்றான்...

இப்படி அவள் இதயத்தை நொறுக்கி விட்டு செல்கின்றானே...

ஏதோ அவள் நடத்தை கெட்டவள் என்கின்ற ரீதியில் வார்த்தையை விட்டு செல்கின்றானே...

இங்கிருந்து சென்று விடுவதாக தான் கூறினாள் தவிர, வேறு ஆணுடன் செல்வதாக சொல்லவே இல்லை...

ஆதங்கம், கோபம், இயலாமை, வலி என்று என்னென்னவோ உணர்வுகள்...

கட்டிலில் அப்படியே குப்பற படுத்தவளுக்கு அழுகை நிற்கவே இல்லை...

விம்மி வெடித்து அழுதாள்...

முட்டாள் தனமாக ஒருவனை பற்றி மொத்தமாக அறியாமல் காதலித்த குற்றம், அவளை எங்கே கொண்டு நிறுத்தி இருக்கின்றது? என்று நினைக்க நினைக்க வலித்தது...

அவளுக்கு மட்டும் அல்ல, அவனுக்கும் வலித்தது...

எத்தனை தடவைகள் படித்து படித்து சொல்லி இருப்பான் அவள் காதலனை பற்றி...

கேட்டாளா அவள்?

காதல் அவள் கண்ணை அல்லவா மறைத்து விட்டது...

அன்று எடுத்த முட்டாள் முடிவினால் இன்று கூனி குறுகி நிற்கின்றாளே.

அந்த கோபம் தான் அவள் மீது அவனுக்கு...

அவள் சுயத்தை தொலைத்த ஆதங்கம்...

அவள் மீதான அவன் அன்பின் வெளிப்பாடு இந்த கோபம்...

எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தாள் என்கின்ற வலி, வேதனை, ஆதங்கம், இன்னும் என்னென்னவோ... அதுவும் இன்று அவள் கேட்ட கேள்வியை ஜீரணிக்கவே முடியவில்லை...

அழுத்தமாக இருந்தது...

அப்படியே வந்து இனியாவை தூக்கியவன், "அப்பா கூட ரைட் வர்றியா?" என்று கேட்க, "ஓகே" என்று அவளும் சொல்ல, இனியாவுடன் காரில் ஏறி புறப்பட்டு விட்டான்...

எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓட்டியவன் மனதில் சில வருடங்கள் முன்னே நடந்த நினைவுகள் தான் சுழல ஆரம்பித்து இருந்தன...

 

அத்தியாயம் 4

சில வருடங்கள் முன்னர்,

யுகேந்திரன், சிவாங்கி, தர்ஷனா, ஆராதனா என்று எல்லாருமே ஒன்றாக வளர்ந்தவர்கள் தான்.

மூன்று பெண்களின் நடுவே ஒரு பையன் என்றால் கேட்கவும் வேண்டுமா?

எல்லாருக்கும் யுகேந்திரன் என்றால் அப்படி ஒரு பிடித்தம்.

அவனும் அதற்கு ஏற்ற போல அனுசரணையாக தான் இருப்பான்.

கோபக்காரன் தான்...

ஆனாலும் அதிரடியாக எல்லாம் அதனை காட்டுவது இல்லை...

அவன் கோபத்தை அதிரடியாக காட்டுவது என்றால் ஆராதனாவிடம் மட்டுமே...

ஏன் என்றால் அவள் பேசுவதை கேட்டால் சாதுவுக்கே கோபம் தான் வரும்...

தர்ஷனா எப்போதுமே, "மாமா மாமா" என்று யுகேந்திரன் பின்னே சுற்றுவாள்.

சிவாங்கிக்கும் யுகேந்திரன் என்றால் மிகவுமே பிடிக்கும்...

ஆனால் ஆராதனாவுக்கு மட்டும் அவனை கண்டாலே வெறுப்பு தான்...

எங்கே சென்றாலும் அங்கே அவள் தான் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் அவள்...

ஆனால் ஒரே ஆண் பிள்ளை என்பதால் என்னவோ யுகேந்திரனுக்கு இருக்கும் முக்கியத்துவம் அவளுக்கு கிடைக்கவில்லை...

அதில் உண்டான கோபம் தான்.

