புயல் காற்று வேகமாக வீச, தூறல் மழையாகிப் போனது. சோ’வென்று பேய் மழை பெய்ய, சுற்றியிருந்த மரங்களெல்லாம் பேயாட்டம் கண்டது.
“ச்சை! இம்சை புடிச்ச மழ. இம்மா நேரம் நல்லாத்தேன் இருந்தது, இந்த பொணத்த தூக்கிப் போட்டு குடுசைக்குள்ள போலாம்னு பாத்தா இப்டி வெளுத்து வாங்குது. தோண்டுன குழில இப்போ தண்ணீதேன் கிடக்கு. எப்டி பொதைக்க?” என்று தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மது போத்தலை எடுத்து வாய்க்குள் கவிழ்த்தவன், ஒரு முடிவு எடுத்தவனாக “சரி இப்போ மேலோட்டமா பொதச்சிட்டு, காத்தால வந்து ஆழத் தோண்டி பொதச்சிடலாம்” என்று தனக்குள் பேசிக்கொண்டே, அந்த பிணம் இருந்த பக்கம் திரும்ப, அங்கு பிணத்தைக் காணவில்லை. “ஆத்தாடி, இங்க இருந்த பொணம் எங்கன போச்சு?” என்றபடி சுற்றிமுற்றித் தேடிக் கொண்டிருக்க, அந்த சமயம் பளிச்சென்ற மின்னல் வெட்டியது.
அந்த வெளிச்சத்தில் இடுகாட்டின் முருங்கை மரத்தில் அவள்தான் வேட்டையாடிக் கொண்டிருந்தாள். பார்த்தவரின் கண்கள் அகல விரிந்தது. மரக்கிளையின் நடுவே அந்த பிணம் கிடத்தப்பட்டு இருக்க, அவள் இரத்ததாகம் தீர்த்துக் கொண்டிருந்தாள். பிணத்தின் கபாலம் பிளக்கப்பட்டு, இரத்தம் பீறிட்டு வர, ரசித்து ருசித்து சுவைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள் இரத்தத்தை அவள் மோகினி.
அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த வெட்டியான் சாத்தப்பன், தன் வாழ்நாளில் பல அமானுஷ்யத்ததைக் கடந்து வந்திருக்கும் நிலையில் இது மிகவும் உக்கிரமாக இருந்தது. அந்த பிணத்தை வாயில் கடித்தபடி, ஒவ்வொரு விரலாய் பிய்த்து மென்று தின்றுக் கொண்டிருந்தது. மேல் தோலைக் கிழித்து மிச்ச மீதியிருந்த இரத்தத்ததையும் உறிஞ்சி, இருதயப் பகுதியை தன் கோரைப் பற்களால் மெல்லாமல் அப்படியே விழுங்கி விட்டது. மரத்திலிருந்து சிதறிய சதைப் பிண்டத்தையும், இரத்தத் துளிகளையும் ருசிப் பார்க்க, நாய்கள் வெறிக்கொண்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தன.
ஒரு பக்கம் அந்த உடலின் ஆவி கதறிக் கொண்டிருந்தது. தன் உடல் இறுதிச் சடங்கு செய்யப்படாமல் இத்தனை கொடூரமாக உடல் அகற்றப்பட வேண்டுமா? என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது. இவ்வனைத்தையும் கண் சிமிட்டாமல் சாத்தப்பன் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக அனைத்தையும் உண்டு முடித்துவிட்டு, எஞ்சியிருந்த உடல் பாகங்களை அப்படியே கீழேப் போட்டது.
மரத்திலிருந்து பொத்தென விழுந்த அந்த பாகங்களை நாய்களும் பூனையும் குதறிக் கொண்டிருக்க, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சாத்தப்பனின் முன் அழகிய ரூபமாகத் தோன்றினாள் அவள் மோகினி.
சட்டென தெளிந்த சாத்தப்பன் அப்போது தான் தன் முன் நிற்கும் அந்த அருவத்தைக் கண்டார். “நீதானா புள்ள, என்னத்துக்கு இம்புட்டு அழுச்சாட்டியம் செஞ்சிட்டு இருக்கவ? பாரு அந்த ஆத்மா எம்புட்டு கதறிட்டு கிடக்குன்னு” என்று மோகினியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
தன் மயக்கும் மோகனப் புன்னகையை சிதற விட்டவள், “எத்தினி சென்மம் எடுத்தாலும், அதே தகிரியத்தோட என் முன்னாடி நீ ஒருத்தன் மட்டும்தேன் பேசுற சாத்தப்பா. இந்த மோகினி மேல பயம் வுட்டுப்போச்சோ.” என்றபடி அவள் முன்னே நடக்க, உதட்டுக்குள் மறைத்த சிரிப்புடனயே அவளை பின் தொடர்ந்து போகலானார் சாத்தப்பன்.
“அதேன் நீயே சொல்லிப்புட்டியே சென்மம் எத்தன எடுத்தாலும் நான் மட்டும் தகிரியமா இருக்குதேன்னு. பொறவு என்ன புள்ள, உன்கிட்ட எனக்கு பயம்? ஆனா, ஒன்னு மட்டும் இந்த பாழாப்போன பயலுக்கு புரியலயே.!”
சட்டென்று குனிந்து ஓடிக்கொண்டிருந்த பெருச்சாளியை எடுத்து வாயில் கவ்வியவள், சிதறிய இரத்தத் துளிகளோடு “என்னவாம், இப்போ புதிர் போடுறாப்புல இருக்கு?”
“புதிர் என்னத்த போடுதேன், நேரடியாவே கேட்குதேன். என்ன புள்ள இன்னைக்கு இம்புட்டு உக்கிரமா இருக்கவ? இன்னுமா உன்னோட ரத்த வெறி அடங்கல?”
இடுகாடு அதிர ஆங்கார சிரிப்பொன்றை சிந்தியவள், “ஒரு காலத்துல இந்த மோகினி எத்துப்பல் சிரிப்புக்கு ஊரே அடிமையாகி கிடந்துச்சுடே. இப்போ இந்த எத்துப்பல் ரத்தந்தேன் கேட்குது. அதுவும் இப்போ இளரத்தம் காவு கேட்குது.”
