பொன்னியின் செல்வன் ரீடிங் ஆரம்பிச்சு இருக்கேன்.. இத ஆர்வமா படிக்கும் பொருட்டு ஒவ்வொரு பாகத்துக்கும் சுருக்கம் எழுத போறேன்.. அத என்னோட வெப்சைட்ல போடலாம்னு இருக்கேன்.. நிறைய பேர் எழுதி இருக்காங்க அந்த அளவுக்கு எழுத முடியுமான்னு தெரியல.. புது முயற்சி.. டெய்லி படிக்கிறது சுருக்கமா வரும்.. என்னோட எழுத்து நடையிலே..
ஒரு புது முயற்சி தான்..
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கின்றேன்.
1950 ஆம் ஆண்டில் அமரர் கல்கி அவர்களினால் எழுதப்பட்ட நூல் இது.
இந்த வரலாறானது வீர நாராயண ஏரியில் ஆரம்பிக்கின்றது. தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் தான் இந்த ஏரி அமைந்து இருக்கின்றது.
தமிழக வீரசரித்திரத்தில் புகழ் பெற்ற வாணர் குலத்தை சேர்ந்த இளம் வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக் கரையில் பயணம் செய்து கொண்டு இருந்தான்.
இந்த இடத்தில் வீரநாராயண ஏரியின் நீர் வளத்தை எழுத்தாளர் வர்ணித்த அழகு பிரம்மிப்பானது. நீர் இருந்தால் அருகே உழவு இல்லாமல் இருக்குமா என்ன?
நீரும் உழவும் , நடுவே குடியானவ பெண்களின் இசையும் என மெதுவாக பயணித்த வந்தியத்தேவனோ அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களையும் எண்ணிக் கொண்டே வந்தான்.
அவன் மனமோ "எவ்வளவு பிரமாண்டமான ஏரி இது? இதன் முன்னே தொண்டை நாட்டில் பல்லவ பேரரசர்கள் அமைத்த ஏரி எல்லாம் குளங்குட்டைகள் போலவே தோன்றும் அல்லவா? வடகாவேரியில் இருந்து நீர் வீணாக கடலுக்கு செல்லக் கூடாது என்று தான் இளவரசர் ராஜாதித்தர் இந்த ஏரியை அமைத்தாரோ என்னவோ?" என்று நினைத்துக் கொண்டே இளவரசனின் வீர தீர பராக்கிரமங்களையும் அவரது வீர மரணத்தை பற்றியும் அசை போட்டான்.
மேலும் "இந்த சோழகுலத்து மன்னர்கள் வீரத்திலும், அறத்திலும், தெய்வபக்தியிலும் சிறந்தவர்கள்" என்று நினைத்துக் கொண்டே வீரநாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்து சேர்ந்தான். அந்த ஏரியின் அழகை ரசித்தவன் கண்ணில் ஆடித் திங்கள் பதினெட்டாம் பேருக்கு திருநாள் அன்று தென்னங் குருத்துக்களால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டே கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டு இருப்பது தென்பட்டது. ஏரிக் கரையில் பெண்களும், குழந்தைகளும் ஆடவர்களுக்கு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து விளையாடிக் கொண்டு இருப்பதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டே நின்று இருந்தான். அவன் காதுகளில் அங்கே நின்றவர்கள் பாடிய இனிமையான பாடலும் விழ, அதனை ரசித்தபடி குதிரையில் அமர்ந்து இருந்தான். சோழர் குல மன்னர்களின் வீரப் புகழைப் பாடும் பாடல்களும் அவன் காதில் விழுந்தன.
அவன் அப்படியே அமர்ந்து இருப்பதை கவனித்த ஒரு மூதாட்டியோ "தம்பி, வெகுதூரத்தில் இருந்து வந்த போல இருக்கின்றாய், களைத்தும் போய் விட்டாய் போல தெரிகின்றது, வந்து கூட்டாஞ்சோறு சாப்பிடு" என்று அழைக்க, அந்த சத்தத்தில் இளம் பெண்கள் அவனை திரும்பிப் பார்த்தார்கள். அவன் தோற்றத்தைப் பற்றி தமக்குள்ளே அவர்கள் பேசிச் சிரித்துக் கொண்டு இருக்க, வந்தியத்தேவனுக்கு வெட்கம் ஒரு பக்கம் குதூகலம் ஒரு பக்கம் என்று ஆனது.
"போய் சாப்பிட்டு விடலாமா?" என்று நினைத்துக் கொண்டே இருந்தவனுக்கு தெளிவாக தெரிந்தது அங்கே சென்றாள் அந்த இளம்பெண்கள் தம்மை சூழ்ந்து நின்று சிரிப்பார்கள் என்று. ஆனாலும் அது தமக்கு தேவகானமாக தான் தோன்றும் என்று நினைத்துக் கொண்டவன் கண்களுக்கு அந்த பெண்கள் என்னவோ அரம்பைகளாகவும் மேனகைகளாகவும் தான் தோன்றினார்கள்.
