ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாயலீலா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மாயலீலா - கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 1




பல ஏக்கர்களை விழுங்கிய பிரமாண்டமான மாளிகை அது. வீட்டின் வெளியில் 'மாயா மாயா' என்று எதிரொலித்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டமான குரல்களை கேட்டும் கேட்காததுமாக அமர்ந்திருந்தாள் நடிகை மாயா.

சினிமா துறையில் கொட்டி கட்டி பறக்கும் இளம் நடிகை. பல ரசிகர்களின் கனவு கன்னியும் கூட.! பதினான்கு வயதில் திரைதுறையில் காலடி எடுத்து வைத்தவள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடினமாக போராடி இறுதியில் முன்னணி நடிகையின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாள்.

முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்பு கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் அவ்வளவாக ஓடவில்லை தான். ஆனாலும் அடுத்தடுத்து இவளிடம் வந்த படங்கள் சினிமா துறையில் காலூன்றி நின்று சாதிக்க வைக்க கை குடுத்து நடிப்பும் அவளின் உயிர் மூச்சாகியது.

குடும்ப பெண்ணாக நடித்ததில் எந்த பயனும் இல்லாமல் போனதில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தும் விட்டாள். இப்போது புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் வீட்டிற்கு இவள் வந்திருப்பது வெளியில் கசிந்ததில் ரசிகர் கூட்டமும் கூடி விட்டது அவ்விடத்தில்.!

திடீரென்று முளைத்த கூட்டத்தை அப்புறப்படுத்தும் வேலையில் காவல் துறையினர் இறங்கிட, இளைஞர்கள் கூட்டம் நகர்வேனா என்று விடாமல் அவ்விடத்தையே விடாமல் சுற்றி வந்தது.

இது எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த படத்திற்கான கதை பற்றி கூறுவதை அமைதியாக கேட்டிருந்தாள் மாயா. எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

"மாயா இந்த படத்துல கொஞ்சம் கவர்ச்சி காட்ட வேண்டி வரும்.. உனக்கு ஓக்கேவா.?" என்று தயங்கி தயங்கி கேட்டவரின் மேல் அசால்ட்டாக ஒரு பார்வையை வீசி "அது எப்பவும் காட்டறது தானே.? இப்ப என்ன புதுசா கேட்கற மாதிரி கேட்கறீங்க.?" என்று கேட்டு தோளை குலுக்கினாள்.

கேட்க நினைத்ததை "இல்ல மாயா... உனக்கு கல்யாணம்னு... ஒருவேளை வருண் வேணாம்னு சொன்னா..?" என்று கேட்டவருக்கு சற்று பயம் எங்கு இவள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விட்டால்.?

"மேரேஜ் நடந்தா என்ன.? என் நடிப்புல யாரும் தலையிடறது எனக்கு பிடிக்காது" என்றாள் பட்டென்று. இதன் பிறகே சீராக மூச்சு விடவும் முடிந்தது அவரால்.

கதையை கூற வந்தவரை தடுத்து "ஹீரோ யாரு.?" என்று கேட்க, தயங்கி தயங்கி "வருண் தான் மாயா" என்றவரை பார்வையால் பொசுக்கி "***** இவரை போடுங்க" என்றாள் கட்டளையுடன்.

"கதைக்கு வருண் தான் கரெக்ட்டா இருப்பாரு.. நீங்க தான் மேரேஜ் பண்ணிக்க போறீங்களே.? அப்பறம் என்ன.? ரெண்டு பேரும் ஒன்னா நடிச்சு என் படத்தை ஹிட் பண்ணி குடுத்துருங்க" என்று சாதாரணமாக கூறியவரின் வார்த்தையை அவள் காதில் வாங்கியதில் தெரியவில்லை.

"தாராளமா வேற ஹீரோயினை நீங்க பார்த்துக்கலாம்" என்றவள் யாரின் பேச்சையும் கேட்காமல் வெளியேறினாள். அவரின் பார்வையும் சகிக்கவில்லை. பட வாய்ப்பு வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் செல்வது எல்லாம் நின்று இதோடு இரண்டு வருடங்களாகி இருந்தது.

அவளுக்கு பிடித்தால் மட்டுமே சம்மதிப்பாள். இல்லையென்றால் இப்படித்தான் யாரையும் மதிக்காமல் கிளம்பி விடுவாள். இவள் அமைதியாக இருந்தாலும் இவளை பற்றி எதிர்மறை கருத்துக்கள் தான் அதிகமாக உலாவி வருகின்றன இரண்டு வருடங்களாக.!

அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க பழகி விட்டாள். அதனை எல்லாம் கடந்தும் வந்து விட்டாள். என்ன தான் எதிர்மறை கருத்துக்கள் உலாவினாலும் இவளின் ரசிகர் கூட்டங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

முதலில் வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து ரசிகர்களை குளிர்வித்தவள் இப்போது வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே அரிதாக இருந்தது. அப்போதும் இவளின் படம் என்றால் ரசிகர்களுக்கு ஏகப்போக குஷி தான். அதுவும் அவளுக்கு பிடித்த கதையம்சம் என்றால் மட்டும் நடிக்கவும் சம்மதிக்கிறாள்.

அவளின் உதவியாளர் மீராவுக்கு அழைத்து "நான் சொன்னதை பண்ணிட்டியா.?" என்று கேட்க, "மேடம் என்ன இருந்தாலும் அவங்க வருண் சாரோட தங்கச்சி.. இது வருண் சாருக்கு தெரிஞ்சா உங்க ரெண்டு பேருக்கும் தான் சண்டை வரும்.. நீங்க இப்படி பண்ண வேணாமே.? ப்ளீஸ் மேடம்" என்றாள் அவளின் நலனில் அக்கறை கொண்டு.

"சொன்னதை மட்டும் பண்ணு.. தேவையில்லாம வேற எதுவும் பேச நினைக்காத.. நீ இல்லனா என்னால இதைய பண்ண முடியாதா என்ன.? உன்னால முடியலனா விலகிரு.. நான் வேற யாராவதை வெச்சு பண்ணிருக்கறேன்" என்று நெற்றி பொட்டில் அடித்ததை போல் கூறியதில் "சரிங்க மேடம்" என்றாள் மீரா வேறு வழியின்றி.!

போனையே வெறித்து 'மேடம் பண்றது சரியா.? தப்பா.? அவங்க நிலைல இருந்து பார்த்தா சரினு தான் தோணுது.. ஆனா இதனால மேடமோட வாழ்க்கை கேள்வி குறியாகிருச்சுனா.?' என்று வருந்தினாள். ஆனாலும் மாயா சொன்னதை செய்ய தவறவும் இல்லை.

அடுத்த சில மணிநேரங்களில் 'பிரபல நடிகரான வருண்தேவனின் சகோதரனான ராம்பிரபு பல பெண்களுடன் உல்லாசம்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக மாட்டினார்' என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் சுடச்சுட செய்திகளாக மாறியது இந்நிகழ்வு.