அவனை எதற்கு எடுத்தாலும் சீண்டிக் கொண்டே இருப்பாள்...

ஏட்டிக்கு போட்டி பேசுவாள்...

ஆரம்பத்தில் அமைதியாக இருப்பான், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அவனும் எகிறி பாய ஆரம்பித்து விட்டான்.

ஸ்கூல் படிக்கும் போதே இருவருக்கும் இடையான பிரச்சனையை உணர்ந்த தேவியும் அன்பரசியும், "ரெண்டு பேரும் தயவு பண்ணி, ஒருத்தர் கூட இன்னொருத்தர் பேசாதீங்க" என்று சொல்லி பிரித்து வைத்து இருந்தார்கள்.

அதன் பிறகு பேசுவதே இல்லை... அவன் பேச மாட்டான், கண்டு கொள்ளவும் மாட்டான். ஆனால் அவள் எப்போதுமே ஜாடை பேசுவாள்... அவன் மீதான வன்மம் அவளிடம் அடங்கியபாடு இல்லை...

அதுவும், "மாமா மாமா" என்று தர்ஷனா பேசும் போதெல்லாம் எரிச்சலாக இருக்கும்...

"என்னடி வழிஞ்சுட்டு இருக்க? அவன் என்ன ஆணழகனா?" என்று திட்டுவாள்...

ஆனால் ஆணழகன் தான் அவன்...

சிரித்தால் ஒற்றைக் கன்னத்தில் குழி விழும்...

நேர்த்தியான கூர்மையான நாசி, ஈர்க்கும் விழிகள்...

மிதமான தாடி மீசை, ஆறடி உயரம், ஆண்மை பொருந்திய தேகம்... அவன் தோற்றத்தில் மட்டும் அல்ல, பேச்சிலும், செயலிலும் கூட ஆண்மையும் ஆளுமையும் அதிகமாகவே இருக்கும்... அவனை பிடிக்காது என்று எந்த பெண்ணும் சொல்ல மாட்டாள் ஆராதனா தவிர்த்து...

அவன் எஞ்சினியரிங் முடித்து விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து பிசினஸ் செய்ய ஆரம்பித்து விட்டான்.

ஆராதனாவோ சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தாள்.

சிவாங்கிக்கும், தர்ஷனாவுக்கும் ஒரே வயது தான்.

இருவரும் ப்ளஸ் டூ முடித்து விட்டு, கல்லூரி படிப்புக்காக காத்திருந்த தருணம் அது...

அன்று மாலை ஆறு மணியாகி விட்டது, தர்ஷனாவுக்கு பிறந்த நாள்... கேக்கை வெட்டாமல் அமர்ந்து இருந்தாள்.

அவள் நண்பிகளும் வந்து விட்டார்கள்...

உறவினர்களும் வந்து விட்டார்கள்...

அவள் காத்திருந்தது வேறு யாருக்காக இருக்க முடியும்? யுகேந்திரனுக்காக தான்...

ஆராதனா அன்று லீவு போட்டு கேக் செய்து, அலங்காரம் செய்து, எல்லாமே ஆயத்தமாக்கி இருந்தவளுக்கு இப்படி தர்ஷனா எல்லோரையும் காக்க வைத்துக் கொண்டு இருந்தது கடுப்பாக இருந்தது...

இதற்கு தர்ஷனாவுக்கு புடவை கட்டி விட்டு, அலங்காரம் செய்து விட்டதும் கூட அவள் தான்...

அங்கே சிவாங்கி அருகே அமர்ந்து இருந்த தர்ஷனாவை நோக்கி வந்த ஆராதனாவோ, "கேக்கை இப்போ வெட்டுறதுக்கு என்ன?" என்று கடுப்பாக கேட்க, "மாமா வந்திடட்டும் ஆரா" என்றாள் அவள்.

சுர்ரென்று ஏறி விட்டது அவளுக்கு...

அவளுக்கும் பொறுமைக்கும் வெகு தூரம் ஆயிற்றே...

"என்னடி பொல்லாத மாமா, அவன் வரலைன்னா குடியா மூழ்கிடும், இப்போ நீ கேக்கை வெட்டணும்" என்றாள் அழுத்தமாக...

சிவாங்கிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...

அவள் திட்டிக் கொண்டு இருப்பது அவளது அண்ணனுக்கு அல்லவா?