அவன் இதனை எல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த சமயம், தென்மேற்கு திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் வெள்ளைப்பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெண் சிறகுகளை விரித்துக் கொண்டே நீரில் மிதந்துவரும் அன்னப் பட்சிகளைப் போல வந்து கொண்டு இருந்தன. அனைத்து மக்களும் அதனையே பார்த்துக் கொண்டு இருக்க, அதில் இருந்து குதித்து இறங்கிய ஆஜானுபாகுவான வீரர்களோ "போங்கள் போங்கள்" என்று அங்கிருந்த மக்களை விரட்டினார்கள். மக்களும் அங்கிருந்து தமது உடமைகளை எடுத்துக் கொண்டே கரையேற தொடங்க, அவர்கள் யாரென்று புரியாமல் அங்கே கையில் கோலுடன் நின்ற பெரியவரை அணுகிய வந்தியத்தேவன் "ஐயா? இவர்கள் யார்? யாருடைய ஓடங்கள் இவை? எதற்காக மக்களை விரட்டுகிறார்கள்" என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்க, அந்த பெரியவரோ "தம்பி!! உனக்கு தெரியாதா? இந்த நடுபடகில் பறக்கும் கொடியைப் பார்" என்றார்.
அந்த கொடியை பார்த்த வந்தியத்தேவனோ "பனைமரம் போல தோன்றுகின்றது" என்று பதிலளிக்க, "பனைமரம் தான்.. பனைமரக் கொடி பழுவேட்டையார் கொடி என்று உனக்கு தெரியாதா?" என்று கேட்டார். "மகாவீரர் பழுவேட்டையரா வந்திருக்கின்றார்?" என்று வந்தியத்தேவன் சற்று அதிர்ந்த குரலில் கேட்க, "அப்படி தான் இருக்க வேண்டும்.. பனைமரக் கொடியை உயர்த்திக் கொண்டு வேறு யார் வர முடியும்?" என்று கேட்டார் பெரியவர்.
இதனைக் கேட்ட வந்தியத்தேவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. பழுவேட்டையார் பற்றி எவ்வளவோ கேள்விப் பட்டு இருக்கின்றான் அவன். யாருக்கு தான் தெரியாது பழுவேட்டையரைப் பற்றி?
தெற்கே ஈழநாட்டில் இருந்து வடக்கே கலிங்க நாடுவரை அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டையார், சின்ன பழுவேட்டையார் என்பவர்களுடையே பெயர்கள் பிரசித்தமாக இருந்தன.
உறையூருக்கு பக்கத்தில் வடகாவேரியின் வடநகரில் உள்ளது அவர்களது நகரம் பழுவூர். விஜயாலய சோழன் காலத்தில் இருந்தே பழுவேட்டையார் குலம் வீரப் புகழ் பெற்று இருந்தது. அவர்களுக்கும் சோழ மன்னர் குடும்பத்துக்கும் இடையே கொடுக்கல் வாங்கல்கள் இருந்து வந்ததால் பழுவேட்டரையார் குலம் அரச குலத்து சிறப்புக்களை பெற்று இருக்க, கொடி போட்டுக் கொள்ளும் உரிமையும் அந்த குலத்துக்கு இருந்தது.
இப்போதுள்ள இருவரில் மூத்தவரான பெரிய பழுவேட்டையார் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமே இல்லை. அரசாங்கத்தில் பெரிய பெரிய பதவிகளை வகிப்பவர். சோழ சாம்ராஜ்யத்தில் தன தான்ய அதிகாரமும் தன தான்ய பண்டாரமும் அவருக்கு கீழ் இருக்க, சிற்றரசர்கள் மற்றும் கோட்டத் தலைவர்களிடம் "இவ்வாண்டு இவ்வளவு இறை தர வேண்டும்" என்று சொல்லக் கூடிய அதிகாரம் உள்ளவர்.. சுருங்க சொல்ல போனால் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்த படியில் இருப்பவர்.
அப்படிப்பட்ட வீரரைப் பார்க்க வந்தியத்தேவனுக்கு ஆவல் வந்த நேரம் அவனிடம் காஞ்சி நகர பொன் மாளிகையில் வைத்து இளவரசர் ஆதித்ய கரிகாலர் அந்தரங்கமாக அழுத்தி சொன்ன செய்தியும் நினைவுக்கு வந்தது.
"வந்தியதேவா, நீ சுத்த வீரனும் அறிவாளியும் கூட, அதனாலேயே இந்த பொறுப்பை உன்னிடம் தருகின்றேன். நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் அடுத்ததை என் சகோதரி இளைய பிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். சோழ சாம்ராஜ்யத்தின் பெரிய அதிகாரிகளைப் பற்றி கூட ஏதேதோ கேள்விப்பட்டு இருக்கின்றேன்.. அதனால் அவர்களுக்கு கூட இந்த செய்தி தெரிய கூடாது. யாருக்கும் நீ என்னிடம் இருந்து ஓலை கொண்டு போவது தெரிய கூடாது. வழியில் யாருடனும் நீ சண்டை போட கூடாது. வலிய வரும் சண்டையில் இருந்தும் விலகி கொள். முக்கியமாக பழுவேட்டையரிடமும் என் சித்தப்பா மதுராந்தகரிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்ந்தவனோ பழுவேட்டையரைப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவலை அடக்கிக் கொண்டான். அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றாலும் களைத்து இருந்த குதிரை மெதுவாகவே செல்ல, "இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கி விட்டு காலையில் வேறு நல்ல குதிரையில் புறப்பட வேண்டும் " என்று தீர்மானித்துக் கொண்டே பயணிக்க ஆரம்பித்தான்.