அவளின் கூற்றில் பெரிதும் அதிர்வுற்றுப் போனார் சாத்தப்பன். “ஏய், என்ன புள்ள இது? ஏதோ உக்கிரத்த குறைக்க இங்கன இருக்குற பொணத்த முழுங்குறன்னு நினச்சா, நீ என்ன ரத்தம்லாம் கேட்குற.? போற போக்குல என் கொரவளைய கடிச்சி ரத்தத்த உறிஞ்சிப்புடாத தாயீ” என்றவரின் கூற்றிற்கு சிரிப்பொன்றை உதிர்த்தவள்,
“பயப்புடாத சாத்தப்பா. எனக்கான ரத்தம் காத்துட்டு கிடக்கு. என் உசுர எடுத்து இப்டி நித்தம்நித்தம் இருக்க இடம் இல்லாம, மேல போகவும் வுடாம அல்லாடவுட்டவ சென்மம் எடுக்கப் போறா. அந்த ஒத்த நாளுக்குத்தேன் இம்புட்டு நாளா காத்துட்டு, அழுகுனது கழிஞ்சத தின்னுட்டு உக்கிரம் ஏறிக் கிடக்கேன். நெதமும் எனக்கு பொணம் கொண்டாந்து கொடுக்குற நீ. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் அவளத்தேடி போறதுக்குள்ள உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கேன்”
“அப்டி போடுங்குறேன். என்னத்தா வெளாட்டு காட்டுறீயோ? நீ என்ன சாமியா வரங்கொடுக்க.? நீயே தீராப் பழிய மனசுல வச்சிக்கிட்டு வெம்பிப் போய் கிடக்க. அப்டி என்ன வரத்த இந்த வெட்டியான் பயலுக்கு கொடுத்துடப் போற?” என்றவரின் கூற்றில் சற்று எள்ளலும் இருந்தது.
முன்னே சென்றுக் கொண்டிருந்தவள், சட்டென்று திரும்பிட, ஒரு நிமிடம் நின்றுத் துடித்தது அவரின் இதயம். “ஏன் சாத்தப்பா, இந்த மனுச பயக புத்தி காலம் போனாலும் மாறவே மாறாதுன்னு நிருபிச்சிட்டடே நீயி. கண்ணத் தொறக்காம கல்லா சமஞ்சவ கிட்டக்க மட்டும்தேன் வரம் கேட்பீயளோ? இல்ல, அவிக கொடுத்தாதேன் வரம் வாங்குவீகளோ? என்னோட உக்கிரத்துக்கு ஆளாகாத ஒத்த குடும்பம்ல ஒம்மது. அதயும் வாய்ச்சொல் வுட்டு கெடுத்துக்கிடாத.” என்றவளின் பார்வை, மோகத்தில் இளைத்து தீப்பிழம்பாய் மாறிக் கொண்டிருந்தது.
நின்ற மழை வலுக்க, “மன்னிச்சிக்க புள்ள. இம்புட்டு வருசமா எம்ம குடும்பத்துக்கும் மக்கப் புள்ளைகளுக்கும் துணையா இருக்கவ நீ. இனிமே எக்காலத்துக்கும் இப்டியே இருந்தா அதுவே போதும். வெட்டியான் மனுச மக்க ஏதாவது தப்புத்தன்டா பண்ணாக்கா மன்னிச்சு குலத்த காப்பாத்து.” என்றுக் கைக்கூப்ப, தீப்பிழம்பாய் மாறவிருந்த வதனம் புன்னகை முகமாய் மாறியது.
அப்போது, வானத்து கிங்கரர்கள் இருவர், அழுது அரற்றிக் கொண்டிருந்த அந்த ஆத்மாவை அழைத்துச் செல்ல வந்திறங்கினர். அவர்கள் வந்தது சாத்தப்பன் அறியவில்லை, ஆனால் மோகினி அறிந்துக் கொண்டாள்.
“நீ மாபெரும் பிழை செய்துக் கொண்டிருக்கிறாய் மோகினி. இருந்தும், இறந்தும் நீ செய்த அத்தனை செயல்களும் கர்மாவாக உன்னைப் பின் தொடர்கின்றன. இத்தோடு ஆட்டத்தை முடித்து அமைதியடையும்படி உத்தரவு வந்துள்ளது.”
“எனக்கு உத்தரவு போடுற அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் வந்துடுச்சோ? மொத, அழுதுட்டு கிடக்க அந்த பயந்தாங்கோளி பயல தூக்கிட்டு போங்க. அதுக்கு பொறவு என்னட்ட வந்து உத்தரவு போடலாம்” என்று அவமதித்தவளிடம் இனி பேசும் நேரம் இல்லை என்று தவிக்கும் ஆத்மாவை அழைத்துச் சென்றனர். சற்று நேரம் அந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்றே சாத்தப்பனிற்கு ஒன்றும் புரியவில்லை.
“கொஞ்ச நேரமா என்ன புள்ள நடந்துச்சு? எனக்கு ஒன்னுமே நியாபகம் இல்ல.”
“நியாபகம் இல்லண்டு சந்தோசப்படு. சில விசயத்தயெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டா உசுரு வாழ முடியாது.” என்றவளின் வார்த்தைகள் புதிராகத்தான் இருந்தது.
“என்ன மருவாதையெல்லாம் தர? சரி அப்டி என்னத்த கேட்டுடப் போற கேளுமய்யா”
“எப்பவும் புதச்சத தானே எடுத்து திம்ப நீயி. இன்னைக்கு என்ன அதுவும் பௌர்ணமி அன்னைக்கு இம்புட்டு உக்கிரமா புதைக்குறதுக்கு முன்னுக்க முந்திக்கிட்ட? அதுவும் அந்த ஆத்மா ரொம்ப கதறிக்கிட்டு கிடந்துச்சு புள்ள. இதுலாம் பாவமில்லயா?”