சட்டென எழுந்து நகர, "இப்போ நான் பேசிட்டு இருக்கிற நேரம் எதுக்கு எந்திரிக்கிற? உட்காரு" என்று இழுத்து அவளை அமர வைத்தாள் ஆராதனா...

"அண்ணா எப்போ வருவாருன்னு அம்மா கிட்ட கேட்டுட்டு வர்றேன் ஆரா" என்றாள் சிவாங்கி மென் குரலில்...

ஆராதனாவுடன் பேசவே பயம் ஆயிற்றே...

குரல் தானாக அடங்கி விடும்...

"ஓஹோ, நீ கேட்டா அவன் வந்திடுவானா? அவன் என்ன பெரிய ஆளா? அவன் இல்லன்னா பேர்த்டே கொண்டாட மாட்டாளா இவ?" என்று கடுப்பாக திட்டி விட்டு, தன்னையே பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த தர்ஷனாவை அழுத்தமாக பார்த்தவள், "கேக்கை வெட்டுடி" என்றாள் அதட்டலாக...

"ப்ளீஸ் டி, சொன்னா கேளு, சரி இல்லை ல" என்று அவள் கெஞ்சுதலாக கேட்க, "என்னடி சரி இல்லை? நான் காலேஜுக்கு லீவு போட்டு எல்லாமே பண்ணி இருக்கேன், உனக்கு அவன் வரணுமா கேக் வெட்ட? இப்போ நீ வெட்டலன்னா, இந்த வீட்டையே ரெண்டாக்கிடுவேன், என்னை பத்தி தெரியும் ல" என்றாள் ஆராதனா இடையில் கையை வைத்து அவளை மிரட்டலாக பார்த்துக் கொண்டே...

செய்யக் கூடியவள் தான், என்ன வேண்டும் என்றாலும் செய்யக் கூடியவள் தான்...

அவளுடன் பேசியோ சண்டை போட்டோ ஜெயிக்கவே முடியாது...

நினைத்ததை நடத்தி விட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பாள்...

அவளுடன் மல்லுக் கட்ட முடியாது என்று புரிந்த தர்ஷனாவோ, "அம்மா" என்று அழைத்தாள் தவிப்பாக...

எல்லாரையும் அனுசரித்து பழகியவளுக்கு யுகேந்திரனை விட்டு பிறந்த நாள் கொண்டாடவும் இஷ்டம் இல்லை...

ஆனால் ஆராதனாவுக்கு யுகேந்திரனுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உடைத்தாக வேண்டும் என்கின்ற அகங்காரம்...

இடையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த தர்ஷனா உதவிக்கு அழைத்தது என்னவோ தேவியை தான்...

ஆராதனாவோ, "இப்போ எதுக்குடி அவங்கள கூப்பிடுற?" என்று சீறிக் கொண்டு இருக்கும் போதே, "என்னடி ரெண்டு பேரும் அடிச்சுக்கிறீங்க?" என்று கேட்டபடி அங்கே வந்தார் தேவி...

தேவியை ஆழ்ந்து பார்த்த ஆராதனாவோ, "இவ இப்போ இங்க கேக் வெட்டணும்" என்றாள் அழுத்தமாக...

தேவியோ, "யுகன் வந்திடட்டுமே, ஃப்ரெண்ட்ஸ் கூட வந்துகிட்டு இருக்கான்னு அண்ணி இப்போ தான் சொன்னாங்க" என்று சொல்ல, ஆராதனாவுக்கு இன்னுமே ஆத்திரம்...

"அவன் வரலைன்னா, இங்க பேர்த் டே நடக்காதா என்ன? எல்லாமே அவளுக்காக இந்த வீட்ல பண்ணுனது நான், அவன் என்ன பண்ணி கிழிச்சிட்டான்னு எல்லாரும் அவனுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று சத்தமாகவே சீறினாள்...

"ஷ்ஷ், மெதுவா பேசுடி, அண்ணிக்கு கேட்டுட போகுது" என்று சொன்ன தேவி அப்போது தான் அங்கே அமர்ந்து இருந்த சிவாங்கியை பார்த்து, "பச்" என்றபடி நெற்றியை சீவ, சிவாங்கியோ, "பரவாயில்ல அத்தை, நான் எதுவும் நினைக்கல, இவ எப்போ தான் அண்ணாவை சரியா பேசி இருக்கா" என்று பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டாள்.