இதோடு ராம்பிரபு கைதாகும் செய்திகளும் ஒலிப்பரப்பாகிட, அதை தனது அலைப்பேசியில் புன்னகை முகத்துடன் பார்த்திருந்தாள் மாயா. அவளின் முகத்தில் எதையோ பெரியதாக சாதித்து விட்ட நெகிழ்ச்சி. இதழ்களும் தாராளமாக விரிந்து கொண்டது.

ஹைதராபாத் படப்பிடிப்பு தளமொன்றில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் கண்மூடி படுத்திருந்தான் வருண்தேவன். நடிகன் என்பதாலோ அவனின் தோற்றம் அடிக்கடி மாறிடும். ஒரு சமயம் உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கோடு வைத்திருக்க வேண்டும். அதுவே இன்னொரு சமயம் உடலை முற்றிலும் குறைத்திருக்க வேண்டும்.

இப்போது நடக்கும் படப்பிடிப்புக்காக அவனின் உடல் எடை சற்று ஏறி இருந்தது. பார்க்கவும் அவனின் தோற்றம் மாறுப்பட்டிருந்தது.

அலைப்பேசி அழைத்திட, அதை எடுத்து பேசியவனின் விழிகள் சட்டென்று முழித்து கொண்டது மட்டுமின்றி இவ்வளவு நேரம் அவனை ஒட்டி கொண்டிருந்த சோம்பலும் விரட்டி அடிக்கப்பட்டிருந்தது.

சட்டென்று தொலைக்காட்சியை உயர்ப்பிக்க, அதில் தன் தம்பி கைதான செய்தியை கண் இமைக்காமல் பார்த்தவனுக்கு இதற்கு காரணம் யாரென்று அவனுக்கு தெரியும்.

ஆனால் இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று தான் அவன் எதிர்பார்க்கவில்லை. 'மாயா' என்று பெண்ணவளின் பெயரை பல்லிடுக்கில் நசுக்கியவனுக்கு சற்று கடுப்பு தான்.

அன்னை அழைத்த அழைப்பையும் அவன் எடுக்கவில்லை. தங்கையின் அழைப்பையும் ஏற்கவில்லை. யாரிடமும் பேச அவனுக்கு துணிவுமில்லை.

அவன் எதிர்பார்த்து காத்திருந்தது மாயாவின் அழைப்பை மட்டும் தான். அந்தோ பரிதாபம் அவள் இவனுக்கு அழைக்கவே இல்லை. நான் ஏன் உனக்கு அழைக்க வேண்டும்.? என்ற எண்ணம் போலும். ஆடவனிடம் பேசவும் நினைக்கவில்லை.

சொன்னதை செய்து விட்டேன் என்று கூறிடவாவது தனக்கு அழைத்திருக்கலாமோ.? என்று தான் எண்ணினான் அவன்.

"அண்ணா இப்ப நீ போனை எடுக்கல நானும் அம்மாவும் விஷத்தை குடிச்சுருவோம்" என்று தங்கையின் மிரட்டல் வீடியோவும் வந்திட, இருந்த இடத்திலே பிடித்து வைத்த பிள்ளையாராகி போனான் வருண்.

தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருந்த செய்தியை தன்னை மறந்து பே வென்று பார்த்து நின்றிருந்தவளின் முதுகில் சுள்ளென்று ஒரு வலிய கரம் தடத்தை பதிக்க, அதில் துள்ளி விலகி யாரென்று திரும்பி பார்த்தவளுக்கு மூச்சே நின்றது போலானது.

அச்சத்தில் வெலவெலத்து நின்றவளுக்கு கைகால்கள் வேறு ஆட்டம் காண தொடங்கியது. விழிகளும் கலங்கி உயிர்ப்பின்றி நின்றாள் அவள் லீலா.

"ஏய் கழுதை உன்கிட்ட என்ன சொன்னேன்.? நீ சொகுசா டிவி பார்த்துட்டு இருக்கீயா.? அப்பறம் எப்ப வேலையை முடிக்கறது.? சோறு மட்டும் நேராநேரத்துக்கு கரெக்ட்டா திங்க தெரியுதுல.? வேலை செய்ய மட்டும் நோவுதா.?" என்று மனசாட்சியின்றி பேசியது வேறு யாருமில்லை லீலாவின் பெரியம்மா தான்.

மறுவார்த்தை பேசினாலும் திட்டுவார். பேசாமல் அமைதியாக இருந்தாலும் கடித்து குதறுவார். அதனாலே "இல்ல பெரிம்மா.." என்று திணறிட, "போ போய் துணியை துவைச்சு போட்டுட்டு வந்து வீட்டை துடைச்சு விட்டுட்டு சாப்பிட்டு ஆக்கற வேலையை பாரு" என்று நாயை விரட்டுவதை போல் விரட்டினார். இது எப்போது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் இன்றோ லீலாவின் மனது வெறுத்து போனது.

'தன் விருப்பத்தை செய்ய கூட தனக்கு உரிமையில்லை.. ஒரு நிமிடம் அந்த செய்தியை பார்த்து விட்டதில் இந்த வீடே தலைகீழாக மாறி விட்டதா என்ன.? நாயை விரட்டுவது போல் தன்னையும் விரட்டுகிறார்களே.? ஒரு நாளாவது தன்னிடம் அன்பாக பேச மாட்டார்களா.?' என்று ஏங்க தொடங்கிய மனதை கடிவாளமிட்டு அடக்க முயன்றவளுக்கு தோல்வியே கிட்டியது

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் துவைக்கும் கல்லின் கீழே அமர்ந்தவளுக்கு அழுகையை அடக்கவே பெரும்பாடாக இருக்க, வாய்விட்டு கதறினாள்
அப்பேதை. 'அழுகாத' என்று கூற தான் ஆளில்லாமல் போனது.




தொடரும்..
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 2


வெயில் கொளுத்தியது. அதை விட பெண்ணவளின் விழிநீர் அனலாக வெளி வந்தது. மறுத்து பேச முடியாத தன்னிலையை எண்ணி மருகினாள். எனக்கென்று யாருமில்லையா.? தன்னிடம் அன்பு காட்ட ஒரு ஜீவனும் இல்லையா.? என்று தான் பல வித எண்ணங்கள்.

அவளின் அழுகையை நிறுத்தவே அவள் வளர்க்கும் நாய் விடாமல் குறைத்து அதன் பாஷையில் அவளின் எண்ணத்தை தன்புறம் திரும்ப வைத்தது.

உடனே அழுகையை நிறுத்தி எழுந்து ஓடியவள் கட்டி வைத்திருந்த கயிறை அவிழ்த்து விட்டவள் "அச்சோ சாரிடா பட்டு.. உனக்கு உணவு வைக்கவும் மறந்து விட்டேன்.. பசியோடு இருக்கீயா.? கொஞ்ச நேரம் பொறுத்துக்கடா தங்கம்.. வேலையை முடிச்சுட்டு உனக்கு சாப்பாடு வெக்கறேன்.. இப்பவே உள்ள போனா பெரியம்மா திட்டுவாங்க" என்று அதனுடன் உரையாடியவள் வேகமாக துணிகளை துவைக்க தொடங்கினாள்.