“பாவம்… ம்ம் பாவமா சாத்தப்பா? உசுரோட இருக்குறப்போ எந்த பய பாவம் புண்ணியம் பாக்குறான். செத்தப் பொறவு அழுகிப் போற உடம்ப பாத்து அழுதா செஞ்ச பாவம் போய்டுமா? இல்ல தப்புத்தேன் இல்லன்டு ஆகிடுமா? இம்புட்டு நேரமா கண்ண கசக்கிட்டு கிடந்துச்சே அது இப்போ இருக்கான்னு பாரு. வந்தாக கூட்டிட்டு போய்ட்டாக. எல்லாம் கர்மா சாத்தப்பா. அவன் ஒடம்பு என் கையால அழியணுமுன்டு இருக்கு. அத மாத்த முடியாது. கன்னிக்கழியா புள்ள உடம்ப பார்வையால தின்னவனுக்கு இந்த மோகினி கொடுக்குற தண்டனை இதான்.” என்றவள் மாயமாய் மறைந்து போனாள்.
இலக்கற்று அவள் இருந்த இடத்தையே சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாத்தப்பன், “ஆத்தா, எப்புடி இருந்த புள்ளய இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டியே. இன்னும் எத்தன காவு வாங்கப் போறான்னு தெரியலயே. நீ தான் தாயீ அவள மாத்தணும்” என்று வேண்டியவர் தன் குடிசை நோக்கிச் சென்றார்.
மறைந்து இருந்து அவனை ஒரு நிமிடம் கவனித்த மோகினி “என்னோட காவ அவ தடுக்கப் போறாளா? இந்த மோகினியா இல்ல அந்த மோகினியான்னு பாக்கத்தானே போற சாத்தப்பா. எனக்கான காவு கருவாக ஆரம்பிச்சுடுச்சு. அவளே என்னை தேடி வருவா. அப்போ என்னோட ஆட்டத்தயும் உக்கிரத்தயும் இந்த ஊரே பாக்கத்தான் போகுது.” என்றபடி மறைந்து போனாள் மோகினி.
வருடம் 1990
மெட்ராஸ்
தற்போது சென்னை என்று அழைக்கப்படும் அன்றைய மெட்ராஸ் மாகாணம், கூவன்குளம் குப்பத்தில் நடுராத்திரியில் ஒரு குடிசையின் முன் சில மக்கள் குழுமியிருந்தனர்.
“யம்மா, கடலம்மா. கடலுக்கு போன இவ புருசன் பாண்டி இன்னும் கர சேரலயே. புயல் கூண்டு வேற ஏத்திப்புட்டாக தாயீ. நிறமாசமா இருக்கா. குழந்த வரதுக்கு முன்ன தகப்பன கண்ணுல காட்டிபுடு ஆத்தா” என்று நூறு வயதான் கிழவி மந்தாகினி அரற்றிக் கொண்டிருந்தாள்.
“இந்தா ஆத்தா, செத்த நேரம் சும்மாத்தான் இரேன். அதான் மத்தியானமே சூசை கூட்டம் கடலுக்கு பாண்டிய தேடிப் போய்டுச்சுலா. பொழுது விடியங்காட்டியும் வந்துபுடுவாக. அம்புட்டு லேசுல நம்மள இந்த கடலம்மா கைவிட்டுட மாட்டா. என்ன பயலுவளா நான் சொல்லுறது சரிதானே.”
“ஆமாங்க தலைவரே. நம்ம கூட்டத்துலயே பாண்டித்தான் கெட்டிக்கார பய. அதுலாம் எந்த சுழலுலயும் சிக்கமாட்டியான். சுளுவா மீன் புடிச்சிட்டு வந்துடுவியான். நீ வெசனப்படாத கிழவி” என்று அங்கிருந்த ஜோசப் சொல்ல, சரியாக பன்னிரண்டு மணியளவில் பாண்டியன் மனைவி சாரதாவிற்கு பிரசவ வலி கண்டுவிட்டது.
“அம்மா…” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள் சாரதா.
“ஆத்தா, புள்ளைக்கு பிரசவ வலி கண்டுடுச்சே. ஆம்பளைங்க எல்லாம் வெளில போங்கய்யா. மேரி அந்த ரேசன் வேட்டிய பாய் மேல போடுத்தா. எலிசபெத்து, சாரதாவ நிக்க வச்சு புடிச்சுக்கோடி. இந்தாங்கடி வேடிக்கப் பாக்காம, அவள இறுக்கிப் புடிங்க. பனிக்குடம் உடஞ்சுப்போச்சு.”
“என்னத்தா, புதுசா சொல்ற.? படுத்தாதானே பிரசவம் பாக்க முடியும். நின்னா வலி உசுர உருவுமே.” என்று எலிசபெத் எரிச்சலாய் வினவ,
“அல்லாம் எனக்கு தெரியும்டி எலிசபெத்து. எங்க வம்ச மக்காலாம் இப்டித்தான் பிரசவம் பாப்பாய்ங்க. நீ ஒன்னும் எனக்கு பாடம் சொல்லித் தர மானாம். நான் சொன்னத செய்யும்.” என்றவள், விளக்கெண்ணெய்ய எடுத்து சாரதாவின் அடிவயிற்றில் தடவி விட, சாரதாவால் துளியும் நிற்க முடியவில்லை. கையைப் பிடித்து இருந்த இரண்டு பெண்களின் கைகளில் இருந்து இரத்தம் வருமளவிற்கு சாரதாவின் பிடி இருந்தது. வலியில் பற்களை நரநரவென்று கடிக்க, காலை அகட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த மந்தாகினி கிழவி, சப்பென்று சாரதாவின் கன்னத்தில் ஒரு அறையை விட்டார்.
“அய்யோ…” கத்தியது என்னவோ மேரிதான்.
“என்னத்துக்கு கிழவி இப்டி பட்டுன்னு வச்ச? அவளே அங்க வலில சுணங்கிப் போய் நிக்க முடியாம நிக்குறா. நீ அவள அறையுற?” என்றபடி எலிசபெத் ஒருபக்கம் கத்த,
“அட கூறுகெட்ட சிறுக்கிகளா. பல்ல கடிச்சா வாய்ல இருந்து ரத்தம் வரும். அந்த நரநர சத்தத்துக்கு வயித்துக்குள்ள இருக்குற புள்ள மிரளுமுடி. எம்புட்டு பிரசவம் பாத்த எனக்கு தெரியாதா? எத எப்டி செய்யணும்னு. பேசாம அவள ஒழுங்கா புடிங்கடி” என்று அதட்டியவர், சாரதாவின் கால்களை நன்றாக அகட்டி வைத்தார். சாரதா வலியில் கத்திக் கொண்டிருக்க, வெளியில் புயலோ ஆங்காரம் கொண்டது.