"ப்பா, உன் அண்ணன் அவ்ளோ பெரிய டேஷா?" என்று ஆராதனா ஆரம்பிக்க, "என்னடி பேச்சு இது, டேஷ் அது இதுன்னுட்டு?" என்று தேவி திட்டினார்...

"உங்க கிட்ட எனக்கென்ன பேச்சு? ஏய் இப்போ கேக் கட் பண்ண போறியா இல்லையா? நீ மட்டும் கேக் கட் பண்ணலேன்னா, கேக்கை தூக்கி கீழ அடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்றாள் ஆராதனா மிரட்டலாக...

அவள் கையை பற்றிய தர்ஷனாவோ, "ப்ளீஸ் ஆரா, இப்போ வந்திடுவார், கொஞ்சம் வெய்ட் பண்ணு" என்று கெஞ்சுதலாக கேட்க, "ஏய் கையை விடு" என்று அவள் கையை உதறி தள்ளியவள், "அவனுக்காக நான் எதுக்குடி வெய்ட் பண்ணனும்" என்று திட்டிக் கொண்டே தர்ஷனாவின் மணிக்கட்டை பற்றி இழுத்தாள்...

தர்ஷனாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...

அழுகை தான் வந்தது...

"ப்ளீஸ் ஆரா" என்று அவள் கெஞ்சும் போதே, கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, "ஏய் அழுறா, விடு டி" என்று தேவி, ஆராதனாவின் கையை விலக்கி விட முயல, "நீங்க சும்மா இருங்க" என்று அவரை திட்டி விட்டு, தர்ஷனாவை ஆக்ரோஷமாக இழுக்க, அங்கே "என்னம்மா பிரச்சனை?" என்றபடி வடிவேலும் வந்து விட்டார்...

"அப்பா, இப்போ அவ கேக் வெட்டணும், எல்லாமே பண்ணுனது நான், ஆனா அவ மாமா வரும் வரைக்கும் கேக் வெட்ட மாட்டாளாம், அவன் என்ன பெரிய பருப்பா?" என்று திட்ட, அது அங்கே இருந்த அன்பரசி காது வரை சென்று விழுந்தது...

மகனை இப்படி பேசுகின்றாள் என்று அவருக்கும் ஆத்திரம் தான்...

ஆனால் காட்டிக் கொள்ளவில்லை...

ஆராதனா தவிர, மீதி மூவரும் அன்பரசி குடும்பத்துடன் அவ்வளவு அனுராசனையாக இருப்பார்கள்...

கணவனை அவர் இழந்த நேரம், கையில் வைத்து தாங்கிக் கொண்டவர்கள் அவர்கள்...

அவர்களுக்காகவே அவர்களின் மகளின் திமிர் பேச்சுக்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு...

கடுப்பாக எழுந்து வெளியே வந்தவர் அழைத்தது என்னவோ யுகேந்திரனுக்கு தான்.

அவன் காரை ஓட்டிக் கொண்டு இருக்க, அவனுடன் தான் கார்த்திகேயன் மற்றும் தனஞ்செயன் என இருவரும் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள்...

காரின் ஸ்பீக்கரை ஆன் செய்த யுகேந்திரனும், "என்னம்மா?" என்று கேட்க, "எங்கடா இருக்க?" என்று கேட்டார் அவர்...

"ஒன் தெ வே, க்ளையண்ட் கூட மீட்டிங் முடிய லேட் ஆயிடுச்சு, கிஃப்ட் வாங்கிட்டு அங்க தான் வர்றோம்" என்று சொல்ல, "சீக்கிரம் வா, கேக் வெட்டலன்னு ஆராதனா வீட்டை ரெண்டாக்கிட்டு இருக்க, நீ இல்லாம கேக் வெட்ட மாட்டேன்னு தர்ஷி சொல்லிட்டு இருக்கா" என்று சொல்ல, "பக்கதுல வந்துட்டேன்" என்று சொல்லி அலைபேசியை கட் செய்ய, கார்த்திகேயனோ, "உன் மேல ஆராதனாவுக்கு அப்படி என்னடா கடுப்பு?" என்று கேட்டான்.