அந்த வீட்டில் இவளுக்கென்று இருக்கும் ஒரு ஜீவன். இவள் சோகமாக 'தனக்கு யாருமில்லையா.?' என்று நினைக்கும் போதெல்லாம் 'உனக்கு நான் இருக்கிறேன்' என்று அதன் பாஷையில் உணர்த்தும் வாயில்லா ஜீவன்.

அவள் பெரியம்மா சரோஜா வெளியில் வந்து எட்டி பார்த்து விட்டு மீண்டும் உள்ளே சென்று கணவரிடம் "இன்னும் இதைய எத்தனை நாளைக்கு நம்ம வீட்டுல வெச்சுருக்க முடியும்.? ஊருக்குள்ள என்ன பேச்சு பேசுவாங்க.? எவனாவது கிடைச்சா அவன்கிட்ட தள்ளி விட்டற வேண்டியது தான்.. அதற்கான வேலையை பாருங்க" என்றார் வெறுப்பாக.

"இப்பவே பேசிட்டு தான் இருக்காங்க.. முதல்ல நம்ம பொண்ணு மறுவீட்டுக்கு வந்துட்டு போகட்டும்.. அப்பறம் மத்ததை பேசிக்கலாம்.. இதுக்கு வேற தனியா செலவு செஞ்சு கல்யாணம் பண்ணி வெக்கணுமா.? வர்றவன் நகைநட்டு கேட்டா என்ன பண்றது.?" என்று பாஸ்கரும் அவரின் எண்ணத்தில் எழுந்ததையும் கேள்வியாக கேட்டார்.

சற்று கடுகடுப்புடன் "அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாதுனு ஆரம்பத்துலயே சொல்லிரணும்.. இவ இருக்கற லட்சணத்துக்கு ஏதோ வத்தல்தொத்தலா ஒரு பையன் கிடைச்சா போதும்.. தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வெய்யுங்க.. இதைய இங்கயே ஒரு வேலைக்காரியா வெச்சுருக்கலாம்னு தான் நினைச்சேன்..

ஆனா நேத்து வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரி லீலாவோட சொத்துல வாழ்ந்துட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணாம உன் பொண்ணுக்கு ஆடம்பரமா கல்யாணம் பண்ணி வெச்சுருக்கீயானு முகத்துக்கு நேராவே கேட்டுட்டு போறா.. எனக்கு எவ்ளோ அவமானமா போய்ருச்சு தெரியுமா.?

என் முன்னாடியே இப்படி பேசறவ நமக்கு தெரியாம என்ன என்னவெல்லாம் பேசிட்டு இருப்பா.?" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாஸ்கரும் இதை ஆமோதித்து "சரி ஏதாவது பண்ண முடியுதானு பார்க்கறேன்.. இந்த ஊருக்காருகிட்ட மாப்பிள்ளை பார்க்க சொன்னா அதுக்கும் ஏதாவது குறை பேசிட்டு திரிவாங்க.. வேற ஊருல ஒரு பையனை பிடிச்சு அங்கயே கல்யாணத்தையும் முடிச்சு அவளை விட்டுட்டு வந்தரலாம்.. நம்ம வேலையும் முடிஞ்சுச்சு..

போனது தான் போனாங்க இதைய கூடவே கூட்டிட்டு போய்ருக்க வேண்டியது தானே.? நம்ம தலைல கட்டி விட்டுட்டு போய் தொலைஞ்சுட்டாங்க" என்று வெறுப்பாக சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இவரின் தமையனையும் அவரின் மனைவியையும் வெறுப்போடு பார்த்தார்.

ஆம் லீலா இவரின் தம்பி மகள் தான். குடும்பமாக கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய சமயம் குடித்து விட்டு லாரி ஓட்டிய ஒருவன் இவர்கள் வந்த காரை இடித்திட, கணவனும் மனைவியும் எப்படியோ தங்கள் மகளை மட்டும் காப்பாற்றி விட்டு இருவரும் அவ்விடத்திலே உயிர் நீத்தனர்.

அப்போது பாஸ்கரும் வேறு ஊரில் மனைவி, மகளுடன் இருந்தார். இவருக்கும் ஒரு மகள் தான். தம்பியின் இறப்பை கேள்விப்பட்டு வந்தவர்கள் அவரின் சொத்துக்களின் மதிப்பை அறிந்து தன்வசப்படுத்தியும் கொண்டார்.

இருந்த பணத்தை அனைத்தும் குடித்து குடித்தே அழித்திருந்தவருக்கு தம்பி சேர்த்து வைத்திருந்த சொத்தின் மதிப்புகளை அறிந்ததும் பேரதிர்ச்சி. லீலாவின் அன்னை பிறப்பிலே வசதியான குடும்பத்து பெண். மகளுக்கு திருமணம் செய்து வைத்ததுமே அவளின் அன்னையும் தந்தையும் பேத்தியை கூட பார்க்காமல் ஒருவரின் பின் ஒருவராக இறைவனடி அடைந்திருந்தனர்.

'ஆத்தாடி இத்தனையும் இனி தனக்கா.? வேலைக்கே போகாமல் வீட்டில் இருந்து கூட வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாமே.?' என்று பேராசை எண்ணம் தான் எழுந்தது.

இதற்காகவே நல்லவர் போல் தம்பியின் மகளை தானே பார்த்து கொள்வதாக கூறி தீட்டுக்கு வந்திருந்த அனைவரையும் நம்ப வைத்தார். அவரின் மனைவி கடுகடுத்த போது ரகசியமாக இதை கூறிட, வாயை பிளந்த அவரும் ஓரத்தில் அழுதிருந்த லீலாவை நன்றாக பார்த்து கொள்வது போல் நடிக்க தொடங்கினார்.

அவர்களின் நடிப்பை உண்மையென்று நம்பிய பத்து வயது பெண்ணிற்கு ஆறுதலாக மடி சாய பெரியன்னை கிடைத்து விட்டார் என்ற நிம்மதி. உறவுகள் அனைத்தும் சென்று விட்ட பின்னர் தான் அவர்களின் சுயரூபமே அந்த அவலை பெண்ணிற்கு விளங்கியது.

இரவில் தனியாக படுக்க பயந்து அவர்களிடம் சொன்னால் அதற்கும் அடி விழும். அவரின் அடிக்கு பயந்து பயந்து அமைதியாக இருந்து கொள்வாள். நாளாக நாளாக இது தான் தன் வாழ்வு என்று மனதை தேற்றி கொண்டு தனிமையில் நிமிடங்களை செலவிட்டாள்.