சாரதாவின் யோனிவாய் அகல விரிந்து குழந்தை வெளியே வர ஏதுவாக அமைய, அதனைக் கண்டுக் கொண்ட மந்தாகினி கிழவி, “இன்னும் கொஞ்ச நேரம்தான்டி. வாய் விரிய ஆரம்பிச்சுடுச்சு. புள்ள வெளிய வரப்போகுது. ஆத்தா சாரதா.! முடிஞ்ச அளவு முக்கு ஆத்தா. புள்ள தல வெளில வரணும்”
“ஆத்தா முடில ஆத்தா. வலி உசுரு உருவுதே. அம்மாஆஆஆ”
“கத்தாதடி. புள்ள பயந்துடும். முடிஞ்ச அளவு முக்கு சாரதா” என்றபடி இவர் வெள்ளை நிறத் துணியை அடியில் விரிக்க, அத்தனையும் சிவப்பு நிறமாய் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் தலை வெளியே வர ஆரம்பிக்க, “அம்புட்டுத்தேன். இன்னும் செத்த நேரத்துல புள்ள முழுசா வந்துடும்.” என்றபடி குழந்தையை வெளியே உறுவினாள் மந்தாகினி.
பலமிழந்து சாரதா அப்படியே மயங்கி சரிய, குழந்தை வீறிட்டு அழுதது. “பொறந்துட்டாடி. பாண்டிக்கு மகாலட்சுமி பொறந்து இருக்கா.” என்று மகிழ்ந்துக் கொண்டிருந்த மந்தாகினி கிழவி, “அந்த வெள்ளத் துணிய எடு மேரி.” என்றபடி அதில் குழந்தையை பூப்போல் சுற்றி, வெளியே வர, வைகறை நேரம் இரண்டு மணிக்கு புயலும் ஓய்ந்து இருந்தது.
“டேய் இசக்கி, பாண்டிக்கு பொட்டப்புள்ள பொறந்து இருக்குடோய். ஆத்தாளுக்கு கம்பம் நடுங்கடா.” என்று அந்த குப்பத்தின் தலைவர் தங்கவேலு குரல் கொடுக்க, பாண்டியின் படகும் அவரைத் தேடிச் சென்ற சூசையின் படகும் கரையை அடைந்தது. அவர்களின் பின்னே அவளும் வந்தாள் மோகினி.
அன்ன நடையினோடு, கொடி மல்லி கூந்தலோடு, மயக்கும் மோகன புன்னகையை தேக்கி, மந்தாகினியின் குடிசை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள். ‘ஆத்தே, நான் காணுறது கனாவா இல்ல நெசத்துலயே அவதான் வாராளா?’ என்று ஒரு நிமிடம் நின்று யோசித்துக் கொண்டிருந்தவர், “யய்யா, பாண்டி உனக்கு பொட்டப்புள்ள பொறந்து இருக்காய்யா. வெரசா போய் பாரு.” என்று அவனை உள்ளே அனுமதித்தவர், நேராக மோகினியின் முன்தான் போய் நின்றார்.
“இந்தா ஆரு நீயி? நீ பாட்டுக்கு குப்பத்துக்குள்ள வாரவ?” என்று சத்தமிட்டுக் கொண்டே சென்றார். பிறந்த குழந்தையை பார்க்க அனைவரும் குடிசைக்குள் சென்றிருக்க, இவரின் நடவடிக்கையை குப்பத்தின் தலைவர் தங்கவேலுதான் புரியாமல் கவனித்துக் கொண்டிருந்தார்.
“என்ன மந்தாகினி, என்னயவே மறந்துட்டியாக்கும். ரெண்டு பேரும் ஒன்னாதானடி பொறந்தோம். நான் உனக்கு முன்னக்கவே போய்ட்டேன். நீதேன் இப்போ ஓட்டியாகிட்டியே. வயசாகுதுல அதேன் மறதி ஜாஸ்தியாகிடுச்சோ” என்று எள்ளல் மொழியிலும் ஒரு தீப்பிழம்பு மறைந்து கிடந்தது மோகினியின் வார்த்தையில்.
“எதே? என்ன வெளாடுதீயா? அதெல்லாம் ஒன்னும் மானாம். இங்கன இருந்து போ மொத”
“நான் சொல்றத கொஞ்சம் கேளு. அவ ரொம்ப உக்கிரமா இருக்காடி. ஒரு எட்டு நான் போய் புள்ளய பாத்துட்டு வந்துடுறேன்.” என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தாள் மோகினி.
“குப்பத்து எல்லையில பிடாரி காவக்காக்குறாடி. அவளத்தாண்டி எவளும் உள்ள வர முடியாது. எம்மூட்டு வாரிச என்னை மீறி ஒன்னும் செய்ய முடியாதுடி ஆத்தா. என் உசுர கொடுத்தாவது காப்பேன்” என்ற அடுத்த நொடி மந்தாகினி கிழவியின் உயிர் உடலை விட்டு விசுக்கென்ற சத்தத்துடன் வெளியேறியது.
வருவாள் மோகினி.!
முதல் அத்தியாயம் எப்டி இருந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க மக்காஸ் கருத்துக்கள் ரொம்ப முக்கியம்...
“அடேய், பாண்டி.! கிழவி கரப்பக்கம் விழுந்துடுச்சுடா. வெரசா அல்லாரும் ஓடியாங்க” என்று சத்தமிட்டபடி மந்தாகினியை நோக்கி ஓடினார் தங்கவேல்.
அப்போதுதான் தன் குழந்தையை கையில் ஏந்தியபடி உச்சி முகர்ந்தவன், வேலுவின் சத்தம் கேட்டு, அரக்க பறக்க ஓடிவந்தான். அதற்குள் தங்கவேலுவும் மற்றவர்களும் மந்தாகினியின் உடலை அடைந்தனர். அந்த இருட்டு நேரத்திலும் மந்தாகினியின் முகத்தில் அப்பியிருந்த பயம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
மந்தாகினியின் உயிர் பிரிந்ததும் கதறி அழதுக் கொண்டிருந்தாள் மோகினி. “அய்யோ, சொன்ன சொல்லுக்காக உசுர வுட்டுப்புட்டியேடி. நீ இருக்கங்குற தகிரியத்துலதேன் நான் காடுகன்னின்னு சுத்திட்டு கிடந்தேன். இப்போ நீயும் எம்மூட்டு வாரிசுக்கு தொணையா இல்லாம போய்ட்டியேடி. ஏன்டி இப்டி பண்ண?” என்றவளின் வதனத்தில் இயலாமையின் சாயல் இருந்தது.