"ஆஹ். நான் ஆம்பிளை பிள்ளையா பிறந்துட்டேன் ல, அந்த கடுப்பு தான்" என்றான் சிரித்துக் கொண்டே...

"இது என்ன அநியாயமா இருக்கு?" என்று தனஞ்செயன் கேட்க, "அவ ஒரு செல்ஃப் சென்டர்ட் பெர்சன் டா, கல்யாண வீடுன்னா அவ தான் கல்யாண பொண்ணா இருக்கணும்னு நினைக்கிறவ" என்று சொல்ல, "அப்படியே அந்த இழவு வீட்டையும் சேர்த்து உதாரணமா சொல்ல வேண்டியது தானே" என்று தனஞ்செயன் கிண்டல் செய்ய, அவனை முறைத்த யுகேந்திரனோ, "அத சொல்ல கூடாதுன்னு தானே. பாதில நிறுத்தி இருக்கேன்" என்று சொன்னவனோ மேலும், "எனக்கு இம்போர்ட்டன்ஸ் தந்தாலே அவளுக்கு பிடிக்காது, சின்ன வயசில இருந்தே அப்படி தான், அதனால தான் அவ கூட பேசுறதே இல்லை, எப்போ பார்த்தாலும் நொய் நொய்ன்னு என்னை சீண்டிட்டே இருப்பா" என்று சலித்துக் கொண்டவன், ஆராதனாவின் வீட்டையும் நெருங்கி விட்டான்...

இதே சமயம், ஆராதனா தர்ஷனாவை விடுவதாக இல்லை, "கேக்கை வெட்டுடி" என்று மீண்டும் மீண்டும் அவளை கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

அவளும் முடிந்தவரை, கெஞ்சி அழுது என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள்...

ஆராதனா பிடித்த பிடியாக நின்றாள்.

இதற்கு மேல் முடியாது என்கின்ற நிலையில் இஷ்டமே இல்லாமல் எழுந்து கேக்கை நோக்கி இரு அடிகள் வைத்து இருக்க, அங்கே நண்பர்களுடன் உள்ளே வந்தான் யுகேந்திரன்...

"வந்துட்டேன் தர்ஷி, கேக்கை வெட்டு" என்று அவன் புன்னகையுடன் சொல்ல, இப்போது தர்ஷனாவுக்கு ஏதோ ஒரு பெரிய அழுத்தம் இறங்கிய உணர்வு...

மென் புன்னகையுடன், "வாங்க மாமா, உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டே இருந்தேன்" என்று சொன்னவள் கேக்கை நோக்கி ஆர்வமாக செல்ல, அதுவரை அவளது முக மாற்றத்தை பார்த்துக் கொண்டே இருந்த ஆராதனாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்...

அவனை பார்த்ததும் அவள் முகத்தில் இப்படி ஒரு பூரிப்பா? அப்படி என்றால் தன்னை விட அவன் தான் எல்லாருக்குமே முக்கியமா? என்று ஆத்திரம்...

அவனை பார்த்ததுமே அதுவரை அழுத்தமாக இருந்த அவள் வீட்டினரும் சரி, அவன் வீட்டினரும் சரி, இயல்பாக புன்னகைத்துக் கொண்டார்கள்...

அவள் வெறுப்பதே இதனை தானே...

அப்படி என்ன செய்து கிழித்து விட்டான் என்று அவனை தலையில் வைத்து கொண்டாடுகின்றார்கள் என்று ஆத்திரம்...

ஏதோ தோற்று விட்ட உணர்வு...

அதுவும் தர்ஷனா அவன் வந்ததும் சந்தோஷமாக கேக் வெட்ட நடந்து செல்வதை பார்க்க பார்க்க, மனம் வெம்பியது...

பொறுமையும் தன்னிலையும் இழந்த பெண்ணவளுக்கு இந்த தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை.

விறு விறுவென தர்ஷனாவை கடந்து சென்றவள், மேசையில் இருந்த கேக்கை தூக்கி கீழே ஒரே போடு போட்டு, காலினால் ஓங்கி மிதித்து விட்டு, தர்ஷனாவை பார்த்தவள், "நான் செய்த கேக் தானே, நீ ஒன்னும் வெட்டி கிழிக்க தேவையில்லை" என்றாளே பார்க்கலாம்...