அப்போதெல்லாம் மனதினுள் அவளின் அன்னையிடம் பேசி கொள்வதுண்டு.
இவளை பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கூட பேச விட மாட்டார் சரோஜா. அப்படி பேசினால் வீட்டில் நடப்பதை கூறி விட்டால்.? அதனாலே அவளை வீட்டினுள் அடைத்து வைக்க தொடங்கினார். பள்ளி செல்வாள். வீட்டிற்கு வருவாள். வந்ததும் வேலைகள் அனைத்தும் இவள் தான் செய்ய வேண்டும். மீண்டும் அறையினுள் அடைந்து விடுவாள். இது தான் அவளின் தினசரி வழக்கம்.

நன்றாக படித்து வெளியுலகம் அறிந்தால் எங்கு தங்களை வெளியில் துரத்தில் விடுவாளோ.? என்று பயந்து அவளின் படிப்பை பன்னிரெண்டாவது வகுப்புடன் நிறுத்தினார். அதன் பின்பு இப்போது வரை சிறைவாசம் தான். ஆனால் சரோஜாவின் மகளை பணத்தை தண்ணீராக இறைத்து படிக்க வைத்தனர்.

இருவருக்கும் அனைத்திலும் பாராபட்சம் தான். இவர்கள் இருப்பது தன் தந்தையின் பணத்தில் தான் என்று பேதை பெண்ணும் உணர்ந்தாலும் தனியாக எப்படி போராட முடியும்.? என்ற அச்சம். அதனாலே என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க பழகி கொண்டாள்.

விரைவாக வேலையை முடித்து அவள் வளர்க்கும் வாயில்லா ஜீவனுக்கு உணவிட்டவள் "இவங்க பண்றது எல்லாம் தப்புனு எனக்கும் புரியுது பட்டு.. ஆனா என்னால என்ன பண்ண முடியும்.? ஒத்த ஆளா இருக்கேன்.. ஏதாவது பேச போய் வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டா.? அப்பறம் நான் எங்க போவேன்.? படிச்சுருந்தா கூட ஏதாவது வேலை தேடலாம்.. அதுக்கும் வழியில்லையே.?

நான் படிக்க மாட்டேனு சொன்னனா.? இவங்களே தான் நீ படிச்சு கிழிச்சது போதும்னு வீட்டோட இருக்க வெச்சுட்டாங்க.. இவங்க பணத்துலயா என்னைய படிக்க வெக்க சொன்னேன்.? என் அப்பா எனக்காக சம்பாதிச்சு வெச்ச பணத்துல தான் படிக்க வெக்க சொல்றேன்.. அதுக்கும் முடியாதுனு சொல்றாங்க.?

என்னைய இந்த சிறைல இருந்து வெளில கூட்டிட்டு போறதுக்கு யாராவது வருவாங்களா.? அப்படி வந்தா நான் உன்னையும் சேர்த்து தான் கூட்டிட்டு போவேன்.. நீயும் என் கூட வந்தரணும்.. பாரு எனக்கு இப்ப எல்லாம் பேராசை வருது.. இது பேராசைடினு நீ சொல்ல மாட்டியா.?" என்று மன விருப்பத்தை வெளிப்படுத்தியவளுக்கு கண்ணீரும் வந்தது.

இப்போதெல்லாம் இவளின் ஆசை என்றால் இது மட்டும் தான். இந்த சிறைவாசத்தை விடுத்து வெளியில் சென்று வெளியுலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல். கோவிலுக்குஆ செல்கிறேன் என்றால் கூட சரோஜா விட மாட்டார். 'எவன் கூட ஊரு சுத்த போற.?' என்று வார்த்தையை கடித்து துப்பி இவளின் நிம்மதியை தான் பறித்து கொள்வார்.

அதற்காகவே எதுவும் கேட்பதில்லை. விட்டு விட்டாள். காலம் இப்படிதான் நடக்கும் என்று முதலிலே கணக்கு போட்டு வைத்திருந்தால் அதை எங்ஙனம் என்னால் மாற்ற இயலும்.?

நினைத்தது நடந்து விட்டது என்ற மகிழ்வில் மாயா வீட்டிற்கு வர, அவளை எதிர் கொள்ள திரணியின்றி பதட்டத்துடன் மீரா நிற்க, அவளை வித்தியாசமாக ஏறிட்ட மாயா வீட்டினுள் கண்களை துழவ விட்டாள்.

அதிலே ஏதோ புரிந்ததில் "தியா எங்க.?" என்று கேட்டவளின் வார்த்தையிலே அத்தனை கோவம். எச்சிலை விழுங்கி "அவளை.. அவளை.. அவ..ங்க வந்து..." என்று முழுவதும் கூற முடியாமல் திணறி போனாள்.

விசயம் என்னவென்று உணர்ந்ததில் இவளை திட்டுவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து விறுவிறுவென வெளியேறினாள்.

அடுத்து அவள் சென்று நின்ற இடம் வருணின் வீட்டில் தான். சினத்தில் பெண்ணவளின் விழிகள் கோவைப்பழமென சிவந்து போயிருக்க, யாரையும் மதிக்காமல் வீட்டினுள் நுழைந்தவள் தன் மகள் எங்குவென்று தேடினாள்.

மகளை காணாமல் இவளின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறிட, எள்ளல் நகையுடன் தன் முன்னே வந்த வருணின் தங்கையை ஓங்கி அறைந்திருந்தாள் மாயா.



தொடரும்..

கருத்துக்களை இத்திரியில் பகிர்ந்து கொள்ளவும்

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 3



அதிகபட்ச சினத்துடன் "இந்த நக்கல் பண்றது கேலி பண்றது எல்லாம் என்கிட்ட வெச்சுக்கிட்ட தொலைச்சுருவேன் தொலைச்சு.. எங்கடி என் பொண்ணு.?" என்று மிரட்டல் விடுத்து அதிகாரமாக கேள்வியையும் எழுப்பினாள் மாயா.

வாங்கிய அடியில் வருணின் தங்கையான சுபவர்ஷினியின் கன்னம் தீபிழம்பாய் எரிந்திட, மறுவார்த்தை பேசவும் திரணியற்று பார்வையை மட்டும் ஒரு அறையின் பக்கம் திருப்பிட, "என்கிட்ட உன் வேலையை காட்டுன சாவடிச்சுருவேன்.. என் பொண்ணை தூக்கி வெச்சு மிரட்டுனா பயந்துருவோமா.? இனி என் பொண்ணு மேல உன் கை பட்டுச்சு கொலை பண்ணிருவேன்" என்று சிடுசிடுத்தவள் முறைத்து விட்டு அவள் காட்டிய அறையை திறக்க முயன்றாள்.

அது உள்பக்கம் பூட்டி இருக்க, நொடியும் தாமதிக்காமல் படபடவென்று கதவை தட்டினாள். தன் மகள் யாருடன் இருக்கிறாள்.? என்று புரியாமல் குழம்பினாள்.

கதவை திறந்தவனை கண்டு இவள் பேச்சற்று போனது என்னமோ சில நொடிகள் தான். தன்னை மீட்டு அவனின் கையில் இருந்த தன் மகளை வாங்க முற்பட, 'ஆஹான்' என்று கேலிச்சிரிப்புடன் விலகி நின்றான் வருண்.