மந்தாகினி கிழவியின் உடலிலிருந்து உயிர்பறவை நாசித் துவாரம் வழியாக வெளியே வந்து, மோகினியின் அருகில் நின்றது. கண்களில் ஒரு தேஜஸ் மின்ன, ஆறுதலாக மோகினியின் கரத்தை பிடித்தது. “அழாதடி. நம்ம வம்சத்துக்கு ஒன்னும் ஆகாது. இன்னைல இருந்து பதினாறாவது நாள் வரைக்கும் நான் இங்கனதேன் காவலுக்கு இருப்பேன். அதுக்கு அப்ரோம் வனத்துக்கு வர, ஆத்தா உத்தரவுக்காக காத்துட்டு இருப்பேன் மோகினி. நியாபகம் இருக்கட்டும் அவ அந்த சுடுகாட்ட விட்டு வெளில வரதுக்குள்ள நான் காட்டுக்கு போயாகணும்.”
“ஆத்தாவ பாக்க வரியா மந்தாகினி. நான்... நான் போய் உனக்காக அங்கன காத்துட்டு கிடப்பேன். பதினாறாவது காரியம் முடிஞ்ச ஒடனே அங்கன வந்துடு. ஆத்தா நமக்கொரு வழியக் காட்டுவா.” என்றபடி மறைந்து போனாள் மோகினி.
பாண்டியும் மற்றவர்களும் அழுதுக்கொண்டே மந்தாகினியின் உடலை குடிசைக்குள் கொண்டு செல்ல, சாரதா கதறிக் கொண்டிருந்தாள். அன்னை தந்தை இழந்தவளுக்கு மந்தாகினிதான் எல்லாமே. நூற்றிப்பத்து வயதாகும் மந்தாகினிக்கு அங்கிருக்கும் அனைவரின் பூர்வீகமும் தெரியும். இத்தனை நாட்களாக அனைவருக்கும நல்லது கெட்டது பார்த்து, மூத்தவராய் இருந்தவரின் இழப்பு அக்குப்பத்தையே துக்கத்தில் ஆழ்த்தியது.
சரியாக, மந்தாகினியின் உடல் குடிசைக்குள் செல்லும் நேரம், வெளியே பலத்த காற்று அடிக்க, தங்கவேல் அதிர்ச்சியில் உறைந்தே போனார்.
குப்பத்தின் எல்லையில் மந்தாகினி கண்களில் ஒளிரும் தேஜஸ் ஒளியுடன் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த நொடி பயங்கர சிந்தனையில் ஆழ்ந்தார் தங்கவேல். திடீரென்று எலிசபெத் ஆங்காரமாய் கத்திக் கொண்டே சாரதாவை நெருங்கினாள்.
நெருங்கிய வேகத்தில் சாரதாவின் பின் மண்டையை முடியுடன் கொத்தாகப் பிடித்து, அப்படியே அருகே கிடத்தப்பட்டிருந்த இரும்புக் கட்டிலில் இடித்தாள். அவளின் செய்கையில் அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போய் நிற்க, உடனே மேரி எலிசபெத்தை பிடிக்க முயன்றாள். எலிசபெத்தின் காதிற்குள் அந்த ஆங்கார சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ‘அப்டித்தான், அவள முட்டு. ம்ம்ம்… ஆர்ர்ர்… ம்ம்ம்… அப்டித்தான் எலிசபெத்து. போன சென்மத்துல உன்னோட பொறப்ப தப்பா பேசுனவள சும்மா வுட்டுடாத. ம்ம்ம்.. கிர்ர்ர்... அவள ரத்தக் காவு வாங்கு’ அவளின் செவிகளுக்கு மட்டும் இந்த குரல் கேட்டுக்கொண்டே இருக்க, சாரதாவை மூர்க்கமாக தாக்க தொடங்கினாள். பக்கம் வரும் அனைவரையும் தாக்கினாள். மேரியின் மண்டை உடைந்து ரத்தம் வர, ஆண்கள் யாராலும் அவளை சமாளிக்கவே முடியவில்லை. முழுவதுமாக மோகினியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாள் எலிசபெத்.
“அய்யோ, எம்பொண்டாட்டிய யாராவது காப்பாத்துங்களேன்.” என்று இசக்கி ஒரு பக்கமும், “அய்யோ அம்மா சாரதா” என்று ஒரு பாண்டி ஒரு பக்கமும் கத்திக்கொண்டிருந்தனர். பிரசவத்தினால் உடல் முழுதும் சோர்ந்து போய் கிடக்க, மேலும் எலிசபெத்தினால் ஏற்பட்ட காயமும் வலியும் இன்னும் சாரதாவை துவளச் செய்தது.
மறுபடியும் அவளைத் தாக்க முனையும் போது, எலிசபெத்தின் கண்களுக்கு மட்டும் புலப்பட்டார் மந்தாகினி. கண்களில் இருந்த தேஜஸ் சென்று, கண்கள் தீப்பிழம்பாய் சிவந்து இருந்தது.
“இந்தா மாயா, நிறுத்துடி உன் ஆட்டத்த. நான் உசுரோட இல்லண்டு ஆடுதியோ.?”
“ம்ம்ம்... கிர்ர்... இம்புட்டு வருசமா உசுரோட இருந்து என்னை தடுத்த. இப்போ செத்தும் என்னை தடுக்க வந்துருக்கீயா... ஆர்ர்... ஆங்க்ர்ர்ர்...”
“இருந்தாலும் செத்தாலும் மண்ணா போனாலும் இது எம்மூட்டு குடும்பம்டி. அல்லாத்தயும்தேன் காவு வாங்கிட்டியே. இன்னுமா உன் வெறி அடங்கல. இத்தோட நிறுத்திக்கடி. மறுக்கா நான் இதே மாதிரி அமைதியா நிப்பேன்னு கனா காங்காத.” என்றவரின் வார்த்தைகளில் அத்தனை கோபம்.