சபை நடுவே இப்படி ஒரு கீழ் தரமான நடவடிக்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை...

அன்பரசியோ, 'பஜாரி' என்று வாய்க்குள் திட்டிக் கொள்ள, அவளை ஏறிட்டு பார்த்த தர்ஷனாவின் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது...

அதுவரை பொறுமையாக இருந்த யுகேந்திரனுக்கோ சுர்ரென்று ஆத்திரம்...

"சாடிஸ்ட்" என்று வாய் விட்டே திட்டியவன், அருகே நின்ற கார்த்திகேயனிடம் கார் கீயை நீட்டி, காதினுள் ஏதோ சொல்லி விட்டு, கண்களை மூடி இதழ் குவித்து ஊதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

தேவியோ, "என்னடி இது?" என்று சீற, ஆராதனாவோ, "இங்க எல்லாமே நான் விடிய விடிய பண்ணுவேனாம், அவன் வந்தா தான் இவ கேக் வெட்டுவாளாம், அப்படி ஒரு கேக் வெட்டவும் தேவையில்லை, இப்படி ஒரு பேர்த் டே கொண்டாடவும் தேவையில்லை" என்று சீறி விட்டு அணிந்து இருந்த சேலையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டே விறு விறுவென தனது அறைக்குள் செல்ல, அங்கே விம்மி அழுது கொண்டு இருந்த தர்ஷனா அருகே வந்த சிவாங்கியோ, "பேர்த் டே அதுவுமா அழாதடி, அவள பத்தி தான் உனக்கு தெரியுமே" என்று சமாதானம் சொல்லி, அங்கே இருக்கும் இருக்கையில் அமர வைத்தாள்.

தேவியோ, "உங்க பொண்ணுக்கு எவ்ளோ எகத்தாளம் பார்த்தீங்களா? அவ ராங்கி தனத்தை என்னன்னு கேட்கவே மாட்டிங்களா?" என்று வடிவேலிடம் சீற, "ஆமா அப்படியே நான் சொன்னா கேட்டுட போறா தானே, நீ சொல்ல வேண்டியது தானே, உனக்கும் பொண்ணு தானே" என்று இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்...

யுகேந்திரனோ, "அத்தை, மாமா, நீங்க எதுக்கு சண்டை போடுறீங்க, கேக் தானே போயிடுச்சு, விடுங்க" என்று சொன்னவன், அவனே அங்கே இருந்த டிஸ்ஸுவை எடுத்து, நிலத்தில் கிடந்த கேக்கை சுத்தம் செய்ய, "நீ விடுப்பா, நான் பார்த்துக்கிறேன்" என்றபடி தேவி வந்த அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்...

அவனும் பிடரியை வருடிக் கொண்டே தனஞ்செயன் அருகே வர, அவனோ, "என்ன பொண்ணுடா இது? இவள கட்டிக்க போறவனுக்கு இப்போவே ரெஸ்ட் இன் பீஸ் சொல்லி வைக்கணும்" என்று சொல்ல, அதுவரை இறுக்கமாக இருந்த யுகேந்திரனின் இதழ்கள் விரிய, "சீரியசான நேரத்துல காமெடி பண்ணிட்டு இருக்காதடா" என்று சொல்லிக் கொண்டான்...

இதே சமயம், வீட்டை ரெண்டாக்கி விட்டு அறைக்குள் வந்த ஆராதனா ஒன்றும் சந்தோஷமாக இருக்கவில்லை...

அழுகை தான் அவளுக்கும்...

என்ன தலையணைக்குள் முகத்தை புதைத்து அழுதாள்...

செய்தது தவறு என்று தெரியும்...

அதிகப்படி என்று நன்றாகவே தெரியும்...

தர்ஷனாவின் இதயத்தை காயப்படுத்தி இருக்கின்றாள் என்றும் தெரியும்...

ஆனாலும் யுகேந்திரன் மீது இருக்கும் வன்மத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்தவே முடியவில்லையே...

எல்லாவற்றையும் கொட்டி விட்டு அவளும் சேர்ந்து அழுதது தான் மிச்சம்...

 
Status
Not open for further replies.
Top