"யாரை கேட்டு தியாவை இங்க கூட்டிட்டு வந்த.? அவ நிழல் கூட இந்த வீட்டுல பட கூடாதுனு இருக்கேன்.. ஒழுங்கா தியாவை குடு" என்று கடுங்கோவத்துடன் சினந்திட, "என் பொண்ணை தூக்கிட்டு வர்ற யாருகிட்ட கேட்கணும்.?" என்று அலட்சியமாக கேட்டான் அதுவும் 'என் பொண்ணு' என்ற வார்த்தைகளில் மட்டும் அதிகமான அழுத்தம் குடுத்து.!

அவனை வெறித்து பார்த்து பின்பு கேலியுடன் "என்ன உன் பொண்ணா.? இது எப்போ இருந்து.? பாருடா சாருக்கு திடீர்னு ஞானோதயம் வந்துருக்கு.? அது எப்படி வந்துருக்கும்.?" என்று தீவிரமாக யோசிப்பதை போல் பாவனை செய்து "ஓஹோ ஓஹோ புரிஞ்சுருச்சு.. உன் தம்பி ஜெயிலுக்கு போனதும் தான் சாருக்கு ஒரு பொண்ணு இருக்கறதே ஞாபகம் வந்துருக்கு போல.?" என்று நக்கலுடன் வினவினாள்.

பின்பு "நீங்க பண்றதுக்கு எல்லாம் வாயை மூடிட்டு இருப்பேனு நினைக்காதீங்க.. ஒழுங்கா தியாவை குடுத்துரு" என்று மீண்டும் மகளை வாங்க முயல, அவளுக்கு பதிலுரைக்காமல் தியாவுடன் உள்ளே சென்றான் வருண்.
இதில் சினமேறியதில்
அவனை பின்தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக மகளை பிடுங்கியவள் கிளம்ப எத்தனித்திட, சட்டென்று அறைக்கதவை மூடி அதில் சாய்ந்து கைகளை கட்டி கொண்டு நின்றான் அவன்.

"தள்ளு நான் போகணும்" என்று அவனை விலக்க முற்பட்டு இறுதியில் ஆடவனின் கைவளைவுக்குள் சிறைப்பட்டு போனவள் அவனை ஏறிட்டு பார்க்க தைரியமின்றி விழிகளை மட்டும் திருப்பி கொண்டாள்.

அவனை கண்டால் தான் பலகீனம் ஆகி விடுகிறோம். அவனின் முகத்தை மட்டும் பார்க்கவே கூடாது என்ற தீர்மானத்துடன் விழிகளை திருப்பி "விடு நான் கிளம்பணும்" என்றாள் சுருதியே இல்லாத குரலில்.

பெண்ணவளின் மதிமுகத்தை திருப்பி லேசாக கலங்க தொடங்கி இருந்த விழிகளை உற்று நோக்கி "பிரபு என்ன தப்பு பண்ணுனான்.? எனக்கு என்ன தண்டனை குடுக்க நினைக்கறீயோ அதைய தாராளமா குடு.. நான் மனசார ஏத்துக்கறேன்.. அவனை விட்டுரு" என்றதில் கலங்கிய விழிகள் இப்போது அனலாக தகிக்க தொடங்கியது.

அவனை பட்டென்று தள்ளி விட்டு "என்னைய பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியுதா.? நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குவேனு நினைக்கறீயா.? மாட்டேன் கேட்கவே மாட்டேன்.. அந்த அயோக்கியன் பண்ணுன தப்புக்கு தான் தண்டனை அனுபவிக்கறான்..

அவன் செஞ்ச தப்பை எல்லாம் வெளியுலகத்துக்கு கொண்டு வருவேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க" என்று கத்தி விட்டு வெளியேற முயன்றவளின் கையில் இருந்த மகளை வாங்கியவன் விறுவிறுவென வெளியேறினான்.

இதை எதிர்பார்க்காத மாயா விக்கித்து நிற்க, மகளின் அழுகுரல் தாயவளின் செவியை தீண்டியதும் பதறிய வெளியே ஓடிட, அதற்குள் காரை எடுத்து கொண்டு சென்றிருந்தான் வருண்.

உடைந்து விட்டாள். மகளை பணயக்கைதியாக வைத்தே இவர்கள் காரியத்தை சாதித்து கொள்கிறார்களே.? அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது.? அய்யோ இனி விடாமல் அழுதால் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் வந்து விடுமே.? அய்யோ தியா.. என்று பதட்டமடைந்து அழுதாள்.

அவனை பின்தொடர்ந்து செல்லாமல் விட்ட தன் மடத்தனத்தை நொந்து இப்போது அவன் எங்கு சென்றான்.? என்று புரியாமல் பெண்ணவள் தான் நடுக்காட்டில் விட்டு சென்றதை போல் செல்லும் வழியறியாமல் நிற்கிறாள் தன்னந்தனியாக.!!

"என்னயா வந்ததுல இருந்து யோசிச்சுட்டு இருக்க.?" என்று சரோஜாவும் கேட்டு பார்த்து விட்டார் பாஸ்கர் தான் இன்னும் பதிலுரைக்காமல் ஏதோ யோசனையிலே இருக்கிறார்.

கடுப்பாகி "யோவ் உன்னைய தான்யா" என்று மறுபடியும் சரோஜா கத்த, அவளை முறைத்து "இப்ப எனத்துக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்க.? உனக்கு நாயே பரவால்ல போல.?" என்று இவரும் சிடுசிடுத்தார்.

"உன்கிட்ட கேட்டேன்ல என் தப்புத்தான்.. என்னமோ பண்ணி தொலை" என்று வெடுக்கென்று சாடி விட்டு சரோஜா நகர்ந்திட, "ஏய் இங்க வாடி.. போய் தொலைஞ்சராத" என்று மனைவியை அழைத்தார்.

அவரை முறைத்தபடி சரோஜா இருந்தாலும் மீண்டும் வாயை திறந்து என்ன விசயம் என்று வினவவில்லை. அவரே கூறட்டும் என்று அமைதியாக இருக்க, "எல்லாம் அந்த லீலா புள்ளைய பத்தி தான்" என்று பீடிகை போட்டார்.

"அந்த சிறுக்கி என்ன பண்ணுனா.? அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்ல.? ஓஓஓ பையன் கிடைச்சுட்டானா.?" என்று அவரே முடிவு செய்து கேட்டிட, "இவ இருக்கா பாரு.. ஆமா இவ உலக அழகி.. சொன்னதும் நான், நீ ன்னு போட்டி போட்டு கொண்டு வர்ற.? அடி கூறுகெட்டவளே வாயை மூட்டிட்டு இருடி" என்று அதட்டினார்.