“ஆர்ர்... என்ன மெரட்டி பாக்குதியோ? இந்த மெரட்டல் உருட்டல்லாம் உன் கூட்டாளிக்கிட்ட வச்சிக்க. என்னை அணுஅணுவா துடிக்க வச்சு அல்லாடவுட்டீகளே. அதுக்கு சம்மானம் தர மானாமா? ஆங்க்க்ர்ர்ர்... ப்ஸ்ஸ்ஸ்... கிர்ர்.... நீயும் இப்போ ஆத்மாதேன். என்னை மாதிரி உன்னையும் அல்லாடவுடவா? ஹாஹாஹா” என்றபடி அங்கு கிடத்தப்பட்ட மந்தாகினியின் உடலை நெருங்கினாள் எலிசபெத்.
அதுவரை எலிசபெத் தனியாக பேசிக் கொண்டிருப்பதையும் அவள் எழுப்பிய வினோத சத்தத்தையும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அவள் மந்தாகினியின் உடலை நோக்கி செல்கையில், ஏதோ பெரிய ஆபத்து வரப் போகிறது என்பதை உணர்ந்தனர். மேரி விரைவாக தான் அணிந்திருந்த சிலுவையை எலிசபெத்தின் கழுத்தில் போட்டுவிட, “ஆஆஆஆஆஆஆ” என்ற சத்தத்துடன் எலிசபெத் மயங்கி விழுந்தாள்.
மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது பாண்டியின் குடிசை மட்டுமல்ல அந்த கூவன்குளம் குப்பம் முழுவதும். “என்னம்ல நடக்குது இங்க? இந்த கொழந்த பொறந்த உடனே, இம்புட்டு வருசமா நம்ம கூட இருந்த மந்தாகினி கிழவி செத்துப் போச்சு. நல்லா இருந்த எலிசபெத் புள்ள இப்டி நடந்துகிடுது. என்னன்னு எனக்கு ஒன்னும் விளங்கலேயப்பா” என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர்.
“ஏப்பு, என்ன கூறுகெட்டத்தனமா பேசிட்டு இருக்க? என்ன, பொறந்த மவ மேல பழிய போடுதியா? இப்பத்தேன் இந்த பூமில ஜனிச்சு இருக்கு. அதுக்குள்ள இந்த புள்ளயாலத்தேன் இப்டின்னு ஒரு முடிவுக்கு வந்துடுவியா? நடந்த விசயத்துக்கும் இந்த புள்ளைக்கும் இனிமே யாராவது முடிச்சு போட்டீக, அப்ரோம் தங்கவேலோட இன்னொரு முகத்த பாக்க வேண்டியதா இருக்கும். நெனப்புல இருக்கட்டும்”
குடிசைக்குள் சாரதாவிற்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்தது. தன் பெண்ணை மடியில் தாங்கியபடி மனைவியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டி. வெளியே நடந்த சலசலப்பு அனைத்தும் கேட்டதுதான். குனிந்து தன் மகளைப் பார்க்க, மாசுமருவில்லாத முகத்தோடு, கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையை காண சலிக்கவில்லை. அட, தூக்கத்தில் சிரிப்பு வேறு. இத்தனை களேபரத்திலும் அஞ்சாமல் அமைதியாய் இருந்தது இவள் ஒருவளே. உற்று நோக்கிக் கொண்டிருந்த பாண்டியின் கண்களுக்கு ஒரு நிமிடம் குழந்தையின் முகம் மந்தாகினியின் முகமாகத்தான் தோன்றியது.
“ஆத்தா... சாரதா, புள்ள... இங்க... பாரேன்... நம்ம புள்ள... நம்ம புள்ள” பாண்டியின் சத்தம் கேட்டு, வெளியில் இருந்தவர்களும் உள்ளே வர, மறுபடியும் என்ன கலக்கமோ என்றுதான் பலருக்கும் தோன்றியது.
“டேலேய், பாண்டி. என்னடே ஆச்சு?”
“அய்யா, என் புள்ள மூஞ்சு அப்டியே மந்தாகினி ஆத்தா மாதிரியே இருக்குதுங்கய்யா.”
“என்னடே சொல்ற?”
“நெசம்தானுங்க. ஒரு நிமிசம் ஆத்தாவே என் மடில இருந்தாப்புல இருந்துச்சு.”
“சந்தோசம்லா. இங்கன பாருங்க, ஏதோ ஒரு காரணத்துக்காவேண்டிதேன் மந்தாகினி ஆத்தா போய் இருக்கா. இப்போ பாண்டி கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கா. நல்லதோ கெட்டதோ புள்ளைக்கு ஆத்தா பேரயே வச்சுப்புடு பாண்டி” என்று தன் கருத்தை கூறினான் தாமஸ்.
அவன் கூறிய வார்த்தை பாண்டிக்கு புரிந்ததோ இல்லையோ, தங்கவேலுவிற்கு நன்றாக புரிந்தது. தன் கண்ணுக்கு முன்னமே தெரிந்த மந்தாகினியின் தேஜஸ் நிறைந்த முகம் ஒரு நிமிடம் மனக்கண்ணில் வந்து சென்றது. உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போனார் தங்கவேல்.
“அடுத்து ஆக வேண்டிய காரியத்த பாருங்கய்யா. எம்புட்டு நேரந்தேன் ஆத்தா உடம்ப இங்கனயே வச்சு பேசிட்டு இருக்கப் போறீக?” என்று கூட்டத்தில் சலசலப்பு எழ,
“பொழுது விடிஞ்ச உடனே நேரங்காலம் பாத்து, சாங்கியம் செஞ்சுபுடலாம். டேய், இசக்கி, நீ எலிசபெத்த கூட்டிட்டு குடிசைக்கு போ. நாளைக்கு ஃபாதர்ர பாத்து என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு அப்டியே பிடாரி ஆத்தா கோவிலுக்கு போய் கோடாங்கிய பாரு. மறக்காம வூட்டுக்கு போன ஒடனே குளிச்சிடுடே” என்றபடி அவனை அனுப்பி வைத்த தங்கவேல். “ஆத்தா, பொம்பளைங்கலாம் உள்ளயே இருங்க. நாங்க அப்டியே வெளில இருக்கோம். தாமஸ்சே, நீ போய் பாடைக்கும் வண்டிக்கும் சொல்லிபுடு. இப்ப சொன்னாத்தேன் அந்த பயலுவ விடிஞ்சு வருவாய்ங்க. நான் போய் சாத்தப்பன பாத்து சேதி சொல்லிப்புட்டு வரேன்” என்று எழுந்தவரை,
“அய்யா, நீங்க இருங்க அய்யா. நான் போய் பாத்துட்டு வரேனுங்க. பெரிய மனுசங்க நீங்க. இம்புட்டு தூரம் செய்றதே பெருசு. ஏன் இந்த நேரத்துல அலையுறீக?” என்று அவரைத் தடுத்தான் பாண்டி.