பின்பு "ஒரு வயசான கிழவியை பார்த்துக்க ஆள் தேவைப்படுதுனு என் நண்பன் ஒருத்தன் சொன்னான்.. மாசம் சுளையா முப்பதாயிரம் கிடைக்கும்னா பார்த்துக்கோயேன்" என்று தன் யோசனைக்கான காரணத்தை கூறினார்.

"எது முப்பதாயிரமா.?" என்று சரோஜாவும் வாயை பிளந்திட, "ம்ம்ம்ம்ம் ஆமா.. அதுக்கு மேல கேட்டாலும் குடுப்பாங்கனு சொல்றான்.. பணம் எல்லாம் பிரச்சனை இல்லைனு சொன்னான்.. ஆனா அங்கயே இருந்து பார்த்துக்கணும்.. இப்ப அது மட்டும் தான் எனக்கு யோசனையா இருக்கு" என்று லீலாவை அனுப்பி விடலாம் என்று சூசகமாக உரைத்தார்.

அதை புரிந்து கொண்ட சரோஜாவும் இருக்கும் பணத்தை கணக்கில் கொள்ளாமல் "இதுல யோசிக்க என்ன இருக்கு.? வீட்டுல இருந்து இந்த சிறுக்கி எனத்த கிழிக்க போறா.? ஒரு கிழவியை கூட இவளால பார்த்துக்க முடியாதா என்ன.? இதைய பத்தி முழுசா விசாரிச்சுட்டு வாங்க.. மத்ததை பேசிக்கலாம்.." என்று தன் சம்மத்ததை அளித்து விட்டார்.

இவர்கள் இருவருமே முடிவு செய்து அதற்கான வேலையிலும் இறங்கிட, அன்று மாலையே இதைப்பற்றிய முழு தகவலுடன் வந்து விட்டார் பாஸ்கர்.

அவரின் முகம் பிரகாசமாக இருந்தது. வந்ததுமே "விசாரிச்சுட்டேன்" என்று பல்லை காட்ட, லீலா சமையலறையில் இருப்பதை சுட்டிக்காட்டி தனியாக சென்றவர்கள் "என்னயா இப்ப சொல்லு" என்று கேட்டார்.

"அந்த வீட்டுல அந்த கிழவியும் அவ பையனும் தான்.. அதுவும் பக்கத்து ஊர்ல தான்.. அவ பையன் வீட்டுல இருக்கவே மாட்டான்.. எப்ப வெளில போவான் எப்ப வீட்டுக்கு வருவானு தெரியாதுனு சொல்றாங்க.. அந்த கிழவியை பார்த்துக்கிட்டு அவ கூடவே ஒரு ஆள் இருக்கற மாதிரி வேணும்னு கேட்கறாங்க.. சொல்லி இருக்கற சம்பளத்தை விட இப்ப ஆள் கிடைச்சுட்டா அதிகமாவே குடுக்கறேனு சொல்லிருக்காங்க" என்று தன் முகமலர்ச்சிக்கான காரணத்தை முன் வைத்தார்.

இதை கேட்டு சரோஜாவின் முகமும் பிரகாசித்திட, "அப்ப இவளை அங்க அனுப்பி விட்டரலாம்ங்க.. ஆனா அவ சம்பளத்தை நம்ம கைல தான் குடுக்கணும்னு முதல்லயே சொல்லிருங்க" என்றார் முன்னெச்சரிக்கையாக.

"இதைய யோசிக்காத முட்டாளா நானு.? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. இப்ப அந்த புள்ளகிட்ட சொல்லணுமே.? என்னனு சொல்ல போற.?" என்றவரிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று விட்டார் இவர்.

கூறியதை போலவே லீலாவிடமும் விசயத்தை கூறி "அங்க போற வழியை பாரு" என்று அதட்டல் விடுக்க, பாவம் அவளுக்கு ஒன்றும் புரியாமல் "நான் அங்க போகல பெரியம்மா.. இங்கயே இருந்துக்கறேன்" என்று தன் விருப்பமின்மையை தெரிவித்தார்.

சுறுசுறுவென ஏறிய கோவத்தில் "சனியனே இங்கிருந்து எங்க தலையை உருட்ட பார்க்கறீயா.? உனக்கு சோறு போட்டுட்டே இருக்கணும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்தா.? அப்பவே வீட்டை விட்டு துரத்தி விட்டுருக்கணும்.. அப்பதான் புத்தி வந்துருக்கும்.. இப்படி வீட்டுல மகாராணியை போல வெச்சுருந்தது எங்க தப்புத்தான்.. ஒழுங்கா அங்க கிளம்பற வழியா பாரு" என்று கத்தி அடிக்கவும் செய்தார்.

அதிகமாக வெளியுலகம் அறியாத பேதைக்கு வெளியில் செல்லவே பயமாக இருந்தது. அதனால் தான் இங்கயே இருந்து விடுகிறேன் என்று கூறி வாங்கியும் கட்டி கொண்டாள்.

இவர்களிடம் பேச்சு வாங்குவதற்கு பேசாமல் இவர்கள் சொல்லும் இடத்திற்கே சென்று விடலாம் என்றிருக்க, அதன் பிறகு இவள் வாயை திறக்கவே இல்லை. அவர்கள் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டி பொம்மையாக தலையை மட்டும் அசைத்தாள்.

அதற்கும் 'வாயை திறந்து பேசுடி' என்று சரோஜாவிடம் அடியும் வாங்கிட, அப்போதும் வீம்புடன் மறுவார்த்தை பேச முயலவில்லை.

"அப்படியே எவனையாவது கூட்டிட்டு போய் தொலைஞ்சுரு.. இந்த வீட்டுப்பக்கம் வந்தராத.. சனியன் தொலைஞ்சுச்சுனு நாங்க நினைச்சுக்கறோம்" என்ற பெரியன்னையின் வழியனுப்பலில் வழியும் கண்ணீருடன் அவ்வீட்டை விட்டு வெளியேறினாள் பெண்ணவள் தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காக.!!!


தொடரும்..


மறக்காமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 4




மனதை தேற்றி கொண்டாலும் ஏனோ படபடப்புடன் லீலா காணப்பட, அவளை விட அவளுடன் வந்திருந்த பெரியப்பா அப்போதும் மனசாட்சி இல்லாமல் "ஆட்டோவுக்கு தண்டமா முன்னூறு ரூபா செலவு.. இந்த முன்னூறு ரூபா இருந்துருந்தா நான் ஒரு கட்டிங் போட்டுருப்பேன்" என்றதில் அடிப்பட்ட பார்வை பார்த்தவளுக்கு 'ச்சைக்' என்று தான் இருந்தது.

ஆனால் உள்ளுக்குள் 'எல்லாம் என் அப்பா, அம்மா எனக்காக சேர்த்து வெச்ச பணம்னு எனக்கு தெரியாதுனு நினைக்கறீங்களா.? இதெல்லாம் பார்த்துட்டு கடவுளும் அமைதியா இருக்காங்க.. எனக்கு ஒரு காலமே வராதா.?' என்று மருகினாள்.