“என்னடே, புதுசா பழக்கம் பழகுற? இத்தன வருசமா ஆத்தா இதுலாம் பாத்துச்சா என்ன? இப்போ ஆத்தாளுக்கு நான் செய்யுறேன். பொண்டாட்டி புள்ளய பாத்துக்கிட்டு வூட்டுக்குள்ளயே இரு. பொழுது விடியுற வரைக்கும் வெளில வராத.” என்று துண்டை உதறி தோளில் போட்டவாரு, “பெரிய மனுசனாம்ல, பெரிய மனுசன். என் ஆத்தாளுக்கு செய்ய நான் ஆரக் கேட்கணும்ங்குறேன். வந்துப்புட்டான், நான் போறேன்னு” என்று முனகியவாறே இடுகாட்டை நோக்கி நடையைக் கட்டினார். அவரோட ஊர் பெரிய தலைகளும் நரைத்த மீசைகளும் உடன் சென்றனர்.
‘இந்நேரத்துல யாருய்யா அது?’ என்று முனகியபடியே கைலியைக் கட்டிக்கொண்டு, வெளியே வந்தான்.
தங்கவேல் நிற்பதைக் கண்டவன், துண்டை இடையில் கட்டிக்கொண்டு, “அய்யா, நீங்களா? இந்நேரத்துல இங்கன எதுக்குங்கய்யா.? ஏதாவது விசயமுங்களா? சொல்லிவிட்டா நானே வந்து இருப்பேனுங்களே”
“ஏது, சேதி சொல்ல உன்ன வூட்டுக்கு கூப்டனுமால?’
“அய்யா, சேதிங்களா? என்னங்கய்யா? ஆருங்கய்யா?”
“நம்ம பாண்டி இருக்கானுல்ல, அவன் ஆத்தா கிழவிதான்டே. இம்புட்டு வருசமா கூடவே இருந்து அல்லாத்தயும் பாத்தவ. இப்போ பொட்டுன்னு போய் சேந்துடுச்சு. ஆனா, பாருவேன் படுக்கைல காலத்த கழிக்காம கரையோரம் போனா அல்லாரயும் வுட்டுட்டு போய்ட்டா” என்றவரின் கண்களிலிருந்து இருசொட்டு நீர் தரையில் விழுந்தது.
குனிந்து இருந்த சாத்தப்பன் சட்டென்று நிமிர, அந்த முருங்கை மரத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து இருந்த மோகினிதான் கண்களில் தென்பட்டாள். அமர்ந்திருந்த தங்கவேலுவைத்தான் கோரைப்பற்கள் தெரிய பார்த்துக் கொண்டிருந்தாள். மிடறு எச்சில் விழுங்கிய சாத்தப்பன், “இப்போ நான் என்னங்கய்யா செய்யோணும்?”
“என்னடே, தெரியாத மாதிரி கேட்குற? இத்தினி நாளா என்ன செஞ்சியோ அதாம்லே செய்யணும். ஆத்தாள புதைக்க என்ன செய்யணுமோ செஞ்சுபுடு.” என்று எழுந்தவர், “இல்லல, புதைக்க மானாம். எரிக்க என்ன செய்யணுமோ செஞ்சுடு” என்றபடி திரும்பி பார்க்காமல் சென்றார்.
எரிக்க சொன்ன பிறகுதான் சாத்தப்பனிற்கும் சற்று நிம்மதியாக இருந்தது. ஏனோ இனம்புரியாத நிம்மதி. மோகினி பிணத்தை தின்று விடுவாள் என்ற பயம் அகன்றதினால் ஏற்பட்ட நிம்மதியா இல்லை, பின்வரும் பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண தானும் ஒரு கருவியாய் செயல்பட்டதனால் ஏற்பட்ட நிம்மதியா என்று அவனுக்கே தெரியவில்லை.
அவன் விட்ட நிம்மதி பெருமூச்சு சற்று நேரம்கூட நீடிக்க விடாமல், மரத்திலிருந்து தொப்பென்று குதித்தாள் மோகினி எனும் மாய மோகினி.
ஒரு நிமிடம் பயத்தில் சாத்தப்பனிற்கு இதயம் நின்று துடித்தது. “இந்தா புள்ள, ஏன் இப்டி பயமுறுத்துறவ?” என்றபடி இடுப்பில் கட்டியிருந்த துண்டை தோளில் போட்டார்.
“என்ன சாத்தப்பா? இப்டி சொல்லிப்புட்ட? என்ன புது கதையாவுல இருக்கு. சாத்தப்பன் என்னைக்கு இந்த மோகினிய பாத்து பயந்து இருக்கான். இது சாத்தப்பன்தானான்னு எனக்கு சந்தேகமாவுல இருக்கு?" என்று பேசிக்கொண்டே குழியைத் தோண்ட ஆரம்பித்தாள்.
குடிசைக்குள் நுழைந்து சாராயப் போத்தலை எடுத்து வந்து, பாறைமேல் அமர்ந்தான் சாத்தப்பன்.
“திடுதிப்புன்னு முன்னக்க வந்து குதிச்சா, சாத்தப்பன் என்ன, எந்த அப்பன்னுக்கா இருந்தாலும் பயமாத்தேன் இருக்கும்புள்ள.” என்றவாறு சாராயத்தை வாயிற்குள் கவிழ்த்தான்.
“ஆக, இதுக்கு முன்ன நீ என்னை பாக்கல? அதத்தானே சொல்லுத?" தோண்டுவதை நிறுத்திவிட்டு சாத்தப்பனை தீர்க்கமாகப் பார்த்தாள். அவளின் பார்வையைத் தவித்தவர், “இனிமேட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு போனவ? இப்போ என்ன இந்த பக்கம்? வேற எங்கனயும் திங்க பொணம் கிடைக்கலயோ?”