இருந்த படபடப்பும் காணாமல் போயிருந்தது. இவர்களிடம் இருப்பதற்கு தனியாக சென்று விட்டாலும் பரவாயில்லை.. அதற்கு தான் இந்த வாய்ப்பு போலும் என்று நினைத்து தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள்.

இது சரியான முகவரியா.? என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்த பாஸ்கர் அதற்கு பின்பே ஆட்டோவிற்கு பணமும் குடுத்தார்.

கதவை தட்ட, சில நிமிடங்களுக்கு பிறகு கதவை திறந்தவனை கண்டு இருவருமே பேச்சற்று நின்றனர்.

கையில்லா பனியனும் முறுக்கி விடப்பட்ட மீசையும் அவனை காவல்துறை அதிகாரியோ என்று சந்தேகம் கொள்ள செய்ய, மீசையை முறுக்கி விட்டபடியே அவர்களை அளந்தான் அவன் துருவன்.

சற்று பயத்துடன் "தம்பி நீங்க.?" என்று கேட்க, இதில் "யோவ் என் வீட்டுக்கு வந்துட்டு என்னையவே யாருனு கேட்கறீயா.? முதல்ல நீ யாருயா.? இந்த புள்ளை யாரு.?" என்று சுள்ளென எரிந்து விழுந்தவனின் முகம் கடுகடுவென இருந்தது.

அவனின் மரியாதையற்ற அழைப்பில் பாஸ்கரின் முகம் சுருங்கி பின்பு சாதாரணமாக மாறி "ஒரு கி..." என்று கூற வந்து நிறுத்தி "நேத்து உங்ககிட்ட போன்ல பேசுனேனே தம்பி.. உங்க அம்மாவை பார்த்துக்க ஆள் கூட்டிட்டு வர்றேனு" என்றார் பவ்யமாக.

"ஓஓஓஓ அவனா நீ.?" என்று அலட்சியமாக கேட்டு "சரி உள்ள வா" என்றழைத்து விட்டு சென்றான். "ஏய் வா" என்று லீலாவை அடிக்குரலில் சீறியவர் அவனின் பின்னே சென்றார்.

மேனி நடுங்கிட பையை இறுக்கி பிடித்து வீட்டினுள் நுழைந்தவளின் விழிகள் சுற்றிலும் மேய, "ஆள் கூட்டிட்டு வர்றேனு நீ மட்டும் வந்து நின்னுருக்க.? எங்க அந்த ஆளு.?" என்று வினவனிடம் "இதோ இந்த புள்ளை தான் தம்பி" என்று அவசரமாக உரைத்தார்.

"எதே.? இந்த புள்ளையா.?" என்று கேட்டவனின் குரலிலே அதிருப்தி. "ஆமா தம்பி அம்மாவை நல்லாவே பார்த்துக்கும்.. பொறுமையா எல்லா வேலையும் செய்யும்.. நீங்க இல்லைனாலும் தனியா தைரியமா அம்மாவை பார்த்துட்டு இங்க இருந்துக்கும்.. உங்களுக்கு எந்த கவலையும் இல்லை தம்பி.." என்று அவன் நம்பும்படியாக பொய்களை கடை பரப்பினார்.

பெரியப்பாவின் கூற்றில் 'தனியா இருக்கணுமா.?' என்று நினைத்து பேச்சற்று நின்றிருக்க, மறுவார்த்தை பேசி மறுக்கவும் தைரியமின்றி நடுக்கத்துடன் நின்றாள். அவளையே கூர்ந்து நோக்கியவன் என்ன நினைத்தானோ "ம்ம்ம்ம் சரி" என்று விட்டான்.

அதன் பிறகு அவர்கள் பேசிய எதுவும் பெண்ணவளின் செவியில் விழுகவில்லை. எந்த உலகத்தில் நின்றிருந்தாள் என்பது அவளே அறியாத ஒன்று. இப்போது முடியாது என்று மறுத்து விட்டு பெரியப்பாவுடன் சென்றாலும் அந்த வீட்டில் இருக்க சம்மதம் கிடைக்குமா.? என்பதே கேள்விக்குறி தான்.

அதற்கு இவ்வீட்டிலே ஓரமாக இருந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து அவர்களை பார்க்க, அவளின் பெரியப்பாவோ இருக்கும் பல்லை அனைத்தையும் காட்டி சரி சரியென்று தலையை ஆட்டி கொண்டிருந்தார்.

'இப்படி பல்லை காட்டும் அளவிற்கு அப்படி என்ன சொன்னான் அவன்.?' என்று தான் யோசனையாக இருந்தது. மறந்தும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை. அப்படி கேட்டாலும் என்ன பதிலுரைக்கவா போகிறார்கள்.? அதற்கு பேசாமல் இருந்து விடலாம் போலும்.

பாஸ்கர் கிளம்புவதாக கூறியதற்கு வெறுமனே தலையை மட்டும் அசைத்து விடை குடுக்க, அவர் சென்று விட்டார். இவள் தான் யாருமின்றி நிற்கிறாள்.

பிடித்து வைத்த பிள்ளையாரை போல் அசையாமல் நின்றவளை "ஏய்" என்று துருவன் அழைக்க, அதில் பதறி பக்கென்று துடிக்க தொடங்கிய இதயத்தை சீராக்கி "சொல்லுங்க" என்றாள் மெல்லிய குரலில்.

"இங்க எதுக்கு வந்துருக்கேனு தெரியுமா.? தெரியாதா.?" என்று கேட்டவனின் குரலில் அச்சமும் அவளை விடாமல் ஒட்டிக் கொள்ள, "ம்ம்ம்ம்ம் தெரியும்" என்றவள் அப்போதும் அவனை பார்க்கவே இல்லை.

பார்த்தால் தான் அவனின் அதட்டலில் அழுகை வந்து விடுகிறதே.? அவன் கூறும் அனைத்தையும் காதில் மட்டும் வாங்கி கொண்டு அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை. பெரியப்பா இப்படி தன்னை மாட்டி விட்டு சென்று விட்டாரே.? என்ற ஆதங்கமும் அவளை நிலைகுலைய செய்தது.

அவளின் பயந்த முகத்தை கண்டு அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்று விட்டான். அவன் சென்றதை உணர்ந்த லீலா அப்படியே அமர்ந்தவள் காலை குறுக்கி அதில் முகத்தை புதைத்து கண்ணீர் சிந்தினாள்.

தளர்ந்த நடையுடன் உயிர்ப்பே இல்லாமல் வந்த மாயாவின் நிலை கண்டு மீரா பயந்து "மேடம் தியா எங்க.? நீங்க ஏன் இப்படி வர்றீங்க.? ஏதாவது பேசுங்க மேடம் எனக்கு பயமா இருக்கு" என்று உண்மையான பதட்டத்தில் வினவினாள்.

பதில் கூறாமல் சென்று அவளை பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்து "பாப்பா அவன் கூட தான் இருக்கா.. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கேன்.. தொந்தரவு பண்ணாத" என்று கூறி விட்டு அவளறைக்கு சென்று விட்டாள்.