“என்னத்த செய்யச் சொல்லுத? ஆயிரம் உசுர கொன்னவன் அர வைத்தியனும்பாக. ஆயிரம் பொணத்த கூட திங்கல. என்னப் போய் மோகினின்னு சொல்லிப்புட்டு தெரியது இந்த உலகம். அதேன், இங்கனயே ரெண்டு நாளைக்கு திங்கலாமுன்னு முடிவு பண்ணிப்போட்டேன்.”
அவளின் நோக்கம் சாத்தப்பனும் அறிவான். இருந்தும் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்துக் கொண்டே சாராயத்தைக் குடித்துக் கொண்டிருந்தான்.
அவள் பின்னோடே சென்ற சாத்தப்பன், “அதே மாதிரிதானே தாயி, மத்த புள்ளைங்களும். அத ஏன் காவு வாங்க நெனைக்குற?” தோண்டின கை அப்படியே நின்றது.
கண்களில் வெறி கூடியது. கண்கள் இரண்டும் சிவப்பாக, வெள்ளைத் தோல் நீலமாக மாற, அதில் பச்சை நரம்புகள் தெறித்தது. இடைக்கு கீழ் வரை நீண்டிருந்த கூந்தல் காற்றில் அலைமோதிட, ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு, அதன்மேல் இடது கையை வைத்து முன்னும் பின்னுமாய் அசைந்தாடினாள்.
“மத்த புள்ளைகளும் எனக்கு புள்ளைங்கதான். என்ன கொல்லிவாய் காட்டேரியா மாத்திப்புடாத. ம்ம்ம்ம்... ர்ர்ர்ர்.. ரெத்தம் குடிக்கவும் காரணம் இருக்கு, ரெத்தம் எடுக்கவும் காரணம் இருக்கு. கர்மா சாத்தப்பா. அத்தனயும் அவ ஒருத்தி செஞ்ச கர்மா. நானுண்டு என் பொழப்புண்டுன்னுதானே இருந்தேன். எடையில வந்தவ, என் வம்சத்தயே அழிச்சுப்புட்டா. இப்போ அவ வம்சம் தழைக்கணுமோ. ஒனக்கும் நான் மோகினியாத்தானே தெரியுறேன். போறேன். இங்க வரப்போற அந்த மந்தாகினியோட பொணம் எப்டி எரியுதுன்னு பாத்துப்போட்டு போறேன். ம்ம்ம்... ஆங்க்ர்ர்ர்…”
“அந்த ஆத்தாவோட பொணத்த நீ திங்கக் கூடாது. அம்புட்டுதேன் சொல்லுவேன்.” என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
“போடே போ. என்னதேன் இருந்தாலும் எனக்காக காலங்காலமா இருக்க ஒரே ஒத்தாச நீயும் உன் குடும்பமும்தேன். அவிகளுக்கு என்னால எந்த கெடுதலும் வராது. என்னை மீறியும் எதுவும் நடக்காதுல. கண்ணு இருந்தும் கல்லாதேன் அவ கிடக்கா. நாளைக்கு எரியப் போறவ சாமியாகப்போறா. ஆனா, நெதம்நெதம் அவளுக்கு பூச செஞ்சவ நான். எனக்கே ரத்த வெறி உண்டாக்கிப்புட்ட அவளயும் அவ காக்குற குடும்பத்தயும் சும்மாவா வுடுவேன். மாட்டேன். ம்ம்ம்... மாட்டேன். ஆங்க்ர்ர்ர்.... வருவேன்டி மந்தாகினி. இந்த மாய மோகினி வருவேன். நீயே வந்து என்னட்ட கதறுவடி. எனக்கு மட்டுந்தேன் கர்மா வேல செய்யுமோ? மனுச பொறப்பு எடுத்த அல்லாத்துக்கும் வேல செய்யும்டி. வருவேன்டி... பொறந்துட்டள்ல, வருவேன்... எனக்கான நாளும் பொழுதும் வரப்போ எல்லையக் காக்குறவளோ காட்ட காக்குறவளோ யாரா இருந்தாலும் கர்மாக்கு கட்டுப்பட்டுத்தேன் ஆகணும். அன்னைக்கு உன்னை உசுரோட தின்பேன்டி, மந்தாகினி தின்பேன். ஆஆஆஆஆஆஆஆ” சட்டென்று குழிக்குள் கையை விட்டவள், பிணத்தை வெளியே எடுத்தாள்.
அழுகிப் போய், முகமெல்லாம் புழுவாக நெண்டிக் கொண்டிருந்தது, அந்த பிணத்தில். வெளிறிய வெள்ளை நிறத்தில் இருந்த அந்த பிணத்தின் பற்களும் நகமும் மட்டும் சிதிலமில்லாமல் இருக்க, இடதுபுற காலை உடைத்து சதையை பெயர்த்தாள். “அழுகுன பொணத்த திங்குற ஒவ்வொரு நாளும் என் வெறி உன்ன நினச்சு கூடிக்கிட்டே போகும்டி. நான் பட்ட வேதனைய உனக்கும் அணுஅணுவா காட்டுதேன் பாரு.” என்றபடி காலின் மூட்டெலும்பை கடக் எனக் கடித்தாள்.
கோரைப்பற்கள் நீண்டிருக்க, பல நாள் உணவு உண்ணாமல் கிடந்தவளைப் போல், அந்த பிணத்தின் மண்டையை உடலில் இருந்து பிய்த்தாள். கண்களைத் தோண்டி இரண்டையும் சுவைத்தவள், காதுகள் இரண்டையும் நரநரவெனக் கடித்தாள். வாயில் எச்சில் ஊறியபடி இருக்க, கால் விரல்களை ஒவ்வொன்றாய் பிய்த்து மேல் சதையை உறித்து உள் சதையை ருசிப் பார்த்தாள்.
அங்கு கூவன்குளத்தில்…
வருவாள் மோகினி.
மறக்காம கமென்ட்ட கருத்து திரில போட்டு போங்க டியர்ஸ். மோகினி எப்டி இருந்தது.?கருத்து முக்கியம் பசங்களா..