அழுகவும் பெண்ணவளின் மனது உந்தவில்லை. இந்நிலைக்கு காரணமானவளை நினைத்து தான் மாயாவின் மனது சினந்தது.

'நீ மட்டும் தைரியமா அவங்கள எதிர்த்திருந்தா இந்த நிலைமை வந்துருக்குமா.? ஏன்டி உனக்கு தைரியம் இல்லாம போய்ருச்சு.? இப்ப உன்னால.. உன்னால தான் எல்லாம் கஷ்டமும்.. தியாவும் உன்னால தான் கஷ்டப்படறா.. இப்ப நீ மட்டும் என் கண்ணு முன்னாடி இருந்த நானே உன்னைய சாவடிச்சுருப்பேன்' என்று நினைத்ததில் பெண்ணவளின் கோவமும் பலமடங்காக பெருகியது.

ஆத்திரம், அழுகை, வருத்தம் என்று பலவகையான உணர்வுகளில் தத்தளித்தவளுக்கு மகளின் நினைவே கண்கலங்க வைத்தது. 'அவளுக்கு சாப்பிட ஏதாவது குடுத்துருப்பானா.? பசியோடு இருப்பாளா.? அழுதால் மூச்சுத்திணறல் வந்து விடுமே.?' என்ற எண்ணங்கள் நினைவடுக்குகளில் எழுந்ததில் விலுக்கென்று கண்ணீரும் சுரந்தது.

இவ்வளவு நேரம் இருந்த தைரியம் அனைத்தும் வடிந்தவளாக காணப்பட்டாள். அப்படியே நிலத்தில் படுத்தவளுக்கு கண்மூடியதும் பழைய நினைவுகள் ஆட்கொண்டாலும் முதலில் மனக்கண்ணில் தோன்றியது என்னவோ அவளின் மகளின் மழலை முகம் தான்.

'தியா தியா' என்ற அவளின் மனதே ஓலமிட்டிருக்க, பிஞ்சு விரலொன்று பெண்ணவளின் மதிமுகத்தை தீண்டுவதை அவள் உணர்ந்தாலும் அது கனவோ.? என்று நினைத்து விழிகளை திறக்கவில்லை. இவள் கண்விழித்தால் இதுவும் மறைந்து விடுமே.? கனவிலாவது தன் மகளுடன் இருந்து விட்டு போகிறேன் என்ற எண்ணம் தான்.

பட்டென்று ஒரு அடி விழுந்ததில் கண் விழித்தவள் திகைப்பில் கலங்கி மகளை வாரி அணைத்து முத்தமிட்டாள். குழந்தை அழுததால் அவளை தூக்கி கொண்டு வந்து விட்டான் வருண்.

மாயா செய்யும் செயலுக்கு இந்த பிஞ்சு என்ன செய்யும்.? தன் மகளை அழுக விட்டு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இவன் கல்நெஞ்சக்காரனும் இல்லையே.? அவள் தன் பின்னால் வருவாள் என்று நினைத்தான். ஆனால் அவள் வரவில்லை. அதனால் இவனே வந்து விட்டான்.

மாயாவின் மேல் கோவம் தான். எப்போதும் அதை காட்டிட நினைக்கவும் மாட்டான். கோவத்தை காட்டி இழந்ததே போதும். 'நீ தான் என்னிடம் வர வேண்டும்' என்ற ஈகோவுடனும் சுற்ற மாட்டான். இன்னும் திருமணம் நடக்கவில்லை தான் ஆனாலும் அவனின் மனைவி தான் அவள்.

மனைவியின் நினைவெழும் போதெல்லாம் அவனே இங்கு வந்து விடுவான். இவள் தான் கல்நெஞ்சம் கொண்டவள் போலும். 'தனக்கு நீ தேவையே இல்லை' என்ற ரீதியில் தான் அவளின் செயல்கள் அனைத்தும் காணப்படுகிறது.

எதிர் திசையில் அமர்ந்து அவர்களின் பாச போராட்டத்தை கண் எடுக்காமல் பார்த்தவன் பெருமூச்சுடன் "பிரபு தப்பு பண்ணிருக்கான் தான்.. ஆனா இப்ப அவன் திருந்திட்டான்.. தப்பை உணர்ந்தவனுக்கு மறுபடியும் ஏன் தண்டனை தரணும்.?" என்று தனக்கு தேவையான விடயத்திலே குறியாக நின்றான்.

இவனே விட்டாலும் அவனின் அன்னையும் தங்கையும் மிரட்டுகிறார்களே.? மகன் வெளிவரவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று அவனின் அன்னை விஷத்தை குடிக்க போனதை கண்ணால் பார்த்து பதறி விட்டு தான் இப்படி மாயாவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறான்.

இவன் நினைத்தால் பணத்தை குடுத்து தம்பியை வெளி கொண்டு வர முடியும். ஆனால் இதை வெளியிட்ட மாயாவின் பெயர் கெட்டு விடும். அவன் இதை விரும்பவில்லை. அவனுக்கு இருவரும் முக்கியம் தான். அதை பெண்ணவள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே.?

அவனையே பார்த்து "சரி நான் இழந்ததை திருப்பி குடுக்க சொல்லு.. நானும் அவனை வெளில விட சொல்றேன்.. நான் இழந்ததை தர முடியுமா.? இல்ல இந்த பிஞ்சு இழந்து நிற்கறதை தான் அவனால திருப்பி கொண்டு வர முடியுமா.?

அதென்ன ரொம்ப சாதாரணமா அவன் திருந்திட்டான்.. திருந்துனவனுக்கு ஏன் தண்டனை தரணும்னு கேட்கற.? இந்த குழந்தை முகத்தை பார்க்கறப்ப உனக்கு எதுவும் உறுத்தலயா.? ஞாபகம் தான் வரலயா.?" என்று அவனை எங்கு அடித்தால் வலிக்குமோ.? என்று சரியாக உணர்ந்து குறி பார்த்து அடித்தாள்.

இது நன்றாக வேலை செய்தது. இதற்கு மேலும் எதுவும் வாதாடி பேசாமல் சட்டென்று எழுந்து கிளம்பி விட்டான். அவனை காயப்படுத்துவது இவளுக்கும் வலிக்கிறது தான். ஆனால் நான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற முடிவில் மட்டும் உறுதியாக இருக்கிறாள். அதற்கு எந்த எல்லைக்கு செல்ல தயாராகவும் இருக்கிறாள். இறுதியில் யாருக்கு வலி மிகும் என்பது யாருமே கணிக்க முடியாத ஒன்று.



உன் வலி மிகுந்த
முகத்தை காண்கையில்
எனக்கு வலிக்கிறது தான்!
ஆனாலும் உன்னை
வலிக்க வலிக்க அடிக்க
வேண்டும் என்றே இருக்கிறதே.!






தொடரும்..

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்

 
Status
Not open for further replies.
Top